வளைந்து... நெளிந்து... பதுங்கி... ஒரு புலி போல் பாய்ந்து பிரமாதமாய் சிலம்பக் கம்பை சுழற்றுகிறார்கள்... மொஹசீனா, ஹசீனா. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் சமீபத்தில் நடந்த தேசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று வந்திருக்கும் இவர்கள், வரும் நவம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும் என்கிற விறுவிறு வேகத்தில் பயிற்சியில் இறங்கியிருந்த சாதனை சகோதரிகளிடம் சிறிதுநேரம் பேசினோம். நம்முடன் முதலில் பேசியவர், பிளஸ்-1 மாணவியான மொஹசீனா.
இதுவரை எத்தனை தங்கப் பதக்கம் வாங்கியிருப்பீர்கள்?
"5 வயது முதலே சிலம்பப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நான் பங்கேற்ற எல்லாப் போட்டிகளிலுமே தங்கம் வென்றிருக்கிறேன். இதுவரை நான் பெற்ற மொத்த தங்கப் பதக்கங்கள் 15. கடைசியாக குண்டூரில் நடந்த தேசியப் போட்டியில் 14-17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றுள்ளேன்.
சிலம்ப விளையாட்டை தேர்வு செய்ய விசேஷ காரணம் உண்டா?
எங்களது மூதாதையர் செஞ்சி ராஜாதேசிங்கின் படையில் போர்வீரர்களாக பணியாற்றினார்கள். அந்த வகையில், வீரம்மிக்க பரம்பரையில் வந்தது எங்களது குடும்பம் என்பதாலும், எங்களது முப்பாட்டனார், தாத்தா, தந்தை எல்லோரும் சிலம்பக்கலையில் சிறந்து விளங்கியதாலும் எங்களுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு ஆண்தான் சிலம்பத்தில் சாதிக்க முடியும் என்றில்லை; பெண்களாலும் சாதிக்க முடியும். அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.
சிலம்பம், எந்த வகையில் உங்களுக்கு தற்காப்புக் கலையாக உதவுகிறது?
எந்தவொரு கலையை நாம் கற்க வேண்டும் என்றாலும் முதலில் மனதைரியமும், சாதிக்க முடியும் என்கிற வேகமும் நம்மிடம் வேண்டும். எதிரி நம்மை தாக்க வரும்போது தைரியமாக அவனை எதிர்கொண்டால்தான் வெற்றி கிடைக்கும். நானும், எனது தங்கையும் சின்ன வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருவதால் எளிதில் பயப்பட மாட்டோம். யாராவது சீண்டினாலும்கூட அவர்களை திருப்பித் தாக்கும் தைரியம் எங்களுக்கு நிறையவே இருக்கிறது.
சிலம்பம் கற்பதால் என்ன நன்மைகள் ஒருவருக்கு கிடைக்கும்?
முதலில் நல்ல மனதைரியம் கிடைக்கும். சிலம்பக் கலையும் உடற்பயிற்சி போன்று செயல்படுவதால் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சர்க்கரை நோய், மன அழுத்தம், மூட்டுவலி, ஆஸ்துமா தொந்தரவுகள்... என்று எந்த நோயும் நம்மை நெருங்காது. இந்த பலன்களை எல்லாம் பெற வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து சிலம்பப் பயிற்சியை பெற்று வரவேண்டும்.
மறக்க முடியாத போட்டி?
எனது 14 வயதில் ஆற்காட்டில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டியில் பங்கேற்றேன். என்னுடன் மோதிய மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவியை நான் சாதாரணமாகத்தான் எடை போட்டேன். சிலம்பம் தமிழர்களின் பாரம்பரிய கலையாக இருக்கும்போது, அந்த மாணவி அதில் போதிய பயிற்சிகள் எடுத்திருக்க மாட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நான் எதிர் பாராதவிதமாக திறமையாக விளையாடினார். அதனால், என்னுடைய திறமையையும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. எப்போதும் போல் அந்த போட்டியில் நானே தங்கம் வென்றேன்.
உங்களது தினசரி வாழ்வில்...
அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். 5 மணிக்கு ரன்னிங். அது முடித்ததும் சிறிது ராகி கஞ்சி உணவு எடுத்துக்கொள்வேன். 6-7 மணி சிலம்பப் பயிற்சி. அதை முடித்ததும் ஒரு ப்ளாக் காபியுடன் டிபன். தொடர்ந்து, பள்ளிக்கூடம் செல்வேன். பள்ளியில், இடைவேளை நேரத்தில் ஜூஸ் சாப்பிடுவேன். மதியம் சிறிது அரிசி சாதம் மற்றும் சப்பாத்தி சாப்பிடுவேன். மாலையில் வீடு திரும்பியதும் 7-8 மணி வரை மறுபடியும் சிலம்பப் பயிற்சி. தொடர்ந்து, படிப்பு, சாப்பாடு. 11 மணிக்கு தூக்கம். இதுதான் என் தினசரி வாழ்க்கை. என் தங்கையின் தினசரி வாழ்க்கை முறையும் இதுதான். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் கூடுதலாக ஓய்வெடுப்போம்.
உங்களது வெற்றி பார்முலா?
நாம தூங்கிட்டா மத்தவங்க முழிச்சிப்பாங்க. இதை எப்போதும் மனதில் வைத்து விளையாடினாலே வெற்றிதான்.
எதிர்கால விருப்பம்?
ஐ.பி.எஸ். ஆகணும்ங்றது எனது லட்சியக்கனவு. அதற்காக இப்போதே தயாராகி வருகிறேன். அதற்கான தேர்வுகளை எதிர்கொள்ள எனது பொது அறிவையும் வளர்த்து வருகிறேன்.
விருப்ப விளையாட்டாக சிலம்பத்தை ஏன் தேர்வு செய்தோம் என்று நினைத்தது உண்டா?
நிச்சயமாக இல்லை. என்னைப் பொறுத்தவரை சிலம்பத்தின் வழியாக என் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கிறேன். அதில் எனக்கு ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது..." என்று பெருமை பொங்கச் சொல்கிறார் மொஹசீனா.
அடுத்ததாக, இதுவரை 10 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை பெற்றவரும், குண்டூரில் சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று வந்தவருமான மொஹசீனாவின் தங்கை - எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஹசீனாவிடம் பேசினோம்...
சிலம்ப விளையாட்டு உங்களுக்கு பயம் தரவில்லையா?
"இல்லை. என்னைப் பார்த்து மற்றவர்கள்தான் பயந்துள்ளனர். இதற்கு உதாரணமாக மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு போட்டி பற்றி சொல்லலாம். அந்த போட்டியில் எதிர் வீராங்கனையுடன் மோதுவதற்கு முன்பாக எனது தனித்திறமைகளை, அதாவது சிலம்பத்தில் உள்ள அனைத்து நுணுக்கங்களை வெளிப்படுத்தினேன். நான் கம்பு சுழற்றும் வேகத்தைப் பார்த்துவிட்டு, என்னுடன் மோத வந்த மாணவி, என்னுடன் விளையாடவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பின்னர், ஒருவழியாக அவருக்கு தைரியம் சொல்லி என்னுடன் விளையாட வைத்தனர். அந்த போட்டியில் நான்தான் வெற்றி பெற்றேன்.
அக்காவுடன் மோதினால் வெற்றி பெறுவது யார்?
நிச்சயமாக அக்காதான். பயிற்சியில்கூட எனக்காக அவர் விட்டுக்கொடுக்க மாட்டார். போட்டி என்று வந்துவிட்டால் அக்காவா, தங்கையா என்று பார்க்கக்கூடாது. இது, எங்களது மாஸ்டர் 'டைகர்' என்.எம்.ஜாபர் சொன்ன வெற்றி மந்திரம்.
போட்டியில் வெற்றிபெற உங்கள் சகோதரி என்ன அறிவுரைகள் தருவார்?
எதிர் வீராங்கனை தாக்கும்போது அதை தடுத்து பாயிண்ட் எடுப்பது எப்படி? என்பதில் துவங்கி, பதுங்கிப் பாய்ந்து எதிர் வீராங்கனையை தொட்டு பாயிண்ட் எடுப்பது வரை நிறைய அறிவுரைகள் தருவார். அவை எல்லாமே எனது வெற்றிக்கு பெரிதும் உதவி வருகின்றன.
உங்கள் அருகில் உள்ள பெண்ணை யாராவது சீண்டினால்...
அதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். முதலில் நானாக சென்று எச்சரிப்பேன். அதையும் மீறி சீண்டினால் 'தட்டி'க்கேட்பேன்.
பெரிய போட்டிகளில் மிரண்டது உண்டா?
பயிற்சியின்போதே பெரியவர்களுடன் மோதுவேன் என்பதால் அப்படியொரு சம்பவம் இதுவரை நடக்கவில்லை. இனியும் நடக்கப் போவதில்லை" என்கிற ஹசீனா, தன்னை விடவும் உயரமான சிலம்பக் கம்பை இலகுவாக சுழற்றி நம்மை அதிரடியாக மிரள வைக்கிறார்.
சாதனை சகோதரிகளின் கடைசி தங்கை பர்சானாவும் சிறந்த சிலம்ப வீராங்கனையாக உருவெடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெள்ளி வென்றிருக்கிறார் அவர்.












