சிறுகதைகள்


கமாரா என் சாரதி

வின்னி

எட்டு மணிக்கே கைநிறைய முருங்கைக்காயை அள்ளிக்கொண்டு, பெரிய ஒரு பலாப்பழத்தைக் கட்டிப்பிடித்தபடி என்னைப் பார்க்க வந்து விட்டான்!. நான் அப்போதுதான் வேலைக்கு வந்திருந்தேன்.

அந்த ஆபிரிக்க நாட்டில் “டெவில் ச்டிக்” என்று முருங்கைக்காயையும், “டெவில் ப்ரூட்”, என்று பலாப்பழத்தையும் அழைப்பார்கள். அவை பேயோடு சம்பந்தப் பட்டவை என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அவர்கள் சாப்பிடுவதில்லை!.

ஆபிரிக்காவில் இப்படிப் பல,பல விசித்திர வழக்கங்கள்!.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? அவர்களுக்குத் தெரியுமா பலாப்பழத்தின் சுவை? அவர்கள் மரவள்ளி இலைகளை சாப்பிடுபவர்கள்தானே!

யாழ்பாணத்தில் இருந்து வந்த எங்களுக்கு அவற்றைப் பிடிக்கும் என்று கமாராவுக்குத் எப்படித்தேரியுமோ?. அவை அங்கு எல்லா இடங்களிலும் வளர்ந்திருக்கும். சும்மா பிடுங்கலாம்!

கமாராவின் எண்ணம் எல்லாம் நான் கொடுக்கவிருக்கும் காசில்தான்!

பத்து லியோன் காசை கொடுத்தேன். சந்தோசமாக எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு என் மனைவியிடம் ஓடினான். என் மனைவியிடம் இருந்து நல்ல உறைப்பான சோறும் கறியும் கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும்.

மூன்று கம்பெனிகளை மேற்பார்வை செயவதால் எனக்கு ஒரு உத்தியோகபூர்வமான கம்பெனிக் காரும் டிரைவரும்.

முதலாம் வகுப்பில் படிக்கும் எனது மகளை.கமாராதான் பள்ளிக்கூடம் கொண்டு போவான்.

காஷியர் பாங்க்குக்கு காசு எடுத்துச் செல்வதும் அவனோடுதான்.

எனக்கு வாகனப் பத்திரம் இல்லை. ஒரு நாள் கமாராவைக் கூப்பிட்டேன். வாகனப்பத்திரம் எடுக்கப் போகலாம் வா என்றேன்.

“சார் நீங்கள் வரத்தேவையில்லை. காசையும், உங்களுடைய ஐ. டி. கார்ட்டையும், படத்தையும், தாருங்கள்” என்று கூறினான். சரி என்று கொடுத்து விட்டேன். அவனிடம் காசு கொடுக்கப் பயம். சரியாக நூறு லீயோன் கொடுத்தேன். எனக்கும் அந்தக் கூட்டத்தில் அலைந்து திரிய மனமில்லை. வேலையும் அதிகம்.

போய் இரண்டு மணித்தியாலங்களில் திரும்பினான். அவன் கையில், சாரதி அனுபதிப் பத்திரம், என் படத்துடன்!. என்னை நேரில் பார்க்காமலே, எனக்குக் கார் ஓட்டத்தெரியுமோ என்று அறியாமலே, எனக்குச் சாரதி அனுமதிப்பத்திரம்!

“சார்! இன்னும் ஒரு ஐம்பது லீயோன் வேண்டும் என்றான்”. அந்த காசு சாரதிப் பத்திரம் வழங்குபவருக்கு. என்னால் அது கூட உகிக்க முடியாதா? கமாராவுக்கும் பங்குண்டு.

அதுதான் அந்த நாட்டு ஊழலுக்கு நான் சேய்யும் பங்கு! “ஊருடன் சேர்ந்து வாழ்” என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் “ஊருக்கு உலை வை” என்று கேள்விப்பட்டதில்லை.

எனது மனைவி மிகவும் நல்ல மனம் உள்ளவள். ஏழைகளுக்காக இரங்குவாள். தன்னிடம் உள்ள பழைய உடுப்புகளையும், மகளின் அளவில்லாத உடுப்புகள் எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து விடுவாள்.. சில வேளைகளில் என்னைக் கேட்காமல் புது உடுப்புகளையும் தூக்கிக் கொடுத்து விடுவாள்.

அவளுடைய கருணை மனதை நன்றாகப் பயன்படுத்துவதில் அவன் ஒரு சூரன்!

தனது வீட்டில் இருக்கும் பத்துப் பேருக்கும் தான் ஒருவன்தான் உழைத்துப் போட வேண்டும், மனைவிக்குச் சுகமில்லை, பாரிச வாதத்தில் தாய் படுத்திருக்கிறாள், பாட்டி இறந்துவிட்டாள்.

இப்படிப் பல பல கதைகளைச் சொல்லி எவ்வளவோ காசை என் மனைவியிடமிருந்து கறந்திருப்பான்.

ஆனால் எனக்கோ அவன் சொல்லுவதில் ஒன்றும் நம்பிக்கை இல்லை!.

சப்பாத்துகளில் அவனுக்கு அலாதி ஆசை ! ஒரு நல்ல புதுச் சப்பாத்து வாங்க கமாராவின் இரண்டு மாதச் சம்பளம் தேவை.

நான் புதுச் சப்பாத்து போடுவதைக் கண்டால். "சார்! பாவித்ததும் எனக்கு தந்து விடுங்கள்” என்று முன்னதாகவே சொல்லி வைத்து விடுவான்.

"அதற்கு இன்னும் ஒரு வருஷம் செல்லும்" என்று நான் அவனைக் கேலி செய்து விட்டு போ ய் விடுவேன். அதற்கு முன்பே தனக்குச் சப்பாத்து கிடைத்து விடும் என்ற நம்பி க்கை அவனுக்கு.

எனது மகளின் சப்பாத்துகள், விளையாட்டுப் பொருட்கள், எல்லாம் அள்ளிக்கொண்டு போ ய் விடுவான். மகளின் புத்தகங்களையும் விடுவதில்லை! படிக்காதவனுக்கு புத்தகங்கள் எதற்கு? விற்பதற்கா அல்லது அவனது பிள்ளைகளுக்கா?

அன்று கம்பனில் காஷியர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி எல்லா இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினோம். எங்கு தேடியும் அவரைக் கானவில்லை. ஒரு சந்தேகத்தில் அவரது அறைக்கதவை உடைத்துப் பார்த்தால் இரும்புப் பெட்டி திறந்தபடி காலியாக இருந்தது.

போலீசை அழைத்தோம் அவர்கள் ஒரு நாள் முழுவதும் பலரை விசாரித்தும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவர்கள் தமது வேலையைச் சரியாகச் செய்தார்களோ என்று எனக்குச் சந்தேகம். காரணம், காஷியர் மந்திரி ஒருவரின் மருமகன்.

ஏதோ தெரியவில்லை கமாராவை மாத்திரம் விசாரணை செய்ய என்று வேனில் அழைத்துச் சென்றார்கள்.

எனக்கும் எனது மனைவிக்கும் மிகுந்த அதிர்ச்சி!

பல வதந்திகள் பரவத்தொடங்கின. கமாராவிடம் எரிச்சல் உள்ளவர்கள் எல்லாம் அவனை அவதூறாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அந்த வறிய நாட்டில் களவுக்குப் பஞ்சம் இல்லை. பொறுப்பில் உள்ளவர்கள் முதல் வறியவன் வரை எல்லோருக்கும் அதில் பங்குண்டு!.

நான் வெளி நாட்டில் இருந்து இங்கே வந்தவன். எனக்கு நல்ல சம்பளம் எல்லா வசதிகளும்.?. ஆனால் இந்தநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சிறிய ஊதியத்தை வைத்து எப்படி சமாளிக்க முடியும்?.

அரசியல் வாதிகள் எல்லோரும் எல்லாச் சுகபோகங்களும் அனுபவிக்கிறார்கள்!. மக்களைப் பற்றி கவலைகொள்வதில்லை!.

வெளிநாட்டவரும் மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அங்கிருக்கும் வளங்களைச் சூரையடுவதைப் பார்க்கும் பொது, நேர்மையாக உழைக்கும் எனக்கு அந்த ஊரில் இருப்பது அறவே பிடிப்பதில்லை.

அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு! நாட்டின் பொருளாதாரமோ மோசமான நிலையில். வேலையில்லாத் திண்டாட்டம். தலைதூக்கி ஆடுகிறது.

மருத்துவ மனைக்கும், மறியலுக்கும் சென்றால் உயிருடன் திரும்ப முடியாது என்று எல்லோரும் சொல்லுவார்கள்’ .

எங்களுக்கு கனடா விசா வந்துவிட்டது. இன்னும் ஆறு அல்லது எழு மாதங்களுக்குள் இந்த ஊரை விட்டுப் போய்விடுவோம்.

இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. கமாராவைப் பற்றி ஒரு சேதியும் இல்லை. மகளைப் பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டு போலீஸ் நிலையத்தை நோக்கி காரை செலுத்தினேன். இன்ஸ்பெக்டர் என்னை வரவேற்றார். களவு பற்றி விசாரித்தேன்.

களவுபோன தொகை 25,000 டாலர்கள் என்பதால், எனக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி என்று கூறினேன்.

காஷியர் நாட்டை விட்டு போயிருப்பார். அவரைக்கண்டுபிடிக்க இயலாது. என்று கூறினார். கமாராவுக்கும் களவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். அவன்தான் கடைசியில் காஷிருடன் இருந்தவன். அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று கூறினார். கமாராவுக்கும் களவுக்கும் எதோ சம்பந்தம் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

கமாராவை தனிமையில் சந்திக்கலாமா? என்று கேட்டேன். ஆம் என்னோடு வாருங்கள் என்றார்.

கமாரா வெறும் தரையில் படுத்திருந்தான். என்னைக் கண்டதும் எழும்ப முயற்சித்தான். முடியவில்லை! .கண்களெல்லாம் சிவந்து, தடித்து இருந்தன. உடம்பெல்லாம் அடிவேண்டிய தழும்புகள். அவனைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் சாரை சாரையாக வழிந்த வண்ணம் இருந்தது. அவன் கஷ்டத்தை என்னால் உணரமுடிந்தது.

“கமாரா! நீ உனக்குத் தெரிந்த உண்மை எல்லாம் கூறிவிட்டாயா?”என்று கேட்டேன். “ஆம்” என்றான்!.

அவனைப் பார்த்தால் களவுக்கு உதவி சைய்தவன் மாதிரித் தெரியவில்லை. !

இன்ஸ்பெக்டர் அவனை எனது பிணையில் விடச் சம்மதித்தார். அவனால் ஒரு பிரயோசனம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். ஆனால் களவு செய்தவனை பிடிக்க முடியவில்லையே என்ற கோபம் அவருக்கு.மந்திரியின் மருமகன் இந்தக் களவில் சம்பந்தப் பட்டிருப்பது மற்றொரு காரணம்.

கமாரா தனது வீட்டுக்கு வழிகாட்டினான். மூலை முடுக்குகள் எல்லாம் கார் வளைந்து வளைந்து சென்றது. கடைசியில் ஒரு சிறு வீட்டின் முன் வந்து நின்றது.

வீட்டின் முன் கார் நின்றதும், சிறுவர்களும், சிறுமியர்களும் அங்கிள் கமாரா!, அங்கிள் கமாரா! என்று கத்துயபடியே அங்கே குவிந்தார்கள்!. அவர்களைத் தொடர்ந்து ஒரு பெண்ணும் ஒரு கிறித்துவ பாதிரியாரும் எங்களை அணுகினார்கள். அந்தப்பெண் கமாராவைக் கண்டதும் அழத் தொடக்கி விட்டாள். அவள் போட்டிருந்த கிழிந்த உடுப்பை கவனிக்கிறேன். பாதிரியார் அவளைச் சமாதானப்படுத்தி, கமாராவை உள்ளே அழைத்துச் செல்லுமாறு அவளிடம் கூறினார்.

நானும் பாதிரியாரும் சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்த மரத்தின் கீழிருந்த வாங்கில் அமர்ந்தோம். பாதிரியார் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கமாரா உங்களைப்பற்றியும் உங்களுடைய மனைவி பற்றியும் என்னிடம் நிறையச் சொல்லி இருக்கிறான். அவனுக்கு உங்களிடம் ஒரு தனி மரியாதையும் மதிப்பும்.

“கமாரா ஒரு ஆநாதை. அவனை பல வருடங்களுக்கு முன்னர் நான் தத்தெடுக்க இங்கிலாந்தில் இருந்து வந்தேன். அவன் இருந்த சூழ் நிலையிலிருந்து அவனை என்னால் பிரிக்க முடியவில்லை. அதனால் நானே இங்கு தங்கி விட்டேன்”.

“அவனுடைய மனைவிதான் அந்தப் பெண் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை”.

“யார் இந்த பிள்ளைகள்"? நான் கேட்டேன்.

“அவர்களெல்லாம் அவன் தத்தெடுத்த அனாதைகள். எல்லாமாக பத்துப் பேர். அவனுக்கு வேறு ஒரு சொந்த பந்தம் இல்லை”.

பிள்ளைகள் ஒவ்வொருவராக எங்களை நோக்கி வரத்தொடங்கினார்கள்.

அவர்கள் கண்களில் கமாராவின் வேதனை தெரிந்தது. பாதிரியாரிடம் போலீசைப் பற்றி முறையிட்டார்கள்!. திரும்பிப் போய் விட்டார்கள்! துறைவியாகிப்போன பாதிரியாரும் கண் கலங்கினார்.

அவர்கள் எல்லார் முகங்களிலும் எனக்கு ஏதோ பந்தம் தெரிந்தது!. அவர்களை நன்றகப் பார்க்கிறேன். என்மனைவி அருகில் அப்போது இல்லையே என்று எனக்குக் கவலை. ஆனால், கமாராவின் நிலையை அவள் பார்க்க வேண்டாம்!.

அவர்கள் உடுத்திருந்த சட்டைகளில் எனது மகளின் சாயல் தெரிகிறது. பொய் தெரியவில்லை!

அவர்கள் கால்களில என் மகளின் கால்கள் தெரிகிறது. களவு தெரியவில்லை.

அவர்கள் விளையாடும் பொருட்களிலேல்லாம் என் மனைவியின் கருணை தெரிகிறது. அவன் கூறிய பொய்கள் தெரியவில்லை!

அவர்கள் விழிகளில் எல்லாம், கமாராவின் அன்பு தெரிகிறது கபடம் தெரியவில்லை!

இரத்தம் கசியும் அவன் கால்களில் என் சப்பாத்து தெரியவில்லை!. அவன் அப் பிள்ளைகளுக்காக செய்த தியாகம் தெரிகிறது!.

எனக்குப் பிரியாவிடை என் சேவையைப் பாராட்டி எனக்கு புகழாரம்! எனக்கு பத்தாயிரம் டாலர் காசோலை!.

தூரத்தில் ஒரு மூலையில் கமாரா கண்கலங்க நிற்பது தெரிகிறது!

அவனை அனுகுகிறேன். அவன் காதில் "எங்களை நாளைக்கு நீதான் ஏர்போர்ட்டுக்குக் கொண்டுபோக வேண்டும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றேன். பாதிரியார் என்னுடன் கை குலுக்கினார். என் மனைவியிடம் அவள் கமாராவின் மனைவிக்கு நேற்று கொடுத்த துணி மணிகளுக்கு நன்றி சொன்னார்.

பத்தாயிரம் டாலர் காசோலையை அவரிடம் கொடுத்தேன்! இது கமாராவின் குழந்தைகளுக்கு! அவர் முகம் சந்தோசத்தில் பூரித்தது.

கைப்பெட்டிகளை காரிலிருந்து இறக்கி விட்டு, தூனோரமாக நின்றான் கமாரா!. அவனருகே சென்றேன். கையிலிருந்த சப்பாத்துப் பெட்டியைக் கமாராவிடம் கொடுத்தேன்! அது ஒரு புதிய விலை உயர்ந்த "நைக்கி" சப்பாத்து!.

அவன் மனதார நன்றி சொல்வதை உணர்கிறேன். அவன் முகத்தில் தெரிந்த வெளிச்சத்தில் மனத்திருப்தியோடு அங்கிருந்து அசைந்தேன்.

என் மகள் “பாய் பாய் கமாரா அங்கிள்” என்று கத்துவது கேட்கிறது. அவளைக் கட்டிப் பிடிக்கிறேன். கமாராவின் பிள்ளைகளைக் கட்டிப் பிடிக்கும் உணர்வு!

கமாரா என் வாழ்வின் சாரதி!

இச்சிறுகதையில் வரும் எல்லாம் கற்பனையே. ஒருவரையும் குறிப்பதில்லை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link