சிறுகதைகள்


எம்ஜிஆர் என் ஹீரோ

வின்னி

இன்று எப்படியாவது முதலாவது காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட வேண்டும் என்ற திடகாத்திரம்!

எம்.ஜி.ஆரின் ‘காஞ்சி தலைவன்’ படம் வெளிவரும் நாள் அது. வியாழக்கிழமை! மதிய சாப்பாட்டை அவசர,அவசரமாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திலிருந்து விண்ட்சர் தியேட்டரை நோக்கி நடக்கிறேன். பாக்கெட்டில் கவனமாக சேர்த்து வைத்த அறுபத்து ஐந்து சதங்கள்! ஆமாம்,கலரிதான்! பழைய படம் என்றால் முப்பத்தைந்து சதங்கள்மாத்திரமே! யாருக்கு வேண்டும் தியாகராஜ பாகவதர் படங்கள்? அடிக்கடி பாக்கெட்டைத் தடவி காசு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறேன். ஒரு சதம் குறைந்தால்கூட அன்று படம் பார்க்க முடியாது!

தியேட்டரின் முன்னால் சரியான சனம். யாரோ முதுகில் தட்டுவது போன்ற பிரமை திரும்பிப் பார்க்கிறேன். அப்பா! "எங்கே போகிறாய்?" என்று கேட்கிறார். "படத்துக்கு" என்று சொல்கிறேன். சினிமா தியேட்டரின் முன்னால் நின்றுகொண்டு வேற என்ன சொல்ல முடியும்? "காசு இருக்கிறதா" என்று கேட்கிறார் . " ஆம் " என்றேன். “சரி படத்தைப் பார்த்து விட்டு வா” என்று கூறி வேலைக்குப் போய் விட்டார்.

அவர் வேலை செய்யாவிட்டால் எட்டு பிள்ளைகள் உள்ள குடும்பத்தை எப்படிக் கொண்டு நடத்துவது? வகுப்புக்குப் போகாமல் சினிமா பார்க்கப்போவது அதுதான் முதல்முறை. என்ன தண்டனையோ தெரியாது? வீட்டுக்குப் போனால்தான் தெரியும். அப்பா ஒரு கணக்காளர் எப்பவும் வேலைதான். படம் பார்க்கப்போகக் கூட அவருக்கு நேரம் இல்லை. அப்படிப் போனாலும் குடும்பத்தோடு பத்துப்பேரும் சேர்ந்து போவோம். அதுவும் முதலாவது வகுப்பில் சாக்லேட், குளிர்பானம் எல்லாம் கிடைக்கும். அதுவும் வருசத்தில் ஒருமுறை, "ப" வரிசையில் தொடங்கும் கருத்துள்ள சிவாஜி கணேஷன் படங்கள் அல்லது கடவுள் படங்கள். எனக்கு எம்ஜிஆர் படம் அப்பாவுடன் போய்ப் பார்க்கவேண்டும் என்றஒரு ஏக்கம்! அப்பா மகனுக்கிடையே இருக்கும் பல விடயங்கள் கதைக்கலாம். அவருடன் போனால் வசதியாக முதலாம் வகுப்பில் இருந்தும் பார்க்கலாம்!

வரிசையில் இடிபட்டு ஒரு மாதிரி உள்ளே நுழைந்து விட்டேன். எம்ஜிஆர் படமல்லவா!. கூட்டமோ கூட்டம்!. பலருக்கு டிக்கெட் கிடைத்திருக்காது. கலரியில் திரைக்கு முன்னால் இன்னும் ஒரு வரிசைதான் இருக்கிறது. ஊழியர்கள் இருவர் வாங்கு ஒன்றை கொண்டு வந்தார்கள். ரசிகர்கள் அவர்களைத் தள்ளி அடித்து இருக்க வரும்போது வாங்கை நிலத்தில் தலை கீழாக போடுவார்கள். இருக்க ஓடி வரும் எல்லோரும் விழுந்து எழும்புவார்கள். இப்படி பல தடவைக ள் செய்து கடைசியில் வாஙகை வைத்து விட்டுப் போய்விடுவார்கள். காசையும் கொடுத்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட வேணுமா?

முதல் நாள் கலரியில் எம்ஜீஆர் படம் பார்க்க வேண்டுமென்றால், அதுதான் நியதி! முதல் மணி அடிக்க நான் கூட்டத்தோடு, நெரிபட்டு ஒரு மாதிரி வாங்கில் இருந்து விட்டேன். பக்கத் தில் இருந்தவர் சிவப்பு சேர்ட்டும் கருத்த லுங்கியும் அணிந்திருந்தார். கருப்பும், சிவப்பும் கலந்ததுதான் திமுக வின் கொடி! எல்லாம் வாத்தியார் மேலே இருக்கும் பக்திதான். அத்தோடு தலைவர் கருணாநிதி கதை எழுதிய படமல்லவா! அவர் வேர்க்க வேர்க்க விசிலடித்துக் கொண்டிருந்தார். அ டிக்கடி கழுத்தில் இருந்த திமுக கொடியை எடுத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டார். எனக்கு அவர் பக்கத்தில் இருக்க அருவருப்பாக இருந்தது! கலரியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவை எல்லாம் இல்லாவிட்டால் அது தலைவர் படமாக இருக்க முடியாது! அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் சிரித்தேன்.

இடைவேளை! பக்கத்தில் இருந்தவரின் விசில் சத்தத்தால் காதெல்லாம் அடைத்து விட்டது. அங்கெ பெரிய சத்தத்தில் ஒலிபரப்பான பாட்டுக்களைக் கேட்க முடியவில்லை. ஒரேன்ச் பார்லி, ஐஸ் கிரீம், ஐஸ் பழம், கடலை, சாக்லேட் என்று எல்லாரும் வாங்கித் சாப்பிடுகிறார்கள். என்னிடம் காசில்லை! என் வெள்ளை உடுப்பெல்லாம் வேர்வை. நான் வாங்கிலிருந்து எழும்பினேன். என் வலது சேர்ட் கை சிவப்பாக மாறி இருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தவரின் சேர்டில் இருந்து வந்தது என்று ஊகிக்க எனக்குப் பல வினாடிகள் செல்லவில்லை. அந்த சாயம் சன்லயிட் சோப் போட்டு தோய்க்கப் போகுமா என்ற சந்தேகம்! சேர்ட் எல்லாம் சிகரெட் மணம். சகிக்க முடியவில்லை. மாமா லண்டனிலிருந்து அனுப்பிய மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் வாங்கிய விலைஉயர்ந்த செயின்ட் மைக்கேல்ஸ் சேர்ட் அது. யாழ்பாணத்தில் அந்த சேர்ட் வாங்க முடியாது.

"தம்பி குடிக்க ஏதாவது வேணுமா"?பக்கத்தில் இருந்தவர் ஒரேன்ச் பார்லி குடித்தபடி என்னைக் கேட்கிறார். நான் வேணாம் என்றேன்! அவருக்கு எம்.ஜி.ஆர் போல தானும் ஒரு கொடை வள்ளல் என்ற நினைப்போ? என்னிடம் ஒரேன்ச் பார்லி வாங்கக் காசில்லை என்று அவருக்கு எப்படித் தெரியும்? அவருடைய பெருந்தன்மையை நினைத்துப் பெருமைப்பட்டேன். வலக் கையில் வலி. டிக்கெட் வாங்க அறுபத் தைது சதத்தை இறுகக் கையில் பிடித்துக்கொண்டு, டிக்கெட் கவுண்டரில் கை விட்டபோது மற்றவர்களின் கைகளால் அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி. நான் கையை வலியால் அழுத்துவதை அவர் கண்டுவிட்டார்." என்ன நடந்தது?" "கை நோகிறதா?" என்று கேட்கிறார். நான் "ஆம்" என்று கூறி விட்டுத் திரையைப் பார்க்கிறேன். "தம்பி எனக்கும் உன்னைப்போல ஒரு மகன் இருந்தான் அவன் கார் விபத்தில் இறந்து விட்டான்" என்று கவலையாகச் சொன்னார். "நானும் அவனும்தான் ஒன்றாக படம் பார்க்க வருவோம்". "இப்ப நான் தனிய, மனைவியோ பிள்ளைகளோ ஒருவரும் எனக்கு இல்லை ” அவர் கண்களில் கண்ணீர் கசிவதைக் காண்கிறேன். “அவன் பள்ளிகூடத் தில் நன்றாகப் படிப்பான்”. எம்.ஜி.ஆர் படம் என்றால் அவனுக்கு உயிர்". "நான் முன்பு படம் பார்க்க வந்ததே அவனுக்காகத்தான்” . ஆனால் இப்ப வருவது அவன் நினைவை மறக்க". அவர் சோகம் என்னை வருத்தியது. அவருடைய தந்தைப் பாசம் என்னைக் கவர்ந்தது.

இடைவேளை முடிவதற்கு பெல் அடிக்கிறது. வாங்கில் அமருகிறேன், பக்கத்தில் இருந்தவர் கையில் இருந்த கச்சான்கடலைப் பொதியை எனக்குத் தருகிறார். மறுக்க மனமில்லாமல் வாங்குகிறேன். படம் காஞ்சித் தலைவன்! மன்னர் எம்.ஜி.ஆர், குத்துச்சண்டையில் வெற்றிபெறுகிறார்! மறுபடியும் திரை அரங்கே அதிர்கிறது. ஆனால் பக்கத்தில் இருந்தவர் சோகத்தில் மௌனமாகி விட்டார். சந்தோசமாக விசிலடித்தும், கத்திக் கொண்டும் இருந்தவருக்கு என்ன நடந்தது? மகனின் நினைப்போ? அவன் பிரிவு அவரை வாட்டுகிறதோ? அவரது கதையைக் கேட்டதும் எனக்கு படத்தில் இருந்த ஆர்வம் போய்விட்டது! படம் முடிந்ததே தெரியவில்லை!

வீட்டுக்கு மூன்று மைல் நடக்க வேண்டும். விரைவாக நடக்கிறேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் என்னை பைசிகிளில் வருவது தெரிகிறது. "தம்பி எங்க போகிறாய்? வா,உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்" என்றார். நான் “வேண்டாம், எனக்கு நடக்க விருப்பம்”” என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர்கிறேன். அவரும் போய் விட்டார். அரைவாசித் தூரம் போயிருப்பேன் எதிரில் நடு ரோட்டில் ஒரே கூட்டம். யாரோ ஒருவர் பைசிக்கிளோடு கீழை விழுந்திருந்தார்! அவரைக் கார் அடித்து விட்டது!. அவர் பிழைக்க மாட்டார் என்று எல்லாரும் கதைத்தார்கள். நானும் எட்டி அவர் முகத்தைப் பார்க்கிறேன். அவர் வேறு யாருமல்ல. எனக்குப் பக்கத்தில் இருந்தவர்தான்! முகமெல்லாம் இரத்தம்!. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது. மகனுக்கு நடந்தது அவருக்கும் நடக்கக் கூடாது என்று நல்லூர் கந்தனை வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். நசிஞ்ச சைக்கிளுக்குக் கீழே இருந்த அவரது சிவப்பு நிற உடம்புதான் என் கண்ணெதிரில். நானும் அவருடன் சென்றிருந்தால் எனக்கும் அதே கதிதான்!

மாலை பள்ளிக்கூடம் போகாமல் படம் பார்க்கப் போனது பற்றி அப்பா ஒன்றுமே கேட்கவில்லை. அடிக்கப்போகிறார் என்று நினைத்தவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. "எல்லா உடுப்புகளையும் தோய்க்கப் போடு" அம்மா கத்தினாள்.அவளுக்கு சிகரெட் மணம் அறவே பிடிக்காது. எனது தியேட்டர் அனுபவம் ஒருத்தருக்கும் தெரியாது! யாருக்கும் சொல்லவேணும் போல இருக்கிறது ஆனால் பயம். சேர்டில் இருந்த சிவத்த நிறத்தைப் பற்றியோ அல்லது அதிலிருந்து வரும் சிகரெட் நாற்றத்தைப் பற்றியோ ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை. அதுதான் என் மனதுக்கு பெரிய சங்கடமாக இருந்தது!. எனது அனுபவங்களை ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று கவலை.

இரவு அப்பா என்னிடம் "நீ படத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே?" என்றார்.நான் அவருக்கு படத்தின் கதையை யும்,எனது அனுபவங்களையும் ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டேன். என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சனிக்கிழமை நானும் அப்பாவும் மருத்துவ மனைக்கு அந்த எம்.ஜி.ஆர் ரசிகரைப் பார்க்கச் செல்கிறோம்!. அப்பாவின் அந்த முடிவை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை! அவர் உயிர் பிழைத்து விட்டார்! கையில் இருந்த மகனின் போட்டோவை எங்களிடம் காட்டினார். “தம்பி உனது கை நோ எப்படி இருக்கிறது?” என்று கேட்கிறார். நானே வலியை மறந்து விட்டேன். அப்பா என்னைக் குற்ற உணர்வோடு பார்க்கிறார் ! என்னைப் பார்த்ததும் அவருக்கு தனது மகனைக் கண்டது போல் ஒரு உணர்வு. மகனிடம் அவர் வைத்திருந்த பாசத்தை என்னால் நம்ப முடியவில்லை. சுகமாகி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும், அவருக்கு நாங்கள்தான் குடும்பம்! அவர் மகனுக்கு எம்.ஜிஆர் ஹீரோ! ஆனால் எனக்கோ அவர்தான் ஹீரோ!

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link