சிறுகதைகள்


சாதி இல்லை

சுப்ரமணியம் சிவபாலன்

ஆள்வாபிள்ளை சரியான குடிகாரன். குறைந்த சாதியை சேர்ந்தவன். அவன் ஆறடி உயரம், நல்ல உடம்பும் வெள்ளை நிறமும். அடர்த்தியான கருத்த தலைமுடி. பார்த்தால் ஜெமினி கணேஷன் போல் இருப்பான். மாலையில் வேலையால் வீடு வரும்போது நன்றாக குடித்துவிட்டு வருவான். இரவிரவாக தூசனத்தில் கத்திக்கொண்டே இருப்பான். இரண்டு வீடு தள்ளி இருக்கும், எட்டாம் வகுப்பில் படிக்கும், எனக்கு, காசில்லாமல் தூசனம் படிப்பித்த குரு அவன்தான்

அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு அவனால் இரவில் நிம்மதி இல்லை. இரவில் என் படிப்பை குழப்பும் அவன் சத்தம் எனக்கு அவனை கொல்ல வேணும் போல இருக்கும். இரண்டு வீடு தள்ளியிருக்கும் எனக்கே அப்படி இருந்தால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?

அவனைப்பற்றி பொலிசில் பலர் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. அவன் குடிப்பதை நிறுத்தமாட்டான் என்று எல்லோரும் முடிவு செய்து அவனைப்பற்றி புகார் செய்வதை நிறுத்தி விட்டனர். அவர்கள் முடிவுக்கு வேறொரு காரணமும் உண்டு. குடிவெறியில் இல்லாதபோது அவனைப்போல் நல்லவனைக் காணமுடியாது. எல்லோரிடமும் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வான். வேலையில் கவனமாக இருப்பான். ஆனால் உழைப்பதை எல்லாம் சாராயத்தில் செலவு செய்து விடுவான். அவன் வெறியில் இருக்கும் போது யாராவது அவனை ஏன் இப்படி குடிக்கிறாய் என்று கேட்டால் அவன் பொறுக்கமாட்டான். சிலவேளை சண்டைக்கும் போய், அது போலீசில் முடியும் .

என் அப்பாவிடம் அவனுக்கு நல்ல மரியாதை. அவர் அறிவுரையை “ஓம் ஐயா", "ஓம் ஐயா" என்று பயபக்தியாக கேட்பான். ஆனால் குடிவெறியில் எல்லா அறிவுரையும் பறந்து விடும். போலீஸ் பிடித்துக்கொண்டு போனால், அப்பாதான் அவனை விடுவிப்பது.

மனைவி அவனிடம் வேண்டாத அடி இல்லை. குடிவெறியில் தூசணத்தில் திட்டுவதெல்லாம் சகித்துகொள்வாள். ஒன்பது அழகான பிள்ளைகளைப் பெத்துக் கொடுத்தவளுக்கு, அதுதான் அவன் கொடுக்கும் சன்மானம். பன்னிரண்டு வயதில் இருந்து கைப்பிள்ளை வரை ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு குழந்தையாக பெத்துப் போட்டவளுக்கு, அதுதான் அவன் செய்யும் கைமாறு.

வீடுகளில் சென்று வேலை செய்து கிடைக்கும் காசு.அரிசி,மரக்கறிகளையும் வைத்து பிள்ளைகளுக்கு சமைத்துப்போடுவாள்.

அக்காவுக்கு கல்யாணம். ஆள்வாபிள்ளைக்கு அழைப்பில்லை.அவனை அழைத்தால் வேறு ஒருவரும் கல்யாண வீட்டுக்கு வரமாட்டார்கள். அவன் குறைந்த சாதி! சாதி சமயம் பாஷை என்பதிலெல்லாம் அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஊருடன், உறவுடன் சேர்ந்து வாழ வேண்டுமே! அதுவும் குடிகாரனை கூப்பிட்டால் மேலும் பிரச்சினை!

ஏதோ தெரியவில்லை ஆள்வாபிள்ளை வெள்ளை வேட்டியும், வெள்ளை சேர்ட்டும், கையில் சாராயப் போத்தலும் கொண்டு அழைப்பில்லாமலே கல்யாண வீட்டுக்கு வந்து விட்டான். எல்லார் முகங்களிலும் ஆச்சரியம்!.

வீட்டில் ஒருவரும் குடிப்பதில்லை! சைவ முறைப்படி கல்யாணம்! நல்ல நாளும் அதுவுமாக ஏன்தான் இப்படிச் செய்கிறானோ தெரியவில்லை?. அவனுக்கு குடிப்பதற்கு வேற இடம் கிடைக்கவில்லையா? என்ற பல கேள்விகள் எல்லார் மனதிலும் எழுகின்றன.

எல்லார் கண்களும் அப்பாவின் அடுத்த நகர்வை நோக்கி காத்திருந்தன! அப்பாவுக்கு கோபம் வந்தால் ஒருவரும் அடக்க முடியாது.

அப்பா தனனை ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு "வா ஆள்வாபிள்ளை ", "வா" என்று அவனை வரவேற்றார்."ஐயா எனக்கு என்ன கொண்டுவருவதென்று தெரியவில்லை அதுதான் இதை கொண்டுவந்தனான்" என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த போத்தலை அப்பாவிடம் கொடுத்தான். "நான் வாறன் ஐயா" என்று சொல்லிய படியே அங்கிருந்து திரும்பி தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தான்.

சாராயம் அது தான் அவனது கல்யாணப்பரிசு!

அவனுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்காமல் அனுப்பிவிட்டோமே என்ற கவலை அப்பாவின் மனதுக்குள்!. எப்படி பந்தியில் இருத்துவது?

முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன, பல நாடுகளில் வேலை செய்துவிட்டு கனடாவுக்கு வந்து விட்டேன். சத்தியமூர்த்தி அப்பாவின் நண்பர். தனது மகனின் கலியாணத்துக்கு அழைத்திருந்தார். ஊரில் அவர் கோவில் தர்மகத்தா. சாதி சமயம் பார்ப்பதில் கடுமையானவர். அக்காவின் கல்யாணத்துக்கு வந்திருந்தவர் அதனால் தட்டிக்கழிக்க முடியவில்லை.

கலியாணம் முடிந்து வரவேற்றுபசாரம். டொரோண்டோ வழக்கத்தின்படி எக்கச்சக்கமான சனம். எனக்கு இப்படி எல்லாம் செலவழிப்பது பிடிக்காது. அப்பாவின் நண்பனுக்காக நூறு டாலரை என்வலப்பில் போட்டு கொண்டு மண்டபத்தில் வந்து சேர்ந்தேன். அப்பாவின் நண்பர் என்னை வரவேற்று ஒரு கதிரையில் அமர்த்தினார்.

எனக்கு பக்கத்தில் அழகாக சூட் அணிந்து இருந்தவரை.எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது. அவர் கையில் ஒரு அழகான பையில் வயின் போத்தல் ஒன்றை வைத்திருந்தார். அவருடன் கதைக்கவேணும் போல இருந்தது! என்னை அறிமுகம் செய்து கொண்டு, யாழ்ப்பாண பாணியில்

"தம்பி உன்னுடைய பெயர் என்ன"? “ஜோன்”. "ஸ்ரீ லங்காவில் எந்த ஊர்? "யாழ்பாணம்". மாப்பிள்ளைக்கு சொந்தமா? “இல்லை, அவர் எனக்குக் கீழ வேலை செய்கிறார்”. என் கேள்விகளுக்கு சலுப்பில்லாமல் அவனும் பதில் சொல்லிக்கொண்டு வந்தான்.

சாப்பிடப்போகலாம் என்று அறிவிப்பு வந்தது. “தம்பி வாரும்” என்று கூறியபடி அவசரமாக கதையை நிறுத்திவிட்டு சாப்பாட்டை நோக்கிப்பறந்தேன். மரக்கறி சாப்பிடுவனுக்கு அங்கு என்னதான் இருக்கப்போகிறது? பெரிய நீளமான மேசை! நிறையச் சாப்பாட்டு வகைகள் ! ஆடு. மாடு, கோழி என்று பலவகையான சாப்பாடுகள். அங்குமிங்கும் மரக்கறி வகைகளும் இருந்தன. அவற்றில் சிலவற்றை எனது தட்டில் போட்டுக்கொண்டு ஒரு மேசையில் போய் உட்கார்ந்தேன். ஜோனும் எனது மேசையில், அதாவது சமபந்தியில், அழகாக வெள்ளைச் சீலையில் அலங்கரித்திருந்த கதிரையில் வந்து அமர்ந்தான். சாப்பிட்டுக்கொண்டே கதையை தொடர்ந்தேன். "தம்பி உன்னுடைய அப்பாவின் பெயர் என்ன?" “ஆள்வாபிள்ளை”.

அதன் பின் நான் பேசவில்லை!. எனக்கு எல்லாம் விளங்கி விட்டது!

"நான் வேலைக்கு போக வேணும்" என்று கூறியபடியே மணமக்களை நோக்கி ஒரு கையில் வயின் போத்தலையும், மறு கையில் ஒரு என்வலப்பையும் கொண்டு போனான்.

எனக்கு எல்லாம் விளங்கி விட்டது!

அன்று சாராயப்போத்தல் செய்யாத வேலை ‘இன்று வயின் போத்தல் செய்துவிட்டதே’ என்ற மனத்திருப்தியோடு அங்கிருந்து வீடு நோக்கி நகர்ந்தேன்.

இச்சிறுகதையில் வரும் எல்லாம் கற்பனையே. ஒருவரையும் குறிப்பதில்லை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link