சிறுகதைகள்


கடைசி முத்தம்

கூடல்.காம்
மின்தூக்கியின் கதவுகள் விலகியபோது அவள் அவனை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள். கண் சிமிட்டும் நேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டவள், வெட்கத்தோடு வெளியேற, அந்த இளைஞன் மெல்ல வெளியே வந்தான். கதவுகள் மூடும் முன்பாக நானும் மனைவியும் மின்தூக்கியுள் நுழைந்தோம். தரை தளத்துக்கு பொத்தானை அழுத்தினேன்.

"அறிவு வேண்டாமா?" அவர்களுக்கான கேள்வியை என்னிடம் கேட்டாள். "இந்தப் பண்ணாடைதான் பில்லுக்குப் பணம் கொடுத்தது!"

நான் அதை கவனிக்கவில்லை. பெண்கள் பெண்களை நுட்பமாகப் பார்க்கிறார்கள்.

மகனுக்காக தந்தூரி சிக்கன் வாங்கிப் போகலாமே என்றுதான் இந்த ஓட்டலின் 5வது மாடியில் இருக்கும் ரூப் கார்டனுக்கு வந்தோம். பார்சலுக்குச் சொல்லிவிட்டு, மாடியில் நின்றபடி வேலூர் நகரம் சில ஆண்டுகளில் எப்படி விரிந்துவிட்டது என்பதை என்னைவிட என் மனைவிதான் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பார்த்து வியந்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் இந்தப் பெண் மீதும் ஒரு கண் வைத்திருந்திருக்கிறாள்.

அந்த இளைஞனின் முதுகும் அவன் முன்னுள்ள சிக்கன் பிரியாணியும், அவள் சாப்பிட்ட க்ளியர் சூப்பும் கண்ணில் பட்டபோது அவள் நேர்த்தியாக உடை அணிந்திருந்த விதமும் நிதானமாக சூப் சாப்பிட்ட நளினமும் எனக்குப் பிடித்திருந்தது. அதன்பிறகு பணியாளர் தந்த பார்சலை வாங்கிக்கொண்டு, தந்தூரி சிக்கன்தானே என்று மனைவி உறுதிப்படுத்திக்கொண்டிருந்தபோது, "எக்ஸ் கியூஸ் மீ" என்று எங்களிடையே புகுந்து சென்றபோதுதான் அந்தப் பெண்ணை மிக நெருக்கத்தில் பார்த்தேன். மாநிறமாக இருந்தாலும் அவள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் இளமையின் ஒளி பூரணமாக இருந்தது. அந்த இளைஞனும் உடன் போனான். ஆனால் நான் அவனை கவனிக்கவில்லை.

தரைத்தளத்தில் இறங்கி ஓட்டலைவிட்டு வெளியேறும்போது, அவர்கள் படிகளில் இறங்கி வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தேன். "ரோட்டை பாருங்க. அந்த சனியன்கள் எப்படியோ தொலையட்டும்" என்றாள்.

சாலையில் நடந்துகொண்டிருந்தாலும், என் மனம் 1978-ம் ஆண்டுக்குள் போய் விழுந்தது. இதே முத்தம் கிடைக்கப்பெற்ற தண்டபாணியின் அழகான முகம் மீண்டும் மீண்டும் துலங்கிக்கொண்டே இருந்தது. அவன் அழகு முகத்தை எப்படி மறக்க முடியும்? மறக்கப்படக்கூடாது என்பதற்காகத்தானே அவன் விபத்தில் இறந்தபோது, போய் பார்க்கவில்லை.

தண்டபாணியின் அழகை எனக்கு விளக்கத் தெரியவில்லை. உடற்பயிற்சி செய்த கட்டுமஸ்தான தேகம் அல்ல. எல்லோரையும் போலவே சாதாரணமான தோற்றம்தான். ஆனால் கோதுமையின் நிறம். அவன் முகவெட்டுதான் அவனை மிக எடுப்பாகக் காட்டியது. அவன் மீது நண்பர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கும்கூட பொறாமை. ஆர்.கே. சார் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர் வகுப்புக்குள் வந்தாலே அவனை மட்டம் தட்டாமல் பாடம் நடத்த மாட்டார். "பாணின்னா ஸ்டைல், ஃபாஷன். தண்டம்னா வேஸ்ட். அப்ப தண்டபாணின்னா என்னா?" வகுப்பில் எல்லாரும் சிரிப்பார்கள். அவன் படிப்பில் கெட்டிக்காரன் என்பதால் அதற்குமேல் அவனை யாராலும் கேலி செய்ய முடியவில்லை.

கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேரும் முன்பாக அமிர்தி காட்டுக்குப் போய்வரலாம் என்று தண்டபாணி சொன்னதால்தான் கிளம்பினோம். அப்போதெல்லாம் மிதிவண்டிதான் ரோமியோக்களின் வாகனமாக இருந்தது. நாங்கள் நான்குபேர். எங்களுக்கான புளிசாதம், முறுக்கு, தட்டை என எல்லாமும் அவன்தான் கொண்டு வந்தான். கீழ்அரசம்பட்டு பிரிவில் கொஞ்சம் ஓய்வுக்காக மரத்தடியில் நின்றபோதுதான் அந்தக் கறுப்பு அம்பாசிடர் கார் எங்கள் அருகில் நின்றது.

கணவன், மனைவி, மூன்று குழந்தைகள், ஒரு பாட்டி, தாவணி போட்ட ஒரு இளம்பெண் என கார் நிரம்பிக் கிடந்தது. அமிர்திக்குப் போகிற வழி இதுதானே என்று எங்களிடம் விசாரித்தார் வாகனத்தை ஓட்டிவந்த குடும்பத் தலைவர். நாங்கள் அவருக்கு வழியைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண் தண்டபாணியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கார் கிளம்பியபோது தலையை வெளியே நீட்டி, ரகசியமாக ஒரு ஃபிளையிங் கிஸ் கொடுத்தாள். கள் குடித்த குரங்காக மாறினான் தண்டபாணி.

காரை சைக்கிளில் விரட்டினோம். அமிர்தி காட்டை அடைந்த நிமிடம் முதலாக அவன் அவள் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். காட்டாற்றில் குளிக்கவும் வரவில்லை. அந்த வாண்டுகளை அவள்தான் மேய்த்துக்கொண்டிருந்தாள். அவளோடு இவனும் சேர்ந்துகொண்டான். முதலில் அவள் பேரை கண்டுபிடித்து வந்தான். "டேய், அவ பேர் புவனேஸ்வரி". மறுபடியும் காணாமல்போய் வந்து சேர்ந்தான். முகவரி கிறுக்கப்பட்ட காகிதத்தைக் காட்டினான். "லெட்டர் போடச் சொல்லியிருக்கா". கொஞ்சநேரம் கழித்து வந்தான். "நிஜமான கிஸ் கேட்டிருக்கேன்" என்றான். இது நடக்காது என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். குறைந்தது 4 மணி நேரத்தில் குடும்பத்துக்கு நடுவே என்ன பேசி, என்ன புரிந்துக் கொண்டு, இப்படியான காதல் மலர்ந்து, முத்தம் வரை வளரும்! இது நடக்கப்போவதில்லை. அவர்களும் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் புளியோதரை பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கியபோது மனச்சோர்வுடன் வந்து எங்களோடு ஒரு மரத்தின் வேரில் உட்கார்ந்தான். யாருடனும் பேசாமல் உட்கார்ந்த அவனிடம் நான்தான் பிரித்திருந்த பொட்டலத்தை நீட்டினேன். வாங்க மறுத்துவிட்டான். அப்போதுதான் அவள் முகம், அந்த மிகப் பருமனான மரத்தின் பின்பக்கத்திலிருந்து வந்து, அவன் காதோரம் கன்னத்தில் முத்தம் பதித்து விலகியது. ஒரு கனவுபோல இருந்தது. அவன் எழுவதற்குள் அவள் ஓடிப்போய் கார் அருகில் நின்ற குடும்பத்தோடு கலந்துவிட்டாள். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்தக் கார் புறப்பட்டுவிட்டது.

முத்தத்தைக் கன்னத்தில் தேடிக்கொண்டிருந்த வேளையில், இன்னொரு கன்னத்தில் அறைந்தார் வனஊழியர் ஒருவர். "அந்த பொண்ணுகிட்ட என்னடா பண்ண?. அப்படி ஓடிச்சு... நானும் பாத்துக்கிட்டேதான் இருக்கேன்". இன்னொரு அறை விழும் முன்பாக நாங்கள் போய் தடுத்து நின்றோம். மற்ற வனஊழியர்கள் வந்துவிட்டார்கள். எங்களுக்கும் ஓரிரு அடி விழுந்தது. அந்தப் பெண்ணுடன் இணக்கமான நட்பு என்பதைப் புரிய வைக்க அவள் கொடுத்த முகவரியைக் காட்டியபோது அதை அந்த வனஊழியர் வாங்கி கிழித்துப்போட்டுவிட்டு மீண்டும் ஒரு அறை விட்டார். அவன் உதட்டோரம் கிழிந்து ரத்தம் பீறிடத் தொடங்கியது. மற்ற ஊழியர்கள் தடுத்திருக்காவிட்டால் எங்கள் நிலைமை மோசமாகியிருக்கும். சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு சைக்கிளை எடுத்தபோது, மீண்டும் அந்த வனஊழியர் எங்களை வழிமறித்து, காற்றை இறக்கிவிட்டு, வால்டியூப்பை பிடுங்கி வீசினார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போய், ஒரு டீக்கடை-கம்- சைக்கிள் கடையில் சரிசெய்து கொண்டு புறப்பட மாலை ஆறு மணியானது.

இரத்தக் கசிவு நின்றாலும் அவன் உதடு வீங்கிப்போனது. ஆனால் அப்போதுதான் அவன் முகம் எப்போதும் இல்லாத மலர்ச்சியுடன் இருந்தது. பசியோ, அடியின் வலியோ எதுவுமே அந்த முகத்தில் இல்லை. "அந்த ஆளுக்குப் பொறாமைடா. அவ முத்தம் கொடுத்தது அவனுக்கு நல்லாவே தெரியும். வேணும்னே அட்ரஸை கிழிச்சுப் போட்டான். நா மெட்ராஸ் போனதும் திருவொற்றியூர் போய் இந்தக் காரை கண்டுபிடிப்பேன்" என்றான். அவனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது.

அவன் அப்பாவுக்கும் சென்னைக்கு இடமாறுதல் கிடைத்த பிறகு அவனைப் பார்ப்பது அரிதாக மாறியது. இப்போது போல செல்போன் இல்லாத காலம். தொலைபேசிகூட, கட்டணங்கள் எகிறும். படிப்பை முடித்தவுடன் வங்கி வேலையில் சேர்ந்தான். பெரிய பணக்காரர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அவன் கல்யாணத்தில் நண்பர்கள் நாங்கள் ஏதோ பிச்சைக்காரர்கள் போல ஒதுங்கித்தான் நிற்க வேண்டியிருந்தது. அவன்தான் எங்களை மேடைக்கு அழைத்துப்போய், போட்டோ எடுத்துக்கொண்டான்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் ஒரு கல்யாண வீட்டில் அவனை சந்தித்தேன். அவன் மட்டும் தனியாக காரில் வந்திருந்தான். மதிய விருந்து முடிந்தவுடன், "என்னோடு சென்னைக்கு வா, காலையில் ஊருக்குத் திரும்பலாம்" என்று வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றினான். அவன் வீடு அண்ணாநகரில் இருந்தது. வீட்டுக்குப் போகாமல் ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலுக்குப் போனோம். நேராக மதுக்கூடத்துக்குத்தான் அழைத்துச் சென்றான்.

"கவிஞனாச்சே நீ. சாப்பிடுவே இல்ல?"

"எப்பாவாகிலும்.."

"அப்ப கவிதையும் எப்பவாகிலும்தானா?"

மேசைக்கு வந்த பணியாளரிடம், அவனுக்கு வேண்டியதை சொல்லிவிட்டு, "உனக்கு வேண்டியதைச் சொல்லு" என்றான்.

"எது வேண்டுமானாலும்"

"பிச்சைக்காரன்தான் கொடுப்பதை வாங்கிக் கொள்வான். உனக்கு என்ன வேணுமோ அதைக் கேளு"

சொன்னேன்.

நண்பர்கள், ஊர் வதந்திகள் அரசியல் எல்லாமும் பேசிக் களைத்தபோது நான் அந்த விஷயத்தை மீண்டும் கிளறினேன்.

"அந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்தாயா?"

பதில் சொல்லாமல் வெறுமனே கோப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பேச்சை திசை மாற்ற என் கவிதைத் தொகுப்பை அவனுக்கு அனுப்பி வைப்பதற்காக அவனது விசிட்டிங் கார்டு கேட்டேன்.

எதையும் பேசாமல் என்னை வெறித்தான். "பாரதி சுயசரிதை படிச்சிருக்கேயில்ல.. "தேவர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்வோர் யார் என்றால்... நீதான் கவிஞனாச்சே சொல்லேன்..." ஒரு மிடறு குடித்தான். "என்னடா கவிஞன் நீ. பாரதிய படிச்சுட்டு கவிதை எழுதுடா". மீண்டும் ஒரு மிடறு சுவைத்தான். "உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர்...யாரு? மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்று அவர் தரப் பெற்றிடும் மாந்தரே... ஒரு ஆம்பளை பொண்ணுக்கு குடுக்கிற முத்தம் பெரிசில்ல. ஒரு பொண்ணு ஆம்பளைக்குத் திருப்பி தரும் முத்தம்தான் உலகத்துலயே பெரிசு". மீண்டும் ஒரு மிடறு. "உம்பர் வாழ்வினை எண்ணும் வாழ்வினோர்... பாரதி சொன்னா அது சத்தியமான வார்த்தை. இந்த ஒரு ஆயுசுக்கு அந்த ஒரு முத்தம் போதும்".

அவளை அவன் சந்திக்கவில்லை என்பது மட்டுமல்ல, சில மனப் புண்களும் உடைவது தெரிந்தது. மது அமர்வை முடித்துக்கொள்ள விரும்பினேன். பணியாளர் வந்த கட்டளைக்காக நின்றார்.

"போதும் போலாமே"

"ஃபர்ஸ்ட் யு லேர்ன் டேபிள் மேனர்ஸ்" என்றவன் தனக்காக இன்னொரு லார்ஜ் சொன்னான்.

"அழகான கோப்பை, அழகான சூழலுக்காக குடிக்கலாம்தான். ஆனால் பயமாக இருக்கிறது"

புன்னகைத்தான்

"கோப்பைக்காக குடிப்பாயா, மதுவுக்காக குடிப்பாயா?" பணியாளர் வைத்த லார்ஜை தனது கோப்பைக்குள் ஊற்றிக்கொண்டு என்னைப் பார்த்தான். "கோப்பையின் அழகு முக்கியம்னா அதுல மது சாப்பிடணும்னு இல்ல, வெறும் பச்சத் தண்ணியே போதும். மது முக்கியம்னா அது தொண்ணையா இருந்தாலும், எச்சி டம்ப்ளரா இருந்தாலும்கூட கூச்சமில்லை, அசிங்கமில்லை.

அந்தக் கோப்பையை முடிக்கும்வரை அவன் பேசவில்லை. நீண்ட மௌனம்.

"நீ கார் ஓட்டுவாய் என்று தெரியும்". சொல்லிவிட்டு, குடிகாரனின் உடல்நெளிவுகளுடன் சிரித்தான். "டேக் மீ ஹோம்"

அண்ணா நகரில் அவன் வீட்டைக் கண்டுபிடித்து, அழைப்பு மணியை அழுத்தினேன். வீட்டுக்குள் விளக்குகள் எரிந்தன. ஜன்னலைத் திறந்துப் பார்த்தது அவன் மனைவிதான். அந்த நேரத்திலும் மிக நேர்த்தியாக, உடனே வெளியே கிளம்புவதுபோன்ற அலங்காரத்துடன் இருந்தாள். நான் அவனோட பிரண்ட் என்றேன். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததும், ஒரு சாவியை ஜன்னல் வழியாக நீட்டினாள். "மாடியில ரெஸ்ட் எடுத்துக்கங்க" என்று ஜன்னலை மூடிவிட்டாள்.

மாடிப்படி ஏறிக்கொண்டிருந்த அவன் பின்னாலேயே போய், அறையைத் திறந்து அவனைப் படுக்க வைத்து, நான் தரையில் படுத்தேன். படுக்கையில் புரண்டவன், "அது தான்டா கடைசி முத்தம்" என்று அவன் முணுமுணுப்பது கேட்டது.

மறுநாள் நான் விழிப்பதற்கு முன்பாகவே அவன் எழுந்துபோய் குளித்துவிட்டு, நானும் குளிக்க ஏற்பாடு செய்தான். டிபன் சாப்பிட கீழே சென்றோம். அவன் மனைவி நேற்றைய சம்பவங்களே தெரியாதது போல எங்களை வரவேற்று, பரிமாறினாள். ஒரு விமானப் பணிப்பெண்ணின் சேவையை ஒத்திருந்தது. குழந்தைகளை என்னிடம் அறிமுகம் செய்ததுகூட, ஒரு தலைமையாசிரியரிடம் ஒரு குழந்தையை நிறுத்துவதைப் போலத்தான்.

வீட்டை விட்டுப் புறப்படும்போது, கோப்பை-மது உள்ளுறை புரிந்தது.

அதன்பிறகு ஆறு மாதங்கள் இருக்கலாம். அவன் விபத்தில் இறந்துபோனான். இன்றைய கல்லூரி மாணவர்கள் ஜோடியாக சுற்றும்போது தண்டபாணியை நினைக்காமல் இருக்க முடிவதில்லை.

"தேடினயே இதோ போவுது பாரு" என்று என்னை இடித்துக் காட்டினாள் மனைவி. அந்த இளைஞன் பல்சர் ஓட்ட, அந்தப் பெண் ஒரு பல்லி போல அவன் முதுகில் ஒட்டிக் கிடந்தாள்.

"பொட்ட பொண்ணு முத்தம் குடுப்பேன்னா, ஆம்பளை பையன் எந்த அளவுக்குப் போவான்! இதையெல்லாம் அவன் கட்டுவான்னு நினைக்கிற?. இது யூஸ் அன்டு த்ரோ கேஸ்தான்!"

"ஏன் கரிச்சு கொட்டற. நம்ம காலத்துல இப்படியெல்லாம் பழக முடியல. அதனால இதை ஏத்துக்க கஷ்டமா இருக்கு. அந்த நாள்லயே பாரதிதாசன் பாடினார். மண் படைப்பே காதலெனில் காதலுக்கு மறுப்பு எதற்கு, கட்டுப்பாடு எதற்கு?"

"உனக்கு பையன்றதாலே இப்படிப் பேசற. இதே உம் பொண்ணுன்னா

இந்த கவிதய சொல்லுவியா?"

ஆட்டோ வந்து நின்றது. ஷேர் ஆட்டோவா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஏறினாள். நானும் ஏறி உட்கார்ந்தேன். மீண்டும் தண்டபாணியின் முகமும், படுக்கையில் அவன் முனகிய வார்த்தைகளும் நினைவறைக்குள் நுழைந்தன.

நன்றி: தினமணி கதிர்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link