சிறுகதைகள்


சிற்பவல்லி

கூடல்.காம்
"ஐயா" என்று வீட்டு வாசலில் குரல். ஒரு நோயாளியின் புஜத்தில் ஊசி ஏற்றி பஞ்சால் அழுத்தித் துடைத்துவிட்ட ரங்கன்,

"நான் குடுக்ற மருந்தைச் சாப்பிடுங்க மூணு வேளையில சரியாயிரும். அட, இதுக்கெல்லாம் எதுக்கு ரூபா? சரி குடுங்க. வாங்கிக்கலேன்னா மருந்து வேலை செய்யாது..." என்று பத்து ரூபாயை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டவர், "வா மண்ணாங்கட்டி, ஏன் தெருவுல நின்னுக் குரல் குடுக்கற" என்றார்.

தொள தொள பேன்ட், சட்டை(ரங்கனின் உபயம்தான்) மண்ணாங்கட்டி உள்ளே நுழைந்து பவ்யமாக இரு சீட்டுகளை நீட்டினான். "பஸ்டு கிளாஸ் தாங்க கெடச்சுது ..."

"பரவாயில்லையே! புதுப் படத்துக்கு டிக்கட் கிடைச்சிட்டுதே! போ, அம்மா கைல குடு. சந்தோசப்படுவாங்க."

"ஏன், நீங்க சந்தோசப்பட மாட்டீங்களாக்கும்! சாயங்கால ஷோதானே? உங்க சட்டைப் பையிலயே இருக்கட்டும். இப்பத்தான் நீங்க ஒரு நல்ல கணவர். அது ஏங்க உங்களுக்கே தோண மாட்டேங்குது! மனைவிய ரெண்டுல மூணுல இப்படி சினிமா, நாடகம்னு கூட்டிப் போவ நான் சொல்ல வேண்டி இருக்குதே!" என்றாள் காளீஸ்வரி.

ரங்கனுக்கு கண்கள் சிவப்பேறி உடம்பு கொதித்தது. "ஏ! மண்ணாங்கட்டி, அந்த டிக்கட்டுகளைக் கொண்டா " என்று பல் கடித்து, புருவம் நெறித்தார். சினிமா டிக்கட்டைக் கிழித்து வீசினார். "போ சினிமாவும் கிடையாது, ஒரு கருமாந்திரமும் கிடையாது. வீட்டோடு கிட!"

"நாசமாய் போவ! உன் மனசுல அந்தச் சிற்பவல்லி இருந்து நல்லாவே ஆட்டிப் படைக்கிறா! என் இடத்துல அவ இருந்து கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டிருந்தா அவ முந்தானையைப் புடிச்சுக்கிட்டு ஹி.. ஹின்றுப்ப! சிற்பவல்லி என்னிக்கு சாவறாளோ, அப்பத்தான் என் குடும்பம் நிம்மதியா..." அழுகையும் பொருமலும் வெடித்தது.

"அ! சிற்பவல்லி, சிற்பவல்லி! எப்ப பார் அவ நாம ஜெபம் தான்..." ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பினார் ரங்கன். "என்னாங்க ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க!" என்கிற காளியின் கூவல் எடுபடவில்லை. "போங்க, போங்க. அந்தப் பேரைக் கேட்டதுமே உங்களுக்கு உச்சி குளிர்ந்திருக்குமே! பசிகூட எடுக்காது..."

"ஏம்மா ஐயாவை ஆத்திரமுட்டி பட்டினியா விரட்டிட்டீங்க?" என்றான் மண்ணாங்கட்டி.

"அவ்வளவும் வேசம்டா! அந்தப் பேர்ல அவ்வளவு மயக்கம் அவருக்கு. குசியாய் போய் இந்நேரம் ஆசுபத்திரி கேன்டின்ல மொக்குவாரு..."

"அது யாரும்மா சிற்பவல்லி"

"கதையாடா கேக்குற? நானே கடுப்புல இருக்கேன். போடா மளிகை சாமான் வாங்கியா..."

"பாவம்மா ஐயா. ஆசுபத்திரில ஒண்ணும் சாப்ட மாட்டாரு. ரெண்டு கிளாஸ் பானைத் தண்ணியக் குடிச்சிட்டு மருந்தாளுனர் வேலயைப் பாப்பாரு..."

"அப்படிங்கற? சரி இட்லி, வெங்காய சட்னி தரேன். கொண்டு போய் குடு. சாப்பிட்டுத் தெம்பா சிற்பவல்லி தியானம் செய்யட்டும்."

மண்ணாங்கட்டிக்குக் குழப்பம். அது யார் சிற்பவல்லி? அம்மா ஏன் அந்தப் பேரைச் சொல்லிச் சொல்லி அப்பப்ப ஐயாவைக் குத்தாறாங்க?

காளி கொடுத்த டிபன் பாக்ஸ், பிளாஸ்க்குடன் சைக்கிளில் புறப்பட்டான் மண்ணாங்கட்டி.

ஆஸ்பத்திரியில் மருந்து வழங்கும் பிரிவில் வழக்கம் போல நோயாளிகள் கூட்டம்.

"ஐயா, கொஞ்சம் அந்தம்மாவைப் பத்து நிமிசம் பாத்துக்கச் சொல்லி இப்படி வாங்க. வயித்தக் காயப் போடாம முதல்ல சாப்பிடுங்க..." என்றான் மண்ணாங்கட்டி.

"நீ ஏன் எடுத்து வந்த மண்ணு? ஒரு வேளை நா சாப்பிடாட்டிதான் என்ன?" என்று எழுந்து வந்தார் ரங்கன்.

"ஐயா, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. பாப்பா வயசுக்கு வந்து ஒரு வருசம் ஆச்சி, பெரிய தம்பி உதட்டு மேல மீசை வந்தாச்சி. இன்னும் நீங்க புருசன் பொஞ்சாதி சண்டைப்போடறது சரி இல்லீங்க..."

"அதெல்லாம் சொன்னா ஒனக்குப் புரியாது மண்ணு. கணவன் மனைவிக்குள்ளே நம்பிக்கை வேணும். இல்லேன்னா வாழ்க்கைல நிம்மதி ஏது?..."

"எதுவா இருந்தாலும் அம்மா மேல கோபப்படாதீங்கய்யா."

"அடடா, அதெல்லாம் அந்த நேரத்தோட சரியாப் போச்சி. பாத்திரங்களை எடுத்துக்கிட்டு நீ கிளம்பு" மண்ணாங்கட்டி சென்றான்.

பின்ன பாரேன்! நான் பாட்டுக்கு காலைல முகச்சவரம் செய்தேன். ரேடியோல ஏதோ பழைய சினிமாப் பாட்டு. மெய் மறந்து ஆகானு லயிச்சேன். கன்னத்துல சரக்னு காயம். "பாத்து! யாரையும் மனசுல நினைக்காம வேலைல கவனம்" என்கிறாள் காளி.

சற்றுப் பொறுத்து காபி கொணாந்தா. ஆசுபத்திரிக்கு இண்டெண்டுப் பண்ணின இந்த வருச மருந்துக இன்னும் வரலியேனு நினைச்சி காபி ஆத்த கீழ கொஞ்சம் கொட்டிட்டேன்.

சிற்பவல்லி ஞாபகம், காபியக் கொட்ட வெக்குதுங்றா!

இன்னிக்கி மூணாவது தடவையா சிற்பவல்லி பேரை சினிமா டிக்கட் விஷயத்துல இழுக்கவும் கோபம் வந்திட்டுது. எப்ப பார் இவ அவளைக் கரிக்றாளே! சந்தேகப் பேய் எப்பத்தான் இவளை விட்டுப் போகும்?

கெட்டது ரங்கனின் வாயால்தான். இவர் அந்த ரகசியத்தை தன் நெஞ்சிலேயே புதைக்காமல் தற்செயலாக ஒரு நாள் சொல்லவே காளிக்குக் காலத்திற்கும் சண்டை போட விஷயம் கிடைத்தது.

ஒருநாள் சிங்கனுக்கு ஏதோ கோபம் "போங்கப்பா நான் உண்ணாவிரதம். நாள் மூணு ஆனாலும் சாப்பிட மாட்டேன், பாத்துக்கிடுங்க" என்றான்.

"போடா, போ. மூணு மணி நேரம் உன்னால தாக்குப் பிடிக்க முடியாது. உன் தாத்தா பாட்டி மூணு பகல், மூணு ரா பிடிவாதமா பட்டினி கிடந்தாங்க. அந்த மாதிரி எல்லாம் உன்னால முடியுமா?" என்றார் ரங்கன்.

"அது என்ன கதை? இதுவரை எங்களுக்குச் சொல்லலியே!" என்றாள் காளி.

"சிற்பவல்லி! ஆமா, அன்னிக்கு என் பெற்றோர் முரண்டுப் பிடிக்கலேன்னா இன்னிக்கு உன் இடத்துல அவதான் இருப்பா. சித்திரத்துல எழுதிப் பார்க்கலாம். அப்படி ஒரு அழகு. அவ என்னை நேசிச்சா, நானும். ஒரு நா இந்த விசயத்தை என் அப்பாட்ட சொன்னேன். துடிச்சிட்டாரு. நடக்கவே கூடாது இந்தக் கல்யாணம்னு கத்தினாரு. நாம் சைவப் பிள்ளைமார். அவங்க கறி திங்கிறவங்க... என்ன ஆனாலும் சரி, நான் அவளைத் தான் கட்டுவேன்னேன். அப்படியான்னு பூசை ரூம் உள்ள போனார் அப்பா. பட்டை, பட்டையா விபூதி பூசி சாமி படங்கள் முன்னால் உக்காந்தவர்தான். மூணு நாள் எழுந்தே வரலை. எங்கம்மாவும் அழுதுகிட்டே பட்டினி. இப்படியே இருந்து உசிரை விட்ரப் போறோம்னாங்க. எனக்குப் பயம் புடிச்சிப் போச்சி. அப்பா, அம்மா என்னை மன்னிங்க. அவளை மறந்து நீங்க சொல்ற பெண்ணையே கட்றேன்னு அவங்க காலைப் புடிச்சிக் கண்ணீர் விட்டுக் கதறினேன். சத்தியம் பண்ணினேன். அப்புறம்தான் அவங்க விட்டுக் குடுத்து சகச நிலை திரும்பினாங்க..."

"அப்புறம் அம்மா கழுத்துல தாலி கட்னீங்களாக்கும்?" என்றான் சிங்கன்.

"ஆமா அந்தக் கோலார் தங்கத்தை விட்டு இந்த நெய்வேலி தங்கத்தைக் கட்டினேன்!"

"திருடன்! இவ்வளவு நாள் இந்த ரகசியத்தை நெஞ்சிலேயே பூட்டி வெச்சிருந்தார் பாத்தியா, சாமர்த்தியம்!" என்றாள் காளி. சிரிப்பும், களிப்புமாக அந்த நேரம் சென்றது.

பிறகு தம்பதிகளுக்குள் எப்போது சண்டை வந்தாலும், "அவரு மனசில சிற்பவல்லி அழுத்தமா உக்காந்திருக்கா. அந்தக் கோபம்தான் என்பாள் காளி.

யார் அந்த சிற்பவல்லி? பார்வைக்கு எப்படி இருப்பாள்? தெரிந்துக் கொள்ளும் ஆவலில் அவள் குடும்பம் நடத்தும் ஊருக்கே ரங்கனுக்குத் தெரியாமல் போய் வந்தாள் காளி. பொன் நிறமாக, மூக்கும் முழியுமாக எடுப்பாக சித்தி(க்ஷ)ரத் தேர் போல சிரித்த முகமாக பெருமாள் கோவில் பிரகாரத்தில் அழகாக நடந்தவளை அவள்தாள் சிற்பவல்லி என்று காட்டினார்கள். காளிக்கு மனசெல்லாம் எரிந்தது. ஐயோ, இந்த அற்புத அழகியையா இழந்து நிற்கிறான் இந்த மனிதன்! இவளையா காதலித்தான்? இவளும் இவனை... இவள் போன்ற ஒருத்தியை மனதில் இருந்து தூக்கி எறிந்து இன்னொருத்தியோடு வாழ்வது நடக்கிற காரியம் இல்லைதான்.

சிற்பவல்லி பிறகு குடும்பத்தோடு, கணவனோடு வடக்கே எங்கோ போய் விட்டாள். இருப்பினும் காளிக்கு சந்தேகம். ரங்கன் அவளை நினைத்து நினைத்து உருகுகிறானோ? அவளோடு ஏதும் ரகசிய கடிதத் தொடர்பு உண்டோ? ஏன், சில சமயம் ஆபீஸ் வேலையாக, வெளியூர் செல்லும் சாக்கில் அவளையே அவள் இருக்கும் ஊர் சென்று பார்த்து வருகிறானோ!

இவள் சொல்வதை சில பொழுதுகளில் ரங்கன் கவனியாமல் வேறு எங்கோ கவனமாக இருந்தால் காளி சாட்டையைச் சொடுக்குவாள். "சிற்பவல்லி நினைப்பு!" ரங்கன் கோபம் கொண்டு முறைப்பார். இவளிடம் ஏன் வாக்குவாதம் என்று ஏதாவது பூங்கா புல்வெளியில் இரண்டு மணிநேரம் அமர்ந்து திரும்புவார்.

அன்று காலை முதலே ரங்கன் ஏதும் சாப்பிடவில்லை. வயிறு சரி இல்லை என்றார். அவ்வப்போது மோர் மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். லீவு நாள் வேறு.

திடீரென்று காளிக்குப் பொறி தட்டியது. ஆங்கில தினசரி எடுத்து இருபத்தி இரண்டாம் பக்கம் மரண விபரம் பார்த்தாள். சரிதான்!

"சிற்பவல்லி போயிட்டாளாக்கும்! அதான் ஐயா உபவாசமா?"

"ஆமா காளி. அவ போய் பத்து வருசம் ஆச்சி. அவளுக்காக இன்னிக்கு நா உபவாசம் இருக்க வேண்டியது இல்ல"

"பின்ன?"

"பேப்பரை சரியா பாரு. எவளோ கற்பகவல்லி சாவை சிற்பவல்லினு படிக்காத."

"பிறகு ஏன்?"

"இன்னக்கி உண்மைல உபவாசம் இருக்க வேன்டியவ நீதான். பேப்பரின் வேற பக்கத்துல ஒரு இறப்புச் செய்தி, ஃபோட்டோ போட்டு. போயிட்டது சிற்சபேசன்."

"அது யாரு?"

"யாருங்கறது உன் மனசுக்குத் தெரியும். உன்னைக் காதலித்தவன்." அதிர்ந்து போனாள் காளீஸ்வரி. "இதெல்லாம்!"...

"சிற்சபேசன் என் சிறு வயது பள்ளித் தோழன். அவனை ஒருநாள் நான் தற்செயலா வெளியூரில் சந்திச்ச போது அவன் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனான். தன் காதல் கதை எல்லாம் என்கிட்ட சொன்னான். தன் மனைவிக்குத் தெரியாமல் தன் பெட்டியில் வெச்சிருந்த, நீ எழுதிக் கையெழுத்திட்டுத் தந்த உன் ஃபோட்டோவையும் என்கிட்ட காட்டினான்..."

"நீங்க இதுப் பத்தி இதுவரை..."

"நம் வாழ்வில் இருந்து சிற்பவல்லியும், சிற்சபேசனும் நிரந்தரமாய் போயிட்டாங்க. இனியாவது நாம் நிம்மதியா வாழத் துவங்குவோம்." என்றார் ரங்கன்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link