சிறுகதைகள்


நட்சத்திரக் கூட்டங்கள்

கூடல்.காம்
பொன்னம்மாள் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். பத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த அந்த மகராசிக்கு, வாழ்நாளின் கடைசி நாட்களில் தன்னை கவனித்துக் கொள்ள யாருமில்லாத அநாதையாகப் படுத்த படுக்கையில் கிடந்த வண்ணம் புலம்பிக் கொண்டிருந்தாள். கணவர் இறந்த பிறகு அவள் தனி மரமானாள். கணவர் உயிரோடிருக்கும் வரை பெற்ற பிள்ளைகள் வீட்டிற்கு வந்து போனார்கள். கணவர் இறந்த பிறகு எந்தப் பிள்ளைக்கும் தன்னுடைய தாயை உடன் வைத்திருக்க மனம் வரவில்லை.

கடந்த பத்து நாட்களாக உடல்நலமில்லாமல் படுக்கையில் படுத்துவிட்டாள். டாக்டர் ஒருவர் தினமும் வந்து சிகிச்சையளித்து சென்றார். அவளுடைய சிந்தனையில் தன்னுடைய மக்கள் பக்கத்தில் இல்லாமலிருக்கும் போது, தன்னுடைய உயிர் பிரிந்து விடுமோ என்ற அச்சம் தோன்ற ஆரம்பித்தது. அவளையறியாமலே கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடின.

கடந்த கால வாழ்க்கையின் அத்தியாயங்கள் அவளுடைய நினைவில் வந்து போயின.

பொன்னம்மாள் கணவர் மேலப்பட்டி மிராசு மீனாட்சி சுந்தரம் பெயர் சொன்னால், அப்பகுதி மக்கள் முதல்மரியாதை செலுத்த முந்திக்கொண்டு வருவார்கள். அக்கிராமத்தில் உள்ள தஞ்சை புஞ்சை நிலங்கள், தோட்டத்துரவுகள் முக்கால்வாசி மிராசுக்கு பாத்யதையாக இருந்தது. மிராசு நல்லவர்; இனியவர். அதர்மத்துக்கு துணை போகாதவர். கிராமத்திலிருந்து எந்த வழக்கும் காவல் துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ செல்லாது. மிராசு வழங்கும் தீர்ப்பை அந்தக் கிராம மக்கள் நீதிதேவனின் தீர்ப்பாக ஏற்றுக் கொள்வார்கள்.

மூதாதையர் விட்டுச்சென்ற சொத்துக்களின் பேரில் புதுப்பட்டி மிராசுக்கும், மேலப்பட்டி மிராசுக்கும் ஏற்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் வரையில் சென்று முடிவடையாமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருந்தது. வழக்கு தொடர்பாக மேலப்பட்டி மிராசின் சொத்துக்கள் கரையத் தொடங்கியது. இறுதியில் பிறந்த ஊரைவிட்டு வெளியேறி, வைகை கரையோரம் அமைந்துள்ள மானாமதுரையில் சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடியேறினார்.

மீனாட்சிசுந்தரம்-பொன்னம்மாள் தம்பதியருக்கு பத்து பிள்ளைகள். பத்தாவது பிள்ளைக்கு பாக்யவான் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஐந்து ஆண்மக்களும், ஐந்து பெண்மக்களும் அவர்களிடையே உலாவந்தனர்.

எல்லா குழந்தைகளுக்கும் கல்விச் செல்வத்தை உரிய முறையில் தந்து பெரியவர்களாக்கினார்கள். ஆண் மக்களுக்கும், பெண் மக்களுக்கும் சம்பந்தம் பேசி, அவர்களை சீரும் சிறப்புமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்கள். திருமணங்கள் முடிந்த பிறகு, அவரவர்கள் தனிக்குடித்தனமும் சென்று விட்டனர். தங்களை வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை தந்த தாய்-தந்தையரை எந்தப் பிள்ளையும் தேடவில்லை. எல்லோருக்கும் தனது பொறுப்பை முடித்த நிம்மதியில் மீனாட்சி சுந்தரம் கண்மூடினார்.

தன் கைகால் சுகத்துடன் இருக்கும் வரையில், தான் பெற்ற பிள்ளைகள் தன்னைத் தேடி வராதது பற்றி சிறிது கூட கவலை பொன்னம்மாள் உள்ளத்தில் தோன்றவில்லை. ஆனால் இப்போது-

அவள் உள்ளத்தில் பாசத்தின் பிணைப்பு வளையமாக பின்னிக் கொண்டிருந்தது. அந்த வளையத்திற்குள் அகப்பட்டு திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள்.

ஆண் மக்களோ தங்கள் மனைவிமார்களை எதிர்த்து பெற்ற தாயைப் பேணிக்காக்க தங்களுடனே வைத்திருக்க துணிவில்லை. பெண் மக்கள் தங்களின் கணவர்மார்களை எதிர்த்து, தங்களின் இல்லங்களில் பொன்னம்மாளை அந்திமக்காலத்தில் காப்பாற்ற அவர்களும் எண்ணவில்லை. நான் மட்டும் தான் பிள்ளையா? மற்றவர்கள் பிள்ளையாகப் பிறக்கவில்லையா? என்று ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்டுக் கொண்டனர். பொன்னம்மாளைத் தேடவில்லை.

பொன்னம்மாள் தனது கணவன் வாங்கிய வீட்டின் ஒரு பகுதியிலிருந்து வரும் வாடகைப் பணத்தில் தன்னுடைய ஜீவனை நகர்த்திக் கொண்டிருந்தாள். அவளிடம் தங்க நகைகளோ, ரொக்கப் பணமோ இல்லை. பத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த அந்த மாபெரும் இந்தியத்தாய் பொன்னம்மாளின் கதியைப் பற்றி அந்த தெருவில் பேசாதவர்கள் இல்லை.

ஒருநாள்-

பொன்னம்மாள் மயக்கமுற்ற நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லா பிள்ளைகளுக்கும் தகவல் தெரிவித்ததின் பேரில் எல்லாருமே குடும்பத்துடன் கார்களிலும், வேன்களிலும் வந்து கூடினார்கள். அந்தப் பெரிய கும்பல் பொன்னம்மாளுக்கு ஆறுதல் தரவில்லை. அவர்களும் பறந்து, பறந்து பணிவிடைகள் செய்யவில்லை.

உடல் நலமின்றிக் கிடந்த பொன்னம்மாள் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தாள். எந்தப் பிள்ளைகளைப் பாலூட்டி வளர்த்து ஆளாக்கினாளோ, அந்தப் பிள்ளைகள் குடும்பத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வெளியேறிச் சென்றவர்கள், அவளது படுக்கையின் மீது ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுக்களை இட்டுச் சென்றனர். இதுதான் அவர்களின் நன்றிக் கடன்! இதன் மூலம் பிள்ளைகளின் பாசத்தின் விலையை பொன்னம்மாள் நன்றாகப் புரிந்து கொண்டாள்.

எதற்கும் கலங்காத அவள் அன்று சற்று அதிகமாகவே சித்தம் தடுமாறினாள். கண்களிலிருந்து அவளையுமறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எந்தப் பிள்ளைக்கும் தொந்தரவு கொடுக்காமல் திடீரென்று இறைவனடி சேர தோத்திரங்கள் செய்ய ஆரம்பித்தாள். ஆனால் இறுதிநாளுக்கு இன்னும் நாட்கள் இருப்பது போல, பொன்னம்மாள் எழுந்து உட்கார்ந்து விட்.டாள்.

அவசரப்பட்டு தகவல் கொடுத்து விட்டதால் பிள்ளைகளோடு வந்து, இங்கு பலநாட்கள் தங்க எங்களுக்கு தோதில்லையென்று அண்டை வீட்டுக்காரர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது அவளது இதயத்தில் பல சம்மட்டிகள் ஒன்றாகச் சேர்ந்து அடித்தது போன்ற உணர்வினைப் பெற்று, அவள் இதயம் கனத்தது.

தான் உயிரோடிருக்கும் போது வந்து பார்க்காத மக்கள், இறந்தபிறகு ஊர்மெச்ச சம்பிரதாய சடங்குகள் செய்வதற்கு வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்று அவளது உள்ளுணர்வுகள் அவளது சித்தத்திற்கு சோதனை செய்தன.

"வயதோ அதிகம் ஆகிவிட்டது. இனிமேல் உயிரோடிருந்து எந்தக் கோட்டையைப் பிடிக்க! பிள்ளைகளைக் கரையேத்தியாச்சு, அவரும் போயிட்டாரு; பெற்ற பிள்ளைகள் யாரும் தன்னுடனே வைத்து அந்திமகாலத்தை பார்க்கப் பிரியப்படலே; இனிமேல் இது இழுத்துக்கிட்டு கிடக்கிறது பெரிய பாவம்" தெருவில் உள்ளவரில் ஒருவர் முணுமுணுத்தார்.

"அட என்னய்யா! நீ பாட்டுக்கு பேசறே அந்த அம்மாளுக்கு சீக்கிரம் மேலே போய்ச் சேரணும்தான் ஆசை! சாவை எதிர் பார்த்தா வராது; எதிர்பாராம இருந்தா திடீர்னு சாவு வந்து அணைச்சிடும்" எதிர்வீட்டுக்காரர் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பொன்னம்மாளுக்கு உயிர் உடனே போகவேண்டுமென ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

அன்று காலைப்பொழுது நல்ல பொழுதாக விடிந்து அவளைத் தேடி அட்வகேட் ஒருவர் காரில் வந்திறங்கினார்.

"அம்மா! உங்கள் கணவர் தொடர்ந்த வழக்கு உங்களுக்கு அனுகூலமாகி விட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களின் தற்போதைய மதிப்பு சுமார் ஐம்பது லட்சங்கள் பெறும். அதற்கான பத்திரங்கள் இந்தாருங்கள்." அட்வகேட் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இதைக் கேட்ட பொன்னம்மாளின் இதயம் படபடத்தது. செய்வதறியாது திகைத்து உட்கார்ந்து விட்டாள்.

இரண்டு நாட்களில் செய்தியறிந்து பத்துப்பிள்ளைகளும் குடும்பத்துடன் வந்து பொன்னம்மாளைச் சுற்றி உட்கார்ந்து நலம் விசாரிக்கத் தொடங்கினர். தங்களுக்கு சேரவேண்டிய பங்குத் தொகையை யாரும் அபகரித்து விடாமலிருக்க அங்கேயே மாதக்கணக்கில் தங்கினர்.

பொன்னம்மாளுக்கு தன் மக்கள் எல்லோரும் எரிநட்சத்திரக் கூட்டங்களாக தோன்றினார்கள்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link