சிறுகதைகள்


எரி நட்சத்திரம்

கூடல்.காம்
எதிர்வீட்டு மாடியில் புதிதாக குடிபுக வந்துள்ள அந்தக் குழுவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வேலவனுக்கு ஒருவித கிளர்ச்சி உள்ளத்தில் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது. அந்தக் குழுவில் இளநங்கை ஒருத்தி இடம் பெற்றதில், அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அந்த வடிவழகியின் வனப்புமிக்க உடல்வாகைக் கண்டு அவனது உள்ளம் நெகிழ்ந்தது. அவளது சுருள் கேசங்கள் அவனை சொக்க வைத்தன. அவளின் அகன்ற விழிகள் அவனை ஆட்டிப் படைத்தன, கதுப்புக் கன்னங்கள் அவனை கிறங்கச் செய்தன. அவனது கருவிழிப் படலங்களில் அவளது உருவம் வீடியோ படமாக ஓடிக் கொண்டிருந்தது. அவளது சிரிப்பின் அலைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் தேவதையாக காட்சி தந்தாள்.

அந்த தேவதை மேல் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவன் வீட்டின் மேல் மாடியை நோக்கி அடிமேல் அடி வைத்து செல்லலானான். அவள் பாயின்மீது வெண்ணிற துணியை விரித்து, வடாகத்தை தனது பூந்தளிர் கரங்களால் பரப்பினாள். எதிர்வீட்டு மாடியில் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும், அச்சஉணர்வினால் அவளது முகம் குப்பென்று சிவந்தது. அவளது பார்வை வடாகத்தில் நிலைகுத்தி நின்றன. அவளது இதயம் படபடத்தது. சில நிமிடங்கள் வரை அவளது பார்வை மேலோங்கவில்லை. இதைக் கண்ட வேலவனுக்கு உள்ளம் படபடத்தது. அரும்பிய காதல் மொட்டு கருகி விடுமோ என்ற பயம் அவனைக் கவ்வியது. அன்னம் நிமிர்ந்தது. கலங்கிய கண்களைத் தன்னுடைய தாவணியின் தலைப்பால் துடைத்தது. வேலவன் மாடிப்படியின் ஜன்னலை நோக்கி நகர்ந்தான். மாடிப்படியின் கிரில்ஸ் வழியே நடப்பதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அன்னத்தின் பார்வை எதிர் மாடியைத் துளாவின. அவளது கண்கள் ஏன் கலங்கின என்பதற்கு அவனால் விடை காண முடியவில்லை. அவளின் அச்சந்தான் காரணம் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வேலவன் அஞ்சல்துறையில் தபால்களை கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்தான்! வயது முப்பத்தி ரெண்டு; உற்றார் உறவினர் என்று செல்லிக்கொள்ள யாரும் இல்லை. தன்னுடைய வருவாயில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த அறையில் இரண்டு நண்பர்கள்; அவர்களில் ஒருவன் மில் தொழிலாளி; மற்றவன் லேத் பட்டறையில் வேலை பார்ப்பவன். இந்த இருவரைத் தவிர வேலவனுக்கு வேறு நண்பர்கள் இல்லை. மூவரில் மூத்தவன் வேலவன். வேலவன் கருப்பு நிறமாயிருந்தாலும் நல்ல முகவெட்டு உள்ளவன். தனது பரட்டைத் தலையின் முடியை அடிக்கடி சீவி விட்டுக் கொள்வதில்லை! கையினால் நீவி விட்டுக் கொள்ளுவான். அன்றாட வாழ்கையை இறுகலுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அவனுக்கு மணவாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தோணவில்லை! சாலையில் நடந்து போகும்பொழுது எதிரில் பெண்கள் எதிர்ப்பட்டாலும், சலனப் பார்வையை வீசியதில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையா? என்று அறையில் உள்ள அவன் நண்பர்கள் கேட்டால் தனக்கு யார் பெண் தருவார்கள் என்று கூறுவான்! அவனை இதுவரை எந்தப் பெண்ணும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. இதனால்தானோ என்னவோ எந்தப் பெண்ணையும் அவன் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

எதிர் வீட்டில் குடியேறிய புனிதா பெண்மைக்கு இலக்கணம். அகன்ற விழிகள்; அந்த விழிகளைச் சுற்றிலும் மையிட்டதினால் கருவிழிப் படலங்கள் தெளிவாகத் தெரியும். சுருள் கேசங்கள் காதோரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும். அவள் சிரித்தால் முத்துப்பற்கள் ஒளி வீசும்! ஒற்றைக் கல் மூக்குத்தி பெண்மையினைப் பறை சாற்றும். இரு காதுகளிலும் சிறிய முத்து தட்டுக்கள் அணிந்தது அவளது அடக்கத்தை காட்டின. புனிதாவின் தந்தை பெரியசாமி நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக உதவியாளர். ஆண்டவன் சோதனையால் ஐந்து பிள்ளைகளும் பெண்கள்! ஐந்து பெண்கள் என்றால் அரசனும் ஆண்டியாவன் என்பது பழமொழி! ஆம் பெரியசாமி அந்த பழமொழிக்குத் தப்பவில்லை! மூத்த பெண் புனிதா! இரண்டாவது பெண் இந்திரா; வயதுக்கு வந்தவர்கள்; மற்றவர்கள் சிறுமியர்கள். மூத்த பெண் புனிதாவுக்கு வரன் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவார்களா என்ன? பஞ்ச பூதங்கள் பெரியசாமியை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தன. பெரியசாமி நேர்மையை நேசிப்பவன். நேர்மையை சொந்தமாக்கிக் கொண்ட பாவத்தால், அவனும், குடும்பத்து ஜீவன்களும் அரை வயிற்றுக் கஞ்சியை உறிஞ்சிக் குடித்து வந்தனர்! உற்றார் உறவினர் உதவ ஓடோடி வரவில்லை! போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறான் என்று உறவுகள் கேலி செய்தனர்! பரிதாபப் படவில்லை; பரிகாசம் செய்தனர்.

திடீரென வேலவன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கிக் கொள்ள ஆரம்பித்தான். நண்பர்கள் அவனுடைய இந்த மாற்றம் புரியாமல் திக்குமுக்காடினார்கள்.

அன்று வேலவன் வீட்டிற்கு பெரியசாமியின் வருகையை வேலவனும் நண்பர்களும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"தம்பீங்களா! இன்று எனது வீட்ல விசேஷங்க! உங்க எல்லோருக்கும் இந்த ஏழை வீட்ல மதியச் சாப்பாடு, பெரிய மனசு பண்ணி வரணும்"

"அய்யா! என்ன விசேஷமுங்க" வேலவனின் நண்பன் நல்ல கண்ணு கேட்டே விட்டான்.

"தம்பீ! என் மகளை பெண் கேட்டு வர்றாங்க" - பெரியசாமியின் வார்த்தைகளைக் கேட்டு வேலவன் அதிர்ச்சிக்குள்ளானான். வேலவன் அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அண்ட சராசரங்களும் அடிபெயர்ந்து நிலைகுலைந்து, ஓலமிட்டு ஒப்பாரி வைப்பதான உணர்வுகளைப் பெற்றான். அவன் உள்ளத்தில் குமுறும் எரிமலையின் குழம்புகள் பாய்ந்தோடின.

பெரியசாமி வீட்டில் பெண் பார்க்கும் வைபவத்திற்கு பெரிய கூட்டம் இல்லை. அவருடைய அலுவலகத்தில், அவர்பால் நேசத்தை அள்ளித்தந்து கொண்டிருந்த ஐந்து பேர்கள், அவர்களின் இல்லத்தரசிகள், வேலவன், இரு நண்பர்கள் வருகை புரிந்தனர். அந்தச் சிறிய வீட்டின் மேல் மாடி வராந்தாவில் அடுத்த வீட்டில் வாங்கிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை வீட்டாரை எதிர்பார்த்த வண்ணமிருந்தனர்.

மாப்பிள்ளை வீட்டார்கள் ஆட்டோவில் வந்திறங்கினர். மாப்பிள்ளை தாய் தந்தையருடன் இறங்கினான். கால் ஊனமுடன் நடந்து வந்த மாப்பிள்ளையைக் கண்டவுடன் வேலவன் அதிர்ச்சியடைந்தான்.

பேச்சு வார்த்தைகள் அதிகமில்லை! மாப்பிள்ளையின் தாய் தந்தையரை, பெண் சற்றுமுன் வந்து வணங்கினாள்! மாப்பிள்ளையும் பெண்ணை நன்றாகவே பார்த்தான்! தலைநிறைய மல்லிகைப்பூவை சுமந்திருந்த அப்பெண்ணைப் பார்த்தமாத்திரத்தில் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தான்! அவளோ மாப்பிள்ளையை ஓரக்கண்ணால் கூட பார்க்கவில்லை. பெண்மையின் அடக்க உணர்வுகளை அவள் கதுப்புக்கன்னங்கள் வெளிப்படுத்தின. பெற்றோர்கள் முடிவே தனது முடிவாக ஏற்றுக் கொள்ளும் அந்த உத்தமியின் மனசு எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை! பெற்றோர்க்கு மட்டுமே தெரியும்.

பெண் பார்க்கும் படலத்தின் முதல் காட்சி கோலாகலமாக ஆரம்பம் ஆனது. வேலவன் நண்பர்கள் பெரிய மனிதர்களின் தோரணைக்கு மாறினார்கள். சம்பிரதாயங்கள் தொடர்ந்தன.

"அய்யா! தேங்காய் பழத்தட்டுடன் வந்திருக்கீங்க! என்ன விஷயமுங்க" - வேலவனின் உயிர்தோழன் புத்திசிகாமணியின் உதட்டிலிருந்து கனிவுடன் வார்த்தைகள் வெளியேறின.

"பெரியவர் பெரியசாமியின் மூத்தமகள் புனிதாவைப் பெண் கேட்டு வந்திருக்கோம்" - மாப்பிள்ளை வீட்டாரில் ஒருவர் முறைப்படி பவ்யமாகக் கூறினார்.

"என்னங்க! உங்களுக்கு சம்மதந்தானே?"

"எனக்கு சம்மதந்தான்" -பெரியசாமியின் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளியேறின.

அடுத்த ஐந்த நிமிடங்களில் பந்தி நடந்தது! வேலவனுக்கு சாப்பிட மனமில்லை! தன் உள்ளத்தில் ஏற்பட்ட குமுறல்களை வெளியே கொட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய இதயம் கனத்துக் கொண்டிருந்தது! பந்தி முடிந்து எல்லோரும் வெளியேறினர்.

வேலவனும் நண்பர்களும் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள்.

வேலவனின் துக்கத்தை அவனது ஐம்புலன்களும் அடக்கிக் கொண்டன.

வேலவனின் நண்பர்கள் கலந்துரையாடத் தொடங்கினர்.

"எதிர்வீட்டு பெரியசாமி நல்ல மாப்பிள்ளையை தேர்வு செய்யவில்லை! கால் ஊனமான மாப்பிள்ளைதான் அவருக்கு கிடைத்ததாக்கும்"

"அடபோப்பா! விவரம் தெரியாம பேசாதே! அவருடைய வாய்பேசாத ஊமைப் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளை கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம்".

வேலவன் இதயம் சுக்கு நூறாகி வெடித்தது! அவனது கற்பனை உலகில் சஞ்சரித்தது ஓர் ஊமைப் பெண் என்பதை அவனால் ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்!

நண்பர்கள் உரையாடல் தொடர்ந்தது.

"பாவம் பெரியசாமி தன் மகள் திருமணச் செலவிற்கு பணமில்லாமல் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்களிடம் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார்!"

"இந்தக் காலத்திலே யாரும் உதவ முன்வர மாட்டார்கள்"

"அப்படிச் சொல்லாதே! திருமணக் காரியம் மட்டும் பணமில்லாமல் நின்றதில்லை."

வேலவன் இதயம் கனத்தது! ஐம்புலன்களும் ஒரே சீராக செயல்பட துடித்தன. இரவு முழுவதும் நித்திரை அவனை ஆட் கொள்ளவில்லை.

மறுநாள்

வேலவன் தன்னுடைய பணிக்காலத்தில் சேமித்து வைத்திருந்த ரூபாய் பத்தாயிரத்துடன் பெரியசாமி வீட்டை நோக்கி நடக்கலானான்.

இப்படியொரு உதவி வேலவனிடமிருந்து வந்தடையும் என்று பெரியசாமி எதிர்பார்க்கவில்லை.

"தம்பீ! சீக்கிரம் பணத்தை திருப்பிக் குடுத்துடறேன்!" பெரியசாமியின் குரல் கம்மியது.

"பரவாயில்லை! பணம் கிடைக்கும் போது கொடுத்தால் போதும்" -வேலவன் உதட்டிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன. அவனுடைய ஒருதலைக் காதல் கருகி எரிநட்சத்திரமாக வானிலிருந்து கீழே விழுந்து மறைந்தது!

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link