சிறுகதைகள்


காக்கைச் சிறகுகள்

கூடல்.காம்

மழை வருகிறது என்பது சிவகாமி அக்காவுக்குத்தான் முதலில் தெரியும். வெளிக்கொடியில் புறவாசலில் காயப்போட்ட துணிகளை எல்லாம் மேலே அள்ளிப் போட்டுக் கொண்டு நடையேறவும், சடசடவென்று மழை பெய்யவும் சரியாக இருக்கும்.

ஒரு தடவை எவர்சில்வர் பாத்திரக்காரன் வாசலில் வியாபாரத்திற்கு வந்திருக்கும் சமயம் பார்த்து மழை ஆரம்பித்து விட்டது. சிறிதும் பெரிதுமாக அவரவர்கள் எடுத்து விலை பேசியபடி உட்கார்ந்திருக்கும்போது மழை வலுத்துவிட்டது. என்னுடை.ய சட்டைகளையும் கால்சட்டைகளையும் நனைந்து போகாமல் உருவிக் கொண்ட சிவகாமி அக்கா படியேறி வந்தாள். ஒரு பெரிய பாம்புராணி அவளுக்கு முன்னால் சரேல் என்று ஓடியது. இவ்வளவு துப்புரவாக இருக்கிற இடத்தில் அது எப்படி வந்தது. என்று தெரியவில்லை. அதையேதான் சிவகாமி அக்காவிடமும் சொன்னேன்.

"எப்படி வருதுன்னு தெரியாது. ஆனால் அப்படித்தான் வரும்! என்று ரொம்ப சந்தோஷமாகச் சொன்னாள். அவளுடைய தோளில் கிடந்த துணிகளில் மேலாகத் தொங்கிய அவளுடைய கத்திரிப்பூ கலர் நைலக்ஸ் சேலை இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

சிவகாமி அக்கா அப்படிக் கொண்டு வந்து போட்ட சட்டையில் இன்னும் கூட ஈரப்பதம் இருந்தது என்றாலும் உடனடியாக அதை எடுத்து அணிந்து கொள்ளவே தோன்றிற்று. ஜன்னல் வழியே கீழே பார்த்தால் சிவகாமி அக்காவைக் காணோம்.

அப்போது மட்டுமல்ல. சிவகாமி அக்கா கொஞ்ச நாளைக்குள் ஒரேயடியாகக் காணாமலே போய் விட்டாள். எவர்சில்வர் பாத்திரக்காரர் கூடையில் வைத்தா அவளைத் தூக்கிக் கொண்டு போய்விட முடியும். அது மாதிரித்தான் ஆகிவிட்டது.

சிவகாமி அக்கா வீட்டுச் சித்தப்பா வீடு ரொம்ப நாளைக்குப் பூட்டியே கிடந்தது. பித்தளைக் குமிழ்கள் உள்ள அந்தக் கதவில் யார் யார் கையெல்லாம் தட்டி இருக்கும். அழுந்தப் பதித்த வலது கை ஓசைகள் அடுக்கடுக்காக அந்தக் கதவிலிருந்து அதிர்ந்து அதிர்ந்து ராத்திரியின் இருட்டில் கரைந்து கொண்டிருப்பது போலிருக்கிறது. சுற்றிச் சுற்றிச் சில சமயம் அலைகிற வெளவால்கள் அந்த ரேகைகளின் எண்ணற்ற பிளவுகளுக்குள் சிக்கிக் கீச்சிடுவது கேட்கமுடிகிறது. கம்பிக் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பச்சை நிற பவானி ரிப்பன் கூட இப்போது அநேகமாக வெளிறிப் போயிற்று.

வேறு புது ஆட்கள் வாடகைக்கு வீடு பார்க்க வந்தபோது, அம்மா கதவைத் திறந்து காண்பித்துக் கொண்டிருந்தாள்.

பழைய ஆட்கள் காலி பண்ணிப் போய், புது ஆட்கள் வாடகைக்கு வருவதற்கு இடையில், திறந்து பார்க்கும்போது வீடு என்னென்னலாமோ சொல்வது போலத்தான் இருக்கும். காலடிச் சப்தமும் பச்சைப்பிள்ளை அழுகிற குரலும் ஆட்டுரல் கடகடப்பும் டம்ளர் விழுகிறதும் இருமலும் மர்பி ரேடியோப் பாட்டும் என்று பல ஞாபகங்களின் அடியிலிருந்து கொத்துக் கரண்டியும் சாந்துச் சட்டியும் நறநறக்கிறது கேட்கும். அன்னமரியாள் குடையைச் சாத்தின இடமும், பிரசவம் பார்த்த பட்டசாலும், அங்கணக் குழியும் சாணிமெழுகல்களின் வரிவாளங்களில் இருந்து முளைத்து எழும்பும். வேப்பங்குழைக்குள் பொதிந்து துண்டோடு குழந்தையை அணைத்தபடி, சிவகாமி அக்காவின் அப்பா அழுதுகொண்டே இறங்கின நடைப்பக்கத்துத் தூணின் பின்னால்தான் நானும் நின்று கொண்டிருந்தேன்.

"எங்கே வந்தே நீ?" என்று அம்மா கேட்டாள்.

சிவகாமி அக்கா நின்றபடியே தலை சீவுகிற அந்தக் கண்ணாடி இருந்த இடத்தைப் பார்த்தேன். ஜன்னலில் இருந்து வெளிச்சம் வருவதற்கு ஏற்பவும், பல்பு வெளிச்சத்திற்கு ஏற்பவும் அந்த இடத்தை அவள்தான் தேர்ந்தெடுத்திருந்தாள். கண்ணாடியைக் கழற்றி எடுத்த இடம் வெள்ளையாக இருந்தது.

சீப்பைத் தலையில் செருகிக் கொண்டே, காதுத் தோட்டுக்குத் திருகாணியைச் சரி பண்ணுகிற மாதிரி அந்த வெள்ளைக்குள் சிவகாமி அக்காள் தெரிந்தாள். வாயில் ஹேர்ப்பின் வேறு இருந்தது.

"சும்மாதான் வந்தேன்" என்று சொல்லிக்கொண்டே அடுப்படி வரை போனேன். கடைசிக் கட்டு ஜன்னல் பக்கம் வலை பிய்ந்து போன ஒரு அரிப்பு மட்டும் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது. ஆட்டுரலில் வழுவழுவென்று ஒரு சிரட்டை கவிழ்த்தினாற்போல். சிவகாமி அக்கா ஆட்டுரல் குழியைக் கழுவும்போது, அந்தச் சிரட்டையால்தான் தண்ணீரைக் கோதிக் கோதி ஊற்றுவாள்.

"என்ன கெட்டிக்காரத்தனம். இருந்து என்னத்துக்கு. கடைசியில் புத்தி இப்படிக் கீழாரப் போயிருச்சே, அம்மா அந்தச் சிரட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு சொன்னாள்.

இந்தச் சிரட்டை தான் ராசியான சிரட்டையாம். இதில் சோழியைப் போட்டுத் தட்டித்தான் சிவகாமி அக்கா சிவராத்திரிக்குப் பெருமாள் கட்டம் விளையாடுவாள். நினைத்த நேரத்துக்குத் தாயமும் சொன்ன நேரத்துக்கு விருத்தமும் விழும். வெட்டுப்பட்டுத் துவங்காமல் இருக்கிற காயை அக்கா தன்னுடைய பின் ஜடையில் செருகிக் கொள்வாள். "சூரிய பகவானே" என்று வேண்டிக் கொள்வாள். "பகவானே" என்பதைப் "பவ்வானே" என்று சொல்கிற மாதிதி இருக்கும். அது என்ன நெல்லையப்பர் காந்திமதி என்று இருக்கையில் அவளுக்கு மட்டும் சூரிய பகவானைக் கும்பிடத் தோன்றிற்று தெரியவில்லை. அதுவும் அந்த சிவராத்திரி இருட்டில்.

"வாராரு ராத்திரிப் பன்னெண்டு மணிக்கு உங்க சூரியபகவான்" என்று யாராவது கிண்டல் பண்ணினால்,

"அப்படிச் சொல்லக் கூடாது" என்பாள்.

"சொன்னால் என்ன?" என்று பக்கத்தில் இருக்கிற நான் கேட்பேன்.

"பாவம் பிடிக்கும்பா குருவிக் குஞ்சு !" என்று என் கீழ் உதட்டைப் பிடித்து நிமிண்டிக் கொண்டே, அப்படியே சோழிகளை விசிறுவாள். சிரட்டைக்குள் இருந்து உயிர்வந்து தாவுகிற மாதிரிச் சோழிகள் உருண்டு மல்லாக்க விழுந்து, சிறுசிறுவென்று சற்று அசைந்து அடங்கும்.

"இவனா குருவிக் குஞ்சு? கள்ளப் பிராந்துல்லா இவன்" - வேறு யார் என்னைச் சொல்வார்கள் என்னுடைய கூடப்பிறந்த அக்கா தவிர.

"இல்லை. குருவிக் குஞ்சுதான்" - என்று உதட்டை மறுபடி நிமிண்டி சிவகாமி அக்கா என் தலையை வருடும்போது கருப்புத் தாவணிக்கு மேல், பொருட்காட்சியில் வாங்கின பிளாஸ்டிக் பாசி மாலை கிடக்கும் அதைத்தான் சிவகாமி அக்கா, "நல்லா இருக்கா பார்ப்போம்" என்று ஒரு தடவை என் கழுத்தில் போட்டுவிட்டாள்.

"நல்லா இருக்கா?" என்று அந்தப் பாசியும் கழுத்துமாக அம்மா முன்னால் அடுப்படியில் போய் நின்றேன்.

அம்மா ஒரு அப்பளத்தை எண்ணெயில் முக்கிமுக்கிப் பொரித்துக் கொண்டே, "சீ. என்ன இது பொட்டச்சி கணக்கா. கழற்றித் தூரப்போடு" என்று அதட்டினாள்.

"சிவகாமி அக்கா போட்டுவிட்டாள்"

"அவள் போட்டுவிட்டாள்ன்னு நீயும் கொண்டுவந்து காட்டுகிறதுக்கு வந்தியாக்கும். லெட்சணம்தான். போய்ப் பாவாடை கட்டிவிடச் சொல்லேன் அவளை".

அந்தப் பாசிமாலையின் ஒரே ஒரு நீலப் பாசியாவது எங்கேயாவது கண்ணில் பட்டுவிடாதா என்று இருந்தது. விளக்கு மாடக் குழியில், ஜன்னல் விளிம்பில், பொட்டு கண்மை எல்லாம் வைத்திருந்த மர ஸ்டாண்டில், வெந்நீர் அறையில் என்று எங்காவது சிவகாமி அக்காவின் பாசி சிடைத்து விடாதா என்பது போல வீடு பார்க்க வந்தவர்களுடன், ஒவ்வொரு இடமாகப் போய்க் கொண்டிருந்தேன். அந்த நீலப் பாசியும், கில்ட் உருண்டையும், பட்டுக் கயிற்றுக் குஞ்சமும் கடைசி வரை அகப்படாமல், நான் தேடின இடங்களில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருந்தன.

வீடு பார்க்க எத்தனையோ பேர் வந்தர்கள். ஆற்றுத் தண்ணீர் நன்றாக வருமா என்றார்கள். வீட்டுக்குள் சரியாக வெளிச்சமே இல்லையே என்றார்கள். எலெக்ட்ரிக் பில் எவ்வளவு வரும். தனி மீட்டர் இருக்கிறது அல்லவா என்று உறுதி செய்தார்கள். மார்க்கெட், கோயில், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் ரொம்ப பக்கம் என்று பேசிக் கொண்டார்கள். எந்த உத்தேசமும் இல்லாமல் ஆற்றுத் தண்ணீர்க் குழாயைத் திறந்து கால் கழுவிக் கொண்டார்கள்.

சிவகாமி அக்கா வாசல் குழாயிலிருந்து ஆற்றுத்தண்ணீர் பிடித்துக் கொண்டு போவதை விட, மழைத் தண்ணீர் பிடிக்கிறதுதான் நன்றாக இருக்கும். கம்பி ஒடிந்த குடையை எடுத்துக் கொண்டு தட்டோட்டில் இருந்து விழுகிற மழைத் தண்ணீரைக் பிடிக்க, முடுக்குக்கு அவள் குடத்துடன் ஓடுவாள். ஜலதாரையில் அரசங்கன்று புது இலை விட்டிருக்கும்.

"நனைஞ்சுக்கிட்டு வந்து படுத்துக்கிடாதே" என்று சிவகாமி அக்காவின் அம்மா சப்தம் போடுவாள். நனைவதற்காகவே அப்படித் தண்ணீர்பிடிக்கிறது போலச் சிவகாமி அக்கா பாவனை செய்வாளோ என்னவோ.

சிவகாமி அக்காவின் அப்பாவைப் பெற்ற ஆச்சி இறந்து போன தினத்தில் மழை எல்லாம் இல்லை. பொங்கல் முடிந்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகியிருக்கும். பொங்கலுக்குப் போட்டிருந்த சுண்ணாம்புக் கோலம் எல்லாம் பெரியது பெரிதாக இருந்தது. ஆட்கள் துஷ்டிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். தூக்கம் வரவில்லை.

நடுராத்திரி தாண்டி இரண்டு மணி இருக்கும். ஆச்சியைக் குளிப்பாட்டிப் படுக்க வைத்திருந்த பட்டாசல் பக்கம் ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன். பளீர் என்கிற அந்தக் கோலங்களும், எரிந்து கொண்டிருக்கிற குத்து விளக்குமாக, அழுது அழுது, அழாத நிசப்தத்தில் எல்லோரும் இருந்தார்கள். ஆச்சியின் தலைமாட்டில் சிவகாமி அக்கா உட்கார்ந்திருந்தாள்.

புதிதாக தெரு ஜன்னல் வழியாக ஒயர் இழுத்து வெளியே போடப்பட்டிருந்த ட்யூப் லைட் வெளிச்சத்தில், மிகுந்த துக்கத்துடன் எல்லோரும் அப்படி இருப்பது ஒரு படம் மாதிரி இருந்தது. சிவகாமி அக்கா தலையைக் குனிந்து கொண்டு, இறந்துபோன ஆச்சியின் பாதங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். வாழ்வு பூராவும் அலைந்து திரிந்து கரையேறியது அந்தப் பாதங்கள் அன்றி வேறு என்ன?

சிவகாமி அக்கா எங்கே அலைந்து எந்தக் கரையில் ஏறினாள்? அவர்கள் வீட்டைக் காலிசெய்து கொண்டு போய் ஒரு வாரத்திற்குள் இருக்கும். மத்தியானம் மூன்றரை நாலு இருக்கலாம். தூங்கிவிட்டிருந்தேனோ என்னவோ. கீழே இறங்கி வந்து,

"சிவகாமி அக்கா வந்திருக்காங்களா?" என்று அம்மாவிடம் கேட்டேன்.

"உனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா?" என்று அம்மா கேட்டாள். அடுப்பில் காப்பிக்குக் கருப்பட்டி கொதிக்கிற வாடை வந்து கொண்டிருந்தது. புத்தகம் எதையோ படித்துக் கொண்டிருந்த அப்பா கூட, "எனக்கும் அப்படித்தான் சத்தம்கேட்டுது" என்றார்கள்.

"நீங்க யாரு. அவனுக்கு அப்பாதானே" என்று அம்மாவின் சப்தம் வரும்பேது நான் ஏணிப்படி ஏறிக் கொண்டிருந்தேன். "இனிமேல் அம்மாவுடன் எதுவும் பேசக்கூடாது. வாடகைக்கு அந்த வீட்டுக்குப் புதிதாக யார் வந்தாலும் ஏறிட்டுப் பார்க்கவே கூடாது. அம்மா சுத்த மோசம். எல்லோரும் சுத்த மோசம்".

அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டாலும், அம்மாவுடன் பேசாமல் இருக்க முடிகிறதா, அல்லது சிவகாமி அக்கா வீட்டுக்குப் புதிதாக வாடகைக்கு வந்தவர்களைப் பார்க்காமல் இருக்க முடிகிறதா?

அப்பாவுக்கு அவர்கள் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் என்பதே பிடிக்கவில்லை. இதில் மூத்த பையன்கள் இரண்டுபேரும் சதா பந்தடி மட்டையும் கையுமாக அலைந்தார்கள். ஆளுக்கொரு சைக்கிள் வேறு இருந்தது. கைப்பிடி, சீட் எல்லாம் வேறுமாதிரி இருந்தது. ராத்திரிப் பத்து மணிக்கு யாரோ ஒருத்தர் மவுத் ஆர்கன் வாசித்தார்கள்.

"எவனாவது ராத்திரிப் பத்துமணிக்கு மவுத் ஆர்கன் வாசிப்பானா?"

அப்பா எதற்கு எரிந்து எரிந்து விழுந்தார் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தேதியுள்ள பழைய இங்கிலீஷ் பேப்பர் அந்த வீட்டுப் பையன் கேட்டிருப்பான் போல. அக்கா அதைத்தேடி எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தாள். வந்து நுழைந்ததும் நுழையாததுமாக,

"இங்கே என்ன லைப்ரரியா நடத்துதோம். இந்த ஜோலி எல்லாம் இனிமேல் வச்சுக்கிட வேண்டாம்" என்று அப்பா அக்காவைப் பார்த்துச் சத்தம் போட்டார். அக்கா அழுதுகொண்டே தோட்டத்துக்கு ஒடினாள். அக்காவுக்கு அப்படி ஒரு பழக்கம். அழுகை வந்தால் தோட்டத்து நடையில் போய் உட்கார்ந்து கொள்வாள்.

"பேப்பர் படிக்கக் கொடுத்ததுக்கு நீங்க ஏன் இந்த வரத்து வாரயோ?"

"பெத்த பிள்ளை மேலேயுமா நம்பிக்கை அத்துப் போச்சு?"

"அன்னையிலிருந்து இண்ணைய வரைக்கு அழவைக்கத்தானே தெரிஞ்சுது"

"பீ துடைக்கிறதுக்கு லாயக்குப்படுமா அது?"

அம்மா மேலுக்கு மேல் அப்பாவை வரிசையாகக் குறிபார்த்து எய்து கொண்டு இருந்தாள். அக்கா அழுதது கஷ்டமாக இருந்திருக்க வேண்டும் அல்லது அம்மா கஷ்டம்படும்படி அப்பா ஏற்கனவே இப்படி ஏதாவது இதற்கு முன்னாலும் சொல்லியிருக்க வேண்டும். ஒரு பதிலும் பேசாமல் அப்பா, மர பீரோவின் தலைமேல் தினசரிப் பேப்பர்களைத் தேதி பிரகாரம் அடுக்கிக் கொண்டிருந்தார்.

அம்மா இன்னும் ஏதோ சொல்லப் போகும்போது வாசல் பக்கம் நிழலாடியது.

"வா, கீதா" என்று அம்மா வரவேற்றுச் சிரித்தாள். சிவகாமி அக்கா வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்திருந்த பெண். என்னைப் பார்த்துக் கொண்டே அம்மாவிடம் பேப்பரை நீட்டிவிட்டு, "தாங்க்ஸ்" என்றது. நான் அந்த இடத்தைவிட்டுப் போய்விடலாம் என நினைத்தேன்.

"அதுக்குள்ளேயா படிச்சாச்சு?" அம்மா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஆமா" சிரித்துக்கொண்டே அது சொன்னது. என்ன சிரிப்பு வேண்டி இருக்கிறது இதற்கு என்று தெரியவில்லை.

"ஒன்பதாங்கிளாஸா, பத்தாங் கிளாஸா?"

"ஒன்பது" என்று அம்மாவிடம் சொல்லியதுடன் நிறுத்தியிருக்கலாம். "அந்த அண்ணன் என்ன படிக்கிறாங்க?" என்று என்னைக் காட்டிக் கேட்டது. அம்மா பதில் சொன்னாள்.

"ரவி அண்ணன் மாதிரியே இருக்காங்க அவங்க" அந்தப் பெண், அம்மாவிடம் பேசியது. "நடக்கிறது பேசுகிறது எல்லாம் அச்சு அசல் ரவி அண்ணன் மாதிரியே இருக்கு" - திரும்பவும் சொன்னது.

"அது யாரு தெரியலையே, கீதா" - அம்மா கேட்டார்கள்.

"இதுக்கு முன்னால் இருந்தோம் இல்லையா. அந்த வளவுல, எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு ரவி அண்ணனுக்கு".

"என்ன பண்ணுதாங்க?"

"படிச்சு முடிச்சுட்டாங்க"

"வேலை பார்க்கிறானா?"

"தெரியலை"

"தெரியலைனா என்ன அர்த்தம்" - அம்மா இப்போதும் சிரித்தாள்.

"ரவி அண்ணன் இப்போ பெங்களூர்ல இருக்கிறதாகச் சொல்லுதாங்க. வேலை கிடைச்சுட்டுதான்னு தெரியலை!" அம்மாவிடம் இதையெல்லாம் கீதா சொல்லிவிட்டு வாசலைப் பார்த்தது. வாசலைத் தாண்டி வேறு எங்கோ போய்விட்டிருந்தது பார்வை.

அடித்துக் கொண்டிருக்கிற வெயிலில் இருந்து பிரகாசமான ஒரு இழையை உருவி எடுத்தது போல் அவள் மீண்டும் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்.

"வீடு மாற்றி சாமானை எல்லாம் இங்கே கொண்டாந்து இறக்கிக்கிட்டு இருக்கும்போதே, ரவி அண்ணன் மாதிரி இருக்குன்னு எங்க அம்மாகிட்டே சொன்னேன். கிறுக்குதான் புடிச்சுருக்கு உனக்குன்னு அம்மா சிரிச்சாங்க."

"சிரிக்காமல் வேறு என்ன செய்வாங்க" என்று அம்மா என்னைப் பார்த்தாள்.

எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நன்றி: நடுகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link