சிறுகதைகள்


வெறும் சோற்றுக்குத்தான்

கூடல்.காம்

ஒவ்வொரு வாரமும் இப்படித்தான். வெள்ளிக்கிழமை சாயங்காலம் எப்போது வரும் என்றிருக்கும். வார்டன் முன்நின்று லீவு லெட்டர் கொடுத்து, புறப்படுகிறவரை பக்கு பக்கு என்றிருக்கும். வார்டன் லீவு தராவிட்டால்? சுலபமாகச் சொல்லிவிடலாம். "போனவாரம்தான போன", இந்த வாரம் என்ன," என்கலாம். "மார்க் குறைவா இருக்கு. ஆஸ்டல்ல இருந்து படி" என்று சொல்லலாம். உங்க மாமா வாராவாரம் அனுப்பவேண்டாம்னு சொல்லியிருக்காரு. லீவுல்லாம் இல்ல" என்று மறுத்துவிடலாம்.

இந்த இடத்தைவிட்டுப் போவது எளிதில்லை. மீறிப் போகலாம். திரும்பி இங்கேதானே வரவேண்டும். யார் சோறு போடுவார்கள். இருக்க எங்கே இடம் கிடைக்கும். நல்லதோ கெட்டதோ ஒரு இடம் கிடைத்திருக்கிறது. மூணு வருஷமாய் இருந்தாயிற்று. ஏழும் எட்டும் முடித்து ஒன்பது படித்துக் கொண்டிருக்கிறான். இதையும் விட்டுவிட்டு எங்கே போக. யார் இடம் தருவார்கள். அம்மா கூடப் பிறந்தவர்களா, அப்பாக் கூட பிறந்தவர்களா. யார்.

அம்மாகூடப்பிறந்தவள் ஒருத்திதான் இருக்கிறாள். எல்லோருக்கும் பெரியவள். பெரியவளுக்கு எப்படி இந்தப் பெயர். குட்டியம்மை. அவளுக்கு அவள் வீட்டுக்கதையே போதும். ஆவுடையப்ப அண்ணாச்சி தானே தலையெடுத்து, சம்பாதித்து, பெண்பார்த்து, கல்யாணம்பண்ணி சங்கரனும், சுப்புவும், கதிரேசனும், கஸ்தூரியும் பிறந்த பிறகும் வைராக்யத்தோடு பெரியம்மையிடம் பேசாமல் இருக்கிறான். குழந்தையண்ணன் இப்போதுதான் வேலைக்குப் போகிறான். பெரிய கருப்பையா டீச்சர் டிரெயினிங் முடித்துவிட்டு இப்போதுதான் வேலையில் சேர்ந்து அத்தான் வீட்டில் இருக்கிறான். முருகண்ணன் கதை தனி. மெட்ராஸ்தான் கதி அவனுக்கு. அக்கா மட்டும்தான் செயலாக இருக்கிறாள். பெரியம்மை காலமும் பாதி இருட்டு, பாதி வெளிச்சம் என்று கழிந்து போயிற்று. கூடலூரில் பிறந்து சங்கரன்கோயிலில் முறைமாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டதெல்லாம் இதுக்குத்தானா.

அப்பாகூடப்பிறந்தவள் ஒருத்தி. கோமதி அத்தை. தாத்தா ஏன் தபசுக்கோயில் நாயகி பேர் விட்டார்கள். யாருக்குத் தெரியும். அத்தைக்கு அண்ணாச்சியைப் பிடிக்கும். மதினியையும் பிள்ளைகளையும் பிடிக்கும். ஆனால், நொடித்துப்போன பிறகு உறவும் விடடுப்போயிற்று. அத்தைக்கு அவள் குடும்பம்தான் உசத்தி. குழலி மதினி, சிவா மதினி, காந்தி, ராஜா, நம்பி, ஆறுமுகம். மூணு ஆண், மூணு பெண், கணவர் இதுதாண்டி அவள் யோசிப்பாளா. இவர்களுக்குச் செய்வாளா. மாட்டாள். போய் நிற்கலாமா, பிச்சையெடுக்கலாம்.

ஆவுடையப்ப அண்ணாச்சி கொஞ்சம் வசதியாக இருக்கிறான். யூனியன் காண்ட்ராக்டர். கோமதியாபுரத்தில் சொந்தத்தில் வீடு கட்டி விட்டான். எப்போதும் கையில் காசு இருக்கும். இவனுக்கு இரண்டு டிரௌசர்-சட்டை எடுத்துக்கொடுத்தான். மூணு மாசமாக வைத்துச் சோறு போட்டான். ஆச்சாள்புரம் போக ரயில் டிக்கட் எடுத்துக் கொடுத்தான். பள்ளிக்கூடத்தில் சேர்க்கச்சொல்லி அத்தானுக்கு எழுதியிருந்தான். அவனைக் குறை சொல்ல முடியாது. வீட்டில் வைத்துப் படிக்கச் சொல்லியிருக்கலாம். அவனுக்கும் நாலு பிள்ளைகள். இவனை எப்படி வைத்துக்கொள்ள முடியும். அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த மதினி ஒன்றும் சொல்ல மாட்டாள்.

அப்படி ஒரு மதினியைப் பார்க்க முடியாது. போதுமா போதுமா என்று கேட்டுச் சோறெடுத்து வைப்பாள். சாயங்காலம் அவள் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போலவே இவனுக்கும் பண்டம் எடுத்துக் கொடுப்பாள். இல்ல. எல்லோருக்கும் தருகிறமாதிரி இவனுக்கும் அரையணா கையில் தந்துவிடுவாள். அவள் கொழுந்தன்களைக்கூட இதுபோலப் பார்த்திருக்க மாட்டாள். மத்யானம் ஒண்ணரை மணிக்கெல்லாம் அண்ணாச்சிக்குப் பரிமாறும்போதே இவனுக்கும் எடுத்து வைப்பாள். இவன் வெளியில் போயிருந்தால் சங்கரனோடு சேர்த்துச் சோறு எடுத்து வைப்பாள். அவள் பிள்ளை மாதிரிதான் பார்த்துக் கொண்டாள். மதினி விகல்பமாக நடந்து கொள்ளவேயில்லை. அவளுக்கு இதெல்லாம் தெரியாது. அவள் மனசுக்கு அந்த வீட்டில் மஹாராணி.

சங்கரனுக்கும் இவனுக்கும் இரண்டு வயசுதான் வித்யாசம். சின்ன சித்தப்பா, சின்ன சித்தப்பா என்று ஆசையாக இருப்பான். எங்கே போனாலும் இவனையும் கூடக் கூட்டிக்கொண்டு போவான். அவன் ஒன்றுவிட்ட மாமா ஒருத்தர் சினிமா கொட்டகையில் ஆபரேட்டராக இருந்தார். "சங்கரு, படம் மாத்திருக்காண்டே. வாரியா" என்று சொல்லிவிட்டுப்போவார். வாங்க சித்தப்பா என்று கூட்டிக் கொண்டு போவான். வெளியே போகிற இடங்களிலெல்லாம் எங்க சித்தப்பா என்று பெருமையாகச் சொல்வான். பெரிய மனுஷன் மாதிரி காபி கிளப்புகளுக்குக் கூட்டிக்கொண்டு போவான். காலையில் குளிக்க இறைவைக் கிணற்றுக்குப் போகையில் இவனையும் கூட்டிக்கொண்டுதான் போவான்.

கோமதியம்மன் கோயிலுக்குப் போகையிலும் இவன் இல்லாமல் போக மாட்டான். அண்ணாச்சிக்கும் சின்ன அண்ணன்களுக்கும் ஆகாது. அதுதான் இப்படிப்போல. போன வருஷம் வந்திருந்தபோது மதினி கால்கோட்டை நெல்லை இவன் தலையில் ஏத்திவிட்டுக் கூட சங்கரனையும் அனுப்பி வைத்தாள். கழுத்து அழுந்த அழுந்த இவன் சுமக்க முடியாமல் சுமந்து எப்படியோ கொண்டு போய்க் கொண்டு வந்துவிட்டான். சங்கரன், அம்மையிடம் இதைச் சொல்லி சத்தம் போட்டிருப்பான் போல. மதினி பிறகு பிறகு கடுத்தமாய் எந்த வேலையும் சொல்வதில்லை. சொசைட்டிக்குப் போய்ப் பால் வாங்கிக்கொண்டு வருவது, பஜாரில் போய் காய்கறி வாங்கி வருவது, சாயங்காலம் மிட்டாய் போடும் இடத்துக்குப் போய் மிட்டாய் வாங்கிக்கொண்டு வருவது இப்படி லேசு வேலையாகத் தான் சொல்வாள். இவனை ஆச்சாள்புரம் அனுப்புவதில் சங்கரனுக்கு இஷ்டம் இல்லை. "இங்கியே இருங்களேன் சித்தப்பா. நா அம்மைகிட்ட சொல்தன்" என்பான்.

லட்சுமி மதினி தாய். தேவதை. தெய்வம். மகனைவிட ஒருபடி மேலேதான் இவனைப்பார்த்துக்கொண்டாள். மதினிதான் சொல்லி விட்டாள். "இவன் படிக்கணும். ஆசசாள்புரத்துக்கு அனுப்பி வையுங்க", அண்ணாச்சி எங்கியாவது சேர்த்து விட்டுருவாஹ. படிக்கட்டும். நல்லா படிப்பான். கருப்பையா படிப்பக் கெடுத்திரக் கூடாது. வீட்டில பெரியவன். ரோஷக்காரன். அந்தக் குடும்பத்துக்கு நாம ஏதாவது செய்யுறதுன்னா இவன மேக்கொண்டு படிக்க வைக்கது தான். படிச்சா நல்லா இருப்பான். இரண்டு டிரௌசரும், சட்டையும் எடுத்துக்கொடுத்து, ரயில் டிக்கட் வாங்கிக் கொடுத்து, செலவுக்கும் கையில் அஞ்சோ பத்தோ கொடுத்து அண்ணாச்சிகிட்ட அனுப்பிச்சு வைச்சிருங்க."

மதினி சொல்லுக்கு மறு சொல் எது. அண்ணாச்சி அப்படியே செய்தான்.

ஆவுடையப்ப அண்ணாச்சி ஸ்டேஷனுக்கு வந்து டிக்கட் எடுத்துக் கொடுத்து வண்டி வருகிறவரை இருந்து ஏற்றிவிட்டான். கையில் பத்துரூபாய்த் தாளை எடுத்துக்கொடுத்தான். "நீயும் கதிரேசனும் அங்க படிங்க. மாப்பிள்ளைக்கு எல்லாம் எழுதி இருக்கேன். படிப்ப விட்டுரப்படாது. நீ தலையெடுத்துத்தான் சித்தியக் கண் கலங்காம பாத்துக்கணும், என்ன, உங்க ஐயாவை இனிமே நம்ப முடியாது. மைனர் ஷோக்குல எல்லாத்தையும் தூத்தெறிஞ்சிட்டு கடைசியில வந்து நிப்பாரு. நீ புத்தியோட பிழைச்சுக்கணும்.. போய் லெட்டர் எழுது. நா நாள, நாளைக்கழிச்சு சித்திக்கு எழுதுதேன்."

அந்த நடுநிசியிலும் சங்கரன் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தான். "போயிட்டு வாங்க, சித்தப்பா" என்று வழியனுப்பி வைத்தான்.

ஆச்சாள்புரத்தில்தான் பிச்சம்மக்கா இருந்தாள். அத்தான் ஆனைக்காரன்சத்திரம் சரகத்தில் பள்ளித்துணை ஆய்வாளர். கௌரியும் ராஜூவும் பிறந்திருந்தார்கள். கௌரிக்கு ஏழு வயசு. ராஜூவுக்கு அஞ்சு வயசு. மூத்த ஆண்பிள்ளை அஞ்சு வயசுவரை இருந்தான். டைபாய்ட் காய்ச்சலில் பறிகொடுத்துவிட்டாள்.

குழந்தையண்ணனுக்கு ரோடு மேஸ்திரி வேலை கிடைத்த மறுவருஷமே கருப்பையா அண்ணன் திரும்பவும் ஸ்கூலில் சேர்ந்து ஈ.எஸ்.எல்.சி. முடித்தான். அத்தான் யோசனைப்படியே டீச்சர் டிரெய்னிங் படித்தான். கொள்ளிடம் யூனியனிலேயே அத்தான் வேலைவாங்கியும் கொடுத்தார்கள். அண்ணன்தான் வீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொண்டான். கடைக்குப் போகிறதெல்லாம் அவன்தான். நெல் மொத்தமாகப் பிடித்துப்போட்டு விடுவார்கள் அத்தான். கருப்பையா அண்ணன் சிதம்பரத்திலிருந்து சைக்கிளிலேயே மளிகை சாமான் வாங்கிக்கொண்டு வந்துவிடுவான். விறகு மொத்தமாகச் சொல்லிவிடுவார்கள். கொள்ளிடத்திலிருந்து அத்தானே காய்கறி வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள். வீடு தேடி வருகிற வாத்தியார்கள், டீச்சர்கள் வேறு காய்கறி, பழங்கள் வாங்கிக் கொண்டு வருவார்கள். எல்லாமே செழிப்பாக இருக்கும். வீடே நிறைந்து இருக்கும்.

அக்கா பிரமாதமா சமைப்பாள். காலையில் இட்லி அவித்துத் தக்காளிச் சட்னி வைப்பாள். பிச்சம்மக்கா மாதிரி யாரும் தக்காளிச் சட்னி வைக்க முடியாது. இட்லிச் சட்டியிலேயே முழுத்தக்காளிகளாக வேகப் போட்டு விடுவாள். அரை வேக்காட்டில் எடுத்து, தோலை மட்டும் தனியே பிரித்து எடுத்துவிட்டு, லேசாய் பிசைந்து இருப்புச்சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்து, அளவாய் மிளகாய்த்தூள் சேர்த்து, உப்புப்போட்டுத் தாளித்து இறக்கி வைத்தால், குறைந்தது பன்னிரெண்டு இட்லி சாப்பிடலாம். மத்தியானம் அவியல் வைத்தால் இரண்டு தடவையாவது கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டும். அவள் கைபாகம் சாம்பாரில் தெரியும். புளியிட்ட கறி வைக்க இன்னொருத்தி பிறந்துவர வேண்டும். புளித்தண்ணி வைத்தால்கூட தனிருசி இருக்கும். அருமையாக காபி போடுவாள். அத்தான் உடம்பு, அக்கா சமையல், பனிரெண்டரை மணிக்கெல்லாம் ராவ்ஜி வந்து கேரியர் வாங்கிக்கொண்டு போவார். அத்தானுக்கு ராத்திரி தோசை சுட்டுப்போடுவாள். பிள்ளைகளுக்கும் பெரிய கருப்பையாவுக்கும் பழையது அக்காவும் சோறுதான் சாப்பிடுவாள்.

மத்தியானம் பருப்பு வைத்து, கீரையும் கடைவாள். காயங்காலம் ஏதாவது ஒரு பண்டம், பலகாரம் செய்யாமலிருக்க மாட்டாள். ஒருநாள் சுண்டல், ஒருநாள் கொழுக்கட்டை ஒருநாள் வடை, ஒருநாள் இடியாப்பம், ஒருநாள் தட்டை, ஒருநாள் அடை, அக்கா இன்றைக்கு என்ன செய்வாள் என்பதே ஒரு குறுகுறுப்பான கேள்வியாக மனசில் இருந்து கொண்டிருக்கும். வீட்டுக்கார அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறாற்போல இருக்கும், கொஞ்ச நேரத்தில் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு வருவாள்.

அக்காவுக்கு மாறுகண், அவள் பேசிக்கொண்டிருக்கையில் யாரைப் பார்த்துப் பேசுகிறாள் என்று கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சம் குள்ளம், தான், பெரியப்பா மாதிரி. அழகு என்றும் சொல்லமுடியாது. லட்சணம் இல்லை என்றும் சொல்ல முடியாது. பூசினாற்போல இருப்பாள். சமைந்து அஞ்சாறு வருஷமாய் வீட்டில் இருந்தாள். பெரியப்பா, ரோடு மேஸ்திரி. பெரிதாகச் செய்வதற்கு ஒன்றும் வழியில்லை. பெரியம்மை ஏழு, எட்டு இடம் பார்த்தாள். எதுவும் தகையவில்லை. அத்தான் கோயில் செந்தட்டியாபுரத்தில் எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியாராக இருந்தார்கள். கொஞ்சம் மட்டமான பிள்ளைமார்தான். ஏதோ ஒரு துப்பில் அத்தானைப் பார்த்துவிட்டு வந்த பெரியம்மா சரி சொல்லிவிட்டாள்.

அக்காவைக் கைபிடித்த ராசியோ என்னவோ. அத்தான் பரீட்சை எழுதி ஜூனியர் டெபுடி இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல் ஆனார்கள். முதலில் சிவகங்கை. பிறகு ஸ்ரீபெரும்புதூர். அப்புறம் ஆனைக்காரன் சத்திரம். காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தைப் பள்ளிக் கல்வி இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேலு அமல்படுத்துவதில் ஈடுபட்டதில் அத்தான் என்.டி.எஸ்.ஸீக்கு வேண்டியவரானார்கள். டெபுடி இன்ஸ்பெக்டர் ஆனார்கள். வீட்டுக்கு வந்து பார்க்கிற ஆசிரியர்கள் வெறுங்கையோடு வர மாட்டார்கள். பழமோ பிஸ்கட்டோ வாங்கிக்கொண்டு வருவார்கள். மாலை மரியாதை தனி. எவ்வளவு அழகான டீச்சர்கள் வீட்டுக்கு வருவார்கள். அத்தான் இருக்கிற ஊருக்கெல்லாம் இவன் போயிருக்கிறான்.

அத்தான் ஒரு அழகுபட்ட ராலே சைக்கிள் வைத்திருந்தார்கள். பச்சை நிறம். கருப்பையா அண்ணன் காலையில் காபி குடித்ததும் துடைத்து, வாரத்துக்கு ஒருதரம் எண்ணெய் போட்டு, புதுக்கருக்கு அழியாமல் பார்த்துக்கொள்வான். ஆச்சாள்புரத்துக்கும் கொள்ளிடத்துக்கும் மூணு மைல். பஸ் அடிக்கடி கிடையாது என்று சைக்கிளில் தான் போவார்கள். ராத்திரி எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். சைக்கிளைக் கொண்டுபோய் ஆபீஸில் போட்டுவிட்டு பஸ் பிடித்து இன்ஸ்பெக்ஷன் போவார்கள். கூடவே ராவ்ஜியும் போவார். அநேக ஊர்களுக்கு சைக்கிளில்தான் போகும்படி இருக்கும். சமயங்களில் வாத்தியார்களே வில்வண்டி ஏற்பாடு பண்ணியிருப்பார்கள். இரண்டு, மூணு கிராமங்கள் சேர்ந்தாற்போலப் பார்த்துவிட்டு வருவார்கள். ராவ்ஜி வந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போவார். புறப்படும்போதே அக்காவிடம் சொல்லிவிடுவார்கள், இன்றைக்கு கேம்பா ஆபீஸா என்று.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆச்சாள்புரம். டூரிங் டாக்கீஸீக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். அக்காவுக்கு சினிமா பார்ப்பதிலெல்லாம் ஆர்வம் ஒன்றும் கிடையாது. கௌரி, ராஜி, கருப்பையா அண்ணன், இவன்தான் கூடப்போவார்கள். அக்கா கோயிலுக்குக்கூட அவ்வளவாகப் போகமாட்டாள். வீட்டை விட்டு வெளியில் எங்கும் போக பிரியப்படாத மனுஷி அவள்.

வீடு நிறைய போட்டோ மாட்டியிருக்கும். பள்ளி ஆண்டு விழா, பிரிவு உபசார விழா, ஸ்போர்ட்ஸ் டே, டி.ஓ. மாற்றலாகிப் போனபோது எடுத்தது இப்படி. நிறைய போட்டோவில் அத்தான் நடுநாயகமாக. அநேகம் போட்டோவில் மாலையோடு இருப்பார்கள். கூட அந்த ஸ்கூல் ஆசிரியர்கள், டீச்சர்கள். சிலவற்றில் பள்ளி மாணவ - மாணவியரும் கூட, என்.டி.எஸ். போட்டோ ஒன்றும் காமராஜர் போட்டோ ஒன்றும்கூட இருந்தன. ஏராளமான நினைவுப் பரிசுகள், அலங்காரப் பொருள்கள் அங்கங்கே இருக்கும். எல்லாம் ஆசிரியர்கள் வழங்கியது. அத்தான் நிறைந்த வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறார்கள் போல.

அத்தான் ஆள் அழகு ஒன்றுமில்லை. பெரிய உருட்டு மண்டை படர்ந்த முகம். சுமாரான வளர்த்திதான். அளவான உடம்பு. பேச்செல்லாம் திருநெல்வேலிப் பிள்ளைமார் மாதிரி நாகரிகமாக இராது. அங்கிட்டு, இங்கிட்டு, வந்திட்டியான், போயிட்டியான் என்றுதான் பேசுவார்கள். கொஞ்சம் இழுவை ஜாஸ்திதான். பிறகு சற்றே திருத்தம் வந்தது. உள்ளூரில் வாத்தியாராக இருந்த வரைக்கும் கதர் வேட்டி-சட்டைதான். ஸ்கூல் இன்ஸ்பெக்டரான பிற்பாடு கதர் பேண்ட்-சர்ட்டுக்கும் மாறிவிட்டிருந்தார்கள். நல்ல அழகாகச் சிரிப்பார்கள். பல் வரிசையும் அழகாக இருக்கும். அத்தானின் கடுமையான உழைப்பும் கெட்டிக்காரத்தனமும் வேகமும் சுறுசுறுப்பும் நல்ல பெயர் வாங்கித் தந்திருந்தது. லோகல் எம்.எல்.ஏ., பஞ்சாயத்து யூனியன் தலைவர், டி.இ.ஓ., எல்லோரையும் அனுசரித்துப் போவார்கள். அவர்களும் அத்தான் ஏதாவது ஒரு "ஆப்ளிகேஷன்" சொன்னால் தட்டமாட்டார்கள். லௌகிக வாழ்க்கையில் அத்தான் வெற்றி வீரராகத்தான் விளங்கினார்கள்.

அக்காவுக்கு கல்யாணமாகிற சமயத்தில் இவர்கள் திருநெல்வேலியில்தான் இருந்தார்கள். அம்மா, அக்காவையும் இவனையும் கூட்டிக்கொண்டு பெரியதம்பியை ஒக்கலில் வைத்துக் கொண்டு ஒருவாரத்துக்கு முன்னாடியே பெரியம்மை வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். இவ்வளவுக்கும் சேகருக்கு உடம்புக்குக் கதியில்லாமல் இருந்தது. டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள். அப்பாதான் நெல்லையப்பர்கோயில் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ் ஏற்றி விட்டார்கள். கல்யாணத்துக்கு முதல்நாள் ராத்திரிதான் அப்பா வந்தார்கள். மறுவீடெல்லாம் முடிந்து அக்காவும் அத்தானும் கோயில் செந்தட்டியாபுரம் போனபிறகுதான் அம்மா சங்கரன் கோயிலிலிருந்து கிளம்பினாள். பெரியம்மைக்கும் அம்மைக்கும் அவ்வளவாக ஆகாது. அதுக்கு அம்மை குணம் (கோபம்) காரணமா, பெரியம்மை குணம் (கோபம்) காரணமா என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே கோபக்காரிகள்தாம். கூடலூர் மண் வாகு அப்படி. ஆனால் அம்மை ரொம்ப பேசமாட்டாள். பெரியம்மை பேசியே சண்டை இழுத்து விடுவாள். பிள்ளைகள் எல்லோரும் சித்தி சித்தி என்று உயிராய் இருப்பார்கள். அந்த அளவுக்கு இவனோ அக்காவோ பெரியம்மையிடம் ஆசாபாசமாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அத்தையிடம் பிரியமாக இருந்த மாதிரி பெரியம்மையிடம் ஏனோ இல்லை.

அக்காவையும் அத்தானையும் விருந்துக்குக் கூப்பிட்டு வந்திருந்தார்கள். அப்பா, சுப்பையாமூப்பனார் கடையிலிருந்து மளிகை சாமான் வாங்கிப்போட்டார்கள். பத்துநாளும் அம்மா வகை வகையாய் செய்து போட்டாள். அத்தான் கூட இருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக அப்பாகூட என்ன வேலையிருந்தாலும் வந்து விடுவார்கள். காலையில் ஆற்றுக்குப் போய்விட்டு வந்ததும் அம்மை சூடாய் இட்லி எடுத்து வைப்பாள். ஒரு நாளைக்குக் கத்தரிக்காய் கொத்ஸீ, ஒருநாள் தக்காளிச்சட்னி, ஒருநாள் சாம்பார், தேங்காய் சட்னியும், மிளகாய்ப்பொடியும் இல்லாமல் இருக்காது. இதேபோல மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒருநாள் சொதி வைப்பாள். ஒருநாள் இடிசாம்பார் வைப்பாள். வத்தல்குழம்பு மாப்பிள்ளைக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டுத்தான் மிதமான காரத்தோடு வைப்பாள். தினமும் ஏதாவது ஒரு ரசம் வைப்பாள். ஒருநாள் விட்டு ஒருநாள் அவியல் வைத்திருப்பாள். இரண்டு நாளெக்கொருதரம் மோர்க்குழம்பு வைப்பாள். ஒருநாள் கூட்டாஞ்சோறு பொங்குவாள். ஒருநாள் துவரம் பருப்புச் சோறு. ஒருநாள் உளுந்தம்பருப்புச்சோறு. ஒவ்வொரு நாளும் அப்பளம் பொரிக்காமல் இருக்கமாட்டாள். கூழ்வத்தலும் வடகமும் வறுக்காமல் இருக்க மாட்டாள். உளுந்தம்பருப்புச் சோற்றுக்கு எள்ளுத் துவையல், துவரம்பருப்புச் சோற்றுக்கு ஒரு துவையல், ராத்திரி சப்பாத்தி, பூரி, சம்பா ரவை உப்புமா அல்லது பாம்பே ரவை உப்புமா, இடியாப்பம், அடை ஏதாவது பண்ணியிருப்பாள். மெனக்கெட்டு பிரண்டை பறித்துக்கொண்டு வரச்சொல்லித் துவையல் அரைத்து வைத்திருந்தாள். அப்போது மாம்பழ சீஸன். நாளும் மாம்பழம்தான். ராஜபாளையம், சப்பட்டை, இல்லை வாழைப்பழ ஜாதி, நீலம் ஏதாவது.

அம்பாசமுத்ரம் கிருஷ்ணா டாக்கீஸீக்கும் கல்யாணி தியேட்டருக்கும் இரண்டு, மூணு முறை அப்பா கூட்டிக்கொண்டு போனார்கள். மணிமுத்தாறு அணைக்கட்டுக்கும் பாபவிநாசம் அணைக்கட்டுக்கும் அழைத்துக்கொண்டுபோய் காண்பித்தார்கள். சிவப்பு வர்ணம் பூசியிருக்கும் பயோனியர் பஸ் சர்வீஸில்தான் போய்வந்தது. ஊர் திரும்பும்போது அம்மா சொல்லி கணபதி ஜூவல்லரி மார்ட்டிலிருந்து வெள்ளிக் குத்துவிளக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அம்மா தாம்பாளத்தில் மஞ்சள் குங்குமத்துடன் ரவிக்கை வைத்துக் கொடுத்தாள்.

அக்காவுக்கு அம்மா வழியில் ஒட்டுதலாக இருப்பது சித்திதான். பெரியம்மைக்கும் அண்ணாச்சிக்கும் பிடிக்காமல் போயிற்று. குழந்தையண்ணன், கருப்பையா அண்ணன், முருகண்ணன் யாரும் இன்னும் தலையெடுக்கவில்லை. அம்மையைப் பெற்ற ஆச்சியும் மாமாவும் செயலாக இல்லை. கோயில்வாசலில் கடை வைத்திருந்த சித்தப்பாவோடு (பெரியப்பாவின் தம்பி) பேச்சுவார்த்தை இல்லை. அக்காவுக்கு ஒரு அத்தை உண்டு. அந்த மாமா செட்டிநாட்டுப்பக்கம் இருந்தார்கள். மற்றவர்கள் யாரும் அவ்வளவு உரித்தாக இல்லை. அம்மைதான் விருந்துக்கு அழைத்தது. அக்காவும் அத்தானும் இன்றைக்கும் கல்லிடைக்குறிச்சி ஊருக்கு வந்ததைச் சொல்வார்கள். அம்மை கை கொடிசு இல்லை. அவள் எல்லோருக்கும் செய்தாள். செய்வாள். அக்காவுக்கும் செய்தாள், அவ்வளவுதான்.

மாதிரவேளூரிலிருந்து ஏழு மைல் ஆச்சாள்புரம். அந்தப்பக்கம் கொள்ளிடம் ஆறு. இந்தப்பக்கம் வாய்க்கால். நடுவில் சாலை. ஆற்றங்கரை நெடுக வாழைத்தோப்பு, இலுப்பைத்தோப்பு, மூங்கில்காடு இப்படி இருக்கும். வாய்க்கால் கரை முழுக்க பிரம்பு முளைத்துகிடக்கும். புதர்க்காடாயிருக்கும். கொள்ளிடம் ஊர் கிட்ட ஒரு இலுப்பைத் தோப்பு. பூக்கிற சீஸனில் கிறங்க அடிக்கிற வாசம் வீசும். நடந்துதான் வர வேண்டும். ஆனைக்காரன் சத்திரத்திற்கு பஸ் விடவில்லை. மழைக்காலத்தில் பாதை பூராவும் உளையாகிவிடும். ஆனைக்காரன் சத்திரத்திலிருந்து மகேந்திரபள்ளி பஸ்ஸில் போகலாம். எட்டணாதான். இவன் நடந்துதான் போவான், வருவான். பஸ்ஸீக்கு எங்கே காசு இருக்கிறது. சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் புறப்பட்டால், விளக்கு வைக்கிற நேரத்தில் வீடுபோய்ச் சேர்ந்துவிடலாம்.

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இருப்பான். திங்கள் கிழமை காலையிலேயே எழுந்திருந்து, குளித்துவிட்டுப் பழையது சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு வந்துவிடுவான். வாரத்தில் இரண்டு நாள் நல்ல சாப்பாடு கிடைக்கும். காலையில் இட்லி, மத்யானம் நெய், பருப்பு, பொரியல், கூட்டு, ருசியான குழம்போடு சாப்பாடு. ராத்திரி சுண்டக்கறியோடு பழையது. அக்கா வஞ்சகமில்லாமல் போடுவாள். இவன் வக்கணையாகச் சாப்பிடுவான்.

சாப்பாட்டுக் கடை முடிந்து ஒரு சின்னத் தூக்கம் தூங்கி எழுந்து, வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் குளத்துக்கு அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு போவாள் அக்கா. "எல கருப்பையா, அத்தான் துணிகளுக்கு சோப்புப் போட்டு வக்கியா, முன்னபோய்" என்று சாப்பாடானதும் வேலை ஏவுகிற மாதிரி இல்லாமல் சொல்வாள். இவன் அத்தான் பேண்ட்-ஷர்ட், வேஷ்டி, பிள்ளைகள் கவுன், சட்டை, எல்லாவற்றுக்கும் சோப் போட்டுக்கொண்டிருப்பான். அதுக்குள்ளே அக்கா வந்துவிடுவாள். இரண்டு பேருமாகத் துவைத்து அலசிப்பிழிந்து காயப்போடுவார்கள். "பொம்பளப்பிள்ள மாதிரியே அலசுதேயலே. எங்க சித்தி அலசுதது மாதிரியே இருக்குடா" என்று சொல்லிச் சொல்லி வாய்ப்பாறுவாள். காய்ந்த பிறகு அத்தனை துணிகளையும் கொடியிலிருந்து எடுத்துவந்து அருமையாக மடித்து வைப்பான். சாயங்காலமாய் பக்கத்திலேயே இருக்கும் அடி பைப்பிலிருந்து நல்ல தண்ணீர் பிடித்து வைப்பான். நிறைய ஏனம் கிடந்தால் அக்காவுக்கு ஒத்தாசையாக கழுவி வைப்பான். வீடு தூத்து, வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துவிடுவான். எல்லா வேலைகளையும் செய்வான்.

ஆச்சாள்புரம் ஊரில் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டம். வருஷம் பூராவும் ஏதாவது வயல் வேலை இருந்துகொண்டே இருக்கும். சாப்பாடுபோட்டு சம்பளம் கொடுத்தாலும் வீட்டு வேலைக்கு ஆள் அமையாது. வீடு சௌகரியத்துக்கு, தண்ணீர் வசதிக்கு, நல்ல காற்று, நெல் மலிந்த ஊர், இப்படி வசதிகளுக்காகத்தாம் அங்கே இருந்தது. தவிரவும், அக்காவும் தானே எல்லா வேலைகளும் செய்துவிடுவாள். கொஞ்சம் பூரித்த சரீரம் என்றாலும் இருந்துகொண்டே பார்த்துக்கொள்வாள். வேலைக்கு ஆள் இல்லையென்று ஆவலாதி சொல்லிக் கொண்டிருக்க மாட்டாள். பிள்ளைகள் இரண்டுபேரும் சின்னதுகள். வேலை சொல்ல முடியாது. கருப்பையா அண்ணன் சனி ஞாயிறில் கூடமாடச் செய்வான். இவன் இருக்கிறான். என்று அவன் இருந்து கொள்வான். அக்காவும் பாவம்தானே. ஆறேழு பேர் சாப்பிட்ட பாத்திரம், அவ்வளவு பெரிய வீடு, அத்தணை துணி, நேரத்துக்குச் சமையல் எல்லாத்துக்கும் யார் உதவியும் இல்லாமல் தனியே செய்கிறதென்றால் கஷ்டம்தானே.

வெயில்காலத்தில் இவன் வந்திருக்கும் போதுதான் கூழ்வத்தல் போடுவாள். வடகம் போடுவாள். இவன்தான் வடகத்துக்கு வெங்காயம் உரித்துக்கொடுப்பான். அக்கா கூட நின்று கூழ்வத்தல் ஊத்துவான். காய்ந்த பிறகு, தண்ணீர் தெளித்து எடுத்து வைப்பான். கௌரி, ராஜூ சட்டைகளில், கவுனில், அத்தான் பேண்ட்-ஷர்ட்டுகளில் பட்டன் போயிருந்தால் கட்டுவான். வீட்டுக்கு வேண்டிய மிளகாய்ப்பொடி இடித்துக்கொடுப்பான். ஊறுகாய் போட எலுமிச்சம்பழம் அரிந்து கொடுத்திருக்கிறான். மாங்காய் வெட்டிக் கொடுத்திருக்கிறான். சாயங்காலமானால், அக்காகூட இருந்து தோசைக்கு அரைத்துக் கொடுத்திருக்கிறான். சமயங்களில் அடைக்கு அரைத்துக் கொடுத்திருக்கிறான். சில நேரம் அடுப்புமுன்கூட இருந்திருக்கிறான். விகற்பமில்லாமல் எல்லாம் செய்திருக்கிறான். அம்மாவுக்கு முடியவில்லையென்றால் செய்யமாட்டோமா. கல்லிடைக்குறிச்சியில் அம்மா அப்பளம் போடுகிற நாளில் இவன் வட்டுப் போட்டுக் கொடுக்கவில்லையா என்ன. இட்லி அவித்து விற்கும் காலத்தில் இவன் கூட இருந்து அரிசி மாவு அரைத்துக் கொடுக்கவில்லையா. ஐயர் வீடுகளில் பத்துப் பாத்திரம் துலக்கப் போகும் பொழுதுகளில் அக்கா பள்ளிக்கூடம் போயிருப்பாள். இவனே வீடு பெருக்கி, ஏனம் கழுவி, தண்ணீர் பிடித்து எல்லாம் செய்தவன்தானே. அக்காவுக்குச் செய்தால் என்ன குறைந்துவிடப் போகிறது.

திங்கள்கிழமை காலையில் புறப்படுகையில் அத்தான் கையில் இரண்டோ மூணோ கொடுப்பார்கள். அத்தான் சட்டை சின்னதாய்ப் போனால் அக்கா எடுத்து வைத்திருந்து இவன் போகிற நேரம் எடுத்துக் கொடுப்பாள். அது தொளதொளவென்று இவனைக் கோமாளித்தனமாய் காட்டும். ஆனால், அதையும் போட்டுக்கொண்டுதான் ஸ்கூலுக்குப் போயிருக்கிறான்.

அக்கா வீட்டிலிருந்து போர்ன்விடா டப்பாவில் உமிக்கரி எடுத்து வருவான். அக்கா லைப்பாய்சோப் வெட்டித் தருவாள். சன்லைட் சோப்போ, ஐநூத்தி ஒண்ணு பாரோ அதுபோல வெட்டி எடுத்துத் தருவாள். பாட்டிலில் தேங்காயெண்ணை ஊற்றிக் கொண்டுவந்து கொடுப்பாள். சனிக்கிழமைதோறும் அங்கேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து விடுவான். நார்த்தாங்காய் ஊறுகாய் ஒரு டப்பாவில் போட்டுத் தருவாள். மாச ஆரம்பமென்றால் பொரிகடலைகூடக் கொடுத்துவிடுவாள். இவனிடம் இருக்கிற இரண்டு கதர் துண்டும் அத்தான் கொடுத்தவைதான். தீபாவளிக்கு இவனுக்கும் டிரௌசர்-சட்டை எடுத்துக் கொடுப்பார்கள். ரைட்டர் பேனா வாங்கிக் கொடுத்திருந்தார்கள். புஸ்தகம், நோட்-புக் எல்லாம் அத்தான் செலவுதான். ஒரு மரப்பெட்டி செய்யச் சொல்லி வாங்கிக் கொடுத்திருந்தார்கள். ஹாஸ்டலில் சேர்த்து விட்டதிலிருந்து எல்லாமே அத்தான்தான்.

ஹாஸ்டலில் காலயில் பழையது அல்லது நொய்க்கஞ்சி, தொட்டுக்கொள்ள முதல்நாள் குழம்பு கொஞ்சம் போல ஊற்றுவார்கள். மத்தியானம் சுடுசோறு, ஏதாவது ஒரு குழம்பு, கூட்டோ, பொரியலோ ஒன்று, ராத்திரியும் இதுமாதிரிதான். வயிற்றுக்குப் போதும் என்றெல்லாம் இராது. எப்போதும் பசிக்கிற வயிறாகத்தான் இருக்கும்.

பின்னால் தோட்டத்தில் ஆறுமாதக் கீரைத்தண்டு போட்டிருந்தது. மரம் மாதிரி வளர்ந்து நிற்கும் அது. தோட்டம் இல்லை. கீரைக்காடு. தினமும் சாப்பாட்டில் கீரைத்தண்டு இருக்கும். அப்படிக் கீரைத்தண்டாய்ப் போட்டுத்தான் எல்லோருக்கும் சிரங்கு வருகிறது. சாம்பார் ஓடுதண்ணீராய் இருக்கும். வார்டன் பருப்புத் திருடி. சமையற்காரர் பருப்பு திருடி தனியே குழம்பு வைத்த மிச்சம்தான் இவர்களுக்கு. புளிக்குழம்பு வைக்கிற அன்றைக்குத்தான் உப்பு உறைப்பாய்ச் சாப்பிட்ட மாதிரி இருக்கும். எல்லோருமே நாக்குச் செத்துப்போய் இருந்தார்கள். காலையில் பக்கத்தில் இருக்கும் இட்லிக் கடைகளில் திரும்பத்திரும்ப மிளாகாய்ச் சட்னி கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பர்கள். நல்ல சாப்பாடு என்பது எவ்வளவு அருமையானது என்று இவ்வளவு சின்ன வயசிலேயே தெரிந்து கொள்ளும்படி ஆகியிருக்க வேண்டாம். டி.இ.ஓ. விசிட் வருகிற நாள், சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல், வருஷப்பிறப்பு, கார்த்திகை இப்படி நல்ல நாளும் பொழுதும் வந்தால்தான் நல்ல சாப்பாடு போடுவார்கள். அநேகமாய் எல்லாப் பையன்களுமே மந்தமாய், சோர்வாய்த்தான் இருந்தார்கள். கையில் இருந்தால் கடையில் ஏதாவது வாங்கித் தின்பார்கள். இல்லாதவர்களெல்லாம் பாவம்தான்.

காலையில் "ஸ்டடி அவர்" என்று சீக்கிரமே எழுப்பி விடுவார்கள். வாய்க்காலில் குளித்துவிட்டு வந்து, படிக்கிறோமா இல்லையோ ஒரு மணிநேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். மத்யானம் பள்ளிக்கூடம் எப்போது விடும், சாப்பிடலாம் என்றிருக்கும். சாயங்காலம் கட்டாயம் கோயிலுக்குப் போகவேண்டும். பிரேயர் உண்டு. ஆறிலிருந்து ஆறரைவரை. ஹாஸ்டலுக்கும் கோயிலுக்கும் அதிக தூரம் இல்லை. இரண்டிரண்டு பேராக வரிசையில் போய் வருவார்கள். பிரேயருக்கு வராமலிருந்தால் "மீல்ஸ் கட்" பண்ணி விடுவார்கள். சிதம்பரத்தில் போய் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை" பார்த்துவிட்டு வந்து இவன் "மீல்ஸ் கட்"டாகி ராப்பட்டினி கிடந்திருக்கிறான்.

நிறையப் பேருக்குப் பக்கத்துப் பக்கத்து ஊர்தான். அதிகம் போனால் தஞ்சாவூராக இருக்கும், கடலூராக இருக்கும். இவன்தான் தொலைதூரம். எல்லோரையுமே பார்க்க அம்மா, அப்பா, மாமா, அண்ணன் என்று யாராவது வந்து கொண்டிருப்பார்கள். முறுக்கு, கடலையுருண்டை, பொரிவிளங்காய், சீடை, வேர்க்கடலை இப்படி ஏதாவது பண்டம் எடுத்துக்கொண்டு வருவார்கள். இந்த மூன்று வருஷத்தில் இவனைத் தேடி யாரும் வந்ததில்லை. அம்மா ஒருமுறை அக்காவுச்கு டீச்சர் ட்ரெயினிங்கில் இடம் கிடைக்குமா என்று கேட்டு ஆச்சாள்புரம் வந்திருந்தாள். அப்பா எப்பவாவது மணியார்டர் அனுப்புவதோடு சரி. போன வருஷ தீபாவளிக்குத் துணியெடுத்து அனுப்பியிருந்தார்கள். ஸ்கூல், ஹாஸ்டல் எல்லாம் ஆரம்பித்த புதிதில் கரஸ்பாண்டெண்டுக்கு, எச்.எம்.முக்கு உதவியாக அத்தான் அடிக்கடி வந்து போனார்கள். சிலநாள்கள் தங்கும்படியாயிருக்கும். அப்போது கூப்பிட்டுவிட்டு விசாரித்திருக்கிறார்கள். பிற்பாடு பிற்பாடும் வேலையாக வருகையில் பார்ப்பார்கள்.

இன்னும் அந்த ஊருக்கு மின்சாரம் வரவில்லை. பஞ்சாயத்திலிருந்து தெருவுக்கு தெரு விளக்குக்கம்பம் வைத்திருந்தது. ஊர் சீக்கிரமே அடங்கிவிடும். கோடைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து இராது. கொள்ளிடம் ஆற்றில் எப்போதும் தண்ணீர் கிடக்கும். அங்கேதான் முளைக்குச்சி என்ற வார்த்தையே கேள்விப்பட்டான். தாமிரருணியில் இதெல்லாம் கிடையாது. "முளைக்குச்சி இருக்கு, அங்க போயிராதே" திருநெல்வேலி குறுக்குத்துறை மாதிரியெல்லாம் இஷ்டத்துக்கும் சாட முடியாது. தண்ணீரும் அவ்வளவு இருக்காது. கரையோரம் முதலைகள் வந்து ஒதுங்க விடக்கூடாது என்று நீள நீளமாய் குச்சிகள் நட்டு வைத்திருப்பார்கள். பார்த்து இறங்கிக் குளிக்க வேண்டும்.

மற்ற மற்ற ஹாஸ்டல்கள் மாதிரி இல்லை இது. எல்லா இலவச விடுதிகள் போலவும் இதுக்குக் கடுமையான கட்டுதிட்டங்கள் உண்டு. அனுசரிக்கவில்லையென்றால் சிரமம்தான். முறைவைத்துத் தோட்ட வேலைக்குப் போகவேண்டும். பூங்குடிபோய்த் தயிர் வாங்கி வரவேண்டும். சாப்பிடும்போது நெற்றியில் திருநீறு பூசியிருக்க வேண்டும். " அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்" தேவாரப் பாடல் பாடி முடித்துத்தான் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். மாதலீஸ்வரர் கோயில் பிரார்த்தனையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். போட்டதைச் சாப்பிட வேண்டும். நேரத்துக்குத் தூங்க வேண்டும். வருஷா வருஷம் பாஸ் பண்ண வேண்டும். இல்லா விட்டால் டி.சியைக் கையில் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

இவனுக்குப் புறப்படும்போதே சங்கடமாக இருந்தது. வார்டன் வேறு கேட்டார், கிளம்பும்போதே: "உங்க மாமா அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. போன வாரம் வந்தப்ப. "நீயானா புறப்பட்டு நிக்கே. இந்த வாரம் உன்ன அனுப்ப, நீ போ வேண்டாம்".

"இல்ல சார். இந்த வாரம் மட்டும்தான். பெரியம்மா வந்திருப்பாங்க."

"சரி. அடுத்தவாரம்லாம் லீவு கேட்டு வந்து நிக்கக்கூடாது, போ"ஹ.

அத்தான் ஏன் அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். யோசனையாக இருந்தது. அக்காவும் முன்மாதிரி இல்லை இப்போது. "வாரா வாரம் எதுக்குல கருப்பையா வர்றே. மாசத்துக்கு ஒரு தடவ வந்தா சரி. சும்மா சும்மா வந்துட்டு இருந்தா நல்லாவா இருக்கு. ஏதாவது வேணுமின்னா வர்ற பையங்க கிட்டே சொல்லி விடு. கொடுத்தனுப்புதேன். அத விட்டுட்டு இப்படி வந்து நிக்கலாமால. அந்த மனுஷன் யாருக்குன்னுல்லாம்தான் செய்வாஹ. கரும்பு இனிக்குன்னு வேரோடு பிடுங்கக்கூடாதுலே".

அத்தான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. சொந்த அத்தானென்றால் அப்படிச் சொல்வார்களா. அக்காதான் பொறுத்துக் கொள்வாளா. விரலுக்கு விரல் வித்யாசம் இருக்கிறது. பெரிய கருப்பையாவை டீச்சர் டிரெய்னிங் படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, பெண் பார்த்துக் கொண்டிருக்கவில்லையா. முருகண்ணனுக்குக் கப்பல்காரச் செட்டியார் வீட்டில் டிரைவர் வேலைக்குச் சொல்லி வாங்கிக் கொடுக்கவில்லையா. குழந்தையண்ணன் கல்யாணத்துக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்து உதவவில்லையா. ஆவுடையப்ப அண்ணாச்சிக்கு காண்ட்ராக்ட் தொழிலுக்கு வட்டியில்லாமல் பத்தாயிரம் போலக் கொடுத்திருக்கிறார்கள். எல்லா மச்சினன்மாருக்கும்தாம் செய்திருக்கிறார்கள். அக்காவுக்கு டீச்சர் டிரெய்னிங்கில் இடம் வாங்கித் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அத்தான் நினைத்தால் எப்படியும் வாங்கியிருக்க முடியும். சொந்தக் கொழுந்தியாளென்றால் அப்படிச் செய்வார்களா. இவனையும் ஒன்றுவிட்ட மச்சினன் என்றுதானே இப்படி நடத்துகிறார்கள். சம்பந்தம் பிறக்கிற போது சீர்காழி பிள்ளைப்பேறு ஆஸ்பத்திரிக்கு வெளியே கருப்பையா அண்ணன் மாதிரிதான் இவனும் நாலு, ஐந்து நாள் காத்துக்கிடந்து தொண்டூழியம் பார்த்தான். வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்த பிறகும் பத்துநாள் இருந்து எல்லாம் செய்தான். நல்லபடியாய் ஆனபிறகு தானே ஹாஸ்டலுக்கு வந்தான்.

இவ்வளவுக்கும் அத்தான் நல்ல மனுஷன். அக்காவும் நல்ல மனுஷிதான். சூதுவாது இல்லாதவள். அத்தான் படபடவென்று பேசினாலும் இரக்க குணம். அதுதான் படிப்பு விட்டுப்போகாமல் ஒரு இடத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். நல்ல மனுஷர்களாக இருந்துமே இந்தப் பாடு.

சாயங்கால வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. கையில் சுத்தமாகக் காசு இல்லை. பொரிகடலை வாங்கிக் கொறித்துக் கொண்டு கூட போக முடியாது. வழக்கமாக கொள்ளிடம் ஸ்டேஷன் கிட்ட இருக்கும் கடையில் டீ குடித்துவிட்டு மேலே நடப்பான். அந்த இடம் வந்ததும் அனிச்சையாய் நடை தொய்ந்தது. மனசை சமாதானப் படுத்திக்கொண்டு நடந்தான்.

அந்தப் பாதையே நடக்க சுகமாக இருக்கும். அதுவும் சாயங்கால வேளைக்கு நடை தோற்றாது. பழக்கப்பட்ட பாதைதானே.

கௌரியும் ராஜூவும் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும், "சின்ன கருப்பையா வந்திருக்கான்" என்று குதியாட்டம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் புகுந்தார்கள். அதற்குள் வாசல் தெளிக்க வந்த அக்கா இவனைப் பார்த்ததும், வாலே கருப்பையா. பெரியம்மை வந்திருக்கா. உன்னைக் கேட்டுக்கிட்டு இருக்கா" என்று வழிவிட்டு நின்று கொண்டாள்."

இவன் வீட்டுக்குள் போய்த் துணிப் பையை ஒரு ஓரமாக வைத்து விட்டு, முகம், கை கால் கழுவி விட்டு வந்தான். அக்கா காபி கொண்டு வந்து கொடுத்தாள். அடுக்களையில் கை வேலையாக இருந்தாள் போல. "இருலே." என்று சொல்லிவிட்டுப் போனாள். குருமு‘ வாசம் வீட்டைத் தூக்கியது. கல்லில் சப்பாத்தி போட்டு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

கோயிலுக்குப் போய்விட்டு வந்தாள் பெரியம்மை. "நீ எப்ப வந்தே, இருலே" என்று சொல்லிவிட்டு அக்காவைப் பார்க்கப் போனாள். அவள் விட்டேற்றியாகப் பேசியது, இவன் வந்திருப்பது பிடிக்கவில்லை என்கிற மாதிரி இருந்தது. இவன் யூகம் தப்போ.

பிள்ளைகள், "பசிக்குதும்மா" என்றபடி வந்தார்கள். "இந்தா, எடுத்து வைக்கேன்" என்றபடியே எடுத்து வைத்தாள். கருப்பையா அண்ணனும் வந்துவிட்டிருந்தான். "நீங்களும் சாப்பிடுறீளா" என்று கேட்டுக்கொண்டே இரண்டு தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். பெரியம்மை சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் சாப்பிட்டானதும் குழந்தைகளுக்கு ஜமுக்காளம் விரித்துக்கொடுத்தார்கள். அத்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரியம்மை இவனைப் பரிவோடு விசாரித்தார்கள். "நல்லா படிக்கியா", கருப்பையா. அப்பா ரூவா அனுப்புதாஹளா. அக்காவ கவர்ன்மெண்ட் ஸ்கூல்லிலேயா சேத்துருக்கு. சேகர் எங்கே இருக்கான். அம்மா நல்லா இருக்காளாலே".

அண்ணன் கேலியாகக் கேட்டான்: "என்ன, "நவராத்திரி" எத்தனை தடவ பாத்தே. "வேட்டைக்காரன்" பார்த்தாச்சா."

அத்தான் காலையில் மகேந்திரபள்ளி பஸ்ஸில் வந்தார்கள். கூடவே ராவ்ஜியும் வந்திருந்தார். இரண்டு நாளும் வீட்டிலேயே இருந்து ஃபைல் பார்த்தார்கள். மிட்டே மீல்ஸ் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமாம். ராத்திரியெல்லாம் விழித்திருந்து என்னவோ குறித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாளும் அக்கா அற்புதமாய்ச் சமைத்திருந்தாள். பூசணிக்காய் கூட்டு, கருணைக்கிழங்கு மசியல், சிறுகிழங்குப் பொரியல், அவியல், பீர்க்கங்காய்க் கூட்டு, இஞ்சித் துவையல் எல்லாம் அத்தானுக்குத்தான். இவனுக்கும் கிடைத்தது.

எப்போதும் போலத் திங்கள்கிழமை காலையில் இவன் புறப்படுகையில், பெரியம்மை பின்வாசல் புறமிருந்து கூப்பிட்டு விட்டாள்: "எல கருப்பையா. என்னடா இது. இந்த மாதிரியால கொண்டான் கொடுத்தான் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கது. என்னல நினைப்பாங்க நம்மப்பத்தி. யாருக்குல கேவலம் இது. உங்க அம்மா எவ்வளவு வைராக்கியக்காரி. நீ இப்படி இருக்கியேலே. இனிமே இந்த மாதிரி சோறு திங்க வரக்கூடாதுல. அக்காவும் ஏற்கனவே சொல்லிருக்காளாம்லா. அவ என்கிட்ட வந்து சொல்லுதா. "நீ சொன்னாத்தான் கேட்பாங்"கா. அவளுக்கு கஷ்டம் கொடுக்கலாமா. புத்தியா பிழைச்சுக்கோ, அவ்வளவுதான் சொல்வேன்."

என்னவோ தெரியவில்லை. அப்புறம் அப்புறம் பிச்சம்மக்கா வீட்டுக்குப் போவதே அருகிப் போயிற்று. அம்மைக்கும் பெரியம்மைக்கும் கூட உறவு இற்று நைந்து போயிற்று. நெல்லையப்பர் கோயில் நந்தி மட்டும் அப்படியே நிமிர்ந்தபடி இருக்கிறது. கால கதியில் எவ்வளவோ விஷயங்கள் எப்படியெல்லாமோ மாறி விட்டன. நந்தியின் கம்பீரமும் அழகும் மட்டும் மாறவேயில்லை.

அதுதான் இவன்.

நன்றி: அவன் - அவள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link