சிறுகதைகள்


உறவு

கூடல்.காம்
கறாராகச் சொல்லி விட்டாள், காவேரி. "இதோ பார் கார்த்தி! கவிதாவை பல இடத்திலேருந்தும் வந்து பெண் பார்த்திட்டுப் போறாங்க. இந்த சமயத்துல நீ அவளோட பேசறதோ, பழகறதோ கூடாது. இனி அந்தப் பக்கம் வராதே."

கார்த்தி கலங்கினான். கவிதாவை உயிருக்குயிராய் நேசிக்கும் முறை மாப்பிள்ளையாயிற்றே!

"நான் ஏன் பேசக்கூடாது, பழகக் கூடாது. சொல்லுங்க."

"எம் பொண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகுது."

"அதெப்படி முடியும்? முறைப்பையன் நான் முழுமனசோட விரும்பறேன். நான்தான் கவி தாவை மணக்கப் போகிறேன்" என்றான் கார்த்தி.

"அதுக்கெல்லாம் உங்களுக்கு யோக்கியதை இல்லை."

"ஏன் இல்லை?"

"அதை உன் அம்மாவிடம் போய்க் கேள். அந்த அசிங்கத்தைச் சொல்லுவாள்..." காவேரி யிடம். வெறுப்பும், நெருப்பும் கலந்த மாதிரி அப்படியொரு வார்த்தை.

முகம் சிறுத்துப் போனான், கார்த்தி.

"போஸ்ட்!" என்று குரல் கேட்டது. வெளியே சென்று வாங்கி வந்தாள், காவேரி.

பிரித்துப் படித்தாள்...

"அன்புடையீர், வணக்கம். உங்களது மகள் கவிதாவை பெண் பார்த்து வந்தோம். ஆனால்... உங்கள் மகள் ஜாதகத்தை விட, வேறொரு பெண்ணின் ஜாதகம் சீரும் சிறப்பு மாக கிடைத்ததால்... அதையே பண்ணிக் கொள்ள முடிவு செய்து விட்டோம். உங்கள் பெண்ணுக்கும் அதுபோல் கிடைக்க நல்வாழ்த்துக்கள்."

-சுருக்கமாக எழுதியிருந்தது. காவேரியின் மனம் பொங்கியது. சீரும் சிறப்புமாக என்ற வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் கலந்திருந்த மாதிரி பட்டது.

கவிதாவின் திருமணத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்த பணத்தில்... பாத்திரங்கள், நகைகள் என்று அவ்வப்போது வாங்கிச் சேர்த்து விட்டாள்.

தனக்கு அது நிறைவாகத் தெரிந்தாலும்... பிறருக்கு அது சாதாரணம்தான் என்பதை அந்த பேதை மனம் உணரவில்லை.

பத்து பதினைந்து இடங்கள் - இதுவரை வந்து போய் விட்டது.

ஒரு இடமும் அமைந்த பாடில்லை. இவ்வளவு நாட்களும் இருந்த வருத்தத்தினைக் காட்டி லும், இப்போது அவளுடைய வருத்தம் மிகுந்திருந்தது.

உள்ளே வரும்பொழுதே அம்மாவின் முகத்தைப் பார்த்து விட்டாள், கவிதா. வழக்கம் போலவே கடிதம். வழக்கம் போலவே பதில்.

அம்மாவை நெருங்கினாள்.

"ஏம்மா இப்படி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்? அருகில் இருக்கும் மலையை விட தூரத்தில் இருக்கும் குன்றுதான் உனக்குப் பெரிதாகத் தெரிகிறதா? எனக் கேட்டாள்.

"என்னடி சொல்கிறாய்?"

"நம் குடும்பத்திலேயே மாப்பிள்ளை இருக்கும்பொழுது... நான் ஏன் வீணாகக் கவலைப் பட்டு, இல்லாத வரனுக்காக அலைய வேண்டும்?"

"நம் குடும்பத்திலா? யாரது?

"கார்த்தி! என் அத்தை பையன்."

"ச்சீ! நீயும் என் மகளா? உன் அத்தை எப்படிப்பட்டவள்! அவளது மகனை நான் மருமகனாக இந்தக் குடும்பத்தில் ஏற்பதா? அது ஒருக்காலும் நடக்காது!"

"ஏன் நடக்காது, நடக்கணும். நடக்கும். அவர்தான் எனக்கென்று நான் முடிவு செய்து விட்டேன். கார்த்தியுடன்தான் எனக்கு வாழ்க்கை" என்றாள் தீர்மானமாய் கவிதா.

"என்னடி சொன்னே? - என கையை ஓங்கினாள், காவேரி.

"நில்லுடி! என்ற குரல். கட்டிலில் படுத்திருந்த பாட்டி எழுந்து வந்தாள். காவேரியைப் பெற்ற அம்மாதான். கவிதாவின் பாட்டி. இதுவரை நடந்தயெல்லாம் பார்த்துக் கொண்டுதான் படுத்திருந்தாள்.

"தலைக்கு ஒசந்த புள்ளைய கைநீட்டி அடிக்கப் போறியே, உனக்கு புத்தியிருக்காடி?" என்று மகளை அதட்டினாள்.

"அம்மா! இதில் நீ தலையிடாதே. அவள் செய்கிற காரியத்துக்கு அவளைக் கொஞ்சவா முடியும்?"

"அவள் அப்படி என்ன செய்து விட்டாள்?. முறை மாமனை மணப்பேன் என்கிறாள், இதில் தவறென்ன?"

"என்னம்மா நீயும், புரியாமல் பேசுகிறாயே?. கார்த்தியின் அம்மா எப்படிப்பட்டவள்? அவள் மகனை..."

"சும்மா நிறுத்துடி! கார்த்தியின் அம்மா அப்படி என்ன செய்து விட்டாள்?."

"தன் வாழ்க்கையை தானே முடிவு செய்து கொண்டு... ஓடிப்போய் விட்டாள். இந்தக் குடும்பத்தால், விலக்கி வைக்கப்பட்டாள்..."

"போதும், போதும். அவள் ஓடிப்போனவள் என்பதால்... அவள் மகனை ஏற்க மறுக்கிறாயா?"

"ஆமா... ஆமா... ஆமா..." -காவேரியின் கோபக் குரலில் வெறி இருந்தது. பாட்டி ஒரு கணம் அமைதி காத்தாள்.

உள்ளே சென்று ஒரு துணிப் பையில் தன் புடவைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வெளியே செல்ல முயற்சித்தாள்.

"அம்மா! என்ன இது, எங்கே புறப்பட்டு விட்டாய்?"

நீதானே சொன்னாய்! ஓடிப்போனவள் எவளுடைய உறவும் வேண்டாமென்று!

"அம்மா...!?"

"உன் அப்பாவை நான் எப்படி மணந்து கொண்டேன் தெரியுமா? மனதார விரும்பியவரை... உன் அப்பாவை மணக்க ஒரு போராட்டமே நடத்தினேன். எவரும் சம்மதிக்கவில்லை. உன் அப்பாவுடன் ஓடிப்போய்தான் மணந்து கொண்டேன். ஓடிப்போன ஒரு அம்மா உனக்குத் தேவையா?"

-எனக்கேட்க, காவேரியின் நெஞ்சில் இடிமுழக்கம். வீடே தலை கீழாய் சுழல்வதுபோல் தோன்றியது. இதுவரையில் அவள் அறியாத ரகசியம் அது. பிரமித்து நின்றாள்.

"உன் அப்பாவை நான் மணந்து கொண்டு நான் நெருப்பாக இருக்க வில்லையா? ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்கிற உயரிய எண்ணம் கொண்ட உன்னைப் பெறவில்லையா?"

"........................................."

"சூழ்நிலைகள்தான் மனிதர்களை உறவுக் கைதிகளாய் மாற்றி விடுகிறது. விரும்புகிற வாழ்க்கையை கொடுக்க முடியாத கோழையாய் வாழ்வதில் நமக்கும், விரும்பாத வாழ்க்கையை மறைமுகமாய் வெறுத்து ஏற்க முடியாமல் வாழ்வதில் உன் பெண்ணுக்கும் என்ன லாபம்? வாழாமல் வாழும் ஒரு வாழ்க்கை தேவையா?"

-இதுவரை ஊமையாகவே கட்டிலோடு படுத்துக் கிடந்த பாட்டி... இப்படியொரு நெருப்பு மழை பொழிவாள் என காவிரியோ, கவிதாவோ எதிர்பார்க்கவில்லை.

பாட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விம்மினாள், மகள் காவேரி. பாட்டியை கட்டிக் கொண்டாள், கவிதா.

உறவு என்பது ஒரு சுரங்கத்தைப்போல... அதில் வெட்டி எடுக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட காவேரி...

"கார்த்தியை வரச்சொல்" என்றாள், மகள் கவிதாவிடம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link