சிறுகதைகள்


வாழையடிகள்

கூடல்.காம்
சித்திரை வடிவுக்கு ஒரே ஆச்சரியம்.

மேட்டுக்குமேல் தூக்கி வைத்தது போல் வீடு. புத்தம் புதுசு. இவ்வளவு பெரிய வீட்டுக்கு முன்னால் இப்படி ஒரு வெட்டவெளி இருக்கிறது. "பறக்கப் பார்த்துக்கிட்டு நிற்காமல், சட்டுன்னு கடைக்குப் போயிட்டு சட்டுன்னு வரணும். வந்தவுடனே கூப்பிடு அல்லது பெல் அடி", என்று சொன்ன கையோடு கதவைச் சாத்திக்கொண்டதே சித்திரை வடிவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பகலிலே எதற்கு இப்படிப் பொசுக்குப் பொசுக்கு என்று இந்த ஊரில் கதவைச் சாத்திக்கொள்கிறார்கள்.

லைட் போடுகிற ஸ்விட்ச் மாதிரி இருந்தது. மணி படம் எல்லாம் அதில் போடப்பட்டிருந்தது. ஆனால் எட்டி அமுக்குவதற்கு வளர்த்தி பத்தாது அவளுக்கு. ஊரில் கீழமடைப் பண்ணையார் வீட்டில் மாத்திரம் இப்படி ஒரு பெல் வைத்திருந்தார்கள். வழுவழுவென்ற இரண்டுதூண்களுக்கு பின்னால், வாசல் நிலைப் பக்கம் அது இருக்கும். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பத்துப் பதினைந்து பேராவது பண்ணையார் வீட்டுத் தோட்டத்துப் பக்கம் போகாமல் இருக்கமாட்டார்கள். புளியமரம் அப்படிக் காய்க்கும் அந்த வீட்டில். விழுந்ததைப் பொறுக்கினாலும் சரி, கல்லை எடுத்து வீசி அடித்தாலும் சரி யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

எப்போதும் அது பூட்டிக்கிடக்கிறது போலத்தான் இருக்கும். இத்தனைக்கும் வீட்டில் ஆள் இருந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆள் இருக்கிறார்களா இல்லையா என்று சோதிக்கிறது போல, தூண்பக்கமாக ஏறி நின்று, ஜன்னல் கம்பியை ஒற்றைக் கையில் பிடித்துத் தொத்திக் கொண்டு இந்த பெல்லை வெள்ளைய மாமா வீட்டுச் சீனிச்சாமிதான் அடிப்பான். அவனுக்குப் பயமே கிடையாது. சித்திரைவடிவு அவன் பைக்கட்டை வாங்கி வைத்துக்கொண்டு நிற்பாள். அமுக்கினவுடன் "கிர்ர்" என்று சத்தம் கேட்கும். ஓடுவதற்குத் தயார் மாதிரி ஒரு முகத்தை வைத்துக்கொண்டு, இன்னொரு முறை சீனிச்சாமி பெல்லை அமுக்குவான். சித்திரை வடிவுக்குப் பயமாக இருக்கும். "எவம்"லே அது?" என்று பண்ணையாருடைய அப்பா சத்தம் போடுவார். ஆனால் வெளியே வரமாட்டார்.

சீனிச்சாமி பொத்தென்று குரங்கு மாதிரி குதித்து இவளை விட்டுவிட்டு ஓடிவிடுவான். சித்திரை வடிவுதான் இரண்டு பைக்கட்டையும் தூக்கிக்கொண்டு வருவாள். சீனிச்சாமி இப்போது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. பரமன்குறிச்சி அய்யாவு மாமா வடக்கே பட்டணத்தில் விறகுக் கடை, பலசரக்குக் கடை எல்லாம் போட்டிருக்கிறார்களாம். அய்யாவு மாமா ஒரு தடவை சித்திரை மாதம் மாரியம்மான் கோவில் கொடைக்கு வந்த கையோடு, ஏழெட்டுப் பையன்களைத் தன்கூடக் கூட்டிக்கொண்டு போனார். சீனிச்சாமியும் அதில் ஒருத்தன். சீனிச்சாமி கொடுத்த வெட்டும்புலி தீப்பெட்டிப் படமும், ரெட்டைப்புறா, ஏர் உழவன் தீப்பெட்டிப் படமும் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. அவனை மாதிரியே அந்தத் தீப்பெட்டிப் படங்களும் காணாமல் போய்விட்டன.

சித்திரை வடிவுக்குச் சீனிச்சாமியைத் தேடியது. அவன் இருந்தால் இப்போது எவ்வளவு நன்றாக இருக்கும். இரும்புக் கதவை மூடிவிட்டுக் கீழே இறங்கினாள். பக்கத்து வெட்டவெளியில், சரிக்குச் சரியாக கருவை முளைத்துக் கிடந்தது. தும்பை மண்டிக் கிடந்தது. சித்திரை வடிவு, ஊரைவிட்டுப் புறப்பட்டு, இந்த வீட்டு அக்காவுடன் வேலைக்கு வந்த அன்றைக்கூட நல்ல மழைதான். மழையோடு மழையாகத்தான் ரயிலில் வந்து இறங்கினார்கள். வீட்டுக்குள் வந்ததும் அவள் முதலில் செய்த காரியம், மழைத் தண்ணீரை வாரியல் வைத்துப் பெருக்கி விட்டதுதான். கரண்ட் கூட இல்லை. இந்த வீட்டு அக்கா மெழுகு திரியைத்தான் பொருத்தி வைத்திருந்தார்கள். மெழுகுத்திரியை தேடிப்பிடித்து ஏற்றினவுடன் லைட் வந்தது. உடனே மெழுகுதிரியை அணைத்துவிட்டார்கள். மெழுகு திரி அணையவும் லைட் மறுபடி போகவும் சரியாக இருந்தது. இப்படி இருட்டோடு இருட்டாக ராத்திரி முழுவதும் இருந்ததால் சித்திரை வடிவுக்கு வித்தியாசம் தெரியவில்லை.

கிட்டத்தட்ட அவளுடைய ஊர், அவளுடைய வீடு மாதிரித்தான் இருட்டுக்குள் இருந்தது. விடிந்து பார்த்தால்தான் ஒவ்வொன்றும் தெரிகிறது. எவ்வளவு பெரிய காலிமனை. எவ்வளவு செடியும் கொடியும். கூட்டம் கூட்டமாகத் தட்டான் பறக்கிறது. ஐம்பது, நூறு தட்டானாவது இருக்கும். ஒன்று போல ஏரோப்ளேன் போகிறது மாதிரி, தரைக்கு நாலடி உயரத்தில் தணிவாகப் பறந்து கொண்டு இருந்தது. காக்காய் குறுக்கே குறுக்கே பறந்து, தட்டான் பூச்சியைக் கவ்விக்கொண்டு போயிற்று. நாலைந்து பையன்கள் "பாப்பாத்தி, பாப்பாத்தி" என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். யாரோ யாரையோ கூப்பிடுவதுபோலத் திருப்பித் திருப்பி அதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை. இரண்டு பேர் ஏற்கனவே வேலிக் கருவைச் செடிகள் வழியாகப் பம்மிப் பம்மிப் போய்க்கொண்டிருந்தார்கள். பதுங்கியிருக்கிற யாரையோ லபக் என்று பிடிக்கப்போவது மாதிரி இருந்தது. கள்ளன் போலீஸ் விளையாட்டை என்ன கருவக் காட்டுக்குள்ளெயா விளையாடுவார்கள். முள்ளுக் குத்தும். பாம்பு கிடந்து பிடுங்கினால் கூடத் தெரியாது.

சித்திரைவடிவு பார்த்துக்கொண்டு நிற்கிற நேரத்துக்குள், மாசி மகத்துக்குப் போன சமயம் திருச்செந்தூர் கடலில் அலைக்குத் தவ்வித் தவ்விக் குளித்தது மாதிரி, மூன்று நான்கு பேர் எருக்கலஞ் செடிக்குப் பக்கத்தில் என்னவோ செய்துகொண்டு இருந்தார்கள். இலை ஒடிந்து பால் வாசம் அடித்தது. ஒருத்தன் எருக்கலம் பூ மொட்டைப் பிய்த்துச் சொடக்கென்று நெற்றியில் உடைத்துக் கொண்டான். கரு நீலப்பூ, ஒரு தடவை அம்மா கண்ணில் எருக்கலம் பால் தெறித்து, கண்ணே அவிந்து போகப் பார்த்தது. நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை. அம்மா அதற்கப்புறம் சுள்ளி ஒடிக்கப் போகாமல் இல்லை. போகத்தான் செய்தாள். ஒரு காலத்தில் குலைகுலையாக நுங்கு சீவின அருவாள் கடைசியில் முள்ளுத் தறிக்கத்தான் பயன்பட்டது. தாத்தா பால்பாண்டி நாடார் விளையில் நின்ற பனை எல்லாம் விலையாகி செங்கல் சூளைக்குப் போயிற்று. தாத்தா ஞாபகமாக மிஞ்சின ஒன்றிரண்டில் இந்த அரிவாளும் சேர்த்தி. அதுக்காக அரிவாளைச் சாமிக்கு வைத்துக் கும்பிடமுடியுமா?

சித்திரை வடிவுக்கு அம்மாவுடன் உடங்காட்டுக்குச் சுள்ளி வெட்டப் போனது எல்லாம் ஞாபகம் வந்தது. தேரிக்காட்டில் குடைகுடையாக எவ்வளவு உடைமரம். குஞ்சம் குஞ்சமாகப் பூத்து எவ்வளவு வாசனை அடிக்கும். சில்லாட்டான் வாலை இழுத்துக்கொண்டு விசுக்விசுக்கென்று ஓடும். வெள்ளாட்டங் குட்டிகள் அந்த வேனா வெயிலில் கத்திக்கொண்டே அம்மா பின்னாடி அலைவது எவ்வளவு நன்றாக இருக்கும்.

அம்மா முள்ளுவெட்டப் போனதாக போலீஸ் கடைசிவரை நம்பவே இல்லை. கத்தாலை ஓடை தாண்டி சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த தவசிப் பாண்டியனுக்கும் கடற்கரைக்கும் ஒத்தாசையாக இருந்ததாகக் கேஸ் போட்டு உள்ளே வைத்துவிட்டார்கள். இத்தனைக்கும் தவசி ஏட்டையாவிடம் எவ்வளவோ சொல்லத்தான் செய்தான். "நம்ம காரியத்துக்கும் அந்தப் பிள்ளைக்கும் சம்பந்தமே இல்லை, அப்பிராணி அது" என்று சொன்னதை யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. நேரே எல்லோரையும் வேனில் ஏற்றி ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்விட்டார்கள். வாழைத் தோப்புக்குத் தண்ணீர் பார்வை பார்க்கப் போயிருந்த ராசையா மானம் தாங்காமல் மேலக் கிணற்றில் குதிச்சுச் செத்துப்போனான். "ஏ ராசய்யா....ராசாப்பா" என்று சித்திரைவடிவின் அப்பாவைப் பெற்ற பாட்டி, நெஞ்சிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதது பரிதாபமாக இருந்தது. எடுத்து வெளியே போட்டிருந்தபோது, வெளிறிப்போன கால்பாதத்தை அலம்பிக்கொண்டு, பம்ப் செட் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. வாழைத் தோப்புக்குள்ளிருந்து ஒரு பெரிய சாரைப் பாம்பு ஊர்ந்து மடையைத் தாண்டித் தன் போக்கில் போய்க்கொண்டிருந்தது. குப்புறக் கிடந்த சித்திரை வடிவின் அப்பா கைக்குள் மூட்டோடு பிடுங்கினது போல அரசங்கன்றும் இலையும் இருந்தது.

சித்திரை வடிவு அச்சடித்தது மாதிரி அந்தப் பையன்களையே பார்த்துக்கொண்டு நின்றாள். ஆரஞ்சுக் கலரில் கறுப்புப் புள்ளி போட்ட நாலைந்து வண்ணத்துப் பூச்சிகள், எருக்கல மூட்டுக்குள் இருந்து குபீரென்று பறந்தன. தட்டான் பிடிக்கிற காக்கைகளின் நிழல்கள் பெரிது பெரிதாகச் செடிகளில் இழுபட, அந்த வண்ணத்துப் பூச்சிகள் அப்படி ஒன்றுபோலப் பறந்து போனதைப் பார்க்க நன்றாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினத்துக்குக் கொடியேற்றும்போது ரோஜாப்பூ உதிர்ந்து பறப்பது இப்படித்தானிருக்கும். கொஞ்சநேரம் பறப்பது, கொஞ்சநேரம் என்னவோ தோணிணது மாதிரிச் செடியில் உட்கார்வது, பொத்திப் பொத்திச் சிறகை விரிப்பது, மறுபடியும் வந்த வேலை முடிந்தபோனது மாதிரி பறப்பது என்று அவை குறுக்கும் மறுக்கும் போய்க் கொண்டே இருந்தன.

"பாப்பாத்தி, பாப்பாத்தி" என்று மறுபடியும் பையன்களிடம் இருந்து குரல்கள் கேட்டன. முட்கம்பி வேலியின்மேல் பந்தல் போட்டதுமாதிரி ஒரு குட்டி வேப்பமரம் அடர்த்தியாக நின்றது. வேலிப் பருத்தியும் கோவைக் கொடியும் வேப்ப இலையே கண்ணுக்குத் தெரியாமல் முக்காடு போட்ட மாதிரிப் பின்னிக் கிடந்தது. செக்கச் செவேல் என்று மிளகாய்ப்பழம் போல கோவைப்பழங்கள், ஒருத்தன்மேல் ஒருத்தன் குனிந்து நிற்கச்சொல்லி ஏறிக்கொண்டு கோவைப்பழம் பறித்தார்கள். கொடி, வேப்பமரத்தோடு அப்பிக்கொண்டு இழுபட்டதில் கிளை கொஞ்சம்போல அசைந்தது. சித்திரை வடிவுக்கு எல்லாம் பிடித்திருந்தது. கிளை அப்படி அசைந்தது ரொம்பப் பிடித்திருந்தது.

"என்ன அப்படியே பார்த்துக்கிட்டு நின்னுட்டே?" சித்திரை வடிவு யார் தன்னிடம் பேசுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாள். "தாயி, நீதான் மேட்டு வீட்டுக்கு வந்திருக்கியா?"- மெலிந்த கைவிரல்களைக் கொண்டு தன் தலையை இப்படி நீவி விடுகிற அந்தத் தாத்தாவை அவளுக்கு உடனடியாகவே பிடித்துப்போயிற்று. ஒரு ஜாடைக்கு மிஸ்ஸியம்மா டீச்சர் வீட்டு அமலியுடைய தாத்தா மாதிரி இருந்தது அவரைப் பார்க்க. புருவம், நெஞ்சு முடி எல்லாம் நரைத்துக்கொட்டி, கண் இடுக்கு அப்படியே இருந்தது. சிரிப்புக்கூட அதே மாதிரித்தான். அமலியுடைய தாத்தா கொடுக்கிற பால்மாவு எவ்வளவு ருசியாக இருக்கும்.

அவர் சித்திரை வடிவுடன் இப்படிப் பேச்சு கொடுத்துக்கொண்டே நிற்கும்போது, இவளை மாதிரி வயதில் இன்னொரு பெண்பிள்ளை அவர் பக்கத்தில் வந்து நின்று, "தாத்தா, பாப்பாத்தி புடிச்சுட்டேன்" என்று கையை நீட்டியது. கை விரல்களுக்குள் ஆரஞ்சு நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி இருந்தது. சிறகுகள் பிடிபட்டிருக்க வினோதமான அசைவுகளுடன் அது காற்றை உதைத்துக் கொண்டிருந்தது.

"இதுதான் பாப்பாத்தியா?" - சித்திரை வடிவு அந்தத் தாத்தாவைப் பார்த்துக் கேட்டாள். "நீ என்னன்னு நினைச்சே?" என்று பதிலுக்கு அவர் கேட்டதும் சித்திரை வடிவுக்குச் சிரிப்பு வந்தது. ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள். என்னத்தைச் சொல்லமுடியும். இப்படிக் கேட்டால்.

"உங்க அம்மா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா. நீ இங்கே பாப்பாத்தி பிடிக்கிறதுக்கு அலையுதே. போயி என்னான்னு கேளு. போ!" என்று தாத்தா சொல்லும் பொழுதே "ஏய்.... பாண்டியம்மா...... அங்கிட்டி என்னாடி பண்ணுத" என்று சத்தம் கேட்டது. "ஓடு. ஒடு. உங்கம்மைக்கு "கோவம் வந்திராம" என்று தாத்தா சொல்லவும் வண்ணத்துப் பூச்சியைப் பிடித்திருந்த கையோடு பாண்டியம்மா, ஓடியது.

பாண்டியம்மாவுடைய அம்மா, டாக்டர் வீட்டு வேப்பமரத்தடியில் தள்ளு வண்டிய நிறுத்தித் துணிக்குப் பெட்டி போட்டுக் கொண்டு இருந்தாள். குனிந்து குனிந்து துணியை அவள் அழுத்தித் தேய்க்கும்போது அந்த வண்டியும், லேசாக அசைந்தது. பாண்டியம்மா கையில் பூச்சியோடு "யம்மா, பாப்பாத்தி" என்று சிரித்தாள்.

"ஆமா, அதுதானே உனக்குச் சோறு போடப்போறது. போயி, தேய்ச்ச உருப்படியை எல்லாம் ஒர்க்ஷாப்காரங்க வீட்டில் கொடுத்துட்டு ஆறு ரூபா எம்பது பைசா வாங்கிட்டு வா. வரும்போது அப்படியே செட்டியார் வீட்டில், ஒரு செம்பு தண்ணி குடிக்கிறதுக்கு வாங்கிக்க. அதுக்கடுத்த வீட்டில், எப்ப வந்து துணி வாங்கிக்கட்டும்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு வா. வெயில்ல நின்னுகிட்டு இருக்காத. ஏழு ரெண்டும் ஒம்பது உருப்படி எண்ணி எடுத்திக்கிட்டு போ.

பாண்டியம்மா வண்ணத்துப் பூச்சியை விடுவதற்கு மனசில்லாமல் விட்டது. இரண்டு கைகளையும் மடக்கி, கைப்பிள்ளையை ஏந்தி வாங்கப்போவது போல நின்றது. ஒரு தடவைக்கு இரண்டுதடவை எண்ணி, துணிமணியை அம்மா வைத்ததும், பாண்டியம்மா அம்மாவைப் பார்த்துச் சிரித்தது.

"என்ன கிறுக்கு மாதிரிச் சிரிக்கே?"

"உன் தலையில வேப்பிலை உதிர்ந்து கிடக்கு"

"அதுக்கென்ன இளிப்பு. பல்லைப் பல்லைக் காட்டாதே போ" என்று சொல்லியபடியே தலையை ஒதுக்கிக்கொண்டாள்.

"தாத்தாவை வரச்சொல்லு. வந்து நிணல்லே உட்காரச் சொல்லு. வயசாக வயசாக பச்சைப்பிள்ளை தேவலைண்ணு ஆயிட்டது" - ஒரு கை தண்ணீரை உதறி, அடுத்த உருப்படியில் லேசாகத் தெளித்து, நிமிர்த்தி வைத்திருந்த இஸ்திரிப் பெட்டியை இழுத்தபடி சொன்னாள். பெட்டி செக்கு மாதிரிக் கனத்தது. ஒரு இழுப்பில் துணியில் சுருக்கு நிமிர்ந்தது.

பாண்டியம்மா போய்ச் சொல்வதற்குள்ளேயே, மடியில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு, கட்டுப்போட்டிருந்த வலது காலை ஒருமாதிரிச் சாய்த்துச் சாய்த்து, தாத்தா நடக்க ஆரம்பித்திருந்தார். சித்திரை வடிவும் கூடவே வந்து கொண்டிருந்தாள். கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, சாய்த்து நடக்கும்போது அமலியின் தாத்தா மாதிரி இல்லை. வேறுமாதிரி இருந்தது.

"இதுதான் பாண்டியம்மாவோட அம்மா. எனக்கு மருமக! என்று சித்திரை வடிவிடமும், "மேட்டு வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்கு ஊரிலே இருந்து" என்று சித்திரை வடிவு பற்றியும் சொல்லும்போது ஒருத்தரை ஒருத்தர் இரண்டுபேரும் பார்த்துக் கொண்டார்கள். தேய்க்கிறதை நிறுத்தாமலேயே, "எந்த ஊரு" என்று கேட்டதற்குச் சித்திரை வடிவு ஒன்றும் சொல்லவில்லை.

"தெற்கே" - என்று சொன்னபடி இவள் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்டவர், "அது என்ன பட்டுச்சேலையா, கொண்டா, நான் தேய்ச்சுத்தரேன். நீ தள்ளிக்கோ" என்று மருமகளிடம் சொன்னார். பட்டுச்சேலையை விரித்து முழுதாக ஒரு உதறு உதறினவர், சித்திரை வடிவைப் பார்த்து, நீ கடைச்சாமான் வாங்கீட்டு வீட்டுக்குப் போ. முதல் நாளே ஏச்சு வாங்காதே. வந்து ரொம்ப நேரமாச்சு" என்று சொன்னார். கொஞ்சம் கண்டிப்பாக அதட்டிச் சொன்னது மாதிரி இருந்தது. வேலையைக் கையில் எடுத்ததும் தாத்தா மாறிப் போய்விட்டார். "நிண்ணுக்கிட்டே இருக்காதே. போ" என்று மறுபடி சொல்லிவிட்டு, இஸ்திரிப் பெட்டியை எடுத்து இரண்டு மூன்று குலுக்கி குலுக்கி ஊதினார். சாம்பல் பறந்தது. மறுபடியும் ஊதினார். கங்கு சிவந்ததும் குனிந்து தேய்க்க ஆரம்பித்தார்.

பாண்டியம்மாவுடைய அம்மா, சேலையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டே உட்கார்ந்தாள்.

சித்திரை வடிவு சாமான் வாங்கி விட்டுத் திரும்பி வரும்போதும் அப்படியே உட்கார்ந்திருந்தாள். தாத்தா இன்னும் குனிந்து அந்தப் பட்டுச்சேலையைத் தேய்த்துக் கொண்டிருந்தார். போட்டிருந்த கைவைத்த பனியன் முதுகுப்பக்கம் ஓட்டை ஓட்டையாக இருந்தது.

பாண்டியம்மா, நெஞ்சிலிருந்து முகம் வரைக்கும் மறைக்கும்படி, பந்து பந்தாகத் துணியை ஏந்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. வரும்போதே அங்கிருந்த சித்திரை வடிவைப் பார்த்துச் சிரித்தது. தாத்தா இவளைப் பார்க்கவே இல்லை. தாத்தா காதுப் பக்கத்திலிருந்து வியர்வை வடிந்து கழுத்து நரம்புப் பக்கம் கசிந்து கொண்டிருந்தது. சித்திரை வடிவு சாமான் வாங்கிய பையை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டாள்.

"இதோ பார்த்தியா" பாண்டியம்மா இவளை மறிக்கிற மாதிரி நின்றது. தேய்ப்பதற்கு வாங்கி வந்த துணிகளுக்கு மேல், இரண்டு மூன்று வாழைப்பூ மடல் இருந்தது. அரக்குச் சிவப்பில், பெரிது பெரிதாக இரண்டு மடலும், சிறியதாக மஞ்சக் கலரில் குருத்து மடலாக ஒன்றும் இருந்தது. யாரோ வாழைப் பூவை அப்போதுதான் உரித்து எறிந்திருக்க வேண்டும். பார்க்குறதுக்கே குளிர்ச்சியாகப் பளபளவென்று கொஞ்சம் சாம்பல் பூத்து இருந்தது.

"மோந்து பாரு. நல்லா இருக்கும்" - பாண்டியம்மா சொன்னாள். சித்திரை வடிவுக்கு என்னவோ செய்தது. கையிலிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு. பதினி குடிக்க மட்டையைப் பிடிக்கிறது மாதிரி, ஒரு வாழைப்பூ மடலை இரண்டு கைகளிலும் எடுத்தாள். எடுத்து அப்படியே மூக்குப்பக்கம் கொண்டுபோய், மூச்சை இழுத்தாள். ஊர் ஞாபகம். ஆத்தூரிலிருந்து வாழைக்காய் லோடு அடிக்க வருகிற லாரிகள் ஞாபகம். வாழைத் தோப்பு ஞாபகம். பம்ப்ஷெட் கிணற்றுத் தண்ணீர் பாய, குப்புறக் கிடந்த அப்பா ஞாபகம் வந்தது.

சித்திரை வடிவு அந்த வாழை மடலில் அப்படியே தன்னுடைய முகத்தைப் புதைத்துக்கொண்டு கீழே உட்கார்ந்தாள். "யப்பா" என்று அழ ஆரம்பித்தாள்.

நன்றி: நடுகை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link