சிறுகதைகள்


களை

கூடல்.காம்
"பொடி ஏர்றதுக்குள்ள வெட்டிக் கடாசிட்டுப் போவம்னு இல்ல. இப்பத்தான் சிலுத்துகிட்டு வர்ற சேவல்ங்ககிட்ட சிணுங்கிக்கிட்டு நிக்கிற பொட்டைங்க மாதிரி அசையுறாளுங்க."

"ஆமா நீ ஒண்ணு........களகட்டப் போட்டா வாங்கி வாங்கிக் கொடுத்தாத்தான பூமி. அதான் பாறாங்கல்லு மாதிரி தூக்கித் தூக்கிப் போடுத."

"மழையப் பாத்து நாளாச்சின்னாலே இந்த மசுருதான். கெழவங்கிட்டப் படுக்குற குமரு கணக்கா பூமி முரண்டு புடிக்கறது"

"ச்சே.....இதுக்குத்தான் இந்த அத்த வேலைக்குப் போற எடத்துக்கு வயசுப் பொண்ணுங்கள இட்டுட்டு வறக்கூடாதுங்கறது."

"ஆமா.....எல்லாம் வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாத பப்பாளுங்க. ஒங்கக் கத எனக்குத் தெரியாதாக்கும். ஆளா வறதுக்கு முன்னாடி ஆறு மாப்பிளைங்க. ஆளானதுக்குப் பின்னால நூறு மாப்பிள்ளைங்கன்னு அலையுற நாடு மாறிங்க."

பேச்சு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இனி களைக் கொட்டு வேகப்படும். பேச்சுக்கு வேலை. வேலைக்குப் பேச்சு. இது இல்லாமல் அது இல்லை. அது இல்லாமல் இது இல்லை.

அதுவும் இந்தப் பூவா கிழவி இருந்து விட்டால் போதும். காயவைத்துத் தொம்பையில் கொட்டும் விதை மணிலா கணக்காக கலகலவென்று பேச்சும் இருக்கும். பேச்சுக்கு மிஞ்சிய வேலையும் இருக்கும்.

மெனை மெனையாய் வெட்டும்போது கூட அவள் மெனை பிந்திப் பார்த்தவர்கள் கிடையாது. அவ்வளவு கண்ணுங் கருத்துமாய்ப் பாடுபடுவாள். அது தன் வேலையாக இருந்தாலும் சரி.... பிறத்தியார் வேலையார் இருந்தாலும் சரி.

எந்த வேலைக்கு எவர் ஆள் கூப்பிடப் போனாலும் முதலில் பூவா கிழவியின் வாசலில் போய்தான் கால்கள் நிற்கும். அப்படியொரு தொழில் நேர்த்தி அவளுக்கு. களை வெட்ட.. கம்பு அறுக்க....களை புடுங்க....மட்டும்தான் என்று இல்லை. இரண்டு மூன்று முக்கியமான நோய்களுக்கும் அவளிடத்தில் போய்விட்டால் போதும்.

தோட்டத்துப் பக்கம் போய் திரும்பி வரும்போது கையில் வைத்து அறக்கிக் கொழகொழவென்று அடையாளம் தெரியாத பச்சிலை வரும். தயிரில் பச்சிலைச்சாறு பிழியப்பட்டதும் ஒரு மடங்கு விழுங்கிவிட்டால் போதும். நோய் நீங்கி விட்டதாகப் பொருள்.

மருத்துவர்களாலேயே கை விரிக்கப்பட்ட.... நாள் கடந்த கர்ப்பங்கள்; ஆண் பெண் என்கிற வேறுபாடு தெரிகிற அளவிற்கு முற்றிவிட்ட குழந்தைகளைக்கூட வெடிக்காத வெள்ளரிப் பழங்களாய் வெளியேற்றி விடுகிற திறமையும் இந்த ஊரில் பூவா கிழவிக்கு மட்டுமே கைவந்த கலை.

"நேத்திக்கு எப்பிடி வந்து எப்பிடி வெட்டிச்சிக. இன்னிக்கு எம்மாஞ் சுழலு சுழல வேண்டியிருக்குப் பாரு."

"மென புடிக்கும்போதே அடைச்சிப்புடுச்சி வெட்டிட்டு வந்தீங்கன்னா அலுப்புத் தெரியாது. முன்ன பின்ன வந்தா இப்பிடித்தான் ஆவும். போடுங்க போடுங்க."

பூவா கிழவி நிமிர்ந்து பார்த்தாள். எல்லாத் திக்குகளிலும் தீப்பிடித்து மண் எரிந்து கொண்டிருந்தது. மந்தை மந்தையாய் வெறிபிடித்த நாய்கள் மூச்சிரைக்க ஒடுவதாய்த் தூரங்களில் கானல்கள்.

"நடுமணல்" பக்கம் சுழற்காற்று கூளங்குப்பைகளை வாரிச் சுழற்றிக் கொண்டே போய் வீரனார் கோயிலுக்கருகில் உயரமாய்க் கோபுரங்கட்டி.....சிதைத்துப் போட்டது.

விருத்தாசலம் சந்தைக்குப் போய்விட்டுத் திரும்பும் இரண்டு மூன்று தொழூர்சனங்கள் தலையிலும் இடுப்பிலும் மூட்டை முடிச்சுகளோடு பொடிக்குப் பயந்து குறுக்குப் பாதையில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

"அவுசாரிக்குப் பொறந்த சூரியன் இப்படி மனுசாளப் போட்டு வறுத்தெடுக்குறான" என்று முனகிக் கொண்டே முந்தானையை எடுத்து கழுத்து கை எல்லாம் துடைத்து விட்டுத் தலையில் முக்காடாகப் போட்டுக் கொண்டு குனிந்தாள்.

எள்ளுச் செடிகள் எண்ணெய் நெய்ப்போடு தளதளவென சிரித்துக் கொண்டிருந்தன. பூவா கிழவியின் தளர்ந்த மார்புகள் தாகப்பட்ட செடிகளுக்குப் பால் கொடுக்க ஆசைப்பட்டவைபோல அவள் களையெடுக்க எடுக்க.... தளிர் நுனிகளை உரசின. சில பெண்கள் வியர்வைக் கசகசப்பில் தொடைகளில் சேலை சிக்குகிறதென்று முட்டிக்கு மேல்வரை வழித்துவிட்டுக் கொண்டார்கள். மேலாடை போட்ட குமருகளுக்குப் பாவம்....முதுகு நனைஞ்சு நெஞ்சு நனைஞ்சு....

களை வெட்டுகிற வேகத்திலேயே மடி கனக்க கீரையும் பறித்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருடைய தலையிலும் முந்தானைகள் கூரை போட்டிருந்தன.

இவர்களை மேய்க்க வந்த கொல்லைக்காரரின் மருமகள் வெய்யிலுக்குப் பயந்துபோய் தூரத்துக் கருவமர நிழலில் அமர்ந்துகொண்டு அவ்வப்போது சில அதட்டல்களை அனுப்பிக் கொண்டிருந்தாள்.

வரப்பு நெடுக உயர உயரமாய் வளர்ந்திருந்த காசரைச் செடியில் சின்னச் சின்ன ஒலிப்பெருக்கிகள் வைத்துக் கட்டியதுபோல் பூக்கள் விரிந்திருந்தன. இவர்கள் பேச்சைச் சுவைக்கிற மாதிரி கருங்குருவி ஒன்று காசரைச் செடியில் வாலை ஆட்டிக்—‘கண்டு உட்கார்ந்திருந்தது. களைக் கொட்டு கொத்தக் கொத்த கோரைகளும் கம்மம் புல்லுகளும் தெறித்துத் தெறித்து விழுந்தன. சில களைகளைக் கையாலேயே பிடுங்கி எறிந்தாள் கிழவி.

"ச்சே எறும்புடி.....விரியம் புடுங்கற மாதிரி புடுங்குதுங்க."

"எப்பவும் கள வெட்டும்போது மட்டும் எறும்பு முட்டப் பாத்துட்டா களகொட்ட கொஞ்சம் தள்ளிப் போட்டுட்டு தான் போவணும். எறும்பு முட்டுல பட்டுச்சி....அவ்வளவு தான் பொத பொதன்னு கிளம்பிடுங்க........அப்புறம் அதுல கடிச்சிது "இதுல கடிச்சிதுன்னு புலம்பிப் பிரயோசனமில்ல."

"ச்சே இந்தக் கிழவிக்குக் கூச்ச நாச்சமே கெடையாது."

"ஆமா....உள்ளதச் சொல்லப்போனா நொள்ளக் கண்ணுக்கு நோப்பாளமாத்தான் இருக்கும்."

தூரத்தில் ஒலி கேட்டு அனைவரின் பார்வையும் திரும்பியது. சின்னப் பையன்கள் ஒரு நாய்க்குட்டியை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். அது ஒரு துணி முடிச்சைத் தூக்கிக் கொண்டு ஓடியது. அவர்கள் விடுவதாக இல்லை. நாய் ஆற்றுக்குள் இறங்க அவர்களும் இறங்கி மறைந்தார்கள்.

"அமாவாசையில பொறந்ததுங்க. நாய முடுக்கிட்டு ஓடுதுங்க. திரும்பி ரெண்டு புடுங்குப் புடுங்கிச்சின்னா தெரியும்."

ஆற்றுப் பள்ளத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாய்ப் பத்துப் பதினைந்து பேர் கரையேறி வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்....எந்த ஊர் என்பதறிய எல்லோருக்கும் ஆவலாக இருந்தது. அவர்களே வரப்போரமாக வந்து கேட்டார்கள்...

"கீணனூர் போக வழி எதுங்க?"

"எங்கேருந்து வர்றீங்க?"

"பவழங்குடியிலேருந்து."

"யாரு ஊட்டுக்கு?"

"கணக்குப்புள்ள இருக்காரே...அவுரு அண்ணன் வூட்டுக்கு."

"என்ன சேதியாம்?"

"பொண்ணு பாக்க."

"ஓ......."

"பொண்ணு எப்படிங்க"

"பொண்ணு தங்கம்.....உங்க ஊருக்கு அவ மருமவளா வர்றதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும். தா.... அந்தப் பெரிய வரப்பு மேலயே போயி...அந்தக் காளவா தெரியுது பாருங்க........... அதுக்குத் தெக்கால போனீங்கன்னா வாய்க்காங்கர..........அது மேலயே போனா ஊரு வந்துவிடும்" என்று கைநீட்டி வழி காட்டினாள் பூவா.

அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

"யாரு நம்ம ஊளமூக்கி மவளையா?"

"ம்."

"அதப் போயா பூவா?"

நாயை விரட்டிக்கொண்டு போன சிறுசுகள் மூச்சிரைக்க திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை மறித்தாள் ஒருத்தி.

"எதுக்குடா நாய விரட்டிகிட்டு ஓடுனீங்க?"

"நாயவா........ அந்த நாயி கலுங்குப் பள்ளத்திலேருந்து துணிமூட்ட ஒண்ண தூக்கிட்டு ஓடிச்சி. விரட்டுனோம். ஆத்துக்குள்ளப் போயி ஓடிமுடியாம போட்டுட்டு ஓடிடுச்சி. போயி பிரிச்சிப் பாத்தா ஆம்பளப் புள்ள ஆச்சி. மணல சீச்சிப் பொதைச்சுட்டு ஓடியாந்துட்டோம்."

"ஆம்பளைப் புள்ளையா? கலுங்குப் பள்ளத்திலேருந்தா?"

"சரி சரி ஓடுங்க....."

கானல் அலைகளில் ஒடுக்கு விழுந்து ஓடினார்கள் அவர்கள்.

"பூவா"

"ம்"

"யாருது அது?"

"எது?"

"நாய்த் தூக்கிக்கிட்டு ஓடுனத அது."

"எவளுதோ........எனக்கென்ன தெரியும்."

"ம்.....ஆளு தளுக்குத்தான். உனக்குத் தெரியாம இந்த ஊருல....?""

"அடியே.....அப்புறம் வாயில நல்லா வருது. பேசாம மெனையப் பாத்துக் களைய எடுப்பியா."

பூவாவின் களைக்கொட்டு களைகளை மட்டுமன்று....நெரிசலான இடங்களிலிருந்த சில எள்ளுச் செடிகளையும் தேடியது.

நன்றி:வெள்ளைத் தீ

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link