சிறுகதைகள்


பிரிவு

கூடல்.காம்
அப்பா வீட்டிலேயே இருந்தார்கள். அரண்மனைக்குப் போகவில்லை. ஒரு மாசமாகிறது வேலைக்குப் போய். வெளியே போவதே நின்றுபோயிற்று. குளிக்க வேண்டியது, சாப்பிட வேண்டியது, படுத்துத் தூங்குவது, இபபடித்தான் நாள்கள் கழிந்தன.

கல்கி, ஆனந்தவிகடன் படிப்பார்கள், விழித்திருக்கும் சமயங்களில் அப்பா இப்படி இருக்கிறவர்களே இல்லை. எப்பொழுதும் ஓட்டமும் சாட்டமுமாகத்தான் இருப்பார்கள். மடிப்புக் கலையாத பேண்ட்-ஷர்ட்தான். தினசரி ஷேவ்தான். திருநெல்வேலி, தென்காசி, மதுரை என்று தான் இருப்பர்கள். அல்லது ராஜவோடு இருந்துகொண்டிருப்பார்கள். அப்பா ஓய்ந்திருந்து பார்க்க முடியாது.

அம்மையிடம்கூடப் பேசுவது குறைந்துபோயிற்று. சாயங்காலம் வாக்கில் கிழக்கேயுள்ள டூரிங் டாக்கீஸ்க்குப் போய் இருந்துவிட்டு வருவார்கள். இவனையும் ரெண்டு மூணு தடவை கூடக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட்கிளாஸ் சோபாவில் விட்டிருப்பார்கள். இடைவேளையில் தியேட்டர் ஆள் முறுக்கு வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பான். பழைய படங்களாகத்தாம் போடுவார்கள். ஆனாலும் கூட்டம் இருக்கும். கண்ணகி, முல்லைவனம், சதாரம், ஆர்யமாலா, ஜெனோவா எல்லாம் இப்படிப் பார்த்தது தாம். அப்பா பெரும்பாலும் மானேஜர் பெரியப்பா ரூமில் இருந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பா பார்க்காத படம் அபூர்வமாகத்தான் இருக்கும். அப்படி சமயங்களில் கூடவந்து இருப்பார்கள்.

பொதுவாக அப்பா சீக்கிரமே தூங்குகிறது இல்லை. தியேட்டரிலிருந்து வரவே பத்து மணியாகிவிடும். அப்பா வீட்டுக்கு வருவதே இவனுக்குத் தெரியாது. தூங்கிவிட்டிருப்பான். இவனைக் கூட்டிக்கொண்டு போயிருந்தால் மட்டும்நேரத்துக்கு வருவார்கள். ரயில்வே ஸ்þடிஷன் பக்கம் இருக்கும் பெட்டிக்கடையில் பழம், கோல்ட்ஃப்ளேக் சிகரெட் வாங்கிக் கொள்வார்கள். சோடா குடித்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொள்வார்கள்.

எப்படியோ விஷயம் தெரிந்து திருநெல்வேலியிலிருந்து சங்கரன் மாமா வந்திருந்தான். மத்தியானம் போல வந்தவன் சாயங்காலம் வரைக்கும் இருந்தான். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, அக்காவும் இவனும் வீட்டில் இருந்தார்கள். "எப்படில இருக்க" என்று அக்காவை அன்போடு விசாரித்தான். "மருமகப்புள்ள எங்கூட வர்றியாடே, திநவேலிக்கு" என்று இவனிடம் கேட்டான்.

புறப்பட்டுப்போகும்போது கலங்கிய குரலில் அம்மையிடம் சொல்லிக்கொண்டான். "அத்தானை பத்திக் கவலைப்படாதே அக்கா. சரியாயிருவாக. சனியன் போய்த் தொலைஞ்சுதுல்ல, இனிமே என்ன. நல்லகாலம்தான்" என்றவன், அப்பாவைப் பார்த்து, "அரண்மனை வேலைய மட்டும் விட்டுராதீங்க, அத்தான். அக்காவும் பிள்ளையளும் பாவம். பாத்துக்கிடுங்க, வரட்டுமா" என்று சொல்லிவிட்டுப் போனான்.

இடையில் ஒருநாள் ராஜா வந்திருந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அம்பாசமுத்ரம் டாக்டரை அனுப்பி வைத்தார்கள். "என்னவும் வேணும்னா சொல்லியனுப்புங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. மெதுவா வரலாம் அரண்மனைக்கு., உடம்பப் பார்த்துகிடுங்க. மனசத் தளர விட்டுராதீங்க. நாங்கள்லாம் இருக்கோம் எது ஒண்ணுக்கும்" என்று அப்பவின் கையைப் பிடித்துச் சொல்லிவிட்டுப் போனார்கள். கூச்சத்தில் அப்பாவுக்குப் பேசத் தோன்றவில்லை. முறுவலித்தபடி இருந்துகொண்டார்கள்.

அம்மாதான் இடையிடையே கேட்டுக் கொண்டிருப்பாள்.

"அரண்மனைக்கு எப்ப போக."

"போணும் லட்சுமி" என்று மட்டும் சொல்வார்கள் அப்பா.

இராமலிங்கம்பிள்ளை பெரியப்பா ஒருநாள் காலையில் வந்திருந்தார்கள். ஒரு டஜன் சாத்துக்குடியைப் பையோடு அம்மாவிடம் கொடுத்துவிட்டு, "நீ தைரியமா இரும்மா. அழகுக்கு ஒண்ணுமில்ல. அவன் இன்னும் ஒரு வாரம், பத்து நாள்லேயே பழைய மாதிரி ஆயிருவான். அரண்மனைக்கும் போக ஆரம்பிச்சுருவான்" என்று ஆறுதல் சொன்னார்கள்.

"உனக்கு நல்ல காலம் வந்திருச்சுப்பா. அவ ஓடிப்போலேன்னா நீ விடுவியாக்கும். பிள்ளையள் வளந்திட்டு வருதுப்பா. எல்லாத்தையும் தொலைச்சுட்ட. வேலையக் காப்பாத்திக்கோ. ராஜாவ விட்டுராதடே. இதுவும் இல்லேன்னா ஒரு பய மதிக்க மாட்டான், பாத்துக்கோ. இனிமேயாவது புத்தியா பிழைக்கணும். அவ்வளவு தான் சொல்ல முடியும். வரட்டுமா. அடுத்த வாரம் புளியறை போகையில வந்து பாக்கறேன்" என்று புறப்பட்டுப் போனார்கள்.

அப்பா எப்பொழுதும்போல காலையில் எழுந்து குளித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இவனைக் கூப்பிட்டு, "அப்பா ஒரு லெட்டர் எழுதித் தர்றேன். அரண்மனைக்குப் போயி ராஜாவப் பாத்துக் கொடுத்திட்டு வந்திர்றியா" என்று கேட்டார்கள்.

"நா ஒத்தையில் எப்படிப் போவேன்" என்று தயக்கத்துடன் சொன்னான் இவன்.

கேட்டுக்கொண்டிருந்த அம்மை சொன்னாள்: போலாம். எப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்கிட. பொஸ்தகத்தைப் படிச்சிக்சிட்டே இருந்தா போதுமா. எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும்.

அப்பா இதைக் கேட்டு லேசாக சிரித்துக் கொண்டார்கள்.

இவனைத் திரும்பிப் பார்த்து, "ராஜாட்டதான் கொடுக்கணும். ராஜா வெளியே போயிருந்தா இருந்து பாத்துக் கொடுக்கணும். வேற யாரிட்டேயும் கொடுத்துட்டு வந்துரக்கூடாது, என்ன" என்று சொல்லிவிட்டுத் தட்டிலேயே கைகழுவிவிட்டு, லெட்டர் பேடை எடுத்து எழுத ஆரம்பித்தார்கள்.

அப்பா இப்படி வீட்டில் அடைந்து கிடப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மாவின் அமைதியும் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அக்கா மட்டும் என்றைக்கும்போல இருப்பதாகப் பட்டது.

அம்மாவின் முகம் கொஞ்சம் வீங்கியிருப்பது மாதிரி தெரிந்தது. அப்பா எப்பொழுதுமே அதிகம் பேசுகிறவள் இல்லை. அவளுடைய பேச்சு இன்னும் குறைந்துவிட்டது. ஆனால் காலையில் எழுந்து வாசல் தெளிகிக்றாள். கோலம் போடுகிறாள். சேகருக்கு நெஸ்டில் கரைத்துக் கொடுக்கிறாள். அக்காவுக்கும் இவனுக்கும் எந்க சலனமுமில்லாமல் பால் காய்ச்சிக் கெண்டு வருகிறாள், அப்பாவை வேளா வேளைக்கு எழுப்பிச் சாப்பிடச் சொல்கிறாள். அந்தியானதும் விளக்கு பூஜை பண்ணுகிறாள். ஏதோ கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் பழைய தன்மை இல்லையென்று தெரிந்தது.

அப்பா சிகரெட் பிடிப்பதையே மறந்துவிட்டதுபோல இருந்தார்கள். எண்ணித்தான் பேசுகிறார்கள். வீட்டில் என்ன நடக்கிறது என்று இவனுக்குப் புரியவில்லை. அம்மா வாய்க்காலுக்குப் போவதையே விட்டுவிட்டாள்.

வாடகை கேட்டு வந்தபோது, "ரெண்டு நாள்ல கொடுத்துர்றோம்" என்று சொல்லியனுப்பினாள். மளிகைக் கடையிலருந்து ஆளூ வந்து வழக்கம்போல மூடையை இறக்கிவைத்த போது அப்பாதான் சொன்னார்கள்: அடுத்த வார வாக்கில கடைக்கு வர்றேன்னு முதலாளிட்ட சொல்லுய்யா". கல்லிடைக்குறிச்சி ஊருக்கு வந்த இந்த இரண்டு வருஷத்தில் இதுபோல ஆனதில்லை. எல்லாமே தம்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. இப்பொழுதுதான் இப்படி.

பஸ்ஸில்தான் போகச் சொன்னார்கள் அப்பா. இவன்தான் நடந்தே போய்விடலாம் என்றது. பாபவிநாசம் - மணிமுத்தாறு பஸ் அடிக்கடி கிடையாது. மணிக்கு ஒன்று விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சி - மணிமுத்தாறு பஸ் இரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இரண்டுமே பயோனியர் பஸ்தான். அதில் போனாலும் விலக்கில் இறங்கி நடந்துபோக வேண்டும். அதைவிட ஒரேயடியாக நடந்துவிடலாம்.

வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் போய் வலதுபுறம் திரும்பினால் ஒரு சாலை. அதில் சிறிது தொலைவு சென்று தெற்குமுகமாய்ப் பிரியும் ரோட்டில் நடந்தால் லெவல்கிராஸிங். அதைக் கடந்து போய்க் கொண்டிருந்தால் ஒரு ஆலமரம். இன்னும் சற்று தூரத்தில் ஒரு குளம் வரும். அதுதான் அயன் சிங்கம்பட்டி வந்துவிட்டதற்கு அடையாளம். அங்கேயிருந்து அப்படியே போனால் ஜமீன் சிங்கம்பட்டி வந்துவிடும்.

ஊருக்கு மேற்குப்புறமாய் அரண்மனை. பெரிய முகப்பு. பெரிய பெரிய தூண்கள். நீளநீளமான படிகள். மேலேறி முகப்பைக் கடந்ததும் நீண்ட ஹால். ஹாலின் நடுவே கண்ணாடிப் பேழைக்குள் பாடம் செய்யப்பட்ட புலி. எதிரே நெடுஞ்சுவரின்மேலே குறுக்குவசத்தில் மாட்டப்பட்டிருக்கும் வாள்கள்.

கொஞ்சம் உள்ளே போனதும் வரும் தோட்டம். மத்தியில் ஒரு பெரிய கட்டடம். உள்வாசலையொட்டி தர்பார் மண்டபத்தில் நடுநாயகமாக சிம்மாசனம். வலதுபுறமும் இடதுபுறமும் வரிசையாக மரநாற்காலிகள். சிம்மாசனத்துக்கு எதிரே பெரிய மேஜை. மேஜைமீது பேட், பைலட் பேனா, கண்ணாடித் தம்ளரில் தண்ணீர்.

எதிரே வந்த டவாலி அணிந்த ஒருவர், "யாரைப் பாக்ககணும்" என்று விசாரித்தார். இவன், "ராஜாவைப் பாக்கணும்" என்றதும், "என்ன விஷயம்" என்று கேட்டார்.

"நான் அழகுசுந்தரம்பிள்ளை மகன். அப்பா, ராஜாவுக்கு லெட்டர் கொடுத்து அனுப்பிச்சிருக்காங்க," என்றதும், கொஞ்சம் தள்ளி ஓரமாய்க் கிடந்த நாற்காலியைக் காட்டி, "இப்படி உட்காருங்க ஐயா. இன்னும் கொஞ்ச நேரத்தில ராஜா வந்துருவாங்க, பாக்கலாம்" என்று பவ்யமாகச் சொன்னவர், "ஓவல் சாப்பிடுறீங்களா" என்று கேட்டுவிட்டு வலதுபுறமாக உள்ளே போனார்.

ஒரே இடத்தில் இருந்து கொண்டிருப்பது சலிப்பாக இருந்தது. இவனிடம் கொடுத்திவிட்டுப் போன அம்புலிமாமா, கலைமகள், மஞ்சரி, ஆனந்தவிகடன், கல்கி எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட்டான். எழுந்து நின்று சோம்பல் முறித்தான். கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வரலாம் போல இருந்தது. தூண்களில் மாட்டியிருந்த போட்டோக்கள் கண்ணில் பட்டன. ஒரு போட்டோவில் சுடப்பட்டுக் கீழே விழுந்து கிடந்த யானையின் மேல் துப்பாக்கியை ஊன்றியபடி தோரணையாய் ஜமீன்தார் நின்றிருக்க, சுற்றிச்சூழ நாலைந்து பேர். இன்னொரு போட்டோவில் தர்பார் உடையுடன் மகாராஜா. வேறொரு போட்டோ ராஜா பட்டமேற்றது. ராஜாவின் சின்ன வயசு போட்டோ. வேக்ஸால் காரில் சாய்ந்து நிற்கும் மகாராஜா. வெவ்வேறு கார்களின் படங்கள்.

அப்படியே தோட்டத்தைச் சுற்றி வந்தான். பெரிய பெரிய மா, மாதுளம், கொய்யா, அருநெல்லி மரங்கள். தொட்டிச் செடிகள். குரோட்டன்ஸ். நிழலும் குளுமையுமாய் இருந்தது.

"ஐயா" என்ற குரல்கேட்டுத் திரும்பிப் பார்த்தான். "மகாராஜா கூட்டிட்டு வரச்சொன்னாங்க" என்ற டவாலி சேவகருடன் கூடவே போனான்.

இனமையும் அழகும் நிரம்பிய ராஜா அவர்கள் சிரித்தமுகத்துடன் வரவேற்றார்கள். இவன் கைகுவித்து, "வணக்கம் மகாராஜா" என்று கும்பிட்டான்.

"வாய்யா, அப்பா எப்படி இருக்காங்க" என்றார்கள் ராஜா.

"நல்லா இருக்காங்க" என்றவன் சட்டைப் பையிலிருந்து லெட்டரை எடுத்துக் கொடுத்தான்.

படித்துவிட்டு, "அப்பாட்டே சொல்லுய்யா. இரண்டு நாள்ல வந்து பாக்கிறேன்" என்றவர்கள், வலதுபுறம் நின்றிருந்ந டவாலி சேவகரைப் பார்த்து, "ஆறுமுகத்தேவரே, நம்ம அழகு அண்ணன் மகன். வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு வாங்க. ஒரு கவர் தர்றேன், கொடுத்திருங்க. சாப்பாடு பண்ணிக் கூட்டிட்டு போங்க" என்றார்கள்.

"உத்தரவு மகாராஜா" என்று வாய்பொத்தியபடியே அவர் பின்னோக்கி நகர்ந்து இவனை அழைத்துக் கொண்டுபோனார்.

ஆறுமுகத்தேவர் கவரை அப்பாவிடம் கொடுத்துவிட்டு, "நல்லா இருக்கீங்களாய்யா" என்று விசாரித்தார்.

"பரவால்ல தேவரே. பையங்க எப்படி இருக்காங்க" என்று கேட்டுவிட்டு, தலையணைக்கு அடியிலிருந்து பத்து ரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்தார்க்ள். அவர் போனபிறகு சாவதானமாக கவரைப் பிரித்துப் பார்த்து சட்டைப்பையில் வைத்து கொண்டார்கள்.

பணத்தை அம்மாவிடம் கொடுத்து, "லட்சுமி, வாடகை, பால் பாக்கி எல்லாம் கொடுத்துரும்மா" என்றார்கள்.

அப்பா சலூனுக்குப் போய் முடிவெட்டிக்கொண்டு வந்தார்கள். கொஞ்சம் மெலிந்திருப்பதுபோலத் தெரிந்தது. சற்று சோர்வாக இருப்பது மாதிரியும் பட்டது.

அங்கணத்துக்குப் பக்கமிருந்த சிமெண்ட் தொட்டித் தண்ணீரில் குளித்துவிட்டு வந்தார்கள்.

அம்மாவைப்பார்த்து, "லட்சுமி, திருநவேலி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்" என்றபடியே டிரங்க் பெட்டியில் இருந்து பேண்ட்-ஷர்ட் எடுத்துப் போட்டுக் கொண்டார்கள்.

"சோறு எடுத்து வைக்கட்டுமா" என்று அம்மை கேட்டதற்கு, "பசியில்லம்மா" என்று சொல்லிவிட்டார்கள்.

லெதர் பேக்கில் நாலைந்து பேண்ட், ஷர்ட், பனியன், கர்சீப் செட் எல்லாம் எடுத்து வைத்தார்கள்.

இவ்வளவுக்குப் பின்னும் அப்பாவின் அழகு, சுறுசுறுப்பு, வேகம் எதுவும் மாறிவிடவில்லை.

அம்மா ஒன்றுமே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வரட்டுமா" என்றபடி கிளம்பியவர்கள், "சிவா ஸ்கூல்ல இருந்து வந்ததும் சொல்லு. நான் வந்துருவேன்" என்று புறப்பட்டுப் போனார்கள்.

அன்றைக்குப் போனதுதான்.

நன்றி: அவன் அவள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link