சிறுகதைகள்


நீந்தும் பாறைகள்

கூடல்.காம்
விண்மீன் திறந்து போ. மிதக்கும் சிறகுகளில் தேடிப் படு. பற. மின்மினிப்பூச்சிகளின் பெருமூச்சில் மிரளாதே. குயிலின் முன் ஒலிகளில் தெளி அன்பை. மற. காற்றுக் கும்பலின் நடுவே சுடராய்ச் சிரி. சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே நட்பு. காதல். எல்லாம். அவரவர் மனசுக்குள் அவரவர் வானம். விரும்பி நுழைகையில் எவ்விதமோ அவ்விதமே விரும்பி நீ வெளியேறுகையிலும். விலக விரும்புகிறாய். கதவு திறத்தலே நாகரிகம். மூடிக் கொஞ்சுதல் முட்டாள்தனம்.

போ. இன்னும் தூரமாய். மிச்சத்தின் மிச்சமாய் இருந்து ஞாயிறுகளைச் சந்திப்பேன். புள்ளியும் தெறித்த வெறுமை தூரத்திற்கும் பிரிந்து செல்ல அனுமதித்து உன் திசை வானத்தோட பேசிக்கிடப்பேன். அடைமழைத் தனிமையில் ஒற்றை மின்மினியை உடல் நெடுக மேயவிட்டு. குகை திகைப்பைச் சமாளிப்பேன்......போ.

அடர்த்தி மிக்கது இருப்பை விடவும் வெற்றிடம். நிறுத்திச் செதுக்கப் பாறையன்று வாழ்க்கை. ஆறு. தொடர்ந்த ஓட்டத்திலும் நிழல் பார்க்க முடிந்த மகிழ்வைச் சேமித்தலே புத்திசாலித்தனம். விறைத்த உளியால் உச்சப் பெண் செதுக்கினாள். சொல், சுவைத்துச் சொல். சகித்து விழுங்குவேன். நீயாகித் தணிவேன்.

பெண்ணைக் கடக்க நீச்சல் தெரியணும். ஓடம் அல்ல ஆறு. ஆற்றுச் செழுமைக்குள் ஓடமும் அழகு. துடுப்பு வலிக்கையில் உன்னை அறி. பூத்து உதிரும் மீன் வெள்ளியில் வழுக்கி விழு. திமிர் விளையப் புரள். ஊறிக்கிடக்கும் உன் அன்பின் தேக்கத்தில் விந்து பாசியில்லை. நம்பு.

ஆயுசுக்குமான தேடல் அதிர்வு உன்னிடம் இருக்கலாம் எனக்கு. எதிர் அதிர்வும் அப்படியே அமையத்தான் விருப்பம். இல்லை. என்ன செய்வது? அதிர்வுக்கு உடன்பாடாய் வானவில் நொடியாவது வாழ்ந்திருக்கிறோமே என்கிற நிறைவில் வடிந்துவிட வேண்டியதுதான்.

கைக்குட்டையை முகர்ந்து.. குளியலறையில் எடுத்த கூந்தல் பிசிறுகள் வருடி.. இனிப்புத்தாளில் செய்த பொம்மை பார்த்து... கழிவறைக்குள் போய் மடல் படித்து.. ஒலிப்பதிவுப் பொறியில்குரல் கேட்டு.. தவறு. மாட்டேன். இழப்பின் மடுவில் மூழ்கிக் களைத்தல் அசிங்கம். முரண்களால் சேர்தலே மகிழ்வு. ஒன்றித்தலின் இழையில் அறுபடும் ஆத்மம்.

உனது உள் ஆவல்களைக் கொளுத்தி எனக்குப் பொங்கிப் போடுதல் தவறு. உனது மல்லாந்த நினைவிற்கு எது சுமையோ அது உண்மை.

அனுதாப அணைத்தலை இறுக்கம் காட்டித் தரும். விடு. என்ன நினைப்பேனோ என்கிற மனத்தயக்கங்களை அழி. அண்டவிடாதே.

யாரும் யாருக்காகவும் எழுதப்பட்ட நிரந்தரங்களல்ல. ஈருடல் ஓருயிர். அபத்தம். பொய். எனது எந்தச் சிறப்பைச் சொல்லியும் உன்னைக் கெஞ்ச மாட்டேன்.

எந்த வண்ணத்தாலும்.... எந்த இசையாலும்..... எந்தப் புன்னகையாலும்..... ஏன் கண்ணீராலும் உன்னை முயலமாட்டேன்.

சேமிப்பற்ற எதார்த்தமே மகிழ்ச்சி. நினைவும் பிணம்.

பிணம் சுமத்தலா வாழ்வு? மயானத்தீக்குள் நேற்றைக் கொளுத்தி நட. தாய்க்குக் கொள்ளி வைத்துவிட்டுப் போய் மனைவியுடன் புணர்ந்து சோகமழித்தல் இயல்யு.

மயானச் செயலே புணர்தலும். பிறப்பும். குற்றமில்லை. வாழ்வை வாழ்வின் நிறத்திலேயே வரையத் தனித்தெம்பு வேண்டும். இருக்கிறது. வீணாக்காதே.

அம்மணத்திற்கான அழகு ஆடை கட்டுவதில் இல்லை. அவிழ்ப்பதில். அறிவாய். தலைமுறைகளின் அடுக்குகளில் நசுங்கிப் பிதுங்கும் சந்தேகங்களின் இமைகளை வருடி மூடு. தயங்காதே. உனது பசிகளின் உள் அறைச் சோகங்களைத் தெரியும் எனக்கு. உனக்குள் எழுப்பப்படாத பெண்மை கோடி. கோடானு கோடி. துருப்பிடித்த ஆண்மை அதனினும் கோடி.

கூசாதே... குறுகாதே.... மனுசியாய் இருந்து தத்துவம் தேடுதலை விடவும் மிருகமாய் இருந்து வாழ்வை ருசி. முடிந்தவரை வாழ்வின் குரல் கேட்கும் தூரத்திற்காவது அண்மி.

உன் உடலின் மணம் மீட்க ஆன காலம் அறியும் என் அறிவு. கோயில் வாசல் எதிர்க்காற்றில்... ஆற்று வெள்ளத்தின் வேகத்தில்.... அருவித்தரையில் கால் நீட்டிப் படுத்துக் குளிக்கையில் மீளும் உன் விடுதலையான உடலின் மணத்தை மீட்டெடு முழுசாய். நீயாய் நிரம்பு.

சுயமாகித் தளும்பு. விழி. புடைக்கும் காதுகளில்.... தரை பிறாண்டும் நகங்களில்.... குத்திட்ட மீசைகளில்.. தெறிக்கும் விழிகளில்... விசிறியாய் விரியும் விலா எலும்புகளில் மோதிச்செறி.

மலைக்காடுகளின் இருட்செறிவில்.... இடையறாத மழையில்.... றெக்கை படபடக்கும் மின்னலில்.... திமிறிக் கிடக்கும் பாறையில் பிணைந்து கிடக்கும் உடல்களைப் பிய்க்காதே.

அறிவழிந்து உயிரிழைய ஒன்றித்துச் சிலிர்க்கும் கணங்களில் சாம்பல் தெளிக்காதே. புணரும் உடல்களில் தெறிக்கும் மழைகளில் இசை தேடி மகிழ். மழைப் பேச்சின் உன்னதங்களைக் கண்செருக உணர். ஒற்றை மரத்தில் இணைக் கிளிகள் இடம் மாறும் சிறுசிறு இடைவெளிகளில் படி.

தொட்டுத் தொட்டுப் பிரியும் வண்ணத்தப் பூச்சியின் ஓட்டங்களிடையே கிடக்கும் வெறுமையைப் படி. ஏதுவும் துரோகமில்லை. குளியலறைக் கண்ணாடியில் மார்புகள் பார்த்துச் சிந்திக்காதே. காயங்களில் தேங்கும் பிசினில் எறும்புகள் முகர அனுமதிக்காதே.

நாட்குறிப்பில் நடந்து குழம்பாதே. உலர்ந்த மழையில் வேர்நுனியில் நான். இறங்கி வராதே.

வெளி வாய்மை. அந்தி தும்பிகளின் எரியும் இறகுகளில் நெருப்புச் சேகரி. விரும்பிய விதமாய் குளிர்காயப் பழகு. பயந்து மீறாதே. வலியில்லை. சிரித்து ஏமாற்றவா? அழுது நிரப்பவா? மாட்டேன். நம் இடம்தோறும் கண்ணீர் தெளித்து நினைவுகள் துடைப்பேன். மழிதகடுகளால் முத்தங்களையும் மழிப்பேன். தற்செயல் விழிப்பில் தவிக்கும் மூச்சில் மரணம் போர்த்துவேன்.

கோடை ஆற்றின் மணல் விரட்டும் காற்றின் விரல் பிடித்து நடப்பேன். ஊமச்சிகளின் விசிலில் குரல்முகம் தெரிய நிற்பேன். காற்றைத் தொடர்வேன். பலவீனங்களின் காட்டிற்குள் சுள்ளி பொறுக்கப் போகிற எவனும் ஆணாக மாட்டான். எனது பலத்தால் உன்னை இழப்பேன். கைப்பிடி தவறுமோ என்கிற பயமுள்ளவனுக்குக் குழந்தையைத் தூக்கிப் போட துணிவேது?

எதற்கு?

உனது சுயம் கிள்ளிப் பார்த்தலா என் நேர்மை? உனது இருளுக்குள் ஒளி அடித்தலா என் ஆண்மை? உன் நிகழில் விடாய் தீரும் என் தேடல். உன் காற்றின் அழுக்குக் கழுவி வாழும் என் மூச்சு. போ.

குற்றமற்ற வாழ்வுவரை போ. பொய்களைக் கழற்றியெறி. உள் கிணறில் எட்டிப்பார். உண்மை முகம்... உண்மைப் புன்னகை... உண்மை அழகு... உண்மை.... உண்மை மயமாகிப் போ. இயல்பாய் இரு. தாய்ப்பால் தேடிய தவிப்பின் உண்மையில் பசியைச் சிறப்பு செய்.

கட்டளைகளை... இலக்கணங்களை.... அறிவுரைகளை வெட்கித் தலைகுனியும்படி.... காட்டு. குற்றமில்லை. காறித்துப்பு. அவிழ் அனைத்தையும். உயிர் உள் உடுத்திய அத்தனைக் கந்தல்களையும் அவிழ். எறி. அம்மணமாகி மூச்சிடு. உன் மூச்சின் மகிழ்வை உணர். மார்புகள் சிர்க்கச் சிரிக்க ஓடு. தோப்புகள் அதிரக் கூவு. நெய்மினுக்கும் தளிர்களில் ஊஞ்சலோடு. அலை அலையாய் இறங்கும் மழையும் பிரிவுதானே. காற்றும் நிற்கத் தெரியாத பிரிவின் தறித்துணிதானே. நனையவில்லையா? மூச்சிழுக்கவில்லையா?

போ. எனக்காகவே வேண்டுமென்று எவன் கேட்டாலும்... எவரைக் கேட்டாலும் அவன் கொலைகாரன்.

தின்பண்டமா? புத்தகமா? உப்புக் கண்டமா? உயிர்... உயிர்.... திமிர்பிடித்த உடலினி உள்ளிருக்கும் உயிர். உனக்காக நீ மூச்சிழு. உனக்காக நீ உண். உனக்காக நீ புணர். உனக்காக நீ வாழ். எனக்குள் இன்னும் திறக்கப்படாத அறைக்குள் அன்பாய்க் கசிந்து பெருகக் காத்திருக்கும் பெண்மையின் துணையோடு உன்னை இழக்கிறேன். முடிகிறதெனக்கு.

போ.

எனக்குள் தூங்கும் பெண்ணும் உனக்குள் தூங்கும் ஆணும் விழித்து வெளியேறி.... இயல்பாய்ச் சந்தித்து..... இயல்பாய் மழைப்பேச்சு கேட்கும் நாளில் நாம் மறுபடியும் பிறக்கலாம்.

போ.

நன்றி: வெள்ளைத் தீ

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link