சிறுகதைகள்


அழகு

கூடல்.காம்
எழும்பூரில் மணி பதினொன்றரைக்கு நான் இருக்க வேண்டும். பல்லவன் எக்ஸ்பிரசில் வரும் சுந்தரியை "கோச்"சிலேயே பார்த்து அழைத்துக் கொள்ள வேண்டும். அவள் ஊருக்குப் புதியவள், தனியாக வருகிறாள்.

தம்பிக்கு விடுமுறை கிடைக்காததால், அவன் மனைவியைத் தனியே அனுப்பி வைத் திருக்கிறான்.

திருவான்மியூர் பஸ் டெர்மினஸில் சீக்கிரம் புறப்படும் பஸ் என்று நினைத்து ஒரு பஸ்சில் ஏறி அமர்ந்தேன். நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, பஸ் புறப்படும் வழியைக் காணோம். அவசரத்துக்கு அப்படித்தான் ஆகுமோ?

நல்லவேளை அதோ கண்டக்டர் வந்து விட்டார், டிக்கெட்டுகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்... ஆனால் எங்கே டிரைவர்? என மனம் பரபரத்தது.

பயில்வான் மாதிரி கிருதா மீசையுடன் வரும் அந்த டிரைவர் தான் இந்த வண்டிக்கு வரு கிறவரோ? ஆமாம்! என் வண்டியில்தான் ஏறுகிறார்.

அவரைப் பார்க்கவே ஒருவித அருவருப்பு துளிர் விடுகிறது! எஞ்சினை ஒட்டிய இருக் கையில் நான் அமர்ந்திருந்தேன். ஏன் அங்கு உட்கார்ந்தோம் என்று கூடப்பட்டது.

போகட்டும், இப்போது பஸ் வேகமாகப் போனால் சரி. சிலர் பஸ் ஓட்டினால், மாட்டு வண் டியை ஓட்டுவதுபோல் ஓட்டுவார்கள். இந்தக் கிருதா என்ன செய்யப்போகிறதோ?

எடுத்த எடுப்பிலேயே பஸ் வேகமாகப் புறப்படுகிறதே, பரவாயில்லை! சந்தோஷப்பட்டு கொண்டேன். அட! இருபத்தைந்து நிமிடத்தில் பஸ் அண்ணா சாலைக்கு வந்து விட்டதே! அப்படியானால் இன்னும் பத்து நிமிடத்தில் எழும்பூரில் இருக்கலாம். ஆற அமர நடை மேடையில் அமர்ந்து வண்டிக்காகக் காத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

இப்போது சிக்னலுக்காகக் காத்திருந்தார் கிருதா. அது என்ன, எதிர்த்திசையிலிருந்து வந்த ஒரு பஸ் டிரைவர், கிருதா பக்கத்தில் வண்டியை நிறுத்தி ஏதோ சொல்கிறார்? அதைக் கேட்ட கிருதா, "ஏம்பா, நம்ம ரூட்டிலே ஏதோ தகராறாம்! பஸ்களைத் திருப்பி விடுறாங்களாம். வண்டி எக்மோர் ஸ்டேஷனுக்குப் போகாது" என்று குரல் கொடுத்து விட்டார்.

என் தவிப்பு மீண்டும் மேலேங்கியது. பஸ் சுற்றி வளைத்துப் போனால் எப்படிப் போகுமா, எங்கு நிற்குமோ? மெதுவே எழுந்தேன். தவிப்போடும், அரைகுறை மனதோடும் கிருதாவிடம் போனேன். என் நிலைமையைச் சொன்னேன். பதில் எப்படி இருக்குமோ என்று மனம் படபடைத்துக் கொண்டது.

கிருதா, நிமிர்ந்து என்னை ஒரு பார்வை பார்த்தார். பிறகு மீசையில் கை வைத்து, ஒரு நொடி யோசனை செய்தார்.

"பெரியவரே... ஒரு இடத்தில் நிறுத்துவேன். அது எக்மோர் ஸ்டேஷனுக்கு ரொம்பப் பக்கம். இறங்கிக்கோங்க! ஆனா அவசரப்பட்டு இறங்கிடாதீங்க! நான் சொன்ன அப்புறம் இறங்கலாம்!"

நான் எதிர்பார்க்கவே இல்லை! உன் சவுகரியத்திற்கெல்லாம் வண்டி கண்ட இடத்தில் நிற்காது என்று தான் பதில் வரும் என்று நினைத்த எனக்கு கிருதாவின் பதில் ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

சொன்னது போலவே எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தினார் டிரைவர். ஒரு முறைக்கு இருமுறை நன்றி தெரிவித்தபடியே இறங்கிச் சென்றேன்.

சுந்தரியைச் சந்தித்து ஒருவழியாக ஸ்டேஷனை விட்டு வெளியே அழைத்து வந்தேன். சுந் தரியிடம் பெரிய லக்கேஜ்கள் இல்லாததால் திருவான்மியூருக்கு பஸ்சிலேயே சென்று விட லாம் என்று நினைத்தேன்.

பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது ஆட்டோ ஒன்று வேகமாக வந்து எங்கள் மேல் மோதுவதுபோல நின்றது. எங்கள் பக்கத்தில் நின்ற ஒரு இளம் பெண் எங்களைச் சற்றுப் பின்னுக்கு தள்ளி இழுத்ததால் ஆட்டோ மோதவில்லை.

பாவம் சுந்தரி, சற்று அதிர்ந்து போனாள். அதே சமயம் அந்தப் பெண்ணை நோக்கிப் புன் முறுவல் காட்டினாள்.

சுந்தரியும் அந்தப் பெண்ணும் இரண்டொரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டார்கள். நானும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அடையாறில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் பெண்ணாம்.

எங்கள் வழித்தடத்தில் செல்லும் பஸ் வந்து நின்றது. சுந்தரியும் நானும் ஏறினோம். அந்தப் பெண்ணும் ஏறினாள். சுந்தரி எடுத்துக் கொண்ட சிறு லக்கேஜை அந்தப் பெண் வாங்கி ஒரு சீட்டருகே பத்திரமாக வைத்தாள். அந்தப் பெண்ணிற்கு சுந்தரி மீண்டும் புன் முறுவலை நன்றியாக்கினாள்.

டிக்கெட் வாங்கப் பர்சைத் திறந்தேன். நூறுரூபாய் நோட்டு கண்ணில் பட்டவுடன்தான் ஏற் கனவே சில்லறை மாற்றிக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்பது நினைவுக்கு வந்தது.

கண்டக்டர் வரும்போது நயந்து பேசி டிக்கெட் வாங்க வேண்டும்! என் நிலையை எங்கள் பக்கத்தில் நின்றிருந்த அந்த இளம் பெண் உணர்ந்து கொண்டாள் போலும்.

"என்ன சார்! டிக்கெட் வாங்கணுமா? இப்படிக் கொடுங்கள்! நான் வாங்குகிறேன்!"

"சில்லரையாக இல்லைம்மா! அதான் பார்க்கிறேன்!"

"அதனாலென்ன? நான் வாங்குகிறேன் சார்"

"கூட்டமா இருக்கேம்மா! நீ மட்டும் எப்படி போவே?"

"கண்டக்டர்கிட்டே நெருங்கிப் போக முடியலைன்னா, கொடுத்து அனுப்பி வாங்கிடலாம் சார்!"

"கொடுங்கமாமா" சுந்தரியும் சொன்னாள். இருமுறை உதவி செய்தவளாச்சே அந்தப்பெண்.

நோட்டை வாங்கிய அந்தப் பெண் நகர்ந்தாள். ஒரு கட்டத்தில் நின்றாள். அதற்கு மேல் அவளாலும் கண்டக்டரை நோக்கிப் போக முடியவில்லை.

பஸ் கடற்கரைச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. டிக்கெட் என் கைக்கு வந்தது. சில்லரை வர இருக்கிறது என்பதை அந்தப் பெண் சைகை மூலம் அங்கிருந்து தெரிவித்தாள். நானும் "சரி" என்று கையாட்டினேன்.

வழியில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். சுந்தரியை உட்கார வைத்தேன். எனக்கும் எதிர்ப் புறத்தில் இடம் கிடைத்தது.

இப்போது வண்டி அடையாறை நெருங்கிக் கொண்டிருந்தது.

"என்ன மாமா, பார்க்கிறீர்கள்" என்றாள் சுந்தரி.

சில்லறை இன்னும் வந்து சேராததைப் பற்றிச் சொன்னேன்.

அந்தப் பெண் அடையாறில் இறங்குவதற்கு முன் வாங்கி விடுங்கள் என்றாள் சுந்தரி. நான் எழுந்தேன். அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவளைக் காணோம். திடுக்கிட்டது மனம். இறங்கி விட்டிருப்பாளோ? இப்போது என்ன செய்வது?

மெதுவே கண்டக்டர் சீட் அருகே சென்றேன்! விஷயத்தைச் சொன்னேன். அவர் பதிலைக் கேட்டு எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"ஆமா, நூறு ரூபா நீட்டிய கையில் டிக்கெட்டும் மீதிச் சில்லறையும் வைத்தேனே! உங்களுக்கு வரவேண்டியதா அது?"

நான் முரட்டு தோற்றத்தில் கனிந்த மனது, அழகுப் புன்னகையில் ஏமாற்று வித்தை இருப்பதை இன்னும் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேன்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link