சிறுகதைகள்


காணாமல் போகும் காலம்

கூடல்.காம்
ஒருமுறை குழந்தைக்கு அம்மை போட்டிருந்தது. படுக்க வைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து பார்க்க வந்த பெரியம்மா ஒருவர் வேப்பிலைகளைக் கொண்டுவந்து படுக்கையில் பரப்பி வைக்கச் சொன்னார். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள எங்கள் குடியிருப்பின் தெருவில் இரண்டு தடவைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துவிட்டேன். எங்கேயும் வேப்பமரமே இல்லை. எங்கு பார்த்தாலும் குல்மொஹர் மரங்களே கண்ணில் பட்டன. கோயில் வாசலில்கூட வேப்பமரம் இல்லை. மழமழவென்று விரிவாக்கம் செய்யப்பட்ட மொசைக் தரைக்கு நடுவில் வீற்றிருந்த கோயில் முகப்பில் துளசி மாடத்தை மட்டுமே காணமுடிந்தது. மதிலோரமாக சில பூச்செடிகள். கிட்டத்தட்ட ஆறேழு மணி நேரங்கள் அலைந்து புறநகரொன்றில் வேப்பமரத்தைக் கண்டுபிடித்து இலைகளைப் பறித்துவர வேண்டியிருந்தது.

நல்ல மழைக்காலம். தொடர்ச்சியாக ஆறேழு நாட்கள் பெய்த மழை ஊரையே கழுவிக் குளிப்பாட்டிவிட்டது. குளிரடிக்கும் காற்று முகத்தைத் தழுவ, வாசல் கதவைப் பிடித்தபடி நின்றுகொண்டு மழையைப் பார்ப்பது விசித்திரமான அனுபவமாக இருந்தது. சற்றே மழை நின்று தண்ணீரெல்லாம் வாய்க்காலாகப் பெருக்கெடுத்தோடியதைப் பார்த்ததும் குழந்தையும், நானும் காகிதப் படகுகள் ஓட்டினோம். நீரின் வேகத்தில் படகு மிதந்து செல்வதைப் பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. சிறிது நேரத்தில் மறுபடியும் மழை தொடர்ந்ததால் வீட்டுக்குள் திரும்பிவிட்டோம். எனக்கு என் சிறுவயது மழை நாட்கள் நினைவுக்கு வந்தன. எல்லாவற்றையும் அமுதாவுடன் உட்கார்ந்து பகிர்ந்துகொண்டேன். பேச்சோடு பேச்சாக மழைநாட்களில் நாங்கள் உணவாக உட்கொண்ட முருங்கைக் கீரையையும் கேழ்வரகு மாவையும் சேர்த்துப் பிசைந்து செய்யப்பட்ட அடையின் கதையையும் சொன்னேன். உடனே மனத்துக்குள் அடை சாப்பிடும் ஆசை பிறந்தது. கேழ்வரகு மாவு வீட்டில் இருந்தது. ஆனால், முருங்கைக்கீரைக்கு எங்கே போவது என்றுதான் புரியவில்லை. அன்று மாலை கடைத்தெருவில் கீரைக்கடைகளில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அதிகாலை நடையில் நான் கடந்துசெல்லும் தெருக்களில் எந்த வீட்டிலும் முருங்கை மரத்தைப் பார்த்த ஞாபகமே இல்லை. எங்காவது ஒரு மரம் எந்த இடத்திலாவது தென்பட்டாலும்கூட, கூச்சத்தைவிட்டு கீரையைக் கேட்பதில் இருக்கிற தயக்கத்தைத் தவிர்ப்பது சிரமமென்று தோன்றியது. மறுநாள் வழக்கமாக வீட்டுக்கு கீரை கொண்டுவரும் அம்மாவிடம் சொல்லி வைத்து நாலு நாட்கள் கழித்து வாங்கினோம். முருங்கைக் கீரையைப் பார்ப்பது பொக்கிஷத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. அன்று இரவில் ஆசை ஆசையாக சாப்பிட்ட கீரை அடையின் சுவை மறக்கமுடியாத ஒன்று. அதைத் தொட்டுப் பார்க்கக்கூட மறுத்து அடை சாப்பிடும் என்னை ஏதோ விசித்திரப்பிராணியைப் போல் என் மகன் பார்த்ததை இன்னும்கூட மறக்க முடியவில்லை.

எங்கள் இளமை நாட்களில் ஏரியில் மீன் பிடித்தல் என்பது விடுமுறையை இனிமையாகக் கழிக்கும் பொழுதுபோக்காக இருந்தது. எங்கள் வீட்டில் தூண்டிலுக்கான மூங்கில் கழியோ அல்லது மீனைக் கவ்வி இழுக்கும் கொக்கியோ கிடையாது. ஆனாலும் மீன் பிடிக்கப்போகும் நண்பர்களோடு நானும் துணைக்குச் செல்வேன். எல்லாரும் ஆளுக்கொரு கொட்டாங்குச்சியை எடுத்துக்கொண்டு வருவார்கள். போகிற வழியில் குளக்கரையோரமாக அல்லது வயல்வரப்புகளின் ஓரமாக காணப்படுகிற மண்புழுக்களைப் பிடித்து அந்தக் கொட்டாங்கச்சிகளில் சேகரித்துக் கொள்வோம். அதுதான் மீனை வீழ்த்துகிற இரை. நண்பர்கள் மிக லாவகமாக கொக்கியின் வளையத்துக்குள் மண்புழுவைச் செருகி வீசுவார்கள். புழுவை விழுங்குவதாக நினைத்துக்கொண்டு வரும் மீன்கள் தூண்டிலுக்கு இரையாகிவிடும். தக்கை தண்ணீருக்குள் இழுபடும் தருணத்தில், மிகச் சரியாகவும், வேகமாகவும் தூண்டிலை மேலே இழுப்பார்கள் நண்பர்கள். ஒரு கணத்தில் ஏமாந்து, தண்ணீரிலிருந்து தரையில் வந்து விழுந்துவிட்ட மீனைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருக்கும். அதெல்லாம் மனத்தின் ஒரு மூலையில்தான். மற்றபடி ஏதோ வெற்றிகரமான ஒரு காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்ட சந்தோஷம்தான் நெஞ்செங்கும் நிறைந்திருக்கும். பிடிபட்ட மீனைச் சுற்றி நின்று எகிறி எகிறி குதிக்கப் பார்க்கும் மீனப் புடியுங்க. ஏமாந்தா ஓடிப்போவும் மீனப் புடியுங்க. துடிச்சித் துடிச்சிப் பொரளுகிற மீனப் புடியுங்க. துண்டு போட்டு கொழம்பு வைக்க மீனப் புடியுங்க’ என்று பாடி ஆர்ப்பரிப்போம்.

ஏரிக்கரையில் சந்தடியில்லாத இடத்தில் நிறைய கொக்குகள் காணப்படும். வெள்ளைவெளேரென்ற அக்கொக்குகளின் அணிவகுப்பு, பார்ப்பதற்கு கண்கொள்ளாத காட்சி. தண்ணீரால் ஏரி நிரம்புகிற பருவத்தில் எங்கிருந்தோ எல்லாக் கொக்குகளும் மிகச் சரியாக வந்துவிடும். அப்புறம் நாலு மாதங்கள் வானத்திலும், கரையிலும் கொக்குகளின் ஊர்வலமாகவே இருக்கும். இதற்காகவே காத்திருந்த மாதிரி வீட்டு மூலையில் கிடக்கும் நாட்டுத் துப்பாக்கியைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு தயாராவார்கள் சிலர். மிதிவண்டிகளில் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட, பொட்டுக்கடலை அளவுள்ள சின்னச்சின்ன குண்டுகளைத் தேடி எடுத்து பையில் நிரப்பிக்கொள்வார்கள். கொக்கு வேட்டைக்குக் கிளம்புவது ஏதோ புலி வேட்டைக்கு ராஜா கிளம்பிச் செல்கிற மாதிரிதான் இருக்கும். சிறுவர்களாக இருந்த நாங்கள், இவர்களுக்ககு ஏவலாட்களாக கூடவே செல்வோம். ஒரே ஒரு முறையாவது சம்பந்தப்பட்டவனுக்குத் தெரியாமல் அந்தத் துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்கிற ஆசையையும் முடிந்தால் எடுத்து குறி பார்க்கிற ஆசையையும் யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வோம். மணிக்கணக்கில் அலைந்து வேட்டையாடினாலும் எங்கள் துப்பாக்கிக்கு ஒரு கொக்குகூட விழுந்தது கிடையாது. அதனாலெல்லாம் நாங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைந்ததில்லை. வெற்றியடைவதைவிட வேட்டைக்குச் செல்வதில்தான் எப்போதும் சந்தோஷம்.

எங்கள் ஊர்ச் சத்திரம் அகலமான கருங்கற்களை இணைத்து உருவான திண்ணைகளைக் கொண்டிருந்தது. கொஞ்சமும் அவற்றின்மீது வெயில்படாதபடி சுற்றிலும் நாவல் மரங்கள் அடர்ந்திருக்கும். எந்த நேரத்தில் சென்று அமர்ந்தாலும் அந்தத் திண்ணைகள் ஜில்லென்று இருக்கும். சின்னபாபு சமுத்திரம் சந்தைக்கும் கோலியனூர் சந்தைக்கும் நடுவே நடையாய் நடக்கிறவர்கள் அந்தக் குளிர்ச்சிக்காகவே ஒருகணம் திண்ணையில் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்வார்கள். கைகால்கள் கழுவிக்கொள்ளவும், குளிக்கவும், வழிச்சமையலைச் சமைத்துச் சாப்பிடவும் உதவும் வகையில் மிகப் பெரிய கிணறும் அங்கே இருந்தது. கிணற்றை ஒட்டி எப்போதும் பூத்துக் குலுங்குகிற ஒரு மகிழமரம் இருந்தது. எந்த நேரத்தில் அந்தச் சத்திரத்துப் பக்கம் சென்றாலும் எடுத்துத் தின்ன வசதியாக பத்துப் பதினைந்து நாவல் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். பழம் தின்று தண்ணீர் குடித்தால் பாதி வயிறு நிரம்பிய மாதிரியே ஆகிவிடும். தரையில் உட்கார்ந்து மணக்கிற மகிழம்பூக்களை எடுத்து பை நிறையச் சேகரித்துக்கொள்வேன். சந்தன நிறத்தில் மின்னும் அப்பூக்களின் அழகுக்கும் மயக்கம் தரும் மணத்துக்கும் மனம் பறிகொடுக்காத நாளே இல்லை. சேகரித்து வந்த பூக்களையெல்லாம் வீட்டுத் திருப்பத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குள் கற்பூரம் ஏற்றும் இடத்தில் குவியலாக வைத்து வணங்கிவிட்டு வீட்டுக்கு ஓட்டமாக ஓடிச் சென்றுவிடுவேன். பல நாட்கள் அதிகாலையில் தூங்கி எழுந்ததும் சத்திரத்துக்குச் செல்ல மனம் பரபரக்கும். நாவல் பழங்கள் ஒரு காரணம். மகிழம்பூக்கள் இன்னொரு காரணம்.

இவையெல்லாம் ஒரு காலம். இன்று இவை எதுவும் இல்லை. ஏரியில் தண்ணீர் இல்லை. கொக்குகள் இல்லை. துப்பாக்கிவேட்டை இல்லை. மீன் பிடிக்கும் விளையாட்டும் இல்லை. சத்திரமோ, கிணறோ, மரமோ இருந்த சுவடே இல்லை. எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிவிட்ட இரண்டுமாடிக் கட்டிடம்தான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கிறது.

இப்படி மறைந்து போனவை, காணாமல் போனவை, கண்ணுக்குத் தெரியாதவை, அழிந்துபோனவை, பார்க்கவே அரிதாகிவிட்டவை என ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. நேற்று இரவு நண்பர் வீட்டில் படிக்க நேர்ந்த ஒரு சின்ன கவிதைதான் அந்தக் காரணம். ஒரு மராத்திக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. கவிஞரின் பெயர் திலீப் சித்ரெ.

ஒரு சின்ன உரையாடலைப் போல காட்சியளிக்கிறது அக்கவிதை. வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி நடக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். அத்தோட்டத்தில் எப்போதும் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருக்கிற வண்ணத்துப்பூச்சிகளை அன்று பார்க்க முடியாததில் ஒரு நண்பனுக்கு வருத்தம். அவையெல்லாம் எங்கே போய்விட்டன என்று ஆவலாக மற்றவனிடம் கேட்கிறான். அந்த நண்பன் மிக அமைதியாக, அவை இப்போதெல்லாம் வருவதில்லை என்ற பதில் தொனிக்கும்படி அந்தக் குறிப்பிட்ட வகை இப்போது உற்பத்தியில் இல்லை என்று சொல்கிறான். "The brand is discontinued" என்பதுதான் அவன் பயன்படுத்தும் ஆங்கில வாக்கியம்.

கவிதையில் என்னைக் கவர்ந்த வரியே இந்தக் கடைசி வரிதான். ஆங்கிலத்தில் இவ்வளவு அழகாக இருக்கும் இந்த வரி, மராத்தியில் எப்படி இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன். உற்பத்தி நிறுத்தம் என்பது மிக அழகான சொல்லாக்கமாகத் தோன்றினாலும் வண்ணத்துப்பூச்சிகளை ஒருவகையான உற்பத்திப் பொருட்கள் என நினைத்துப் பார்ப்பதே சங்கடமாக இருந்தது. அஃறிணைப் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யப்படுபவை என்று சொல்வது நம் வழக்கம். உயிரினங்களை அப்படி அழைப்பதில்லை. மாறாக ஆக்கப்படுபவை. சிருஷ்டிக்கப்படுபவை என்று வேறொரு விதமான சொற்களைக் கொண்டு அழைத்துப் பழகிவிட்டது. ஒரு கவிஞருக்கு இதெல்லாம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ம்ஏதோ ஒரு வலிமையான காரணத்துடன்தான் இப்படி எழுதியிருக்கவேண்டுமென்று தோன்றியது. அக்காரணம் என்னவாக இருக்குமென்பதைக் கண்டறிவதில் மனம் உடனே செயல்படத் தொடங்கிவிட்டது.

எப்போதெல்லாம் இப்படி ஒரு வாக்கியத்தை நாம் பயன்படுத்துவோம் என்று முதலில் யோசிக்கத் தொடங்கினேன். வீட்டில் நான் பயன்படுத்தும் கணிப்பொறி மிகப் பழையது. அதன் நினைவுத் தகட்டின் அளவு வெறும் பதினாறு மெகாபிட்ஸ் மட்டுமே. இன்னொரு பதினாறு மெகாபிட்ஸ் தகட்டைச் சேர்த்தால் செயல்பாட்டின் வேகம் கூடும் என்று நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

சந்தையில் புதிதாக விற்கப்படும் ஒரு கணிப்பொறியின் குறைந்தபட்ச நினைவுத் தகட்டின் அளவு 256 மெகாபிட்ஸ். அந்த அளவுக்குக் காலம் மாறி வளர்ந்துவிட்டது. பதினாறு மெகாபிட்ஸ் தகட்டுக்காக ஏறி இறங்காத கடையே இல்லை. ஒருநாள் மாலையில் நாலைந்து மணி நேரம் இதற்காகவே அலைந்தேன். எங்கேயும் அது கிடைக்கவில்லை. எல்லாருமே கைவிரித்தார்கள். ஒரு கடைக்காரர் மிக அமைதியாக பதினாறு மெகாபிட்ஸ் அளவுள்ள தகட்டின் வரவு நின்று வெகு காலமாகிவிட்டது என்றும் அதை உற்பத்தி செய்கிறவர்களே யாரும் இல்லை என்றும் சொன்னார். என் யோசனையில் இந்த அனுபவமே முதன்முதலாக விரிந்தது. பொருத்தமான உதிரிப்பொருள் கிடைக்காததால் ஒரு கடிகாரத்தைப் பழுது பார்க்காமலேயே மூலையில் வீசி எறிந்துவிட்டதும் நினைவுக்கு வந்தது. மக்களிடையே ஒரு பொருளின் தேவை இருக்கும்வரை அதன் உற்பத்தி தொடரும். அப்பொருளின் தேவையை வேறொரு பொருளால் ஈடுகட்டிவிட முடியும் என்னும் நிலை உருவானாலோ அல்லது அப்பொருளுக்கான அவசியமே இல்லை என்னும் நிலை நேருமானாலோ சந்தையில் அப்பொருள் மெல்ல மெல்ல மறைந்துவிடுகிறது. உற்பத்தி நிறுத்தமும் ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஒரு நாட்டுப்புறக்கதையும் நினைவுக்கு வந்தது. உருண்டையாகவும், உறுதியாகவும் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமல் குழப்பத்தில் இருக்கிறான் ஒரு அரசன். அரச சபையில் இருப்பவர்கள் இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று என்னென்னமோ கற்பனையாகச் சொல்லி அரசனைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைகின்றன. மறுநாள் தள்ளாடிக்கொண்டே சபைக்கு வருகிற ஒரு கிழவர், அப்பொருளைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் அந்த நாட்டு நிலத்தில் விளைவிக்கப்பட்ட ஒருவகை உணவுப் பயிர் அது என்று சொல்லி உண்டு மகிழ்கிறார். அந்தப் பயிர் ஏன் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படவில்லை என்று கேட்கிறார் அரசர். மக்கள் தனக்குத் தேவையற்றதாக அதை நினைக்கத் தொடங்கியதால் உற்பத்தியும் நின்று, நினைவிலிருந்தும் நீங்கிவிட்டது என்று பதில் சொல்கிறார் கிழவர்.

இப்போது கவிதைக்கு மீண்டும் வருகிறேன். வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையின் உருவாக்கம். அல்லது உற்பத்தி என்றே வைத்துக்கொள்வோம். அதைக் கண்டு மகிழும் நுகர்வாளர்கள் பொதுமக்களே. நுகர்வாளர்களின் அரவணைப்பும், ஆதரவும் இல்லாமல் ஒரு பொருள் சந்தையில் நிலைக்கமுடியாது. எத்தனை நிறங்களில் நம்மைச் சுற்றிச் சுற்றித் திரிந்தாலும் வண்ணத்துப்பூச்சிகளுக்குப் பார்வையாளர்கள் இல்லை. அவற்றைக் கண்டு ரசித்து மகிழும் மனமும் இல்லை. யாருக்குமே மகிழ்ச்சியைத் தராத அல்லது யாராலும் திரும்பிக்கூடப் பார்க்கப்படாத ஒன்றை வீணாக எதற்கு உருவாக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் இயற்கை வண்ணத்துப் பூச்சிகளை உருவாக்கவில்லை. உலகம் வணிகமயமாக மாறிவரும் சூழலில், இயற்கையும் வணிகமயமான பார்வையை உட்கொண்டு மாறிவிடுகிறது. தரையையும் வானத்தையும் சுற்றுப்புறங்களையும் கணநேரமாவது பார்க்கக்கூட நேரமில்லாதவர்களாக நம் அனைவரையும் மாற்றி வைத்திருக்கும் உலகமய, தாராளமயச் சூழலில் இந்த விபரீதத்தைத் தடுக்கமுடியாது என்று தோன்றியது. "கடைவிரித்தேன், கொள்வார் இல்லை" என்னும் வருத்தம் இயற்கைக்கும் உருவாகும் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர் முன்வைக்கும் ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான். பூக்களின் அழகில் மயங்குபவர்கள் இல்லையென்றும் பறவைகளின் பாய்ச்சலில் மனம் பறிகொடுப்பவர்கள் யாருமே இல்லையென்றும் பூக்களையும், பறவைகளையும் இயற்கை விலக்கிக்கொள்ளும் காலம் வெகு தொலைவு இல்லை. இப்படியே கற்பனையை நகர்த்திச் சென்றால் காற்று, சூரியன், நிலா என ஒவ்வொன்றாக நுகர்வோர் இல்லாத பொருட்களாக மண்ணிலிருந்து விலக்கிக்கொள்ளப்படும் காலமும் விரைவில் வரக்கூடும் என்று தோன்றியது. எல்லாமே ஒருவித எச்சரிக்கை நடவடிக்கைதான் போலும்.

எளிய உரையாடல் தன்மை உள்ள ஒரு கவிதை பல தளங்களுக்கு மாறிமாறிச் செல்கிற சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக அமைந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. மகிழம்பூக்களிலிருந்து ஏரிக்கரை வரைக்கும் ஏராளமான அம்சங்கள் கிராமத்திலும் நகரத்திலும் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல மறைந்துவிட்டன. அவற்றை வாழ்வின் பகுதிகளாக எண்ணி தக்கவைத்துக்கொள்ளத் தெரியாத மனநிலையும் ஒன்றை இன்னொன்றால் ஈடுகட்டிச் சமாளித்துக்கொள்ளலாம் என்னும் அலட்சியமான எண்ணமும்தாம் காரணங்கள் என்பதைக் கவிதை அழுத்தமாக உணர வைக்கிறது. மறைந்து போனவற்றை திரும்ப உருவாக்குவது சாத்தியமில்லை என்றாலும், இருப்பவற்றையாவது மறைந்துபோகாதபடி நம் தலைமுறை காப்பாற்றிக் கொள்ளவேண்டுமே என்று ஆதங்கப்படுகிறது மனம்.

நன்றி: தீராநதி

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link