சிறுகதைகள்


இப்படியாக செந்தில்

கூடல்.காம்
கருங்கும்மென்று இருள் சூழ்ந்திருந்தது. செந்தில் படுத்துக்கொண்டே கண்களை ஓட்டினான். எல்லையில்லாமல் எங்கும் நிறைந்த மையிருள். தான் அதில் ஒரு திட்டாய் மிதந்துகொண்டு எங்கேயோ போய்க்கொண்டே இருப்பதாக உணர்ந்தான். பயமாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடுவதும் திறப்பதுமான உணர்வுதான் வித்தியாசப்பட்டதேயன்றி இருட்டில் எந்த வித்தியாசமும் இல்லை.

அந்த இருட்டிலும் ஒரு காட்சி மனசுக்குள் வெளிச்சமாய்ப் படர்ந்திருந்தது. நினைவுகள் காட்சியை உயிர்ப்பித்துக்கொண்டேயிருந்தன. காட்சியும் அவனோடு இருள் வெளியில் மிதந்தது. கோபம் போன்ற உணர்வு வெறி, காட்சிக்குப் பின்னாலிருந்து பொங்கிப் பரவியது. அது அவனுக்குள் நிறைந்து அவனைக் கடந்து இருளுக்குள் பரவி விரிந்தது.

மனக் காட்சியில் அவனுடைய அம்மாவும் சிவசண்முகமும் பேசிக்கொண்டிருந்தார்கள். சாதாரணமாக இருந்தாலும் அதில் வேறு ஏதோ இருப்பதுபோல் தெரிந்தது. செந்திலுக்கு அதைச் சொல்லத் தெரியாவிட்டாலும் புரிந்துகொள்ள முடிந்தது. சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது மேய்ச்சல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அம்மாவும் அவனோடு வந்தாள். சிவசண்முகம் எங்கிருந்தோ சைக்கிளில் வந்தான். அம்மாவும் அவனும் மொணமொணவென்று ஏதோ பேசினார்கள்.

செந்திலுக்கு மூச்சு வெப்பமாய் வந்தது. தூக்கம் வருவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. இருளும் காட்சியும் முடிவில்லாமல் மிதந்துகொண்டிருந்தன. புலன்களும் நினைவுகளும் அரை உணர்வு நிலைக்குப் போயிருந்தாலும் அவன் தூங்கிவிடவில்லை. இருட்டில் நுட்பமான சலனம் கேட்டதும் மிகக் கூர்மையாக விழித்துக்கொண்டான். மூச்சை அடக்கிக்கொண்டான்.

வீட்டின் பின்கதவுத் தாழ் நுட்பமாக நீக்கப்பட்டது. இடைவெளியில் நிலவொளி நீள் சதுரத் துண்டாய் விழுந்தது. முடிவற்ற இருள் வெறும் மனப் பிரமையாய் மாறிவிட்டது. வெளிச்சத்தைக் குறுக்காக வெட்டிக்கொண்டு ஓர் உருவம் திடுமென உள்ளே வந்தது. கதவு மூடியது.

இருள் மீண்டும் சூழ்ந்துவிட்டது. இது முன்பு மாதிரியான இருள் அல்ல. செந்திலுக்கு மூச்சு முட்டியது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

"அம்மா.... அம்மா...." குரல் வெளிப்பட்டதும் அமைதி மேலும் அமைதியாகியது. எங்கிருந்தோ, "என்னடா" என்றது அம்மாவின் எரிச்சலான குரல்.

"தண்ணி வேணும்."

"சனியம் புடிச்சவனே! தூக்கத்துல என்ன ஒனக்குத் தண்ணி. படுக்கும்போதே குடிக்கறதுக்கென்ன? இரு கொண்டாறேன்."

"அம்மா . . . ஏ விடிபல்பு போடல." எதுவும் பதிலில்லை.

"லைட்டப் போடு. நான் போயி தண்ணி குடிக்கறேன்."

லைட் போடும் சத்தம் கேட்டது. பச்சை நிற வெளிச்சத்தில் வீடு கண்டு பிடிக்கப்பட்டதைப் போல் இருந்தது. எல்லையற்ற இருள் வெளியில் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதைப் போல்.

"ராத்திரியிலெ என்னடா ஒன்னோட ரோதன. அப்புறம் ஒன்னுக்குப் போவணும்ணு ஒரு தடவ எழுப்புவ. மனுசி அசந்து தூங்க முடியுதா இந்த வூட்ல." தூக்கம் கலைந்துவிட்டதைப் போல நடித்துக்கொண்டு "இந்தா" எனத் தண்ணீர் சொம்பை நீட்டினாள்.

இவனும் தூக்கத்திலிருந்து எழுந்த மாதிரி மந்தமாய்ப் பார்த்துக்கொண்டு அப்பா எங்கே என்று உள்ளே பார்க்க முயன்றான். அவள் கடும் குரோதத்துடன் வெடுக்கென அவனைப் பார்த்தாள். தூக்கம் தள்ளுவதைப் போல் பாவனை செய்துகொண்டு படுக்கையில் விழுந்து சுருண்டுகொண்டான். வெளி முற்றத்திலிருந்து அப்பாவின் குறட்டைச் சத்தம் தெளிவாகக் கேட்டது. கொஞ்ச நேரத்தில் லைட் வெளிச்சம் பிடுங்கி வீசப்பட்டது.

வாய்க்காலுக்கு ரெண்டு பக்கமும் வரைந்துவிட்டது மாதிரியான அடர்ந்த அருகம்புற்களுக்கு நடுவே தண்ணீர் மௌனமாய் ஓடிக்கொண்டிருந்தது. அது ஓடுவதாய்த் தெரியவில்லை. கண்ணாடியில் செய்து வாய்க்காலுக்குள் போட்ட மாதிரி இருந்தது. தினமும் பார்த்தாலும் இந்தக் காட்சியின் அதிசயம் பசங்களின் மனதைப் பிசைந்தது. ரங்கராஜன் வாய்க்காலுக்குள் இறங்கினான். பசங்கள் எல்லோருமே அவனைத் தொடர்ந்து இறங்கினார்கள். காலை யாரோ கவ்விப் பிடித்துவிட்டது மாதிரிச் சிரித்துக்கொண்டார்கள். சிரிப்பும் சத்தமும் அதிகமானது.

வாய்க்காலிலிருந்து ஏறி வண்டித் தடத்தில் திரும்பினார்கள். சாயந்திர நேர வெயில் மஞ்சளாய்த் தண்ணீரிலும் நெல் வயலிலும் சிதறி ஜொலித்தது.

பசங்கள் விளையாண்டபடியே போய்க்கொண்டிருந்தார்கள். தட்டானைப் போலக் கைகளை வைத்துக்கொண்டும் கார் வண்டி ஓட்டுவது மாதிரியும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். விளையாட்டெல்லாம் சின்னப் பசங்களாக வடிவமெடுத்துக்கொண்டு சாலையில் போவது மாதிரி இருந்தது. சுனைக்குப் பக்கத்தில் திரும்பவும் நின்றார்கள். மீன்களின் கூட்டம் வாயைத் திறந்துகொண்டு ஏதோ முணுமுணுத்தது. இவர்களும் ஏதோ பேச ஆரம்பித்தார்கள்.

தூரத்தில் தலைப்பாகை கட்டிக்கொண்டு சிவ சண்முகம் சைக்கிளில் வந்தான். செந்திலுக்கு அவனைக் கண்டதும் நெஞ்சைச் சுற்றி நெருப்புப் பற்றியது. மிகுந்த சிரமத்தோடு சகஜமாய் இருப்பதுபோல் மீன்களைப் பார்த்தான். சிவசண்முகத்தின் வாட்டசாட்டமான, உடம்பு பசங்களுக்கு பிரமிப்பாய் இருந்தது.

எல்லோரும் சொல்லிவைத்த மாதிரி செந்திலை வேறொரு அர்த்தத்தில் பார்த்தார்கள். சும்மா சிரிப்பது மாதிரிச் சிரித்தார்கள். செந்திலால் சிரிக்க முடியவில்லை. மனசுக்குள் எல்லோரது முகங்களையும் மும்டியால் தகர்த்தான்.

சிவசண்முகத்தின் சைக்கிள் பசங்களிடம் வந்து நின்றது. "டேய் எல்லாஞ் சேந்துகிட்டு இங்க என்னடா பண்றீங்க?"

"கோயிலுக்கு போப்போறம்." ஒன்றிரண்டு குரல் கலந்து வந்தது. "பொழுதுசாய ஆச்சி... இன்னம் வூட்டுக்குப் போவாம ஊரச் சுத்திகிட்டுக் கோயிலுக்குப் போறிங்களா? ஏரியத் தாண்டறதுக்குள்ள இருட்டு கட்டிக்கும். வூட்டுக்குப் போங்கடா. டேய் செந்திலு, வர்றியா சைக்கிள்ல."

இவனுக்கு அப்படியே சாகலாம்போல இருந்தது. பின்னால் பசங்கள் அமுத்தலாய்ச் சிரிப்பது தெரிந்தது.

"நா வல்ல, நீங்க போங்க."

"ஏன்டா? நா அந்தப் பக்கமாதான் போறேன். ஒங்கப்பா ஆசுபத்திரிக்குப் போவணும்னாரே, போயிருப்பாரா?"

பின்னால் எவனோ களுக்கென்றான். செந்தில் உர்ரென்றிருப்பதைப் பார்த்துப் புரியாமல் சிவசண்முகம் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். உடனே பசங்கள் ஓவென்று குதித்தார்கள்.

செந்திலுக்கு மண்டைக்குள் ஜிவ்வென என்னவோ ஆயிற்று. சட்டெனக் கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்துச் சிவசண்முகத்தை நோக்கி விசிறிவிட்டான். கல் அதற்காகவே காத்திருந்த மாதிரிப் பறந்துபோய் அவன் பின்மண்டையில் மோதியது. சைக்கிள் கீழே சரிந்தது. பசங்கள் சிதறியோடினார்கள்.

லேசாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. சுருட்டை முடிகள் காற்றில் தவிக்கப் பாவாயி திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். வெற்றிலையை எலும்பு கடிப்பது மாதிரிக் கடித்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது திண்ணையோரமாய் எச்சிலை நாராசமாய்த் துப்பிக்கொண்டிருந்தாள். கையருகே புளியஞ்சிமிரு வாட்டமாய்க் கிடந்தது. வாசப் படலோரமிருந்த வேப்ப மரத்தில் காக்காய்களின் கரைச்சல். நேரம் மசண்டை கட்டிக் கொண்டிருந்தது. கந்தையா பீடியை வாயில் கவ்வியபடியே அடைய வரும் கோழிகளைப் பிடித்துப் பிடித்துக் கூடையில் மூடினான். இருமல் வந்துகொண்டேயிருந்தது. பீடி விழுந்துவிடாதபடி வாயை இறுக்கிக்கொண்டு இருமினான்.

"இந்தா, எதுக்கு இப்பிடிக் காளிவேசம் கட்டிகிட்டு ஒக்காந்திருக்க? பையன் வந்தான்னா மொதல்ல என்ன ஏதுன்னு கேளு."

"மயிர்ல கேளு. அப்பனப் பாரு. மவனப் பாரு. அந்த சனியத்தத் துப்பிப்புட்டுதான் இரும்பித் தொலையேன்."

வீதி லைட் போட்டுக் கொஞ்ச நேரம் கழித்து செந்தில் வந்தான். வீட்டுக்குள் போகப் பார்த்தவன் தன் கையருகே வந்ததும் பாவாயி எட்டி அவன் முடியைப் பற்றினாள். பளீர் பளீரெனப் புளியஞ்சிமிரின் சத்தம் கேட்டது. பையன் "ஐயோ" என்று அலறினான்.

கந்தையா ஓடிவந்து பாவாயியை நெட்டித் தள்ளினான். திண்ணையில் மல்லாக்க விழுந்துகொண்டே அவள் கூவினாள். "அடிங் கூத்தியார அவனுக்கு அவ்வளவு ஆச்சா. அவனச் சாவடிக்காம வுடுறதில்ல."

"ஆமா போ." கந்தையா பையனைத் தூக்கி நிறுத்தினான். பையன் துவண்டு உட்கார்ந்தான். கேவல் தாங்க மாட்டாமல் தாடை திணறியது. அதற்குள் மேலெல்லாம் வரிவரியாய்த் தடித்துவிட்டது.

மறுநாள் செந்திலுக்குக் காய்ச்சலடித்தது. சரியாப்போயிடும் என்று எல்லோருமே சாதாரணமாய் இருந்தார்கள். ஆனால், பொழுது ஆக ஆகக் காய்ச்சல் அதிகமானது. கந்தையா அவனை ஆசுபத்திரிக்குப் போகலாமென்று கூப்பிட்டான். செந்தில் மறுத்துக்கொண்டே இருந்தான்.

கந்தையா நரைத்திருந்த பரட்டைத் தலையில் அடித்துக்கொண்டான். அவன் மூக்கில் சளி ஒழுகியது. குரல் குழைந்து கம்ம, "டேய், எந்திரிடா. ஆசுபத்திரிக்குப் போலாம். ஐயோ, காச்சலு கொதிக்குதே. இந்த ராச்சசி எம் மவன அடிச்சே கொன்னுடுவா போலிருக்கே."

"இந்தாய்யா, சும்மா தொறக்காத. அவன் ஒனக்கு மட்டும்தான் மவனா. எனக்கும் மவன்தான். அவன இப்படியே வுட்டா...."

"அடி செருப்பால! எந்திரிச்சி போடி தூரமா.... டேய், நீ இப்ப வர்றியா, இல்ல உன்னத் தூக்கித் தோள்ள போட்டுகிட்டுப் போவணுமா?

செந்திலுக்கு இது ஒரு ரோதனையாய் இருந்தது. அப்பனின் கோபமும் பாசமும் அவனுக்குக் குமட்டியது. "தூரமாப் போயித் தொலை. நா செத்தா சாவறன்" என்று கத்த நினைத்துக் காய்ச்சல் வெறியில் தெளிவில்லாமல் உளறினான்.

"அடாடாடா, இந்தாண்ட வந்து தொலையேன். அவன ஏன் ரோதன பண்ற. ஒன் நோவுக்கே ஒன்னால ஆசுபத்திரிக்குப் போவ முடியாது. நீ அவனத் தூக்கிட்டுப் போறியா? சிவசண்முகத்துக்கிட்ட சொல்லியிருக்கேன். அந்தாளு டிவிஎஸ் பிப்டில வந்து கூட்டிகிட்டுப் போறேன்னான்."

செந்தில் மெல்ல எழுந்து உட்கார்ந்தான். "அப்பா, கௌம்பு. நாம ஆசுபத்திரிக்குப் போலாம்" என்றான்.

பாவாயி அடிவாங்கியதைப் போலப் பார்த்தாள். இப்படி ஒரு பயல்.... தன் மகன் எதிரி மாதிரிப் போட்டி போடுகிறானே என்று அருவருப்படைந்த மாதிரி வெற்றிலை எச்சிலைக் காரிப் படலோரம் துப்பினாள். துப்பிவிட்டுப் பல்லைக் கடித்துக்கொண்டு அவள் பாட்டுக்கு ஏதோ முணுமுணுத்தாள்.

பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் சம்புவின் கடையில்தான் பசங்களின் கூட்டம் அதிகமாய் இருக்கும். அங்கே வாசலோரத்தில் ஒரு செடி வளர்ந்திருந்தது. போலீஸ் தடி மாதிரி அடித் தண்டும் பெரிய இலைகளுமாக ஆளுயரத்துக்கு மேல் வளர்ந்திருந்த செடி பூக்காமல், காய்க்காமல் அப்படியே இருந்தது. சம்பு வருகிறவர்களிடமெல்லாம் அது என்ன செடி தெரியுமா எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். அந்தச் செடி செந்திலின் கனவில் வந்தது. விதவிதமான பூக்களையும் பழங்களையும் அது உதிர்த்துக்கொண்டிருந்தது. செந்தில் ஆசையாய் அந்தச் செடியைப் பிடித்து உலுக்கியபோது அவன் யாராலோ உலுக்கப்பட்டான். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். விடிபல்பு வெளிச்சத்தில் அம்மா அவனையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அது அவனுக்குப் புதிராய் இருந்தது.

"டேய் செந்திலு, ஒனக்குத் தெரியாததில்ல. நானும் சிவசண்முகமும் ஊர வுட்டுப் போறோம். நாளக்கி அம்மாக்காரி என்ன உட்டுட்டுப் போயிட்டாளேன்னு ஒரு எண்ணம் ஒனக்கு வரக் கூடாது. அம்மா வேணும்னா எங்கூட வா. அந்தாளும் பையனக் கூட்டியான்னுதான் சொல்லியிருக்காரு. என்ன சொல்ற?" செந்திலுக்குத் தலைக்குள் அக்கினியைக் கொட்டி விசிறிவிட்டதாகக் காந்தியது. "என்ன பொம்பள இவ. ச்சீ!" ஆனால் கோபம் உயராமல் கிடுகிடுவெனக் கீழே இறங்கியது. எதுவும் புரியாமல் ஒரே குழப்பமாய் இருந்தாலும் எழுந்து நின்றுகொண்டு "நானும் உங்கூட வர்றேன்" என்றான்.

உறங்கிக் கிடந்த கிராமத்தைத் தாண்டிப் பாவாயி முன்னாலும் செந்தில் பின்னாலுமாக எதுவும் பேசிக்கொள்ளாமல் நடந்தார்கள்.

மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் சிமெண்ட் பெஞ்சில் சிவசண்முகம் உட்கார்ந்திருந்தான். இவர்கள் வருவதைப் பார்த்து எழுந்து நின்றான். தலையில் கட்டுப் போட்டிருப்பது இருட்டிலும் வெள்ளையாய்த் தெரிந்தது.

"பஸ் போயிருச்சா?" என்றாள். "இன்னும் இல்ல" என்றவாறே செந்திலைப் பார்த்து இடது கையை நீட்டினான். செந்தில் அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டான்.

எந்தச் சத்தமும் இல்லாமல் சில நிமிடங்கள் நகர்ந்தது. திடீரென செந்தில் விசும்ப ஆரம்பித்தான். "நா வரல்ல. நீங்க போங்க.... நா.... அப்பாகூட....."

"இந்தத் தெல்லவாரி நாயயும் கூட்டிகிட்டுப் போலாம்னு தோணிச்சே! உன் மண்டமேல செருப்ப எடுத்து அடிச்சாலும் என் ஆத்திரம் தீராது" என்றாள் பாவாயி. அவள் படக்கென இப்படிச் சொல்லிய விதத்தில் சிவசண்முகம் வெடித்துச் சிரித்தான்.

பஸ் வந்தது. ஆட்களைப் பார்த்து நின்றது. மூன்று பேரும் அடித்து வைத்த மாதிரி அப்படியே நின்றார்கள். வெவ்வேறு விதமான பாவங்களோடு நிற்கும் மூவரையும் விசித்திரமாய்ப் பார்த்தார் கண்டக்டர்.

நன்றி: காலச்சுவடு

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link