சிறுகதைகள்


தெளிவு

கூடல்.காம்
மேற்கின் ரோசாக் குழப்பம் இன்று இருக்காது. உறுதியாய். இருள்... கொசுவலையாய்... வாயில் துணியாய்... காடாத் துணியாய் அடர்ந்து கொண்டிருந்தது. கரும்பலகையின் சுண்ணாம்புக் கட்டியின் கிறுக்கல்கள். கடல் நெடுகச் சாம்பல். ஓரத்தில் புரளும் மல்லிகை வடம். தூரத்துக் கப்பல்களின் மின் பளிச்.

செல்வியின் கொலுசுக் கால்களில் மணல் பிசிறுகள். கைக்குட்டையால் முருகு தட்டிவிட்டான். சட்டெனக் கால்கள் பதுங்கின. முகம் பார்த்தான். கோபக்காடு. அமைதி திறக்க உளி கிடைக்காத திணறல் அவனுக்கு. ஆறு கிடைக்காதத் திணறலில் மழை, அவளுக்குள் உதடுகளில் கண்ணுக்குப் புலப்படாத அதிர்வுகள். உதட்டின் மேல் முடிமிருதுகளில் துளித்துளி ஈரமினுக்கு.

வழக்கமாய் வாரத்திற்கு ஒருமுறை வந்து அமர்கிற அதே இடம். அலுவலகம் முடிந்து அவன் வந்து அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவளும் வந்துவிட்டாள்.

"வா செல்வி. உக்காரு. ஒரு வேடிக்கை தெரியுமா? இங்க நா வந்தப்போ ஒரு பையனும் பெண்ணும் இதே எடத்துல உக்காந்து பேசிட்ருந்தாங்க. நான் ரொம்ப நேரமா நின்னுட்ருந்தேன். இது நானும் என் மனைவியும் காதலிச்ச காலத்திலேருந்து உக்கார்ற இடம். தயவு செஞ்சு எழுந்திருக்கிறீங்களான்னு கேக்க நெனச்சேன். அதுக்குள்ள, அவுங்க பேசறதையே நா உத்துப்பாத்திட்ருக்கிறதா தப்பா புரிஞ்சுகிட்டு அவுங்களே எழுந்து போயிட்டாங்க"

பதில் இல்லை. இறுகிய பாறை. தொடுதல்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம். மேகம் பார்த்துப் படுத்துக்கிடந்தவன் எழுந்தான். கைகளில் பின் முடிகளில் தொட்டுக் கிடந்த மணல் புள்ளிகளைத் துடைத்துக் கொண்டான். தகரக் கிழிசலாய் இடி அருகில் வந்து தூரம் போனது.

செல்வி! இப்பொ பேசுவியா மாட்டியா?
..........
செல்வி
..........
ஏய்
.........
ஏய்
........
என் செல்லத் துணைவி
........
என்னெ பார்றா
..........
பாக்க மாட்டியா
.........
ஏய்
.........
எங்கண்ணுல்ல
........
பேச மாட்டியா
.........
எப்பவும்
.........
ம்?
.........
.........
.........
அப்படியெனில் நான் புறப்படுகிறேன் திருமதி செல்வி அவர்களே.
.........
உண்மையா
.........
உண்மையா
............
முருகு எழுந்து உதறிக் கொண்டான். அவளது கை பிடித்து இழுத்தான்.

ம்கூம்.

அப்பொ நீ என்னோட வரப் போறதில்ல
.........
அவன் அமர்ந்து... அவளது கைப்பையைத் திறந்து.. அதிலிருந்த சில்லரைகளையும் துடைத்துக் கொண்டான். எழுந்து நின்றான். அவள் நிமிரவில்லை. இப்பொ உங்கைல ஒத்தக் காசு கெடையாது.
........
நா போயிட்டா திருமதி கோபம் நடந்துதான் வரணும்.
.........
ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்.
..........
மழை கட்டாயம் வரும்
..........
போகட்டுமா
.........
போவேன்
.........
போறேன்
.........
போயிட்டேன்.

போனவன் சுவடுகளைக் காற்று மெழுகியது. வீட்டிற்குள் நுழைந்து...சமையல் அறை... குளியல் அறை...சாப்பிடும் மேசை தாண்டி படுக்கையில் விழுந்தான்.

வாசல் கதவைத் தாழ்ப்பாள் போடவில்லை.

வந்தாள். தண்ணீர் குடித்தாள். காற்றாடிக்குக் கீழ் சரிந்தாள்.

எழுந்தாள். குளித்தாள். படுக்கைக்குள் வந்து முதுகு காட்டிப் படுத்தாள்.

எழுந்தான். கால்களை மெல்ல பிடித்துவிட்டான்.

உதறினாள்.

விடவில்லை. ரொம்ப தூரம் நடக்க வச்சுட்டேன்ல
........
மன்னிச்சிடும்மா
........
தயவு செய்து
..........
மறுபடியும் பிடித்து விட்டான்.

கால்களை சுருக்கிக் கொண்டாள். மறுபடியும் கால்களை இழுத்துச் சுகம் படர அமுக்கினான். பாதங்களில் முத்தம்.

எழுந்து அமர்ந்தாள்.

பார்த்தான். பார்த்தாள்.. நேருக்கு நேராய்.

என்னே எதுக்கு இப்படி சித்ரவத செய்றீங்க?

என்னடா சொல்ற? புரியலையா?

என்ன புரியல?

மத்தியானம் நான் எங்க அலுவலகத்துல வேல செய்ற ஒருத்தரோட வண்டியில போனத... உங்க அலுவலகத்துக்கு முன்னால நின்னுகிட்டிருந்த நீங்க பார்த்தீங்கள்ல?

பார்த்தேன்.

அது யாருன்னு ஏன் நீங்க கேக்கல?

ஏன் கேக்கணும்?

நீங்க எனக்குக் கணவர்.

நீங்க எனக்குத் துணைவி.

அதனால?

அதனாலத்தான் கேக்கல. உன்னோட வேல செய்யிற யாருக்காவது குழந்த பொறந்திருக்கலாம். அதுக்கு உன்னோட உதவி தேவப்பட்ருக்கலாம். அதுக்காக அவசரமாப்போக அவரு கிட்ட உதவி கேட்ருக்கலாம்.
.......
அதையெல்லாம் போயி நான் எதுக்கு கேக்கணும்?
.......
அப்படி கேக்குற ஆம்பளையா இருந்தா எவ்ளவோ கேக்கலாம். பேருந்து நிறுத்தத்துல யாராவது உன்னெப் பாத்துச் சிரிச்சானா? பயணச் சீட்டுக் குடுக்கும்போது நடத்துநர் ஒரு மாதிரி பார்த்தானா? குறிப்புகள் நீட்டும்போது மேலதிகாரி உன் கைய தொட்டானா? எவ்வளவோ கேக்கலாம். அப்படியெல்லாம் கேக்க நான் முட்டாள் இல்லே.
........
நீ என் துணைவி மட்டும் இல்ல.

பெண்

அடுப்பங்கரையத் தாண்டி இப்பத்தான் உலகம் பார்க்க ஆரம்பிச்சிருக்கிற பெண். என்னோட சந்தேகங்களால உன் சிறகுகள் முறிக்கிற ஆண் இல்லே நான்.

உற்றுப் பார்த்தாள்.

குடைந்து நுழைந்தாள்.

படர்ந்தாள்.

இறுகினாள்.

குமுறிக் குமுறி அழுதாள்.

ஏய் என்ன இது.... சின்னக் குழந்தையாட்டமா. ஏய்....

செல்வி

கூந்தலை வருடி மெல்ல தட்டிக் கொடுத்தான்.

முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி எழுந்தாள்.

எங்க போற?

சிற்றுண்டி செய்ய.

எல்லாம் தயாரா இருக்கு.

அதுக்காகத்தான் உன்னெ கொஞ்சம் காத்தாட நடக்க வச்சேன்.
..........
கால் வலிக்குதா?
.............
முகம் மூடிய கைகளைப் பிய்த்தான். தள்ளினான். விழுந்தாள். கால்களைப் பிடித்துவிட்டான். மறுக்கவில்லை.

நன்றி: வெள்ளைத் தீ

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link