சிறுகதைகள்


ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது

கூடல்.காம்
வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த இரண்டு குழந்தைகளும் கோபாலைக் கண்டதும் சட்டென்று ஓட்டத்தை நிறுத்தி "மாமா வந்தாச்சு, மாமா வந்தாச்சு" என்று கத்தின. அதைக் கேட்டு வெளியே வந்த கோபாலின் தாயாரும் அக்காவும் அவனை வரவேற்கத் தயாராகினர். தான் கையோடு கொண்டுவந்திருந்த ஜோக் நழுவிவிடக் கூடாதென்று அவசரப்பட்ட கோபால் தன் கூட வந்திருந்த இளைஞனைக் காட்டி "அம்மா இது யாரு தெரியுதா?" என்று கேட்டான். அவள் அந்த இளைஞனைப் பார்த்து விட்டு விழிக்கவே தன் அக்காளைப் பார்த்து, "ஒனக்கும் தெரியலியா அக்கா?" என்றான். அக்காள் ஒரு முக்கால் பார்வையால் இளைஞனைப் பார்த்துவிட்டு "யாரு..?" என்று இழுத்தவாறு யோசித்தாள். அந்த இளைஞனும் இந்த "க்விஸ்" தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பது போல வாய் நிறைய சிரித்துக் கொண்டிருந்தான். இதற்குள் வெளியே வந்திருந்த அப்பாவும் அவனை அடையாளம் காண முயன்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் இளைஞன் பெரிதாகச் சிரித்து, "மாமாவுக்கும் தெரியல" என்றான்.

திடீரென்று கோபால் "நம்ம கல்லுப்பட்டி காக்கா" என்றான். அவ்வளவுதான். அங்கே பெரிய சிரிப்பொலி. "நம்ம காக்காவா?" என்று மூவரும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர். "மூக்கு ஒழுகிக்கிட்டிருந்த காக்கா இப்பிடி மைனரா வந்து நின்னா நாங்க எப்படிப்பா அடையாளம் கண்டுபிடிக்கிறது?" என்றாள் அம்மா.

"ஆச்சு, அதுவும் வருஷம் எட்டு ஆச்சுல்ல. நாம அறுவத்தஞ்சுல கல்லுப்பட்டிய விட்டு வந்தோம். அப்ப காக்காவுக்கு பத்து இல்லாட்டி பன்னெண்டு வயசிருக்கும்" என்றார் அப்பா.

"டேய் ரவி இதயெல்லாம் உள்ள கொண்டு வைடா" என்று தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளை தன் அக்காள் பையனிடம் கொடுத்துவிட்டு கோபால் திண்ணையில் காலைத் தூக்கி வைத்து தன் ஷூ நாடாவை அவிழ்க்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த இளைஞனும் அதைப் போலவே தன் ஷூ நாடாவை தளர்த்தினான்.

சுத்தக் கறுப்பாகவும் இருந்த, கோழிக்குழம்பை காக்காக் குழம்பு என்று சொன்னதோடு ஒரு நாள் வீட்டு முன்னால் வந்த காக்காவைப் பார்த்து அதைப் பிடித்து குழம்பு வைக்கச் சொன்னதால் மூன்று நான்கு வயதில் உண்டான அந்த கேலிப் பெயர் அவனுக்குப் பத்து பதினைந்து வயதுவரை நிலைத்திருந்தது.

அப்போது கோபாலின் தந்தைக்கு கல்லுப்பட்டியில் வேலை, "காக்கா"யின் வீட்டில்தான் குடியிருந்தார்கள். எந்த நேரமும் "மாமா" அத்தையென்று வாய் நிறைய அழைத்துக் கொண்டு சொல்லாத வேலைகளையெல்லாம் கூட செய்தபடி துருதுருவென்று அலையும் அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது. தவிரவும் அவனது குடும்பத்திற்கும் இக்குடும்பத்திற்குமிடையே ஒரு பெரிய மன ஒற்றுமை இருந்து வீட்டுச் சொந்தக்காரர்கள், குடியிருப்போர் என்ற சாதாரண உறவைத் தாண்டியதொரு பாசம் அவர்களுக்குள் நிலவியது. ஆகவே அந்தக் குடும்பத்திலிருந்து அதுவும் செல்லப் பிள்ளை போன்ற ஒருவனை இந்த எதிர்பாராத வடிவத்தில் கண்ட போது உள்ளபடியே கோபாலின் குடும்பத்தினர் குதூகலித்தனர்.

"வா வா, உள்ள வா" என்ற தகப்பனார் "இப்ப என்ன செஞ்சுட்டிருக்கே காக்கா" என்று கேட்கப் போனவர் இனிமேலும் இவனை காக்கா என்றழைப்பது நாகரிகமாக இருக்காது என்றெண்ணியவராய் சற்றுத்தயங்கி "ஒன்பேரு என்னா மறந்துட்டேன்" என்றார்.

இதற்குக் கோபால் "சந்தானம்" என்றான்.

"ஆமா ஆமா, சந்தானம்" என்று ஆமோதித்த அப்பா, உள்ளே வந்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முன்னால் இருந்த ஸ்டூலைக் காட்டி "உட்காரு" என்றார். கோபால் சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டியபடியே "சந்தானம், நீ வேட்டி கட்டிக்கிறியா?" என்று கேட்டான்.

"இல்ல இருக்கட்டும்"

"டிபன் சாப்புட வசதியா இருக்குமே"

"இருக்கட்டும், டெரிலின் பேண்ட்தான?"

கோபால் வற்புறுத்தவில்லை. தான் கைலியைக் கட்டிக் கொண்டு அப்பாவின் பக்கமிருந்த மேஜையில் ஏறி வசதியாக உட்கார்ந்து கொண்டான்.

சந்தானம் ஒரு முறை வீடு முழுவதையும் பார்த்தான். ஒரு பெரிய அறையையும் சமையல்கட்டையும் மட்டுமே கொண்ட வீடு அது. அந்த அறையிலேயே எல்லாச் சாமான்களும் இருந்ததால் ரொம்பவும் சின்ன வீடுபோல் தெரிந்தது. "ரொம்ப சின்ன வீடா இருக்கே?" என்றான் சந்தானம்.

"என்னப்பா செய்றது? இதுக்கே வாடகை அறுபது ரூபா. டவுன்ல எல்லாம் இப்பிடித்தான்" என்ற அப்பா தொடர்ந்து "சம்பளம் வாங்குறப்பவே தகராறு. இப்பப் பென்ஷன் வச்சே ஓட்ட வேண்டியிருக்கு" என்றார். இதைக் கேட்ட சந்தானம். "நீங்க ரிட்டயர்ட் ஆனதே அங்க யாருக்கும் தெரியாது. நேத்து இவரு சொன்னதும் தான் தெரியும்" என்று கோபாலை சுட்டினான்.

இதைக் கேட்ட அப்பா நிதானமாக "அப்படியா, நான் ஒரு லெட்டர் போட்டிருக்கலாம். போடாம இருந்துட்டேன், லெட்டர் போடுறதுன்னாவே எனக்கென்னமோ அப்பிடியொரு கஷ்டம், ஒரு வேளை தபால் இலாகாவுல இருந்து தபால்கள் பார்த்துப் பார்தே கார்டு கவர் மேல ஒரு அவர்ஷன் ஆயிடுச்சு போல இருக்கு" என்றார்.

இதற்குச் சந்தானம் சிரித்துக்கொண்டே சொன்னான்: "நல்ல வேள மாமா, நீங்க ஏதாச்சும் கேசியர் வேலை பாக்காமப் போயிட்டிங்க. பார்த்திருந்தா பென்ஷன் வாங்க மாட்டீங்க."

"ஏன்?"

"அதுதான் பணம்னாவே ஒங்களுக்கு ஒரு அவர்ஷன் ஆயிருக்குமே"

இதைக்கேட்டு அப்பா உட்பட எல்லோரும் சிரித்தார்கள். "பரவாயில்ல. ஆளு வளந்தது மட்டுமில்லாமல் பேசவும் கத்திருக்கே" என்றாள் அக்கா.

"இப்ப நீ என்னா செஞ்சுட்டு இருக்கே?" இது அப்பா.

"போன வருஷம் பியூசி படிச்சேன். இப்ப சும்மா இருக்கேன்"

"ஏன் மேக்கொண்டும் படிக்கலியா?"

"இல்லே, மேக்கொண்டும் அப்பா நம்மால முடியாதுன்னுட்டாரு."

"ஏன் ஒங்க அண்ணன் ஏதாச்சும் ஸ்பேர் பண்ண முடியாதா? இப்ப அவனுக்கு முந்நூறு ரூபாய்க்கு மேலே சம்பளம் வருமே?" என்றார் அப்பா.

"அவரக் கேக்கிறிங்களா? அவரு கத பெரிய கத. பேரு தான் ஆபீஸர். இருவதாம் தேதியாயிட்டா எவண்டா கடன் குடுப்பானு அவரு அலையறதைப் பாத்தா நமக்குக் கஷ்டமாயிருக்கும். கல்யாணமாயி நாலு வருஷம் தான் ஆச்சு. அதுக்குள்ள அண்ணி கொண்ணாந்த நகையில எட்டு பவுன் அவுட்" என்று முடித்தான் சந்தானம்.

"அப்பிடி என்னா செலவு?" என்றாள் அம்மா.

"என்னா செலவு கேட்டா, என்னப்பா செய்றது? காஸ்ட் ஆப் லிவ்விங் அப்படியிருக்கு. நான் ஸ்மோக்கிங் கூட பண்றதில்லேனு சொல்றாரு அவரு, சொல்றபடியுந்தான் இருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்ன பதினோரு ரூவா வித்த வேஷ்டி இன்னிக்கி பதினாறுரூவா."

இதன் பிறகு அப்பா கேட்டார், "ஏதாவது வேலைக்கி அப்ளை பண்ணியிருக்கியா?"

"அப்ளிகேஷன் போடாத எடம் பாக்கியில்ல, எங்கக் கெடைக்கிது? அவனவன் ஆள செலக்ட் பண்ணி வச்சிக்கிட்டுதான் வாண்டட் பப்ளிஷ் பண்ணுவான் போல இருக்கு." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோயிலுக்கு சென்று திரும்பிய கோபாலின் தங்கை பார்வதி உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள், இவளால் இவனை நிச்சயம் அடையாளம் கண்டுகொள்ள முடியாதென்று அனைவரும் நினைத்ததற்கு மாறாக அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு "என்னா கல்லுப்பட்டியில் காக்காயெல்லாம் சௌக்கியமா இருக்கா?" என்றாள், இதைக் கேட்டு சந்தானம் உட்பட எல்லோரும் வியப்படைந்தனர்.

"என்னடி இது, எங்களால எல்லாம் முடியல. நீ வந்ததும் வராததுமா அடையாளம் கண்டுபிடிச்சுட்டே" என்றாள் அம்மா.

இதற்குப் பார்வதி உடனடியாக பதில் சொல்லாமல் புன்னகை செய்தபடி உள்ளே வந்து, கொண்டு வந்திருந்த பூச்சரத்தை எடுத்து அங்கிருந்த படத்திற்குப் போட்டாள். பிறகு சொன்னாள். "இவரும் அண்ணனும் வீட்டுக்கு வர்ரப்பவே நான் பார்த்துட்டேன். நான் பூக்கடையில் நின்னப்ப இவங்க வந்தாங்க. நான் அப்ப இருந்து யோசிச்சு யோசிச்சு சரி, இது நம்ம கல்லுப்பட்டி காக்காயாதான் இருக்கும்னு முடிவு செஞ்சுட்டேன்".

"சரிடியம்மா. சும்மா காக்கா காக்காணு சொல்லாதே அவரு இப்ப மைனரா மாறி வந்திருக்காரு" என்றாள் அக்கா.

"அப்ப மைனர் காக்காணு கூப்புடலாமா?"

"வாயடிக்கிறதும் சேர்ந்தே வளந்திருக்குது" என்றான் சந்தானம்.

இதற்குமேல் அவர்கள் இருவர் பேச்சும் தொடர்வது தங்கள் குடும்பத்தின் ஒரு வழக்கமான மரபுக்கு முரண் என்று நினைத்த அம்மா "சரி பார்வதி, காப்பியப் போடு" என்று திசை திருப்பினாள். பார்வதி சமையற்கட்டுக்குள் நுழைந்தாள்.

அப்பா கோபாலைப் பார்த்து "ஒன் எக்ஸ்பிளனேஷன் மேட்டர் என்னாச்சு?" என்றார்.

"ஒரு சிவியர் வார்னிங் குடுத்து முடிச்சுட்டானுக."

"அதுசரி, அதுக்கு மேல என்னா செஞ்சுட முடியும்? சும்மா இழுத்துப் பாக்குறது" என்ற அப்பா சிறிது நேரம் சென்று "நீ எப்பிடி கல்லுப்பட்டி போனே?" என்றார்.

"ராஜபாளையத்துல கொஞ்சம் ஓட்டர் லிஸ்ட் பிரிண்ட் ஆகுது. அந்த வேலைய கொஞ்சம் க்விக் அப் பண்ணச் சொல்லி தாசில்தார் அனுப்புனாரு. வர்ர வழியில அப்பிடியே எறங்கினேன்."

"ஒன்னய எல்லாத்துக்கும் அடையாளம் தெரிஞ்சதா?"

"தெரியறதாவது. ஆளக் கண்டதும் சந்தானம் ஓடியாந்ததப் பார்க்கணுமே".

இதைக் கேட்டு சந்தானம் நாணத்தோடு தலை குனிந்து கொண்டான்.

டிபன் வந்தது. அதைக் கோபாலின் அக்காளே பரிமாறினாள். சமையற்கட்டிற்குள் நுழைந்த பார்வதி அதன் பிறகு வெளியே வரவேயில்லை. சந்தானத்திற்கு அப்படியென்ன அவளுக்கு உள்ளே, வெளியே தலைகாட்ட முடியாதபடி வேலையிருக்குமென்று ஆச்சரியமாக இருந்தது. தனது அம்மா அடிக்கடி பார்வதியைக் கேலி செய்தது. ஞாபகத்திற்கு வந்தது. "என்னடி மங்களம், எல்லாரும் சொல்றாங்கனு நீயும் காக்கா காக்காங்குற. அப்புறம் அவன் ஒன்னைய கட்டிக்க மாட்டான்" என்று சொல்வாள்.

டிபன் சாப்பிட்டுக் கொண்டே கோபால் கேட்டான், "சினிமாவுக்கு இன்னிக்கி, போவமா, நாளாக்கிப் போவமா!"

"நாளைக்கா? சரியாப்போச்சு. நான் காலையில பொறப்பட்டாகணும்" என்றான் சந்தானம். அதைக் கேட்டு அம்மா சொன்னாள்.

"சரிதாம்ப்பா, இன்னிக்கே போறோம்ணு சொல்லாமப் போனியே. அதெல்லாம் நாலு நாளாக்கினாலும் இருந்துட்டுத்தான் போவணும்."

"இல்லிங்க. நாளைக்கி சாயந்தரம் நான் கட்டாயம் அங்க இருந்தாகணும். ஜானகிய பொண்ணு பார்க்க வர்றாங்க."

"நல்லா வர்ராங்க, நாளக்கிப் பாத்து. அதெல்லாம் ஒங்க அப்பா பார்த்துக்குவாரு".

"ஐயையோ, அப்பாவா? இப்ப கண்டிஷனே நாளக்கி அவரு வாயத் தொறக்கக் கூடாதுங்கறதுதான். அவர பேச விட்டுக்கிடடே இருந்தா ஜானகிக்கி இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது" சந்தானம் இதைச் சொல்லிக் கொண்டே எழுந்துவந்து கை அலம்பினான். அவன் மீண்டும் உள்ளே வந்ததும் கோபால், "ஏன் அப்பிடி என்னா பேசுறாரு?" என்றான்.

"அவரு பேச ஆரம்பிச்சுட்டா, மாப்ள வீட்டுக்காரனெல்லாம் ஓடுறான். இந்த வீட்ல பொண்ணு எடுத்தா பொண்ணுக்கு மட்டுமில்ல, இந்தக் குடும்பத்துக்கே நாம தான் சோறு போடணும்னு நெனைக்கிறான். அவ்வளவு கண்டிஷன் பேசுறாரு"

இதைக் கேட்டு அப்பா சிரித்துவிட்டு "கேப்பாரு அவரு கேக்கக்கூடிய ஆளுதான்" என்றார்.

கடைசியாக உள்ளிருந்தபடியே பார்வதி பேசினாள் "மாப்பிள எந்த ஊரு? நல்ல ஒடம்பா, ஜானகியோட அடியெல்லாம் தாங்குற ஆளாப் பாருங்க".

இதற்குப் பதில் சந்தானம் கொஞ்சம் பலமாகச் சொன்னான், "இப்பெல்லாம் அப்பிடியில்ல. ரொம்ப அடக்க ஒடுக்கமா ஆயிடுச்சு".

கோபால் சொன்னான். "அப்ப நாம கௌம்பலாம் தியேட்டர் போறதுக்கு நேரம் சரியா இருக்கும்."

சந்தானம் அங்கிருந்த கண்ணாடிப் பக்கம் தானாகவே சென்று தலையை வாரிய வண்ணம் "எந்தப் படத்துக்கு?" என்றான்.

கோபாலும் சந்தானமும் வெளியே புறப்பட்டபோது கான்வென்ட் உடையிலிருந்த ஒரு எட்டு வயதுச் சிறுவன் அவர்கள் வீட்டிற்கு வந்தான். அவனைக் கண்ட கோபால் "வாங்க சார். இப்பதான் ட்யூஷன் முடிஞ்சு வாரிங்களா?" என்று செல்லமாகக் கேட்டான். சிறுவனோ வீட்டிற்கு புதிய ஆள் வந்திருப்பதைக் கண்டு ஒதுங்கியபடி கோபாலின் அம்மாவிடம் போய் நின்றான். சந்தானம் "இது யாரு?" என்றான்.

"தெரியாதா? என் தம்பிதான். தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்," என்றான் கோபால்.

"ஹேய், இங்க வா" என்று சந்தானம் சிறுவனை லேசாக இழுத்து "ஒன் பேரு என்ன?" என்றான். பையன் பேசவில்லை. பேசமாட்டான் என்பது தெரிந்தது.

"ஆளு இல்லாட்டி பேசுற பேச்சு வீடு தாங்கறதில்ல" என்றாள் அம்மா.

"இவன் பேரு"

"ஜான் கென்னடி கணேசன்"

"ஃபைன்" என்றான் சந்தானம். "ஆமா பைனு. கிருஸ்தவனாட்டம்" என்று சலித்துக் கொண்டாள் அம்மா.

அவர்கள் இருவரும் சென்ற பிறகு உள்ளே வந்து உட்கார்ந்த அம்மா "நல்ல பையன். நல்ல குடும்பம்" என்றாள்.

"ரெண்டு நாளக்கி இருடானா, நாளக்கே போகணுங்குறானே?" என்றார் அப்பா.

"கட்டாயப்படுத்தி இருக்கச் சொல்லலாம்தான் இடப் பிரச்சனையில்ல பெரிசா இருக்கு. ஏற்கனவே நமக்கே இடம் போதல. இன்னும் அன்னிய மனுஷங்களுக்கு என்னா பண்றது. இப்பவே ராத்திரிக்கி அந்த பையன எங்க படுக்கச் சொல்றதுன்னு இருக்கு."

எதுத்த வூட்டு செட்டியார் வூட்ல ஊருக்குப் போயிருக்காங்க. அவரு மட்டும்தான் இருக்கார்போல இருக்கு. அங்க படுக்க ஏற்பாடு பண்ணலாம்" என்றாள் அக்கா.

"ஆமா, அந்த மனுஷன் விடிய விடிய சீட்டாடிட்டு எத்தினி மணிக்கி வர்றாரோ?" என்ற அம்மா மேலும் வியப்பேடு "ஆமா, அது என்னா அவரு, ஆயிரம் ரெண்டாயிரமுன்னு வச்சு சீட்டு வெளயாடுறாராமுல்ல" என்று கேட்டாள். இதற்கு அப்பா சலிப்போடு "இதென்னா! இருக்கு, வெளயாடுறான். அவங்க இனத்துல அது ஒரு குத்தம் இல்லே. மொத மொதல்ல உண்டியல்ல பத்து காசப் போட்டுட்டு, அப்பன் கலைச்சுப் போடுற சீட்டத்தான் பிள்ள தொடுறான்" என்றார்.

அம்மா மீண்டும் விஷயத்திற்கு வந்தாள். "கோடை காலமாயிருந்தாலும் வெளியில படுக்கலாம். மழக்காலம்" என்றவள் தொடர்ந்து "இங்கயே படுக்கட்டும், அவனும் நம்ம பிள்ள மாதிரிதானே" என்றாள்.

"நான் சமயக்கட்டுல படுத்துக்குறேன்" என்றாள் பார்வதி.

சிறிதுநேரம் யோசனையில் இருந்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டபடி அம்மா சொன்னாள்; "என்னா பண்றது. நாமளும் வேல பார்த்து முடிச்சு ரிட்டயர்டும் ஆயாச்சு. குடியிருக்கறதுக்கு ஒரு குச்சு சொந்தம் பண்ணிக்கல. பேசிப் பேசியே காலத்தப் போக்கியாச்சு" இப்படி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கணவனை ஒரு தாக்குத்தாக்கிப் பார்க்காவிட்டால் அம்மாவுக்கு அன்றைய பொழுது போகாது. இப்படி அவள் தாக்கும் பொழுதெல்லாம் தான் அவளுக்கு சரியானபடி "சூடு" கொடுக்காவிட்டால் தான் ஒரு வாட்டர்லூ நெப்போலியன் ஆகிவிட்டாதாக குமுறும் அப்பா ஏதாவது சுறுசுறுவென்று சொல்வார். அப்படிச் சொல்லாவிட்டால் அவருக்கும் அன்றையப்பொழுது போகாது. அவர் "எனனா பண்றது யானை வாலப் பிடிச்சுருந்தா அக்கரை போயிருக்கலாம். ஆட்டு வாலப் புடுச்சவன் என்னா ஆவான். நானும் ஆன எடமாப் பார்த்து பொண்ணு எடுத்திருக்கணும்" என்றார்.

இதைக் கேட்ட அக்கா சொன்னாள்; "ஆமா நீங்க இன்னும் மாமனாரையே நெனச்சுக்கிட்டு இருங்கப்பா."

"என்னம்மா பண்றது. ஒன்ன மறக்கறது ஒருத்தருக்கு வசதியா இருந்தா அத நெனக்கிறது ஒருத்தருக்கு வசதியா இருக்கு".

"ஊருல உள்ள ஆம்பளங்க எல்லாம் மாமனார் கொடுத்து தான் வீடு கட்றாங்களா?" இது அம்மா.

"ஆம்பளேன்னு சொன்னதுக்காக எல்லாருமே வீடு கட்டிட முடியுமா? எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.

ஒரு போஸ்ட்மேனா வாழ்க்கையை ஆரம்பிச்சவன் ஒரு சப்போஸ்ட்மாஸ்டராக ரிட்டயர்ட் ஆகலாம். அதுக்கு மேல நான் ஆம்பளேன்னு சொல்லி டிபார்ட்மென்ட் பணத்தத்திருடி பங்களா கட்ட முடியாது".

"திருடுறதுக்கும் ஒரு துப்பு வேணும்" என்று சொல்லி விட்டு எழுந்தாள் அம்மா. விவாதத்தில் தான் தோற்றுவிட்டதாக நினைக்கும்போது அவள் அடிக்கும் மட்டையடி வாதங்களில் இதுவும் ஒன்று.

"திருடறதுக்கு ஆம்பள என்னா பொம்பள என்னா? நீயும் செஞ்சிருக்கலாம்" உடனே அம்மா சொன்னாள்; "நான் இந்தா போறேன். எதுக்காலதான் வட்டிக்கடை."

"போ. இந்தா இதுலதான் என் பழைய பேண்ட்டெல்லாம் இருக்கு. போட்டுக்கிட்டு டுபான் க்வீனாட்டம் போயி கொள்ளையடி." இதைச் சொல்லிவிட்டு லேசாகச் சிரித்த அப்பா, பின்பு தன் நகைச்சுவையின் முழு கனத்தையும் உணர்ந்தவர்போல் பெரிதாகச் சிரித்தார். அம்மாவும் கூட நாணியபடி சிரித்துக்கொண்டாள்.

இது அப்பாவின் பழக்கம். அவரைப் பொறுத்த வரப் பிரசாதமும் கூட. எந்த உச்சமான வாதத்திலும் வருத்தத்திலும் கூட இடைப்படும் சிறு தமாஷ்களை உபயோகிக்கவோ அனுபவிக்கவோ தவறமாட்டார். இது பெரும்பாலும் வாதத்தையோ வருத்தத்தையோ பெரிதும் குறைக்கவும், போக்கவுமே செய்திருக்கிறது.

சினிமா பார்த்துவிட்டுத் திரும்பிய கோபாலும் சந்தானமும் தெப்பமாக நனைந்திருந்தனர். அவர்களை அந்த நிலையில் கண்ட அம்மா "ஏம்ப்பா, எங்காச்சும் ஒதுங்கி நின்னுட்டு வரக்கூடாதா?" என்றாள். "ஒதுங்க முடிஞ்சிருந்தா ஏம்மா நனையிறோம். ஆசையா?" என்ற கோபால் சட்டையைக் கழட்டிப் பிழிந்தான்.

இரவு உணவு, சுருக்கமான பேச்சு, அதைவிடச் சுருக்கமான அரட்டை, தூங்கலாமென்ற தீர்மானம் இவைகளுக்குப் பிறகு அந்த அறையின் இடதுகோடியில் சந்தானத்திற்குப் படுக்கை போடப்பட்டது. பார்வதிக்கு வலதுகோடி, இடையில் வசதிக்குத் தக்கவாறு மற்றவர்கள், பெய்த மழையால் புகைக்கூண்டு வழியாக இறங்கிய நீர் அடுப்படியை நனைத்து பார்வதியை இங்கேயே படுக்க வைத்துவிட்டது.

சந்தானத்திற்கு இது புது அனுபவமாக இருந்தது. அன்னியமானதொரு கன்னிப்பெண் இருக்கும் அறையில் படுப்பது இதுவே முதல் தடவை. அந்த வயதிற்கு ஆயிரம்பேர் இடையில் இருந்தாலும் ஓர் அறைதான் போலும். பார்வதி கடைசியாக படுக்க போகுமுன் தன்னையொரு முறை பார்த்தது அவனுக்கு எப்படியோ இருந்தது.

படுத்து ஐந்து நிமிஷங்கள்கூட ஆகியிருக்காது. சந்தானம் "ஐயையே இது என்னாது" என்றவன் எழுந்து உட்கார்ந்தான். "இந்த ரூமும் ஒழுகுதா?"

என்னவென்று அறியாத கோபால் சட்டென்றெழுந்து லைட்டைப் போட்டான். வெளிச்சம் வந்ததும் என்னவென்று தலையைத் தூக்கிப் பார்த்த எல்லாராலுமே சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எல்லாரும் கொல்லென்று சிரித்து விட்டனர். சந்தானமும் அசடு வழியச் சிரித்து "அடப் போக்கிரிப் பயலே" என்று எழுந்தான். அக்காவின் மூன்று மாதக் கைக்குழந்தை எப்படியோ தாறுமாறாகத் திரும்பி இடையில் இருந்த இரண்டு மூன்று பேர்களையும் தாண்டி சந்தானத்தின் மேல் விழும்படி நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான்!

சந்தானம் கழுவிக்கொண்டு படுத்ததும் மீண்டும் விளக்கை அணைத்தான் கோபால். சிரிப்பின் பிடியிலிருந்து இன்னும் விடுபடாத அக்காள் "போக்கடாப் பயலே. ஒனக்கு விருந்தாடி தான கெடச்சாரு" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

சந்தானத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. வெகுதூரம் கழித்தே கண்ணயர்ந்தான்.

மீண்டும் அவன் கண்விழித்தபோது அவனுக்கு வெளியே போக வேண்டும் போலிருந்தது. கோபாலை எழுப்பலாமா வேண்டாமா என்ற தயக்கம். விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கும் என்று தெரியவில்லை. விடியும்வரை தாங்குமா என்பது சந்தேகமாக இருந்தது. கூடவே ஒன்றும் தவறாமல் ஞாபகத்திற்கு வந்தது. அங்கிருக்கும் போது பார்வதியை அவள் அம்மா அடிக்கடி சண்டை போடுவாள். படுக்கும் விஷயத்தில் பார்வதி அசடு. இப்போதும் அப்படியே இருப்பாளோ என்று நினைத்த அவன் அப்படியிருக்க மாட்டாள் என்று தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான்.

அவன் கடைசியாக வேறு வழியில்லாமல் மெதுவாக "சார்...சார்" என்றான். இதைக் கேட்டதும் இதுவரை விழித்துக் கொண்டிருந்தவர் போல அப்பா, "என்னா சந்தானம்?" என்றார்.

"யூரினல் போகணும்".

அப்பா கோபாலை எழுப்பினார். கோபாலுக்கு ஒரு தயக்கம் பார்வதியின் படுக்கை முறை இன்னும் அவ்வளவாகத் திருந்திவிடவில்லை. ஆகவே அவள் விழித்துக் கொள்வதற்கு கொஞ்சம் நேரம் கொடுக்க விரும்பி சத்தமாக "இவனப் பாருங்க. ஒதச்சிட்டு கெடக்குறான். கொஞ்சம் தள்ளிப் படுடாப்பா" என்று தன் தம்பியைச் சொல்லியவனாக எழுந்து விளக்கைப் போட்டான்.

வெளிச்சம் பரவியதும், என்னதான் இருந்தாலும் சந்தானத்தின் கண்கள் சட்டென்று அங்கு திரும்பிவிட்டன. ஆனால் அதற்கு முன்பே எழுந்துவிட்ட அம்மா, "அப்படியிருந்தால்" பார்வதிக்கு போர்த்தி விடுவதற்கு தயாராக இருப்பது தெரிந்தது. ஆனால் பார்வதியோ, எல்லா ஜன்னல்களும் கதவும் மூடப்பட்டதால் புழுங்கிய அந்த அறையில் போர்வையைத் தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு போர்வையின் நுனியை இறுக்கமாகப் பிடித்தபடி உறங்கிக்கொண்டிருந்தான். தேவை வந்தால் ஞானம் தானே வந்துவிடுகிறது. அம்மா திருப்தி கலந்த புன்னகையோடு மீண்டும் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலை பத்துமணியளவில் ஒரு விருந்தாளியை திருப்திகரமாக அனுப்பிவிட்ட திருப்தியோடு அப்பா, அம்மா, அக்கா, பார்வதி எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பார்வதிக்கு கடைசியாக சந்தானம் பார்த்துவிட்டுச் சென்ற பார்வையில் ஏதோ சேதி இருப்பதாகப் பட்டுக்கொண்டிருந்தது. சந்தானம் மதியம் சாப்பிட இருக்கமாட்டான் என்பதால் காலைப் பலகாரத்திற்கே செய்துவிட்ட மட்டன் வகையறாக்களின் ருசியில் ஜான் கென்னடி கணேசன் இன்னும் தட்டைவிட்டு எழுந்திருக்க மனமில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் அக்காள் சிரித்தபடி "போதுண்டா தம்பி. எங்க போவுது. மத்தியானம் பாத்துக்கலாம்" என்றதும் எழுந்து கைகழுவப்போனான்.

கலலுப்பட்டியையும் சந்தானத்தின் வீட்டார்களையும் பெரிதும் சிலாகித்த அம்மா "நாம குடியிருந்த வீடுகள்ளயே அவங்க வீடுதான் பெருசு" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கணேசன் ஓடிவந்து அவளை ஒட்டியபடி உட்கார்ந்தான். அவனை அணைத்து முத்தமிட்ட அவள் "எங்க கணேசன்தான் அந்த வீடாட்டம் கட்டப் போறான்" என்றாள்.

அப்பாவின் நினைவில் அவரது அம்மா ஐம்பது வருஷங்களுக்கு முன் சொன்னது நேற்று சொன்னது போல ஒலித்தது. அவளும் இப்படித்தான் "எங்க முத்து தலையெடுத்துத்தாத்தான் குச்சு மச்சாகும்" என்று சொல்வாள். இதை நினைத்தபோது அவர் உதட்டோரம் ஒரு புன்னகை இழையோடியது. அது கைத்திருந்தது.

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link