சிறுகதைகள்


தார் குளிர்ந்த ஆற்றங்கரையில்

கூடல்.காம்
வியாழன், திரைகானம் ஆரம்பித்தபோதுதான் நேரம் பத்து முப்பது என்பது பொறி தட்டிற்று. 18-கே கடைசி பேருந்து ஒன்பதரையோடு சரி. வாங்கி வைத்த மல்லிகைப்பூ பொட்லம் ஓட்டுநரின் பார்வையில் இடறினால் அதற்கும் மோசம்தான்.

வம்புச் சண்டைக்குப் பேர்போன தங்கையோடு பேசிக் கொண்டிருக்கையில்.... இறங்குவதற்காகத் தாழும் வானூர்தியின் அடர்ந்த இரைச்சலே பல நேரங்களில் தொலைந்து போகும். நேரம் தொலைவதுதானா வியப்பு.

வீட்டுக்கார அம்மாவின் கறுப்பு நாய்க்குட்டியின் வள்வள்ளுக்கு அஞ்சி அரவம் காட்டாமல் படியிறங்கி வீதிக்கு வந்து நிமிர்கையில் நிலா. கோட்டை கட்டிய நிலா.

மேற்கு சைதாப்பேட்டையின் அந்த நீண்ட வீதி, மக்கள் வடிந்து பார்ப்பதற்கு என்னவோபோல் இருந்தது.

என்னதான் சொல்லுங்கள். நெரிசலாய் அரக்க பரக்க மக்கள் குறுக்கும் நெடுக்குமாய் உரசிப் போனால்தான் வீதிக்கே அழகு. இந்த வெறுமை இனம்புரியாத தளர்வை விசிறியடித்து விடுகிறது.

வழித்துணையாய் சௌந்தரராசன், சுசிலா, பால சுப்ரமணியன், சித்ரா, மறுபடியும் சௌந்தர்ராஜன், மலேசியா வாசுதேவன், யேசுதாசு, மனோ, மறுபடியும் அழும் சுசிலா, ஏ.எம். ராசா, சிக்கி என மாறி மாறி பாட்டுக் கொடுத்தபடி வந்து கொண்டிருந்த.. அந்த அரசமரம் அந்தக் கோயில் குளம்.. அந்தத் தொடர் வண்டித் தடுப்பு என்று தாண்டி அண்ணாசாலை தாடண்டர் நகர் பேருந்து நிறுத்தத்திற்கும் வந்தாயிற்று.

அகன்ற இந்தச் சாலை நெடுக ஊராகாலி மாடுகள் போல் மூச்சிரைக்க ஓடிவரும் பல்லவன்கள் எல்லாம் கட்டுத்தறிகளுக்குப்போய் அடைந்தாயிற்று.

பெரியார்களும், பட்டுக்கோட்டை அழகிரிகளும் மட்டும் வந்து நிற்கவும், புறப்புடவும், இறங்கிய கைப்பெட்டி மனிதர்களை தானிகள் மொய்க்கவும், பேரம் பேசவும் ஒன்றிரண்டில் சிலர் ஏறிப்போகவும், பேரம் படியாமல் சிலர் நடந்து போக... தொடரும் தானிகள் அவர்களின் கடைசி தொகையை அங்கீகரிக்கவும்...

கால் வலிக்கிறது.

தானியைக் கொண்டுவந்து நிறுத்தி, நிறுத்துகையிலும்.. அய்யா.. உனக்காக கொண்டு வந்து நிறுத்திகிட்டு.... நீ ஏறு அப்பத்தான் போவேன்னு ஒண்ணும் அடம்புடிக்கல.. விருப்பமிருந்தா ஏறு இல்லாட்டிப்போ என்கிற பாவனையில் வண்டியை நிறுத்தாமலேயே நமது பைக்குள் பலகீனம் தேடி.. ஏமாந்து முணுமுணுத்துப்போகும் அழகு எப்போதும் கால்வலிக்கு ஒத்தடம்.

கால் சட்டைக்குள்... சட்டைக்குள் எல்லாமாக ரெண்டு முப்பது தேற துணிந்து வெளியூர் பேருந்திலேயே ஏறலாம் என்கிற மனநிறைவில் வெளியூர் பேருந்துகள் நிற்கும் இடத்திற்குப்போய் நின்று, வந்து நின்ற பேருந்தில் ஏறினால் இறங்கு இறங்கு... இறங்குய்யா.. இறங்குடாங்குறேன்... என்ற நடத்துநரின் அதிரடி அதட்டலுக்கு மிரண்டு... குதித்து நிற்கையில் தானி ஓட்டுநர்களுக்கான பலகை முறைத்தது.

சில்லரையைப் பைக்குள் போட்டுக் கொண்டு பழைய படியும் பழைய இடத்திற்கே வந்து நிற்கவும் வாழ்க்கை சலித்தது. பணக்காரராக எளிய வழிகள் அல்லது இதுமாதிரியான தலைப்புகளுக்கு நெருங்கிய ஏதோ ஒரு நூலை மணிமேகலைப் பிரசுரத்தில் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று மனசு முடிச்சிட்டுக் கொண்டது.

வெறுமையாய்ப்போகும் ஊர்திகளில் ஒன்று... ஒற்றையில் போகும் இரு சக்கர ஊர்திகளில் ஏதோ ஒன்று... அருகில் வந்து நின்று.. எங்கே போகணும்? வாங்க நானும் அந்த வழியாகத்தான் போகணும்.. ஏறிக்குங்க.. என்கிற குரல் வராதா என்று மனசு எதிர்பார்த்தது. அப்புறம் அந்த எதிர்பார்ப்பை உள்ளுக்குள்ளாகவே மென்னியைப் பிடித்துத் திருகிப்போட்டது.

கைவண்டி நிறைய அழுக்குத் துணி மூட்டைகளைக் குவித்து உந்தி உந்தி இழுத்துப்போகிறவர்களைக் கீழேயும்.. ஈரக்காற்றில் கரையத் திணறி நீண்டு கிடக்கும் வானூர்திப்புகைக் கோடுகளை மேலேயும் பதினோரு மணிக்கு மேல் எப்போதும் பார்க்கலாம்... இந்த அண்ணா சாலையில்...

ஏங்க ஆயிரம் விளக்குப் போக பேருந்து இருக்குங்களா? அருகில் வந்து நசுங்கிய குரலில் கேட்டவர்க்கு வரும் என்கிற பாவனையில் தலையாட்டினேன். காத்திருந்த சலிப்பு வார்த்தைகளைத் தடுத்திருக்கும் போல. நெருக்கம் எதிர்பார்த்த அவருக்குக் கூச்சமாகிக் கொஞ்சம் தள்ளியே போய் நின்று கொண்டார். ஆயிரம் விளக்குக்கு இரவுப்பேருந்து உண்டு என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தபோதிலும் இந்த இரவில்.. இந்தச் சூழலில்... அவருக்கு என் துணை தேவைப்பட்டு பேச்சு கொடுத்திருக்கலாம். அவசரப்பட்டுத் துரோகம் செய்து விட்டேன். பசி நேரத்திலும்.. காத்திருந்து சலிக்கும் நேரத்திலும் இப்படித்தான் மனம் சுயம் இழந்து விடுகிறது.

தூரத்தில் ஒரு பேருந்து வரவும்.. உற்றுப் பார்த்து... 18ஏ என்று தெரிந்தும்... ஒரு நப்பாசையில் கொஞ்சம் சாலைக்குள் நகர்ந்து கை நீட்டவும்.. ம்கூம்.

எவ்வளவு நேரம் காத்திருப்பது?

நடந்து போயிருந்தால் கூட.. இந்நேரம் வீட்டிற்குப் போய்.. தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கும் பொது வாசற்கதவைத் தட்டி... அய்ந்தாறு குடும்பங்களில் யாரோ ஒருவர் இரக்கப்பட்டு எழுந்து வந்து கண்களைக் கசக்கிக் கொண்டே திறந்து விடவும்.. மெலிந்த புன்னகையில் நன்றி கொடுத்துவிட்டுப்போய்.. வீட்டுக் கதவை அழுத்தித் திறக்கையிலேயே ஏற்படும் ஒலி, அழைப்பு மணியாகி.. தூங்கும் மனைவியை எழுப்பி விடவும்.. சாப்பிட்டு.. நரி மிரட்டத் தூங்கும் மகளின் அழகைப் பார்த்தபடி தூங்கியிருக்கலாம்.

சரி நடக்கலாம்... கையில் இருக்கும் ரெண்டு ஐம்பதும் வீட்டுச் செலவுக்கு ஆகும் என்கிற களைப்பை மேலோங்கவும் நடக்க ஆரம்பித்தேன்.

அம்பேத்கர் விடுதியைத் தாண்டி வந்து கொண்டிருக்கையில்.. உரசுகிற மாதிரி ஒரு மிதிவண்டி வந்து நின்றது. அதில் காலூன்றி நின்றவர்.. எங்கப்பா போகணும்? என்று கேட்கவும்... ஆழ்வார்பேட்டை என்றேன்.

"இதுக்குப்போயி எதுக்கு நடந்துகிட்டு மாசக்கடைசி வேற. போலீசுக்காரன் கீலீசுகாரன் சந்தேக வழக்குல தள்ளிகிட்டுப்போயிடப்போறான் மிதிவண்டி வுடத் தெரியும்ல?"

"ம்..."

"அப்ப நீ செத்த மிதிப்பா. ரொம்பதூரம் மிதிச்சுட்டு வந்ததுல காலு வலிக்குது. கொஞ்ச நேரம் நான் பின்னால குந்திகிட்டு வர்றேன்."

அவர் இறங்கிக் கொள்ளவும் மிதிவண்டியை வாங்கி நான் மிதிக்க ஆரம்பித்தேன். அவர் உட்கார்ந்ததையே பின்னால் திரும்பி உருவம் பார்த்த பிறகுதான் உறுதி செய்து கொண்டேன்.

சலிப்புகளை மிதியில் வைத்து நசுக்கினேன்.

பளிச்சென்ற ஒளியில் சுமையுந்து ஒன்று வரவும் வண்டியை ஓரம் ஒதுக்கினேன்.

டப்

புரிந்து போயிற்று. முன் சக்கரம் வெடித்து விட்டது. மன்னிச்சிருங்கய்யா என்றேன். பரவாயில்லப்பா.. நான் மட்டும் தனியா வந்திருந்தாலும் இது நடந்திருக்காதா என்ன? என்றபடி சக்கரத்தைச் சுழற்றித் தடவிப் பார்த்தார். சின்ன ஆணி குத்தியிருந்தது. பிடுங்கி எறிந்துவிட்டு வண்டியை வாங்கிக் கொண்டார்.

அவர் வண்டியைத் தள்ளிக் கொண்டே வரவும் நான் பாவமாய் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்கிற தயக்கத்தோடு நடந்து கொண்டிருந்தேன்.

மின் கம்பங்களில் கட்டுவதற்காக ஏதோ ஒரு கட்சிக்கான காகிதக் கொடிகள் சணல் கயிறு நெடுக ஒட்டப்பட்டு சாலையின் குறுக்கே இருவரால் பிடிக்கப்பட்டிருக்க.. இருவர் மின்கம்பங்களில் ஏற... வேகமாக வந்த 19 எஸ் நின்றது.

"ஏம்பா உன்னோட வண்டி பாரு. புறப்படறதுக்குள்ள ஏறிக்க. ம்.. ம் சீக்கிரம்?"

மிதிவண்டிக்காரர் உசுப்பவும்.. ஓடி ஏறப்போன என்னை.. வாசல் கைப்பிடியைப் பிடித்துவிட்ட என்னை.. ஏதோ ஒன்று சட்டென்று பின்னுக்கு இழுத்துவிட்டது. அதற்குள் மேலே ஏறியவர்களிடம் சணல் கயிறு அகப்பட்டு... கொடிகள் மேலே போய்விடவும் பேருந்து பறந்தது.

அவரிடம் வண்டியை வாங்கிக்கொண்டு தள்ளியபடியே நடக்க ஆரம்பித்தேன். அவர் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு தொடர்ந்தார். அவரிடமிருந்து வரப்போகும் முதல் வார்த்தைக்காகக் காத்திருந்தேன்.

நன்றி: வெள்ளைத்தீ

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link