சிறுகதைகள்


மாரம்மா

கூடல்.காம்
பெருமாள்மலை அடிவாரம். மிகப் பெரிய திடல். இருபுறமும் ஏழெட்டு கல்யாண மண்டபங்கள். அங்கங்கே திட்டுத் திட்டாக வைபவ உடைகளில் மனிதக் கூட்டம். அநேகமாக எல்லா மண்டபங்களிலிருந்தும் "ஸ்பீக்கர்"களில் "இன்னிசை". இந்த இன்னிசைகள் சில இடங்களில் இரண்டாகவோ மூன்றாகவோ சங்கமித்துக் கொள்ள, அவற்றைப் பகுத்துப் புரிந்து தாங்கும் ஆற்றலற்ற சிலர் அவற்றின் ஏதாவதொன்றின் முழு ஆளுகைக்குள் அடைக்கலம் புக விரைகிறார்கள். அங்கு சென்றதும் ஒருவருக்கொருவர் கத்தி கத்திப் பேசிக் கொள்கிறார்கள்.

திடலுக்கு வடக்கே, கிழக்கு மேற்காக மெயின் ரோடு போகிறது. ரோட்டின் வடகரையில் பெருமாள்கோயில். இதன் சந்நிதி முன்பாகத்தான் முகூர்த்தங்கள் நடக்கின்றன. வரவேற்பும் விருந்தும் மண்டபங்களில். நான் கோயில் வாசல் முன் மேற்கே சற்றுத் தள்ளி நின்று எதிரே தெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவை எனக்கு ஒரு நேர்த்தியான நாடகக் காட்சியாகத் தெரிகின்றன. நான் மாரம்மாவின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறேன்.

கோயிலுக்கு உள்ளே மீண்டுமொரு கெட்டிமேளம் கேட்கிறது. காலையிலிருந்து இது நான்காவது அல்லது ஐந்தாவது முகூர்த்தமாக இருக்க வேண்டும். இன்றைக்கு இங்கே ஒரு பத்து கல்யாணமாவது நடக்கலாம். உள்ளே ஜன நெரிசலும், புழுக்கமும் தாங்காமல் பையன் அழ ஆரம்பித்து விட்டதாலும், மாரம்மாவின் கல்யாணம் அநேகமாகக் கடைசியாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டதாலும் நான் வெளியே வந்து நின்று கொண்டிருக்கிறேன். என் கணவர் உள்ளே இருக்கிறார். மாரம்மா மணவறையில் உட்கார்ந்ததும் வந்து சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

சற்றுமுன் கோயிலுக்கு உள்ளிருந்து வந்த திருமண கோஷ்டியொன்று மெயின் ரோட்டைக் கடக்கிறது. அந்த "ஊர்வலம்" கடக்கட்டுமென்று மேற்கே போகும் பஸ் ஒன்று கியரில் காத்து நிற்கிறது. அந்த மணப்பெண் நேற்றுவரை பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அவளை மணப்பெண்ணுக்குத் தகுதியாக்க முயன்று தோற்றுப் போய், அவள் வேறு அவை வேறாக அலாதியாக தெரிகின்ற அவளது பட்டுப் புடவையும் ஜாக்கெட்டும்.....

இந்தக் காட்சி அனுபவ சந்தோஷத்திற்கிடையேயும் இவையெல்லாம் மனத்திற்கு இதமாக இருக்கும்போதே உள்ளே நினைவை ஏதோ நெருடுகிறது. நான் உள்ளே இருந்தபோது, தனக்கு இதமளிக்காத ஏதோ ஒன்று நடந்ததே, அது என்னவென்று நினைவு தனக்குள் தானே தேடிப் பார்க்கிறது.

அது நினைவுக்கு வருகிறது.

ஓர் அரைமணி நேரத்திற்கு முன் எந்தக் கல்யாணத்திற்கு யார் வந்தார்கள் என்ற பேதமில்லாது, முகூர்த்த மண்டபத்தில் எல்லோரும் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தபோது கோவிந்தம்மாள் உள்ளே நுழைகிறாள். அவளைக் கண்டதும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வீராயி ரொம்பவும் ஆவலாகக் கோவிந்தம்மாளை தன்னிடம் வரும்படி கையைக் காட்டி அழைக்கிறாள். அவளும் அங்கு வரவே, இருந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் நெருக்கி உட்கார்ந்துகொண்டு அவளுக்கு இடம் கொடுக்கிறோம். அவள் உட்கார்ந்ததும் உட்காராததுமாக வீராயி கிசுகிசுக்கிறாள். "என்னா, சனியன் ஒரு வழியா தொலஞ்சதுனு சந்தோஷம் கொண்டாட வந்தியா?" கோவிந்தம்மாள் சிரித்துக் கொள்கிறாள். சிலர் இவர்கள் இருவரையும் கவனிக்கிறார்கள். நான் என்னை அறியாமலே ஒரு மூலையில் மண உடையில் உட்கார்ந்திருக்கும் மாரம்மாவைப் பார்க்கிறேன் அவள் இவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் ஒரு மிரட்சி.

புரிகிறது. இதுநாள் வரை அவள் இழப்பதற்கு அவளிடம் ஒன்ருமிருக்கவில்லை. ஊராரின் ஏச்சுப்பேச்சு, ஜாடை, சுட்டல்கள் அப்போது அவளுக்கு ஒரு பொருட்டல்ல. இப்போது அவளுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. இந்த ஜாடை சுட்டல்கள் இப்போதுகூட ஏதாவது விபரீத வடிவமெடுத்து அந்த வாழ்க்கையைப் பறித்து விடலாம்.

மாரம்மாவிற்கும் கோவிந்தம்மாளின் கணவனுக்கும் கள்ள உறவென்று சொல்வார்கள். அதைக் குறித்துத்தான் வீராயி அப்படிச் சொன்னாள். மாரம்மாவிற்கு அந்தக் கிராமத்தில் இப்படிப்பட்ட பெயர்கள் நிறையவே உண்டு. கோவிந்தம்மாளின் கணவன் பெயர் மட்டுமல்ல; தலையாரி முத்துவேல் முதல் கோயில் பண்டாரம் ரெத்தினம் வரை எத்தனையோ பேரின் பெயர்கள் இவள் பெயரோடு இணைக்கப்பட்டு அவ்வப்போது கிராமமெங்கும் சுவாரஸ்யமாகப் பேசப்படும். இவற்றில் கற்பனை உண்டென்றாலும் அத்தனையும் பொய்யென்று ஒதுக்கிவிட முடியாதென்பதும் எனக்குத் தெரியும். அவள் அப்படியும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தாள். இருந்தாலும் என்னால் அவளை வெறுக்க முடிந்ததில்லை. காரணம்? அப்படியொன்றும் நான் அவளின் சொந்தக்காரியோ, தோழியோ, உள்ளூர்க்காரியோகூட இல்லை. அவள் என் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கிறாள். அவ்வளவுதான், நான் ஒரு முக்கிய சேவிகா. யூனியன் தலைமையிடத்தில் வீடு கிடைக்காததால், இவளின் கிராமத்தில் தங்கி தலைமையிடத்திற்கோ விசிட் போக வேண்டிய கிராமங்களுக்கோ போய் வருகிறேன். என் கணவர் இருபத்தெட்டு வயதிலேயே மாஜியாகிப் போன ஒரு போலீஸ்காரர். பெஞ்சாதி சம்பாதிக்கும் தைரியத்தில் சப்-இன்ஸ்பெக்டரோடு ஸ்டேஷனிலேயே புரண்டு பார்த்துவிட்டு எனக்கு மட்டும் காவலாய் நின்று விட்டவர்.

முதன் முதலில் மாரம்மாவைப் பற்றி செய்தி கொண்டுவந்ததே இவர்தான். "ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்றாங்க, மாசம் ஏழு ரூவா கேட்பாளாம். வேலையெல்லாம் நல்லாத்தான் செய்வாளாம். ஆனா பேருதான் அவ்வளவு நல்ல பேரு இல்ல போல இருக்கு" என்றார்.

அவர் இந்தப் பெயருக்காக ரொம்பக் கவலைப்படுவதுபோல் காட்டிக் கொண்டார்; ஆனால் அது போலி என்பது எனக்குத் தெரியும். நான் சிரித்துக்கொண்டே, "அவ நடத்தையைப் பத்தி நானில்ல கவலைப்படணும். நீங்கள் ஏன் அலட்டிக்கிறீங்க" என்றேன். அவர் பேசாமல் புழக்கடைக்குப் போனார். அவர் பேசாமல் போன கரணத்திற்குச் சரித்திரங்கள் உண்டு.

நானும் முதலில் அப்படிப்பட்டவள் வேண்டாமென்று தான் நினைத்தேன் எதற்கு, "விருதுபட்டிக்குப் போற சனியனை வீடுவரை வந்துட்டுப் போ" என்று. ஆனால், கடைசியில் வேறு ஆள் கிடைக்காததாலும் கிடைத்த பிறகு இவளை நிறுத்திக்கொண்டால் போகிறது என்ற எண்ணத்திலும் அவளை வரச் சொன்னேன்.

இவள் முதல் நாள் என் வீட்டிற்கு வரும்போதே, அப்போது எதற்காகவோ வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்துக் கொண்டே வந்தாள். வந்ததும் சம்பிரதாயமாக ஒன்றுமேயில்லாமல் "வாளி எங்கக்கா இருக்கு?" என்றாள். இந்த மூன்று வார்த்தைகளிலேயே கொள்ளைக்களிப்பும் சிரிப்பும் அலையாடி நின்றன. அவள் நான் எதைச் சொன்னாலும் சிரித்தாள். அவள் ஏதாவது சொல்லும்போதும் சொல்லிய பிறகும் சிரித்தாள். ஏதாவது சிறு வேடிக்கைப் பேச்சுக்களுக்கெல்லாம் கூட ஏதோ, நாணமும் வெட்கமும் ஆளைக் கீழே சாய்ப்பது போல் சிரித்தாள். இவளிடம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே மிகக் குறைவாகவே இருக்க வேண்டுமென்று தோன்றியது. இதை வைத்துப் பார்த்த போது, ஊரார் சொல்வது போல் இவளொரு "செக்ஸ்" குற்றவாளியாக இல்லாமல் இவளது இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆண்கள் உண்டாக்கிவிட்ட "செக்ஸ் விக்டிம்" ஆக இருக்கலாம் என்று பட்டது. இந்த ஆண்களை எனக்குத் தெரியாதா?

சரியான திடசித்தமுள்ள நானே வெளியே புறப்பட்டேன் என்றால், நான் நானாக வீடு திரும்புவதற்கு என்னென்ன ஆயுதங்களையும் கவசங்களையும் சுமந்து போக வேண்டியிருக்கிறது.

அவள் வந்து இரண்டு நாளிலேயே என்னைப் பொறுத்து இவளொரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது. அவள் எங்கள் வீட்டிற்கு நானிருக்கும் நேரங்களில் மட்டும்தான் வந்தாள். நான் வெளியே கிளம்புவதாக இருந்தால் அதை ஏதாவதொரு வகையில் தெரிந்து கொண்டு எனக்கு முன்பாகவே கிளம்பி விடுவாள். மாலையில் நான் வந்தது தெரிந்த பிறகு தான் வருவாள். இவர் சில சமயங்களில் அவளிடம் ஏதாவது சொல்வார் அல்லது கேட்பார். அதாவது பேச்சுக் கொடுத்துப் பார்ப்பார். அவள் தன்னால் அடக்க முடியாத அந்தச் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு நழுவி விடுவாள். இவரது இந்த முயற்சிகள் இரண்டு மாதம் நடந்தன. அவளது பதிலும் ஒரே மாதிரியாக இருந்தது. எனக்குப் பயந்துகொண்டும் அதே நேரம் ஆசை விடாமலும் இவர் ஆட முயன்ற நாடகத்தை நான் காணாமல் கண்டு ரசித்து வந்தேன். நான் ஒரு வாழ்க்கை நாடக ரசிகை.

நான் மார்ச் மாதத்தில் மாதர் சங்க சுற்றுலா போயிருந்தேன்.

அது ஒரு ஐந்து நாள் சுற்றுலா. போகும்போது எனக்கு இக்கட்டான மனநிலை தான். அவளை நான் வரும் வரை வீட்டிற்கு வரவேண்டியதில்லையென்று சொல்லலாமா என்று நினைத்தேன். ஆனால் அப்படிச் சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதாலும் அவளே வர மாட்டாள் என்ற ஒரு நம்பிக்கை இருந்ததாலும் ஒன்றும் சொல்லாமலே கிளம்பி விட்டேன்.

திரும்பி வந்து பார்த்தபோது நான் நினைத்தபடி தான் நடந்திருந்தது. இவர் என்னைக் கண்டதும் ஒரேயடியாய்க் குதித்தார். அவள் இனிமேல் இங்கு வேலைக்கு வரக் கூடாதென்றார். இந்த ஐந்து நாளில் அவள் ஒரு நேரம் கூடக் குடிக்கக் கூடத் தண்ணீர் கொண்டு வந்து வைக்கவில்லையாம்.

"இவ என்னைய இந்த ஊரு காலிப் பசங்களாட்டம் நெனைச்சுட்டா போல இருக்கு. இல்ல இவதான் ரொம்ப ஒழுங்கா?" என்று கத்தினார். பாவம், அவர் எவ்வளவு திட்டங்கள் போட்டு எவ்வளவு கனவுகள் கண்டு வைத்திருந்தாரோ! நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். அவள் வேலைக்கு வருவதைத் தடுப்பார் போல் தெரிந்ததும், அவளை நான் தான் வரவேண்டாமென்று சொல்லிவிட்டுப் போனதாகச் சொன்னேன். அவர் ஒரு வாரம் என்னுடன் பேசவில்லை.

ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும். இவர் வீட்டில் இல்லை. நான் அரிசி களைந்து கொண்டிருந்தேன். என் எதிரே உட்கார்ந்து இவள் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். எனக்கே விடை தெரிந்திருந்தாலும் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒரு வேளை எனது விடையை அவளும் உறுதிப்படுத்தி விட்டால் உண்டாகக் கூடிய கூடுதல் சந்தோஷத்திற்காகக் கேட்டேனோ என்னவோ.

"ஏன் மாரம்மா, நான் இல்லாதப்ப நீ தண்ணி எடுத்து ஊத்தியிருந்தா என்னா? அவரு என்னா ஒன்னைய முழுங்கிடப் போறாரா?"

இதைக் கேட்டதும் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். முதலில் அந்தக் கண்களில் தெரிந்த பரிதாபத்தைக் கண்டு எனக்குத் துணுக்கென்றது. பிறகு அதை ஏன் கேட்டோம் என்று வந்தது. அவள் கண்கள் பேசிய மௌன பாஷையின் உக்கிரம் உடனே என் குற்றத்தை உணர வைத்தது. "நான் ஊருக்குள் எப்படியிருந்தாலும் என்னை நம்பி வீட்டிற்குள் விட்டிருக்கும் உங்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் என்னை நீங்கள் சோதனை செய்யக்கூடாது அக்கா" என்று சொல்வது போலிருந்தது.

என் குற்றத்திற்கு அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதிகரித்த வாஞ்சையோடு ஓர் உரிமையை எடுத்துக்கொண்டு கேட்டேன். "இவ்வளவு நல்ல கொணமா இருக்கியே, இப்பிடி ஊருகாரங்ககிட்டயும் நல்ல பேரு வாங்கினா என்னா மாரம்மா?"

இதைக் கேட்டு அவள் தலை குனிந்து கொண்டாள். "தன்னால் குடிக்காமல் இருக்க முடியாது" என்று வருத்தத்துடன் சொல்லிவிடும் ஒரு நேர்மையான குடிகாரரான என் பெரிய தகப்பனார் உருவம் என் கண்முன் வந்து போனது.

சிந்தனை விடுபடுகிறது. என் வீட்டுக்காரர் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். "ஜோதி வா. மணவறைக்கி வந்தாச்சு" என்கிறார் நான் உள்ளே போகிறேன்.

இப்போது முன்போல் அவ்வளவு கூட்டமில்லை. கொஞ்சம் தாராளமாக உட்கார இடமிருக்கிறது. மாரம்மா மணவறையில் இருக்கிறாள். ஐயர் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறார். நான் மாரம்மாவின் முகத்தைப் பார்க்கிறேன். அதில் ஏதோ மாற்றம் தெரிகிறது. பக்கத்தில் இருப்பவர்கள் அவளை ஏதோ கேலி செய்து சிரிக்கிறார்கள். ஆனால் அவளோ, அவளது வழக்கமான சிரிப்பு இருக்கட்டும், புன்னகையைக்கூடச் செய்யாமல் இருக்கிறாள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லையோ? நான் மாப்பிள்ளையைப் பார்க்கிறேன்.

ஊராரும் இவரும் சொன்னது போல ஆள் ஒரு மாதிரி அரைக் கிறுக்கனாகத்தான் தெரிகிறான். ஆனால் இது இவளுக்கும் ஏன்கெனவே தெரியுமே! தெரிந்துதானே சம்மதித்திருந்தாள். நான் இதைப் பற்றி லேசாகக் கேட்டபோது கூட தன் வழக்கமான சிரிப்போடு, "போதுங்கக்கா" என்றுதானே சொன்னாள்.

இப்போது மணவறையைச் சுற்றி எங்கள் ஊர் ஆட்களாகவே இருக்கிறார்கள். நான் அவர்களைப் பொதுவாகப் பார்க்கிறேன். கொத்தனார் சீனியை அவன் பக்கத்திலிருக்கும் பெரியசாமி மெதுவாக இடித்து மாப்பிள்ளையைக் காட்டுகிறான. நான் திரும்பவும் மாப்பிள்ளையைப் பார்க்கிறேன். மாப்பிள்ளை கோழித் தூக்கத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. சீனியின் முகத்தில் ஒரு சந்தோஷ இளநகை. நான்கு நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் பஸ் ஸ்டாப்பில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

மாரம்மா என் வீட்டில் வேலை செய்வது அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் அப்போது சத்தமாகவே பேசினார்கள். ஒரு வேளை அப்படி "என் காது படப் பேசுவதன் மூலம் அவளது "எஜமானி"யாகிய என்னையும் ஒரு படி கீழிறக்குவதாக அவர்கள் நினைத்திருக்கலாம்.

"ஒங்க ஆளுக்குக் கல்யாணமாமில்ல?"

"ஆமா"

"மாப்ள எந்த ஊராம்?"

"மரவனூறு"

"அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கிகளோ?"

"ஆமா, சாப்பாடே எறங்க மாட்டேங்குது."

"ஆசாமி அர லூஸ்னு சொல்றாங்க."

"அப்பிடிதான் சொல்றாங்க"

"அப்ப ரயிலு எப்பவும் ஓடும்னு சொல்லு."

"அப்பிடிச் சொல்ல முடியாது. சில பேரு மத்ததுல அர லூசா இருப்பான். இதுல எம்டனா இருப்பான். பொண்டாட்டிய பாக்க வுடமாட்டான்."

"அப்ப, ஆளு இதுலயும் லூசா இருக்க சாமிய வேண்டிக்க."

இப்போதைய சீனியின் புன்னகை, சாமி தனக்கு வரம் கொடுத்து விட்டதாகச் சொல்வது போலிருக்கிறது எனக்கு.

சடங்குகள் தொடர்ந்து நடக்கின்றன. ஐயரின் செயல்களில் ஓர் அவசரமும் அதே நேரத்தில் ஓர் ஆற்றாமையும் எனக்கு.

சிறிது நேரத்தில் மாங்கல்யம் வைத்த தேங்காய்ப்பழத் தட்டு சுற்றுக்கு வருகிறது. எல்லாரும் அதைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். கூடவே அட்சதைத் தட்டும் வருகிறது. ஆளுக்குக் கொஞ்சம் மஞ்சள் அரிசி எடுத்துக் கொள்கிறார்கள். நானும் கும்பிடுகிறேன். அட்சதை எடுத்துக் கொள்கிறேன்.

அறுபது தாண்டிய அவர்களது ஜாதி நாட்டாமை, மாரம்மாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பெயர் கூட மாரம்மா பெயரோடு அடிபடுகிற ஒன்றுதான். யாரோ அவர் பார்வையைத் திரும்பி அவரிடம் ஏதோ சொல்கிறார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் மெதுவாகச் சிரிக்கிறார்கள். மாரம்மா அவர்களை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் குனிந்து கொள்கிறாள்.

திடீரென்று கெட்டிமேளம் கேட்கிறது. "விழித்துக்" கொள்ளும் நான், எல்லோரோடும் சேர்ந்து அட்சதையை மணமக்கள் மேல் வீசுகிறேன்.

தாலி கட்டி முடிந்ததும் மணமக்கள் மணவறையை மூன்று முறை சுற்றி வரும்போது, மாரம்மாவின் முகம் பின்னும் இறுக்கமடைந்திருப்பது தெரிந்தது.

பிறகு புதுத்தம்பதி ஜாதித் தலைவர் என்ற முறையில் முதலில் நாட்டாமை காலில் விழுந்து வணங்குகின்றனர். அவர் "ம்.. ம்... கெட்டிக்காரி... கெட்டிக்காரி... எந்திரி, நல்ல மாப்பிள்ளையா பாத்துக் கட்டிக்கிட்டே. ஆனா பொறந்த ஊருக்காரங்க எங்கள மறந்துடாதே" என்கிறார். இதற்கு ஒரு சிலேடைப் பொருள் உண்டென்றும் அதைத் தாங்கள் கண்டுகொண்டு ரசிப்பதாகவும் சுற்றியிருந்தவர்கள் சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பில் எந்தப் பயமுமில்லை. தாய் ஒருத்தியைத் தவிர வேறு நாதியற்ற அந்த ஏழையை கோழைகளும் பாய்ந்து பார்ப்பதிலே ஆச்சரியமுமில்லை. அவர்கள் தாங்கள் சிரிப்பதோடு கூட, மாரம்மா வழக்கமாகச் சிரிக்கும் அந்த "க்ளுக்"குச் சிரிப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவள் முகத்தில் அந்த இறுக்கம் தளரவில்லை.

நாட்டாமைக்குப் பின் சிலர் ஆசீர்வதிக்கிறார்கள், எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் இவர் சொன்னது ஞாபகம் வருகிறது.

"மாரம்மா கல்யாணத்துக்கு என்னா செய்யலாம்?" என்கிறேன் நான்.

"போயி ஜோரா வாழ்த்திட்டு வந்துடுவோம்."

"வாழ்த்துறதுக்கு ஒரு தகுதி வேணாம்?"

"ம், எல்லாம் தகுதி வச்சுக்கிட்டுத் தான் வாழ்த்துறானாக்கும்" என்கிறார் இவர்.

அவர் சொன்னதை இவர்கள் உண்மையாக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது.

மாலை மணி மூன்று. நாங்கள் இன்னும் பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டு இருக்கிறோம்.

நான் ரோட்டின் வடகரையில், மரத்தடியில் கிடத்தியிருக்கும் மின்சார சிமெண்ட் போஸ்டுகளின்மேல் உட்கார்ந்திருக்கிறேன். எதிர்க்கரையில் இருக்கும் இரண்டு சிமெண்ட் பெஞ்சுகள் ஒன்றில் மாரம்மா, அவள் கணவன் இன்னும் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். பெஞ்சின் இடது கைமேல் கல்யாணத்திற்கு வாங்கிய சிறிய தகரப்பெட்டி இருக்கிறது. முகூர்த்தப்பாய் சுருட்டி அதன் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது.

மாப்பிள்ளை லேசாக உறங்க ஆரம்பித்து பெட்டி மேல் சாய ஆரம்பித்திருக்கிறான். இன்னும் கொஞ்சம் உறக்கம் கனத்தால் அவன் அதைத் தட்டிவிடக் கூடும். ரோட்டில் போகும் சிலர் புது மாப்பிள்ளை பகல் மூன்று மணிக்கு பஸ் ஸ்டாப்பில் தூங்குவதைக் கண்டு சிரித்துக் கொண்டு போகிறார்கள். அதைக் கவனிக்கும் மாரம்மா ஒருமுறை அவனை லேசாகத் தொடையில் விரலால் குத்தி விழிக்கச் செய்கிறாள். விழித்தவன் அவளைப் பார்த்து லேசாகக் சிரிக்கிறான். ஆனால் அவள் முகத்தில் காணும் கடுமையைக் கண்டு பயந்தோ என்னவோ சட்டென்று சிரிப்பை அடக்கிக் கொள்கிறான்.

பழையபடி அந்தக் கேள்வி என்னுள் நுழைகிறது. இவள் ஏன் இப்படியிருக்கிறாள்? ஒருவேளை, தான் எதிர்பார்த்ததற்கும் மேலாக மாப்பிள்ளை மோசமாக இருப்பதாக நினைக்கிறாளோ?

அப்படி நினைக்க என்ன நியாயமிருக்கிறது? இவளும் சரி, இவள் தாயும் சரி, இவளது "அந்த மனிதர்களும்" சரி, இந்தக் கல்யாணத்தை இடைப்பட்ட ஓர் அவசியமாகத்தானே நினைத்திருக்க வேண்டும். எல்லோரும் விரும்பியது அவள் கழுத்தைச் சுற்றி கணவன் என்ற ஒரு பட்டயம்தானே? அவன் யாராயிருந்தால் என்ன?

பின் என்ன நேர்ந்தது இவளுக்கு?

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link