சிறுகதைகள்


இராசையாவின் தங்கை

கூடல்.காம்
"மணியண்ணா, உங்கள் "இரவில் பெண்" என்ற கதையில் வாற சகாதேவன் என்பவன் எங்கள் ஊர் போஸ்ட் மாஸ்டர் மிஸ்டர் மகாபுண்ணியம் தானே?" என்று கேட்டு என் கண்களைப் பார்த்தாள் மனோன்மணி. பதிலை எதிர்பாராமலே என்னுடைய மெல்லிய சிரிப்பை லவுட் ஸ்பீக்கரில் ஒலி பெருக்கியது போல அட்டகாசமான சிரிப்புடன் ஓடினாள். சில நிமிடங்கள்ல திரும்பவும் வந்து -

"மணியண்ணா, சகாதேவனின் வைப்பாட்டி சுலோசனா உண்மையில் யாரண்ணா?"

மனோன்மணியை அவளது அண்ணன் இராசையா "குஞ்சு" என்று அழைப்பான். எனக்கும் அவள் "குஞ்சு" தான். இப்படியான சந்தர்ப்பங்களில், "குஞ்சு, அந்தப் பத்திரிகையைக் கொண்டு வா" என்பேன். அதைத் தந்துவிட்டு ஆவலுடன் நிற்பாள் அவள்.

"இதைப்படி. என்ன போட்டிருக்கு". பார்ப்பாள்: "கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே."

"பொய் எல்லாம் பச்சைப் பொய்" என்ற குற்றச்சாட்டுடன் பத்திரிகையை என் முகத்தில் வீசிவிட்டு அன்று ஓடினாள். எவ்வளவுதான் செல்லமாக வளர்ந்தாலும், அவளது அண்ணாவின் நண்பன் முகத்தில் பத்திரிகையை இப்படி வீசலாமா?

அவளைக் கண்டிப்பது யார்? சிறிய தாய் என்ற பெயருடன் அவளைப் பராமரிக்கும் அந்தக் கிழவி "சோறும் சீலையும் கிடைத்தால் போதும்" என்று இருக்கிறது. இராசையாவோ அவள் என்ன செய்தாலும் கண்டும் காணாத போக்கு. அவனுக்கு அவள் தங்கை அல்ல, சின்ன மகள்.

என்னுடைய சிறுகதைகளைப் படிக்கும் முதல் வாசகி மனோன்மணியாகத்தான் இருக்க வேண்டும். அடுத்ததாகப் படிப்பது அண்ணன் இராசையா. என்னுடைய கதாபாத்திரங்களை இனம் கண்டு என்னுடன் சல்லாபிப்பது அவளுக்குப் பொழுதுபோக்கு. அவளது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் சில வேளைகளில் சரியாக இருக்கும். பெரும்பாலும் தவறுதான். ஒருவரை அப்படியே வைத்து கதாபாத்திரம் படைப்பது பல விதமான சங்கடத்தில் மாட்டி வைக்கும். ஒரு கதாபாத்திரம் பல நபர்களின் உருவம், குணம், பேச்சு இவற்றின் ஒட்டு வேலைதானே!

இந்த நிலையில், மனோன்மணிக்கும் இராசையாவுக்கும், அவர்களை வைத்தே ஒரு கதை எழுதுவேன் என்ற எண்ணம், அவர்கள் கனவிலும் தோன்றியிராது. "எங்கள் மணி அண்ணா என்னை வைத்து கதை எழுதுவாரா?" அவள் மனம் இப்படி ஒரு நாளும் சிந்தியாது. ஆனால், நான் அவளை முக்கிய கதாபாத்திரம் ஆக்கினேன்!

நான் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்ற போதுதான் இராசையாவின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். அப்போ அவனுக்கு 28 வயது. நான் இரண்டு வயது மூத்தவன். நான் கலியாணமானவன். எனக்கு ஒரு மகன் இருந்தான். இராசையா பிரமச்சாரி. இரத்த உறவாக ஒரு தங்கை மட்டும்.

இராசையா தன் தங்கைக்காகவே கலியாணம் செய்யாமல் இருந்தான். அவர்கள் வீட்டின் சுவரில் ஒரு போட்டோ தொங்குகிறது. அதில் அவர்களின் தாயும் தகப்பனும் ஸ்டூடியோ நாற்காலிகளில் இருக்கிறார்கள். தாயின் மடியில் மனோன்மணி. அப்போது அவள் சரியாகத் தலை நிமிர்த்த முடியாத குழந்தை. தகப்பனின் பக்கத்திலே நிற்கிறான் இராசையா, 15 வயது வாலிபனாக.

சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணப் புதினப் பத்திரிகையில் அதிசயம் தரும் தலைப்புடன் ஒரு செய்தி வந்தது. "விமானக் குண்டு வீச்சில் தாயும் தகப்பனும் பரிதாப மரணம். தாயின் மடியிலிருந்த நான்கு மாதக் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது" அந்தக் குழந்தை தான் மனோன்மணி. இராசையா பாடசாலை சென்றிருந்ததால், அவனும் உயிருடன் இருக்கிறான். சிறிய தாய் என்று சொல்லப்படும் தூரத்து உறவினர் ஒருவர்தான் பிள்ளையை வளர்த்தது. அவள்தான் இப்போதும் அவர்களுடன் இருக்கிறாள்.

"இராசையா உனக்கு ஏற்ற ஒரு பெண் இருக்கு. சிவப்பி. அவளும் டீச்சர்"

"தம்பி ஒரு நல்ல இடம். ஏராளமான சீதனம். யோசித்து சொல்லு"

இப்படியாக அவனுக்குப் பெண் பார்த்துக் கேட்டவர்கள் பலர். நான் கூட "இராசையா, ஒரு பெண் வீட்டிற்கு வந்தால் மனோன்மணிக்குத் துணை. கிழவியால் இனி இயலாது". என்று கூறினேன். அப்போது அவன் சொன்னது, இப்போதும் காதில் பேசுகிறது.

"மணி, வயது வந்த ஒரு பெண்ணுக்குத் துணை இன்னொரு பெண் அல்ல, ஆண்".

அப்படி ஒரு ஆண் மகனை இராசையா தேடி அலைஞ்சான். யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது ஒரு மெகா சீரியல். புதிய முகங்கள், புதிய டயலாக், புதிய அழுகை வந்து கொண்டே இருக்கும். இராசையாவின் உடலும் மனமும் உடைந்துபோன வேளையில், ஒரு வரன் தங்கைக்குக் கிடைத்தான், ஒரு போஸ்டல் பீயோன். கலியாணம் நடந்தது.

அதன் பின்பும் இராசையா கலியாணம் செய்ய மறுத்துவிட்டான். தங்கைக்குக் கிடைத்த மாப்பிள்ளையின் உத்தியோகமும் மாத வருமானமும் அவள் கண் கலங்காமல் வாழ்வதற்குப் போதாது என்று அவனுடைய உள் மனம் கூறுகிறதாம். ஆகவே, வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாகவே இருந்து, அவளுக்கு மாதாமாதம் வேண்டிய பணம் அனுப்புவதாகத் தீர்மானித்து விட்டான். அப்போது தான் அவள் நல்ல முறையில் வாழ முடியும். அவளுடைய பிள்ளைகளை பெரியபடிப்பு படிப்பிக்க முடியும்.

மனோன்மணிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய சாதகத்தைக் கணித்த கொக்குவில் சோதிடர் சொன்னார் "தாய் மாமனுக்கு விசேஷம்" என்று. ஆனால், அந்தப் பிள்ளை நான்கு வயதை அடைந்தபோது, இராசையாவுக்கு நடந்த "விசேஷம்" எந்த மாமனுக்கும் நடக்கப்படாது.

உள்ளூர் பத்திரிகையில் அந்தச் செய்தி வந்தது. "நேற்று கிளாலியிலிருந்து கொழும்புக்குப் படகில் சென்று கொண்டிருந்தவர் மீது ஹெலிக்கொப்டர் சரமாரியாகச் சுட்டது. அதில் இறந்த ஐந்து பேர்களில் பிரபல டியூஷன் மாஸ்டர் இராசையாவும் ஒருவராவார். இவரின் தாயும் தகப்பனும் சில வருடங்களுக்கு முன் ஒரு குண்டு வீச்சில் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது."

செத்த வீட்டில் மனோன்மணி பல தடவை மயங்கி விழுந்தாள். இது நான் எதிர்பார்த்ததுதான். இத்தகைய இழப்பை எப்படி அவள் இதயம் தாங்கமுடியும்? ஒரு டாக்டரின் ஆலோசனைப்படி தூக்கம் தரும் மாத்திரையை காப்பியில் கலந்து அவளுக்குத் தெரியாமலே பருக்கினோம். மருந்தினால் அவளின் கண்ணிமைகளைக் கூட அசைக்க முடியவில்லை. அவள் அண்ணாவை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சவப்பெட்டி மூடப்பட்ட போது தான், அவளின் எதிர்காலமே மூடி சில பெண்களின் கைகளில் துவண்டு விழுந்தாள்.

எனது பாடசாலை அலுவலாக நான் கொழும்பு சென்றதால், ஒரு மாத முடிவில் அவர்கள் வீட்டில் நடைபெற்ற அந்தியோட்டி இறுதிச் சடங்கிற்கு நான் போகவில்லை. நான்கு நாட்களின் பின்புதான் யாழ்ப்பாணம் வந்தேன். இரவாகிவிட்டது.

காலையில் மனோன்மணி வீட்டிற்குப் போகும்போது மனத்தைத் திடமாக்கிக் கொண்டேன். எத்தகைய வரவேற்புக்கும் தயாராக இருந்தேன்.

"வாங்கோ மணியண்ணா" என்ற அவள் குரல் வீட்டிற்கு உள்ளே இருந்து கேட்டது. அவளுடைய கணவன் தான் வந்து வரவேற்றான். நாற்காலி தந்தான். அந்தியோட்டி பலகாரங்கள் தரப்பட்டன. இருபது நிமிடங்கள் ஓடிவிட்டன. பலகாரத்தில் கைவைக்க மனம் வரவில்லை. மனோன்மணியின் கணவன் மௌனத்தைக் கலைத்துச் சொன்னான்: "மணியண்ணா எடுத்து தின்னுங்கோ.

ஒரு முறுக்கு வளையலை எடுத்து கொறித்த போது மனோன்மணி மகனுடன் வந்தாள்.

"அண்ணாவின் அந்தியோட்டி நாள் அன்று மணி அண்ணா கொழும்பில் போல" என்றாள் என்னைப் பார்த்ததும், சாவகாசமாக. "ஆம், இராத்திரி தான் திரும்பினேன்." அவள் பக்கத்தில் மகன் நின்றான். வெள்ளை நிற சேட், கழுத்தில் வரிக் குதிரையின் சிறு தோல் துண்டு போல் "டை", செம்மண் நிற கட்டைக் காற்சட்டை, கால்மேஸ், சப்பாத்துடன் முகத்தில் அழுகையின் சாயல். மனோன்மணியின் தோளில் ஒரு ஸ்கூல் பாக், கையில் "வாட்டர் பாட்டில்" "நல்ல ஒரு நாளிடைல வந்திருக்கிறீர்கள், மணியண்ணா", என்றாள் அவள், "இன்றுதான் சுரேஷ் நர்சரி பாடசாலைக்குப் போகிறான்" சொல்லிக் கொண்டே நிலத்தில் குந்தி இருந்த சுரேஷின் முகத்தில் திட்டுக்களாக இருந்த பவுடரை அழித்தாள். பையனின் மூக்கிலிருந்து தள்ளிய நுரையைத் துடைத்துவிட்டாள். பையனின் சேட்டில் பூவரசம் இலையளவு ஒரு கைக்குட்டை அலங்கார "மெடல்" குத்தப்பட்டிருந்தது.

மனோன்மணி கணவனைப் பார்த்தபடி எனக்கு ஒரு நல்ல செய்தி சொன்னாள், "இவரும் போஸ்ட் மாஸ்டர் தேர்வுப்பரீட்சையில் பாஸ் பண்ணிவிட்டார். புதிய வேலை வாற மாசம்." மாஜி போஸ்டல் பீயோன் வெட்கப்பட்டான், ஏதோ பாலியல் குற்றம் புரிந்தவன் போல.

"ஓ! சந்தோஷம், மிகவும் சந்தோஷம்" என்றேன்.

நான் சந்தோஷமாகவே இருந்தேன். எனக்கு இராசையாவின் ஞாபகம் வந்தது. மச்சான்காரன் சில படிப்புகள் படிக்கவும், போஸ் ட்மாஸ்டர் பரீட்சைக்குத் தயார் செய்ய ஏற்பாடுகள் செய்ததும் இராசையாதான் "ஆத்மா, ஆத்மா என்கிறார்களே, அப்படி ஒன்று இருந்தால் அமரன் இராசையாவின் ஆத்மா நிச்சயமாக ஆனந்தத்தில் இருக்கும்.

நர்சரிக்கு பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு போகும் வாடகைக்காரின் ஹோர்ன் அம்புலன்ஸின் ஓசை என அலறியது "மாமாவுக்கு டாட்டா சொல்லு" என்றாள் மனோன்மணி. சொல்லிக்கொண்டே அவள் மகனுடன் விரைந்து சென்றாள். பையன் சிணுங்கலுடன் இழுபட்டான்.

என் சிந்தனை கருவுற்றது. யதார்த்தமும் கற்பனையும் குலாவும் இப்படியான சிந்தனையை ஒரு எழுத்தாளனால் தவிர்க்க முடியாது. ஒரு மாத கால இடைவெளியில் ஒரு பெண்ணின் மன நிலையில், அவள் செயல்பாடுகளில் உண்டான மாற்றங்கள்! சே! இராசையா திருமணம் செய்திருந்தால், இப்போது அவன் பெயர் அடிபட ஒருத்தியாவது இருப்பாள். ஒரு பிள்ளையாவது பெயருக்கு இருக்கும். மனோன்மணியை அதன் பின்பும் பல தடவை சந்தித்தேன். மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. பிள்ளையின் நர்சரிப் படிப்பும், கணவனின் போஸ்ட் மாஸ்டர் உத்தியோகமும் அவள் வாழ்வையும் பேச்சையும் ஆக்கிரமித்தன. எனக்கு அவள் மேல் வெறுப்பு ஏற்படவில்லை. இதுதான் உலக நியதி போலும். ஆனால் இராசையா நியதிகளுக்கு அப்பாற்பட்டவன். ...எனது மனம் வேதனைப்பட்டது. அதுதூன் என் கதையின் கரு. அந்தக் கதையில் இராசையா, பிரதாப் ஆனான். மனோன்மணிக்கு ஸ்மிதா என்று பெயர் சூட்டினேன். (ஸ்மிதா நான் வெறுக்கும் ஒரு பெயர். என்னுடைய இதயத்தின் காதலை மிகவும் நன்றி கெட்ட முறையிலும் அவமானமாகவும் செல்லாக் காசுபோல் தூக்கி வீசிய ஒரு துரோகியின் பெயர்)

அந்தக் கதையை எழுதி திருப்தியடைந்தேன். ஆனால் எனக்கு மனோன்மணிமேல் உள்ள அன்பு அதை பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி பிரசுரமாகாமல் தடுத்தது. அன்பு ஒரு கேள்விகேட்டது; "மணிவண்ணா, உனது முதலாவது வாசகி மனோன்மணி. அவள் இதைப் படித்தால் ஸ்மிதாவை இனம் காணக்கூடும். அப்போ அவள் மனம்..." "Yes, Don"t be a sasdist". துன்புறும் மனித மனத்திலே இன்பம் காணாதே. என்றாலும் நான் எழுதிய கதையைக் கிழித்து குப்பைக் கூடைக்குள் வீசவும் இல்லை. அதற்கும் என் மனம் அனுமதி தரவில்லை. அந்தக் கதையில் ஒரு யதார்த்த உண்மை இருப்பது போல் தோன்றியது. கதைத் தாள்களை மடித்து என் சூட்கேஸின் அடியில் வைத்துவிட்டேன்.

நான் "அகதி அந்தஸ்து" பெற்று கனடா சென்று அங்கே நிரந்தரமாக குடியேறினேன். "புலம் பெயர்ந்தோர்" கதைகள் எழுதி பெயர் வாங்கினேன் - போர், போராளிகள், அகதிகள், போதை, செக்ஸ். அந்த "உண்மைக் கதை" சூட்கேஸின் அடியிலே தான் இருக்கிறது.

பதினான்கு வருடங்கள் பறந்துவிட்டன. முதல் வருடத்தின் பின் மனோன்மணி குடும்பத்தினருடன் தொடர்பு இல்லை. யாழ்ப்பாணத்தில் எனது பூர்வீக வீடு, காணி, தோட்டம் விற்பதற்கென இலங்கை திரும்பினேன்.

மனோன்மணியைப் பார்க்கப் போனேன். புதிதாக ஒரு வீடு கட்டியிருந்தார்கள். என்னைக் கண்டதும் "மணியண்ணா.... ஆ..." என்று ஆரவாரம். கிட்டத்தட்ட அந்தியோட்டி வீசிற்றின் போது நான் அனுபவித்த சீனும் சம்பாஷணையும் "லெவலில்" நான் மாற்றம். அன்று நர்சரி போன பையன் இன்று யாழ்ப்பான மருத்துவக் கல்லூரி போக ஆயத்தமானான். அவனுடைய ஜீ.சீ.யீ. "ஓ லெவல்" "ஏ லெவல்" பரீட்சைகளின் பெறுபேறுகளைப் பற்றி விபரமாகக் கூறினாள் மனோன்மணி. கணவனைக் காட்டி எனக்குச் சொன்னாள்:

"மணியண்ணா, இவரும் கனடா அல்லது யூ.கே போகத்தான் முயற்சி செய்கிறார்"

நான் இராசையா பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். சூட்கேஸின் அடியில் கிடக்கும் கதையும் ஞாபகம் வந்தது. அதை இனி பிரசுரத்திற்கு அனுப்பலாம். அப்படியே... பிரதாப்பும் ஸ்மிதாவும் பற்றிய கதை

"சாப்பிட்டு விட்டு போகலாம் மணியண்ணா" என்றாள் மனோன்மணி. நான் சாப்பிடாத வீடா?

சாப்பாட்டின் பின் புதிய வீட்டைச் சுற்றிக் காட்டினாள். வராந்தவுடன் இருந்தது "ஆபீஸ் ரூம்". அது இப்போது மகன் படிக்கும் அறை. படுக்கை அறைகள் இரண்டு, சமையல் அறை, ஸ்டோர் ரூம், சாமி அறை.....

சாமி அறையை எட்டிப் பார்த்து திரும்பும் போது... திரும்பவும் எட்டிப் பார்த்து, அதற்குள் நுழைந்தேன். தெய்வங்களின் படங்களுடன் ஒரு சிறிய போட்டோ. அதற்கு முன்னால் மல்லிகை மலர்கள் மூன்று. இராசையா! அப்படியே நின்றேன்.

"மணியண்ணா, அண்ணாவின் போட்டோவை அந்தியோட்டி சடங்குகளின் பின் கொண்டு வந்து வைத்தேன். என்னைப் பொறுத்தவரை அவரும் ஒரு தெய்வம்"...

நான் என் கண்களைத் துடைத்தேன். அதிலிருந்த தெய்வங்களுக்கு நன்றி கூறினேன். ஏதோ ஒரு தெய்வீக சக்திதானோ அந்தக் கதையைப் பிரசுரத்திற்கு அனுப்பாமல் என்னைத் தடுத்தது! யதார்த்தம், கற்பனை.... இவற்றிற்கு அப்பாலும் ஒன்று உண்டுதான்.

இனி ஒரு புதிய முடிவுடன் அந்தக் கதையை எழுதுவேன். ஆமாம், இராசையா "பிரதாப்" ஆகத்தான். ஆனால் மனோன்மணி "ஸ்மிதா" அல்ல; "பராசக்தி" என்ற பெயரில். பராசக்தி எனது அம்மாவின் பெயர்.

நன்றி: தரிசனம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link