சிறுகதைகள்


கடலடிப் பிரவாகம்

கூடல்.காம்
பார்வதி அக்காளுக்கு பேயோட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது எனக்கு பன்னிரெண்டு வயது. ஆமாம் ஏழாம் வகுப்பு தானே படித்துக் கொண்டிருந்தேன்.

அவள் வீரமண்டியிட்டு கைகளை முன்னால் ஊன்றி தலைமுடி முன்னால் வழிந்து முகத்தை மறைத்திருக்க சிறிது நேரம் அப்படியே இருக்கிறாள்.

பழையபடி உடுக்கும் "ஏய் ..." என்ற பூசாரியின் அதட்டலும்.

எனக்கு வயிற்றைக் கலக்குகிறது.

பார்வதி அக்கா தலையையும் உடம்பையும் வலது புறமாகச் சுற்றுகிறாள். அவளது நீண்ட கூந்தல் வட்டம் அடிக்கிறது. அவள் நிறுத்திய பின் தோளிலும் பின்புறமும் விழுகிறது.

"சொல்லு. யாரு நீ?" - பூசாரி.

அவள் பெருமூச்சு விட்டுக் கூரை முகட்டை முறைக்கிறாள். ஏற்கனவே செக்கச் சிவந்த அவள் முகம் இப்போது கன்றிப் போய் குங்குமமாய் இருக்கிறது. நெற்றியில் நிஜ குங்குமமும் திருநீறும் அப்பி அலங்கோலமாகக் கலைந்திருக்கிறது. கண்ணீர் வழிந்தபடி இருக்கிறது. அவள் பல்லைக்கடிக்கிறாள்.

எனக்குப் பயமாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து அங்கேயே இருக்க வேண்டுமென்று ஆசையாகவும் இருக்கிறது. பக்கத்தில் சௌந்திரராஜன் நின்று கொண்டிருக்கிறான். அவன் என் தோஸ்த். அவனுக்கு அவ்வளவு பயம் கிடையாது போலிருக்கிறது. ஒரு வேளை அவனும் என்னைப் பற்றி இப்படியே நினைத்துக் கொண்டிருந்தானோ என்னவோ.

சின்னப் பூசாரி இப்போது தன் பங்கிற்குப் பார்வதி அக்காவை மிரட்டுகிறான். "யாரு நீ? எங்கே வந்தே?"

"சொல்லலேனா உரிச்சிடுவேன்."

"உரிப்பியாடா?" பார்வதி அக்கா அவனை முறைத்து அவன் மேல் பாய்ப் போவது போல் இருக்கிறது.

சின்னப் பூசாரி ஒரு கணம் பயந்து விட்டான் என்று தான் தோன்றுகிறது. எதனாலோ எனக்கு பூசாரியை அந்த அக்கா ஏதாவது செய்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

ஆனால் பெரிய பூசாரி சட்டென்று கீழே இருந்த எருக்கங் குச்சியை எடுத்து அக்காவின் முகத்தில் அடிக்கிறான்.

அவள் பின் வாங்குகிறாள்.

எனக்கு அந்த அக்கா மேல் பாவமாக வருகிறது. அப்புறம் அந்த அடியெல்லாம் பேய்க்குத் தானே விழுமென்று நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

"யாரு நீ? எந்த ஊரு? எப்பிடிச் செத்தே?"

"சொல்ல மாட்டேன்"

பெரிய பூசாரி எருக்கம் குச்சியால் வெளுத்து வாங்குகிறான்.

"சொல்ல மாட்டேன்."

"சொல்ல மாட்டேன்."

"சொல்ல மாட்டேன்."

பேயாய் அல்லாமல் நிச்சயமாக பார்வதி அக்காவால் இந்த அடிகளைத் தாங்க முடியாது.

சுற்றியிருக்கிற ஆண்களும் பெண்களும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். எருக்கங் குச்சி பிய்ந்து தீர்ந்து போகிறது.

கீழே பார்க்கும் பூசாரி அங்கே இன்னும் இரண்டு குச்சிகளே இருப்பதைப் பார்த்து "இன்னும் நாலு எருக்கங் குச்சி கொண்டாங்க." என்கிறான்.

பெரியசாமி அண்ணன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்னையும் சௌந்திரராஜனையும் பார்த்து "சந்தப் பேட்டைக்கிப் போயி நாலு எருக்கங்குச்சி ஒடிச்சாங்கடா" என்கிறார்

நாங்கள் தலையாட்டிவிட்டு ஓரடி கூட எடுத்து வைக்கவில்லை. பார்வதி அக்கா ஒரு சத்தம் கொடுக்கிறாள், "டேய்.... குச்சியா ஒடிக்கப் போறீங்க?"

அவ்வளவுதான். ஓடுனேனோ, பறந்தேனோ, எந்தத் திசையில் போனேன், என்ன ஆனேன், சௌந்திரராஜன் என்ன ஆனான் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. நிலைப்படி வழியாக என் உடம்பு பாய்ந்ததாக மட்டும் ஏதோ கொஞ்சம் ஞாபகம். அப்புறம் ஒன்றும் ஞாபகமில்லை. மீண்டும் எனக்கு என் நினைவு வந்தபோது எங்கள் தெருக்கோடியில் பால் நாயக்கர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். டவுசர் நனைந்திருந்தது. திரும்ப வீட்டுக்குப் போக பயம்.

என் வீடும் பார்வதி அக்கா வீடும் எதிர் எதிர். இரண்டு வீட்டு நிலையின் நேராக உட்கார்ந்து கொண்டு இரு வீட்டாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியும். அவ்வளவு நேர் எதிர். எங்கள் இரண்டு வீடுகளோடு இன்னும் இரண்டு வீடுகளும் சேர்ந்து அது ஒரு காம்பவுண்ட். காம்பவுண்ட் சுவர் இல்லாத காம்பவுண்ட். நான்கு வீடுகளுமே அடுப்படியையும் உள்ளிட்ட ஒரே அரையைக் கொண்ட சின்ன வீடுகள். குளியல் எல்லாம் வெளியே. திண்ணைகள் உண்டு.

பார்வதி அக்கா ரொம்ப நல்லவள். ரொம்ப ரொம்ப நல்லவள். அவளை யாரும் கெட்டவள் என்று சொன்னதே கிடையாது - அவளது புருஷன் இந்தத் துரைச்சாமி அண்ணனையும் அவரது வைப்பாட்டி பேச்சிமுத்துவையும் தவிர.

துரைச்சாமி அண்ணன் இந்த அக்காவைத் திட்டுவதற்கும் அடிப்பதற்கும் கூட இந்தப் பேச்சிமுத்துதான் காரணம். அவள் எப்படியாவது இந்த அண்ணனோடு வம்பிழுத்து உதை வாங்கிக் கொண்டு பார்வதி அக்காவுக்கும் ரெண்டு அடி வாங்கிக் கொடுத்து விடுகிறாள்.

இந்தப் பேச்சிமுத்துக்கு துரைச்சாமி அண்ணனைவிட வயது கூடவாம் - அம்மா சொல்வாள்.

துரைச்சாமி அண்ணனுக்கு தச்சு வேலை. எங்கோ வேலைக்குப் போன இடத்தில் வேறு ஒருத்தன் பெஞ்சாதியாக இருந்த இவளை இவர் இழுத்துக் கொண்டு வந்து விட்டாராம். இவள் அப்போது எவ்வளவோ நகை போட்டிருந்தாளாம். "இல்லாட்டி இந்த சுரும்பாயிய எவன் சீந்துவான்," என்பாள் அம்மா. இந்த சுரும்பாயி அம்மா வைத்த பெயர்தான். எப்போதும் மூஞ்சியை சுரித்து வைத்துக் கொண்டிருப்பதால் சுரும்பாயி. ஆனால் அவளுக்கு இது தெரியாது. அவள் முன்னால் யாரும் அதைச் சொல்வதில்லை.

துரைச்சாமி அண்ணன் ஏழெட்டு மாதம் முன்னாடிதான் பார்வதி அக்காவைக் கல்யாணம் செய்து கொண்டு வந்தார். அதற்கு முன் இந்த வீட்டில் அவரும் சுரும்பாயியும் தான் இருந்தார்கள். அவளும் அவருடன் வந்து பதினைந்து வருஷம் இருக்குமாம். இந்தக் கல்யாணத்தின் போது அவருக்கு வயது நாற்பத்து ஐந்தாம். பார்வதி அக்காவுக்கு பதினாறு அல்லது பதினேழுதான் இருக்குமென்று சொன்னார்கள். அவள் ஏதோ இல்லாத இடமாம். தாய் தகப்பன் கிடையாதாம். பாட்டி எடுத்து வளர்த்தாளாம். அவள் வந்ததும் கொஞ்சம் பேர் அவளுக்காக வருத்தப்பட்டார்கள். கொஞ்சம் பேர் துரைச்சாமி அதிர்ஷ்டக்காரன் என்றார்கள்.

இவர்கள் மூவருக்குள் அடிக்கடி சண்டை நடக்கும்.

ஒரு நாள் காலை விடிந்ததும் விடியாததுமாகப் பெரிய சண்டை. துரைச்சாமி அண்ணன் என் அப்பாவிடம் சத்தமாக சுரும்பாயியைக் காட்டி, "நாங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா இவ ஒடனே தலையத் தூக்கிப் பாக்குறா," என்றார். இதைக் கேட்டுக் குண்டா சட்டியும் தண்ணீருமாக சாணி கரைக்க வந்த அம்மா திரும்பி உள்ளே போய் விட்டாள். அவள் ஏதோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு போவது போல் எனக்குத் தோன்றியது.

துரைச்சாமி அண்ணன் பேசியதற்கு சுரும்பாயி "நான் தான் மொதல்ல வந்தவ. மொதல்ல எங்கிட்டப் பேசிட்டு அவகிட்டப் பேசு," என்றாள்.

எனக்கு விளங்கவில்லை. இவர்கள் என்ன பேசுகிறார்கள்? இவள் எதற்காக அதை கேட்கிறாள்? அப்படிக் கேட்டால் தான் இவர்களுக்கு என்ன?

இவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு உள்ளே வந்த அப்பா "வெக்கக் கேடுதான்," என்று அடங்கிய சிரிப்பாக சிரித்தார். அம்மா முழுதாகவே சிரித்துவிட்டாள். எனக்கு இந்தப் "பேச்சின்" மேல் கவனம் படர்ந்தது. அது வெறும் பேச்சல்ல என்பது மட்டும் தெளிவில்லாமல் தெரிந்தது.

என்னதான் இருந்தாலும் எத்தனை நேரம் ஊரார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்க முடியும்? மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டுப் பக்கம் வருகிறேன். இன்னும் அந்த அக்கா வீட்டில் உடுக்கு சத்தம் கேட்கிறது. உடுக்கு சத்தத்தை மீறிக்கொண்டு திடீரென்று அந்த அக்காளின் குரல் கேட்கிறது.

"டேய், நான் மஞ்சம்பட்டி செல்லப்பன்டா."

இதைக் கேட்டதும் வெளியே நின்று கொண்டிருந்த ஓரிருவர் கூட சுவாரஸ்யப்பட்டவர்களாக உள்ளே போகிறார்கள்.

எனக்கு பயத்தையும் மீறிக் கொண்டு ஆசை வருகிறது. பழையபடி பார்க்க வேண்டுமென்று. உடனே பயத்திற்கும் ஆசைக்கும் இடையில் ஒரு அருமையான யோசனை. உள்ளே போனால் தானே பிரச்சினை. அவர்கள் வீட்டின் வட புறச்சுவரில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதையடுத்துக் கொஞ்சமான இடைவெளியில் அடுத்த வீட்டுச்சுவர் வந்து விடுவதால் அது சரியாக யாருக்கும் தெரியாது. அங்கே போய்ப் பார்த்தால்?

அங்கே போகிறேன். எனக்கு முன்பே அங்கே நான்கைந்து பெண்கள் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஆசைக்கும் பயத்திற்கும் நடுவில் இருந்தவர்கள் தான் போலிருக்கிறது. நான் போய் முதலில் ஓரமாக நின்று பின் மெதுவாக முண்டுகிறேன். கரூர் அத்தை என்னைக் கவனித்துவிட்டு "இந்தா வந்துட்டான்," என்று சிரிக்கிறாள். அங்கு உள்ளே எல்லாரும் சிரிக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் நான் ஓடியதைப் பார்த்தவர்களாக இருக்க வேண்டும்.

"சரி பாரு," என்று கரூர் அத்தை என்னை முன்னால் விட்டு பின்னால் நின்று கொள்கிறாள்.

பார்வதி அக்கா இப்போது முன்னைவிட அதிகம் களைத்துச் சோர்ந்திருக்கிறாள். பூசாரி முகத்தில் ஜெயித்துவிட்ட மாதிரி ஏதோ தெரிகிறது. சின்னப் பூசாரி முன்னால் இருக்கும் தூபக் கரண்டியில் தாராளமாக சாம்பிராணியைப் போடுகிறான். குபீரென்று கிளம்பும் புகையை பார்வதி அக்கா முகத்தை நோக்கி ஊதி விடுகிறான்.

அக்கா, "டேய் ஊதாதடா," என்று கத்துகிறாள்.

"சொல்லு, நீ எப்பிடி செத்தே?"

"சொல்றேன். சொல்றண்டா. நான் பாவா நாய்க்கரு பலசரக்குக் கடையில வேலை செஞ்சேன். ஒரு நாளு அவரு கூப்புட்டப்ப உள்ள கொஞ்சம் பொட்டுக் கடலையும் சக்கரையும் சேர்த்துத் தின்னுட்டு இருந்தேன். அதுனாலே ஒடனே வர முடியல. அவரு ரெண்டாந்தடவ கூப்புட்டாரு. தின்னத முழுங்கியும் முழுங்காமையும் வெளியே வந்தேன், அதப் பார்த்துட்டு தின்னிப் பயலேனு சொல்லி ஒரு படிக்கல்ல எடுத்து எறிஞ்சாரு. அது பொட்டுல பட்டு நான் செத்துப் போயிட்டேன்."

"அப்பறம்?"

"என்னைய மூட்டையா சாக்குல கட்டி வண்டியில சரக்கோட சரக்கா ஏத்தி ராத்திரியில தண்டவாளத்து மேல வச்சுட்டு வந்துட்டாங்க."

"இந்தப் பொண்ண எப்பிடிப் பிடிச்சே?"

திடீரென்று அவள் நிமிர்ந்து பூசாரியை முறைத்து, "எப்பிடியோ பிடிச்சேன். ஒனக்கென்னடா?" என்கிறாள்.

பூசாரி பழையபடி இரண்டு அடி வைக்கிறான்.

அவளுக்கு மயக்கம் வந்து விடுகிறது. எல்லோரும் பரபரக்கிறார்கள். அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள்.

பூசாரி எல்லோருக்கும் சொல்வது போல பொதுவாகப் பேசுகிறான்.

"ஆசாமி குடுமியக் குடுத்துட்டான். நாளைக்கி வெளிய இழுத்து எறிஞ்சுடுவேன். இருந்தாலும் ஆளு கல்லுளி மங்கன். நானும் எத்தினியோ பசங்களப் பாத்திருக்கேன். இவன மாதிரி பதுங்குறவனைப் பாத்ததில்ல," என்று யாரோ மனிதனைப் பற்றிப் பேசுவது போலப் பேசுகிறான். பேயோட்டுவது அன்று அதோடு நிறத்தப்படுகிறது.

மயக்கம் தெளிந்து எழுந்த பார்வதி அக்கா எழுந்து தள்ளாடி அழுதபடி வெளியே வருகிறாள். நாங்களும் வாசலுக்கு வருகிறோம்.

அக்கா குளிக்கிற பக்கம் போய்விட்டுத் திரும்பும்போது நான் பூசாரி அடித்த அடிகள் பேயோடு போயிருக்குமோ வென்று அவள் உடலைப் பார்க்கிறேன். கைகளில் விழுந்த அடிகள் இன்னும் வரி வரியாகத் தெரிகின்றன.

எங்கள் வளைவில் நாலாவது வீட்டில் குடியிருப்பவர் சதாசிவம் மாமா. அவர் வீட்டில் அவரும் அவர் அம்மா ரெங்கா பாட்டியும் தான். சதாசிவம் மாமா கருப்புச் சட்டைக் கட்சி. எப்போது பார்த்தாலும் பெரியார் பெரியார் என்று சொல்லிக் கொண்டிருப்பார். என் அப்பா கூட ஒரு நாள், "என்னப்பா சதாசிவாம்னு பேர வச்சுக்கிட்டு சதா பெரியார் பெரியார்னு சொல்லிக்கிட்டு இருக்கே" என்று கேலி செய்தார். அவர் எங்களூர் பஞ்சு மில்லில் கிளார்க்காக இருந்தார். அவருடன் வேலை செய்கிறவர்களும் நண்பர்களுமாக பலர் நான்கு பேர் ஐந்து பேரென்று அடிக்கடி வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்துவிட்டால் டீ சப்ளைக்குக் கடைக்கு ஓடுவது நான்தான்.

அன்றைக்கு சாயந்தரம் அவர் வீட்டிற்கு இரண்டு மூன்று பேர் வந்திருக்கிறார்கள். டீ வாங்கி வந்த கையோடு நானும் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். அவர்களோடு எங்களை எருக்கங்குச்சி கொண்டாரச் சொன்ன பெரியசாமி அண்ணனும் இருக்கிறார். அவர் அன்று பேயோட்டிய இடத்தில் நடந்ததையெல்லாம் சதாசிவம் மாமாவிடம் சொல்லி அவரிடம் "சாமியில்ல, பூதமில்லேனு சொல்றீங்களே, இதுக்கு என்னா சொல்றீங்க?" என்று கேட்கிறார்.

சதாசிவம் மாமா பதில் சொல்கிறார்: "இதெல்லாம் நரம்புத் தளர்ச்சி, மனத் தளர்ச்சிய சேந்ததுங்க. பலவீனமான மனம் உள்ளவங்களக் கூப்புட்டு இப்பிடி உக்கார வச்சு, உடுக்கு அடிச்சு எருக்கம் குச்சியிலயும் அடிச்சா அவங்களுக்கே என்ன நடக்குதுனு வெளங்காம தோணுனதப் பேச ஆரம்பிச்சுடுவாங்க."

"பேயி மனுஷனா இருந்தப்ப எப்பிடி அவன் செத்தான்னு எல்லாம் சொல்லுதே. அந்த செல்லப்பன் ரயில்லே அடிபட்டு செத்ததுதான் நமக்கெல்லாம் தெரியுமில்ல? ஊருக்குப் புதுசான இந்தப் பொண்ணுக்கு எப்பிடித் தெரியும்?"

"அதெல்லாம் கேள்விப்பட்ட கதைங்க பெரியசாமி. இங்கதான் இந்த மாதிரி கதைங்களுக்கு பஞ்சமேயில்லியே. கூப்புட்டு உக்கார வச்சு அடிச்சா அப்புறம் ஏதோ ஒண்ண சொல்ல வேண்டியதுதான்." அவர் கூட இருந்தவர்களில் ஒருவர் கேட்கிறார். "இந்தப் பொண்ணுக்கு மனக்கோளாறு இருக்கும்னு சொல்றீங்களா?"

"இருக்கலாம். இருக்கணும்."

"எத வச்சுச் சொல்றீங்க?" - இது பெரியசாமி அண்ணன். சதாசிவம் மாமா குரலை இறக்கிக் கொண்டு, "கொஞ்சம் வயசான புருஷன். அதுலயும் போட்டிக்கி ஒருத்தி. சண்டை, வெக்கம் எல்லாம் தான்," என்கிறார்.

இது பெரியசாமிக்குப் பிடிக்கவில்லை. அவர் "சேச்சே", என்கிறார். "என்னாங்க நீங்க அந்தப் பொண்ணு விஷயத்துல அப்பிடிச் சொல்றீங்க? அதுவும் வந்து ஏழெட்டு மாசம் ஆச்சே. யாரையாச்சும் தல நிமிந்து பாத்திருக்கா? அன்னிக்கு அந்த ரௌடிப் பய நந்தகோபாலு தண்ணிக் கொழாய் கிட்ட நின்னு என்னமோ சொன்னானு இந்தப் பொண்ணு என்ன கேள்வி கேட்டுச்சு."

"அது சரிங்க. அது ரொம்ப நல்ல பொண்ணுதான். ஆனா ஒருத்தன் பசி இருந்தும் திருடாம இருக்கறதுனால அவன் பசியால வேதனப்படலேனு இல்ல பாருங்க" என்று சொன்ன மாமா மேற்கொண்டும் ஏதோ சொல்லப் போனவர் சட்டென்று நான் அங்கிருப்பதை நினைவு கொண்டு விட்டவராய் "ஜெயா, நீ கிளாஸ் எடுத்துட்டுப் போப்பா," என்கிறார். நான் டீ கிளாஸ்களை எடுத்துக் கொண்டு புறப்படுகிறேன்.

அந்த மாமா அப்போது என்னை வேண்டுமென்றே போகச் சொல்லி விட்டது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஏன் என்பது மட்டும் தெரியவில்லை. ஆனால் இந்த மாமா பேசப் போவதும் அன்றைக்குத் துரைச்சாமி அண்ணன் சொன்ன "பேச்சும்" ஒரே இனமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் மனதில் உண்டாகிறது.

இவர் சொன்னதில் ஒரு விஷயம் மட்டும் உடன் புரிகிறது. அவர் இந்தப் பேய்க் கதைகளைப் பற்றிச் சொன்னது. இந்தக் கதைகளைக் கேட்டுப் பயந்தே ரத்தம் சுண்டிப் போக நியாயமிருக்கிறது.

இந்தக் கதை சொல்லும் காரியத்தில் என் பாட்டியே பெரிய நடமாடும் நூலகம். அவளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் சுமார் முப்பது கதையாவது தெரியும். ஊரில் யாராவது தூக்குப் போட்டுக் கொண்டால், விபத்தில் செத்தால், கொலை செய்தால், செய்யப்பட்டால், வழிப்பறி நடந்தால், பேய் பிடித்தால், முனி அடித்தால், ஒவ்வொன்றிற்கும் ஒரு பத்து கதையாவது, பத்துப் பெண்களையாவது திண்ணையில் உட்கார வைத்துக் கொண்டு படு சுவாரஸ்யமாய் நடித்துக் காட்டிச் சொல்வாள்.

"அம்மா! மாட்டுக்காரன் கொலபதறி சொல்றான் - அண்ணேன், பணத்தையெல்லாம் எடுத்துக்க, காளைகளயும் பிடிச்சுக்கிட்டுப் போ; என்ன உசுரோடு விட்டுடு; ஒனக்குக் கோடி புண்ணியம் உண்டுனு கால்ல விழுகப் போறான். அதுக்கு இந்தச் சண்டாளப்பாவி, அதெப்படிடா, நாளைக்கி நீ வந்து ஆள அடையாளம் காட்டமாட்டேனு என்னா நிச்சயம்னு அருவாள ஓங்குறான். அம்மா... அப்பத்தாம்மா அந்தக் காளமாடு பாஞ்சு அந்தத் திருடன் வயித்துலக் குத்தி தூக்கி எறியுது. அவன் வளத்த பிள்ளையில்ல அது! அதுக்குத் தெரிஞ்சு போச்சும்மா."

அவளே பேயை நேரில் பார்த்த கதையையும் சொல்லியிருக்கிறாள். "இப்படித்தான் நம்ம பொட்டல்ல கொல்லைக்கி உக்காந்து இருக்கேன். அம்மாசி இருட்டு. கொஞ்சம் தூரத்துல யாரோ மாதிரி இருக்கு. நான் அது யாருனு கேக்குறேன். பதிலு இல்ல. திருப்பியும் கேக்குறப்ப அது எந்திரிச்சு நிக்குது. பார்த்தா உருவம் ஆம்பளையாவும் தெரியுது, பொம்பளையாவும் தெரியுது. சந்தேகம் வந்து காலப் பாக்குறேன். காலு தரையில பாவல. ஆகா, இது மோசமில்ல பண்ண வந்திருச்சுணு பதட்டம் கிதட்டம் காட்டாம சட்டுணு நெருப்புப் பெட்டிய எடுத்து குச்சிய ஒரசி சுருட்ட பத்த வச்சேன். அவ்வளவுதான். நெருப்பக் கண்டுட்டா முண்டச்சி அப்புறம் அங்க எங்க நிக்கிறது?"

நானும் அவர்களோடு கூட உட்கார்ந்து இந்தக் கதைகளை ரொம்ப சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் ராத்திரியானதும் தான் கஷ்டம். கண்ணைத் திறந்தால் "அது" கதவிடம் நிற்பது போலிருக்கும். கண்ணை மூடினால் தலை மாட்டில் நிற்பது போலிருக்கும். ரொம்ப நேரத்திற்குத் தூக்கம் வராது. ஆனால் ஒண்ணுக்கு மட்டும் அடிக்கடி வந்துவிடும். வந்துவிட்டால் வெளியே வர பயம். அம்மாவையும் துணைக்கு எழுப்ப முடியாது. இதற்கெல்லாம் அம்மாவின் துணையை நாடி ஒரு வருஷத்திற்கு மேலாகி விட்டது. இனிமேல் கூப்பிட்டால் அவமானம். ஆகையால் கடைசி கட்டத்தில் வேறு வழியில்லாமல் கதவுத்தாளை நீக்கிக் கொண்டு வெளியே வருவேன். வெளியே ஏதோ உருவங்கள் மூலைக்கு மூலை நிற்கிற மாதிரி இருக்கும். ஒரு இடத்தையும் குறிப்பாகப் பார்க்காமல் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து கொள்வேன். ஒரு தடவை எழுந்திருக்க இருந்த நேரத்தில் உடம்பு ஒரு நடுங்கு நடுங்கி சிலிர்க்க, யாரோ பின்னல் இருந்து அழுத்தி விட்டதைப் போல அலற இருந்தேன். ஆனால் நல்ல வேளையாய் அலறவில்லை. அதற்குள் அது இயற்கையான முன்பே சில தடவைகள் ஏற்பட்டிருக்கிற உடல் குலுங்கல்கள் என்பது நினைவுக்கு வந்துவிட்டது. பழையபடி வீட்டிற்கு வந்து ஒருக்களித்த கதவு வழியாக நுழையும் அந்த கடைசி வினாடிதான் பயத்தின் உச்ச கட்டம் - ஏதோ அதுவரை தயங்கித் தொடர்ந்து வந்த பேய்கள் அந்தக் கடைசி நொடியில் ஐயோ இனியும் விட்டால் இவன் உள்ளே போய் விடுவானே என்று சட்டையைப் பிடித்து இழுத்துவிடப் போவதைப் போல.

அம்மா போனவாரம் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது பார்வதி அக்காவுக்குப் பிடித்திருப்பது மோகினிப் பிசாசு என்றாள். மோகினிப் பிசாசு பிடித்தவர்கள் தான் புருஷன் கழுத்தை நெறிக்கப் போவார்களாம்.

இது எனக்குச் சரிதான் என்று பட்டது. அந்த அக்காவைப் பற்றி முதல் நாள் துரைச்சாமி அண்ணன் அப்படித்தான் சொன்னார். தூங்கிக் கொண்டிருந்தவர், யாரோ கழுத்தைப் பிடிப்பதை உணர்ந்து விழித்துப் பார்த்தால் இந்த அக்கா அவர் குரல் வளையைப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறதாம். இவர் தள்ளிவிட்ட பிறகு கீழே விழுந்து பரக்க பரக்க முழிக்கிறதாம். பேச்சிமுத்து எழுந்து என்னாடி என்றதற்கு அவள் கழுத்தையும் பிடிக்கப் போய்விட்டதாம். அதற்குப் பிறகுதான் பேய் விரட்ட ஏற்பாடு செய்தார்கள்.

மறுநாளும் பேய் விரட்டுவது தொடர்ந்தது. நான் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பாகவே பூசாரிகள் வந்துவிட்டார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த பார்வதி அக்காவிடம் பெரிய பூசாரி "நீ கவலப்படாத தங்கச்சி. இன்னியோட ஒன் சனியன் தொலஞ்சது" என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை. மிகுந்த வேதனையோடு எழுந்து உள்ளே போனாள். அவள் போனதும் இவர்கள் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்கள். ஏற்பாடுகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தன. எனக்கு அன்றைக்கும் இருந்து பார்க்க வேண்டுமென்று ஆசையிருந்தாலும் வேறு வழியில்லாமல் பள்ளிக்கூடம் போனேன்.

நான் மறுபடியும் மத்தியான சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தபோது எதிர் வீட்டில் ஏகக் கூட்டம். வாசலிலேயே பத்து இருபது பேர் நிற்கிறார்கள். நேரடியாகக் கேட்டால் யாரும் சரியாகப் பதில் சொல்ல மாட்டார்கள் என்று ஒண்டி ஒண்டி ஒட்டுக் கேட்டதில், பேய் அக்காவை விட்டுப் போய்விட ஒப்புக் கொண்டு விட்டதாகவும் இப்போது சில நிபந்தனைகளை விதிப்பதாகவும் தெரிகிறது. நான் பழையபடி வடபுறத்து ஜன்னலை சரண் அடைந்து தலையை மட்டும் நுழைத்துக் கொண்டு பார்க்கிறேன்.

பார்வதி அக்கா ஆடி ஆடி அடிவாங்கி வாங்கி களைத்து அழுத கண்ணீரும் சோர்வுமாக இருந்த போதிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஜன்மம் மாதிரி, ஆண்பிள்ளை மாதிரி உட்கார்ந்திருக்கிறாள். அவள் முன்பாக எப்போதும் இருக்கும் பொருள்களோடு இப்போது சில பொருள்கள் கூடுதலாக இருக்கின்றன. அவைகளில் எடுப்பாகத் தெரிவது ஒரு கோழி, ஒரு பாட்டிலில் ஏதோ வெள்ளையாக - பின்னால் தெரிகிறது அது சாராயமென்று.

பூசாரி சொல்கிறான். "அதுதான் கருஞ்சாதிக் கோழி கேட்டே; கொண்ணாந்துட்டோம். சாராயம் கேட்டே; இந்தா வந்தாச்சு, அப்புறம் போறதுக்கு என்ன?"

"போறண்டா," என்று அக்கா அவனை முறைக்கிறாள்.

"பின்ன பொறப்புடு. அப்புறம் என்ன தாமசம்? சாப்டாச்சு, குடிச்சாச்சு, அப்பறம் மரியாதையா பொறப்பட வேண்டியது தானே?"

"இன்னும் குடிக்கலடா," என்று சாராய பாட்டிலில் கை வைக்கிறாள்.

"குடி."

அதை கடகடவென்று குடிக்கிறாள்.

அங்கே ஒரு நிசப்தம்.

"பொறப்புடு"

"ம்" - அவள் எழுந்து நிற்கிறாள். உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்திருக்கின்றனர்.

"வழி விடுங்க. வழி விடுங்க."

அவள் வெளியே நடக்கிறாள்.

ஜன்னல் பக்கம் நின்று கொண்டிருந்த நாங்கள் எல்லோரும் வாசல் பக்கம் ஓடி வருகிறோம்.

அங்கே ஒரு கருங்கல் இருக்கிறது. இவர்கள் தயாராக கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும். பூசாரி அதைத் தூக்கி அவள் தலையில் வைக்கிறான்.

"நட."

அவள் நடக்கிறாள். இல்லை ஓடுகிறாள். அங்கே இருந்த ஆண்கள் எல்லோரும் கூட ஓடுகிறார்கள். நானும் என்னையறியாமலே ஓடுகிறேன். யாரோ ஒருத்தர் ஓடும் போதே திரும்பி "பொம்பளைங்க யாரும் வந்துடாதீங்க," என்று கத்துகிறார். பேய் இறங்குகிற நேரத்தில் யாரும் பெண் இருந்தால் இவளை விட்டு விட்டு அவளைப் பிடித்துக் கொள்ளுமாம்.

பார்வதி அக்கா பாதித் தூரம் போனதுமே அவள் போகும் திசையைப் புரிந்து கொண்டு ஒருவன். "டேய் பெரிய நாய்க்கரு தோட்டத்துப் புளிய மரத்துக்குப் போவதுடா," என்று கத்துகிறான்.

உண்மையில் அக்கா அங்கேதான் போய் அந்த மரத்தடியில் கல்லைப் போடுகிறாள்.

இவள் வருவதைப் பார்க்கும் அந்தத் தோட்டத்து வேலையாள் ஒருவன், "என்னா எழுவுடா இது? ஊர்ல உள்ள சனியன் எல்லாம் இங்க வந்து சேருது," என்று அங்கலாய்க்கிறான். அங்கே நின்று கொண்டிருக்கும் பெரிய நாய்க்கர் ரொம்ப சாதாரணமாக "வரட்டும், வரட்டும், எல்லாம் தோட்டத்துக்குக் காவலா இருக்கட்டும்," என்கிறார்.

இந்தப் பெரிய நாய்க்கர் ஒரு அசாதாரண பேர் வழி. அந்தப் புளியமரம் பேய் மரமென்று ஊரே பயப்பட்டு, இருட்டிய பிறகு அதை யாருமே கண்ணெடுத்துப் பார்க்கத் துணியாதபோது இவர் ராத்திரியும் பகலும் அதன் அடியில் தான் கட்டில் போட்டுப் படுத்திருப்பார். யாராவது பேய் பயமில்லையா என்று கேட்டால் "ம் பேயி வந்து..." என்று பேயைக் கெட்ட வார்த்தைகளால் அலட்சியப்படுத்துவார்.

பார்வதி அக்காள் அந்த மரத்தடியில் கல்லைப் போட்டதும் பெரிய பூசாரி அவள் தலை மயிரைப் பிடித்து அதன் நுனியை மரத்தோடு வைத்து ஒரு ஆணியைக் கொண்டு அறைகிறான். ஒரு பத்து மயிர் அதில் சிக்கியிருக்கலாம். பின்பு அதைக் கத்தரித்து விட்டு விட்டு அவளைத் திருப்பி "திரும்பிப் பாக்காம நட," என்று தள்ளி விடுகிறான். அந்தத் தள்ளலில் ஒரு ஊரையே ஜெயித்த கர்வம். பேய் இறங்கி விட்டதாம்.

இவ்வளவு நேரம் ஓடிவந்த அந்த அக்காள் இப்போது நடக்கவே தள்ளாடுகிறாள். துரைச்சாமி அண்ணன் ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார். நான் கூட்டத்தில் கடைசி ஆளாகப் போய் விடக்கூடாது என்ற பயத்தில், முந்தி பாதிக் கூட்டத்திற்குள் வந்து விடுகிறேன். அப்போதுதான் என்னைக் கவனிக்கும் பெரியசாமி அண்ணன் "நீயேண்டா இங்க வந்தே?" என்கிறார்.

இந்தக் கேள்விதான் சனியனாய் இரவெல்லாம் என்னைத் தூங்க விடாமல் அடிக்கிறது. நான் அங்கே போயிருக்க வேண்டாம் என்பது அப்போதுதான் தெரிகிறது. அதென்ன ஒன்றை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட அவ்வளவு பயம் தெரிவதில்லை. ராத்திரி வந்ததும் அப்படிப் பயம் வந்து விடுகிறது? இந்த பயம் பேய் விஷயத்தில் மட்டுமல்ல.

ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் சுற்றுலா கூட்டிக் கொண்டு போயிருந்தார்கள். அதில் கோயில் குன்றமும் உண்டு. அங்கே ஒரு குறுகலான ஆபத்தான இடம். அதைத் தாண்டிப்போக மனமில்லாமல் பல மாணவர்கள் நின்று விட்டார்கள். நானும் ஒன்றிரண்டு பேரும்தான் தைரியமாகத் தாண்டிப் போய்விட்டு வந்தோம். ஆனால் வீட்டிற்கு வந்து ராத்திரி படுத்ததும், அந்த இடத்தைப் போய் தாண்டினோமே விழுந்து தொலைத்திருந்தால்..." என்ற எண்ணம் வந்து பட்ட கஷ்டம் சாதாரணமானதல்ல.

இந்தப் பேயோட்டத்திற்குப் பிறகு பார்வதி அக்கா கொஞ்சம் நன்றாக இருக்கிற மாதிரி தான் இருந்தது. உடம்பு கூடக் கொஞ்சம் தேறியிருந்தது. ஆனால் பழைய அக்காளைப் பார்க்க முடியவில்லை.

அப்போதெல்லாம் வீட்டில் எவ்வளவு சண்டை நடந்திருந்தாலும் என்னைப் பார்த்ததும் புன்னகை செய்வாள். கூப்பிட்டு "அன்னிக்கி நீ பாடுனீயே பால்கோவா சினிமாப் பாட்டு, அத இப்பப் பாடு," என்பாள். நான் ஒரு கதை சொல்லட்டுமா?" என்பாள். கடைக்குப் போய் ஏதாவது சாமான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் தின்பதற்கு ஏதாவது கொடுக்காமல் விடமாட்டாள். அவள் சொல்வாள், அவளுக்கும் என் வயதில் தம்பி இருந்தானாம். ஆனால் அவன் நல்ல சிகப்பாம். "பரவாயில்ல, செகப்புத் தம்பிக்கிப் பதிலா சறுப்புத் தம்பி கெடச்சிருக்கே, இரு" என்பாள் இப்போது அவள் அப்படியில்லை.

இப்படியே இரண்டு மூன்று மாதம் போகிறது.

அதற்குப் பிறகு பழையபடி அவளைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் பழைய பேயே வந்து பிடித்திருக்க வேண்டுமாம். அல்லது பெரிய நாயக்கர் தோட்டத்தில் அது இறங்கிய நேரத்தில் அங்கிருந்த வேறு ஒன்று பிடித்திருக்க வேண்டுமாம்.

இப்போது மதமதவென்று உட்கார்ந்திருக்கிறாளாம். ஒன்று சொல்ல ஒரு முறைக்கு நாலு முறை கூப்பிட வேண்டியிருக்கிறதாம். சில சமயம் தானாகப் பேசுகிறாளாம். தானாகச் சிரிக்கிறாளாம்.

சதாசிவம் மாமா ஒரு நாள் நெற்றியில் அடித்துக் கொண்டு "முட்டாப் பசங்க. எங்கயாச்சும் டாக்டர் கிட்டக்கொண்டு போயி காட்டச் சொல்லும்மா," என்று அவர் அம்மாவிடம் சொல்கிறார்.

ஆனால் இவர்கள் பழையபடி பேயோட்டத்தான் யோசிக்கிறார்கள்.

ஒரு நாள் விடுமுறை தினம். மத்தியானம் நான் எங்கள் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். வேறு யாருமில்லை. பார்வதி அக்கா அவள் வீட்டிலிருந்து வெளியே வருகிறாள். வாய் நிறைய வெற்றிலை. சிவந்து போயிருக்கிறது. அவர்கள் வீட்டிலும் அன்று கறிக் குழம்பு. நான்தான் எங்கள் வீட்டிற்கு வாங்கியபோது அவர்களுக்கும் வாங்கி வந்தேன். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி அவள் முகத்திலும் அசைவிலும் தெரிகிறது.

வெளியே வந்தவள் வெளிப்பக்கமாக எச்சிலைத் துப்பிவிட்டு அங்கேயே நின்று நாக்கை நீட்டி, நீட்டி கீழ்க் கண்ணால் அதைப் பார்க்க முனைகிறாள். அது எப்படிச் சிவந்திருக்கிறது என்று பார்க்க விரும்புவது தெரிகிறது. நான் அவளையே பார்த்துக் கொண்டிருகிறேன்

நாக்கு சிவந்திருப்பதைக் கண்டு திருப்தி கொண்டவளாக வீட்டிற்குள் திரும்ப இருந்தவள் என்னைப் பார்த்து விடுகிறாள். பார்த்தவள் சிரிக்கிறாள் அவளது சிவந்த வாய் அழகாக இருக்கிறது.

தீடீரென்று அவள் கேட்கிறாள், "ஜெயா, நான் அழகா இருக்கேனா? என்னைக் கட்டிக்கிறியா?"

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link