சிறுகதைகள்


எங்கும் மனிதனே

கூடல்.காம்
ராகவன் வீட்டின் முன்னால் நின்று அந்தப் பெரிய பஸ், ர்... ர்.... என்றது. ராகவன் விழித்துக் கொண்டான். அவன் தங்கியிருக்கும் வீடு ரோட்டுக் கரையில்தான் இருக்கிறது என்றாலும் பஸ்கள் அங்கே நிற்பது வழக்கமில்லை... அதுவும் இவ்வளவு அதிகாலையில்.

மணி ஐந்து இருக்குமா? இருக்கும். அது ஐந்து மணி பஸ்தான். அதற்கும் முன்பாக வடக்கே வண்டி கிடையாது. இது அடுத்த வண்டியாக இருந்தால் இந்நேரம் விடிந்திருக்கும்.

வண்டிக்குள் இருந்து யாரோ சத்தமாகச் சொல்வது கேட்டது. "செக்கிங், சீக்கிரம் குடிங்க. இல்லாட்டி பதறாம குடிச்சுட்டு அடுத்த வண்டிக்கி வாங்க" சொல்லிய தொனியிலிருந்து அது வெறுமனே கேலிக்காகச் சொல்லப்பட்டது என்பது புரிந்தது. இதற்கு "இந்தா வந்தாச்சு" என்ற பதிலும் "சாமி"கடை அருகில் இருந்து கேட்டது. அது செக்கிங் சதாசிவத்தின் குரல். சதாசிவத்தை ராகவனுக்குத் தெரியும். அவருக்கு அந்த ஊர்தான். காலையில் டூட்டிக்கு வந்தவர் எதிர்க்கரையில் இருந்த சாமி டீக்கடையில் குளிருக்குக் கொஞ்சம் "கரம்" ஏற்றிக் கொள்ளலாம் என்று டீக் கிளாஸைக் கையில் ஏந்தியபோது வண்டி வந்திருக்க வேண்டும். ஆகையால் டீயையும் விட முடியாமல் வண்டியையும் விட முடியாமல் கையைக் காட்டி சுழற்றி ஊதி டீயைக் குடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று இவனாக அனுமானித்துக் கொண்டான்.

இவன் திண்ணையில் ரோட்டைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்திருந்தவாறு கண்ணைத் திறந்து பார்த்தான். பார்த்த போது பஸ்ஸின் உள் விளக்குகளால் பஸ்ஸூம், சாமி கடை வெளிச்சத்தால் பஸ்ஸின் அடியும் தெரிந்தன. கொஞ்ச நேரத்தில் வேகமாக வந்து லாவகமாக ஏறும் செக்கிங் சதாசிவத்தின் காக்கி பேண்ட் கால்கள் தெரிந்தன. கண்டக்டரின் "ரைய் - ட்" என்ற குரலைத் தொடர்ந்து பஸ் புறப்பட்டது.

பஸ் சென்ற பிறகும் சிறிது நேரம் வரை செக்கிங் இன்ஸ்பெக்டரின் காக்கி பேண்ட், நாட்டுச் செருப்பு, ஏறிய லாவகம், வகையறா அவன் நினைவுத் திரையில் நின்றன. அவர் எப்போதும் அப்படித்தான். பஸ் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் வாசல் கம்பிகளைப் பற்றித் தொத்தி புட்போர்டில் வலது காலை வைத்து, இடதுகால் வெளியே பூமியை நாற்பத்தைந்து டிகிரியில் பார்த்துக்கொண்டு வர கொஞ்சம் தூரம் அப்படியே போவார். அப்புறம்தான் உள்ளே போவார். இது ஒரு ரசிக்க வேண்டிய காட்சியாக இவனுக்குத் தோன்றும். ஏனென்றால் அவரது வயதிற்கு இது ஒரு வயது மீறிய சாகசம். அவருக்கு என்ன வயதிருக்கும். வருஷங்கள் என்ற யூனிட்டில் சரியாகத் தெரியாவிட்டாலும் செயல் திறமை என்ற வகையில் அவரைப் போன்றவர்கள், வண்டி பூரணமாக நின்றுவிட்டதா என்று ஒரு முறை செக் செய்து கொண்டு ஏறி இறங்குகிற வயதுதான். ஏதோ தனியார் கம்பெனி என்பதால் நட்பையோ உறவையோ தள்ள முடியாமல் இந்த வேலையைக் கொடுத்திருந்தார்கள் என்றும் கேள்விப்பட்டிருந்தான். வண்டியிலிருந்து இறங்கும் போதும் அவர் அப்படித்தான். வண்டி சரியாக நிற்பதற்குள் வண்டியோடு இரண்டடி ஓடி நிற்கிற முறையில் இல்லாமல் இடதுகாலை இறங்குமிடத்திலேயே ஊன்றி கொஞ்சம் லெப்டர்ன் அடித்து அங்கேயே நின்று விடுகிற பாணியில் ஓர் இருபது வயது இளைஞனைப் போல இறங்கி அதே ஸ்டைலில் தெடர்ந்து நடந்து செல்வார். வயதுதான் ஆகிவிட்டதே தவிர அவர் இன்னும் பலவான்தான் என்றும் சொல்ல முடியாது. முதுமைக்குரிய ஆற்றாமை அவரைப் பாதித்துக் கொண்டுதான் இருந்தது. இது விஷயமாக இவனே நேரில் பார்த்த ஒரு சுவையான நிகழ்ச்சி உண்டு.

ஒரு தடவை பக்கத்துக் கிராமம் ஒன்றிற்கு வைத்தியத்திற்காகச் சென்றுவிட்டு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தான் இவன். இருபுறமும் புளிய மரங்கள். அடர்ந்த நெடுஞ்சாலையில் ஆள் அரவமில்லை. அந்தச் சாலை சாதாரணமாக அப்படித்தான் இருக்கும். ஒரு திருப்பத்தில் திரும்பியபோது அங்கிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் திரும்பியபோது ரோட்டோரம் புளிய மரத்தடியில் யாரோ குத்துக்காலிட்டு "அம்போவென்று" உட்கார்ந்திருப்பது தெரிந்தது. முதலில் இவன் அது யாரோவென்று நினைத்தான். ஆனால் அது இவரென்று தெரிந்து கொள்ள நேரம் பிடிக்கவில்லை. ஆனால் அதற்குள் அவரும் இவன் வருவதை, அதாவது சைக்கிளில் யாரோ வருவதை பார்த்துவிட்டார் போலிருக்கிறது.

அவர் சடக்கென எழுந்து, குனிந்து இரண்டு கற்களை எடுத்து ஒரு பள்ளிச் சிறுவனைப் போல கைகால்களை நீட்டிப் பாய்ச்சி புளியங்காய் அடித்தாரே பார்க்கலாம்! "தகுதியாய் இரு. அல்லது தகுதியாய் இருப்பதாய்க் காட்டு!" இதில் இவர் தனக்கு சாத்தியமான இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

இப்படியெல்லாம் இல்லாமல் இவர் வயதுக்குத் தகுந்த மாதிரி வண்டியை நிறுத்தச் சொல்லி ஏறி ஈனக்குரலில் டிக்கட் டிக்கட் என்றால் "செக்கிங் சதாசிவம்" என்பதற்குப் பதிலாக ரொம்ப சீக்கிரத்தில் எல்லோருக்கும் "செக்கிங் தாத்தா" ஆகிவிட மாட்டாரா? அப்புறம் கம்பெனியில் கூப்பிட்டு "முடியலேனா, ஆபீஸ்ல போடுறமே. கூட மாட இருங்களேன்" என்று சொல்ல எத்தனை நாளாகும். இதற்காகத்தானே அவர் கண்டக்டர்களை கொஞ்சம் அதிகமாகவே விரட்டுவதும்? சதாசிவம் செக்கிங் என்றால் கண்டக்டர்களுக்கு கொஞ்சம் அரட்டி என்றுதானே சொல்கிறார்கள். அவர் புளியங்காய் அடித்த காட்சி இப்போது இவன் நினைவுக்கு வந்தது. அது எப்போதும் புன்னகையைக் கூட்டுகிற காட்சிதான். இப்போதும் இவன் சிரித்துக் கொண்டான்.

இந்த சிரிப்பு வகையறாக்கள், காட்சி ரசனைகள், சந்தோஷங்கள் எல்லாம் ராகவனுக்கு சமீபத்திய விஷயங்கள். ஓர் ஆறு மாதங்களுக்கு முன்பு என்றால் இவ்வளவு அதிகாலையில் தன் தூக்கத்தைக் கெடுத்த அந்த பஸ்ஸிற்காக அவன் எரிந்து முணு முணுத்திருப்பான். இனி மிச்சப்பொழுதும் இப்படித்தான் போகப் போகிறதென்று மனதில் தீர்மானித்து அது அவ்விதமே ஆக அவனே காரணமாக இருந்திருப்பான்.

இப்போதெல்லாம் கிராம வாழ்க்கை அவனுக்குப் பழக்கமாகி விட்டது மட்டுமல்ல மிகப் பிடித்தமானதாகவும் ஆகிவிட்டது. அந்தக் கம்மங் காட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு கிராமவாசிகளை மதிக்கவும் நேசிக்கவும் ஆரம்பித்து இப்போது கிராமிய வாழ்க்கையையே நேசிக்கவும் மதிக்கவும் ரசிக்கவும் ஆரம்பித்து விட்டான். இப்போது இங்கே எல்லாம் அழகாகத் தெரிந்தன. வந்த புதிதில் அவனுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்த ஒவ்வொருவருமே, அவனுடைய ஊர், ஜாதி, அம்மா, அப்பா, கல்யாணம், சம்பளம் என்று கேட்ட போது பெர்சனல் விஷயங்களை விசாரிக்கிற அநாகரிகங்கள் என்று முகம் சுளிப்பான். ஆனால் இப்போதோ, அவைகளை அவர்களின் வெகுளித்தனமாகவும் மழலையாகவும் எடுத்துக் கொண்டான்.

நான்கைந்து வீடு தள்ளி யாரோ சிறுவன் ஒருவன் அந்த அதிகாலையில் தன் பள்ளிப் பாடத்தை உரத்த குரலெடுத்து முழங்குவது கேட்டது. "அசோகர் அப்போது முதல் இனிப்போர் செய்வதில்லையென்று தீர்மானித்தார். புத்த மதத்தைப் பரப்பினார்..."

அந்தச் சிறுவனின் குரல் புலர் காலைப் பொழுதின் இதமான இனிமைக்கு மேலுமொரு பரிமாணம் சேர்ப்பதாக இருந்தது. இந்தக் குரல் நகரத்தில் ஒலிக்கிறதா? ஐயோ, நகரங்கள் எந்தெந்த விஷயங்களில்தான் மூளி முகங்களாக நிற்கின்றன!

ராகவன் எழுந்து உட்கார்ந்தான். அப்படியே இருள் இருக்கும் போதே மெயின் ரோட்டில் கொஞ்ச தூரம் போய்விட்டுவந்தால் சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது. அதோடு சகுந்தலாவின் நினைவும் வந்தது. இந்நேரம் அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாலும் இருப்பாள். அப்படியிருந்தால் கிணற்றிலிருந்து வந்து ரோட்டைத் தாண்டும்போது தன் கண்ணில் தென்பட்டாலும் படலாம். அப்படித் தென்பட்டால், அதுவும் அவளும் நிமிர்ந்து பார்த்து தன்னைத் தெரிந்து கொள்கிற குறுகிய தூரத்தில் தென்பட்டால் அது உஷா தேவி (வைகறைக் கன்னி) தனக்குக் கொடுக்கிற இன்னொரு முத்தமாக இருக்கும்.

ஆனால் அப்படி சகுந்தலாவின் தரிசனத்தை ஒரு காலைப் பரிசாக எடுத்துக் கொள்ளுமளவுக்கு இருவரிடையேயும் இருநிலை சார்ந்த மன உறவு இருக்கிறதா?

அவள் எப்போதுமே, எல்லோரையும் பார்க்கிற அதே முகச்சலனமற்ற நிதானமான பார்வையோடு தான் இவனையும் பார்ப்பாள். ஆனால் ஒரு வித்தியாசம். அந்த பார்வை இவன்மேல் மட்டும் ஒரு இரண்டு வினாடி - சரியா இரண்டே வினாடி. நீடித்துத் திரும்பும். அந்த இரண்டு விநாடி பார்வை நீட்சியே காதலென்னும் அர்த்தத்தைக் கொடுத்துவிடுமா? அது ஏன் வெறும் நன்றி சொல்வதாக இருக்கக் கூடாது? ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வதை சந்தேகக் கேஸில் சேர்த்துக் கொள்ளும் ஒரு சமூகத்தில் ஒருவன் ரகசியமாக செய்த உதவிக்கு அவனை இரண்டொரு விநாடி கூடுதலாகப் பார்ப்பது ஒரு பெண்ணுக்கு, அந்த மட்டத்திலான நட்பைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ளும் ஒரு பாதுகாப்பான ஏற்பாடாக இருக்கலாம் அல்லவா? அது சரி..., அது காதலாக இருக்க முடியாது என்பதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

அதை அவளிடம்தான் கேட்க வேண்டும். குடும்ப, சமூக, பொருளாதார, தனிமனித மனநிலை சார்ந்த எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

அது கிடக்கட்டும். தன்னைப் பொறுத்த மட்டிலும்தான் தனது ஈடுபாட்டை அதன் முழு அர்த்தத்தில் காதல் என்று எப்படிச் சொல்வது? இப்போது அவளைப் பார்ப்பதற்கும் நினைத்துக் கொள்வதற்கும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. விஷயம் பிரச்சனையாக மாறும் சாத்தியம் தூரத்தில் இருப்பதும் அநேகமாக அதற்கு சாத்தியமில்லை என்ற உள்கணிப்பும் இப்படி அடிக்கடி அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் நினைத்துக் கொண்டிருப்பதையும் கதகதப்பாக வைத்துக் கொண்டிருக்கலாம். நெருங்கி விழுந்து, கைகள் பிணைந்து, இணைந்த கரங்களைப் பிரிப்பதற்கும் ஊரும் உறவும் கச்சை கட்டிக் கொண்டு அரிவாளும் கம்புமாக வரும்போது நிமிர்ந்து நிற்பதிலும், நின்று ஜெயிப்பதிலும் அல்லது ஒன்றாய் மண்ணுக்குப் போவதிலுமல்லவா காதல் இருக்கிறது. அதற்குள்ளேயே ஒரு சுய முத்திரை குத்திக் கொள்வதா? அவன் தன்னையே கேலி செய்கிற ஒரு புன்னகை செய்து கொண்டான்.

எதிரே "சாமி" கடைக்குப் பக்கத்தில் இருந்த சேவு கடையில் அதன் உரிமையாளர் செல்லையா நாடார் உட்கார்ந்திருந்தார். அடடே, அவர் கடை திறக்கும் போதே விழித்துக் கொள்ளாமல் போனோமே என்று நினைத்துக் கொண்டான் இவன். ஏனென்றால் அதுவும் ரசிக்க வேண்டிய ஒரு காட்சிதான். அவர் பூட்டை திறப்பது முதல் கல்லாவில் "முருகா" என்று உட்காருகிற வரை செய்கிற ஏற்பாடுகளும் சடங்குகளும் அப்படியிருக்கும். குறிப்பாக அவர் தேங்காயை உடைத்து அந்தத் தேங்காய் நீரை அப்படியே ஒரு மூடியில் தேக்கி நிறுத்தி நிமிர்த்தி அதை கடையெங்கும் தர்ப்பணம் செய்வது அழகாக இருக்கும். கல்லாவில் உட்காரும் முன் கடவுள் படங்களுக்கு முன் கையெடுப்பார். எடுத்தால் அந்தக்கை ஒரு கால் மணி நேரமாவது தாழாது. பெரிய தியானம். நிச்சயம் ஒரு சேவு கடைசியில் வரப்போகிற லாபத்திற்கு இவ்வளவு பெரிய தியானம். சாமி கடைக்கு வரும் நபர்கள் அவரைக் கேலி செய்வார்கள். எதனாலோ அவரை எதற்காகவும் கேலி செய்கிற உரிமையை எல்லோருமே எடுத்திருந்தார்கள்.

அவரது தியானத்தைப் பார்த்துவிட்டு "என்னா உத்திரபிரதேசமா, கர்னாடகமா?" என்பார் ரெங்கசாமி. செல்லையா நாடாருக்கு சமீபத்திய பட்டப்பெயர் லாட்டிரி நாடார். லாட்டிரி பரிசுக்காகத்தான் அந்தத் தியானம் என்பது ரெங்கசாமி கேள்வியின் பொருள். பக்கத்தில் நிற்கும் சுந்தரம் "அது எவ்வளவு, இது எவ்வளவு?" என்று கண்ணைச் சிமிட்டுவான். "உத்திரபிரதேசம் பத்து லெச்சம், கர்னாடகம் அஞ்சு லெச்சம்." என்று பதில் வரும்.

"அப்ப உத்திரபிரதேசந்தான்"

இந்தக் கணிப்பை மிக அதிகமென்றும் தள்ளி விட முடியாது. செல்லையா நாடார் பரிசுச் சீட்டுகளை வாங்குவதும் அப்படி. அதைப்பற்றிப் பேசுவதும் அப்படி. ஒரு தடவை ராகவனே அவர் சொல்லக் கேட்டிருக்கிறான். "இது வரையிலயும் 1414 ரூவாய்க்கி சீட்டு வாங்கியிருக்கேன். ஒரு தடவ நூறு ரூபா விழுந்ததோட சரி. ஆனா ஒரு தடவனாலும் ஒரு பத்தாயிரன்னாலும் விழுகாம நானும் அதவிடுறதா இல்ல."

இப்போதும் அவரிடம் ஒருவர் கேட்டார். "ஏங்க நாடாரே, போன குலுக்கல்ல அஞ்சு லச்சம் விழுந்த ஆளு யாருனே தெரியலேனு சொன்னீங்களே. ஆளு ஆம்புட்டுட்டானா?"

செல்லையா உண்மையான ஆதங்கத்துடன் சொன்னார்: "அதான் பழனிச்சாமி சண்டாளப் பயல தெரியல. வாங்கிட்டு சீட்ட எங்கயும் வுட்டுட்டானா? இல்ல, கூமுட்டப் பயலுக்கு விழுந்ததே தெரியலியானு தெரியல" என்றார்.

அந்த முகம் தெரியாத மனிதனுக்கா இவருடைய பிரார்த்தனை? நினைத்துக் கொண்டே ராகவன் எழுந்து நின்றான்.

சாமி கடையில் அவருக்கு முன்னால் முகத்திற்கு நேராக ஓரடி தூரத்தில் ஒரு பல்பு தொங்கும். அதன் உறுத்தலால் கொஞ்ச தூரத்தில் இருப்பவர்களை அவரால் சரியாகப் பார்க்க முடியாது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டு பார்க்கவேண்டும். ராகவன் எழுந்து வந்து வாசலில் நின்ற போது அங்கே ஒளி அரவம் தட்டுப்படவே அவர் ஒரு கையால் பல்பை மறைத்துக் கொண்டு அது அவன்தானா என்று பார்த்தார். சந்தேகம் ஊர்ஜிதமானதும் அவர் தன் வழக்கமான பெரிய உற்சாகமான குரலில் "சார் எந்திரிச்சாச்சா? டீ அனுப்பவா?" என்றார். அவர் கடைக்கு வேலை ஆட்கள் கிடையாது. (சின்னக் கடைதான். பெட்டிக் கடையைத்தான் டீ கடையாக மாற்றியிருந்தார்). ஆகையால் இவனுக்கு டீ கொடுத்து விடுவதென்றால் கடைக்கு வாடிக்கையாளராக வந்திருக்கும் யாரிடமாவது தான் கொடுத்துவிட வேண்டும். இப்படி யாராவது ஒருவர் இலவச சேவையைப் பொறுத்து அவருக்கொரு பிரியம். அவர் மட்டுமல்ல. அவரைப் போலவே கிராமத்தில் இன்னும் சிலரும் உண்டு. அவர்கள் ஏன் தன்னிடம் அப்படி முரட்டுத்தனமான பிரியம் காட்டுகிறார்கள் என்பது அவனுக்குப் புரிவதில்லை.

அந்த ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜப்பாவும் அப்படித்தான். ராஜப்பாவின் உபசரிப்பு - கொஞ்சம் தர்மசங்கடமானதும் கூட. அவர் சாப்பிடக் கூப்பிட்டுவிட்டால் அதற்கு முன்பாக என்னதான் முட்ட முட்ட சாப்பிட்டிருந்தாலும் அவர் வீட்டிற்கு கோழிக் குழம்பு சாப்பிட போயாக வேண்டும். இல்லாவிட்டால் ரோடு அல்லது அலுவலகம் என்று கூட பார்க்காமல் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விடுவார். இது ஒரு மாதத்திற்கு இரண்டு தடவையாவது நடக்கும். முதலில் ஆள் விடுவார். ஆள்தானே என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அனுப்பினால் அவரே சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். சாப்பிடுவதிலும் இவனுக்கு Choice என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் இலையில் தள்ளுவதையெல்லம் இவன் உள்ளே தள்ளியாக வேண்டும். அந்த அம்மாளின் கையே பெரிய கை. அதில் இவர் வேறு "போடு போடு" என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.

மாதம் மூன்று தடவையாவது கல்யாணப் பேச்சு பேசுவார். "சார், பெரியராக்கன்பட்டியில் ஒங்க ஜாதிக்காரங்க நெறைய இருக்காங்க சார். எல்லாம் வசதியான கைங்க. சொல்லுங்க ஒரு முப்பது ரூவானாலும் தேர்ற கையாப் பார்த்துடுவோம். பொண்ணுக எல்லாம் கிளிகளாட்டம் இருக்கும்" என்பார். "அங்க பொண்ணு எடுத்தா தான் மாமனாரு வீட்டுக்கு வர்ர சாக்குல இங்க வருவீங்க. இல்லாட்டி மறந்துவிங்க" என்பார்.

இருவரும் அரசியல் பேசுவார்கள். வேடிக்கை யென்னவென்றால் இருவரும் வேறுபட்ட இரண்டு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள். அவர்கள் மணிக்கணக்கில் விடாது வாதம் செய்வார்கள். சில சமயம் விவாதம் சூடாகிப் போகும். அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போது உடனிருப்பவர்கள் பொதுவாக ராஜப்பாவின் ஆதரவாளர்களாகவோ அல்லது ஆதரிப்பதாகக் காட்டிக் கொள்பவர்களாகவோ இருப்பார்கள். இவர்களது வாதத்தின் நடுவே அவர்கள் கோபமுற்று ஏதாவது சொல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் ராஜப்பா உடன் அவர்களைப் பேசவிடாமல் தடுத்து விடுவார்.

அவர் சொல்வார், "சண்டை மாதிரிதான் வாதம் பண்றதும். ஒண்டிக்கி ஒண்டிதான் சரி. ஒரு மனுஷனுக்கு முன்னால் நாலு பேரு மாறி மாறிப் பேசுனா எவ்வளவு பெரிய மூளக்காரனும் கொளம்பிப் போயிடுவான். அதுக்குப் பேசாம கையால் ஜெயிச்சுட்டுப் போயிடலாம்.

விவாதம் எவ்வளவு சூடாகி முடிந்தாலும், முடிந்ததும் ராஜப்பா, "சரி இன்னிக்கி வாங்க வேண்டிய தொண்டத்தண்ணிய வாங்கிட்டிங்க. ஒரு சோடா சப்ள பண்ணுங்க" என்பார். இவன் நான்கைந்து காப்பிக்கும் ஒரு சோடாவுக்கும் ஆர்டர் கொடுப்பான். ஆனால் அவைகள் வந்ததும் அதற்கான காசை அவன் கொடுக்க விடமாட்டார். "எல்லாம் ஒங்க ஊருக்கு வர்ரப்ப" என்று உறுதியாகச் சொல்லி விடுவார்.

சீக்கிரமே அவர் இவனை மாப்பிள்ளை என்று அழைக்கும் அளவுக்கு அந்நியோன்யமாகி விட்டார். இருவரும் வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் "ருக்கு, மாப்ள வந்தாச்சு, காப்பி கழனி எதாச்சும் இருந்தா கொண்டா" என்பார். காப்பியோடு கழனியைச் சேர்த்துக் கொள்வது கிராமத்து சுளுவு. இவனை மாப்பிள்ளை என்று அழைப்பதில் அவருக்கிருந்த பெரிய வசதி என்னவென்றால் அவருக்குப் பெண் மக்கள் கிடையாது. இரண்டு பையன்கள்தான். பையன்கள் இருவரும் பெரிய வால்கள். ஆனால் இவனிடம் எதனாலோ ரொம்ப மரியாதையாக நடந்து கொள்வார்கள். சொன்னால் கேட்பார்கள். ஒரு நாள் ராஜப்பாவின் மனைவி தன் பையன்கள் ஏதோ ஏடா கூடமாக நடந்து கொண்டபோது "வரட்டும். மாப்ளகிட்ட சொன்னாதான் அடங்குவானுக" என்று சொன்னதாகக் கேள்விபட்ட போது ராகவனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

டீயைக் குடித்து கிளாஸை வைத்துவிட்டு ராகவன் நகர்ந்தான். நகரும் போது சாமியிடம் குறிப்பாகவும் மற்றவர்களிடம் பொதுவாகவும் சொல்கிற பாவனையில் "வர்ரன்" என்றான். சாமி தன் வேலையைக் கவனித்தபடியே "ஆவட்டும்" என்றார். மற்றவர்கள் அவன் தங்களிடம் சொல்லிக் கொண்டதாக நினைத்த விகிதாச்சாரத்திற்கு ஏற்ப "ம்" எனவும் தலையாட்டவும் செய்தனர்.

அவன் தார் ரோட்டில் நடந்த பொழுது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. கிணற்றடியில் உருளைகளின் சத்தமும் பெண்களின் பேச்சொலியும் கேட்டன. கிணறு தார் ரோட்டின் வலது புறமாக சுமார் ஐம்பது அடி தூரத்திலிருந்தது. இதனால் அங்கு நின்றவர்களின் உருவம் தெளிவாக இல்லை. ஏதோ ஒரு வெள்ளையாடை மட்டும் கொஞ்சம் நிழலாய் ஆடியது. அந்தக் கிணற்றிற்கு அப்புறமாக ஊர் கிடையாது. ஊர் முழுக்க தார் ரோட்டிற்கு தென்புறமாக இருந்தது. இவன் வந்தபோது தார் ரோட்டில் ஒரு மூன்றடி அகலத்திற்கு நீர்த்தடம் விழுந்திருந்தது. அது பெண்கள் தெடர்ந்து நீர் கொண்டு செல்லும் போது சிந்திய ஈரம். இப்போது அந்த நீர்த்தடம் இன்ன காரணமென்று தெளிவில்லாமல் ராகவனுக்கு அழகாகத் தோன்றியது.

ஒரு வேளை இதை உருவாக்கியதில் சகுந்தலாவும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதாலா என்று அவனே கேட்டுக் கொண்டான்.

ஒரு நாள் மதுரை பஸ் ஸ்டாண்டில் வைத்து சகுந்தலாவைத் தனியாகப் பார்க்க நேர்ந்தது. தன் போக்கில் பிளாட்பாரத்தில் ஏறிவந்த அவன் அவள் அங்கே நின்று கொண்டிருப்பதை திடீரென்று பார்த்ததும் கொஞ்சம் எட்டத்தில் நிற்பதற்காக விலகி நகர ஆரம்பித்தான். அப்போது அவள் அவன் கொஞ்சமும் எதிர்பாராதபடி "ஒங்க லெட்டருக்கு ரொம்ப தேங்ஸ் சார்" என்றாள். இவனுக்குத் தூக்கிப் போட்டது. அந்த லெட்டர் தான்தான் போட்டது என்று இவளுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? அவன் உடனே விட்டுக் கொடுத்து விடாமல் மெதுவாக "எந்த லெட்டருங்க?" என்றான். அவளோ பிளாட்பாரத்தில் நிறைய பேர் நின்று கொண்டிருப்பதை அனுசரித்து, இது ஒரு விசேஷமான பேச்சு என்று அவர்கள் நினைத்து விடாதபடி சர்வ சாதாரணமாக ஒரு தோரணையில் "மறைக்க வேணாங்க சார். அந்த மாதிரி லெட்டர் எழுத எங்க ஊர்ல வேற யாரு இருக்கா?" என்றாள். அவனுக்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது போல் தோன்றியது. தவிர அவளிடம் அதை ஒப்புக் கொள்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது? போதாததற்கு அவள் தன்னைப் புரிந்து கொள்ளும் சந்தோஷமும் இருக்கிறதே. அவன் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டு "எப்பிடி கண்டு பிடிச்சிங்க? கையெழுத்து கூட என்னது இல்லியே?" என்றான்.

"யாராவது சின்னப் பிள்ளைங்கள விட்டு எழுதச் சொல்லியிருப்பீங்க?" அவளது அந்த அனுமானத்தில் மட்டும் கொஞ்சம் வேறுபாடு. இவன் அதை இடது கையால் எழுதியிருந்தான்.

தொடர்ந்து என்ன பேசுவதென்று தெரியாத சில விநாடி மௌனத்திற்குப் பிறகு அவள் "தேங்ஸ் சார். நீங்க சொன்ன மாதிரியே படிக்கிறேன். முடிஞ்ச வரையிலும் எம்.பி.பி.எஸ் போகவே முயற்சி பண்றேன்" என்றாள்.

"தேங்கஸ்".

"தேங்ஸ் நீங்க ஏன் சொல்றீங்க?"

அவன் அதற்கு ஏதோ சொல்வதற்குள் அவள் முகம் மாறியதைக் கண்டு நிறுத்தினான். அவள் "மாமா வர்றார்" என்று ஓரடி பின்னுக்கு நகர்ந்தாள். அவன் திரும்பிப் பார்த்தபோது அவளது மாமா எண்ணெய் டின்னை தூக்கியபடி பிளாட்பாரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். இவனும் விலகி கொஞ்சம் எட்டப் போனான்.

அதுதான் அவர்கள் இதுவரை முதன் முதலாகவும் கடைசியாகவும் பேசிக் கொண்ட சந்தர்ப்பம்.

இப்போது ராகவனுக்கு அந்தக் கடிதத்தின் வாசகங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

சகுந்தலாவை இவன் முதன் முதலாக ஒரு தடவை ராஜப்பா வீட்டிற்குப் போயிருந்த போதுதான் பார்த்தான்.

இவனும் ராஜப்பாவும் உள்ளே நுழைந்தபோது அதுவரை ராஜப்பாவின் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த அவள் இவர்களைக் கண்டதும் எழுந்து "வர்ரன் சின்னம்மா" என்று விடைபெற்றுக் கொண்டாள். அவள் முகத்தில் சோகமும் கண்ணீரும் தெளிவாகத் தெரிந்தன. அவள் சென்றதும், இவனை உட்காரச் சொன்ன பிறகு ராஜப்பா மனைவியிடம் கொஞ்சம் வருத்தமான குரலில் "சகுந்தலா என்ன சொல்லுது?" என்றார்.

"என்ன சொல்ல பாவம் அவ தல எழுத்தச் சொல்றா. மாமனாரு மச்சானுக எல்லாம், இங்கேயே இரு. அந்தப் பத்தாயிரத்தக் குடு. சின்ன மச்சானுக்கு ஒரு பலசரக்குக் கட வச்சுக் குடுக்கலாம்னு சொல்றாங்களாம்" என்றாள் அந்த அம்மாள்.

"இது என்னா சொல்லுது?"

"பணத்தைக் குடுத்தா மூணு மாசத்துல பொரிச்சி தின்னுட்டு கூலி வேலக்கி அனுப்பிடுவாங்கனு இவ சொல்றா. அங்க எல்லாருக்கும் ஆளுக்கொரு புத்தி நேரத்துக்கொரு புத்தியாம்"

"அப்பிடியா"

"இவ திரும்பிப் போயி எஸ்.எஸ்.எல்.சி.ய முடிச்சுட்டு டீச்சர் டிரெயினிங்னாலும் போவலாம்னு நெனக்கிறா."

"அவங்க என்னா சொல்றாங்களாம்?"

"அவங்க சண்டைக்கு வர்ராங்களாம். இன்னும் போயி நீ பாவாட தாவணி கட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் படிக்கப் போறியாக்கும். இது வேல தேடுறதுக்கா இல்ல புருஷன தேடுறதுக்கானு கேக்குறாங்களாம்."

"ஏன் ஒழுங்குமுறையா ஒரு புருஷனைத் தேடுறது தப்பா?" என்று ராஜப்பா வாயிலிருந்து வருமோ என்று ராகவன் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஒன்றும் வரவில்லை. அவர் "இதோட அப்பா என்னா சொல்றாராம்?" என்றார்.

"அவரு ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறாராம். ஒன் இஷ்டம், அங்க இருந்தாலும் சரி, இங்க இருந்தாலும் சரி. படிச்சாலும் சரி, இல்ல இருக்கற ஒரு ஏக்கர் காட்ட நீயே பாத்துக்கிட்டாலும் சரினு சொல்றாராம்."

ராகவன் விசாரித்தபோது ராஜப்பா விவரம் சொன்னார்.

சகுந்தலா பத்தாம் வகுப்பில் காலடி வைத்தபோது படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை ஏதோ ஒரு அரசாங்க இலாகாவில் ஜீப் டிரைவராக இருந்திருக்கிறான். அவன் திருமணமான ஒரு வருஷத்திற்குள்ளேயே ஒரு விபத்தில் இறந்து போய் விட்டான். அரசு ஊழியர், ஊழிய காலத்தில் இறந்து விட்டால் குடும்ப நல நிதி திட்டத்திலிருந்து வாரிசுகளுக்குக் கிடைக்கும் பத்தாயிரம் ரூபாய் இவளுக்கு வந்திருக்கிறது. அதை இவள் தனது பிற்கால பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதும் மாமனார் வகையறா அது எப்படியும் தங்கள் கைக்கு வந்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதும்தான் தற்போதைய பிரச்சினை.

மேற்கொண்டும் படிப்பது என்ற சகுந்தலாவின் இந்தத் திட்டம் ஏதோ ரொம்பத் தெரிந்தவர்கள் விஷயத்தில் ஏற்படுவது போல ராகவனை பாதித்தது. அது மிகச் சரியான யோசனை என்று நினைத்தான். இது பொருளாதாரத்தில் அவளுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு கூட ஓர் அறிவுசார்ந்த பணியில், சூழ்நிலையில் பலரோடு பழக நேர்வதால் எண்ணங்கள் சுதந்திரமாக விசாலப்பட்டு குற்ற உணர்வோ தயக்கமோ இல்லாமல் அவள் மறுமணம் செய்து கொள்ளவும்கூட வாய்ப்பளிக்கும் என்று நினைத்தான்.

அவன் அவளது இந்த முடிவைப் பற்றி ராஜப்பாவிடம் சிலாகித்துப் பேசினான். அவரும் இதற்கு உதவியாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சொன்னான். ராஜப்பா, அவள் மறுமணம் செய்து கொள்ளுவதில் தனக்கு உடன்பாடா அல்லது மாறுபாடா என்பதைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவள் படித்து டீச்சராகப் போவதை வரவேற்றார். அவளது தகப்பனார் சொல்ல வேண்டுமென்று சொன்னார்.

இடையில், சகுந்தலா இப்படியொரு எண்ணத்தை வெளியிடுகிறாள் என்று தெரிந்த பிறகு ஒரு பத்து நாளைக்கு ஊரில் அவள் விஷயமாக தினமொரு புதுச்செய்தி வர ஆரம்பித்தது. அவளது திட்டம் பற்றிய நல்லது கெட்டது மட்டுமல்ல. அவளைப் பற்றிய நல்லது கெட்டதுமானவைகள் ஊர் வாயில் அறைபட்டன. கடைசியாக வந்த செய்தி ராகவனுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது. அவள் மற்றவர்கள் வற்புறுத்தலை எதிர்த்து நிற்க முடியாமல் தனது திட்டத்தை கைவிட தீர்மானித்து விட்டதாகச் சொன்னார்கள்.

ராகவன் மனம் அனுதாபச் சூச்சூ கொட்டியது. அவள் இனி வரவே சாத்தியமில்லாத ஒரு சந்தர்ப்பத்தை கை நழுவ விடுகிறாளே என்று வருந்தினான். ஓர் இளைஞனின் மனநிலைக்கு ஏற்ப இது விஷயத்தில் தான் அவளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்தான். அப்போது தான் இந்தக் கடித யோசனை அவனுக்குத் தோன்றியது. அவள் படிப்பை தொடர்வதினால் உண்டாகக் கூடிய நன்மைகளையெல்லாம் மிக விளக்கமாக எழுதி யார் பேரிலாவது போஸ்ட் செய்து பார்த்தால்?

அதன்படியே அவன் அந்தக் கடிதத்தை எழுதினான். யாரோ கூடப் பழகிய தோழி என்று போட்டுக் கொண்டு (அவளுக்குத்தான் தெரிந்து விடுமே, தோழியுமில்லை மண்ணுமில்லை; யாரோ நலம் விரும்பி எழுதியிருக்க வேண்டுமென்று) ஒரு பத்து பக்கம் வரைந்தான். அதில் படிப்பினாலும் வேலை வாய்ப்பினாலும் உண்டாகக் கூடிய நன்மைகளையெல்லாம் வாழ்க்கையிலிருந்தும் கதைகளிலிருந்தும் எடுத்துக் கூறி விளக்கியிருந்தான். முன்னேறுவதற்கு தான் தூண்டப்பட காரணமாக இருந்த சில புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி உற்சாக மூட்டியிருந்தான். ஒரு ஆசிரியை என்ற அளவில் நின்றுவிடாமல் எம்.பி.பி.எஸ். டாக்டர் அளவுக்கே போக முயலும்படி கேட்டிருந்தான். இதன் காரணமாக அந்தப் பத்தாயிரம் ரூபாயும் தகப்பனாரின் ஒரு ஏக்கர் காடும் போனால் கூட நஷ்டம் இல்லையென்றும் இந்த மாதிரி பணியிலேயே அவள் தன்னை மனித சேவைக்கு ஈடுபடுத்திக் கொண்டு தன்னை மறக்க முடியும் என்று எழுதியிருந்தான். ஆனால் அவனது உள்நோக்கம் வேறு. அவள் இந்த மாதிரி நிலைக்கு உயரும்போது சமூகக் கட்டுப்பாடுகளை வெகு எளிதில் துச்சமாகக் கருதி தூக்கி எறிந்து விடுவாள் என்பது அவன் யூகம். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவளிடத்தில் அவனுக்கு ஏற்பட்டிருந்த ஈடுபாடு அனைத்தும் அவள் இந்த வயதில் வாழ்வை இழந்து விடுவாளே என்பதுதான்.

அந்தக் கடிதத்தை எழுதிப் போட்ட பிறகு அவனுக்கு உண்டான பயங்களையும் சந்தேகங்களையும் இப்போது நினைத்த போது அவனுக்கு வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது. எவ்வளவு தொலைதூரக் காரணங்களையெல்லாம் கற்பனை செய்து கொண்டு அவன் கஷ்டப்பட்டான்! முதல் நாள் இரவு கனவில், இறந்துபோன சகுந்தலாவின் கணவனே பத்து நூறு பேரை கூட்டிக் கொண்டு இவன் வாசலில் வந்து நின்று கம்புகளையும், அரிவாள்மனைகளையும் தூக்கி ஆட்டி "வா வெளியே" என்கிறான். விடிந்ததும் இவன் மனமே இவனுக்குப் புத்தி சொல்கிறது. "இதெல்லாம் என்னா வேல? ஒன்ன பத்துபேரு கூடிகிட்டு ஒதச்சா கேக்க இங்க ஆரு இருக்கா?" அப்போதெல்லாம் அவனது புகலிடமாக அவன் நெஞ்சில் நின்றது ராஜப்பாவின் உருவம்தான். "ராஜப்பா கைகொடுப்பார்." இப்போதும் சகுந்தலா விஷயத்தில் இவன் அவரைத்தான் நம்பியிருக்கிறான். ஒரு வேளை சகுந்தலாவுக்கும் தனக்கும் காதல் அரும்பிவிட்டால், அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டால் (எப்படி ஏற்படாமல் போகும்?) ராஜப்பாதான் குறுக்கே வரவேண்டும்.

இவன் அந்தக் கடிதத்தைப் போட்ட நான்கு நாளில், அது அதனால்தான் நடந்ததோ அல்லது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையோ, சகுந்தலா பாவாடை தாவணியோடு வந்து பஸ் ஸ்டாண்டில் நின்றாள். அவள் பள்ளிக்கூடம் போவதாகச் சொன்னார்கள். அங்கிருந்து மூன்று மைலில் இருந்த வெள்ளாளப்பட்டி உயர்நிலைப் பள்ளியில்தான் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நிலைப்பள்ளிக் கல்விபெற முடியும். தினம் பஸ்ஸில் போய்விட்டு வந்து விடலாம். அவளை அங்கு அப்படிக் கண்டபோது ராகவனுக்கு தான் ஏதோ இரண்டு மூன்று நாடுகளையே ஜெயித்துவிட்ட மாதிரி இருந்தது. அவன் நேராக தான் சாப்பிடும் கடைக்குப் போய் பெரியவரிடம் உற்சாகமாக "ஸ்ட்ராங்கா ஒரு காபி போடுங்க" என்றான். இவன் குரலில் தொனித்த உற்சாகத்தைக் கண்ட பெரியவர் "என்னாச்சு சார் இன்னிக்கு இவ்வளவு வேகம்? பொண்ணு கிண்ணு பாத்துட்டாங்களா?" என்றார்.

தன் கடித வாசகங்களை மீண்டும் அசைக்குக் கொண்டு வந்த ராகவனுக்கு இப்போது சில இடங்களில் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது... உண்மையில் ஒவ்வொரு தடவையும் அப்படித்தான் தோன்றியது. சமயங்களில் அவனே நினைத்துக் கொள்வான். இனியொரு தடவை எழுதப் போகிறோமா? எதற்காக இப்படி அதை மீண்டும் மீண்டும் கற்பனையில் வளப்படுத்திப் பார்க்கிறோம்?

அவன் அப்படியே மெல்ல நடந்து பெரிய புளிய மரம் பக்கம் வந்தபோது பலபலவென்று விடியத் தொடங்கி இளங்கதிர் அவன்மேல் விழுந்தது. அவன் கிழக்கே பார்த்தான். சூரியன் மெல்லக் கண்ணைச் சிமிட்டி, "என்னா பிரதர் கிராமம் ரொம்பப் பிடிச்சுப் போச்சா?" என்றான். அவன் மேலும் சிறிது நடந்துவிட்டுத் திரும்பலாம் என்று நடந்தான்.

இதெல்லாம் ராகவனுக்கு ஏதோ ஒருநாள் காலைச் சுகமல்ல. தினமும் அநேகமாக இதேமாதிரி அனுபவங்கள் தான். நித்தம் புதிது புதிதாகவும் கூட. காலை மட்டுமல்ல, பொழுதும் மாலையும் கூட அவனுக்குத் திருப்தியாகவே இருந்தன. இந்த எளிய மக்களோடு உறவு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததற்காக அவன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தான். கிராமத்திற்கு வந்த இரண்டு நாளில் அங்கிருந்து மாற்றி விடுவார்களோ என்று நினைக்கும் அளவிற்கு வந்திருந்தான். சகுந்தலா வேறு நாளாக நாளாக அடிக்கடி கண்ணில் படுவதும் நெஞ்சில் நீண்டநேரம் தங்குவதுமாக இருந்து கொண்டிருந்தாள்.

ஒரு ஞாயிறு காலை ஒன்பது மணியிருக்கும். ராகவன் தன் நிலையத்தில் இருந்தான். ஒன்றிரண்டு மாடுகள் வந்து போயிருந்தன. அவன் ஏதோ பதிவேட்டை பூர்த்தி செய்து கொண்டிருந்தான். அவனது உதவியாளன் கால்நடை பணியாளர் சங்கன் நிலையத்திற்கு முன்பாக வைத்து இரண்டு மூன்று கண்ணாடி பாட்டில்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது வெளியிலிருந்து ராஜப்பாவின் குரல் கேட்டது.

"சாரோ"

ராகவன் நிமிர்ந்து பார்த்தான். அவனது நிலையத்தில் அரைச்சுவர் காம்பவுண்ட் உண்டு. காம்பவுண்டுக்கு சுமார் இருபதடி தூரத்தில் இருந்த வேப்பமரத்தடியில் அவர் கிராம கர்ணத்தோடு நின்று கொண்டிருந்தார்.

இவன் நிமிர்ந்து பார்த்ததைக் கண்டதும் அவர் சத்தமாக "என்னா சார் ஞாயித்துக் கெழம கூட. இழுத்து சாத்துங்க சார்" என்றார்.

இவன் புன்னகையோடு எழுந்து காம்பவுண்டை நோக்கி வந்தவாறே "என்னா டவுனுக்கா?" என்றான்.

"ஆமா, நீங்களும் வாங்க. கல்யாணி தியேட்டர்ல புளு படம் காட்றானாம்"

ராகவன் பேசாமலே காம்பவுண்ட் வாயிலைத்தாண்டி அவர்களை நோக்கி வந்தான். அவன் தங்களிடம் வந்ததால் அவர்களும் மரியாதைக்காக கொஞ்சம் அவனை நோக்கி வந்தார்கள். இருவரும் நெருங்கிய பிறகு ராகவன் சிரித்தபடி "புளு படமா? நீங்க ரெண்டு பேரும் பாத்துட்டு வாங்க" என்றான்.

பிறகு ராஜப்பா இது உண்மையாக என்ற குரலில் "வாங்க போயிட்டு வருவோம்" என்றார்.

"இல்லை, நீங்க போயிட்டு வாங்க" என்றான் ராகவன். இதைத் தொடர்ந்து ராஜப்பா சட்டென்று ஞாபகம் வந்தவராய், "ம்.... சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கி மத்தியான சாப்பாடு நம்ம வீட்ல" என்றார்.

"சும்மா இருங்க" என்று ராகவன் மறுதலித்தான்.

"என்னத்த சும்மா இருக்கறது?" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பஸ் வரும் சத்தம் கேட்டது. கர்ணம் வண்டி வந்துவிட்டது என்று பரபரப்படைந்தார். ராஜப்பாவும் "ஆமா, கடையில சாப்டுடாதீங்க. ஒரு மணிக்கெல்லாம் வந்துடுவேன்" என்று சொல்லிக்கொண்டே வருகிற பஸ்ஸை நோக்கி விரைந்தார். அவர்கள் பஸ் ஏறிப் போகும்வரை பார்த்துவிட்டு ராகவன் நிலையத்திற்குத் திரும்பினான்.

இவன் திரும்பும்போது இவர்கள் காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி உட்காருவதற்கு முயன்று கொண்டிருந்த மணி என்ற இளைஞன் இவனிடம் "ஏன் சார், நாயிக்கெல்லாம் சென ஊசி போடுவீங்களா?" என்று கேட்டான். இது வெறும் அகராதித்தனம் என்பது ராகவனுக்குத் தெரியும். காரணம் இந்த மணி அப்படி. இருபத்து நான்கு இருபத்தைந்து வயதிருக்கக்கூடிய அவன் சீக்கிரத்திலேயே ஒரு சண்டியர் என்று பெயரெடுப்பதற்காக முயன்று கொண்டிருந்தான். அகராதிதனமும் அடாவடித்தனமும் நித்திய கருமங்களாக, போகிற இடங்களில் எல்லாம் வம்பு வழக்கு இழுத்துக் கொண்டிருந்தான். ஒரு தடவை ராஜப்பாவின் சொசைட்டிக்கே போய் வம்பிழுத்து கடைசியில் அவர் "இவன பிடிச்சு நாலு சாத்து சாத்தி கட்டிப் போடுங்கடா. வர்ரது வரட்டும்" என்று துணிந்த போதுதான் மெதுவாக நழுவினான். இப்போதும் கூட ராகவன் இவனுக்கு சூடாக ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்று நினைத்தான். ஆனால் அப்படி பதில் சொல்வது இவனைப் போய் மதிப்பது ஆகிறதே என்று பேசாமல் உள்ளே போக ஆரம்பித்தான்.

ஆனால் விஷயம் வேறு மாதிரியாக முடிந்தது. பாட்டில்களை கழுவி குப்புற வைத்துக் கொண்டிருந்த சங்கன் மணி காம்பவுண்ட் சுவரில் ஏறி உட்கார்ந்து விட்டதைக் கண்டதும் தங்கள் அலுவலகச் சுவரில் நடந்த ஆக்கிரமிப்பைத் தடுப்பது தனது கடமை என்று நினைத்தவராக "தம்பி கீழ எறங்குங்க. ஆபீஸ் முன்னால இப்படி உக்காந்தா எப்பிடி?" என்றார். அவ்வளவுதான். இதைக் கேட்ட மணி சடாரென்று உள்ளே குதித்து "என்னடா சொன்னே... பயலே" என்று சங்கனனின் ஜாதியைச் சொல்லிக் கொண்டே அவரிடம் வந்து "ஏண்டா தம்பிங்கறியே, எங்கப்பன் மவனாடா நீ" என்றான். இவ்வளவிற்கும் சங்கனுக்கு அவனைப்போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வயது. அவர் ஒரு மாஜி ராணுவ வீரர். ராணுவ சேவைக்குப் பிறகு அவருக்கு இந்த வேலையைக் கொடுத்திருந்தார்கள். அவரைப் பார்த்து அவன் அப்படிப் பேசினான் - தம்பி என்று அழைப்பதையே ஒரு குற்றமாகக் காட்டி. அது சரி, வம்பிழுக்க முடிவு செய்துவிட்டால் ஒரு நூல் இழை போதாதா? அவன் அதற்காகவே வந்திருந்தான் என்பது பின்னர் தான் தெரிந்தது. அங்கே சில பேருக்கு சங்கன் மேல் பொறாமையும் எரிச்சலும். அவரது இருநூற்றைம்பது ரூபாய் சம்பளமும் அவர் சர்வ சாதாரணமாகப் போய் கடைகளில் சாமான் வாங்குவதும் அவர்களுக்குப் பொறுக்கவில்லை. ஆகையால் எப்படியாவது ஏதாவதொரு வகையில் அவரை மட்டந்தட்ட நினைத்திருக்கிறார்கள்.

சங்கனும் சாதாரண ஆள் அல்ல. மாஜி ராணுவ வீரர் ஆயிற்றே. அவர் நிதானமாக மணியிடம், "ஏன், தம்பினு சொல்லிட்டா நான் ஒங்கப்பன் மவனா இல்லாட்டி நீ எங்கப்பன் மவனா இருந்துதான் ஆவணுமா?" என்றார். இதைக் கேட்ட மணி வெகுண்டுபோய் பழையபடி அவர் ஜாதிப்பெயரை சொல்லிக் கொண்டே அவரை அடிக்க கையை ஓங்கினான். அடி விழப்போகிற நேரத்தில் சடக்கென்று அவன் கையைத் தடுத்துப் பிடித்துக் கொண்டான் ராகவன். பிடித்துக்கொண்டு அவனிடம் "சட்டம் தெரியுமா? இப்ப நீ சொன்ன வார்த்தைக்கே ஆறுமாசம் ஜெயில். இதுல அடிக்க வேற போறியா?" என்றான். மணி "சட்டம் என்ன சட்டம் விடுயா கைய" என்று கையை விடுவித்துக்கொள்ள முயன்றான். ராகவன் தன் பிடியை விடாமலே அவனை அப்படியே வாசல் பக்கம் திருப்பி "மொதல்ல நீ வெளியே போ" என்று தள்ளினான். ஆனால் அவன் கையை விட்டதும் அவன் கொஞ்சமும் எதிர் பார்க்காதபடி மணி சட்டென்று திரும்பி முரட்டுத்தனமாக ராகவன் மேல் பாய்ந்தான்.

இதனால் ராகவன் முதலில் சிறிது தடுமாறி விட்டாலும் உடனே சமாளித்து எதிர்த்தாக்குதலைச் செய்தான். இதனால் இருவருக்கும் அங்கு ஒரு சின்ன சண்டை நடந்தது. இடையில் சங்கன் இருவரையும் தடுத்துவிட முயன்றார். ஆனால் அதற்குள் ராகவன் மணியைக் கட்டுப்படுத்திவிட்டான். அவன் கையை முறுக்கி பின்புறத்தில் வைத்து "ராஸ்கல், இங்க என்னா ஒன்னத் தவுர, மத்தவங்க நரம்பு செத்துக்கெடக்குறாங்கன்னு வந்தியா?" என்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டான். பிறகு கையை விட்டு "ஒழுங்காப் போய்ச் சேரு" என்றான்.

அவன் கையை விட்டதும் மணி சில விநாடிகள் அவனை முறைத்தபடியும் திகைத்தபடியும் நின்றான். உள்ளபடி அவன் இவனிடம் இவ்வளவு பலத்தை எதிர்பார்க்கவில்லை என்றுதான் தெரிந்தது. கடைசியில் அவன், அவனைப் போன்றவர்கள் வழக்கமாகப் பார்க்கிற "இரு பாத்துக்கிறேன்" பார்வையை உமிழ்ந்துவிட்டு விருட்டென வெளியே போனான்.

அவன் சென்ற ஒரு அரை மணி நேரம் வரைக்கும் ராகவனால் அந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை. என்றாலும் அதற்குப் பிறகு அவன் நிதானத்திற்கு வந்துவிட்டான். விஷயம் அதோடு முடிந்துவிட்டதாகவும் இனி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென்றும் தீர்மானித்துக் கொண்டான். ஏனென்றால் மணியைப்பற்றி ஊருக்கே தெரியுமாதலால் இது ஊரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தாது என்று நினைத்தான்.

ஆனால் நிலைமை அப்படியிருக்கவில்லை. அது வேறோர் அடிப்படையில் காட்டுத் தீயாய் விஸ்வரூபமெடுத்து விட்டது.

பதினோரு மணி சுமாருக்கு ஹெல்ப்பர் சண்முகம் ஓடி வந்தார். வந்தவர் "என்னாங்க சார், மணிய அடிச்சுட்டிங்களா?" என்றார்.

"ஆமா"

"ஏன் சார்?"

"அடிக்க வந்தவன அடிக்காம என்ன செய்வாங்க?"

"என்ன சார்..." என்று அவர் கையைப் பிசைந்தார். "இந்த ஊரு ஜாதி விஷயத்துல ரொம்ப மோசமான ஊருங்க சார். எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் ஜாதிக்காரன விட்டுத் தர மாட்டாங்க. இப்ப எல்லாரும் ஒங்களுக்கு எதிரா ஒண்ணு தெரண்டுகிட்டு இருக்காங்க."

பிறகு ஆசிரியர்களில் ஒருத்தர் வந்தார். அவரும் அவனை அடிக்காமலேயே சமாளித்திருக்க முடியாதா என்றுதான் கேட்டார் - யோசித்தார். "பத்து வருஷம்னாலும் மனசுல வச்சிருப்பானுகளே சார். ஒண்டி சண்டியா போறதே கஷ்டமாச்சே சார்" என்றார்.

அவன் மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பட்டவர்கள் எல்லோருமே அவனை விரோதமாகப் பார்ப்பதுபோல் பட்டது. முதலில் அவன் அது தனது மனப் பிரம்மையாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

சாமி கடை முன்பாக நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். சாமி இவனைப் பார்த்ததும் பார்க்காதது போல் திரும்பிக் கொண்டார். அவர் அந்த ஊரின் மெஜாரிட்டியான மணியின் ஜாதியைச் சேர்ந்தவர் அல்லர். இருந்தாலும் அவர் முகம் திரும்பிக் கொண்டதை வைத்து அவர் மற்றவர்களுக்கு பயப்படுகிறார் என்று தெரிந்தது.

அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது வெளியே சாமி கடை முன் நின்று கொண்டிருந்த ஒருவன் பொதுவாக அவர்களில் யாரையோ சொல்வதுபோல இரண்டு பர்லாங்கிற்குக் கேட்கும் தொண்டையில் "இரு, இரு ஒனக்குப் பாட (பாடை) பழயபட்டியிலதான்" என்று கத்தினான். அவன் தனக்குத்தான் ஜாடை சொல்கிறான் என்பது ராகவனுக்குப் புரிந்தது. அவன் வெளியே வந்து "வாடா, யாருக்குப் பாடைன்னு பாத்துடுவோம்" என்று சவால் விடலாமா என்று கூட ஒரு கணம் நினைத்தான். இருந்தாலும் இந்த மாதிரி ஜாடைபேசுகிற கோழைகள் மத்தியில் தான் விடுகிற நேரான சவால்கள் எல்லாம் எந்த அர்த்தமும் பெறப் போவதில்லையென்று தன்னை அடக்கிக் கொண்டான். அப்படி இவன் சொன்னால் அவர்கள் என்ன சொல்வார்கள்? தான் யாரையோ சொன்னதற்கு இவன் தனக்கென்று எடுத்துக்கொண்டு அனாவசியமாக சண்டைக்கு வருவதாக புதிய வழக்கொன்றை ஜோடிப்பார்கள்.

அவன் சாப்பிடப் போனபோது கடைப் பெரியவர் அவனைத் தனியாக அழைத்து ரொம்ப சொன்னார். பொதுவாக ஊரு பார்த்து நடந்து கொள்ள வேண்டுமென்று உபதேசம் செய்தார். "பேசாம ராஜப்பா கிட்ட சொல்லி, ஏதோ நடந்து போச்சு, யாரும் மனசுல வச்சுக்காதிங்கனு கேட்டுக்கங்க. ஏதோ மாரியம்மன் கோயிலுக்கு பத்து ரூவா கேட்டா குடுத்துடுங்க" என்றார் பெரியவர். சுற்றி வளைத்து என்ன சொல்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அபராதம் கட்டச் சொல்கிறார். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. தலையே போனாலும் இதெல்லாம் தன்னிடம் நடக்காது என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனாக வீட்டிற்கு வந்தான்.

இடையில் ராஜப்பா காலையில் சாப்பிடக் கூப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது. இந்தக் களோபரத்தில் அதை மறந்து விட்டிருந்தான். இப்போது அவர் டவுனிலிருந்து திரும்பி விட்டாரா என்பது தெரியவில்லை. ராஜப்பாவும் அந்த ஜாதியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அவரிடம் இவனுக்கு பூரண நம்பிக்கை இருந்தது. அவர் வந்து மணியைக் கூப்பிட்டு தானும் இரண்டு அறைவிட்டு தன்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்வார் என்று நினைக்கும் அளவுக்கு நம்பிக்கை இருந்தது.

இரண்டு மணி வாக்கில், கடையில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சாமி இவன் வீட்டிற்கு வந்தார். வந்த அவரும் ஹோட்டல் பெரியவர் சொன்ன யோசனையைத்தான் சொன்னார். அதோடு அவன் இந்த ஊரைவிட்டே மாற்றிக் கொண்டு போய்விடுவது கூட நல்லதென்று சொன்னார். இந்நேரம் அவன் சாதா ஆளாக இருந்திருந்தால் கம்பு கழிகளோடு ஊரே திரண்டு வீட்டு முன் வந்து நின்றிருக்குமென்றும் இவன் சர்க்கார் ஊழியன் என்பதால் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் சொன்னார்.

இவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல ராகவனுக்கு வேதனையும் வியப்புமாக இருந்தது. இங்கே என்ன "ஒரு ஜாதி ஆட்சி" என்ற சட்டம் அமுலில் இருக்கிறதா? இந்திய அரசியல் சட்டம் இங்கு செல்லுபடியாகாதா? அவன், என்ன ஆனாலும் சரி கடைசி வரை பார்த்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டான்.

இடையில் இன்னொரு வேடிக்கையும் நடந்தது. அதற்குள் விஷயம் தெரிந்து பெரியராக்கன் பட்டியிலிருந்து இவனது ஜாதிக்காரர்கள் இரண்டு பேர் சைக்கிள் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். வந்து தைரியம் சொன்னார்கள். இவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று இவர்களுக்கு அறிவித்துவிட்டுப் போக இருப்பதாகச் சொன்னார்கள். இப்படி சின்ன விஷயத்தை மேலும் ஊர்ப் பகையாக மாற்றுவது ராகவனுக்குப் பையத்தியக்காரத்தனமாக தெரிந்தது. அவன் அவர்களுக்குச் சமாதானம் சொன்னான். ராஜப்பா வந்ததும் அவரை வைத்துப் பிரச்சனையை சுமூகமாக முடித்துவிட முடியுமென்றும் அதற்குள் இவர்களால் விஷயம் பெரிதாகி விட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டான். அவர்கள் அரை மனதோடு புறப்பட்டுப் போனார்கள்.

ஆனால் அப்படி அவர்கள் போனதை உள்ளூர்க்காரர்கள் இன்னும் கொஞ்சம் எண்ணெய்யாக மாற்றி ஊற்றிக் கொண்டது அவனுக்குத் தெரியாது.

அன்று பிற்பகல் அவனுக்கு விடுமுறையானதால் அவன் தன் நிலையத்திற்குச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தான். வெறுமென இருந்ததால் பிரச்சினை அவனை முழுதாக ஆக்ரமித்துக் கொண்டு நீண்டநேரம் கஷ்டப்படுத்தியது. அதை அவன் எந்தக் கோணத்திலிருந்து எவ்வளவு தூரம் பெருந்தன்மையை வரவழைத்துக் கொண்டு பார்த்தாலும் தான் செய்ததைவிட வேறு எந்த விதத்திலும் நடந்து கொண்டிருப்பது தன்மானமுள்ள யாருக்கும் சாத்தியமில்லை என்பது தெளிவாகவே விளங்கியது.

ஒரு முட்டாள் ரௌடிக்கு ஜாதி ஆதரவு இருக்கலாம் என்று அனுமானித்துக் கொண்டு தன் கீழ்ப்பட்ட பணியாளை அடிபட விடுவதோ அல்லது தான் அடிபடுவதோ என்ன சமாதானத்தில் சேரும்?

ஆனால் கடைசியாக அவனாக ஒரு முடிவெடுத்துக் கொண்டான். இது ரொம்பச் சாதாரண விஷயம்தான் என்றும் ஒரு சிலர் அலட்டிக் கொள்வதால் தானும் அலட்டிக் கொள்வதாகவும் ஊரின் மொத்த உணர்வும் இதுபோல் இருக்கப் போவதில்லையென்றும் தீர்மானித்துக் கொண்டு சிறிதுநேரம் எல்லாவற்றையும் மறந்து தூங்கவும் கூடச் செய்தான்.

பழையபடி அவன் கண்விழித்தபோது மணி நாலு முப்பது. அவன் எழுந்து முகம் கழுவி டிரஸ் செய்து கொண்டு சாதாரணமாக எப்போதும் போல கடைவீதிக்கு வந்தான். தூக்கம் அவனை மேலும் இலகு செய்திருந்தது.

அவன் தூரத்தில் வரும்போது செல்லையா பெட்டிக்கடை முன்நின்று ராஜப்பா யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவனுள் "இந்தா பிரச்சனதான் தீந்து போச்சுல்ல" என்பது போன்ற உணர்வு. அவன் அவரை நோக்கிப் போனான். இவன் போய்க் கொண்டிருக்கும் போது பேசியபடியே இந்தப் பக்கம் திரும்பிய ராஜப்பா அவனை ஒரு தடவை பார்த்தாகத் தோன்றியது. ஆனால் அவர் இவனைக் கண்ட பாவனையே இல்லாமல் திரும்பி பழையபடி பேச்சைத் தொடர்ந்தார்.

ராகவன் சென்று அவர் பக்கவாட்டில் நின்றான். அவர் பேசிக்கொண்டிருந்தார். இதனால் ராகவன் அவர் பேச்சில கொஞ்சம் இடைவெளி கிடைத்தபோது "எப்ப திரும்புனிங்க?" என்றான். ஆனால் ராஜப்பா இவன் கேட்டது காதில் விழுந்த மாதிரியே இல்லாமல் பேச்சைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ராகவனுக்கு சட்டென்று பட்டது - இவர் வேண்டுமென்றேதான் திரும்பாமல் இருக்க வேண்டும். இது எதிரே கேட்டுக் கொண்டிருப்பவருக்கும் கூடத் தெரிந்திருக்க வேண்டுமென்றேதான் திரும்பாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவராவது "சார் வந்திருக்காரு" என்று சொல்லியிருப்பாரே. அவன் முகம் சுருங்கியது. திரும்பி விடலாமா என்று நினைத்தான். ஏனோ மறுபடியும் "எப்ப வந்தீங்க" என்றான்.

ராஜப்பா சட்டென்று திரும்பி, "நான் திரும்புனது இருக்கட்டும். நீங்க நாளைக்கே லீவு போட்டுட்டு மாத்திக்கிட்டுப் போயிடுங்க" என்றார்.

"ஏன்?"

"ஏனா? எங்கயோ இருந்து இங்க பொளைக்க வந்துட்டு கடைசியில இந்த ஊர்க்கார அதுவும் எங்க ஜாதிக்காரனையே அடிக்க தைரியம் வந்துடுச்சுல்ல, அதனால" என்றவர் கொஞ்சம் நிறுத்தி, "இதுகூட இவ்வளவு தூரம் பழகிட்டதுனால. இல்லாட்டி நடந்திருக்கிறதே வேற" என்றார்

"நான் அடிச்சத சொல்றீங்களே, நடந்தது என்னனு எங்கிட்டக் கேட்டிங்களா?"

"கேக்கணும்னு அவசியமில்ல. அவன் தப்பே செஞ்சிருப்பான். நியாயம் ஒம்ம பக்கமே இருக்கும். ஆனா அதுக்காக அவன அடிக்க ஒமக்கு உரிமையில்லை. எங்க ஊர்ல வந்த எங்க ஜாதிக்காரன் மேல ஒருத்தன் கைய வச்சுட்டு திரும்பிப் போயிட முடியாது."

"அப்ப ஒங்கள்ள எவன் எதுக்காக அடிச்சாலும் வாங்கிட்டுத்தான் போகணுமாக்கும்"

"ஆமா, அடிச்சா எங்ககிட்ட சொல்லணும். நாங்க கேட்போம்" ராகவன், தன்னிடம் சாமி சொன்ன இவர்களது கண்துடைப்பு தீர்ப்புகளை மனதில் நினைத்தவனாக, "அவனைக் கூப்புட்டு, போடாக் கழுத இனிமே இப்படி செய்யாதேனு சொல்லுவிங்க. அவ்வளவுதானே?" என்றான்.

ராஜப்பா முதிர்ந்த திமிரோடு, "ஆமா, அப்பிடி சொன்னாலும் சொன்னதுதான்" என்றார்.

ராகவன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link