சிறுகதைகள்


வாழ்க்கை ஓடும்

கூடல்.காம்
குப்பிக்கிழவிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. வாயடைத்தது போலாகிவிட்டது. சண்டையில் மருமகள் வள்ளியே ஜெயித்து விட்டதுபோல் ஓர் உணர்வு. வள்ளி அப்படிப் பேசி இப்படிப் பேசி, கடைசியில் "எம் புள்ளைய நான் அடிக்கிறேன். இல்ல கொல்றேன். நீ யாரு அதக்கேக்க? என்றல்லவா சொல்லி விட்டாள். அதற்குப் பதிலாக சுடச்சுட ஏதாவது கொடுத்துவிட வேண்டுமென்று கிழவி துடித்தாள். அப்படி எதுவும் கிடைக்காது போலிருக்கவே சட்டென்று இந்தக் "கொல்றேன்" என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டாள். ஏதோ ஒரு துரும்பு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

"கொல்லுவியாடி? கொல்லு. வெட்டிப்போடு. கொலகாரப்பய வமுசம்தானே? பின்ன என்னா செய்வே?"

இப்போது வள்ளிக்கு ஆவேசம் வந்துவிட்டது. தன் பரம்பரைக்கு வந்துவிட்ட அவமானத்தைத் துடைக்க அவள் போர்க்கோலம் பூண்டாள். அவளது சித்தப்பன் ஒருவன் வரப்புத் தகராறில் கடப்பாரையால் அடித்து ஒருவன் மண்டையைப் பிளந்துவிட்டு இன்னமும் ஜெயிலில் இருக்கிறான். அதைத்தான் கிழவி குத்திக்காட்டுகிறாள் என்று நினைத்தாள் அவள். சின்ன விஷயத்திற்கெல்லாம் இப்படிப் பெரிய சங்கதிகளை இழுக்கிறாளே, இவளை என்ன செய்தால் தகும் என்று வந்தது அவளுக்கு. "கொலக்கார வமுசம் அது இதுன்னு சொன்னே, மயிர அறுத்துடுவேன்." என்று கிழவியைப் பார்த்து முன்னேறிவாள்.

வரும்போதே கை தன்னால் முந்தானையை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டது.

கிழவி "எங்கடி, அறுடி பாக்கலாம்," என்று முன்னே வந்தாள்.

வள்ளி, கிழவியின் மயிரைப் பிடிக்க, பதிலுக்கு இவளும் பிடிக்க, இருவரும் சிறிது நேரம் இழுபட்டார்கள், சேரி வேடிக்கை பார்த்து ரசித்தது.

தன் வீட்டுத் திண்ணையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்ந பழனிக்கிழவன் சொன்னான். "ஏ வேலாயி, இதென்ன சனியனுங்க. வெலக்கிவிட்டுத் தொல. சின்னத்துக்கும் புத்தியில்ல, பெருசுக்கும் புத்தியில்ல.

வேலாயி தன்னால் பொங்கிவந்த சிரிப்பை அடக்கியும் அடக்க முடியாமலும் விரைந்து வந்து "ஏ அத்தா, ஏ அக்கா இதென்னா நீங்க பொம்பளைங்கதானா? விட்டுத் தொலைங்க." என்று இருவருக்கும் நடுவில் நின்று இருவரை€யும் பிரிக்க முயன்றாள்.

அவர்களும் இப்படியொரு சமாதான தேவைக்கே காத்திருந்தார்கள் போல் தலைமுடியை விட்டு விட்டு முறைத்துக்கொண்டு நின்றார்கள். இருவருக்கும் மூச்சு வாங்கியது.

"வரட்டுண்டி அவன். வந்ததும் தாலியே அறுத்துக்கிட்டு வெரட்டச் சொல்றேன். இது குப்பி.

"ஆமா அத அறுத்துப்போட்டு நீயே கட்டிக்க"

"நீ போயி ஒங்கப்பன கட்டிக்க"

வேலாயி சலித்தபடி சொன்னாள். "சீச்சீ, இதென்னா அசிங்கம். நீங்கள்ளாம் உப்புப்போட்டு திங்கிறிங்களா இல்லியா?"

பின் மாமியாரும், மருமகளும் ஆளுக்கொரு திண்ணையில் ஆளுக்கொரு திசையில் உட்கார்ந்து கொண்டார்கள். இருவர் மனத்திலும் பெரும் பெரும் மனப்பாட நிகழ்ச்சிகள். மகன் வந்ததும் எப்படி எப்படிச் சொல்வது என்று கிழவிக்கும் புருஷன் வந்ததும் எப்படி எப்படிச் சொன்னால் நம்புவான் என்று மனைவிக்கும்.

சிறிது நேரம் சென்று வள்ளி தலையைத் தூக்கிப் பார்த்த போது அவளக்கு முன்னால் பத்து இருபதடி தூரத்தில் இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவர் தலைமயிரை ஒருவர் பிடித்துக் கொண்டு முன்பு இவர்கள் நடத்திய மாதிரியே நடித்துக் காட்டினார்கள். அதை இவ்வளவு சண்டைக்கும் காரணமான வள்ளியின் மகள் - கும்பியின் பேத்தி - வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறுவர்கள் நடிப்பைக் கண்ட வள்ளி. "எடு வெளக்க மாத்த!" என்று விரட்டினாள். "ஒங்கப்பனும் ஆத்தாளும் அன்னிக்குக் குடுச்சுப்போட்டு ரோட்ல துணிகூட இல்லாம ஆடுனாங்களே, அப்பிடி ஆடுங்கடா, போங்கடா!"

அவர்களோ அவளுக்குப் பயந்து ஓடினாலும் தூரப் போய்த் தங்கள் வீட்டோரம் நின்று கொண்டு அதே மாதிரி செய்தது மட்டுமில்லாமல் அவளைப் பழிப்புக் காட்டுவது போல் பல்லைக் காட்டிச் சிரித்தனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து வள்ளி "ஜாதி கெட்ட கழுதைக!" என்று திண்ணையில் கொஞ்சம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

இரவு பதினொரு மணி சுமாருக்கு சின்னையா வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் வந்ததும் செருப்பை விட்டெறிவதற்குச் சமமான வேகத்தோடு கழட்டியதைக் கண்டதுமே மாமியும் மருமகளும் இன்று தங்கள் சண்டையை வெளியிடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டார்கள். ஏனென்றால் சின்னையா வெளியில் ஏதாவது சண்டையோ வம்போ செய்து கொண்டு அந்த ஆத்திரம் தீராமல் வந்திருந்தால் தான் இப்படிச் செருப்பை விடுவான். அது அவன் நிற்கும் இடத்திலிருந்து நாலடி தூரம் போய் விழும். அன்று இவர்கள் தங்கள் கதையை சொன்னால் அநேகமாக இருவருக்கும் உதை விழும்.

"தண்ணி கொண்டா"

வள்ளி ஒரு அலுமினிய குண்டாவில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள். அவன் கை கால் முகங் கழுவிக்கொண்டு தலைத் துண்டை எடுத்து ஈரத்தை துடைத்தபடி திண்ணையில் உட்கார்ந்தான்.

அம்மாக்காரி முதுகைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

"அன்பழகி தூங்கிடுச்சா?" சின்னையா கேட்டான்.

"ஆமா, தூங்கிடுச்சு." என்றாள் வள்ளி.

"சின்னப் பய?"

"தூங்குறான்."

"ஆத்தா சோறு திண்ணாச்சா?"

"ம். இல்லே."

"ஏன்?"

"திங்கும்."

"ஏன் ஆத்தா, வெள்ளன வெடுக்கென திங்கறது தானே?"

"திங்கலாம்," கிழவி அசட்டையாகச் சொன்னாள். வேறு மாதிரியாக மகன் வந்திருந்தால், "ஆமா, மானங்கெட்ட சோறு தின்னுட்டா போதும்" என்றும் ஆரம்பித்திருப்பாள்.

வழக்கமான "குசலங்கள்" முடிந்துதும் சின்னையா சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஒரு பீடியை எடுத்தான். "நெருப்பு பொட்டி குடு" என்றான். அவன் சொன்னதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் வள்ளி அடுப்பைக் கிளறி நெருப்பிருந்த ஒரு சுள்ளியை எடுத்து அதை ஊதிக் கொண்டு வந்தாள். அதை வாங்கி பீடியை பற்ற வைத்து விட்டுச் சின்னையா, ஏன் நெருப்புபொட்டி இல்லியா, என்றான். வள்ளி "இல்லை" என்றதும் என்ன பொளப்புப் பொளைக்கிறோம், என்று சலித்துக் கொண்டே சுள்ளியை அவள் கையில் கொடுத்தான்.

ஒரு ஐந்து நிமிடம் யாரும் பேசவில்லை. அவன் பீடியைப் புகைத்துக் கொண்டிருந்தான். பீடி முடியும் தருணத்தில் அவனுக்கு லேசாக வயிறு வலித்தது.

மொதத் தடவ விழுந்த பய எந்திரிக்கறதுக்குள்ளேயே மொகத்துல ரெண்டு ஒத வுட்டு எந்திரிக்க வுடாம பண்ணியிருந்தா திருப்பி வந்து வயித்தில குத்தியிருக்க மாட்டான்.

"வர்ரவன் போறவன் எல்லாம் என்னயதான பேசுறான்! அட, எங்ககூட "இருந்தவனுக" கூட என்னைய சப்போட் பண்ணலியே, நழுவிட்டானுகளே!"

"அத்தினி பயலுக இருந்தானுகளே, இவனுக்கு நான் தானா கண்ணுல பட்டேன். நம்ம நேரமும் சரியில்லே."

சின்னையாவின் மனம் அன்று சினிமா தியேட்டரில் நடந்ததை எண்ணிக் குமுறியது.

"அவனுக்குக் குடுத்தது பத்தாது. பேச்சு ரொம்ப ராங்கா பேசிட்டான். நாலு நாளு வுட்டு நாமளே அவன ராங்கா வம்புக்கு இழுத்து, நம்ம ஆளுக நாலு பேரு இருக்கப்ப, அவன்தான் இழுத்தான்னு நல்லா குடுக்கணும். இன்னிக்கி எடம் அவன் எடமாப் போச்சு"

இடைவேளையின்போது அவன் சிறுநீர் கழிக்கப் போயிருந்தான். அதற்கென ஒதுக்கியிருந்த இடத்திற்கு முன்னால் காலியாக இருந்த கொஞ்சம் நிலத்தில் ஒரு பத்து முப்பதுபேர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் சிப்பந்தி ஒருவன், பாதையில் இருக்காதே உள்ள போ, உள்ளபோ, உள்ளபோ, என்று கத்திக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கரடியாகக் கத்தியதை யாரும் சட்டை செய்யவில்லை. கடைசியாக அந்த சிப்பந்தி, இனி சத்தம் போட்டுப் புரயோஜனமில்லை, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வரும்போதுதானா சின்னையா போய் உட்கார வேண்டும். சிப்பந்தி ஆத்திரத்தோடு வேகமாக வந்து சின்னையாவுக்குப் பின்னால் அடியில் கையைக் கொடுத்துக் கொஞ்சம் பலமாகவே தூக்கிவிட்டு விட்டான். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சின்னையா தடுமாறிப்போய் எதிரே இருந்த சகதிபோன்ற அசிங்கத்தில் மிதிக்க வேண்டியதாகிவிட்டது. சின்னையா ஏற்கனவே முன்கோபக்காரன். இப்போது அவமானம். அவன் வேகமாகத் திரும்பி வந்து வந்த வேகத்தோடு சிப்பந்தியைப் பிடித்துத் தள்ளினான். அவன் பக்கத்தில் இருந்து கொண்டிருந்த ஆள் மேல் இடறிக் கீழே விழுந்துவிட்டான். அவன் எழுந்ததும் இருவருக்கும் துவந்த யுத்தம். அது விலக்கப்பட்டதும் ஆபாசமான வாய்ச் சண்டை. இந்தச் சண்டையில் தான் தான் தோற்றுவிட்டது போலவும் எல்லாரும் தன்னைத் தான் குற்றம் சொல்கிறார்கள் என்ற உணர்வும் சின்னையாவுக்கு.

இந்த சண்டையைப் பற்றி படம் விட்டதும் இரண்டு பேர் பேசிக் கொண்டு போனது வேறு. அவர்களும் அவனையே மட்டமாகப் பேசினார்கள். ஒருவன் தமாஷ் வேறு பேசினான். வெள்ளைக்காரப் பய இந்தியாவுக்கு என்னென்னமோ செஞ்சுட்டு இருக்கக்கூட சொல்லிக் குடுக்காம போயிட்டான் சார்.

வள்ளி கேட்டாள். "சோறு திங்கிறதுதானே?"

"ம். திங்கலாம். ஆத்தாவுக்கு மொதல்ல போடு"

வள்ளி மெதுவாகச் சொன்னாள்; "கூப்புடு"

ஏன், நீ கூப்புட மாட்டியா, திரும்பியும் சண்டையா?"

மாமியார், மருமகள் இருவருமே பேசவில்லை. சின்னையாவுக்குள் எரிச்சல் மீண்டும் குப்பென்று பிடித்தது. தியேட்டர் சண்டையின் தொடர்ச்சிபோல் பொரிந்தான். "ஒங்களச் சொல்லி குத்தமில்ல. மனுஷன் மாடா ஒழச்சு, சீமத்தண்ணி வித்து, லாரியில மூட்ட சொமந்து நாலு காசு கொண்டாந்தா அதவச்சு ஒழுங்கா வடிச்சுப் போட முடியல. பொழுது விடிஞ்சா வம்பு சண்டை. ஆட்டுக்கு வால ஆண்டவன் அளந்துதான் வச்சிருந்தான். அர வயித்துக் கஞ்சியிலே நீங்க போடுற ஆட்டம் மனுஷன் வூட்டுக்கு வர முடியல."

தான் பொதுவாக இருவரையும் பிடித்து வாங்குவதாக அவன் நினைப்பு. ஆனால் இருவருமே எல்லாமே தங்களுக்கு மட்டுமாகவே எடுத்துக் கொண்டார்கள். கிழவிக்கோ முதலில் இன்றைக்கு இவனிடம் வாயைக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்திருத்தும் இதைக் கேட்டுப் பொறுக்க முடியவில்லை. அவள் "ஆமாப்பா, ஒன் பொஞ்சாதி" போடுற சோத்துல கொழுத்துப் போயிதான் ஆடுறேன், ஒனக்குப் புண்ணியமாப் போவுது, என்னையக் கொண்டு போயி நாளைக்கே செல்லாயி வூட்ல வுட்டுடு, என்றாள். செல்லாயி அவளது மகள்.

"ஏன் கொண்டான் குடுத்தான் வூட்ல போயி உக்காந்துகிட்டு மானத்த வாங்கணுமாக்கும்?" என்றான் சின்னையா.

"இங்கமட்டும் என்ன வாழுது? ஏண்டி பொம்பளப் புள்ளையப் போட்டு அப்பிடி அடிக்கறேனு கேட்டதுக்கு என்னா பேச்சு பேசிட்டா தெரியுமா?"

"அப்பிடி என்ன பேசிட்டா? பெத்த தாயின்னு இருந்தா புள்ளைய அடிக்க மாட்டாளா? நீ எங்கள எல்லாம் அடிச்சது இல்லியா?"

"அதுக்கு மெய்யடி பொய்யடிணு ஒரு கணக்கு இல்லியா? அதான் போவுட்டும். பொம்பளப் புள்ளைய எதால அடிக்கிறது?"

சின்னையா வள்ளியைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான். "எதாலடி அடிச்சே?"

"ஒரேயடியா சண்டித்தனம் பண்ணுச்சு. ஆத்துரத்துல பக்கத்துல கெடந்தத எடுத்துப் போட்டேன்."

"எதடி?"

இதற்கு வள்ளி பேசவில்லை. கிழவி பேசினாள். "வெளக்க மாத்துக் கட்டையில."

சின்னையாவுக்கு "கிர்" என்று வந்தது. "புள்ளகளத்தெட்டா மட்டும் கெட்ட ஜாதிப்பயலா இருப்பேன்." என்று சொல்லிச் சொல்லி அதே மாதிரி ஆகிவிட்டிருந்தவன் அவன். செல்ல மகளைத் துடைப்பத்தால் அடித்து விட்டாள் என்றால் கேட்க வேண்டுமா? சடாரென்று எழுந்து மனைவியை ஓங்கி ஒரு அரை விட்டான். "அவ்வளவு கொழுத்துப் போச்சா?" அள்வளவு தான். வள்ளிக்கு ஆங்காரம் வந்து விட்டது. ஏன் இதோட வுட்டுட்டே. அது சொன்ன மாதிரியே தாலிய அறுத்துக்கிட்டு எங்கப்பன் வூட்டுக்கு வெரட்டேன்?" என்றாள்.

"ஏண்டி என் தலைமயிரப் புடிச்சே? அதுக்கு சொன்னண்டி" கிழவி.

சின்னையா கத்தினான். "மயிருபிடி சண்டை வரையில வந்திட்டிங்களா? நாளக்கு காலையில இங்க இருக்காதிங்க. ஓடிப்போயிடுங்க, சனியன்களா, ஒங்க மூஞ்சியில முழிச்சாலே மனுஷன் உருப்பட மாட்டான்."

"போறேன். இந்த மானங்கெட்ட கஞ்சி குடிக்கிறதுக்கு சித்தாளு வேல செஞ்சு மரியாதையா கா வயித்துக் கஞ்சிக் குடிக்கலாம்." என்றாள் வள்ளி.

"எதுடி மானங்கெட்ட கஞ்சி? இங்க நான் என்ன திருடி மொல்லமாரியா கொண்டாரேன்?" என்று சின்னையா மீண்டும் இரண்டு அடிவைத்தான். வள்ளியின் அழுகை தெருவுக்கே கேட்க ஆரம்பித்துவிட்டது. இதில் கிழவிக்குத் திருப்திப்படவில்லை போலிருக்கிறது. திண்ணையிலிருந்து எழுந்து கொண்டே "ஊரு மெச்சிக்கிறதுக்கு ரெண்டு தட்டு தட்டுவான். அவ ஒப்பாரி வப்பா. இதுக்கு நாளைக்கெல்லாம் அவளயே சுத்தி சுத்தி சரசம் பண்ணுவான். நாங்கள்ளாம் அடிப்பட்டிருக்கோம்" என்று முணுமுணுத்ததுபோல் சொன்னாள்.

சின்னையா ஆத்திரத்தோடு வந்து அவள் முன்னால் நின்று கொண்டு, "ரெண்டு தட்டு தட்டாம வேற என்னா செய்யச் சொல்றே? வெட்டிப் போட்ற சொல்றியா? பின்ன ஒரு அருவாக் கொண்டா," என்றான். கிழவிக்குத் தர்க்க சாஸ்திரங்கள் எல்லாம் அத்துபிடி. அவள் பேசினாள். அவள ஏன் வெட்ற? என்னய வெட்டு. எனக்கும் நிம்மதி. ஒங்களுக்கும் நிம்மதி.

அவளது கன்னத்திலும் ஒரு அறை விழுந்தது. உடனே எங்கிருந்தோ சாமியே வந்து அவள் உடலுக்குள் புகுந்து கொண்டது. "டேய் அடிக்கிறியாடா டேய். இன்னும் மூணு நாளக்குள்ள ஓங்கைக்கி பக்கவாதம் வரல. நான் ஒருத்தனுக்கு முந்தானி போடல. மகமாயி, நீயே கேளு," என்று குனிந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் காற்றில் இறைத்தாள்.

பழனிக் கிழவன், "என்னடா இது பகல்னு இல்ல ராவுன்னு இல்ல ஆணுன்னு இல்ல பொண்ணுன்னு இல்ல எப்பப் பார்த்தாலும் ரகள. எங்கயோ கெடந்த கொறக்கூட்டம் சேரியில வந்து குடியேறிடுச்சி," என்று அங்கலாய்த்தான்.

சின்னையா இங்கிருந்தபடியே, "ஆமா இவுரு பெரிய ஜாதிமான்," என்றான். பழனி வீட்டிலிருந்து வேறொரு ஆண்குரல், "அப்பா நீ சும்மா இருக்க மாட்ட? ஒன் வாயத் தச்சாதான் பேசாம இருப்பப் போல இருக்கு. என்று அதட்டியது.

சின்னையா பழையபடி வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டான். உட்கார்ந்தவன் சிறிது நேரத்தில் அப்படியே படுத்தான். வள்ளி வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தாள். கிழவி இன்னும் தூங்கவில்லை.

மூவர் மனதிலும் மூவகைத் திட்டங்கள். ஆக்ரோஷங்கள், வருத்தங்கள்.

"மனுஷன் மாடாக் கெடந்து, வெயில்னு பாக்காம மழைன்னு பாக்காம கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொண்ணாந்தா அத நன்றி விசுவாசத்தோட பாக்க ஒரு நாதி கெடையாது. நன்றி கெட்ட ஜென்மங்க. எக்கேடோ போகட்டும். நாம் விடிஞ்சா கௌம்பிட வேண்டியது தான்." இது சின்னையா.

"ஒடம்பு துரும்பாப் போயும் வஞ்சன இல்லாம ஒழச்சும் அடிஒத தான் மிச்சம். இன்னி இத எத்தினி காலத்துக்குச் சகிச்சுக்கிறது. காலையில மொத வண்டிக்கே போயிற வேண்டியதுதான்." வள்ளி.

"அயோக்கியப்பய இவன வளக்க என்னா பாடு பட்டுருப்பேன். எவ்வளவு காசு எறச்சுருப்பேன். இப்ப என்னியவே கைநீட்டி அடிக்கிறானே, இவன் உருப்படவா போறான். எனக்கென்னா, செல்லாயிகிட்ட போனா பொம்பளப்புள்ளயா இருந்தாலும் தங்கம் தங்கம்னு வச்சு கஞ்சி உத்துவா" - கிழவி.

அப்போது அந்தக் குடும்பம் தானே மூன்று கூறாய் உடைந்து மூன்று திசையில் சிதற, பொழுது எப்போது விடியுமென்று காத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். அதாவது மணி பன்னிரண்டரை இருக்கும். புரோக்கர் முனியப்பன் வந்து மெதுவாகச் சத்தம் கொடுத்தான்.

"சின்னயா அண்ணே! சின்னயா அண்ணே!"

சின்னையா "யாரு முனியப்பனா?" என்றான்.

"ஆமா" என்ற முனியப்பன் வந்து தலைமாட்டில் உட்கார்ந்தான்.

சின்னையா எழுந்திருக்காமலே கேட்டான். "என்னா முனியப்பா இந்த நேரத்தில?"

"இப்பதான் டவுன்ல இருந்து வர்ரேன். நாளக்கி பதினஞ்சு ஆளு மருத போகணும். ஒரு இருபது நாளக்கி அங்கேயே இருக்கணும். வளர்மதி லாரி முதலாளி அம்பது ரூவா அட்வான்ஸ் தர்ரேங்கிறாரு. ஏதோ ரெண்டு மூணு மில்லுக்கு பேல் கட்டு ஏத்தணுமாம். நீயும் வர்ரியா?"

சின்னையா பேசவில்லை

"என்னண்ணே?"

"நான் வரல"

"ஏன்"

"என்னத்த சம்பாரிச்சு என்ன பிரயோசனம்? பேல் கட்டு ஏத்தி எறக்குறது சும்மாவா இருக்கு. நெஞ்செலும்பு காஞ்சு போவும். அந்தக் காச வாங்கிக்கிட்டு இங்க வந்தா சந்தோஷப்பட யாரு இருக்கா? சண்டை போடத்தான் ஆளு இருக்கு"

"ஏன், எதாச்சும் சண்டையா?"

சின்னையா ஒன்றும் பேசவில்லை.

"என்னமோ வர்ரதுனா வா. காலையில் ஆறு மணிக்கே பொறப்படணும். நாலு பேத்துக்கு அட்வான்ஸ் கூட வாங்கியாந்திருக்கேன். வீட்ல குடுத்துட்டுப் போவலாம்."

சிறிது இடைவெளி விட்டு சின்னையா கடைசியாகச் சொன்னான். "நான் வல்ல போ."

முனியப்பன் புறப்பட்டுப் போனான்.

மீண்டும் ஒரு அரைமணி நேரம் சென்றது. சின்னையா எழுந்து உட்கார்ந்தான். பிறகு வெளியே வந்தான். வள்ளியும் அதுவரை தூங்கவில்லையென்று தெரிந்தது. இவன் புறப்படும் அரவம் கேட்டதும் குடிசைக்குள் படுத்திருந்தவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

ஒரு பதினைந்து நிமிஷங்கள் கழித்து சின்னையா மீண்டும் வந்து திண்ணையில் உட்கார்ந்தான். ஒரு பீடியைப் பற்ற வைத்தான். கையில் நெருப்புப்பெட்டி இருந்தது. முனியப்பனிடம் வாங்கியிருக்க வேண்டும்.

அதுவரை அந்த இரவில் தங்கள் குடும்பத்தில் எதுவுமே நடக்காததுபோல் வள்ளி கேட்டாள். "எங்க போயிட்டு வர்ரே?"

"காலையில் ஆறு மணிக்கெல்லாம் மருத போறேன்," என்று கையிலிருந்த நோட்டுகளில் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு மீதியை மடித்து அவளிடம் எறிந்தான்.

"ஏன் இருவது நாளக்கி மருதையிலே போய் உக்காராட்டி இங்க அந்த வேல கெடைக்காதா?"

"இந்த மழகாலத்துல எவன் சேந்தாப்புல இருவது நாளக்கி வேல தர்றான். அத்தோட அட்வான்ஸ் வேற அம்பது ரூவா தர்றான்."

"பத்து நாளு போனதும் ஒரு தடவ வந்துட்டுப்போ."

"ம்...ம்"

"காலையில குளிச்சுட்டுப் போறியா?"

"ம்..."

அவர்களுக்குத் தூக்கம் கெட்டுப் போயிருந்தது. ஒரு பத்து நிமிஷம் அவன் திண்ணையிலும் அவள் உள்ளேயுமாக உட்கார்ந்திருந்தார்கள். சின்னையன் உட்கார்ந்திருக்கும் அவளை இரண்டொரு தடவை பார்த்தான். பிறகு உள்ளே போனான். வெளியே ஓடிவிடுவதாகப் பாவ்லா செய்தாள் அவள். அவன் அவள் சேலையைப் பிடித்து நிறுத்திக் கொண்டான். கிழவி எழுந்து வேலியோரம் போனவள் திரும்பவும் திண்ணைக்கு வராமல் பக்கத்து வீட்டு ஒட்டுத் திண்ணைக்குப் போய்ப் படுத்துக் கொண்டாள்.

சின்னையாவும் வள்ளியும் "ராசி"யாகி விட்டார்கள்.

குப்பி ஒருத்திதான் பாக்கியிருந்தாள்.

காலை ஐந்து மணியிருக்கும். கிழவி பக்கத்து வீட்டுத் திண்ணையிலிருந்து வந்து, "வள்ளி, யே வள்ளி." என்று கூப்பிட்டாள்.

"என்னா?"

"அவன் காலையில ஆறு மணிக்கிப் போறேன்னானே, எந்துருச்சு சுடுதண்ணி போடுறது?"

"போடுறேன்."

"ஆமா பச்சத் தண்ணி வேணாம். ரொம்ப ஊதக் காத்தா இருக்கு."

ஆறு மணிக்கெல்லாம் சின்னையா பயணத்திற்குத் தயாராக நின்றான். அவனுடைய பெண் அன்பழகி அவன் கையைப் பிடித்துக் கொண்டு நின்றாள். சின்னப் பையன் வள்ளியின் இடுப்பில் இருந்தான். கிழவி வாசலில் நின்று நல்ல சகுனம் வருகிறதாவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சொன்னாள். "வர்ரப்ப வள்ளிக்கு ஒரு சீல எடுத்துக்கிட்டு வா. அவளுந்தான் ரெண்டு சீலைய தொவச்சுத் தொவச்சுக் கட்றா?"

"வர்ரப்ப ஒங்க ஆத்தாவுக்கு ஒரு வெத்தலபாக்கு ஒரலு வாங்கிக்கிட்டு வா. தொலஞ்சு போச்சு. எத்தினி நாளக்கி பழனிக் கெழவங்கிட்ட ஓசி வாங்குறது?" என்று மாமியாருக்கு சிபாரிசு செய்தாள் வள்ளி.

"எனக்குப் பாவடை" என்றாள் அன்பழகி.

"எக்கும்," என்றான். "சின்னப்பையன்."

"என்னடா வேணும்?"

"மிட்டாயி சொல்லு."

"மிட்டா,"

"டாட்டா சொல்லு"

குழந்தை சொல்லவில்லை.

"சொல்லுடா போக்கிரி நாயி," என்றாள் பாட்டி. இதை மட்டும் சரியாகச் சொன்னான் பேரன். "போக்கிரி நாயி,"

நால்வரும் சிரித்தனர்.

"அப்ப நான் வர்ரேன். சண்டை சச்சரவு போட்டுக்காம இருங்க."

"போயிட்டு வா. கொஞ்சம் கோவத்த அணுசரிச்சு வம்பு தும்பு இல்லாம வந்து சேரு."

சின்னையன் புறப்பட்டான்.

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link