சிறுகதைகள்


அரும்புகளை...

கூடல்.காம்
ஒரு குதிக்கின்ற மலையருவி.

சிரிக்கின்ற குழந்தை முகம்.

ஒரு பூ.

நல்ல புத்தகம்.

இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே, மனத்தில் சந்தோஷத்தைக் கிளறி விட்டுவிடும் ஒன்றிரண்டு விஷயங்களில் அவனும் ஒன்றாக ஆகியிருந்தான், அந்த ஏழெட்டு நாட்களிலேயே.

உத்தியோகத்தின் பெயர் லாட்ஜ் பையன் அல்லது ரூம் பாய்தான் என்றாலும் சொந்தப் பெயர் கம்பீரமான பரணி. இந்த சொந்தப் பெயர்தான் சத்தியமான ஒன்று. இப்படிப் பெயர் பொருத்தம் லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் அமைய முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தால்தானே பரணி என்று பெயர் வைப்பார்கள்? பரணியில் பிறந்தவன் தரணியாள்வான் என்பது வாசகமல்லவா! யாரையாவது கூப்பிட்டு நிறுத்தி இவன் தரணியாள்வானா?" என்று கேட்டால் சந்தேகமென்ன? என்று திருப்பிக் கேட்பதைத் தவிர வேறு வழி யாருக்கும் இருக்காது.

இவ்வளவிற்கும் அவனது உடைகள்? அவனது முக விலாசத்தைக் கண்டு பொறாமைப்பட்டு அல்லது திருஷ்டிப்பட்டு விடுமே என்று கரிசனப்பட்ட யாரோ வேண்டுமென்றே போட்டுவிட்ட குடுகுடுப்பைத் துணிமணிகள் போலிருக்கும். ஆனால் அவன் அதையும் ஓர் ஒழுங்கிற்கு உட்படுத்திச் சட்டையை "இன்" செய்து கைகளை மடித்துவிட்டு அழகுக்கு அவலட்சணமும் ஓர் ஆபரணமே என்பது போல் வந்து நின்று சிரிப்பான்.

அந்தச் சிரிப்பு, அந்தப் பதினொரு வயது ராஜகுமாரன் முகத்திற்கு ஒரு வைரக்கிரீடம். அந்தக் கிரீடத்தை அவன் எடுத்தெடுத்து அணியும் காட்சியே ஒரு கண்கொள்ளா நேர்த்தி. வந்ததும் - நாம் பேசியதும் - அவன் பதில் சொல்லும் முன்பும் - சொல்லி முடிந்த பின்பும் - எடுத்து வைத்துக் கொண்டு நிமிர்ந்து கம்பீரம் காட்டுவான்.

ஒட்டுமொத்தத்தில் ஒரு பேழையாகத் தெரியும் அவன் முகத்தை அணுகிக் கண், காதென்று பிரித்துப் பார்த்தால் இன்னது தான் இவன் சிறப்பென்று தனியாக ஒன்றும் தெரியாது. நிறமும் கூட அப்படியொன்றும் "செக்கச் செவேல்" அல்ல. மாநிறத்திற்கு மேலே இரண்டு மாத்திரை இருக்கலாம். அவ்வளவுதான். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்ட பிறகு எனக்கு விவரம் விளங்கியது. அவனது முகபாகங்கள், இது இந்த அளவில் என்று, இதற்கு இது இந்த உறவில் என்று, இதற்கு என்ன தூரத்தில் என்று இலக்கணம் பிழையாமல் வார்க்கப்பட்டு வந்திருந்தது. மட்டன் வகையறாக்களை வசமாக ஒரு பிடி பிடித்துவிட்டு வந்து திண்டுக்கல் வெற்றிலையை மெல்லுகின்ற போது என் மாமா இருக்கும் நிறைந்த நிலையைப் போல, தேவதச்சனும் ஏதோ ஓர் "அமர்களத்தில்" இருந்தபோது அந்த சந்தோஷத்தோடும் திருப்தியோடும் இவன் உடம்பை வடிக்க உளி எடுத்திருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றும்.

அந்த ஊர் கிராமமுமல்ல, நகரமுமல்ல. முன்னதிலிருந்து பின்னதாக வளர்ந்து கொண்டும் சிதைந்து கொண்டும் வந்த ஒன்று. வளர்ச்சி அணியின் ஒரு முனையில் ஒரு கல்லூரியும், எதிர் அணி முனையில் இந்த லாட்ஜும் இருந்தன. முப்பது நாற்பது அறைகளில் தினம் தங்கும் அளவுக்கு அந்த ஊருக்கு ஜனங்கள் வந்துபோகும் வாய்ப்பு இல்லையென்றாலும் எப்படியோ குவிந்துவிட்ட பணத்தை எதிலாவது முதலீடு செய்து வைத்தால் சரியென்று நினைத்த உள்ளூர் ஆசாமியொருவர் அதை எழுப்பியிருந்தார். ஆனால் ஆசை அப்படியெல்லாம் யாரை விட்டிருக்கிறது? ஆறு மாதம் போனதும் போட்ட முதலுக்கு வட்டியாவது வருகிறதா இல்லையா வென்று அவரால் கணக்குப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தபோது கணக்கு நஷ்டக் கணக்காக இருக்கவே அதைச் சரிக்கட்ட சில யோசனைகளைச் செயல்படுத்தினார்.

மேலே நகரத்து லாட்ஜ்களுக்கு ஈடாக அறைகளில் கவர்ச்சி செய்ய ஆரம்பித்தார். கவர்ச்சி என்றால் சகலமுனைக் கவர்ச்சி. அதன் பிறகு அந்தக் கட்டடம் சீக்கிரம் உள்ளூரில் ஒரு பேச்சு சுவாராஸ்ய விஷயமானது மட்டுமில்லாமல் சுற்று வட்டாரத்திலும் தனது கியாதியை நிலைநாட்டிக் கொண்டது. அந்த ஊர் மார்க்கெட்டிற்குப் பருத்தியும் மிளகாயும் கொண்டு வந்து போட்டு விட்டு இரவு கடைசி பஸ்ஸைப் பிடித்தாவது ஓடி ஊர் போய் விழுந்து கொண்டிருந்த பக்கத்து கிராமங்களின் நடுத்தர விவசாயிகள், வியாபாரிகள் எல்லாம் இங்கே ஒரு நைட் தங்கிவிட்டு நிதானமாகக் காலையில் ஊர் திரும்பும் அளவுக்கு அந்தக் கவர்ச்சி ஈர்ப்பு சக்தி கொண்டிருந்தது. இதன் ஆரம்ப கட்டத்தில் தான் நான் அங்கு வந்தேன்.

நான் ஓர் ஆராய்ச்சி மாணவி. பட்ட மேற்படிப்பை முடித்த கையோடு ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தேன். ஆராய்ச்சிப் பொருளாக நாட்டுப்பாடல்களை எடுத்திருந்தேன். இந்த வட்டாரத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான நாட்டுப்பாடல்கள் இருப்பதாகக் கேள்விபட்டதும் - எனது சொந்த ஊரும் பல்கலைக் கழகமும் நூற்றிருபது மைல் தூரத்தில் இருந்தாலும் - அவற்றையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு பத்து நாள் திட்டத்தில் வந்திருந்தேன். அதற்கு இந்த ஊர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உதவுவதாக எழுதியிருந்தார். ஆனால் அவர் குடியிருந்த வீடு அவர் மனத்தைப்போல விசாலமானதாக இல்லாமல் அவரது சகதர்மிணியின் உள்ளத்தைப் போல இருந்தால், வேறு வழியின்றி ஆசூசை யென்னும் நிலையில் இந்த லாட்ஜே சின்னப் பிசாசாக இருக்க முடியுமென்று இங்கு ரூம் பாய்களில் ஒருவனாக இருந்தான்.

நான் வந்து பத்து நிமிஷத்திற்கெல்லாம் கதவு மெதுவாகவும் மரியாதையாகவும் தட்டப்பட்டது. நான் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது வராண்டா பல்புகளின் மங்கிய வெளிச்சத்தில் இவன் நின்று கொண்டிருந்தான்.

முதலில் எனக்கு யாரோ பக்கத்து அறைகளில் தங்கியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கதவு தெரியாமல் இங்கே வந்து தட்டியிருக்க வேண்டுமென்று தோன்றியது. நான் பொதுவாக, இந்த வயதுச் சிறுவர்களைக் கண்டால் உண்டாகும் வாஞ்சையோடு என்னா தம்பி? என்றேன். இவனோ "நான் ரூம் பாய்ங்க அக்கா. காப்பி ஏதும் கொண்டாரங்களா?" என்று கேட்டான். நான் யோசித்துக்கொண்டே உள்ளே வந்தபோது இவனும் உள்ளே வந்தான். பிறகு தான் நான் அவனை முழுமையாகப் பார்த்தேன். அன்று இரவுக்கு டிபன் கொண்டு வந்தபோது அவன் பெயரை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

மறுநாள் காலை டிபன் கொண்டு வந்தபோது அவனை நிறுத்திவைத்துக் கொண்டு பேச்சுக் கொடுத்தேன்.

"ஒன் வயது என்னப்பா, பரணி?"

அவன் ஓர் இளம் புன்னகைக்குப் பிறகு சொன்னான். "பதினொண்ணுங்க அக்கா!"

"பதினொண்ணுதானா? ஏன் அதுக்குள்ள வேலைக்கி வந்துட்ட? எத்தினாவது வரையிலயும் படிச்சே?"

"ஆறாங் கிளாஸ் வரையிலயும் படிச்சேன். அம்மா தான் நிறுத்திடுச்சு!"

"ஏன்?"

"இந்த மொதலாளி வந்து அதுகிட்ட ஒரு பொடியன் இருந்தா பாரு. எடுபிடி வேலைக்கி வேணும். சோறு போட்டு வாரம் அஞ்சு ரூவா கொடுத்துடலாம்"னு சொன்னாரு. ஒடனே அது இவனத்தான் கூட்டிக்கிட்டு போங்களேன்னு சொல்லிடுச்சு!

"உங்கப்பா என்னா சொன்னாரு?"

"எங்கப்பன் இல்ல" என்றவன் சிறிது விட்டு அவனே "அவரு ஓடிப் போயிட்டாரு" என்றான்.

"ஓடிப் போயிட்டாரா?"

"ஆமா, காணல?"

"ஏன்"

"தெரியல"

"உங்கம்மா என்னா வேல செய்யுது?"

"அது ஒண்ணும் வேல செய்றதில்ல."

"அப்புறம் சாப்பாட்டுக்கு?"

"அதுதான் நான் சம்பாரிக்கிறேன் இல்ல?"

நான் சிரித்தபடி கேட்டேன். "மாசம் இருபது ரூபா போதுமா?

அவன் பேசாமல் இருந்தான். இந்த விஷயமோ இதன் அடி ஆழமோ அவன் சிந்தனைக்கு இன்னும் வரவில்லையென்பது தெரிந்தது. பிறகு நான், "சரி, நீ போப்பா, என்றதும் போய்விட்டான்.

அன்று மாலையே எங்கள் பேச்சு மீண்டும் தொடர்ந்தது.

"ஒனக்கு படிக்கணும்னு ஆசை இல்லையா பரணி?"

"இருக்குங்க அக்கா ஆனா என்னா செய்றது. ஜோசியர் கூட "நீ போயி திரும்பிப் படிடா, நீ கலெக்டரா வரணும்னு ஒன் ஜாதகத்துல இருக்குன்னு சொல்றாரு. ஆனா எப்படிப் படிக்கிறது?"

"எந்த ஜோசியரு?"

"வியாழக்கெழம வியாழக்கெழம இங்க ஒம்பதாம் நம்பர்ல வந்து தங்குவாறு ஒருத்தரு"

"எதுக்கு தங்குறாரு?"

"எல்லாரும் அவருகிட்ட அன்னிக்கு ஜோசியம் பாப்பாங்க"

"அவர் ஒன் ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னாரா?"

"இல்ல. மொகத்தப் பாத்தே சொல்றண்டானு சொன்னாரு!"

"அது சரி, இவனுக்கு ஜாதகம் எதற்கு, ஜோசியம் எதற்கு? முகம் போதாதா? என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவன் திடீரென்று கொஞ்சம் முகம் சோர்ந்தவனாகச் சொன்னான். "அவரு இன்னொண்ணும் சொல்றாரு - அத நெனச்சாத்தான் பயமாயிருக்கு. நீ இங்க இருந்து சீக்கிரம் ஓடிப்போயிடு. ஒனக்கு இங்க ஒரு கண்டம் இருக்கு. ரெண்டு மாசத்துக்குள்ள போகலேன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொல்றாரு."

எனக்கு அவர் உள்ளம் புரிந்தது. இந்தத் தாமரை இந்தச் சேற்றில் கிடப்பது அவரையும் உறுத்துகிறது.

எனக்கு ஒரு கணம் இப்படித் தோன்றியது. "இவனை நாமே அழைத்துக் கொண்டு போய்ப் படிக்க வைத்தால் என்ன? ஆனால் மறு கனமே இது எப்படிச் சாத்தியம் என்ற எதிர்மறை நிதர்சனம். இப்போதே சிரமம்தான் என்றாலும் ஒரு சிறுவன் என்ற முறையில் இவன் செலவுகளை ஏதோ என் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இன்னும் ஐந்தாறு வருஷங்களில் ஒரு முழு வாலிபனின் செலவுகளை அது தாங்க முடியுமா? ஆனாலும் ஆசை உள்ளடங்க மறுக்கவே வாய் தானாகக் கேட்டு வைத்தது.

"படிக்க வச்சா படிப்பியா?"

அவனும் இது என்ன அவ்வளவு சின்ன விஷயமா என்று கேட்பது போல் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "அம்மா என்னா சொல்லுதோ?" என்றான். அம்மா என்ன சொல்வாள் என்பதைக் கொஞ்ச நேரத்திற்கு முன் உள்ளே வந்திருந்த இன்னொரு லாட்ஜ் பையனான கதிரேசன் சொன்னான்.

"அதெல்லாம் அந்த அம்மா வுடாதுங்க. இவன் எப்பிடிப் போனாலும் அதுக்குக் காசுதானுங்க முக்கியம். வாரா வாரம் சனிக்கெழம சாயந்தரம் வந்து அந்த அஞ்சு ரூவாய வாங்கிக்கிட்டு போகாட்டி அதுக்கு உயிரு போயிடும்.

இந்தக் கதிரேசனுக்குப் பரணியை விட இரண்டு மூன்று வயதுதான் கூட இருக்குமென்றாலும் அவன் இதற்குள் முற்றிப் பிளக்க ஆரம்பித்திருந்தான். பரணி தன் சகல பரிமாணங்களிலும் ஒரு சகோதரனின் இடத்தைப் பூர்த்தி செய்தபோது இவன் என்னைப் போன்றவர்களை ஒரு பெண்ணாகவே பார்க்கத் தெரிந்திருந்தான் - அந்தப் பார்வைக்குரிய சகல கள்ளத்தனங்களோடும். அவனுக்குப் பரணிமேல் சரியான பொறாமை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. இருக்காதா? சக தொழிலாளி ஒருவன் மேல் எல்லோரும் அணைக்காத குறையாக அல்லவா அன்பு செலுத்துகிறார்கள்.

முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே என் மனத்தில் பரணியின் ஆதிக்கம் எப்படியிருந்தது என்பதை ஓர் உதாரணம் மூலம் மட்டுமே சொல்ல முடியும். நான் பள்ளியிறுதி படித்துக் கொண்டிருந்தபோது என்று நினைக்கிறேன். அப்போது முதன் முதலாக எங்கள் வீட்டில் ரேடியோ வாங்கினார்கள். அப்படி வாங்கிய புதிதில் நான் பள்ளிக்கோ அல்லது எங்காவது வெளியிலோ சென்றுவிட்டுத் திரும்பும் போது திடீரென்று இப்போது நம் வீட்டில் ரேடியோ இருக்கிறது என்ற நினைப்பு வந்துவிடும். அது மிகுந்த சந்தோஷமாக இருக்கும். போனதும் சினிமாப் பாட்டு இருக்குமா? இருந்தால் என்னென்ன பாடல்கள் வந்தால் நன்றாக இருக்கும்? - இப்படி. அதைப் போலவே இப்போது கிராமத்திலிருந்து திரும்பி வரும் எனக்கு லாட்ஜில் இவன் இருக்கிறான் என்ற நினைப்பே சந்தோஷம் தரும். அவனிடம் என்ன பேசலாம், என்ன பதில் சொல்வான் என்று கூடக் கற்பனை செய்து கொண்டு வருவேன்.

அது நான் அங்கு வந்த நான்காம் நாள் காலை என்று நினைக்கிறேன். பரணியிடத்தில் ஒரு பெரிய மாற்றம். மூன்று நாளும் காலை ஆறு மணிக்கெல்லாம் குட்மார்னிங் சொல்வது போல் சிரித்தபடி வந்து நின்று கொண்டு "காப்பி கொண்டாரங்களா அக்கா" என்று கேட்கும் அவன் தொனியில் அன்று ஜீவனில்லை. முகம் வாடியிருந்தது. நான், கொண்டா என்று சொன்னதும் தொடர்ந்து, ஏன் பரணி ஒரு மாதிரி இருக்கே?" என்று கேட்டேன். அவன் "ஒண்ணுமில்லிங்க அக்கா" என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மீண்டும் அவன் ஒன்பது மணியளவில் டிபன் கொண்டு வந்தபோது திரும்பவும் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான். மீண்டும் நான் இரண்டு முறை வற்புறுத்தியபோது பழையபடி மேஜையருகில் வந்து நின்று கொண்டு தரையைப் பார்த்தபடி பேசினான்.

"நான் இங்க இருந்து போயிடப் போறேன் அக்கா?"

"ஏம்ப்பா?"

அவன் இதற்கு வருத்தத்துடனும் மெதுவாகவும் பதில் சொன்னான்.

"மொதலாளி கக்கூஸ் எல்லாம் என்னையே கழுவச் சொல்றாரு!"

நான் வியப்போடு, "ஏன்" என்றேன்.

முனியம்மா கூலி கட்டாதுனு கூட காசு கேட்டா இல்லைன்னா வரலேனு சொன்னா. இவரு, சரி, நீ வரவேணாம். நான் வேற ஆளப் பாத்துக்கிறேனு சொல்லிட்டாரு. இதைச் சொல்லும்போது அவன் ஏதோ குற்றம் செய்து விட்டவனைப் போல மனம் குலுங்குவதை என்னால் உணர முடிந்தது. அவனது உணர்வுகள் எனக்குப் புரிந்தது.

நிச்சயமாக இது ஒரு கேவலமான தொழில் இல்லைதான். ஆனால் அதை இன்னமும் அப்படியே கருதிக் கொண்டு செயல்படுகின்ற ஒரு சமூகத்தால் வளர்க்கப்படுகின்ற ஒரு பாலகன் அப்படியொன்று தன் மேல் திணிக்கப்படுவதைக் கண்டு மிரண்டு போவதில் ஆச்சரியமொன்றுமில்லை.

சிறிது விட்டு அவனே தொடர்ந்து சொன்னான். "சொல்றது தான் நாளு நாளுனு சொல்லுவாரு. ஆனா, ஒரு மாசம் வரைக்கும் ஆள் பாக்க மாட்டாரு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியும் இப்படிதான் செஞ்சாரு."

நான் கேட்டேன், "நீ "நான் மாட்டே"னு சொல்றது?"

"சொன்னா அடிப்பாரு"

"இவன் குடுக்குற காசுக்கு அடிக்க வேற செய்றானா?"

"பொல்லாத அடி அடிப்பாருங்க அக்கா!"

"நான் வேண்ணா மொதலாளிகிட்ட சொல்லவா? ஒன்னைய மாதிரி சின்னப் பையன்கள வேலைக்கு வச்சிருக்கறதே சட்டப்படி தப்பு. அதுலயும் இந்த மாதிரி அநியாயமா வேல வாங்குறது பெரிய குற்றம் தெரியுமா?"

"வேணாம் அக்கா. அப்புறம் தனியா கூப்புட்டு பார்ட்டிகிட்ட எல்லாம் ஏண்டா சொன்னேனு ரொம்ப அடிப்பாரு." - இதைச் சொல்லிவிட்டு எப்போதும் சொல்லும் "வர்றேங்க அக்கா" வைக் கூடச் சொல்லாமல் வெளியே போனான்.

அவன் சென்ற பிறகு எனக்குத் திடீரென்று அந்தப் பரணி யென்னும் பெயர் அவனை நக்கல் செய்ய வைத்த பெயர் போலத் தோன்றியது. ஒருவன் இப்படித்தான் தரணியாள்வதா?

பிறகு நான் அன்று திட்டமிட்டிருந்த கிராமத்திற்குப் புறப்பட்டேன். பொதுவாக நான் கிராமங்களுக்குச் சென்று நாட்டுப் பாடல்களைச் சேகரிக்க ஆரம்பித்துவிட்டால் எனக்கு மற்ற உலகமே மறந்து போய்விடும். ஆனால் அன்று பரணியின் நிலை அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தது. பேராசிரியரிடம் சொல்லி இப்படியொரு சிறுவனுக்கு ஒரு வேறு வேலை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் மாலை நான் கிராமத்திலிருந்து திரும்பியபோது நிலைமை ஆச்சரியகரமாக மாறியிருந்தது. லாட்ஜ் நெருங்க நெருங்க அவனையும் அநேகமாக அவன் இருக்கக்கூடிய நிலையையும் கற்பனை செய்து கொண்டு ஒரு வருத்தத்தோடு வந்து படியேறிய போது எங்கிருந்தோ வந்து என் பின்னால் படியேறிய அவன் தன் பழைய குரலில் உற்சாகமாக, அக்கா என்றான். எனக்கு நெஞ்சில் ஒட்டிக் கொண்டிருந்த ஏதோ முரட்டு அழுக்கை ஒருவர் படக்கென்று துடைத்துவிட்ட மாதிரி இருந்தது. நான் நின்று திரும்பிப் பார்த்தபோது அவன் சிரித்தான். அதைக் கண்டு "என்னா பரணி? யென்று என்னையறியாமலேயே நானும் சிரித்தேன் அவன் உடனடியாகப் பதில் சொல்லாமல் படியேறி வந்து என்னோடு சேர்ந்து கொண்டு மெதுவாக இன்னக்கி மத்தியானம் முனியம்மா வந்துட்டா!" என்றான்.

"எப்பிடி மொதலாளி அவ கேட்ட பணத்தைத் தர்றேனு சொல்லிட்டாரா?"

"ஊகும். அவளே, "சரி குடுத்தத குடுங்க"னு வந்துட்டா."

இவன் பிரச்சனை தீர்ந்துவிட்ட நிம்மதியாலோ அல்லது இயல்பாகவோ இப்போது என் நினைவு அந்த முனியம்மா பிரச்சனைக்குத் தாவியது. அவள் மிஞ்சிப் போனால் எவ்வளவு கூடுதலாகக் கேட்டிருப்பாள்? மாதம் இரண்டு ரூபாய் கேட்டிருப்பான். இந்த போர்டிங் அண்ட லாட்ஜிங்கின் ஒரு மாதத்திய வரவு செலவு - லாபத்தில் இந்த இரண்டு ரூபாய் ஒரு கடுகாகுமா? ஆனால் அவளது இந்த அற்ப கோரிக்கையையும் எதிர்ப்பையும் இந்த சின்னத் தொழிலாளியைக் காட்டியே இந்த முதலாளி சமாளித்து விட்டானே!

நாங்கள் ஏழெட்டு படிகள் மேலே போனதும் பரணி எதையோ நினைத்துக் கொண்டவனாக, "நீங்க போங்க அக்கா. நான் காப்பி கொண்டாந்துடுறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி கீழிறங்கி ஓடினான். பிறகு பத்து நிமிஷங்களுக்கெல்லாம் காப்பி கொண்டு வந்தான். பழையபடி பத்திரிக்கையில் படம் பார்த்தான். ஏதோ கேட்டான். சிரித்தான். மொத்தத்தில் அன்று காலையிலிருந்த பரணி மறைந்து நேற்றைய பரணி திரும்ப வந்து விட்டான். இது எனக்கு இரட்டிப்பு மகிழ்வாக இருந்தது - காணாமல் போன ஆடல்லவா திரும்பக் கிடைத்திருக்கிறது!

அதன் பிறகும் நான்கு நாட்கள் நான் அங்கேயே இருந்தேன். இன்னும் இரண்டொரு நாளில் இவன் பழையபடி எனக்கு சம்பந்தமில்லாமல் போயிவிடப் போகிறான் என்ற நினைப்பே அவன் மேல் மேலும் அதிகப் பிரியத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அப்படியே இருந்திருக்க வேண்டும். முடிந்த நேரங்களில் எல்லாம் என் அறைக்கு வந்து "அக்கா அக்கா" வென்று எதையாவது பேசிக் கொண்டிருந்தான்.

"திரும்பியும் இங்க வருவிங்களா அக்கா?"

"வருவனே!"

"எப்ப வருவிங்க?"

"ஒன் கல்யாணத்துக்கு பத்திரிகை அனுப்புனா வருவேன்."

அவன் சிரித்துக் கொண்டான். "மொதல்ல ஒங்க கல்யாணத்துக்கு பத்திரிக்க அனுப்புங்க" என்றான்.

"ஓ, நானே வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்!"

அவன் அரசியல் கூடப் பேசுவான்.

அவன் முதலாளியைப் பற்றிச் சொல்வான். கீழே ஓட்டலில் வேலை செய்கிறவர்களின் வேடிக்கையான நடவடிக்கைகளைப் பற்றி, அக்கம் பக்கத்தார்களைப் பற்றியெல்லாம் பேசுவான். அப்படிப் பேசியபோது ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தியைப் பற்றி சிலாகித்துச் சொன்னான். அவள் என்ன செய்கிறாள் என்று கேட்டபோது கொஞ்சம் விகல்பமில்லாது, "இங்க லாட்ஜுக்கு தான் வருது" என்றான். எனக்கு "விக்" கென்றது. இந்த அறியாமை இன்னும் எத்தனை நாளைக்கு இவனிடம் நீடிக்க முடியும்? இந்த சூழ்நிலையின் ஆதிக்கத்தைக் கடைசி வரை இவன் தாக்குப்பிடித்து விடுவானா? பேராசிரியரிடம் அவசியம் இவனைப் பற்றிப் பேசியாக வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

நான் புறப்படுவதற்கு முதல் நாள் அவனுக்கொரு சட்டை டிராயர் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அன்று மாலை அந்த ஊரிலிருந்த ஒரு ரெடிமேட் கடையில் இருந்ததில் நல்லதாக ஒரு செட் வாங்கி வந்தேன். அது மேஜையில் இருந்த போது கதிரேசன் வந்தான். பரணி எங்கோ வெளியே போயிருந்திருக்கிறான். அதைத் தெரிந்து தான் இவன் வந்திருக்க வேண்டுமென்று பின்னால் தெரிந்தது.

அவன் அந்த உடைகளைப் பார்த்து விட்டு "இது என்னங்க?" என்றான்.

"டவுசர் சட்டை"

"யாருக்கு"

அவனை அறிந்து கொண்டிருந்த நான் இவன் மனமும் ஏன் தாழ்வுணர்ச்சி கொள்ள வேண்டுமென்று இதமாக, "பரணிக்குத்தான், போறான், அவனும் தான் சின்னப் பையன், கிழிஞ்ச துணிய போட்டுக்கிட்டு இருக்கானேனு வாங்கியாந்தேன்" என்றேன்.

ஆனால் அவன் தன் குணத்தை விடாமல் கொஞ்சம் குரோதமும் கொஞ்சம் நக்கலுமாக, "ஓகோ! அந்தத் தொரைக்கா?" என்றான். பிறகு, நீங்க கூட இத வாங்கியிருக்க வேணாம், இனிமே அவருக்கு துணிமணியென்னா, எல்லாமே நெறையா கெடைக்கும்" என்றான்.

"என்னப்பா சொல்றே?"

"இப்ப அவரு வேல செஞ்சுகிட்டு வர்றாரு. அதுல கெடைக்கும்."

"என்ன வேல?"

"பெரிய வேல!"

நான் கொஞ்சம் எரிச்சலுடன், "என்னா பெரிய வேல" என்றேன். அவன் சட்டென்று நான் கொஞ்சம் எதிர்பாராமல் கழுத்தை அறுத்தது போல் அதைச் சொன்னான்.

நான் விக்கித்துப் போனேன். அநேகமாக ஒரு நிமிஷமாவது செயலற்று இருந்திருப்பேன். பிறகு நம்புவதற்குச் சக்தியில்லாமல் பரிதாபமாக, "என்னப்பா சொல்றே?" என்றேன். அவன் அவனுக்கே உரிய முறையில் சில விபரங்களோடு மீண்டும் சொன்னான். எனக்கு உலகமே அந்த ஒரு கணம் எடை இழந்து தோன்றியது. "இந்தப் பச்சைபாலகன் காமுகர்களுக்காக தூது போய்க் கொண்டிருக்கிறானா?"

நீண்ட மௌனத்திற்குப் பிறகு ஏனோ கேட்டேன். "எப்ப இருந்து கதிரேசா?"

"ரெண்டு மூணு நாளா தான்."

பிறகு கதிரேசனை நானே "சரி நீ போ" என்றேன். அவன் சென்ற பிறகு அந்த அடியிலிருந்து பிறழ முடியாமல் வெகு நேரம் அப்படியே நாற்காலியில் கிடந்தேன்.

சுமார் முக்கால் மணி நேரம் சென்றிருக்கும் பரணி வந்தான். வந்தவுடன் முகம், மலர "என்னக்கா, எனக்கு டவுசர் சட்ட வாங்கியிருக்கிங்களாமில்ல?" என்றான். கீழே வரும் போதே அதைக் கதிரேசன் சொல்லியிருக்க வேண்டும். நான் நிதானமாக "ம்" என்றேன். உள்ளே மட்டும் நிச்சயமான உண்மையை அறிந்து விடவேண்டுமென்ற ஒரு வெறி.

"பரணி நான் நாளைக்கி ஊருக்குப் போறதுனால ரெண்டு மூணு பிரண்ட்ஸோட இன்னிக்கு சினிமாவுக்குப் போறேன்." என்றேன்.

"அப்படிங்களா?" என்ற அவன், தொடர்ந்து, "அப்ப ராத்திரிக்கி டிபன் எடுத்து வச்சிருக்கவா?" என்று கேட்டான். இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு "அதெப்படி எடுத்து வச்சிருப்பே? நீதான் கடை மூடுனதும் வீட்டுக்குப் போயிடுவியே?" என்றேன்.

இதற்கு அவன். "இல்லே இருப்பேன்" என்றான்.

"முன்னெல்லாம் வீட்டுக்குப் போயிடுவியே?"

"இப்ப இங்கதான் படுக்கறது. வீட்ல படுத்தா காலையில சீக்கிரம் வர்றது கஷ்டமா இருக்கு லேட்டா வந்தா மானேஜர் வையிறாரு."

"இன்னிக்கு எங்ககூட நீ சினிமாவுக்கு வாயேன்" அவன் என் முகத்தைப் பார்த்துவிட்டுச் சிரித்தாலும் கொஞ்சம் யோசித்து விட்டு "இல்லிங்க அக்க, வேல இருக்கு" என்றான்.

"என்ன வேல?"

அவன் பதில் பேசவில்லை.

நான் விசாரணையை இன்னொரு வகையில் தொடர்ந்தேன். "பரணி இந்த ஊர்ல காலேஜ்கிட்ட ஒரு ஓட்டல் புதுசா வந்திருக்கு தெரியுமா?

"தெரியுமே!"

"அவங்களுக்கும் ஒரு பையன் தேவையிருக்காம். சொன்னாங்க. வாரம் பத்து ரூபா தருவாங்களாம். நீ அங்க போறியா? இங்கதான் கண்டம் இருக்குனு சொன்னியே?"

"வாரம் பத்து ரூவாயா?" என்றவன் கொஞ்சம் யோசித்தான். இங்கே வாரம் ஐந்து ரூபாயோடு இப்போது கூடுதலாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிற தினம் ஒன்றிரண்டு ரூபாய்களையும் கூட்டிக் கணக்குப் போட்டு அந்தப் பத்து ரூபாயோடு ஒப்பிட்டுப் பார்த்தான் போலும். பிறகு "இல்லிங்க அக்கா, நான் இங்கேயே இருக்கேன்" என்றான்.

"ஏம்ப்பா, மாதம் இருபது ரூபா அங்கு கூடக் கெடைக்குதே? அந்த மொதலாளி வேறு நல்லவருப்பா. கக்கூஸ் எல்லாம் கழுவச் சொல்ல மாட்டாரு"

அவன் பழையபடி தயங்கிவிட்டு "இல்லிங்க அக்கா அங்கெல்லாம் வேல செய்ய அம்மா வுடாது" என்றான்.

எனக்குக் கதிரேசன் சொன்னது நிரூபணமாகியது. பொக்கென்று யாரோ எதையோ என்னிடமிருந்து பறித்துக் கொண்டது போல் உணர்வாகி சோர வைத்தது.

ஓர் ஆத்ம கொலை நடந்து விட்டது. அதைக் கொன்று விட்டார்கள். கக்கூஸ் கழுவுவதற்குக் கூசிய ஒரு பிஞ்சு மனத்தை ஒன்றிரண்டு காசுகளைக் காட்டி அவர்கள் மனமலக் கூடைகளையே கூசாமல் தலையில் சுமந்து போகப் பழக்கி விட்டு விட்டார்கள்.

அதன் பிறகு அவன் அங்கு நின்று பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தான் இருந்தான். ஆனால் அவனிடத்தில் என்னுடைய பழைய இளவரசனைப் பார்க்க முடியவில்லை. மாறாக வேறோர் உருவம் படிப்படியாக வளர்ந்து பல்லைக் காட்டியது. ஒரு சமூகம் "தான் ஒரு சமூகம்" என்று சொல்லிக் கொள்வதற்குரிய சகல சத்தியங்களையும் இழந்து விட்டதன் குறியீடு போல அழகிழந்து, அருள் இழந்து, குதர்க்கப்பட்டு, குரோதப்பட்டு, சுண்டி, சுரித்து இன்னும் சில வருஷங்களில் பத்துப் பெண்களுக்கு ஏஜண்டாக கமிஷன் காசுகளை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும் உருவம் தான் அது. நான் கண்களை மூடிக் கொண்டேன்.

கடைசியாக அவன் வெளியில் மாடிப் படியிலிருந்தவாறே, பரணீ என்று கத்திய குரலைக் கேட்டு, "இந்தா வந்துடறேன் அக்கா" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

நான் அவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்வதை வெறித்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே, என் மலையருவி நின்று போயிருந்தது.

என் குழந்தையின் முகத்தில் யாரோ வார் வாராய் கத்தியால் கிழித்து விட்டிருந்தார்கள்.

அழகிய படத்தின் மேல் எவனோ சாணியை எடுத்து அடித்திருந்தான்.

எனது புத்தகம் செல்லரித்துப் போய் சல்லடையாய் ஏடுகள் கையோடு உதிர்ந்தன.

மனம் கசந்து வந்தது!

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link