சிறுகதைகள்


வானவில்லும் சில தூறல்களும்

கூடல்.காம்
எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த கிளியோபாட்ராவின் பெயர் மானஸா. அவளில் துறுதுறு சேட்டை களில் கல்லூரி மொத்தமும் அவள் பக்கம் பார்வையை ஓட்ட.... பொறாமை முட்டிக் கொண்டது, கல்லூரியின் முரட்டுப் பெண் வர்ஷினிக்கு.

"மானஸா வயலின் வாசிப்பாள், எம்ப்ராய்டரி போடுவாள்" என்றெல்லாம் அவள் திறமை பற்றி ஏகத்துக்கும் செய்தி பரவ... கடுப்பான வர்ஷினி, அவளை ஒரு நாள் ஓரங்கட்டி, "உனக்கு மீன் பிடிக்கத் தெரியுமா? என்று இடக்காகக் கேட்டிருக்கிறாள். அவள் "தெரியாது" என்று சொல்ல, "இது கூடத் தெரியாதா? அப்புறம் எப்படி எல்லாம் தெரிஞ்சவ மாதிரி தெனாவட்டா திரியறே! சரி இப்ப நான் உனக்கு மீன் பிடிக்கக் கத்துத் தர்றேன்!" என்று சொல்லி, அவளை மைதானத்தில் மண்டியிட்டு உட்கார வைத்து கையில் குச்சியைக் கொடுத்து, மண்ணில் மீன் பிடிக்க விட்டிருக்கிறாள். அதைக் குற்றப் புலவர் பிரின்ஸியும் பார்த்துவிட்டிருக்கிறார்!

பிரின்ஸிபால் முன்பாக, நல்ல பிள்ளையாக "மேடம், நீங்க "வாழ்க்கைக்கு யோகா ரொம்ப அவசியம்"னு சொன்னீங்க. அதான், வெட்டவெளி தியானம் எப்படிச் செய்யறதுனு மானஸாகிட்ட கத்துக்கிறோம்!" என்று வர்ஷினி சொல்லியிருக்கிறாள். வியர்த்துக் கொட்ட வெயிலில் மீன்பிடித்த மானஸாவும், வர்ஷினியின் முறைத்த கண்களுக்குப் பயந்து, "ஆமாம்!" என்று சொல்லியிருக்கிறாள். உண்மை தெரியாத கல்லூரி நாட்டாமை தீர்ப்பு சொல்லிவிட்டார். யோகா ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள். கிளாஸ் டைம்ல வெளியே கூட்டம் சேர்த்த மானஸாவுக்கு ரூ.100 அபராதம்!"

பேயறைந்த மானஸா வந்து புலம்ப... மரோமிதான் தேற்றினாள்.

இப்படிப் புத்தம்புது மாணவிகளை சீனியர்கள் கலாய்க்க, அவர்கள் காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கடுப்பு சம்பந்தமான நோய் வந்ததாகப் பொய் சொல்லி, பயந்து வீட்டுக்கு ஓடி, "அந்த காலேஜில் படிப்பதைவிட, அம்மாவோடு இருந்து தோசை சுடுவதே உத்தமம்!" என்று உளறிக் கொட்டுவதால், புது வரவுகளை உற்சாகப்படுத்தி, அவர்கள் பயத்தைப் போக்குவதற்காக "வெல்கம் பார்ட்டி" கொடுப்பது எங்கள் கல்லூரியின் வழக்கம்.

வெல்கம் பார்ட்டியும் வந்தது. முதலாண்டு மாணவிகளுக்கான போட்டி ஆரம்பித்தது. பலரும் பரிசுகளைக் குவிக்க, சகலகலா மானஸாவோ எல்லாப் போட்டிகளிலும் சொதப்பினாள். காரணம் - வர்ஷினி செய்த சூழ்ச்சி.

ஸ்டிக்கர் பொட்டைப் பிரித்து முகத்தில் ஒட்டும் போட்டியில் மாணவர்கள் முகமெல்லாம் பொட்டு ஒட்டி, ஆயிரம் கண்ணுடைய ஆத்தாவாக நிற்க... மானஸா ஒரே ஒரு பொட்டை எடுத்து, பேன் பார்க்கும் குரங்கைப் போல நோண்டிக் கொண்டிருந்தாள். பிரின்ஸி உட்பட மொத்த பேரம் கொல்லென சிரித்தார்கள். மானஸாவுக்கு பிரிக்கவே முடியாதபடி ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களைத் தந்தவள், வர்ஷினிதான்!

ஊசியில் நூல் கோர்க்கும் போட்டி! கண்ணாடி போன்ற பிசின் கொண்டு, ஊசியின் காது துவாரத்தை அடைத்து மானஸாவுக்குக் கொடுத்திருக்கிறாள் வர்ஷனி. பார்த்தால், துவாரம் அடைத்ததே தெரியாது! இது தெரியாத மானஸா, அதில் நூலைக் கோர்ப்பதற்காக அரைக்கண் கிழவியைப் போல திணறினாள்.

-மானஸா இப்படி எல்லாப் போட்டிகளிலும் தோற்று, அவமானத்தோடு நின்றாள். இதற்குக் காரணமான வர்ஷினியைக் கோபத்தோடு பார்த்தாள் மரோமி.

அடுத்து, ஆட்டம் பாட்டம் ஆரம்பமானது. முதலில் வர்ஷினி அட்டகாசமான டான்சராக மேடை ஏறினாள். அழகாக மியூஸிக் ஆரம்பித்தது. அவள் இரண்டு ஸ்டெப் வைப்பதற்குள்ளாக, ஒரு பழைய சினிமா காமெடி வசனம் கரகரத்து மிரட்டியது. ஆட ஆரம்பித்த வர்ஷினி புரியாமல் திகைத்து, ஒற்றைக் காலில் நின்றாள். எல்லோரும் "ஓ" வென்று கத்த... கேசட்டைத் திருப்பிப் போட்டாலும், அதே காமெடி மிரட்டல்!

வெகுநேரம் ஒற்றைக் காலில் நின்ற வர்ஷினி "வசனத்துக்கு எப்படி டான்ஸ் ஆடுவது? என்று தெரியாமல், அவமானத்தோடு தரை இறங்கினாள்.

"அழகாக கேசட்டை மாற்றியவள் மரோமி" என்பது, அவள் சவுண்ட் செட் பையனிடம் கைதூக்கி காண்பித்ததும் புரிந்தது. அதை வர்ஷினியும் பார்த்துவிட அவர்கள் வாக்குவாதம் செய்தபடி மேடைக்குப் பின்னால் போவது தெரிந்தது!

"நிகழ்ச்சியின் நிறைவாக மரோமியின் பரத நாட்டியம் என்று மைக்செட் கதற. மரோமியைக் காணோம்! கூட்டத்தில் பரபரப்பு. காலில் பெரிய துப்பட்டாவைக் கட்டிக்கொண்டு நொண்டியபடி மரோமி மேடை ஏறினாள் மைக்கைப் பிடித்து உருக்கமாக பேசினாள்: எனக்குக் கால்ல அடிப்பட்டிருக்கு எனக்குப் பதிலா மானஸா ஆடுவாள்!

"அடிப்பாவி .... வர்ஷினி! மேடைக்குப் பின்னாடி வெச்சு மரோமி காலை உடைச்சிட்டியா? நான் திகைத்து நிற்க, மானஸா கறுப்பு விக்கிரமாக மேடையேறினாள். அழகான கிளாசிக்கல் பாடல் மென்மையாக ஆரம்பித்தது. வெஸ்டர்ன் பீட்ஸில் கலந்து, மீண்டும் கிளாசிக்கலில் ஜாலம் காட்டியது. பலநிற வண்ண விளக்கொளியில் மானஸா வானவில் போல ஆடியுது, மாயக் காட்சியைப் போலிருந்தது, நாட்டியத்தால் அத்தனை பேரையும் கட்டிப் போட முடியுமா? போட்டாள் மானஸா!

நாட்டியம் முடிந்தது, மானஸா வணங்கி நிற்க பிரின்ஸிபால் முதல் ஆளாக கைதட்ட... மொத்தக் கூட்டமும் இருக்கையில் எழுந்து, ஆரவாரமாகக் கைதட்டியது. சத்தம் அடங்க வெகுநேரமானது.

பாராட்டுவதற்காக பிரின்ஸி மேடையேற, மரோமி கால் துப்பட்டாவை உதறிவிட்டு, ஓட்டமாகப் போய் மைக்கை எடுத்தாள். காலில் அடிப்பட்டது பொய்யா மரோ?!

"மை டியர் ஸ்டூடண்ட்ஸ்... ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு! கூட்டம் சட்டென்று அமைதி ஆனது. காரணம் - மரோமி, பிரின்ஸி குரலில் பேசிக்கொண்டிருந்தாள். முதலில் திகைத்து, பின் புரிந்ததும் "ஓ"வென்று சத்தம் கிளம்பியது. மேடைக்கு வந்த பிரின்ஸி திகைத்து நின்றார்.

மரோமி தொடர்ந்தாள். ரொம்ப முக்கியமான விஷயம் நம்ம மானஸாவோட நாட்டியம். இந்தக் கல்லூரியோட முதல்வர்ங்கிற முறையில் மானஸாவைப் பாராட்டி, நான் 500 ரூபாய் அன்பளிப்பா இந்த மேடையில் தரேன்!"

மரோமி, பிரின்ஸிபால் குரலில் சொன்னதும்.... எல்லோரும் "வெல்...க்...கம்!" என்று குரல் எழுப்பினார்கள். பிரின்ஸிபால் இது ஜோக்கா, சீரியஸா?" என்று புரியாமல் விழிப்பதும் தெரிந்தது. மரோமி, பிரின்ஸியிடம் மைக்கைக் கொடுத்துவிட்டு, பவ்யமாக ஒதுங்கி நின்றாள்.

மரோமியை ஓரக்கண்ணால் முறைத்தபடி, "மை டியர்..." என்று பிரின்ஸிபால் ஆரம்பிக்க... "பரிசு! பரிசு! என்று நாலாப்பக்கமும் குரல் அலை மோதியது. வேறு வழியில்லாமல் பர்ஸைப் பிரித்து, பரிசைத் தரவேண்டியதாயிற்று பிரின்ஸிக்கு.

பிரின்ஸி போட்ட 100 ரூபாய் அபராதத்துக்கும் வர்ஷினி என்ற முரட்டுப் பெண்ணின் அடாவடிக்கும் ஒரே நாட்டியத்தில் பதிலடி தந்து, இன்னொரு பிளாக் ஏஞ்சலை இந்தக் கல்லூரிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறாள் மரோமி.

அடுத்து, மரோமி சவுண்ட் செட் பையனிடம் கை உயர்த்த, அழகான மியூஸிக் கிளம்பியது. பிரின்ஸியின் கையைப் பிடித்துக் கெஞ்ச, மனம் நெகிழ்ந்து போன பிரின்ஸி, ஒரு தாய் வானவில்லாக ஆட.. அரங்கமே ஆடியது. கல்யாணம் செய்து கொள்ளாமல், "கல்லூரியே குடும்பம்" என்றிருக்கும் பிரின்ஸிக்கு, மரோமி - மானஸா போன்ற சுட்டிப் பெண்கள்தான் எப்போதும் குழந்தைகளாக இருக்கிறார்கள் அவர்களின் செல்லத் தவறுகள் அவருக்கு எப்போதும் மறந்து போய்விடுகிறது.

நன்றி: அவள்விகடன்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link