சிறுகதைகள்


மீண்டும் கேள்விகள் உருவாகின்றன

கூடல்.காம்
வழக்கமாக காலையில் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்புவது லக்ஸன்தான். காலை நக்கும். நான் மசியாவிடில் குதிக்காலில் சிறு கடி. இன்று "லக்ஸனைக் காணவில்லை" என்ற எனது மனைவியின் பரபரப்புக் குரல் கேட்டு திடுக்குற்று கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தேன்.

லக்ஸனுக்கு பகல் வேளைகளிலே எங்கள் வீட்டு ஹாலுக்குள் உலாவ சுதந்திரம் இருந்தது. சமையல் அறைக்கு வெளியே அப்பனுக்கு (பூனை) வைத்து மிஞ்சிய ஏதாவது தீனியைத் தின்பதைக் கூட நாம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவரின் சாப்பாடும், இரவில் படுக்கையும் வீட்டிற்கு வெளியேதான். நான்கு மாதக் குட்டியானாலும், அவர் தான், எமது வீட்டிற்கும் வளவில் இருக்கும் பொருட்களுக்கும், முக்கியமாக இரண்டு சைக்கிள்களுக்கு காவல். இன்னும் குரைப்பதில் மழலை போகவில்லை. எங்களிடம் வரும்போது லக்ஸன் இரண்டு வாரக் குட்டி. வந்ததும், தாயை இழந்த குழந்தைக்குக் கொடுப்பது போல் பால்மா கரைத்துக் கொடுத்தோம்.

லக்ஸன் அமாவாசைக் கறுப்பு. மூக்கிலும் வால் நுனியிலும் மட்டும் மல்லிகை வெள்ளைப் பொட்டுக்கள். ஊர் நாய், கோப்பாய் பிறப்பிடம். அங்கிருந்து நல்லூருக்கு சைக்கிளில் கொண்டு வந்தேன். பிள்ளை போலக் கையில் காவிக்கொண்டு. ஊர் நாய்களைப் பறைநாய் என்பார்கள். அந்த வர்க்கம். ஆனால், என்னைப் பார்க்க வந்த நண்பர், ஒரு மிருக மருத்துவர். லக்ஸன் ஊர்நாய், டஷண்ட் கலப்பு என்றார். அதன் நடையில் அது தெரிந்தது. முன்கால்கள் குள்ளமாகி ஒரு விதமான அழகு தொத்தி. எனது மனைவி லக்ஸன் ஓடி வரும்போது செல்லமாக "சொத்தியன்" என்றும் அழைப்பாள்.

எங்கள் வளவில் மூன்று பக்கமும் மதில்கள். ஒரு பக்கம் மட்டும் வேலி. அந்தப் பக்கம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் வெற்றுக் காணி. லக்ஸன் காலையில் வேலியின் ஊடாக அங்கே போய் வரும். எனது மகள் அது "ரொயிலற்"றுக்குப் போய்விட்டது என்று கூறுவாள். அந்த தேவையைத் தவிர லக்ஸன் வளவை விட்டுப் போவதில்லை. நாங்கள் சங்கிலியால் கட்டுவதில்லை. பக்கத்து வீட்டு மாமி சொல்லுவா "நாயை நாய் போல் கட்டி வளர்க்க வேண்டும்; அப்போது தான் காவலுக்கு ஏற்ற வீறு கொள்ளும்." கொஞ்சம் பெரிசாக வளர கட்டலாமா என்று யோசித்தோம்.

இரவில் லக்ஸன் வெளியிலே படுக்கும். அம்மா, எனது மனைவி, கதவைத் திறந்ததும் ஒரே கட்டமாக அறைக்குள் வந்து என்னை எழுப்பும், கால்களை நக்கி, குசினியில் அதற்குப் பால் தயாராகும் மட்டும், நான் அதன் முதுகை வருட வேண்டும். அல்லாவிடில் நக்கல் கடியாகும்.

எங்கே லக்ஸன்? எங்கள் வீட்டிலுள்ள மூன்று பேரும் நாலா பக்கமும் கூப்பிட்டுப் பார்த்தோம். லக்ஸன் வரவில்லை. பக்கத்து மாமி தான் வந்தா; வேலிக்கு மேலால் "உஞ்சு, உஞ்சு" என்று அழைத்தா. "மாமி உஞ்சு என்றால் லக்ஸனுக்கு புரியாது" என்றாள் எனது மகள்.

நான் சைக்கிள் எடுத்துக் கொண்டு லக்ஸனைத் தேடிச் சென்றேன். தெரு நாய்கள் கவனிப்பாரற்று அங்கும் இங்கும் கிடந்தன; சில உறுமின. சில என்னைத் துரத்தி விட்டு திரும்பிச் சென்றன. ஆமியின் சென்ரி பொயின்ற்களில், அவர்களின் தீனியில் வளர்ந்த ஊர் நாய்கள் கொழுத்து திமிருடன் என்னைப் பார்த்தன. வீதியின் திருப்பத்தில் ஓரமாக, கண்கூடச் சரியாகத் திறக்காத மூன்று நாய்க்குட்டிகள் பிய்ந்த சாணி நிற கடகம் ஒன்றில் அனாதைகளாக விடப்பட்டிருந்தன.

லக்ஸனைக் காணவில்லை. ஒழுங்கைகள், கோவில்களில் வெளிவீதிகள், வெறும் வளவுகள், இடிந்த வீடுகள் எல்லாம் பார்த்துவிட்டேன். பல இடங்களில் "லக்ஸன் லக்ஸன்" என்று கூப்பிட்டும் ஆச்சு.

வீட்டில் எனது காலைக் காப்பி ஆறிப்போய் இருந்தது. எனது மனைவியும் மகளும் அக்கம் பக்க வீடுகளில் விசாரித்து விட்டார்கள். எனது மகளுக்கு அயலில் இரு வீட்டினர் மேல் சந்தேகம். அவர்கள் கோழிகள் எங்கள் வளவுக்கு வரும். லக்ஸன் பாய்ந்து கலைக்க, அவை "கொக்கரக்கோ கோதாரி" என்று மரண ஓலமிட்டபடி வேலிக்கு மேலால் பறந்து தனது வளவுகளுக்குப் போகும். மாமி சொன்ன, நேற்று ஒரு கீரி தனது வளவின் மூலையில் அவர்களின் கோழி ஒன்றைப் பிடித்துக்கொண்டு போனதாக. அந்தப் பொல்லாப்பு லக்ஸன் மேல் விழுந்திருக்கலாம். அதை வைத்து ரொயிலற்றுக்குப் போன லக்ஸனை அவர்கள் பிடித்திருக்கலாம். வேறு யாரும் வீட்டில் வளர்ப்பதற்காகவும் பிடித்துப் போயிருக்கலாம். லக்ஸன் மிகவும் அழகான ஆண்குட்டி.

ஒருவர் வந்து சொன்னார்:

"ஐயர் வளவில் ஒரு நாய்க்குட்டியை கட்டி வைத்திருக்கிறார்கள். குலைத்து கத்துது. நான் பார்த்தேன். மெல்லப்போய்ப் பாருங்கோ".

"முழுமையான கறுப்புக்குட்டி. வால் நுனியிலும் மூக்கிலும் மட்டும் வெள்ளைப் பொட்டு" என்று லக்ஸனை விவரித்தோம்.

"அதுதான்" என்றார்.

மகளும் நானும் சைக்கிளில் ஓடினோம். நோயிலும் பார்க்க ஆவலும் எதிர்பார்ப்பும் எவ்வளவிற்கு இதயத்தைத் தீண்டுகிறது என்பதை அப்போது உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு வந்தவர் கூறியது போல். ஐயரின் மல்லிகைப் பந்தரை அடுத்து ஒரு நாய் கட்டப்பட்டு, குரைத்துக் கொண்டிருந்தது. அதன் உடல் முழுதும் வெள்ளை. வாலிலும், மூக்கிலும் கறுப்புப் பொட்டுக்கள்!

நாங்கள் வீட்டிற்குத் திரும்பியதும் மனைவி தெரிவித்தா; லக்ஸனைப் போல் ஒரு நாய்க்குட்டி செட்டித்தெருவில் யாரோ கறுவல் பொன்னையர் வீட்டில் நிற்கிறதாம் போய்ப் பாருங்கோ".

"யார் சொன்னது?"

"பேர் தெரியாது. தெருவால் போன ஒரு பொடியன் சொன்னான். அவன் பொய் சொல்பவன் போல் தெரியவில்லை". எனக்கு அலுவலகம் போக நேரம் ஆகிவிட்டது. மகளும் பாடசாலை போகவேண்டும். லக்ஸனைத் தேடி ஏற்கனவே களைத்துப் போனோம். இந்த நிலையில் கறுவல் பொன்னையரை எப்படித் தேடுவது? அப்படி ஒருவர் தற்போது இந்த ஊரில் இருக்கிறாரா என்பது மற்றொரு கேள்வி.

நமது நாட்டில் பார்க்காமல் பார்த்தது போலவும், கேட்காமல் கேட்டது போலவும், பார்த்ததையும் கேட்டதையும் நேர்மாறாக சத்தியத்துடன் வர்ணிப்பவர்களும் இருக்கும் நிலையில், யாரைக் கேட்டு நாம் அலைவது என்று நான் சிந்தித்தபோது எனது கிட்டிய உறவினர் பெரியதம்பி வந்தார்.

பெரியதம்பி விசாலமான மனம் படைத்த ஒருவர். உதவி செய்யும் ஆற்றல் உள்ளனர். அவர் எமது இழப்பைக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கிறார். அவர் எமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் லக்ஸன் அவர் காலையும் நக்கும். அப்போது அதன் வால் அதன் சின்ன இதயத்தின் நன்றியைக் காற்றைச் சுழற்றிக் காட்டும். நான் கோப்பாயிலிருந்து லக்ஸனை எடுத்து வந்தபொழுது பெரியதம்பியும் என்னுடன் வந்தார். அவர் நண்பரின் நாய் போட்ட குட்டிதான் லக்ஸன்.

பெரியதம்பி சொன்னார்: "நீங்கள் துக்கப்படாதேயுங்கோ. நாய் மோப்பம் பிடிச்சு வந்து சேரும். யாரோ கட்டி வைத்திருக்கிறார்கள். கட்டவிழ்த்ததும் ஓடித் தானாக வரும்."

அவர் எனக்கு ஏற்கனவே தெரிவித்த சங்கதியை மனைவிக்குக் கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து நாம் கலைக்கப்பட்ட போது அவர் குடும்பம் அகதியாகப் போனது கரவெட்டிக்கு, சுமார் 20 கட்டைதூரம். ஆறு மாதங்களின் பின்பு வீடு திரும்பியதும் நடையாகவே, சாவகச்சேரி வழியாக, அவருடைய வயோதிப நாய் அவருடனேயே குடும்பத்துடன் போனது, திரும்பியும் வந்தது. வரும் வழியில் சுட்டுச்சுவர் நடந்ததால், மக்கள் சிதறி ஓடினர்.

அப்போது அவரின் நாய் வந்த வழியே கரவெட்டி நோக்கி ஓடுவதைக் கண்டார்கள். பெரியதம்பி குடும்பத்தினர் நல்லூர் வந்து விட்டார்கள். மூன்று நாட்களின் பின் அவர்களுடைய நாய் கரவெட்டியில் இருந்து வீடு வந்து சேர்ந்தது!

இந்தக் கதையும், அவர் கூறிய ஆறுதல் மொழிகளையும் கேட்ட எமக்கு மனத்தில் தெம்பும் அமைதியும் ஏற்பட்டது. ஆறுதல் மொழிகளுக்குத்தான் எத்தனை வல்லமை! அவர் சொன்னார்: "பின்னேரம் வருகிறேன். எதற்கும் சில இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம்."

அந்தியில் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பூசைகள் முடிந்தபின் பெரியதம்பி வந்தார். வெயில் மறையும் நேரம். இருவரும் நடையில் புறப்பட்டோம். சில வீடுகளின் முன்னால் நின்று, அங்கே யார் காணப்பட்டாலும் பெரியதம்பி "எங்களுடைய ஒரு கறுப்பு நாய்க்குட்டி இதாலை வந்தது. பார்த்தீர்களா?" என்று கேட்டார். சில வீடுகளில் "இங்கே வந்ததாக கேள்விப்பட்டோம்." என்று கூடச் சொன்னார்கள். அது அவர் டெக்னிக். ஆனால் பலன் தரவில்லை. தெருவிலும் பலரைக் கேட்டுவிட்டோம். அவர்கள் எம்மை "மேல்நாட்டு நாயோ?" என்று கேட்டார்கள். அல்ஷேசன் என்ற பெயரை உச்சரித்தார்கள். நாங்கள், "இல்லை, எங்கள் ஊர் நாய் தான்" என்றதும் "உங்களுக்கு வேறு வேலை இல்லை" என்று முகத்தால் தெரிவித்தார்கள். "பைத்தியக்காரர்" என்று ஒருவர் நினைத்தாக நான் எண்ணினேன். ம்! இழப்பு. எதுவானாலும் தனக்கு வரும்போதுதான் உணர முடிகிறது!

இருள். ஒழுங்கை ஓரமாக்க இருந்த ஒரு வைரவ சூலத்திற்கு முன்னால் இருந்த ஒரு கல்லில் கற்பூரம் கொளுத்தினாள் ஒரு சிறு பெண். சில வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் ஒரு குண்டு விழுந்தது. ஒரு வீடு முற்றாக சேதம். அக்கம் பக்கத்தில் வீடுகள் அரைவாசியும் கால்வாசியும் அழிவு. ஆனால் ஒரு கைக்குழந்தை உட்பட யாரும் இறக்கவில்லை. இருவருக்கு மட்டும் தையல் போட வேண்டிய காயம். ஒரு கண்காணாத தெய்வம் அங்கிருந்து இந்த அற்புதம் செய்ததாக அவர்கள் நம்பினார்கள். கடவுளைக் கண்கள் காண்பதற்காக ஒரு சூலத்தை நாட்டித் தினமும் பூ வைத்து சூடம் எரித்தனர். நான் இன்று வரை அந்த சூலத்தைப் பொருட்படுத்தவில்லை. இப்போது கும்பிட்டேன். லக்ஸன் கிடைக்கும் என்று மனம் சொல்லத் தொடங்கியது. என்றாலும் பெரியதம்பிக்கு கூறினேன்.

"தம்பி. நாய் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் செல்லமாக வளர்த்த குட்டியை, கோழி பிடித்தது என்று யாரும் அதைச் சாகடிக்காமல் இருந்தால் சரி" பெரியதம்பி சொன்னார். "அந்த வடிவான நாயைக் கொல்ல எவருக்கும் மனம் வராது. அப்படி யாராலும் அதைக் கொன்றால் அவன் மனிதன் அல்ல."

மனிதன்!

எமக்கு எதிராக ஒருவர் வந்து கொண்டிருந்தார். "பரஞ்சோதி வருகிறார்" என்றார் பெரியதம்பி. என் மனம் எங்கேயோ மறைய விரும்பியது. பரஞ்சோதியின் மகனை ஒரு வாரமாகக் காணவில்லை. மகன் மணிவண்ணனைப் போன திங்கட்கிழமை சீருடை அணிந்த சிலர், நடுத்தெருவில் பிடித்து வேனில் ஏற்றிப் போய்விட்டார்கள். அதன் பின் அவனை யாரும் கண்களால் பார்க்கவில்லை. எனக்கு விஷயம் அன்றே தெரியும். பலர் பலவிதமாகப் பேசினார்கள்.

"பரஞ்சோதி அண்ணே, ஏதும் தகவல் கிடைத்ததோ?" என்று கேட்டார் பெரியதம்பி.

"இல்லைத் தம்பி. இதுவரை ஒன்றும் இல்லை". என்றார் பரஞ்சோதி.

"நானும் விசாரிக்காத இடம் இல்லை" என்றார் பெரியதம்பி.

நான் அவர்கள் பக்கத்தில் உருப்பெறாத ஒரு கற்சிலை போல் நின்றேன். ஒன்றும் பேசாமல் இப்போது நிற்பது நாகரீகம் என்று மட்டும் உணர்ந்தேன். ஒரு வாரமாக அவரிடம் "என்னண்ணை, என்ன நடந்தது. எப்படி" என்று ஒரு கேள்வியாவது நான் கேட்கவில்லை. அத்தனைக்கும் தெரிந்த ஒருவர். கூப்பிடு தொலைவில் இருவர் வீடுகளும்!

அந்த நேரம், பரஞ்சோதியின் தங்கை மகன் ஸ்கூட்டரில் பறந்து வந்தான். அவன் முகத்தில் வியர்வையின் எண்ணெய், ஆனால் ஒரு எதிர்பார்ப்பு மிதந்தது. "மாமா, மச்சான் இருக்கும் இடம் தெரிய வந்தது. அங்கே போனேன். மணிவண்ணனுடன் பேச முடியவில்லை. தொடர்ந்து விசாரணை செய்கிறார்களாம். விசாரணை முடிந்ததும் அவனை வீட்டிற்கு அனுப்புவார்களாம்."

பிறை நிலவின் வெளிச்சச் சூழல். இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு பரஞ்சோதி எம்மிடமிருந்து விடை பெற்றார். "சார், போய் வாறன்" என்று எனக்கும் கூறினார். நான் இதுவரைப் போய்ப் பார்த்து விபரம் கேட்டு, ஆறுதல் கூறாததை அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. என்போல் உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடம் இத்தகைய ஈடுபாட்டை ஒருவரும் எதிர்பார்ப்பது இல்லைப் போலும்.

பெரிய தம்பியுடன் பேசிக் கொண்டு வீடு திரும்பினேன். மணிவண்ணனை சீருடையாளர் பிடித்துச் சென்ற அன்றே அவர் பரஞ்சோதியின் வீட்டிற்குப் போயிருக்கிறார்.

பரஞ்சோதி வாடகைக்கு கார் ஓட்டியவர். ஒரு மகன், ஒரு மகள். மணிவண்ணன் தபால் தந்தோரில் பீயோன். மகள் புளியடி பாடசாலையில் ஓ.எல் படித்துக் கொண்டிருக்கிறாள். பெரியதம்பி சொன்னார்:

"அன்று மணிவண்ணன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, சைக்கிளையும் அவனையும் வேனில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள்."

அடுத்த நாள், பரஞ்சோதியோடு சேர்த்து பெரியதம்பி சுண்ணாகம், மல்லாகம், காங்கேசன்துறை, புன்னாலைக் கட்டுவன் என்று அலைந்திருக்கிறார். ஒரு இடத்தில் மட்டும் அவனைப் பிடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் வைத்து விசாரிப்பதற்கு நம்பிக்கையான ஆதாரங்கள் இருப்பதாகவும், எங்கே இருக்கிறான் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் கூறிவிட்டார்கள். தகப்பன் பரஞ்சோதியின் மனம் என்ன நிலையில் இருந்திருக்கும் என்று எனது மனமும்...

பெரிய தம்பி சொன்னார்: "மணிவண்ணன் பற்றி அவன் அரச விரோதி என்று நிரூபிப்பதற்கு ஒரு தகவலும் இருக்க முடியாது. இது எங்களுடைய சில காவாலிப் பயல்களின் வேலை. வன்மம் தீர்த்திருக்கிறார்கள்."

அவரைப் பார்த்தேன்: பார்வைக்கு விடையாக விளக்கினார்:

"பரஞ்சோதியின் மகள் வடிவான பிள்ளை".

"தெரியும்" என்றேன் நான்.

"அவள் டியூசன் முடிந்து வரும்போது சில தறுதலைகள் அவளை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அவள் வந்து தகப்பனுக்கு சொல்லியிருக்கிறாள். தமையன் இதைக் கேட்டு இரண்டொரு பேருக்கு விளாசியிருக்கிறான்."

"கொடுக்க வேண்டிய செயல்தானே" என்றேன்.

"அதனால் வந்த வினை தான் இது" என்றார் பெரியதம்பி. "ஒருத்தன் நேரடியாக போலீஸ்க்கு அறிவிப்பதாக எச்சரிக்கை விட்டிருக்கிறான். ஆனால் மிகவும் துரோகமான முறையில் சோடித்து பெட்டிசன் போட்டிருக்கிறான்கள்."

"யாராவது பெட்டிசன் போட்டால், விசாரிக்காமல் அடைத்து வைத்திருக்கிறதா, ஒரு வார காலம்?" என்று எனது அபிப்பிராயத்தை கேள்வியாக்கினேன்.

பெரிய தம்பி சிரித்தார். "அதுதான் விசாரிக்கிறார்களாம்" என்று மொட்டையாக பதிலளித்தார். எனது கேள்வியை நினைத்து நானும் சிரிக்கிறேன். ஒரு வாரமா? விசாரணை என்று கூறி மாதக்கணக்காக, வருடக்கணக்காக யுவன், யுவதிகள் காணாமல் போவது நான் படிக்காததா, என்ன?

அன்று இரவு எனது மனைவிக்குச் சொன்னேன்.

"லக்ஸனை யாரோ வளர்ப்பதற்குப் பிடித்துப் போயிருக்கிறார்கள். அதற்கு நல்ல சாப்பாடு வைப்பார்கள். நாங்கள் சைவச் சாப்பாட்டுடன் தானே வளர்த்தோம். அவர்கள் இறைச்சி, மீன் கொடுப்பார்கள்."

"இரவில் நான் வைக்கிற பால் இல்லாமல் படுக்காது. அங்கும் இங்கும் ஓடும்." என்றாள் மனைவி.

இறைச்சியும், மீனும் எங்கள் அன்புக்கு நிகராகுமா என்று கேட்பது போல் அது தொனித்தது.

பெரியதம்பியுடன் நான் லக்ஸனைத் தேடிப் போனதை விபரமாகக் கூறினேன். அத்துடன் மணிவண்ணனின் செய்தியை முதல் முதலாக இருவரும் பேசி பரிதாபப்பட்டோம். மணிவண்ணனை எங்களுக்குத் தெரியும். அவன் சகல வேலைகளில் வல்லவன். ஓய்வு நேரங்களில் எல்லோருக்கும் உதவி செய்பவன். எங்கள் வீட்டிற்கு கிணறு இறைக்க ஒரு தரமும், டி.வி. திருத்துவதற்கு ஒரு தரமும் வந்திருக்கிறான். சனசமூக நிலைய அழைப்பிதழ் கொண்டு வந்து தந்திருக்கிறான். அவன் திருவிழாக்களில் வாகனம் காவுவதைப் பார்த்திருக்கிறோம். மிகவும் வசீகரமான கம்பீரமான பையன். பரஞ்சோதி. அவர் மனைவி, அவனின் தங்கை என்ன பாடுபடுவார்களோ? இப்படியாக இன்னும் பல தகப்பன்மார், தாய்மார் எங்கள் கண்முன் தோன்ற, வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

செம்மணி மனித புதைகுழி விடயத்தையும் அன்று தான் இருவரும் கரிசனையுடன் விவாதித்தோம். அது எங்கள் கவலையாகத் தோன்றியது.

காலையில் வழமைபோல் முன் வாசல் திறந்து, பால்காரனிடம் செம்பில் பால் வாங்கவும் சென்றேன். கேற்றைத் திறக்கும்போது, "லக்ஸன் வந்திட்டுது" என்று மனைவி, ஓஹோ என ஆனந்தக்குரல் கொடுத்தா. லக்ஸன் வேலி ஊடாக வந்து, கிணற்றடியில் நின்ற மனைவியை சுற்றி வலம் வந்தது. மகள், படித்துக்கொண்டிருந்தவள் கிணற்றடி நோக்கி ஓடினாள்.

தூரத்தில் கூக்குரல் கேட்டது. வீதிக்குப் போனேன். பக்கத்து மாமிக்கு ஏற்கனவே செய்தி தெரிந்து விட்டது. அவ சொன்னா:

"பரஞ்சோதி வீட்டில்தான் அழுகிறார்கள். காலையில் இரண்டு பேர் சீருடையில் வந்து, மணிவண்ணனின் "பாடி"யை வந்து ஏற்றுக்கொண்டு போகச் சொன்னார்களாம்."

மணிவண்ணன் வெறும் உடலாகி விட்டான்.

லக்ஸன் ஓடி வந்து எனது குதிக்காலை நக்கிற்று. வாலை ஆட்டி என்னைச் சுற்றி வந்தது. குதிக்கால் தொடக்கம் எனது உச்சந்தலை வரை உடல் உணர்வு அற்றது போல் இருந்தது. ஆனால் இரவு என்னுள்ளேயே ஏதோ ஒன்று விழித்திருந்து பேசியது. அது இப்போது மீண்டும் அதே கேள்விகள் கேட்டது.

லக்ஸன் மெல்லமாக என் காலைக் கடித்தது. நான் அதைத் தூக்கி வருடினேன். என்னுள் இருந்த "அதை" விழித்துப் பேச வைத்தது லக்ஸன் தானே!

நன்றி : தரிசனம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link