சிறுகதைகள்


மருந்துக்கு அப்பால்...

கூடல்.காம்
நாகம்மா இரண்டு நாள்களாகச் சாப்பிடவில்லை. அவளது கணவன் தம்பிராசாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தது தொடக்கம் அவளுக்கு உறக்கம் இல்லை. தம்பிராசாவுக்கு சுயநினைவு இருந்தால் அவளை ஒரு நேரமாவது பசி பட்டினியோடு இருக்க விடமாட்டான் - அதுவும் இந்த நிலையில் அவள் மூன்று மாதக் கர்ப்பிணி; அது அவர்களின் முதல் பிள்ளை.

ஏதோ வித்தியாசமான காய்ச்சல் நோய் அவன் மூளையைத் தாக்கி விட்டது என்றார்கள். ஆரம்பத்தில் அவன் உடல் கணகணத்தது. அடுத்தநாள் கழுத்தில் கை வைக்கச் சுட்டது; பக்கத்தில் முதுகோடு முதுகாகப் படுத்திருக்க அடுப்பங்கரை போல் வெக்கை அடித்தது. உடம்பில் உதறல். வாய் கெட்டியதோ? வாயில் நாகம்மா என்ற வார்த்தையே தட்டுத் தடுமாறியது. பக்கத்து சித்த வைத்தியரின் குடிநீர் கஷாயம் பலசரக்குக் கடையில் வாங்கிய காய்ச்சல் குளிசைகள் உதவவில்லை. இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் முதல் நாள் இல்லாவிட்டாலும் அடுத்த நாளே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருப்பாள்.

"இத்தனை நாளும் என்ன செய்தனி?" என்று அவளிடம் குற்றம் கண்டு கேட்டார், ஆஸ்பத்திரியில் அவனை அனுமதித்த டாக்டர். எத்தனை நாள்? மூன்று நாள்கள்தானே! அவள் விடை தரவில்லை. பேசுவதற்கு நாக்கு புரளவில்லை.

தம்பிராசாவுக்கு அடுத்த நாளும் மயக்கம் தீர்ந்து நினைவு வரவில்லை. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆறுதல் கூறுவதற்கு யாரும் இல்லை. அவளைப் பொறுத்தவரையில் அந்தச் சூழல் சூனியமாக இருந்தது...

ஆனால், அது ஒரு பெரிய அரசாங்க ஆஸ்பத்திரிதான். அடுக்கு மாடி கட்டட அமைப்பிலே, பலதரப்பட்ட வார்ட்டுக்கள், சத்திர சிகிச்சைக்கென ஆப்பரேஷன் தியேட்டர்கள், எக்ஸ்ரே, ஈ.சீ.ஜீ. அறைகள், ஆய்வுக்கூடம் - இவற்றைப் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் சுட்டிக்காட்டி அந்த ஆஸ்பத்திரியின் அலுவல்களையும் அந்தஸ்தையும் விளம்பரப்படுத்தின.

அங்கெல்லாம் பலவித பலரக மனித குழாம். தம்பிராசா அனுமதிக்கப்பட்ட "ஆண்கள் மருத்துவ வார்ட்"டிலும் பெரிய டாக்டர், இரண்டாம் டாக்டர், கிளியம்மா என்று அங்குள்ளவரால் அழைக்கப்படும் சின்ன டாக்டர், நர்ஸ் அம்மாக்கள், சிற்றூழியர் இப்படியாக மருத்துவம் சம்பந்தப்பட்ட பலர்; நாற்பது கட்டில்களிலே பல தரப்பட்ட நிலையில் நோயாளிகள்; அவ்வப்போது வந்து போகும் உறவினர். இவர்களது மத்தியில் அவள் அவளாக நின்றாள். அங்கே தம்பிராசா - "எட்டவாது கட்டில் நோயாளி" என்ற "ஒரு கேஸ்".

"எட்டாவது கட்டில் என்ற வார்த்தை அடிபடும் போது நாகம்மாவின் இதயத்திலே ஒரு துடிப்பு தவறும்; தொடர்ந்து துடிப்புகள் அவசரப்படும். என்ன நடநத்து? என்ன நடக்கப் போகிறது? அது ஆண்கள் வார்ட். அவள் ஒரு பெண். குறிப்பிட்ட சில நேரங்களில் தான் அவன் பக்கத்தில் நிற்க முடியும். வார்ட்டையும் வராந்தாவையும் பிரித்த அரைச் சுவருக்கு அப்பால் மெல்ல வந்து அவ்வப்போது எட்டிப் பார்ப்பாள்.

"எட்டாவது கட்டிலுக்கு..." நர்ஸின் குரல்கேட்டு, திடுக்கிட்டுக் கண்விழித்து எழுந்து நின்று பார்த்தாள். அவள் அப்போதுதான் அந்தச் சுவருக்குப் பின்னால் குந்தியிருந்து முழங்கால்களில் முகம் பதித்து ஒரு கண் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் குட்டித் தூக்கம், நிம்மதி தராத கனவின் பீடைதான். கேள்விகள் மனத்தில் முளைத்து மூளையை உலுக்கின.

அவளுடைய பக்கத்தில் நின்ற ஒரு இளம்பெண், ரோஸ் என்ற பெயர், கான்வென்ட் ஒன்றில் படித்தவள் சொன்னாள்:

"அக்கா உன்னுடைய அவரின் முதுகிலிருந்து நீர் எடுக்க போகிறார்களாம்."

குழம்பினாள் நாகம்மா. அவள் அறிய அவன் முதுகில் நீர் கொஞ்சமும் இல்லை. ஏன், அவன் வயிறுகூட தொந்தியா நீர்ப்பை போல் இருந்ததில்லை. வலுவான தசைகளால் இறுக்கப்பட்ட வாலிப உடல் அவனுடையது.

அவள் வார்ட்டிற்குள் நுழைந்தாள். அப்போது தம்பிராசாவை ஒரு பக்கமாகச் சரித்து உடலை வளைத்துப் பிடித்திருந்தார்கள். உடுத்தியிருந்த சாரத்தை நாரிக்கு கீழே தாழ்த்தி விட்டனர். போன வாட்டில் அவள் அவனின் பாதங்களைப் பிடித்து "இந்தாங்க" என்று அழைத்தாள்.

அவள் ஒரு பதிலையும் எதிர்பார்க்கவில்லைத்தான் என்றாலும் மீண்டும் ஒருமுறை "இந்தாங்க என்ன செய்யுது?" என்று கேட்டாள். ஒரு சிற்றூழியர் ஒரு மறைப்புத் தட்டியைக் கொண்டு வந்து எட்டாவது கட்டிலை மறைக்கும் போது, நர்ஸம்மா கூறினாள்: "கிளியம்மா வாறா, ஊசிபோட வெளியாலை போ. உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுவது?"

நாகம்மாவுக்கு வயிறு அழுதது.

நாகம்மாவுக்கு அந்த டாக்டர் யுவதியும் முகத்திற்கு முகமாகச் சந்தித்தனர். இருவரும் ஒரே வயதினர். "எப்படியம்மா இவருக்கு"? என்று கேட்டாள் நாகம்மா. அப்போது நர்ஸம்மா கொடுத்த முகமூடித் துணியால் தனது மூக்கையும், வாயையும் மறைத்துக் கட்டிக்கொண்டாள் டாக்டர் கிளியம்மா.

நாகம்மா அரைச்சுவருக்கு அப்பால் திரும்பி வந்ததும் ரோஸ் சொன்னாள்: "கிளியம்மாதான் ஹவுஸ் ஆபிஸர், மூன்றாவது டாக்டர். போன வருடம்தான் டாக்டர் படிப்பு முடித்து பட்டம் பெற்றவ" கிளியம்மாவின் உண்மைப் பெயர் அங்கே பேசப்படவில்லை.

கிளியம்மா என்பது வீட்டுச் செல்லப் பெயராகவோ நண்பர்களின் பட்டப் பெயராகவோ இருக்கலாம்.

நேற்று பச்சைச் சேலை உடுத்திருந்தாள். உதட்டில் மெல்லிய சிவப்புச் சாயம், பார்ப்பதற்கு குஞ்சு கிளிதான்! அவள் இரவு பகலாக, வார்ட்டில் வேண்டிய நேரமெல்லாம் வருவதை நாகம்மா பார்த்திருக்கிறாள். எப்போதும் ஒரு வித அவசரம். அவளுடன் ஒருவார்த்தை பேசி, தனது கணவனின் நோய் நிலையில் உண்மையை அறிந்து கொண்டால் தனது மனப்பாரம் குறையும் என நம்பினாள் நாகம்மா. "அக்கா, டாக்டர்மார் நோயாளியைப் பற்றி ஒன்றும் எங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். சொன்னா எங்களுக்கு விளங்காதாம்" என்றாள் ரோஸ்.

இன்று காலை, பெரிய டாக்டரும் இரண்டாம் டாக்டரும், அந்த வார்ட்டின் ஓர் எல்லையில் கண்ணாடிச் சட்டங்களினால் அடைக்கப்பட்ட ஒரு சிறிய அறையில் நோயாளிகள் பற்றிக் கலந்து பேசினார்கள். பெரிய டாக்டர் கூறினார்: "தம்பிராசாவின் ரிப்போட்டுகள் திருப்தி அளிக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் சுய அறிவு பெற்று விடுவார். மகிழ்ச்சி" அவர்களின் பக்கத்தில் நின்ற கிளியம்மாவிடம் கூறினார்.

"ஆம் சார்" என்றாள் கிளியம்மா. "எல்லாம் தயாராக இருக்கின்றது... நான் இரவில் வந்து இந்த நோயாளியை கவனிப்பதும் உண்டு."

"தெரியும்" என்று தனது பாராட்டை நாசூக்காகத் தெரிவித்தார், பெரிய டாக்டர்.

ஆனால் நாகம்மாவுக்கோ இந்த மனத்திருப்தி தரும் உரையாடல் கேட்கவில்லை. அவர்கள் இருந்தது கண்ணாடிப்பெட்டி போன்ற ஓர் அறை. பேசுவதைக் கேட்டிருந்தாலும் புரிந்து கொள்ள மாட்டாள். அவர்கள் பேசியது ஆங்கிலத்தில் - அதுவும் மருத்துவ மொழியில்.

முள்ளந்தண்டிலிருந்து பரிசோதனைக்கு நீர் எடுப்பதில் கிளியம்மா கை தேர்ந்தவள். வார்ட்டில் நடை பெறும் எல்லாவிதமான பரிசோதனை, சிகிச்சை, செயல் முறைகளையும் அவள் டாக்டரை அழைக்காமலே செய்வாள். நாளம் மூலம் இரத்தமும் சேலைனும் ஏற்றுவது, மார்பு வயிற்றறை நீர் எடுப்பது இவற்றையெல்லாம் கிளியம்மா மிகவும் இலகுவாகப் புரிவதை ரோஸ் பார்த்திருக்கிறாள்.

ரோஸினுடைய தகப்பன் அடிக்கடி நீரிழிவு நோயின் சிக்கல் கோளாறுகளினால் இங்கே வந்து போவார். ஆகவே அவளுக்கு இந்த வார்ட் பரிச்சயம். அத்துடன் அவளுக்கு ஆங்கில அறிவும், பொதுவிஞ்ஞான அறிவும் பத்தாம் வகுப்பு அளவில் உண்டு.

ரோஸ் சொன்னாள், "அக்கா, நேற்று நான் அப்பாவின் கட்டிலில் தொங்கும் டிக்கட்டை ஒருத்தரும் பார்க்காத நேரத்தில் சாடையாகப் பார்த்தேன். அப்பாவுக்கு இடது கால் கழற்றப் போகிறார்கள். போலை..." ரோஸின் கண்கள் கலங்கிவிட்டன. நாகம்மாவும் தனது கண்களைத் துடைத்தாள்.

தம்பிராசாவின் கட்டிலை மறைத்து வைத்த ஸ்கிறீன் அகற்றப்பட்டதும், நாகம்மா வார்டிற்குள் மீண்டும் நுழைந்தாள். அவள் டாக்டர் கிளியுடன் பேசுவதற்கு துடித்தாள். அதற்கிடையில் டாக்டர் அம்மா பத்தாம் நம்பர் கட்டிலுக்குப் போய்விட்டார். அந்த நோயாளியை இப்போது ஸ்கிறீன் வைத்து மறைத்தார்கள். நோயாளிக்குப் பக்கத்தில் அவனுடைய மகன் நின்றான். அவனும் வார்ட்டிற்கு வெளியே அனுப்பப்பட்டான்.

"என்ன தம்பி செய்யப் போகிறார்கள்?" என்று கேட்டாள் நாகம்மா. "தெரியவில்லை அக்கா" என்று கூறினான் அவன்.

"ரப்பர் குழாய் வைத்து சலம் எடுக்கப் போகிறார்கள். போலை" என்று சொன்னாள் ரோஸ்.

இரவு வந்தது. அந்த இரவும் நாகம்மா உறங்கவில்லை. வயிறு உள்ளே புரண்டது, அழுதது. அவளும் அழுதவாறு புரண்டு படுத்தாள். தனது பசி வயிற்றுப் பிள்ளையைத் தாக்குமோ என்று பயந்தாள். நாளைக் காலை ஏதாவது உண்ண வேண்டும். ஆஸ்பத்திரிக்கு எதிரிலே உணவுக் கடைகள் இருந்தன. இரண்டு அப்பம் பால் போட்ட தேத்தண்ணி குடித்தால் போதும். பிள்ளையைக் காப்பாற்றலாம். அவளுக்கு யாரும் உணவு கொண்டுவருவதில்லை. கொண்டுவருவதற்கு இந்த ஊரில் அவளுக்கு யார் இருக்கிறார்கள்? அவளும் தம்பிராசாவும் திருகோண மலையிலிருந்து வந்த அகதிகள்.

அவன் பலவிதமான கூலி வேலைகள் செய்ய, இருவரும் அதில் வாழ்ந்தார்கள். சமீப காலத்தில் காடுகளில் விறகு வெட்டி சைக்கிளில் டவுனுக்கு கொண்டுவந்து விற்றுப் போதிய பணம் சேகரித்தான். குழந்தை பிறந்ததும், அதை வளர்ப்பதற்குப் போதிய சேமிப்பு இருந்தது. தம்பிராசா சொல்லுவான். "நாகம்மா கேட்குதா! நான் இருக்குமட்டும் நீ எங்கிருந்தாலும் அகதி இல்லை."

இரவு போய் விட்டாள். இரவி வேலைக்கு வந்து விட்டான். அவளின் தம்பிராசாவுக்கு இன்னும் சுய அறிவு வரவில்லை...என்ன இரவு! ஏன் பகல்! சில நாள்களாக வார்ட்டிலிருந்து இன்று காலை வீடு போக இருந்த, பத்தாம் கட்டில் நோயாளி ராத்திரி இறந்துபோனார். அந்த உடல் ஆஸ்பத்திரியின் கோடுகள் போட்ட துணியால் போர்க்கப்பட்டு, வெளிறிய பாதங்கள் மட்டும் வெளியே தெரிய, சவ அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

ரோஸ் அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய தகப்பன் சத்திரசிகிச்சை வார்ட்டுக்கு மாற்றப்படுகிறார். கால் கழற்றப்படுவது நிச்சயம் என்பது தானே அதன் அர்த்தம்? இனி, இன்றைய பகல் தம்பிராசாவுக்கு என்ன வைத்திருக்கிறது?

"டாக்டர்மார் வரப்போகிறார் வெளியாலை போங்கோ. விறாந்தையில் நிற்காதேங்கோ".

அங்கே நின்றவர்கள் வெறும் விடுப்பு பார்க்கத்தான் வந்தவர்கள் என்ற ஞாயம் பேச்சில் தொனிக்க அவர்களைக் கலைத்தான், ஒரு சிற்றூழியன்.

நாகம்மா ஆஸ்பத்திரிக்கு வெளியே தெருவுக்கு வந்தாள். எதிரிலே சவப்பெட்டி விற்கும் கடை. அடுத்தது, ஒரு சிறிய அச்சகம். அதற்கடுத்தது ஒரு சாப்பாட்டுக் கடை. சூரியன் வானக் கடிகாரத்தில் பதினொரு மணியளவில் நின்றான். அவள் ஒரு பாண் துண்டு தின்று ஒரு தேநீர் குடிக்க வேண்டும். இனி அவளால் பசியைப் பொறுக்க முடியாது.

"வா அம்மா, வந்து இரு" என்று ஒரு குரல் கேட்டது. ஓர் ஓரமாக கிளி ஜோசியர் ஒருவர் இருந்தார். அவர் முன்னால் அவரைப் போலவே வயோதிப நிலையில் சீட்டுக்கள் வரிசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தன. கூட்டிலே ஒரு கிளி. நாகம்மா தன்னிச்சையின்றி, உணர்வுகள் உந்த அவரின் முன்னால் குந்தியிருந்தாள். கூட்டிலே "கிளி ஆரூடம் ரூபா ஒன்று" என்று எழுதப்பட்டிருந்தது. சேலைத் தலைப்பு முடிச்சை அவிழ்த்து ஒரு ரூபாயை கீழே வைத்தாள்.

"என்னம்மா பேர்?"

"நாகம்மா"

ஜோசியர் கூட்டின் சிறு கதவைத் திறந்து சொன்னார்: "இந்தா கிளியம்மா, நாகம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறாய்?" கிளி வெளியே வந்து தலையைப் பக்க வாட்டில் வைத்தபடி யோசித்தது. நாகம்மாவின் இரத்தம் உறைந்துவிட்டது - அவள் தனது கணவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். கிளி என்ன சொல்லப் போகிறதோ?

"உம் நாகம்மா என்ற ராசிக்கு ஒரு சீட்டு எடு" ஜோசியர் துரிதப்படுத்தினார். "ஒரு தெத்தலில் வந்து, ஒரு சீட்டை தனது சிவப்பு சொண்டினால் கவ்வி இழுத்து விட்டு கூட்டிற்குத் திரும்பியது. போகுமுன் ஜோசியர் போட்ட ஒரு வேர்க்கடலையைக் கவ்விக்கொண்டது. கிளி எடுத்த சீட்டிலுள்ள படம் தாவும் ஆஞ்சநேயர், கையிலே மலைக்குன்று. காலத்தால் கசங்கி, மடிப்புகளில் கிழிந்து அந்தப் படம் ஆஞ்சநேயரை வயோதிபராகக் காட்டியது. அவர் சொல்லும் வாசகத்தைப் படித்து விளக்கினார் ஜோசியர். அவள் மனதில் பதிந்தவை: "பார்த்தியா அம்மா ஆஞ்சநேயர்... கையிலே சஞ்சீவி... சீதைக்கு செய்தி தெரிவிச்சார்... உனக்கு என்னம்மா சொல்ல இருக்கிறார்...?"

கேட்டுக் கொண்டிருந்தாள் நாகம்மா, இதைத்தானே அவள் மூன்று நாள்களாக வார்ட்டிலுள்ள யாரிடமாவது கேட்க இருந்தாள்.

"உம். கேள்: சில நாட்களில் உன் துன்பமெல்லாம் நீங்கிவிடும். எதைச் செய்தாலும் இன்னல் ஏற்படாது. உனது எண்ணம் பலிதமாகும்..."

நாகம்மாவிற்கு இந்த வார்த்தைகள் நம்பிக்கை தந்தன. ஆனால் அவளுடைய மனத்தின் முக்கியக் கேள்விக்கு விடை தரவில்லை. ஜோசியம் கிளி அறிமுகப்படுத்திய ஆஞ்சநேயரைத் தொடர்ந்து விளக்கம் தர ஆசைப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரியில் இருப்பது யார்? அவளுடைய பிள்ளையா, கணவனா, அப்பனா, தாயா?

"கேளம்மா... "ஜோசியர் மறைமுகமாக விவரம் விரும்பினார்.

"நாலு நாளாய் அவருக்கு சுய அறிவு இல்லை" என்றாள் நாகம்மா.

"அதுதானே, சொன்னது விளங்கவில்லையா?" என்று ஆரம்பித்த ஜோசியர், ஆஞ்சநேயர் படத்தை மீண்டும் பார்த்தவாறு கூறினார்:-

"இன்னும் பேச்சு மூச்சு இல்லை" என்று விம்மினாள் அவள்.

"இரண்டு நாள்கள் பொறம்மா. அறிவு வந்து அவன் பேசாமலா விடப்போகிறான்? நான் எங்கே போறன்?

காலையிலே இருந்து இங்கேதானே இருக்கிறன்..." என்றார் ஜோசியர்.

ஆகா! அவள் மனத்தில் நிம்மதி என்ற தேவதை குடிபுகுந்தாள். நாகம்மா எழுந்துவிட்டாள்.

"இரண்டு நாள்கள்" எவ்வளவு ஆறுதல் தரும் சஞ்சீவி வார்த்தைகள். அவள் மனப்பாரம் இப்போது ஆஞ்சநேயரின் கைகளிலே, அத்துடன் அந்த ஜோசியர் எதற்கும் அங்கே இருக்கிறார்தானே!

சாப்பாட்டுக்கடைக்குப் போனாள் நாகம்மா. கடைக்கு முன்பாக "மதிய உணவு தயார்" என்று எழுதப்பட்ட ஒரு பலகை இருந்தது. கண்ணாடி அலமாரியில் காலைப் பலகாரங்களில் மிச்சமாக உள்ள பிட்டு, இடியப்பம், தோசையுடன் ஒரு பகுதியில் வெட்டப்பட்ட பாண் துண்டுகளும் இருந்தன. நாகம்மா ஒதுக்கமாக இருந்த ஒரு மேசையோடு உட்கார்ந்தாள். ஒரு பையன் அந்த மேசையைத் துடைத்துவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்தான்.

"சாப்பாடு" என்றாள் நாகம்மா. "முழுச்சாப்பாடு" என்று அழுத்தமாகச் சொன்னாள். அவள் முன்னால் ஒரு தலைவாழையிலை வைக்கப்பட்டது. தனது வீட்டில், அவர் சாப்பிட்டுவிட்டு பகலில் ஒரு கண் தூங்கும் போது குசினியில் வாங்கில் இருந்து சாப்பிடுவது போல் இட்டும், தொட்டும் கவ்வியும் குழந்தைபோல் செல்லமாகத் தின்றாள். வாயோரத்தைப் புறங்கையால் துடைத்தாள். தாவணியில் விழுந்ததைத் தட்டிவிட்டாள். சாப்பிட்டு முடிந்ததும். அந்த அவசரத்தை எண்ணி வெட்கமும் அடைந்தாள். அடுத்த அடுத்த நாள்களும் அங்கே வந்து மதிய உணவு சாப்பிட்டாள். ஒரு நேர உணவு அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

டாக்டர் கிளியம்மாவுக்கும் மனத்தில் மிகுந்த திருப்தி. அந்த நாள்களில் வார்ட்டில் கேள்விக் குறிகளாக இருந்த மூன்று கேஸ்கள் உயிர் தப்பிவிட்டனர். இந்த மருத்துவ வெற்றியில் தனக்கும் பங்கு உண்டு என்பதை அவள் உணர்ந்தாள். இந்த மூவரில் எட்டாம் கட்டில் நோயாளி தம்பிராசாவும் ஒருவர்தான். அவர் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, பெரிய டாக்டருக்கே சவால் விட்ட அந்த நோயைப் பற்றிய செய்திகளை மருத்துவ நூல்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறாள்.

அவரது பராமரிப்பில் எந்த விதமான குறையும் விட அவள் விரும்பவில்லை. இரவில் அவள் தூக்கம் குழப்பப்பட்டிருக்கின்றது. "அம்மா, எட்டாம் கட்டில் நோயாளி ஒரு மாதிரி..." என்று தொலைபேசி அழைப்பு வார்ட்டிலிருந்து வந்ததும், அவசரமாகச் சேலையைச் சுற்றிக் கொண்டு ஓடி வந்திருக்கின்றாள். இன்று அவள் விடுதியில் சாப்பிடும் போது இந்த கேஸ் வெற்றிகளை தனது சகாக்களுக்குக் கூறுவாள். அவர்களும் தங்கள் வெற்றி தோல்விகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நாகம்மா தனது கணவனுக்கு நீராகாரம் பருக்கிக் கொண்டு நின்றாள். பெரிய டாக்டர், இரண்டாமவர், கிளியம்மா மூவரும் கண்ணாடி அடைப்பு அறையில் பேசிக்கொண்டு இருந்தனர். பெரிய டாக்டர் கிளியம்மாவுக்கு கூறினார்:

"டாக்டர், இந்த மூன்று நோயாளிகள் மருத்துவ விஷயங்களை நீர் கேஸ் நோட்ஸ் ஆக எழுத வேண்டும். அதை இலங்கை மருத்துவ ஜேர்னலுக்கு அனுப்புவோம் அவர் மீண்டும் சொன்னார். "எட்டாம் கட்டில் தம்பிராசா இன்னும் ஒரு வாரம் வார்ட்டில் இருக்க வேண்டும்."

நாகம்மா குறுகுறு என நடந்து ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தாள். நேரே ஜோசியரிடம் சென்று சொன்னாள்.

"ஐயா நீங்கள் சொன்னதுபோலை அவருக்கு சுய அறிவு வந்திட்டுது"

"யாருக்கு"?

"என்ரை அவருக்கு"

"ஓ! ஓ! சந்தோஷம்.. அவசரப்படாதே. ஒரு வாரமாவது ஆஸ்பத்திரியில் வைச்சிரு. அப்புறம் வீடுபோய் நல்ல சாப்பாடு குடு. கவனமாக மருந்துகளையும் குடு."

அவர் கூறியதை அவள் கைகட்டி மிக அவதானத்துடன் கேட்கும்போது, இன்னும் ஒருவர் கிளி ஜோசியருக்கு முன்னால் உட்கார்ந்தார்.

நன்றி: தரிசனம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link