சிறுகதைகள்


வீடு

கூடல்.காம்
வா தம்பி...,
என்னா மழைக்கி ஒதுங்க எடம் பாத்து வந்தியா? அது சரி. பின்ன ஒனக்கும் எனக்கும் வேற என்னா ஒறவு இருக்க முடியும்? ஒன் துணிமணி எல்லாத்தையும் புதுசாவே நெனச்சு ஒரு வெல போட்டாலும் என் ஒடம்புல இருக்குற ஒரு சதுர இஞ்ச் பெயிண்டுக்கு சரியா வராது போல இருக்கே.

என்னா என்னைய மேலயும் கீழயும் பாக்குறே? என்னடா மனுஷரையே காணோம்; பேச்சு சத்தம் மட்டும் வருதேனு பாக்குறியா? நான் தாம்ப்பா பேசுறேன். இந்தக் கட்டடம். நான் பேசுறது காதுல விழுதா? ஓகோ, இத்தம் பெரிய கட்டடத்துல மனுஷன் மழைக்கி ஒதுங்க ஒரு எடம் இல்லியேனு பாக்குறியா?

அப்படியே வந்து என் எடக் கையி ஓரமா நின்னுக்க. சாரல் மேக்க இருந்து வீசறதுனால இங்க ரொம்ப நனைக்காது. என்னா செய்றது. என்னால அவ்வளவுதான் ஒதவ முடியும். என் உள்ளுக்குள்ள கெடக்கு கொள்ள எடம். ஒரு படையே படுத்துப் பொறலலாம். வெளியிலதான் ஒன்னைய மாதிரி ஆளுக்கு ஒரு சதுர அடி எடம் கெடையாது. எனக்கே வெக்கமாதான் இருக்கு. ஆனா நான் என்னா செய்யலாம். என்னையக் கட்டுன ஒன்னையா மாதிரி மனுஷங்க அத யோசிச்சிருக்கணும்.

"மனுஷங்க, ஹோ.... மனுஷங்க....."

ஹே, மழ வசமா பிடிக்கத்தான் போவுது போல் இருக்கப்பா. இன்னம் ஒரு பர்லாங் தூரத்துக்கு ஒனக்கு வேறு கட்டடம் கிடையாது. கெடைச்சாலும் அங்க ஒனக்கும் இந்த எடமும் கெடைக்காது. எல்லாம் காம்பவுண்ட் செவர் வச்ச பங்களாக்க. அஞ்சடி செவத்துல நீ எந்தப் பக்கம் ஒண்டுவே?

நான் பேசுறது ஒனக்குத் தொந்தரவா இருக்கா? தொண தொணங்கறனா? பரவாயில்ல. கொஞ்சம் பொறுத்துக்கத் தம்பி. என்னால பேசாம இருக்க முடியாது. அப்பிடி ஒரு சீக்காப் போச்சு எனக்கு. நீயோ மனுஷன். ஒனக்குப் பொறுத்துக்க எவ்வளவோ தெரிஞ்சிரிக்கும். எவ்வளவோ விஷயங்கள் பொறுத்துக்கவும் சகிச்சுக்கவும் தெரிஞ்சிருந்தாதானே இன்னிக்கு நீ உசுரோட இருக்க முடியும்? இல்லேனா செத்தில்ல போயிருப்பே. பைத்தியமால்ல ரோட்ல போய்க்கிட்டிருப்பே.

பைத்தியம்னு சொன்னதும் நெனப்பு வருது. இந்த சுத்துப் பக்கத்துல இருக்க எல்லா கட்டடங்களுமே என்னைய அரைப் பைத்தியம்னுதான் சொல்லுதுங்க, இன்னும் கொஞ்ச நாளையில நான் தற்கொலை செஞ்சாலும் செஞ்சுக்குவனாம்.

செஞ்சா செஞ்சுட்டுப் போறேன்! என்னா கெட்டுப் போச்சு? இங்க இருந்து, இந்த மனுஷங்க செய்யிறதயும், நடந்துக்கறதயும், பெருமூச்சு விடுறதயும். மன வேக்காளப்படுறதயும் பாத்து மனசு நொந்துகிட்டு இருக்கிறதவிட செத்துப் போறது எவ்வளவோ மேலு.

உண்மைய ஒங்கிட்ட சொல்ல என்னா இருக்கு! நானும் சாவறதுக்கு ஒரு வழி தேடிக்கிட்டுதான் இருக்கேன்.

கழுத பொதி செமக்குற மாதிரி இந்த வீட்ல ஆம்பளேனு பேர வச்சுக்கிட்டு திரியறதா மனசு அழுது பொலம்பிக்கிட்டுத் திரியறானே ராசாங்கம், அவன் என்னோட உத்தரம் ஒண்ணுல தொங்குறதுக்கு முன்னால; இல்லேனா அவளும் அவ கள்ள புருஷனும் சேந்து அவன் சோத்துல வெஷம் வக்கிறதுக்கு முன்னால நான் இடிஞ்சு விழுந்துடணும்.

ம்.... ஒரு காலத்துல நான் இப்பிடியா பெருமூச்சு விட்டுக் கிட்டு இருந்தேன்! அப்ப நான் சிறு வீடா இருந்தாலும் எப்பிடி சந்தோஷமா நெஞ்ச நிமித்திக்கிட்டு இருந்தேன். அப்பதான் எப்பிடிப்பட்ட மனுஷன் எனக்குள்ளாற குடியிருந்தான்! எப்பிடிப்பட்ட மனுஷங்க என்னத் தேடி வந்தாங்க! எப்பேர்ப்பட்ட விஷயங்கள் பேசுனாங்க! இன்னிக்கி நெனச்சாலும் என் உயிரு புல்லரிக்குது. ஒலகத்துல பொறந்த ஞானவான்கள் என்னா! வீரர்கள் என்னா! நடந்த விஷயங்கள் என்னா!

ச்.... ச்.....

அரசியல் வாதியில கூட ஒரு மாணிக்கம் பாரு.

ஒரு தடவ ஒரு அரசியல்வாதி விடிஞ்சும் விடியாத நேரத்துல சட்டையெல்லாம் ரயில் கரிய அப்பிக்கிட்டு வர்ரான், அவன் மீச, அப்ப இங்க, இரும்பு மனுஷன்னு ஒரு படம் இருக்கும். அந்த மனுஷன் மீச மாதிரி இருக்கும். இவனும் இரும்புதான். சந்தேகம் என்னா? இவன் இந்த வீட்டுலக் குடியிருந்த எழுத்தாளனுக்கு சிநேகிதன். வந்ததும் வராததுமா டிபன் இருந்தா குடு பசிக்குது, ராத்திரி சாப்புடலேனு சொல்றான். மொத நாளு தெக்கே எங்கயோ தூரமா ஒரு ஊர்ல மீட்டிங்காம். மீட்டிங் முடிஞ்சு வரவும் ரயில் பெறப்படவும் சரியா இருந்துச்சாம். தோழர்கள் எல்லாம் இவன சட்டுபுட்டுனு ரயிலுக்குள்ள ஏத்தி விட்டுட்டாங்களாம். இவன் சாப்புடனுமேனு யாரும் நெனைக்க நேரமில்லியாம். இவன் கையில எட்டணாக் கூடக் கெடையாதாம். ராத்திரி பூரா பட்டினியா வந்திருக்கான். இந்த எழுத்தாளன் சரினு சொல்லிட்டுப் போயி அடுப்படியில பொஞ்சாதிய சிக்கிரம் ஏதாச்சும் செய்யச் சொல்லிட்டு திரும்பி வந்தா. ஆச்சரியமா இருக்கு; எட்டணா இல்லேன்னவன் சில்லறையா பிரிச்சு வச்சு எண்ணிக்கிட்டிருக்கான். அந்தப் பணம் நேத்து கூட்டத்துல கட்சி நிதிக்காக உண்டியல் குலுக்குன பணமாம். நேரமில்லேனு அப்பிடியே பொட்டலமா கட்டி குடுத்துவுட்டுருக்காங்க. சரி ராத்திரி பூரா பட்டினி கெடந்திருக்கியே. இதுல ஒரு ரூவா எடுத்து சாப்புட்டு இருந்தா என்னா? இங்க வந்து அந்தப் பணத்த போட்டிருக்கலாமில்லேனு அந்த எழுத்தாளன் கேட்டா, இவன் சொல்றான், "உகூம்" இது கட்சிப்பணம். இதையெல்லாம் கண்டபடி தொடக்கூடாது. அவனும் தான் அரசியல்வாதி. இப்ப நான் பாக்குறேன் என்னென்னமோ நடக்குது. என் கக்கூஸ் செவத்துல ஒளிச்சிருக்க கள்ளப் பணத்துல இருந்து எல்லாக் கட்சிக்குமே தர வித்தியாசமில்லாம ஆயிரம் ஆயிரமா போவுது. பொறப்படுறப்பவே அதுல கொஞ்சம் இன்னொரு பாக்கெட்டுக்கும் போயிடுது.

அந்த எழுத்தாளனும் தான் எப்பேர்ப்பட்டவன்! ஆளு தட்டக் குச்சியாட்டம் இருப்பான். ஆனா கோவம் வந்து எந்திரிச்சான்னா! நெருப்பாத்தான் கக்குவான்.

ஒரு தடவ யாரோ ஒருத்தன், என்னங்க பெரிய இலக்கியம்; இலக்கியவாதி. அவன் மட்டும் என்னா வானத்துல இருந்தா வந்துட்டான். அவன் எழுதுறததான் நாங்க படிக்கணுமா? நாங்க விரும்புறத அவன் எழுதக் கூடாதான்னு கேட்டுட்டான். இவனுக்கு வந்துருச்சுயா வெளம். எந்திரிச்சு சரஞ்சரமா விடுறான் பாரு!

"யோவ், என்னா பெரிய இலக்கியவாதினு கேட்டுட்ட இல்ல? அவன் எவ்வளவு பெரிய ஆளுனு சொல்றேன் கேளு. மனுஷ ஆத்மாவோட பாதுகாவலனே அவன்தான்யா. அது மட்டுமில்ல. அதோட புரவலனும் அவன்தான். மனுஷன் மிருகமா இருந்துட்டு முழுமனுஷங்கிற இலக்கை நோக்கி ஒரு பயணம் போறது தெரியுமா ஒனக்கு. அந்தப் பயணத்துல அவனுக்கு வழி காட்டுற பொறுப்ப ஏத்துக்கிட்ட நெறி காட்டிய்யா இவன். அவனோட ஆத்ம கசிவுதான்யா இலக்கியம். மனுஷனோட துன்ப துயரத்தக் கண்டு அவன் விடும் கண்ணீர் தான்யா காவியம். கொளுத்துற வெயில்ல, தார்ரோட்ல வெறுங்காலோட வேர்வையில் குளிச்சு கைவண்டி இழுத்துப் போறவனப் பாத்து நீ என்னிக்காச்சும் கண் கலங்கியிருக்கியா? அதப் பாத்துட்டு வேதனப்பட்டு நெஞ்சு துடிக்கிறவன்யா இவன். அந்தத் துடிப்ப அப்பிடியே தன்னோட எழுத்துல எறக்கி அதத் தன் வாசகனுக்கும் தொத்த வச்சு, இவனுக்கொரு வகை செய்யினு அவன் கிட்ட மன்றாடுற பெரிய மனுஷன்யா இவன். இவன் ஒரு குருய்யா. தன் வாசக மாணவன் கிட்ட உலக நலத்துக்காக மடிப் பிச்சை கேக்குற வள்ளல். வாழ்க்கையோட ஆணிவேர் சல்லிவேரும் அறிஞ்சவன் இவன். இவன் ஒன் மொகத்த ஒனக்காகப் படம் போட்டு ஒங்கிட்டயே காட்டறவன். அதப் பாத்துட்டு நீ, இது என் முகமில்லேனு சொன்னா அத நிரூபிக்க ஒரு தர்மயுத்தத்துக்கு தயாரா இருக்கறவன். அந்தச் சண்டையில் நீ அவன் ஒடம்பையே கிழிச்சிடுவேனு தெரிஞ்சாலும், ஒங்கூட ஒனக்காக கடைசி வரையிலயும் நின்னு கத்தி வீசுற வீரன். சர்க்கஸ் கூடாரத்தோட சரி. ஆனா இவனோட எழுத்து ஒன்னோட வீடு வரையிலயும், கோயில் வரையிலயும் உன் ஆத்மாவோட கருவறை வரையிலயும் வரக்கூடியது. அந்த ஆத்மாவோட ஜீவனையே உறுக்கக்கூடியது. அதனால ஒரு எழுத்து எவ்வளவு சரியா இருந்தாகணும்னு அவனுக்குத் தெரியும். அதத்தான் அவன் கொடுப்பான். அவன் கொடுக்கறது ஒனக்கு ஒரு தேவையோ, ஒனக்கு எது இனிக்குமோ அது இல்ல. நீ, இல்ல இல்ல, என் அரிப்புக்குத்தான் நீ சொரியனும்னா அவன் போடா, அதுக்கு வேற ஆளப்பாருனு தான் சொல்லுவான்.

அப்பிடிப்பட்ட அந்த எழுத்தாளனும் கடைசியில் வாடகக் குடுக்க முடியாம வீட்டக் காலிபண்ணிட்டுப் போனான். ரெண்டு துருவத்துக்கும் நடுவுல இருக்கிற எல்லா ஜீவராசிகளையும் நெஞ்சுல வச்சு அன்பு செஞ்ச அந்த மனுஷன நாலு மாச வாடகை பாக்கிக்காக வெளியே போகச் சொல்லிட்டான் என்னக் கட்டுன முட்டாள். அதுல, சரியான சத்திரத்து கிராக்கினு பட்டம் வேற. ஒரு பிச்சக்காரன் கேவலப்படுறதக் கண்டாக் கூட மனசு பதறிப் போற அவன் தனக்கு வந்த இந்த கேவலத்த மட்டும் எப்படி புன்னகையோட பொறுத்துக்கிட்டானோ, பாவி மகனுக்கு எப்படித்தான் அது முடிஞ்சுதோ!

மழ நின்னமாதிரி தான் இருக்கு. என்னா பொறப்படலாம்னு நெனக்கிறியா, எதுக்கும் பொறுத்துப் பாத்துக்க. இந்தா பழையபடி வந்துருச்சுல்ல.

ம். அப்புறம் - அவன் போன பின்னாடி கொஞ்ச நாளு என்னோட கதவுகள பூட்டியே வச்சிருந்தாங்க. அப்புறம் என்னய யாரோ ஜின்னிங் பேக்டரி முதலாளி ஆதிமூலங்கற ஆளுக்கு வித்துட்டதா லேசா பேச்சு வந்தது. ஆனா பத்திரம் அவரு பேருக்கு இல்லியாம். யாரோ ஒரு பொண்ணு பேர்லயாம். சரி, ஏதோ வரி டிமிக்கி வௌகாரம்னு நெனச்சுக்கிட்டேன்.

ஆனாக்க ஆதிமூலமோ அந்த பொண்ணோ அவ்வளவு சீக்கிரத்தில வரல. இதுக்கு நடுவுல ஒரு பெரிய விஷயம் நடந்தது.

ஒருநாளு நல்ல முகூர்த்த வேளையாப் பாத்து என் முன்னால கெடந்த எடத்துல ஒரு லாரி வந்து நின்னுது. பாத்தா லாரி பூரா செங்கல். அப்புறம் அடுத்தடுத்து கல்லு, சுண்ணாம்பு, சிமிண்ட், மரம், இரும்புனு நாள் தவறாம வந்து எறங்குது. இஞ்சினியர்களும், சிப்பந்திகளும், வரிசையா வந்து எறங்குறாங்க. என்னைய டேப் வச்சு அளக்குறாங்க. என்ன சுத்தியிருக்குற எடத்த அளக்குறாங்க. மேஸ்திரிகளும் சித்தாள்களும் வர்றாங்க. எடம் கலகலத்துப் போவுது.

என்னைய வளக்கப் போறாங்களாம். மொட்ட மாடியா இருக்க என்னைய மூணுமாடியா எடுத்துக் கட்டப் போறதாப் பேசிக்கிறாங்க. பக்கத்துல எல்லாம் அகட்டிக் கட்டப்போறாங்களாம். எனக்கு ரொம்ப சந்தோஷம். யாருக்குத் தான் வளர்றதுக்கு சந்தோஷம் இருக்காது?

அவங்க என்னைய ஒசத்தி அகட்டிக் கட்டி அலங்காரம் செஞ்சு முடிச்சப்ப எனக்கே சந்தேகம், அது நான்தானானு. என் பழைய உருவத்த நெனச்சுப் பார்த்தா ஏதோ கனவுல கண்ட மாதிரி பரிதாபமா இருக்கு. அன்னிக்கு சவலப்புள்ள மாதிரியிருந்த நான் இப்ப பீமன் பலம்மா, குளிர்ச்சியா, காத்துணம் வெளிச்சமுமா நிக்கிறேன். மொசைக் தரையும் கூரையில இருக்குற கலர் டிசைன்களும் ஒண்ண ஒண்ணு தொட்டுப் பாத்துக்க ஆசப்படுதுங்க.

அதுமட்டுமில்ல தம்பி, உள்ள வந்த சாமான்க, ரேடியோ, பீரோ, கண்ணாடி, கட்டில், ஐஸ் பெட்டி, ஹீட்டர், கேஸ் ஸ்டவ்னு ஒன்னொண்ணும் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இப்பிடி எல்லா சௌகரியங்களையும் தானே உண்டாக்கிக்கிட்ட மனுஷன்மேல் எனக்குப் பொறாமையா இருக்கு. திடீர்னு அந்த எழுத்தாளன் ஒரு தடவ சொன்னது என் ஞாபகத்துக்கு வந்தது. அது அவங்க வாத்தியார் சொன்னதாம். "மனிதன்! ஆ! அதுதான் எவ்வளவு கம்பீரமான சொல்!" அப்படீனு சொல்லுவான். இப்படி ஒரு மனுஷனாலதான் என்னப்போல ஒரு அற்புதத்த படைக்க முடியும்னு நெனச்சேன்.

ஆனா, தம்பி, என் பெருமையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நாசமாப் போயிடும்னு அப்ப நான் நெனைக்கல. கிரஹப்பிரவேசத் தன்னிக்கே அதுக்கு மோசம் வந்துடுச்சு.

அன்னிக்கு எவளோ பொண்ணு பேர்ல பத்திரம் பதிவாயிருக்குனு கேள்விப்பட்டப்ப, ஏதோ வரி விவகாரம்னு நெனச்சனா? அது தப்பு. ஏதோ ஒப்புக்கு அக்கா தங்கச்சி பேர்ல இருக்கும்னு நான் நெனைக்க, இவ, சௌந்தரம், நெஜம் போலவே என்னது தான்னு நெஞ்சத் தூக்கிக்கிட்டு படியேறி வர்ரா. பின்னால இவன் ராசாங்கம். சாணியில கால் வச்ச மாதிரி கூசிக்கிட்டு வர்றான்.

இவன் ஆதிமூலம் பேக்டரி ஒண்ணுல மானேஜரா இருக்கானாம். இவுங்கதான் இங்கக் குடியிருக்கப் போறாங்களாம்.

ஆனா இந்த ஜோடிய மத்தவங்க பாக்குற பார்வை நல்லாயில்ல. அது மொகத்துக்கு நேரா ஒரு மாதிரியிருக்கு. பின்னால ஒரு மாதிரியிருக்கு.

பேச்சும் அப்பிடியேதான்.

இதப் பாத்ததும் ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அப்ப என் வேலையெல்லாம் முடிஞ்சி சாமான் செட்டுக வந்து எறங்குற நேரம். ஒரு ரெட்டக்கட்டில். கொண்ணாந்து படுக்க அறையில் போடுறாங்க, அத எந்த எடத்துல போட்டா வசதியா இருக்கும்னு யோசன. அப்ப ஆதிமூலம் கண் சிமிட்டிக்கிட்டு அந்த ஆளுங்கக்கிட்ட சொல்றான், "பாத்துப் போடுங்கப்பா. இவ்வளவு பெரிய வீட்டக் கட்டிட்டு கடைசியில எனக்கு ஆவுறது இது ஒண்ணுதான்" அதக் கேட்டு அந்த ஆளுக கள்ளச் சிரிப்பா சிரிச்சுக்கிட்டானுக. அப்ப எனக்கு வெளங்கல. இப்பதான் புரிஞ்சுது.

சௌந்திரத்துக்காகத்தான் ஆதிமூலம் ராசாங்கத்துக்கு மானேஜர் வேல கொடுத்திருக்கான். இப்ப வீட்டக் கட்டிக் கொடுத்திருக்கான்.

நான் ராசாங்கத்த கவனிச்சுப் பாக்குறேன். பாவமா இருக்கு. கண்ணுல ஒரு மாதிரி மெரட்சி. எதுலயோ சிக்கிகிட்ட மாதிரி. எதுக்கால வர்ரவங்ககிட்டயெல்லாம் "நீங்க என்னயக் கேவலமாப் பாக்குறிங்க. என்னையக் கேவலமா பாக்குறீங்கனு" சொல்ற மாதிரி. அப்புறம் அதுலே ஒரு சமாதானப் பார்வை. இல்லியே, ஒண்ணுமில்லியே, இது எங்க வீடு இல்லியே. எங்க மொதலாளி வீடு தானே நான் சும்மா அவரு மில்லு மானேஜர்ங்கற மொறையில இங்கக் குடி வாரேன். ஒரு வரி வசதிக்காக அவரு இந்த வீட்ட சௌந்திரம் பேர்ல எழுதியிருக்காரு. மத்தபடி சௌந்தரத்துக்கும் அவருக்கும் ஒண்ணுமில்லியேனு" சொல்ற மாதிரி.

எனக்குப் பொக்குனு போவுது, சந்தோஷமெல்லாம் அவுட்டு. என்னடா சிங்கம் இருந்த குகையப் புதுப்பிச்சு எலிகளைக் கொண்ணாந்து விட்டிருக்காங்களேனு.

ஆனா இவ என்னமோ இவ அப்பனும் பாட்டனும் கல்லு ஒடச்சு கட்டுன வீடுமாதிரி தான் நடந்துக்கற. ஆனா அதுவும் ஒரு நடிப்புதான்?னு ஒடனே தெரிஞ்சு போச்சு, அவ கண்ணுல நீ என்ன வேண்ணாலும் நெனச்சுக்கோனு ஒரு வீம்பு. "எல்லாம் தெரியும்டா, நீங்கள்லாம் முன்னால கண்டா சிரிச்சு பின்னால நாக்க நீட்ற பசங்க தாண்டா"னு சொல்ற வீம்பு. அதப்பத்தி எனக்கு டோன்கேர்னு சொல்ற வீம்பு.

பால் காய்ச்சி எல்லாத்துக்கும் குடுத்தாச்சு. குடிச்சாச்சு. தனியா ஒரு டம்ளர் பால் மட்டும் காத்துக்கிட்டு இருக்கு. நேரம் ஆக ஆக இவ வாசல வாசலப் பாக்குறா. என்னா இன்னும் மொதலாளியக் காணமேனு வாய்விட்டே கேக்குறா. இவன் ராசாங்கம் பதில் சொல்லல. எவனோ ஒருத்தன் வந்துடுவாருனு பதில் சொல்றான்.

கொஞ்ச நேரம் கழிச்சு ஆதிமூலம் வர்ரான். பரபரப்பு, வரவேற்பு. அவ ஓடியாந்து கூட்டிக்கிட்டுப் போயி பால் டம்ளர நீட்டுறா. அவன் சிரிச்சுக்கிட்டே தேங்ஸ்னு சொல்றான். இவ நாணிக்கிட்டு சிரிக்கிறா. இந்த ராசாங்கமும் சிரிச்சுக்கிட்டான். எனக்கு அவன அறையணும் போல இருந்துச்சு. அவங்க தான் ஒருத்தொருக்கொருத்தர் ஏதோ பரிமாறிக் கிட்டதுக்காக சிரிக்கிறாங்க. இவன் எதுக்கு சிரிக்கிறான்?

அப்பிடியும் இவ ரொம்ப அழகும் இல்லை. கட்டான ஒடம்பும் இல்ல. சாதாரணமா தான் இருக்கா. பின்னால தெரிஞ்சுது இவ கொஞ்சம் சாகசக்காரினு. கொஞ்சம் படுக்கப்பேச்சு கத்துவச்சிருந்தா. ஒண்ணு ரெண்டு வார்த்த போட்டதுமே அவன் என்னமோ கெடச்ச மாதிரி மல்லாந்து போயிடுவான்.

ஆனா இதுக்காவே ஒருத்திக்கி பங்களா வாசமா? இதையே தொழிலா வச்சிருக்க எத்தினியோ பேரு கஞ்சிக்கி சாகுறாளுகளே?

யோசிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுது. இவளுக்கு அதிர்ஷ்டம் இருந்ததுனு. இவளுக்குத் தட்டுப்பட்டவன் அகஸ் மாத்தா லெட்சாதிபதியா இருந்துட்டான். அவன் வீட்ல கறுப்பும் வெள்ளையுமா பணம் வாய்க்கா போட்டுக்கிட்டு ஓடுது. குறுக்கால வந்த இவ கொஞ்சம் குளிச்சிக்கிறா. இல்லாட்டி இதே சாகசத்துக்கு இவளுக்கு ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியார் என்னா குடுத்திருப்பான்? பத்து ரூவா குடுத்திருப்பான். வேற எவ்வளவு கிடைக்கும்? இங்க அம்புட்ட பய ஊர அடிச்சு குவிச்சு வச்சிருக்கறதுனால இவளுக்கும் ஒரு குவியலு கெடச்சுப் போச்சு.

ஆதிமூலத்துக்கு இதுல என்னா சந்தோஷம்? அவனும் ஒண்ணும் அர்ச்சுனன் பீமன் இல்லை. இருந்தாலும் இவள மாதிரியே அவனுக்கு மூணுநாலு உண்டு. அவனுக்கு திருட்டு சோறு திங்கிறதுல ஒரு ருசி. அவனப் பாத்து நாலு பேரு அவனுக்கென்னடானு அங்கலாய்க்கிறதுல ஒரு பெரும. அவ்வளவுதான். காச வச்சு, கொண்டு செலுத்தறான்.

மொதல்ல சௌந்திரம்தான் ஆதிமூலத்துக்கு தெரிஞ்சிருக்கா. அப்புறம் தான் இவன் ராசாங்கத்துக்கு வேல போட்டுக் குடுத்திருக்கான். இதுல ரெண்டு மூணு சௌகரியம் இவங்களுக்கு, மொதல்ல வேல குடுத்த மொதலாளி விசுவாசம் இருக்கும். வேல இல்லேனு நாளு பூரா வீட்ல உக்காந்து இருக்க மாட்டான். ஏதாச்சும் வேலையா அடிக்கடி வெளியூர் அனுப்பிடலாம்.

ஆரம்பத்துல இவனுக்கு ரொம்ப சந்தோஷம் தான். ரொம்ப விசுவாசம். பின்னாடிதான் சந்தேகம் தட்ட ஆரம்பிச்சிருக்கு. தட்டி என்னா பிரயோஜனம்? முணுக்குங்கறதுக்கு முன்னாடி, அய்யோ பாவீ, நெருப்ப மூட்டி தீக்குளிச்சு காட்டறேம்ப்பா இவ. இல்லாட்டி ஊரைக்கூட்டி நாயம் கேட்டுடலாம் கதவத் தொறனு சொல்லுவா. கண்ணுல தண்ணி கட்டி நிற்கும்.

இல்லாமயும் இது என்னா தண்ணிவாய்க்கா பிரச்சனையா ஒடனே சத்தம் போட்டுட. இதையெல்லாம் அவன் கம்முன அடித்தொண்டையிலதான் கண்டிக்க முடியும். நாளக்கி அவதான் கெட்டவள்ன்னு ஆயிட்டாலும் இன்னார் பொஞ்சாதினு இவனுக்கும் தான் அவமானம்? சம்பந்தப்பட்டவன், மொதலாளி வேற. வேல போறது இருக்கட்டும். எப்படிடா என்ன அப்பிடி சொல்லப் போச்சுனு குதிச்சான்னா என்னா பதில் சொல்றது?

இவங்களால என் நிம்மதி அழிஞ்சது.

ராசாங்கம் கம்பெனி விஷயமா வெளியூரு போயிருப்பான். ராத்திரி பதினோரு மணிக்குமேல ஆதிமூலம் காருமில்லாம ஸ்கூட்டருமில்லாம ரோட்லே மெல்ல நடந்து வருவான். ராசாங்கம் இல்லாதப்ப ராத்திரி காவலுக்கு வர்ர கந்தசாமி மொதலாளிய தூரத்துல பாத்ததுமே வழிய விட்டு ஒதுங்கிப் போயிடுவான். காத்துக்கிட்டு இருக்க இவ, கதவுதெறந்துச்சோ மடைதெறந்துச்சோனு அவன் மேல விழுவா. இந்த நாடகம் அவன் கண்ணு மூடுற வரைக்கும். அவங்க படுக்கையில விழுந்ததும் நான் முள்ளுல விழுவேன். இது ராசாங்கம் இல்லாத நாளையில. இருக்குற நாளையிலயோ, புருஷன் பொஞ்சாதி சண்டையில் எனக்கு வேத்துப் புழுங்கும்.

"நேத்து அவன் இங்க வந்தானா? - இப்பிடி ராசாங்கம் கேப்பான். இதுக்கு "எவென்?" இவ திருப்பிக் கேப்பா.

"எவென்? மொதலாளிதான்" ராசாங்கம் அவகிட்ட தனியாப் பேசுறப்ப எல்லாம் மொதலாளிய அவன் இவன்னு தான் பேசுவான். அவன் மொதலளிய நேர்ல பாக்குறப்ப எந்திரிச்சு அடக்கமா நிக்கறதயும் தூரத்துல பாக்குறப்பவே வேஷ்டி மடிப்ப அவுத்து விட்டுக்கறதயும், சொல்ற பேச்சுக்கெல்லாம் காதக் குடுத்து ஆமா போடுறதயும் பாக்குறவங்க இவன் ஆளக்காணாட்டி இப்பிடிப் பேசுறவனு சொன்னா நம்பாம அடிக்க வந்தாலும் வந்துருவாங்க.

புருஷன் கேள்வியக் கேட்டுட்டு பொஞ்சாதி சீறுவா. "இன்னும் ஒரு தடவ இப்பிடிக் கேட்டா நாளைக்கி நேரா மொதலாளிகிட்ட வந்தே சொல்லிடுவேன்!"

"ஏன் அங்க வந்து சொல்றே? சும்மா அவன் நாளைக்கி இங்கே வர்ரப்பவே சொல்லேன். நான் நாளைக்கும் வெளியூரு போறேன். அவன் போகச் சொல்லியிருக்கான்."

அவ திடீர்னு பத்தினி போர்வைய எடுத்துப் போத்திக்குவா. "நீங்க அக்கா தங்கச்சிக்கூட பொறந்த மாதிரியே தெரியலே"ம்பா. அவன் தெகச்சுடுவான். அவனுக்கு இந்த வாத சாஸ்திரம் எல்லாம் வராது. பேசாம இருந்துட்டு, இவளக்கொன்னு போட்டா என்னான்னு நெனப்பான்.

தம்பி! ஒரு நாளு அவன் அப்பிடியே செஞ்சுட்டான்னு சொன்னா ஒனக்கு தெகப்பா இருக்குமில்ல. அவன் அவள மட்டுமில்ல. ஆதிமூலத்தையும் கொன்னான். கண்ட துண்டமா வெட்டினான். வெட்டி கையக் கால மூல மூலக்கி வீசி எறிஞ்சான். அவ்வளவு வெறி அவனுக்கு. ஆனா இதெல்லாம் நெஜத்துலேனு நெனச்சுடாதே. ஒரு நாளு அவனுக்குக் கடுங்காச்ச வந்துட்டப்ப, காச்சல் கனாவுலதான் அப்படி செஞ்சான். ஜொர மயக்கத்துல அவன் மூளைக்குள்ள என்னென்னமோ வருது. அதுலதான் அவன சரியான மனுஷனா நடந்துக்கிட்டான். மானேஜர் வேலைய ஆதிமூலம் மொகத்துலேயே எறிஞ்சான். அவன் காச எட்டி ஒதச்சான்.

ஆனா, பரிதாபம் என்னானா, காச்ச கொறைய கொறைய அவன் ரோஷமும் கொறஞ்சுக்கிட்டே வந்தது தான். கனாவுல அவன் வரட்டும் எட்டி ஒதைக்கிறேன். பாருன்னு சத்தம் போட்டவன், பாதி கொணமாயி படுத்திருக்கப்ப, அவன் வர்றானு தெரியிறப்பவே, வந்ததும் புன்னகை செய்யலாமா, இல்ல கண்ண மூடிக்கலாமான்னு யோசிக்கிறான். அப்பிடியே கண்ண மூடிக்கவும் செய்யிறான்.

ஆனா அவன் தர்மபத்தினி உடுவாளா? மெல்லக் குனிஞ்சு காதோட, அன்பா "என்னங்க, மொதலாளி வந்திருக்காருங்க"னு சொல்றா. ஒரு தடவ, ரெண்டு தடவ, மூணு தடவ சொல்றா. சரி, இவ முப்பது தடவ சொன்னாலும் எழுப்பாம விட மாட்டாள்னு இவன் கண்ணத் தொறக்குறான். தொறந்ததும் மொதலாளியைப் பார்த்து புன்னகை செய்யிறது மட்டுமில்ல மரியாதைக்காக எந்திரிக்கிற மாதிரியும் அசையறான்.

"பரவாயில்ல பரவாயில்ல.... படுத்திரு. இப்ப நல்லா இருக்குல்ல?"

"ம்"

"ஒடம்பப் பாத்துக்க, டாக்டர் சொன்னதும் வேலக்கி வந்தா போதும்."

அவங்க நெலப்படிய தாண்டுனதும் இவன் கற்பன செய்யிறான். அவங்க அடுத்த ரூம்ல.... இவன் அடி வயித்துல இருந்து நெஞ்சுக் கூட்ட ஒடச்சுக்கிட்டு ஒரு சத்தம், டே....ய்! அது என்னமோ பொறப்பட்ட எடத்துலேயே நின்னுப் போச்சு.

பூரணமா கொணமான பின்னால் அவனப் பாத்துக்குறானாம்.

ஆனா கொணமாயிதான் என்னா கிழிச்சான்?

ஒரு நாளு வராண்டாவுல சேர் போட்டு உட்கார்ந்திருக்கான். காய்ச்ச சரியாயிட்டாலும் இன்னும் ஒடம்பு பலவீனமா இருக்கு. இன்னும் வேலைக்கி போக ஆரம்பிக்கல. அப்ப ஆதிமுலம் வர்ரான். அவன் வந்ததும் இந்த நோயாளி எந்திரிச்சி அவனுக்கு நாற்காலிய தந்துட்டு நிக்கிறான், எப்பிடி? அவன் கேக்கிறான் "சௌந்திரம் எங்கே?"

இவன் இப்பிடி எடுத்த எடுப்புல பகிரங்கமாகவே கேட்டுட்டதனாலயும் ஒடம்பு பலவீனத்தனாலயும் இவனுக்கு ரெண்டு சொட்டு ரோஷம் கூடவே வந்துடுச்சு.

இவன் அவன அங்கேயே உட்கார வச்சுட்டு உள்ள வந்து பெஞ்சாதிகிட்ட "அவன் வந்திருக்கான். ஒரு கப்பு காப்பியக் குடுத்து ஒடனே அனுப்பி வையி, ஏழுமணி நேரம் பல்லக் காட்டிக்கிட்டு நிக்காதே, ஆமா"னு சொன்னான்.

"நின்னா?"

"மரியாத கெட்டுப் போயிடும்."

"பாப்பம்."

அவன் படார்னு அவள ஓங்கி அறஞ்சான். அறஞ்சுட்டு "நான் துணிஞ்சுட்டேன்னான்."

அவ தெகச்சுப் போயிட்டா. இத எதிர்பாக்கல, மெரட்டி மீன் பிடிச்சுக்கிட்டிருந்தவளுக்கு இப்ப என்னவோ நடந்துட்டதுன்னு தெரிஞ்சு போச்சு. மொகம் மாறிப் போச்சு. அவ காப்பி எடுத்துக்கிட்டு வேகமா இவன் இருக்க எடத்துக்கு வந்தா.

இவ மொகம் சுண்டிப் போயிருக்கறதப் பாத்த ஆதிமூலம் விசாரிச்சான்.

"அடிக்கிறான்"

"ஏன்?"

"ஒங்கக்கூட பேசக் கூடாதாம். காப்பிய குடுத்துட்டு ஒடனே அனுப்பிடனுமாம். ஏழுமணி நேரம் பல்லக்காட்டிக்கிட்டு நிக்கக் கூடாதாம். அவனுக்கு சந்தேகமா இருக்காம்." இத சொல்றப்ப அவ கொரல்லதான் என்னா சத்தியம்! என்னமோ நெஜம் போலயே புருஷன் ஒரு அபாண்டத்தப் போட்டுட்ட மாதிரி, அவ சொன்னதைக் கேட்டு இவன் ஆதிமூலம் புருவத்தத் தூக்கிட்டுச் சொல்றான். "அட நன்றி கெட்ட பயலே." எப்படியிருக்கு?" இவன் இவனோட வப்பாட்டிக்கி வீடு கட்டிக் கொடுப்பானாம். இதுக்காவ அவளோட புருஷன் இவனுக்கு விசுவாசமா இருக்கணுமாம்.

கொஞ்ச நேரம் சும்மா இருந்துட்டு, ஆதிமூலம் "அப்புறம்னு" கேட்டான். அதுக்கு இவ பதில் சொல்றா, "அப்புறம் என்னா? நான் முடிவு பண்ணிட்டேன், இருந்தா ஒழுங்கா இரு. இல்லேனா வெட்டிக்கிட்டு போயிடுனு சொல்லிற வேண்டியதுதான்..." எப்படியிருக்கு தம்பி! இருந்தா அவன் ஒழுங்கா இருக்கணுமாம்.

அன்னிக்கே, அப்பவே நடந்த மீதிக் கதையையும் கேளு. ராசாங்கம் ஏதோ கோபத்துல வந்த தைரியத்துல அவள அறஞ்சுட்டானே தவிர அவ போனதும் அவனுக்குப் பயம் வந்துடுச்சு. மேக்கொண்டும் என்னா செய்றதுனு புரியல. அவ அவங்கிட்ட சொல்லியிருப்பாளோ? சொல்லியிருந்தா அவன் என்னா கேப்பான்? என்னா பதில் சொல்றது? எது எப்படியிருந்தாலும் தான் இப்ப அங்கப் போணும், ஒரு வேள அவ சொல்லாம இருந்து தான் போகாம இருந்துட்டா தானே வம்ப வெலக்கி வாங்குன மாதிரியாயிடும். கடைசியில சரி. ஆனது ஆவட்டும்னு அவன் நடந்தான். ஆனா இதுக்குள்ள அவன் மொகத்துல கோவக் குறி ஒண்ணும் மாறியிருக்கல. இருந்தாலும் என்ன துணுச்சலோ நடந்தான். நான் ஆச்சரியத்தோடயும் சந்தேகத் தோடயும் அவன் மொகத்தப் பாத்துக்கிட்டே இருக்கேன்; இப்பிடியே போனா இவனே மாட்டிக்குவானேன்னு, ஆனா பாரு தம்பி, ஒரு இருவதடிகூட நடந்திருக்க மாட்டான். மொகம் அப்பிடியே மாறிப்போச்சு. ஒண்ணுமே நடக்காத மாதிரி மாறிப்போச்சு. இங்க, இவங்கதான் என்னாங்கறே? இவன் வர்ர சத்தம் கேட்டதும் இதுக மொகமும் அப்பிடிதான் சாதாரணமா மாறிப் போச்சு.

கடைசியா ஆதிமூலம் எந்திரிச்சுகிட்டே பொதுவா "அப்ப நான் வாரேனு" சொன்னான். ரெண்டடி வச்சதும் ராசாங்கத்துக்கு பாத்து ஒடம்பு நல்லாயிருந்தா நாளைக்கி கோயில்பட்டி போயிட்டு வந்துடேன்னு சொன்னான் மானேஜர் ஒத்துக்கிட்டாரு.

சௌந்தரம் வாச வரைக்கும் வந்து வழியனுப்புனா. ராசாங்கம் கார் வரைக்கும் வந்து கதவ சாத்தி விட்டான். பாவம், பாவம். கார் போயி உள்ளே வந்ததும் இவன் மனசுல கேள்வி. எத்தினி நாளாக்கி இப்பிடியே?

ஒரு நாளு நாற்காலியில உக்காந்துகிட்டு ராசாங்கம் திட்டவட்டமா சொன்னான் "நாம அடுத்த மாசம் கிராமத்துக்குப் போகிறோம்."

"எந்தக் கிராமத்துக்கு?"

"எங்கக் கிராமத்துக்கு"

"எதுக்கு?"

"பொழைக்கத்தான்"

"அங்க என்னா வேல இருக்கு?"

"கல்லு ஒடக்கிறேன்! ஒனக்கென்னா? சோறு போட்டா சரிதானே?"

"ஏன் இங்க சோறு கெடைக்கலியா?"

"இந்த மானம் கெட்ட சோறு எனக்கு வேணாம்."

"நீங்க போங்க"

"நீ?"

"நான் வரல"

"ஏன்?"

"வரல?"

"அது உன் இஷ்டமில்ல. மரியாதியா என் பின்னால நடக்கணும். பொண்டாட்டி எவன் பின்னாலயோ விட்டுட்டு வந்துட்டானு நான் பேச்சு கேக்க முடியாது"

"வரலேனா?"

"ஒன்னையும் அவனையும் வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போனாலும் போவனே தவிர ஒன்னைய விட்டுட்டு நான் மட்டும் தனியா கிராமம் திரும்ப மாட்டேன்"

"நிச்சியமா!"

"சத்தியமா!"

அடுத்த தடவ ஆதிமூலம் வந்தப்ப "எனக்கு பயமா இருக்கு. செஞ்சுடுவான்னு தோணுதுனு அழுதா. இதக்கேட்டு ரொம்ப நேரம் பேசாம இருந்த ஆதிமூலம் கடைசியா "அப்ப நாம இவன தீத்துட்டா?"னு கேட்டான். இதக் கேட்ட இவ நெஞ்சுல கொஞ்சங்கூட ஈரமில்லாம சொல்றா, "ஆமா!"

அன்னியில இருந்து ரெண்டு கட்சியுமே இங்க ஜாக்கிரதையா வீட்ட சுத்தி வருதுங்க. எந்தக் கட்சி ஜெயிக்கப் போவுதோ தெரியல.

ஆ, அந்தா சினிமாவுக்குப் போனவங்க திரும்பிவர்றாங்களே! ஆதிமூலம் தான் கார ஓட்டியார்றான். இவங்க பின் சீட்ல இருக்காங்க. கார் முன்னால வந்து நிக்கிறது. ஒரு நொடி தயங்கினாலும் ராசாங்கம் கதவத் தொறந்துகிட்டு ஓடி வர்ரான். ஓடி வந்து மழையில நெனஞ்சுகிட்டே கம்பிக் கேட்ட தெறக்குறான்.

ஏ, நீயென்னா பல்லக் காட்டுற? நீயும் அந்த ஜாதி தானா? எங்க நகந்து முன்னால வர்ர? உள்ள, எடம் கேக்க நெனைக்கிறியா? அடப்பாவி, அவங்க யாராயிருந்தாலும், யார் எப்பிடிப் போனாலும் ஒனக்கு வேண்டியது தல நெனையாம இருக்க ஒரு எடம்தானா? அட மனுஷா!

நன்றி: ஜெயந்தன் கதைகள்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link