சிறுகதைகள்


விளையாட்டு வினையாயிற்று

கூடல்.காம்
புது தில்லியில் "பாம்பாஷ்" என்ற படாடோபமான பெயர் கொண்ட நவ நாகரிகக் காலனி அது. தெருவை அடைத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்கும் கார்களும், வீட்டு ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர்கண்டிஷனர்களும், பொருளாதாரத்தின் மேல் மட்டத்தில் உள்ளோர் குடியிருக்கும் காலனி அது என்பதைப் பறைசாற்றின.

காலை மணி எட்டு. கடும் கோடைக் காலம் அது. எம் பிளாக், எட்டாம் நம்பர் வீட்டில் குடியிருக்கும் கல்லூரி மாணவன் குமார், அப்பொழுதுதான் படுக்கையை விட்டு எழுந்திருந்து, பேப்பரும் கையுமாகச் சோம்பல் முறித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தான். அந்தக் கோடையிலும் அவனால் குளிர் சாதனத்தின் உதவி கொண்டு எட்டு மணி வரையில் உறங்க முடிந்தது. அவனுடைய இப்பொழுதைய பிரச்னை இன்றையப் பொழுதை எப்படிக் கழிப்பது என்பதுதான்.

"ஹாய்! குமார்!" என்று ஆர்ப்பாட்டமாகக் கூவியவாறு உள்ளே நுழைந்தான், குமாரின் கல்லூரித் தோழன் விநோத்.

இருவரும் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தங்களுடைய வழக்கமான அரட்டைக் கச்சேரியைத் தொடங்கினார்கள்.

"ஏதாவது அட்வென்சரஸாக நாம் இதுவரை செய்யாத காரியம் ஏதாவது செய்ய வேண்டும். யோசனை பண்ணுவோம!" என்று சொல்லிவிட்டுக் குமார் கையில் வைத்திருந்த செய்தித்தாளை மேலெழுந்தவாரியாக நோட்டம் விட்டான். திடீரென்று துள்ளிக் குதித்தான்.

"ஃபென்டாஸ்டிக் ஐடியா! சொல்றேன் கேள், இப்பொழுது பேப்பரில் அடிக்கடி வரும் செய்தி என்ன? இதோ பார். இன்றைய பேப்பரில் கூட வந்திருக்கே - ஸ்கூட்டரில் வந்து அதிக ஜனநடமாட்டம் இல்லாத தெருக்களில் நடந்து போய்க் கொண்டிருக்கும் பெண்களின் கழுத்துச் சங்கிலியைத் திருடுவது, "செயின் ஸ்நேட்சர்ஸ்." நாமும் இந்தத் திருட்டைச் செய்து பாத்தால் எப்படி இருக்கும்?" என்று உற்சாகமாகக் கேட்டான் குமார்.

"உனக்கு ஏண்டா இந்த திருட்டுப் புத்தி? உங்கப்பா உனக்குக் கொடுக்காத பாக்கெட் மணியா?"

"போடா, மடையா! பணத்துக்காகவா திருடப் போறோம. ஜஸ்ட் ஃபார் த்ரில். ஒரு அட்வென்சர்! அவ்வளவுதான்."

"வேண்டாம். மாட்டிக் கொண்டால் கம்பி எண்ண வேண்டி வரும். மானம் போய்விடும்!" என்று பயந்தான் விநோத்.

"சரியான தொடை நடுங்கியாக இருக்கிறாயே! பேசாமல் புடவையை எடுத்துச் சுற்றிக்கொள்" என்று குமார் ஒரேயடியாகக் கிண்டல் பண்ண ஆரம்பிக்கவே, விநோத் வேறு வழியின்றித் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தான்.

மறுநாளே தாங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றிவிடலாம் என்று முடிவெடுத்தார்கள். அன்றைய பொழுதை அதற்கான திட்டம் வகுப்பதிலேயே செலவிட்டார்கள். இத்தகைய வேலைக்கு உகந்த நேரம் அதிகாலைதான் என்று தீர்மானம் செய்தார்கள்.

அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டு எழுந்தார்கள். காலை விமானத்தில் ஊருக்குப் போகும் நண்பன் ஒருவனை வழியனுப்பப் போவதாக வீட்டில் புளுகிவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

அந்த அதிகாலை வேளையில் அதிக ஜன நடமாட்டம் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பணக் கொழுப்பினால் உடல் பருத்த சிலர் "வாக்" போய்க்கொண்டிருந்தார்கள். அந்தக் காலனியின் கடைசியில் இருக்கும் ஆர் பிளாக் வழியாக ஸ்கூட்டரை மெல்லச் செலுத்திக் கொண்டு போனார்கள். சாதாரணமாகப் பகல் நேரத்திலேயே அதிக ஜன நடமாட்டம் இல்லாத தெரு, அந்த அதிகாலை வேளையில் ஈ, காக்கை கூட இல்லை.

திடீரென்று நான்காவது வீட்டுப் பின் கதவைத் திறந்து கொண்டு, கையில் பால் தூக்குடன் ஒரு பெண்மணி கேட்டைத் திறந்துகொண்டு தெருவுக்கு வந்தாள். மணி சுமார் ஐந்து இருக்கும். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவள் கழுத்தில் மின்னிய தங்கச் சங்கிலியைக் கவனித்து விட்டார்கள் குமாரும், விநோத்தும்.

மெதுவாக ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு போய் அவள் அருகில் நிறுத்தினான் விநோத்.

பின் சீட்டில் உட்கார்ந்திருந்த குமார் "எச் பிளாக் எங்கே இருக்கிறது தெரியுமா?" என்று தந்திரமாகக் கேட்டுக் கொண்டு அவள் அருகில் சென்றான்.

விநோத் ஸ்கூட்டரின் இஞ்சினை அணைக்காமல் காத்திருந்தான் சடாரென்று குமார் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காண்பித்து, "கூச்சல் போட்டால் குத்திடுவேன். மரியாதையாகச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிடு" என்று முரட்டுக் குரலில் மிரட்டினான்.

தாங்கள் நினைத்த வேலை இவ்வளவு எளிதில் முடிந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்பெண்மணி உயிருக்குப் பயந்து, மறுபேச்சின்றி நடுங்கும் கரங்களினால் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் சிட்டெனப் பறந்துவிட்டது. ஸ்கூட்டரின் பின் விளக்கு எரியாததால் அப்பெண்மணி ஸ்கூட்டரின் எண்ணைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

குமாரும் விநோத்தும் அன்று முழுவதும் ஆகாசத்தில் தான் பறந்து கொண்டிருந்தார்கள், தங்கள் வீர தீரச் சாதனையை நினைத்து! அவர்களுடைய ஒரே குறை தாங்கள் செய்த காரியத்தை நாலு பேரிடம் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்ள முடியவில்லையே என்பதுதான்.

மறுநாள் செய்தித் தாள்களில் எங்கோ ஒரு மூலையில், "செயின் ஸ்நேட்சர்ஸ்" என்ற தலைப்பில், நான்கு வரிகளில், ஒரு மாமூல் செய்தியாக இத்திருட்டைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றபடி போலீஸையோ பொதுமக்களையோ இந்நிகழ்ச்சி அதிகம் பாதித்ததாகத் தெரியவில்லை.

இந்நிகழ்ச்சி நடந்து சுமார் ஒரு மாதம் ஆகியிருக்கும். கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. குமாரும் விநோத்தும் புது மாணவர்களை ராகிங் செய்வதில் பொழுதை உல்லாசமாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ராகிங் உற்சாகத்திலும் பரபரப்பிலும் தாங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு செய்த திருட்டைப் பற்றி மறந்து கூடப் போய்விட்டார்கள் என்று சொல்லலாம்.

அன்று ஞாயிற்றுக் கிழமை காலை நேரம். கல்லூரிக்குப் புறப்பட வேண்டிய அவசரம் இல்லாததால், சோம்பல் முறித்துக்கொண்டு பேப்பரும் கையுமாக உட்கார்ந்திருந்தான் குமார். உள்ளூர்ச் செய்திகள் பிரசுரமாகும் பக்கத்தில் "வரதட்சணைக் கொடுமையினால் மற்றொரு பெண் தீக்கிரையானாள்" என்ற தலைப்பில் ஒரு செய்தியும், இறந்துபோன அப்பெண்ணின் படமும் வெளிவந்திருந்தன.

அப்பெண்மணியைத் தான் எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று தோன்றியது குமாருக்கு. ஆனால் சட்டென்று நினைவு வரவில்லை. சிறிது நேரம் மூளையைக் குழப்பிக்கொண்ட பிறகு ஞாபகம் வந்து விட்டது. ஒரு மாதத்துக்கு முன்பு அதிகாலை வேளையில் ஒரு பெண்ணை மிரட்டிச் சங்கிலியை அபகரித்தோமே, அவளேதான் இப்பெண்மணி என்று புரிவதற்கு அதிக நேரமாகவில்லை. ஒருவித ஆவலினால் உந்தப்பட்டவனாக குமார் அச்செய்தியைப் படிக்க ஆரம்பித்தான்.

"பாம்பாஷ்" காலனியில் ஸர்வென்ட்ஸ் குவார்ட்டர்ஸ் ஒன்றில் குடியிருக்கும் டிரைவர் சதீஷின் பெண் நிர்மலை, அவள் மாமியாரும், நாத்தனார்களும் சதித்திட்டமிட்டு அவள் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது அவள் மீது மண்ணெண்ணெயைக் கொட்டி, தீக்கு இரையாக்கி விட்டார்கள்.

"நிர்மலின் புக்ககத்தார், அவள் ஒவ்வொரு முறை பிறந்த வீட்டுக்குப் போய்விட்டு வரும்பொழுதும், சைக்கிள், தையல் மிஷின், பீரோ என்று சீர் கொண்டு வர வேண்டும் என்று துன்புறுத்துவார்களாம். இம்முறை பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய நிர்மல், கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி திருட்டுப் போய்விட்டது என்று சொன்னதை நம்பவில்லையாம் அவர்கள். மேற்கொண்டு சீர் கொண்டு வராமல், இருந்த சங்கிலியையும் பிறந்த வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டாள் என்ற ஆத்திரத்தில் இந்தக் கொடூரமான செயலில் இறங்கி விட்டார்கள்.

"அக்கம் பக்கத்தில் உள்ளோரின் உதவியினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிர்மல், இறப்பதற்கு முன்பு கொடுத்த வாக்குமூலத்தில் இவ்விவரங்களைக் கூறனாள்."

செய்தியைப் படித்து முடித்த குமாருக்கு தலை சுற்றியது. திரில், அட்வென்சர் என்று நினைத்துத் தான் செய்த காரியம் ஓர் அப்பாவியின் உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்குக் காரணமாக இருந்துவிட்டது என்று நினைக்கையில் துக்கம் தாளவில்லை. வாழ்நாள் முழுவதும் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்குமே, தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு ஏது என்று எண்ணி எண்ணி மறுகினான் குமார்.

நன்றி: பார்வையை மீட்க...

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link