சிறுகதைகள்


யானையின் காலடியில்

கூடல்.காம்
கண்டி பெரிய ஆஸ்பத்திரியின் பிரேத அறையில் கிடந்த பதினான்கு பிரேதங்களையும் பார்ப்பதற்காகக் "கியூ" வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன்.

அவளை, என் ஆசை மனைவியை நான் இரவெல்லாம் தேடிவிட்டேன். கண்டியின் அழகுக் குளத்தில் அவள் பூவுடல் நீந்துகிறதா என்று பார்த்து விட்டேன். ஆஸ்பத்திரி வார்டுகளிலும் தேடி ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து என் கால்கள் நடுங்குகின்றன. நான் அவளைக் காணக் கூடிய கடைசி இடம் இது. நான் இங்கேதான் அவளைக் காண்பேனா?

பதினான்கு பிரேதங்களில் இன்னும் ஒன்றையேனும் யார் என்று கண்டு பிடிக்கவில்லை. என்னுடன் "க்யூ"வில் நிற்கும் நடைப் பிணங்கள் தான் "இது என் அருமை அப்பா... இது தான் எனக்குப் பாலூட்டிக் கொஞ்சிய இன்ப முகம்... இது என் செல்லக் குழந்தை..." என்று கண்டு பிடித்துப் போலீசாருக்கும் பத்திரிகைக்காருக்கும் தகவல் தர வேண்டும். அது போல் நானும் "இவள் தான் என்னை நம்பி வந்தவள் - என் இதய ராணி! ஐயோ! என் பார்வதி!" என்று அலறி அவர்களுக்கு அவளை அறிமுகப்படுத்த வேண்டுமா?

பிரேத அறையின் வாசலை நான் அடைய இன்னும் அரை மணி நேரமாகும். வரிசையில் எனக்கு முன் நூற்றுக்கணக்கானோர் - ஆண்கள், பெண்கள், பாட்டன்கள், பிள்ளைகள் - கண்ணீரும் கம்பலையுமாக நின்றனர்.

அன்று நான் அந்தியில் வந்து உடுப்பைக் கழற்றியதும் கையில் காப்பியுடன் வந்த பார்வதி, "அத்தான், இன்று கண்டியில் பெரிய பெரஹராவாமே. போவோமா?" என்று கேட்டாள். பார்வதி ஒரு போதும் வெளியே போக விரும்பாதவள், பேராதனையின் பூங்காவிற்கு நான் உலாவப் போகும்போது, மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டால், அவசர அவசரமாகச் சேலையைச் சுற்றிக் கொண்டு வருவாள்.

"ராமாயணக் கதை படமாக வந்திருக்கிறது. பார்க்கப் போவோமா?" என்று கேட்டால், "என்ன அத்தான், தெரிந்த கதைதானே, ஏன் வீண் காசு செலவு?" என்பாள். இப்படி ஏதாவது சொல்லி, பூஜை அறையிலும் சமையல் அறையிலும் மாறி மாறிக் கிடப்பாள். இப்போ பெரஹரா பார்க்கப் போகிறாளாம்! என்னைச் சோதிக்கத்தான் கேட்டாளோ? நான் வரும்போது இரு கைகளிலும் புத்தகங்களைக் கொண்டு வந்ததைப் பார்த்துவிட்டாள், அதனால், எனக்கு வேலை இருக்கிறதென்பது அவளுக்குத் தெரியும்.

எவ்வளவு வேலை இருந்தாலும் முதன் முதலாக அவள் ஆசைப்பட்டுக் கேட்கும்போது தட்ட முடியுமா? என்றாலும், வேண்டுமென்றே, "நமது திருவிழா என்றால் போகத்தான் வேண்டும். புத்த விழாவிற்கு நாம் ஏன் போகவேண்டும்?" என்று கேட்டேன்.

"புத்த மகான் ஒரு குறிப்பிட்ட மதத்தாருக்குத்தான் சொந்தமா அத்தான்?" என்றாள் பார்வதி. "ஒரு வருடத்திற்கு முன் அவர்கள் எம்மைத் தெருத் தெருவாக அடித்து, மிதித்துக் கொல்லவில்லையா? அவர்களின் கொண்டாட்டம் ஏன் நமக்கு?"

என்று நான் ஏதோ வாயில் வந்ததைச் சொன்னேன்.

"அத்தான், என்னைப் பெரஹாராவுக்கு அழைத்துப் போக உங்களுக்கு இஷ்டமில்லையானால் சொல்லுங்கள் யாரோ சில மூடரின் செய்கைகளுக்கு ஏன் வீணிலே ஒரு சமூகத்தின் மேல் பழி சுமத்துகிறீர்கள்?" என்றாள் பார்வதி.

ஆம். அவள் அதிகம் படிக்காவிட்டாலும் நல்ல அறிவுடையவள்.

"யாராவது தீங்கு செய்திருந்தால் கடவுளே அவர்களைத் தண்டிப்பார்." பார்வதி மீண்டும் சொன்னாள்.

"ஆமாம், ஆமாம்! உன்னுடைய வெள்ளிப் பிள்ளையார், தும்பிக்கையால் அவர்களை எல்லாம் அடித்துவிடுவார்!" என்று நான் சொல்லிச் சிரித்தேன்.

பாருவின் கண்கள் கலங்கின. நான் யாரைப் பற்றிக் குறை சொன்னாலும் அவள் பொறுத்துக் கொள்வாள். அவள் பூசிக்கும் வெள்ளிப் பிள்ளையாரைப் பற்றிக் குறை கேட்பதை மட்டும் அவள் காதுகள் தாங்கா. தன் தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த அந்தச் சின்ன வெள்ளிப் பிள்ளையாரைப் பூசை அறையில் வைத்து தினமும் மும்முறை பூப்போடுவது அவள் வழக்கம். "அத்தான், இந்தப் பிள்ளையாரின் கருணையாலேதான் நீங்கள் எனக்குக் கணவராக வாய்த்தீர்கள்," என்று அன்று ஒருநாள் அவள் என் தோள்களில் கைகளை ஊன்றி உச்சி மோந்த நிகழ்ச்சி என் ஞாபத்திற்கு வந்தது. சர்வகலாசாலையில் உளநூல் ஆராய்ச்சியாளராக இருந்த எனக்கு, என் பேச்சு அவள் உள்ளத்தைக் குத்தும் என்று ஏன் அப்போது உதிக்கவில்லை?

கண்களைத் துடைத்துக்கொண்டு பாரு சமயலறைக்குப் போய்விட்டாள்.

"எல்லம் வேடிக்கையாகத்தான் சொன்னேன் பாரு. அலங்காரம் செய்துகொண்டு அம்மனைப் போல் வா, பெரஹரா பார்க்கப் போகலாம்." என்று சமாதானம் செய்தேன்.

அரைமணி நேரத்தில் பாரு என் முன் நின்றாள். தலையில் பூவும், நெற்றியில் குங்குமமும், முகத்தில் செவ்விதழ்களும் சிவக்க, வெள்ளை நிறச் சோளிச் சட்டையும் குருத்துப் பச்சைச் சேலையும் அணிந்து - வர்ண ஜாலங்கள் தங்களிடையே போட்டி போட - அவள் மிக அழகாக இருந்தாள். ஒரு வருடத்திற்கு முன் கல்யாணப் பந்தலில் கூட என் பார்வதி மேல் அழகு இவ்வளவு நளினமாக இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

புத்த மகானின் புனிதப் பல் திருவிழாவைப் பார்க்கப் பல்லாயிரம் கண்கள் கண்டி வீதிகளிலே காத்துக்கிடந்தன. நானும் பார்வதியும் ஒரு நல்ல இடமாகப் பார்த்து நின்றோம். எனது வலது கையின் விரல்களும் அவளின் இடது கை விரல்களும் கோத்திருந்தன. மின்சார விளக்குகள், கொடிகள், கண்டியின் நடனக்காரர் என ஊர்வல வருகை தெரிந்தது. ஒரு சிறு மலைக்கூட்டம் இடம் மாறுவதுபோல் அறுபது எழுபது யானைகள் ஆடி அசைந்து வந்தன. தீப்பந்தம் பிடிப்பவர்கள் பந்தங்களைச் சுற்றியவாறு வந்து கொண்டிருந்தனர். தீக்குழம்புகள் அங்குமிங்கும் நாலாபக்கமும் சிதறின. எங்கும் சந்தோஷம் - ஆரவாரம் - "சாது! சாது! புதுப் பெரஹரா!" என்ற கோஷம்.

ஒரு நிமிடம் -

ஒரு தரம் கை கூப்பி, கும்பிடும் நேரம்.

மலைக்கூட்டத்தில் ஒரு மலை சரிந்தது. புரண்டது. வெறிபிடித்து ஓடியது.

ஆம், ராஜா என்ற பெயருடைய ஊர்வல யானை ஒன்று குதித்தது, மிதித்தது. கருப்பங் காட்டிலே கரும்புக் கழிகளை வீழ்த்துவது போல் மனித குழாத்தைச் சாய்த்தது!

"ஐயோ! அலியா ! அம்மே ! புத்தா !"

ஊர்வலம் சிதறியது. எங்கும் கூக்குரலும் அழுகையும் கேட்டன. மூடியிருந்த தெருக் கடைகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர் சிலர். எங்கும் போக வழியில்லாது கண்டியின் குளத்தின் குதித்தனர் பலர், விழுந்து மிதிப்பட்டோர் ஏராளம். ஊர்வலம் வந்த வீதி போர்க்களம்போல் காட்சி தந்தது.

"ஐயோ ! தெய்யனே ! மல்லி ! அக்கா !"

"பார்வதி ! பார்வதி !" என்று நானும் சித்தப் பிரமை பிடித்தவன் போல் ஓடினேன். ஓடினேன். ஓடி இயலாத போது தள்ளாடி நடந்தேன்.

எங்கும் தேடி அலைந்த பின்புதான் பிரேத அறைக்குப் போகும் இந்தக் "கியூ" வரிசையில் இப்போது போய்க் கொண்டிருக்கிறேன். "கியூ" வரிசை பிரேத ஊர்வலம் போல் ஊர்ந்து போகிறது. என்னுடைய கலங்கிய மூளையிலே பலவிதமான காட்சிகள்.

பார்வதி என் அத்தை மகள். சிறு வயதிலேயே என்னுடன் வளர்ந்தவள். ஞாபகமிருக்கிறது. எனக்கு ஏழு வயதிருக்கும். அன்று நல்லூர் கந்தசுவாமி கோவில் பூங்காவனத் திருவிழா. நான், உடுத்திருந்த பட்டு வேட்டி காலடியில் சரசரக்க மிகச் சிரமத்தோடு பால்காவடி ஒன்றை ஏந்தி, தேர்போன வீதிகளிலே நடந்து சென்றேன். பக்கத்தில் என் மாமா பார்வதியைத் தூக்கி வந்தார். அவள் குனிந்து என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தாள். அறியாப் பருவத்திலே சிரித்த அவள் சின்ன முகம் இப்போதும் என் கண்களிலே விளையாடுவது ஏன்? அன்னியோன்னியமாயிருந்த எங்கள் இரு குடும்பங்கள் சிறியதொரு சச்சரவில் பிரிந்தன. பார்வதியுடன் நான் பேசக்கூடாது. பார்வதி என்னைப் பார்க்கக்கூடாது - இப்படி அப்பாவும் மாமாவும் சட்டங்களைப் போட்டு விட்டனர். ஆனால் எங்கள் இரு வீடுகளுக்கும் பொதுச் சொத்தாக இருந்த கிணற்றடியிலே நான் பல் விளக்கி முகம் கழுவும் போது பார்வதி குடமேந்தி நெளிந்து நிற்பாள்.

வருடங்கள் எங்களை வளர்த்தன. பார்வதி தாவணி போட வேண்டி வந்து விட்டது. நான் காலையிலே ஒரு வட்டமுகக் கண்ணாடியை கிணற்றடித் தென்னை மரத்தில் தொங்க வைத்து முகச் சவரம் செய்து கொள்வேன். பார்வதி குடமெடுத்து வந்து அதை மண்போட்டு மினுக்கி என் பிரதிபிம்பத்தை அதில் பார்த்து ரசிப்பாள். நான் என் சிறுகண்ணாடியில் என் முகத்துடன் அவள் உருவத்தைக் காண்பேன்.

ஐயோ ! இந்த நினைவெல்லாம் இப்போது வந்து ஏன் என்னைக் கொல்லுகின்றன?

பார்வதி, அடுத்த பிறவியிலேயும் நான் உன் கணவனாகும் பாக்கியம் பெற்றால், இப்போது இருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு உன் மேல் நேசமாக இருப்பேன். அன்று ஓர் இரா விருந்தில் நான் குடித்துவிட்டு வந்தேன். நீ ஏதோ சொல்ல நான் உறுமினேன். சொற்கள் ஞாபகமில்லை. உன் மாங்கனிக் கன்னத்திலே ஓங்கி அடித்தேனே! மன்னித்துக் கொள் இந்தப் பாவியை. நான் இனிக் குடிக்க மாட்டேன். சிகரெட்டை ஊதி ஊதிக் காசைப் புகைக்க மாட்டேன். "முன்னேற்றம், சீர்திருத்தம்" என்று உன் வெள்ளிப் பிள்ளையாரை நிந்தனை செய்யமாட்டேன்!

நான் பிரேத அறையை அடைந்தேன்.

"ஐயோ பார்வதி, நீயா இப்படித் தரையில் கிடக்கிறாய்!" முதலாவது பிணத்தைப் பார்த்ததுமே உளறிவிட்டேன். இல்லை... இல்லை... இது என் பார்வதி இல்லை. இது வேறு யாரோ ஒரு பெண்ணின் உடல். என் பார்வதி கூந்தலை அழகாகப் பின்னி, பின்னலைக் கொண்டையாக முடிந்திருப்பாள். அவள், குதிரைவால் போல் தலையை அலங்கோலம் செய்து கொள்பவளல்ல.

வேறு பிணங்களை பாதி மூடியும் மூடாமலும் கிடந்தன. நான் உயிர் பெற்ற பிணம்போல் பிரேத அறையின் மத்தியில் சுழன்று கொண்டிருந்தேன். அதோ! அவள் உடலும் தெரிகிறது. மூலையில் ஒரு பெண்ணின் உடல் முகம் மூடப்பட்டு கிடக்கிறது. அதைப் பார்த்தவர்கள் அனைவரும் ஏன் மிரள மிரள ஓடுகிறார்கள்? அந்த முகம் மிகவும் கோரமானதாக இருக்கவேண்டும். குங்கும நெற்றியும் முத்துப் பற்களும் போய்விட்டனவா? என்னை ஆண்ட விழிகள் மாண்டுவிட்டனவா? நான் கொஞ்சிய கன்னம்...! போர்வை இல்லாத இடங்களில் பச்சை நிறச் சேலைதான் தெரிகிறது!

மூலையில் கிடந்த பிரேதத்தின் முன் வந்து தள்ளாடினேன். பிரேதத்தின் போர்வையை அகற்றி நான் முகத்தைப் பார்க்கப் போன சமயத்தில்

"அத்தான்!"

திடுக்கிட்டேன். பார்வதியின் குரல் கேட்டது "அத்தான் ! அத்தான் !"

திரும்பிப் பார்த்தேன். "கியூ" வரிசையில் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்த பார்வதி ஓடி வந்து என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

எனக்குப் பேச்சே வரவில்லை.

"எங்கெல்லாம் அத்தான் உங்களைத் தேடுவது? கடைசியில் பிரேத அறையைப் பார்க்க இந்த போலீஸ் உத்தியோகஸ்தர் என்னை அழைத்து வந்தார்." என்றாள் பார்வதி.

போலீஸ் அதிகாரி என்னிடம் அனுதாபத்துடன் கூறினார். "உங்கள் மனைவி மூன்று தரம் மூர்ச்சை அடைந்து விழுந்துவிட்டார். பாவம். மிகச் சிரமப்பட்டு இங்கே அழைத்து வந்தோம்."

பார்வதியும் நானும் வீட்டை நோக்கிக் கண்டியின் வீதிகளிலே நடந்து சென்றோம். கனவல்ல. உண்மைதான்.

"பாரு, புது வாழ்வு பெற்றுவிட்டோம்." என்றேன்.

"எல்லாம் வெள்ளிப் பிள்ளையார் கருணையாலே," என்றாள் பார்வதி வழக்கம் போல.

நன்றி : தரிசனம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link