சிறுகதைகள்


காலங்கள் இராகங்கள்

கூடல்.காம்
நல்லூர் கோயில் வீதியில் உள்ள கம்பன் கழகத்தின் மேல் மாடி மண்டபத்தில் நடராஜ சர்மாவின் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அந்த மண்டபம் மக்கள் நெருங்கி தரையில் உட்கார்ந்தால் இருநூறு பேரைக் கொள்ளக்கூடியது. அந்தக் கட்டடமே அரைப் பரப்பு காணித் துண்டில் எழும்பியது தானே. கம்பன் புகழ்பாடியக் கன்னித் தமிழை வளர்க்க முன்வந்த சில யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு மாநகர சபையின் அன்பளிப்பு அந்த அரைப் பரப்புக் காணியும், தரை மட்டம் இடிபட்டு இருந்த ஒரு சிறு கட்டடத்தின் சீர் குலைந்த அந்தி வாரமும். இன்று கம்பன் கழகம் பெரும் புலவன் நூலுக்கு மட்டும் அல்ல, பல கலைகளுக்கும் கை கொடுக்கும் கலைக் கூடமாகப் பிரசித்தம். அதற்கேற்ற சுவர் அலங்காரம், கதவுகளில் சிற்ப வேலைகள், வெண்கலச் சிலைகள், நல்லூர் மணியத்தின் ஓவியங்கள்...

இரு ஒலிபெருக்கிகள் வெளியிலே எதிர் திசைகளில் கட்டப்பட்டு நடராஜ சர்மாவின் கம்பீரமான குரலைப் பரப்பிக் கொண்டிருந்தன. பெரும்பாலான ரசிகப் பெருமக்கள் வீதி ஓரங்களிலும் சூழலிலும் உள்ள வீடுகளின் வராந்தாக்களிலும், முற்றங்களிலும் இருந்து கேட்டுக் கொண்டிருந்தனர். நடராஜ சர்மா மனித உள்ளுணர்வுகளுடன் குலாவும் சங்கீத வித்துவான்களில் ஒருவர், பிரபல கர்நாடக சங்கீத ஆசிரியர், நூலாசிரியர், அத்துடன் ஒரு நல்ல மனிதன் என்று எல்லோரின் மகிழ்வுக்கும் உரியவர். கம்பன் கழகத்தில் நடைபெறும் கச்சேரிகளை மிகவும் ஒழுங்காக வந்து கேட்பவர்களில் ஒருவன் கிரகோரி. அவன் தெரு ஓரத்தில் சித்திராலயா ஸ்டூடியோவின் வாசல் முன்னால் ரசித்துக் கொண்டிருந்தான். வாயிலே பீடி.

"பேரன் எங்கே, கிரகோரி?" என்று கேட்டார் பக்கத்தில் ஒரு படியில் இருந்த சின்னத்துரை அண்ணன்.

"அவளை மேலே மண்டபத்தில விட்டுவிட்டு வந்தேன், ஐயா" என்று பதிலளித்தான் கிரகோரி, "என்னால அந்தப் புழுக்கத்தில இருக்க முடியாது"

"இங்கேதான் நல்லாய் கேட்குது" என்றார் சின்னத்துரை அண்ணன்; எந்த நிலைமைக்கும் நல்லெண்ணம் கற்பிக்கும் மனம் அவருக்கு.

கிரகோரிக்கு எழுபது வயது சொச்சம். பாட்டு என்றால் தனது தகப்பனின் ஞாபகம் இசைவாக வரும். தகப்பன் அந்தோனிக்கு கிட்டப்பா பைத்தியம். அந்தக் காலத்தில், தொளாயிரத்து முப்பதுகளில் யாழ்ப்பாண துரைராசா தகரக் கொட்டகையில் இந்திய நாடகக் கோஷ்டியின் நாடகங்களை பார்த்துவிட்டு அந்தோனி வீடு வரும் போது சாமமாகும். வீதி வழியே நாய்கள். நாய்கள் அந்தோனிக்கு இடைஞ்சல் இல்லை. அவன் தினமும் காலையில் தொழில் முறையில் எத்தனை நாய்களைச் சந்தித்திருக்கிறான். அவன் கையில ஒரு கம்பு எப்போதும் இருக்கும். கரையூர் சேரியில் தனது குடிசைக்கு வரும் வரை அவன் பாடிக்கொண்டே வருவான்.

"காயாத கானகத்தே... காயாத காணகத்தே... காயாத காயாத..." கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப்போல் அசைத்து "நின்றுலாவும் காரிகையே" என்று நீலும் போது கால்கட்டை தூரம் கால்கள் கடந்துவிடும். "மேயாத மான்... மேயாத மான்...." வீட்டுக் கதவைத் திறக்கும் போது "இப்ப என்ன நேரம்" என்று குடைவாள் மனைவி, பதில் சொல்லாமலே போய்ப்படுத்துவிடுவான். அவன் கூத்துக்காரிகளைப் பார்த்து ரசிக்கப் போவதாக அவள் எண்ணம்.

அந்தோணி காலையிலே நான்கு மணிக்கே எழுந்துவிட வேண்டும். நாடகங்கள் போடப்படும் நாட்களில் எழும்புவது ஆய்க்கினை. எலும்புகளே அயாசத்தில் தூங்கி முடங்கும். அவள் காப்பித் தண்ணி போட்டுக் கொடுக்க அதை ஊதி உறிஞ்சிவிட்டு, ஒரு கோடாச் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு நாலரை மணிக்கு யு.சி. (ஏர்பன் கவுன்சில்) வளவுக்குப் போய்த் தனது கக்கூஸ் வண்டியை எடுக்க வேண்டும். கிரகோரி 35 வருடங்களாக யாழ்ப்பாண யு.சி. எல்லைக்குள் எல்லா வட்டாரங்களிலுமே வேலை செய்திருக்கிறான். அது முழுமையாக எல்லா வீடுகளிலும் வாளிக் கக்கூசுகள் இருந்த காலம். "கக்கூஸ்காரன் வந்திட்டானா?" என்று கேட்டுத்தான் அதிகாலை நேரத்தை அனுமானித்து ஊரவர் கண் முழிப்பார்கள். வட்டாரத்திற்கு வட்டாரம், வீட்டுக்கு வீடு கக்கூஸ்களின் அமைப்பும், வாளிகளின் ஓட்டை உடைசலும் மாறுபடும். ஆனால் சேர்ந்த அழுக்கு ஒன்றுதான். அந்தோனி தொழில் பார்க்கும்போது பாடுவதில்லை. அந்நியில் முழுகிவிட்டு கள்ளுக் கொட்டிலுக்குள் போய் இருக்கும் போது பாடுவான், வீட்டிலும் இரவிலே சாக்குக் கட்டிலில் கால் மேல் கால போட்டுப் படுத்தவாறு பாடுவான்.

கிரகோரி தகப்பனுடன் கக்கூஸ் வண்டியைத் தள்ளிக் கொண்டு துணையாகப் போவது உண்டு. அந்தோணிக்கு உடம்புக்கு இயலாத நாட்களில் தனியாகவே வண்டி தள்ளித் தொழில் செய்திருக்கிறான். அந்தோணிக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டதும், கிரகோரி முழுநேர கக்கூஸ் தொழிலாளி ஆனான். மூன்று ஆண்டுகள்தான். அதன் பின்பு கண்காணியாக உயர்ந்துவிட்டான். கண்காணிகள் மலவாளிகள் தூக்குவதில்லை. மேற்பார்வை மட்டும்தான். இப்போது எல்லாம் அந்த அயலில் பாட்டுக் கேட்பதில்லை. வாதநோயில் அந்தோணியின் நாக்கு இழுபட்டு விட்டது. கிரகோரியோ பாட்டன் பரம ரசிகன், ஆனால் எவ்வளவோ முயன்றும் பாட வருவதில்லை.

அந்தோனி இறந்து போனான். காலம் அவனை மறந்து விட்டது. கிரகோரியின் காதுகளில் மட்டும் தகப்பனின் குரல் அந்தி வானத்தின் கலகலப்பில் கேட்கும். அவனுக்கு உள்மனத்தில் ஒரு வெற்றிடம். சிந்தனையில் சலனம். அவன் மகன் மரியாதாசன் பாடசாலை சென்று படித்தும், சொல்லிக் கொடுத்த பாட்டைக்கூட பாட இயலாதவனாக இருக்கிறான். தேவாலய குருமார் இல்லத்தில் அவனுக்கு பூந்தோட்டப் பராமரிப்பு வேலை, மலர்களோடு வாழ்ந்தும் எவ்வித ரசனை மணமும் இல்லாதவனாக இருக்கிறான், முண்டம். பீடி, சிகரெட் கூட அவனுக்கு ருசிக்கத் தெரியாது. அவன் சினிமா போவதில்லை. ஏதோ நல்லபையன் என்று குருமாரிடம் பெயர் வாங்குகிறான். அந்த அளவில் கிரகோரிக்கு ஆறுதல். மரியதாசனுக்கு மூன்று பெட்டைப் பிள்ளைகளுக்குப் பின் ஒரு பையன், சவேரி என்று பெயர். சவேரிக்கு மூன்று வயது இருக்கும். கடற் சிப்பிகளை வைத்து விளையாடும்போது முணு முணுத்தான். சேர்ந்து வாயில் மழலைகள். என்ன இனிமை... அது ஒரு ராகம்தான்.... ஆகா, அவனுடைய பேரன், அந்த அந்தோனியின் பூட்டன் பாடுகிறான்!

அவனுடைய கணிப்பு தப்பவில்லை. இப்போதெல்லாம் பேரன் சவேரி பாடசாலையிலிருந்து வந்ததும், அந்தியில் சாக்குக் கட்டிலில் கால்மேல் கால் போட்டு ஒரு சிறிய சினிமா பாடல் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துப் பாடுகிறான்: "முஸ்றபா .... முஸ்றபா, டோன்ட் வொரி முஸ்தபா..." இதுபோல் பாதிதான் விளங்குகிற சினிமாப் பாடல்கள். ஒரு சில பாடல்கள் கிரகோரியின் மனத்துக்கு பிடிமானம் ஆகவும் இருக்கத்தான் செய்கின்றன: "சின்னச் சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை..."

கிரகோரிக்கும் ஓர் ஆசை. தனது பேரன் நல்ல முறையில் சங்கீதம் கற்று ஒரு வித்துவான் ஆக வேண்டுமென்று. சங்கீதம் என்பது பழக்கம்தான், பயிற்சிதான். அதற்கு வசதி வேண்டும், ஊக்கம் வேண்டும், கிரகோரிக்கும் இப்போது சில பெயர்கள் பழக்கம் - ஹம்சத்வனி, வசந்தா, ரஞ்சனி. எங்கேயாவது கேட்கும்போது இளம் பிள்ளை ஒன்று வந்து கழுத்தை அரவணைப்பது போலிருக்கும். அவை சின்னத் துரை அண்ணன் அறிமுகப்படுத்திய இராக தேவதைகள்.

சின்னத்துரை அண்ணன் மணிபாகவதருக்கு (பின்னால் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்) கார் ஓட்டினவர், பாகவத சுவாமிகள் பக்திப் பரவசத்தில் கதாப்பிரசங்கம் நடத்தும்போது, மிக அன்மையில் ஒரு சிஷ்யனைப் போல் இருந்து ரசிப்பார். அதனால் இராகங்கள் சினேகிதம், இப்போது சின்னத்துரை அண்ணனும் பாட்டுக் கேட்பதற்கு மண்டபங்களுக்குள் நுழைவதில்லை. வெளியிலே முகத்திலே காற்றுத்தடவ, ஒலி பெருக்கி தரும் கனத்த பாட்டுக் கச்சேரிகள் உற்சாகமாக இருக்கின்றன. சின்னத்துரை அண்ணணைக் கண்டதும் கிரகோரி அங்கே போய் அண்மையில், மரியாதைக்கு கொஞ்சம் எட்ட இருப்பான்.

நடராஜ சர்மாவின் கச்சேரியில் ஒரு அலங்கார நேரம். சின்னத்துரை அண்ணன் கிரகோரிக்கு சொன்னார் - ராக மாலிகை.. ரஞ்சனி மிருது பங்கஜ லோசனி... கிரகோரிக்கு சொற்கள் விளங்கவில்லை. ராகமும் அப்படித்தான். ஆனால் மழை நேர வானவில் ஒன்று காதிற்குள் புகுந்தது போல் ஒரு மயக்கம். மேல் மண்டபத்தில் தனது பேரனும் இதே ஆனந்த நிலையில் இருப்பான் என்றும் ஒரு நினைப்பு.

கிரகோரி சின்னதுரை அண்ணணின் காதில் குசுகுசுத்தான். சின்னத்துரைக்கு 55 வயது. ஆனால் தம்பிரான் சுவாமி தொடக்கம் பள்ளிப் பிள்ளைகள் வரை சின்னத்துரை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள். அண்ணன், என்பது அவர்கள் அகராதியில், வேண்டிய வேளையில் உதவிக்கை கொடுப்பவன் என்பதுதான். அண்ணன் சொன்னார்: "கிரகோரி, கேட்டுப்பார். அந்த மனிசன் சம்மதிக்கும், நல்ல மனிசன்."

"என்னென்றும் ஐயா வாய்விட்டுக் கேட்கிறது?" சின்னதுரைக்கு கிரகோரியின் அச்சம் புரிந்தது. ஆனால் புரியாதது போல், "நீ அவர் வீட்டிற்குப் போய் கேள்" என்றார்; வீடு கொண்டலடி வைரவர் கோயில் ஒழுங்கையில், கிரகோரி மௌனமாக இருந்தான். காலத்தால் விறைத்த மௌனம் அது. கிரகேரியின் முகத்தைப் பார்த்து அண்ணன் சொன்னார்: "சரி நாளைக்கு வீட்டிற்கு வா. நான் நடராஜ சர்மா ஐயாவிடம் கூட்டிப் போறன். பேரனையும் கூட்டிக் கொண்டு வா."

நிறங்கள் புலராத விடியல் நேரம். கறுப்பு வெள்ளை டி.வி.யில் போல எங்கும் காட்சிகளின் கோலம். யாழ்ப்பாண நகரில் இப்போதெல்லாம் கக்கூஸ் வண்டிகளைக் காணமுடியாது. யூ.சியும் மாநகர சபையாக உயர்ந்து விட்டது. வாளிக் கக்கூசுகள் நீரடைப்பு மலகூடங்களாக மாறிவிட்டன. மனித உதவி தேவைப்படாமல், குடல் அழுக்கு தானாகவே குளாய் மூலம் அப்புறம் புதையும் நாகரிகம் வந்துவிட்டது. "கக்கூஸ்காரன் வந்து விட்டானா?" என்று வினவாமல் "கோவில் மணி கேட்டதா" என்று ஊர் மக்கள் கண் விழிப்பர். அந்தநேரம் நடராஜ சர்மா வீட்டில் பிள்ளைகள் சங்கீதம் பழக வந்துவிட்டார்கள். சிலரை சின்னத்துரை அண்ணன் இனங்கண்டு கொண்டு விட்டார். கல்லூரி அதிபர், கண்மருத்துவர், மின்சார பொறியாளர் இந்த ரகத்தின் மகன் மகள்மார். உன்னத இடத்துப் பிள்ளைகள்.

கிரகோரியும் பேரன் சவேரியும் நடராஜ சர்மாவின் வீட்டிற்கு வெளியே கேற்றோடு நின்றார்கள். சின்னத்துரை அண்ணன் மட்டும் பிள்ளைகள் பாடிக்கொண்டிருந்த ஹாலுக்கு சென்றார். அந்தப் பிள்ளைகளிலும் பார்க்க தனது பேரனால் பாடமுடியும் என்று கிரகோரியின் மனம் சொன்னது.

"ஆசிரியர் வரட்டாம்" என்று வந்து அழைத்தார் சின்னத்துரை. தோளில் இருந்த சால்வைத் துண்டை அரையில் சுற்றியவாறு ஹாலுக்குள் சென்று கிரகோரி நடராஜ சர்மா முன் தரையிலேயே உட்கார்ந்தான். சவேரி பக்கத்தில் நின்றான். அவர் பாடசாலை உடுப்பில் இருந்தான், வெள்ளைச் சேட்டும் நீலநிறக் களிசானும் அணிந்து. பிள்ளைகளுக்காக விரிக்கப்பட்ட புற்பாயில் அவனை அமரும்படி பணித்தார் ஆசிரியர். சின்னத்துரை அண்ணணும் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். கிரகோரி தன்னுடைய விசயத்தை கூறினான். ஏற்கனவே சின்னத்துரை அந்த வேண்டுகோளைத் தெரிவித்துவிட்டார்.. என்றாலும் கிரகோரி முன்னுரையாக தனது தகப்பனாரின் கால ஞாபகங்களை விவரிக்க நடராஜா பரமார்த்த குருவின் கதையை கேட்கும் ரசனையுடன் இருந்தார்.

நடராஜ சர்மா சவேரியை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார். சவேரி இதை எதிர்பார்த்தது போல் அவர் வாய் மூடுவதற்கு முன்பே பாடத்தொடங்கினான். "ஓடி விளையாடு பாப்பா.. நீ.."

"நல்லாய் இருக்கிறது" என்றார் ஆசிரியர்.

"யாருடைய பாட்டு?"

"மகாகவி பாரதியார்" என்றான் சவேரி

சந்தர்ப்பத்திற்கேற்ற ஒரு பாட்டை அறிந்தோ அறியாமலோ பையன் பாடியதையிட்டு சின்னத்துரை பூரித்தார்.

"இஞ்சாருங்கோ, இங்கே ஒரு நிமிசம் வாங்கோ" என்று ஒரு அவதியான குரல் சமையலறையில் இருந்து வந்தது.

"உங்களிடம் வந்திருப்பவர்கள் ஆர் என்று தெரியுமோ?"

"தம்பிரான் சுவாமியுடன் திரிந்த சின்னத்துரையை எனக்குத் தெரியாதே."

இந்தப் பதிலில் சமாளிப்பும் கேலியும் இருந்ததை உணர்ந்தா அம்மா.

அவரின் குரலில் கண்டிப்பு ஒலிக்க, நிதானமாகச் சொன்னார்.

"இஞ்சருங்கோ, அந்தப் பொடியனை நீங்கள் படிப்பிக்க ஏற்றுக்கொண்டால் மற்ற பிள்ளைகள் படிக்க இனி வரமாட்டினம் ஒரே சொல்லாக, நேரம் இல்லை என்று சொல்லி அனுப்புங்கோ"

"அந்தப் பையனுக்கு இயற்கையாகவே பாடும் கொடைய சரஸ்வதிக் கொடுத்திருக்கிறாள். இப்ப வாற பிள்ளைகளிலே இரண்டு பேரைத் தவிர மற்றதுகள் வெறும் பவிசுக்காக வந்து போகுதுகள்... அப்பாமாருக்கு மட்டும் லக்குமி கடாட்சம் உண்டு"

"அப்ப"

"அப்ப எனன, பையனுக்கு சொல்லிக் குடுப்பம்"

"கூத்தாடாதேயுங்கோ! என்றார் அம்மா. "மற்றச் சாதிகள் என்றாலும் ஒரு போக்கு. இதுகள் என்ன துணிவோடு வீட்டுக்குள்ளே நுழைய விட்டிங்கள். நான் பொறுத்துக் கொள்ளமாட்டன் போய் அனுப்பி விடுங்கோ"

நடராஜர் திரும்பிப் போகும் போது அம்மா சொன்னா: "சின்னத்துரையை நிற்கச் சொல்லுங்கோ. அவருக்கு நான் இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும். சேட்டைக்கும் ஒரு எல்லை இருக்கு"

நடராஜர் சர்மா பஞ்சாங்கத்த எடுத்து புரட்டியவாறு கிரகோரியைக் கேட்டார்:

"பையனுடைய பேர் என்ன?"

"சவேரி ஐயா"

"வர்ற வெள்ளிக் கழமை காலை ஏழு மணிக்கு பையனைக் கூட்டிவா"

கிரகோரிக்கு ஏனோ அந்த நேரம் தகப்பனின் ஞாபகம் வந்தது. இவன் எனது பேரன். அந்தோனியின் வாரிசு. மறுபிறப்பு. அந்தோனி... கிரகோரி... மரியதாசன்.. சவேரி.. பேரனின் தலையைத் தடவியவாறு கிரகோரி போனான். சின்னத்துரை அண்ணணும் சென்றுவிட்டார்.

அம்மா வந்தா. ஒரு பெட்டி வெங்காயம் உரித்துவிட்டு வந்தது போல் முகம் இருந்தது. முந்தானையால் மூக்கைத் துடைத்துக் கொண்டா.

"நல்லதைச் சொன்னால் கேட்க மாட்டியன். என்ன வேலை செய்திருக்கிறியள்" என்றா

நீ சொன்னது நல்லதல்ல; நல்லதுக்கும் அல்ல" என்றார் நடராஜ சர்மா.

நடராஜ சர்மாவின் மனத்தில் அந்தப் பையன் பாடிய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் தொடர்ந்து மனைவிக்குச் சென்னார்.

"பார் காலம் மாறிவிட்டது. எண்ணங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. நிஜத்தோடு போராடாதே. அது தர்மம் அல்ல. அழாதே"

அவர் சில உண்மைகளை நினைவுபடுத்தினார்.

நேற்றுக் கம்பன் கழக மண்டபத்தில் என்னுடைய கச்சேரி கேட்டு எவ்வளவு சந்தோஷமாக இருந்தாய். கம்பன் கழக மண்டபம் இப்போது ஒரு கலைக்கோயில். ஞாபகம் இருக்கிறதா? பத்து பதினைஞ்சு வருஷங்களுக்கு முன்னால் அந்த இடத்தால் போகும் போது மூக்கைப் பொத்திக்கொண்டு போவோம்"

அம்மாவுக்கு ஞாபகம் கிரகணத்தில் இருந்து விடுபடும் சந்திரன் சொந்தமான ஒர கட்டடம். இரு பிரிவுகள். ஒன்றின் சுவரில் வாயில் சிகரட்டுடன் ஆணின் தலை வரையப்பட்டிருந்தது. மற்றப் பிரிவில் தலையில் பூ அணிந்த பெண்ணின் தலை. அது ஒரு பகிரங்க மலசல கூடம். வாளிக் கக்கூசுகள். பகிரங்கமா நாலு திசைகளிலும் நாற்றம் பரப்பிக் கொண்டிருந்தது அந்தக் கூடம். அதனால் அதனை அகற்றிவிடும்படி அயலவர் மட்டுமல்ல. கோயில் போவோர் அனைவரும் ஒரே தொனியில் குரல் கொடுத்தனர்.

"பகிரங்க மலகூடம்தான் இன்றைய கலைக்கூடம்" என்று முடித்தார் சர்மா.

அம்மா கண்கள் அகலவிரிய முந்தானையால் வாயை மட்டும் பொத்தினார்.

நன்றி: தரிசனம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link