சிறுகதைகள்


தாய் மனம்

கூடல்.காம்
அதிகாலையில் எழுந்திருந்து, எனது பதினைந்து வயது மகன் பள்ளிக்குச் செல்ல அவசர அவசரமாக அவனை ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன். சாதாரணமாக இந்த வயதுள்ள குழந்தைகள், தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொண்டு, பையில் நோட்டு புத்தகங்களைத் திணித்துக் கொண்டு, பள்ளிக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

ஆனால் ஆடிசம் என்ற குறையுடன் பிறந்துள்ள என் மகனுக்கோ, அவனுடைய ஒவ்வொரு தேவையையும் கவனிக்க ஒரு ஆள் நிச்சயமாக வேண்டும். இந்த வயதிலும் பல் தேய்க்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும் அருகில் நின்று கொண்டு இப்படிச் செய், அப்படிச் செய் என்று விளக்க வேண்டும். குளித்த உடன் உடைகளைத் தலைகீழாகப் போடாமல் சரியாக உடுத்துகிறானா, சட்டைப் பொத்தான்களை வரிசையாகப் போடுகிறானா, ஷூவை மாற்றிப் போடாமல் சரியாக அணிந்து கொள்கிறானா என்றெல்லாம் கூடவே இருந்து கண்காணிக்க வேண்டும்.

இப்படி அவனுடைய ஒவ்வொரு தேவையையும் கவனித்து, அவனைத் தயார் பண்ணி, அவன் கையைப் பிடித்துக்கொண்டு, காலை ஏழு மணிக்கு வரும் பள்ளிக்கூட பஸ்ஸைப் பிடிக்க, பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓட வேண்டும்.

கடந்த பத்து வருட காலமாக, நான் இயந்திரத்தை முடுக்கி விட்டாற்போல் செய்துகொண்டு வரும் தினசரி வேலைகள் இவை. பஸ்ஸைப் பிடித்து, அவனை பள்ளிக்கு ஏற்றி அனுப்பிய உடன், சில நாட்கள் என் மனதில் விவரிக்க இயலாத அளவிற்கு ஆயாசம் உண்டாகும். நாமும் பத்து வருடங்களாக கர்ம சிரத்தையாக இவனை சிறப்புப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் இவன் உருப்படியாக என்ன கற்றுக் கொண்டிருக்கிறான்? இவனிடம் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? என்றெல்லாம் சிந்தனையை ஓட விட்டால், அன்று முழுவதும் என்னால் ஒரு வேலையையுமே சரிவர கவனிக்க முடியாது. அதனால், இப்படிப்பட்ட எண்ணங்களை வளர விடாமல், மனதிற்குக் கடிவாளம் போட்டு நிறுத்தி, கிட்டத்தட்ட ஒரு ரோபோவைப் போல, நான் என் அன்றாட வேலைகளைக் கவனிக்கப் பழகிக்கொண்டு விட்டேன். என் மகனை பஸ்ஸில் ஏற்றிய உடன், என் கடமை முடிந்துவிட்டது போல், நான் வீட்டு வேலைகளை முடித்து, அலுவலகத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளில் மூழ்கிவிடுவேன்.

அன்று, நான் என் மகனை அழைத்துக்கொண்டு பஸ் நிறுத்தத்தை அடையவும், எங்கள் வீட்டு வேலைக்காரி செல்லம்மாள், எதிர்புறத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கவும் சரியாக இருந்தது. இதுவும் அநேகமாக வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சிதான். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக செல்லம்மாள், தன் பேரன் முத்துவையும் உடன் அழைத்து வந்திருந்தான்.

பன்னிரெண்டு வயதிருக்கும் அவள் பேரனைக் கண்ட உடன், நான் கேட்ட முதல் கேள்வியே, அவனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் ஏன் இப்படித் தன்னுடன் வேலை செய்ய அழைத்து வந்திருக்கிறாள் என்பதுதான்.

பஸ் நிறுத்தத்திலிருந்து வீடு வந்து சேரும் வரையில் மடைதிறந்த வெள்ளம். ஒரு குரல் அழுது தீர்த்தாள், செல்லம்மாள்.

"இவன் அப்பன், சரியான குடிகாரனுங்க. எம்மவளக் கண்ணாலம் கட்டிக்கொடுத்து ஒண்ணும் சுகமில்லங்க. அவ சம்பாதிக்கிறதையும் பிடுங்கிக்கிட்டு குடிச்சிட்டுக் கிடக்கிறான். கேட்டா, அடி, ஒதை! இந்தப் புள்ளை இஸ்கூலுக்கு போய்க்கிட்டுதான் இருந்திச்சிங்க. பஸ் சார்ஜ், நோட்டுப் புத்தகம் அப்பிடின்னு எதுக்குமே பைசா கொடுக்க மாட்டேங்கிறான், இவன் அப்பன். கேட்டா, படிச்சு என்னா பண்ணப்போறே, சும்மா வூட்ல கிடன்னு புள்ளையைத் திட்டறான். சும்மானாலும் ஊரைச் சுத்திக்கிட்டு திரியறதுக்கு, என் கூட இட்டாந்தா, வூட்டு வேலையாவது கத்துக்கிடுமே!" என்று மூச்சிரைக்க, அவள் சொல்லிக் கொண்டு வந்தாள். கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தாலும், என்னுடைய பிரச்னைகளில் மூழ்கிக் கிடக்கும் நான், மேற்கொண்டு அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

அன்றிலிருந்து செல்லம்மாளுடன், அவன் பேரன் முத்துவும் வேலைக்கு வருவது வழக்கமாகி விட்டது. காலை வேளைகளில், பஸ் நிறுத்தத்தில் என்னைப் பார்த்தால், தினமும் இரண்டொரு வார்த்தைகளாவது என்னிடம் பேசாமல் போக மாட்டாள், செல்லம்மாள். அலுக்காமல், சலிக்காமல் முடுக்கிவிட்ட டேப் ரிக்கார்டரைப் போல், அவள் தினமும் ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்பாள். அவைகள் பெரும்பாலும் என் பதிலை எதிர்பாராத கேள்விகளாகவே இருக்கும்.

"என்னங்க புள்ளை இஸ்கூலுக்குப் போவுதா?"

"இன்னும் பஸ் வரலீங்களா?"

"ஏம்மா, இந்தப் புள்ளை வாயைத் திறந்து ஒண்ணுமே பேசமாட்டேங்குதே, இஸ்கூலுக்குப் போய் என்னா படிக்குது? இங்கிலீஷ் எல்லாம் படிக்குதா?"

"இப்ப எந்த கிளாசில படிக்குதுங்க?"

இவள் மட்டுமென்ன, அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள், பஸ் நிறுத்தத்தில் சந்திக்கும் மற்ற பெற்றோர்கள் என்று பலரும் இப்படி ஏதாவது கேள்விகளை கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்.

என் மகனைப் பற்றி இப்படிப் பலரும் கேட்கும் கேள்விகளுக்கு, நான் பதிலளிப்பதும், அளிக்காததும் அந்த சமயத்தில் என் மனநிலையைப் பொறுத்து இருக்கிறது. நாலு பேரைப் போல் எம்.ஏ., பி.ஏ., எல்லாம் படிக்காவிட்டாலும், எப்படியாவது என் மகனை எழுதப் படிக்கத் தெரிந்தவனாக ஆக்கிவிட வேண்டும் என்று என் மனதில் உள்ள வெறி, இவர்களுக்கு புரியுமா? இல்லை, இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியது அவசியம் தானா?

செல்லம்மாள் பாட்டுக்கு, அநாவசியக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகையில், அவள் பேரன் முத்து, சாலையின் இருபக்கத்திலும் விதவிதமான சீருடைகளில், பஸ்ஸிற்காக காத்திருக்கும் பள்ளிக் குழந்தைகளை ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பான். இத்தனை குழந்தைகள் புத்தகமும் பையுமாகப் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது, தான் மட்டும் இந்த வயதில் பத்துப் பாத்திரம் தேய்க்கவும், வீடு மெழுகவும் ஆயாவுடன் வேலைக்கு வருவது ஏன் என்று அவன் மனம் ஏங்குகிறதோ?

சில நாட்கள், நான் என் மகனைப் பள்ளிக்கு அனுப்ப ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுதே, வேலைக்கு வந்து விடுவாள், செல்லம்மாள். துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வீடு கூட்ட வரும் முத்து, துடைப்பத்தை அப்படியே போட்டு விட்டு, என் மகனின் பையை எடுத்து வைத்துக்கொண்டு அதிலுள்ள புத்தகங்களை ஆசையுடன் திறந்து பார்ப்பான்.

அல்லது வரவேற்பு அறையில் மேஜை மேல் வைக்கப்பட்டிருக்கும், பளபள ஆங்கிலப் பத்திரிகைகளை எடுத்துப் புரட்டிப் பார்ப்பான். செல்லம்மாளோ, "இன்னும் எட்டு வூடு செய்யணும். போதும் புஸ்தகம் படிச்சது. எந்திரிச்சி வேலையை கவனி" என்று பேரனை அதட்டுவாள். முத்துவும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு யதார்த்த உலகிற்கு வருவான்.

இச்சம்பவங்கள், கடந்த சில தினங்களாக என் மனதில் ஒரு சலனத்தை உண்டாக்க ஆரம்பித்துள்ளன. அழுக்கு உடையும், பரட்டைத் தலையுமாக காட்சியளித்தாலும், முத்துவின் முகத்தில் நல்ல களை. கண்களில் அசாத்தியக் கூர்மை. நிச்சயமாக, இவனுக்கு சராசரி மனிதனை விட மூளை சற்று அதிகமாகவே இருக்கலாம்.

இவனைப் படிக்க வைத்தால் கட்டாயம் படிப்புவரும். இவனைப் போல், ஓர் அறிவுள்ள குழந்தையைப் படிக்க வைக்காமல், பத்து வருட காலமாக ஏ,பி,சி,டியையும் 1,2,3 யையுமே சரியாக கற்றுக் கொள்ள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் என் மகனை ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து படிக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? முத்து இன்று, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் புத்தகங்களையும் ஏக்கத்துடன் பார்கிறான்.

ஆனால், நாளாவட்டத்தில் இவனே படிப்பில் ஆர்வம் போய் ஒரு போக்கிரியாகவும் தலையெடுக்கலாம். காவாலி போல் ஊர் சுற்றிக் கொண்டு பீடி, சிகரெட் துண்டங்களைப் பொறுக்கி "தம்" அடிக்கலாம். பெரியவனாகி, கூலி வேலை செய்து வரும் பணத்தில் அவன் அப்பனைப் போல் சீட்டு, குடி, அடி, உதை என்பதையே வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்ளலாம்.

சமீப காலமாக முத்துவைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் மனதில் இப்படிப்பட்ட சிந்தனைகள் உருவாகி என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஏற்கனவே குழம்பிக் கொண்டிருந்த என்னை அன்று எங்கள் அலுவலகத்தில் நடந்த சொற்பொழிவு வெகுவாக பாதித்தது. உலக வங்கியைச் சார்ந்த பொருளாதார நிபுணர் ஒருவர், "மக்களின் ஆரோக்கிய நிலையும், அரசாங்கத்தின் பொறுப்பும்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், பொது சுகாதாரத்திற்கும் நாட்டின் வருமானத்திலிருந்து எத்தனை சதவிகிதம் ஒதுக்குகின்றன என்று புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டே போனார், அந்தப் பேச்சாளர்.

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சராசரி ஒரு நபருக்கு ஆகும் செலவென்ன என்றெல்லாம் விளக்கிக் கொண்டு போன அந்த நிபுணர், பிறவியிலேயே குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளின் கவனிப்பு என்ற தலைப்புக்கு வந்தார்.

அதுவரையில், ஏனோ, தானோவென்று சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த நான், சட்டென்று வழித்துக்கொண்டேன். மந்த புத்தி, ஸபாஸ்டிக் மற்றும் பல விதமான குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரத்யேகக் கவனிப்பு, பயிற்சி, சிறப்புப் பள்ளி என்று அவர்கள் நலனுக்காக, மேலை நாடுகளில் அரசாங்கம் ஏகப்பட்ட தொகை செலவு செய்கிறது என்றும் புள்ளிவிவரங்களை எடுத்து விட்டார், அந்த நிபுணர்.

பொருளாதார ரீதியாக இந்தச் செலவுகள் எதிர் காலத்தில் பலன் ஒன்றும் அளிக்க முடியாத செலவுகள் என்றும், சமூகத்திற்கும், அரசாங்க கஜானாவிற்கும் இச்செலவுகள் ஒரு சுமைதான் என்பது போலவும் அவர் பேசியவுடன், எனக்குத் தாங்க முடியாத ஆத்திரம் உண்டாகியது. இந்த அமெரிக்கர்கள் என்ன மனிதாபிமானமே இல்லாதவர்களா? வாழ்க்கையின் எல்லா பிரச்னைகளையும் பணத்தால் மட்டும் எடை போடுகிறார்களே என்று என் மனம் கொதித்தெழுந்தது.

மாலையில் அலுவலகம் முடிந்து பஸ்ஸைப் பிடித்து ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தேன். குளிர்ந்த காற்று சுரீரென்று என் முகத்தைத் தாக்கியது. என் மனம், காலையில் அந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆற்றிய சொற்பொழிவை நோக்கிச் சென்றது. இப்பொழுது, ஆத்திரம் தணிந்து மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது.

அவர் சொல்வதிலும் ஒருவித நியாயம் இருக்கிறதோ? பணத்தட்டுப்பாடு உள்ள ஒரு ஏழை நாட்டில், இப்படிப்பட்ட செலவுகள் ஒரு சுமைதானோ? உடனே எனக்கு முத்துவின் நினைவு வந்தது. என் மகனைப் படிக்க வைக்க சிறப்புப் பள்ளி, சிறப்பு ஆசிரியர் என்று மாதம் ஆயிரம் ரூபாய் வரையில் செலவழிக்கிறேன்.

இந்தப் பணத்தில் முத்துவைப் போல் நான்கு குழந்தைகளைப் படிக்க வைக்கலாமே! என் மகனைப் படிக்க வைப்பதால் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? முத்துவை படிக்க வைப்பதன் மூலம், நாட்டிற்கு உபயோகமான ஒரு பிரஜையை உருவாக்கலாமே? அல்லது குறைந்தபட்சம் ஒரு போக்கிரி அல்லது குடிகாரன் உருவாவதையாவது தடுக்கலாமே என்றெல்லாம் என் மனம் எண்ண ஆரம்பித்தது.

இனியும் நாம் முத்துவைப் பற்றிய குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடாது. ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுள் ஒரு உந்துதல் ஏற்பட்டது. நான் தீர்மானமான ஒரு முடிவிற்கு வந்தேன். "எப்பாடுபட்டாவது அலைந்து திரிந்து முத்து மறுபடியும் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்."

முத்துவின் படிப்புக்கு ஆகப்போகும் செலவு. நான் என் மகனுக்காகச் செலவழிக்கும் தொகையில் ஒரு சிறு விகிதமே. அவன் "அப்பன்" கொடுக்காவிட்டால் போகிறான். நானே முத்துவை படிக்க வைப்பேன், அவனை ஒரு நல்ல பிரஜையாக உருவாக்க முயற்சிப்பேன் என்று சபதம் செய்து கொண்டேன். எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, அன்று எனது உள்ளத்தில் நிம்மதியும், சந்தோஷமும் பெருகுவதை உணர்ந்தேன்.

நன்றி: பார்வையை மீட்க...

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link