சிறுகதைகள்


நம்பிக்கை

கூடல்.காம்

இந்த ஆண்டு கோடை விடுமுறையில் எந்தெந்த ஊர்களுக்குப் போகலாம் என்று எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நால்வரும் ஒன்று கூடி ஒரு முடிவிற்கு வருவதற்குள் வீடு, உத்திரப் பிரதேச சட்டமன்றம் போல் அமளி துமளிப்பட்டது. அலுவலகத்திலிருந்து கிடைக்கும் எல்.டி.சி.யையும், கொளுத்தும் வெயிலையும் வீணடிக்காமல், சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், மைசூர் எல்லாம் சுற்றிவிட்டு, பம்பாய் வழியாக தில்லி திரும்பலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட அடுத்த விஷயம், க்யூவில் நின்று ரயில் டிக்கெட்டுகள் வாங்குவது யார் என்பது. கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் இருவரும் பரீட்சை நெருங்குகிறது என்றும், என் கணவர் ஆபீசுக்கு நேரம் கழித்துப் போனால் வேலை போய்விடும் என்றும் பயமுறுத்தி தப்பித்துக்கொள்ள, க்யூவில் நின்று டிக்கெட் வாங்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றேன்.

அவசர அவசரமாக வீட்டு வேலைகளை முடித்து, ஆட்டோவைப் பிடித்து, தெற்கு தில்லியில் உள்ள சரோஜினி நகர் ரயில்வே ரிசர்வேஷன் அலுவலகத்தை அடைந்தேன். ஒவ்வொரு கவுண்டரிலும் க்யூ அனுமார் வால் போல் நீண்டு, கட்டடத்திற்கு வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளதில் நீளம் குறைவாகத் தோன்றிய ஒரு க்யூவில் போய் என்னை ஒட்டிக் கொண்டேன்.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, நடந்து முடிந்த பொதுத்தேர்தல், பா.ஜ.க. அரசு, ஒரு மாநில முதலமைச்சரின் மறு அவதாரம், டைட்டானிக் திரைப்படம் என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் க்யூவில் நின்ற நாங்கள் அலசித் தீர்த்தோம். டிக்கெட் கவுண்டரை அடைய, குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்ற நிலையில், பொழுதைக் கழிப்பதற்கு வேறு என்னதான் வழி?

தாக சாந்திக்காக, குளிர்பானம் அல்லது காப்பி, டீ அருந்த என்று யாராவது வெளியே போனால், க்யூவில் அவர்களுடைய இடத்தை பத்திரமாகப் பாதுகாப்பது, காதுகளில் டிரான்ஸிஸ்டரை ஒட்டிக்கொண்டு கிரிக்கெட் கமெண்டரி கேட்டுக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அவ்வப்பொழுது ஸ்கோர் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று ஒவ்வொருவருக்கொருவரும் மிகவும் சிநேக பாவத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தோம். ரயில் சிநேகம் என்பது போல, இது ரயில்வே ரிசர்வேஷன் சிநேகிதம் போல!

சுமார் இரண்டரை மணி நேரம் கால்கடுக்க நின்று, வாய் வலிக்க அரட்டைக் கச்சேரியும் செய்த பிறகு ஒருவழியாக எனக்கு முன்பு நின்று கொண்டிருந்த வழுக்கைத் தலை மனிதரின் (மன்னிக்கவும்! அவருடைய பெயர் தெரியாததால் வழுக்கைத் தலை மனிதர் என்ற காரணப் பெயர்) முறை வந்தது. கையில் தயாராக எழுதி வைத்துக் கொண்டிருந்த படிவத்தை நீட்டினார். அவர். கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண்மணி, கணிப்பொறியின் கீ போர்டை தட்டிப் பார்த்து, அவர் குடும்பத்துடன் பயணிக்க வேண்டிய தேதிக்கு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன என்று தெரிவித்தாள். அந்த மனிதருக்கு வாயெல்லாம் பல். ஏதோ எவரெஸ்ட் சிகரத்தையே எட்டிப்பிடித்து விட்ட மாதிரி, வெற்றிக் களிப்பில் முகம் பிரகாசித்தது. ஆனால், அவர் முகத்தின் பிரகாசம் மறைய ஒரு நொடி கூட ஆகவில்லை. டிக்கெட்டிற்காக அவர் கொடுக்க வேண்டிய தொகை நாலாயிரத்து நூற்று ஐம்பது ரூபாய் என்று அறிவித்தாள், கவுண்டர் பெண்மணி.

ஆனால் அந்த மனிதர் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்திருந்த தொகையோ, நாலாயிரம் ரூபாய்தான். பர்ஸ், பாண்ட் பாக்கெட்டுகளைத் துழாவி, கிடைத்த பணத்தைப் பலமுறை எண்ணிப் பார்த்தும் டிக்கெட்டிற்கு வேண்டிய தொகை தேறவில்லை. மனிதருக்கு, பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. இதற்குள் க்யூவில் பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள், பொறுமையிழக்க ஆரம்பித்தனர். இத்தனை நேரம் சகஜமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த கூட்டம், "பணம் இல்லையென்றால், கவுண்டரை காலி பண்ணி, அடுத்த ஆளுக்கு இடம் கொடுக்க வேண்டியதுதானே, எங்க நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்?" என்று கூச்சல் போட ஆரம்பித்தது.

அந்த வழுக்கைத்தலை மனிதரைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது. பாவம், அவர் இரண்டு மணி நேரம் கால் கடுக்க நின்றது வீண்! வீட்டிற்குப் போய் குறைந்த பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து மறுபடியும் இரண்டு மணி நேரம் க்யூவில் நிற்க வேண்டும். அப்படியே மறுபடியும் க்யூவில் நின்றாலும் டிக்கெட் கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்? அவருடைய நிலையைக் கண்டு மனம் இரங்கிய நான், சற்றும் யோசிக்காமல் டக்கென்று என்னுடைய பர்ஸிலிருந்து நூற்றி ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து அவரை சீக்கிரமாக டிக்கெட் வாங்கும்படி கூறினேன். முன்பின் தெரியாதவரிடமிருந்து, இத்தனை பெரிய தொகையைப் பெறுவதா என்று அவருக்கு ஏகத் தயக்கம். ஆனால், நிலைமையைச் சமாளிக்க வேறு வழி ஒன்றும் தோன்றாததால், சற்றுத் தயக்கத்துடன், நான் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார், அவர்.

அவ்வளவுதான்! சுற்றியிருந்தவர்களின் விமர்சனத்திற்குக் கேட்க வேண்டுமா? ஆள் ஆளுக்கு ஒரு கமெண்ட்.

"தேவலையே! டக்கென்று பணத்தை எடுத்துக் கொடுத்துட்டாங்களே! அவ்வளவு சுலபமா, யாரும் நம்பி பணம் கொடுக்க மாட்டாங்க தெரியுமா?" என்று எனக்கு புகழ் மாலை சூட்டினான் ஒருவன். "யார் கண்டாங்க! அந்த அம்மாகிட்ட நிறைய பணம் புரளுது போல இருக்கு" என்று என்னைக் கறுப்புப் பணக்காரி என்று முடிவு கட்டினான், மற்றொருவன்.

"துட்டு இருந்தால் போதுமா? கொடுக்க மனசு வர வேண்டாமா? தில்வாலி ஹே!" என்று அவனை மடக்கினான் இன்னொருவன்.

"அந்த ஆள் இனிமே எங்க இவங்க கண்ணிலே படப் போகிறான்!" என்று என்னை ஏமாந்த சோணகிரியாக்கிய கும்பலுக்கும் குறைவில்லை, அங்கே.

நான் டிக்கெட் வாங்கி முடிக்கும் வரையில், என் அருகில் நின்று கொண்டிருந்த அந்த வழுக்கைத் தலை மனிதர், நா தழுதழுக்க "நீங்கள் செய்த இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன். இந்தப் பணத்தை நான் எப்படி உங்களுக்குத் திருப்பித் தருவது?" என்று கேட்டார்.

ஒரு காகிதத்தில் என்னுடைய விலாசத்தை எழுதிக் கொடுத்து விட்டு, எல்லோரும் என்னை ஒரு அதிசயப் பிறவியாக அல்லது அசட்டுப் பிறவியாகப் பார்க்கும் பார்வைகளை லட்சியம் செய்யாமல் அந்த இடத்தைவிட்டு நடையைக் கட்டினேன்.

மனதிற்குள் ஒரு சிறு உறுத்தல். முன்னே பின்னே யோசிக்காமல் நூற்றைம்பது ரூபாயைத் தூக்கிக் கொடுத்து விட்டோமே என்று. என்னதான் என் கணவர் அப்படிக் கறாராகக் கணக்குக் கேட்கும் மனிதர் இல்லை என்றாலும், நடந்த விஷயத்தை அவரிடமிருந்து மறைக்க முடியுமா? உதவ வேண்டும் என்று தோன்றியது, பணத்தைக் கொடுத்தாகிவிட்டது. இப்பொழுது குழம்புவானேன்?

"திரும்பக் கிடைத்தால் பாக்கியம், கிடைக்காவிட்டால் லேகியம்!" என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, நான் செய்த "அசட்டுக்" காரியத்தைப் பற்றி அப்போதைக்கு மறந்து போனேன்.

வழக்கம்போல் ரயில்வே ரிசர்வேஷன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சரோஜினி நகர் மார்க்கெட்டிற்குப் போய் காய்கறி, பழம், மேட்சிங் ரவிக்கைத் துணிகள் என்று ஒரு மணி நேரம் ஷாப்பிங் செய்துவிட்டு, ஆடி அசைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டிற்குள் நுழைந்தால் அங்கு எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது!

ரிசர்வேஷன் அலுவலகத்தில் என்னிடமிருந்து நூற்றி ஐம்பது ரூபாய் பெற்றுக்கொண்ட அந்த மனிதர், வரவேற்பு அறையில் எனக்காகக் காத்திருந்தார். என்னைக் கண்ட உடன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்த அவர், உடன் அழைத்து வந்திருந்த தன் மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நான் கூச்சத்தால் நெளியும் அளவிற்கு, தன் மனைவியிடம், நான் மட்டும் தக்க சமயத்தில் பணம் கொடுத்து உதவியிராவிட்டால், டிக்கெட் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டிருப்போம் என்றெல்லாம் புகழ்ந்து என்னை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தார், அந்த மனிதர். காப்பி, டீ ஏதாவது குடித்து விட்டுப் போகலாமே என்று நான் செய்த உபசாரத்தையெல்லாம் பணிவுடன் மறுத்துவிட்டு, கொண்டு வந்திருந்த பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மாடிப்படி இறங்க ஆரம்பித்தார்கள்.

நான், அப்பொழுதுதான் கவனித்தேன், டைனிங் டேபிளின் மேல் எனக்காக வாங்கி வந்திருந்த ஒரு டஜன் மாம்பழங்களும், ஒரு டஜன் வாழைப்பழங்களும் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை, அவர்கள் நாசூக்காக வைத்துவிட்டுப் போயிருந்ததை. பால்கனிக்கு ஓடிப்போய், ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பிக் கொண்டிருந்த அவரைக் கூப்பிட்டு, "என்ன இதெல்லாம்?" என்று கேட்டேன்.

"தாங்கள் செய்த உதவியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை" என்று அவர் அடக்கத்துடன் பதிலளித்தார்.

நான் அவசரத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து உதவியதற்குக் கைமாறாக, அந்தப் பணத்தை உடனடியாகத் திருப்பிக் கொடுத்ததோடல்லாமல், ஐம்பது ரூபாய் வரை செலவழித்து பழங்கள் வாங்கி வந்து என்னை திக்குமுக்காடச் செய்து விட்டாரே, இந்த மனிதர்! நான், அவருக்கு செய்த உதவி பெரியதா, இல்லை அவர் செய்த பதில் மரியாதை பெரியதா என்று எடைபோடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. கிளம்பிய அந்த மனிதருக்கு கை அசைத்து விடை கொடுத்தேன்.

நன்றி: பார்வையை மீட்க...

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link