சிறுகதைகள்


பின்னணி இசை இன்றி...

கூடல்.காம்
அவள் பாடியபடி ஒயிலாக பாத்ரூம் கதவைப் பூட்டினாள். கம்பியில் முதலில் சேலை விழுந்தது. அடுத்து ரவிக்கை விழுந்தது. ஷவர்பாத் தண்ணீர் கொட்ட அந்நேரம் ரீல் அறுந்து போனது. ஙொய்.. யென்ற சத்தம் மட்டும் திரைக்குப் பின்னால் கேட்டது. நூற்றுக்கணக்கான விசில் சத்தங்கள் திரையை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. தியேட்டரில் லைட்டைப் போட்டுவிட்டான். வெளிச்சம் பட்டதும் சுய நினைவு திரும்பி தியேட்டர் பெருமூச்சு விட - பையன்கள் முறுக்குத் தட்டுகளுடன் "முறுக் - முறுக் - முறுக்" என்றபடி கூட்டத்தினுள் சிதறிப் பாய்ந்தார்கள்.

ஒரு ரூபாய்க்கு விற்றால் பதினைந்து பைசா. காளியப்பன் அதுவரை பனிரெண்டு ரூபாய்க்கு விற்றுவிட்டான். டவுசர் பை சில்லறையில் குலுங்கியது. இன்னும் இடைவேளை இருக்கிறது. ரெண்டாவது ஆட்டம் இருக்கிறது. சனிக்கிழமையானதால் கடைகளில் வேலை பார்க்கிற பையன்கள் பூராவும் ரெண்டாவது ஆட்டத்துக்கு வந்து ஆளுக்கு பத்து முறுக்கு பனிரெண்டு முறுக்கு என்று வாங்கி விடுவார்கள். எப்படியும் முப்பது ரூபாய்க்குத் தள்ளிவிட்டால் கையில் நாலு அம்பது கிடைக்கும். ஏற்கனவே உள்ளதும் சேர்த்து ஒன்பதே கால். இன்னும் இரண்டு மூன்று ரூபாய்தான் பிறகு.

ரஜினி ஸ்டைலில் ஒரு பெல்ட் வாங்க வேண்டியிருந்தது அவனுக்கு. சோலை அது மாதிரி ஒன்று வாங்கிவிட்டான். முறுக்குத் தட்டுடன் இடுப்பை ஸ்டைலாக ரஜினி மாதிரி வளைத்துக்கொண்டு சோலை போகும் போது பெல்ட் பளபளக்கிறது. பதிமூணு அம்பது. ஒரு சல்லி குறையாதுன்னு சொல்லிவிட்டான் என்று நேற்று ராத்திரி படமெல்லாம்விட்ட பிறகு முறுக்கு விற்கிற தன் சகாக்களிடம் தான் பெல்ட் வாங்கிய கதையை பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தான் சோலை.

காளியப்பன் அரிப்பு தாங்க முடியாமல் அவனுடைய ஆத்தா சொல்லிவிட்டாள். தீபாவளி வரைக்கும் உனக்குக் கிடைக்கிற காசை வீட்டுக்குத் தரவேண்டாம். என்னத்தையும் வாங்கிக்க.

சுழன்று சுழன்று முறுக்கு விற்றான்.

லைட்டை அணைக்காமலேயே மறுபடி படத்தை ஓட்டி விட்டான். அதற்கொரு விசில் கிளம்ப லைட் அணைந்தது ஆனால் அதற்குள் அவள் வேறு டிரஸ்ஸில் கண்ணாடி முன் அமர்ந்து தலை வாரிக் கொண்டிருந்தாள். ஏமாற்றப்பட்டு விட்டதாக தியேட்டர் ஏய்..... என்று கத்தியது.

முறுக்குத்தட்டுடன் இருட்டில் தடுமாறி வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தான் காளி "எலே படத்தை மறைக்காம அந்தப் பக்கம் போறியா... மிதி வேணுமா" என்று ஒருவன் காளியப்பன் மேல் பாய்ந்தான். காளி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவள் காரில் போய்க்கொண்டிருந்தபோது காளி வெளியேறினான்.

வெளியே கடை வாசலுக்கு முறுக்குத்தட்டுகளுடன் பையன்கள் வந்தார்கள். சோலை ஒரு பீடியை ஸ்டைலாக பற்றவைத்தான். காளியைப் பார்த்து சும்மா கண்ணடித்தான். காளிக்கு சோலையை ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பேருமே ரஜினி ஆள் என்பதால் மட்டுமல்ல. இங்கே முறுக்கு விற்கிற வேலையில் காளியை சேர்த்து விட்டதும் அவன்தான்.

இங்கு வருவதற்கு முன்னால் காளி ஒரு புரோட்டா கடையில் இருந்தான். டேபிள் துடைக்க, இலை நறுக்க, இலை போட, இலை எடுக்க அவசரமாய் ஓடிப்போய் மைதா மாவு வாங்கிவர, மாஸ்டருக்கு பீடி வாங்கி வர என்று கணக்கே இல்லாமல் வேலை செய்யணும். ராத்திரி கடை அடைத்த பிறகு ஸ்டோர் ரூமில் மாஸ்டர் சொல்வதையெல்லாம் செய்யணும். அவர் தண்ணி அடித்துக் கொண்டே ம்.. ம்.. என்று சொல்லிக் கொண்டிருப்பார். காளி பயத்தில் நடுங்குவான்.

சோலை பீடியை முடித்துவிட்டு காளி தோளில் கை வைத்தான். சிரித்தான். என்னலே காளி.. அந்த ஓட்டல்காரன் நாளக்கி காலையே வரச் சொல்லியிருக்கான் போவமா.

காளி மறுத்துத் தலையாட்டினான். சும்மா உன் கூட வரணும்னா வாரேன். ஓட்டல் வேலையே நமக்கு வேண்டாஞ்சாமி.

முந்தி அந்த புரோட்டாக் கடையில் இருந்ததே தினசரி வேண்டிய மட்டும் புரோட்டாவும் சால்னாவும் அடிக்கலாம் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான்.

விசில் சத்தம் பலமாய் கேட்டது. கொஞ்ச நேரத்தில் சில பேர் வேகமாய் ஒன்றுக்குப் போனார்கள். சிலர் கடைக்குப் பீடி, சிகரெட் வாங்க வந்தார்கள். கற்பழிக்கிற சீன் முடிஞ்சிருக்கணும். பையன்கள் தட்டுகளை தூக்கினார்கள். இன்னும் கொஞ்ச நேரம் மாற்றி மாற்றி அழுது வசனம் பேசுவார்கள். இந்நேரம் சத்தமில்லாமல் முறுக்கை விற்றுவிடலாம். முறுக்... முறுக்கே....

நேற்று சோலையுடன் காளியும் அந்த ஓட்டலுக்கு போயிருந்தான். ரெண்டு பேரும் மார்க்கெட் பக்கம் சந்தித்து ஒரு மாங்காய் வாங்கி கீறி ஆளுக்குப் பாதி பாதியாய் தின்றபடி ரோட்டோரமாய் நடந்து போனார்கள். மாங்காய் காசு சோலைதான் கொடுத்தான்.

கல்லாப்பெட்டியில் இருந்த கணக்குப்பிள்ளை ரெண்டு பேரையும் ஏற இறங்கப் பார்த்தார். இவன் சும்மா கூட வந்தான் - என்று சோலை சமாதானம் சொன்னான். உடனே போய் மாஸ்டரை பார்த்தார்கள். அந்நேரம் மதிய சாப்பாட்டுக்கு பெரிய அண்டாவில் முட்டைக்கோஸ் வெந்து கொண்டிருந்தது. ரெண்டு பேருக்கும் உடைந்த அப்பளம் கொடுத்து சிரித்தார் மாஸ்டர். உடனே காளிக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது. இந்த பக்கம் திரும்பிக் கொண்டான். புரோட்டா கடை மாஸ்டரின் இளிப்பு ஞாபகம் வந்தது.

ரெண்டாவது ஆட்டம் படம் ஓடிக் கொண்டிருந்தது. பையன்கள் கடை முதலாளியிடம் கணக்கு ஒப்படைத்துக் கொண்டிருந்தார்கள்.

காளியும் சோலையும் தியோட்டர் முகப்புக்கு வந்தார்கள். மொசைக் போட்டுக் கொண்டிருந்தார்கள். கொத்தனார்களும் சித்தாள்களும் ஜல்லியும் கருங்கல்லுமாக வேலை துரிதமாக நடந்து கொண்டிருந்தது.

நாளையோட சரி. பிறகு ஒரு வாரத்திற்கு படம் கிடையாது. தியேட்டரை அங்கங்கே இடித்து ரீ மாடல் செய்கிறார்கள். தீபாவளி முதல் வேற பெயரில் தியேட்டர் ஓடப் போகுது.

புது முதலாளி ரஜினி ரசிகராம். சோலை சொன்னான். தியேட்டர் திறப்பு விழாவுக்கு கூட ரஜினி வரலாம் என்றான். சோலைக்கு எல்லாம் தெரியும்.

ஆனால் புது தியேட்டரில் உள்ள கொண்டு போய் முறுக்கு விற்கிற வேலையெல்லாம் கிடையாது முன்னால் ஒரு கவுண்டர் வைத்து வியாபாரம் நடக்கும்.

சோலையின் அண்ணன் ஒரு டாக்டர் வீட்டில் காளியை சேர்த்து விடுவதாக சொல்லியிருந்தார். காளியின் அய்யா சாவதற்கு முன் அந்த அண்ணனுடன்தான் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தது.

சாப்பாடு போக மாசம் முப்பது ரூபாய் என்று டாக்டர் சம்சாரம் சொன்னது. ஆனால் ராத்திரி இங்கதான் தங்கணும். பின்னாடி ஒரு ஷெட் இருந்தது. அங்கே சமையல்கார பிச்சுமணியோடு தங்கிக்கிட வேண்டியது. அதிகாலை மூணு மணிக்கு எல்லாம் எழுந்து டிப்போவுக்கு பால் வாங்கப் போயிறணும். ஏன்னா நாலு மணிக்கு பெரிய பாப்பா படிக்க உட்காரும்போது புதுப்பாலில் காப்பி வேணும். ஃபிரிட்ஜ்ஜில் வைத்த பால் பெரிய பாப்பாவுக்குப் பிடிக்காது.

ஆனால் வழக்கமாக ரெண்டாவது ஆட்டம் படம் விட்டு தியேட்டர் பெஞ்சுகளில் பையன்களோடு பேசியபடி உறக்கம் வரவே மூணுமணி ஆகிவிடும். முந்தி புரோட்டா கடையிலும் படுக்க மூணுமணி ஆகிவிடும். இப்ப எப்பிடி மூணு மணிக்கு எழுந்திரிப்பது என்று முதல் நாளே கவலையாகி விட்டது.

அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நானாச்சு எழுப்பி விட என்றார் பிச்சுமணி. ராத்திரி டாக்டரய்யா வீடு திரும்பியதும் அவனை வரச் சொன்னார்கள். ஷெட்டிலிருந்து வீட்டு முன் வாசலுக்குப் போனான். பிச்சுமணியும் கூடவே வந்தார் - இடது காலை சாய்த்து நடந்தபடி.

இவனா? ரொம்பச் சின்னப் பையனா இருக்கானே? என்றார் டாக்டரய்யா. பிச்சுமணிதான் நல்லா வேலை பார்க்கக்கூடிய பையன் என்று சமாதானம் சொன்னார்.

மத்தியானம் மூணு மணியிலிருந்து அஞ்சு மணி வரைக்கும்தான் காளி வீட்டுக்குப் போய் ஆத்தாளை பாத்துவர முடியும். அவளும் அந்நேரம்தான் இருப்பாள். அவள் வேலை பார்க்கிற வீடுகள் எல்லாமே பங்களாத் தெருவில் இருந்தன. பலநாள் ராத்திரி அங்கேயே ஏதாவது ஒரு வீட்டில் பாத்திரம் கழுவி முடித்துவிட்டு படுத்து விடுவாள். காளி சின்னப் பயலாய் இருந்த வரைக்கும் தான் பிரச்சனை. இப்பத்தான் அவனையிட்ட கவலை இல்லையே.

சினிமா தியேட்டர் வேலை நிலைக்காமல் போனதில் ரொம்ப வருத்தம் காளிக்கு. டாக்டரய்யா வீட்டுக்கு வந்ததிலிருந்து சினிமாவுக்கே போக வழியில்லை. மத்தியானம் டாக்டர் வீட்டு ஆட்கள் எல்லோரும் தூங்குகிற நேரம்தான் ரெஸ்ட். பிச்சுமணி கூட அந்நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிடுகிறார். மற்ற நேரமெல்லாம் யாராவது ஒரு வேலை ஏவிக் கொண்டே இருந்தார்கள். பஜாருக்கும் வீட்டுக்கும் சைக்கிள் மிதித்தே கால் செத்தது. அதிலும் ஆறாப்பு படிக்கிற அந்தப் பையன் இருக்கிறானே. நினைத்தால் உடனே பம்பரம் வேணும். உடனே "மிஷின் கன்" வேணும். இல்லாட்டி குலோப் ஜாமுன் வேணும். வீட்டில் உள்ளது எதுவும் வேண்டாம். அந்தப் பையன் சொன்னதுக்கெல்லாம் டாக்டர் சம்சாரம் ஆடும். பிள்ளைகளை கண்டிச்சு வளக்கலேன்னா என்னதுக்கு ஆகப்போகுதுக என்று பிச்சுமணி காளியிடம் சொல்லிக் கொள்வார்.

அந்தப் பையனை காளிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பெரிய பாப்பா என்கிற அந்த அக்காவை ரொம்ப பிடித்து விட்டது. பேர் கூட அவனுக்கு ரொம்ப பிடித்தது. புஷ்கலா. அடிக்கடி தாவனியில் மூக்குக் கண்ணாடியை துடைத்து மாட்டிக் கொண்டு எதையாச்சும் படித்துக் கொண்டே இருக்கும். பரிச்சை முடிந்தது என்றால் உடனே காளியை வெங்கடேஷ் வீடியோ சென்டருக்கு அனுப்பி கேஸட் வாங்கிவரச் சொல்லும். சாமி ரூம் பக்கத்தில்தான் டி.வி. ரூம் இருந்தது. அக்காவுக்கு சா... ஸா... ரெண்டும் வராது. "சாமி ரூம்" என்பதை "தாமி ரூம்" என்றுதான் சின்னப்பாப்பாக்கள் மாதிரி சொல்லும். வீடியோ படம் போட்டதும் "நீயும் தும்மா உட்கார்ந்து பாருடா" என்று சொல்லும். ஆனால் டாக்டரம்மா விடாது. ஓடு ஓடு போய் அரைக்கிலோ வெண்ணெய் வாங்கிட்டு வா. இருபது முட்டை வாங்கிட்டு வா.

இப்பக்கூட டி.வி. ரூமில் படம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. காளி அய்யா காருக்கு கேட்டை திறந்து விட்டு திரும்பிய போது, ரஜினியின் தங்கச்சியை நாலு முரடன்கள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். இப்ப உள்ள போனால் படம் பார்க்கலாம். ஆனால் அப்படியெல்லாம் போகப்படாது. அது அய்யாவுக்கு பிடிக்காது. அவுகளா கூப்பிடாம நாம அவுக முன்னால போயி ஒருக்காலும் நிக்கவே படாது என்று பிச்சுமணி சொன்னார். ஷெட்டில் படுக்கை விரித்து கொசுவுக்கு புகை மூட்டம் போட்டுக் கொண்டிருந்தார் பிச்சுமணி.

சரி தூங்கிவிடலாம். காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணுமே.

கொஞ்ச நேரத்தில் தூக்கம் அவனை இழுக்க ஆரம்பித்தது. பிச்சுமணி லேசாக அவனை கூப்பிட்டுப் பார்த்தார். காளி... ஏ... காளி... தூங்கி விட்டியா.

பிச்சுமணி கூப்பிட்டது காளிக்கு கேட்டது என்றாலும் நன்றாக தூங்கிவிட்டதுபோல் பேசாமல் கிடந்தான். இல்லாவிட்டால் அவர் ஓடிப்போன தன் பெண்டாட்டியை பற்றி அவள் இடுப்பு இவ்வள அகலம் இருக்கும்டா - என்று ஆரம்பித்து பயங்கரமாகப் பெருமூச்சுகள் விட்டுக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவார். கொசுவின் ரீங்காரத்துக்கிடையே அவருடைய பெருமூச்சுகள் கேட்கக் குலை நடுங்கும் காளிக்கு.

காளி..... தூங்கிட்டியா... காளி...

பிச்சுமணி மெல்ல உருண்டு காளியின் பக்கமாக வந்தார். அவன் கண் அயர்ந்து மூழ்கிய தருணத்தில் பிச்சுமணியின் மூச்சுக்காற்றும் வியர்வை நெடியும் காளியைத் தாக்கின. அவனது இடுப்பில் கை விழுந்தது.

மறுநாள் டாக்டர் வீட்டம்மா எவ்வளவோ கேட்டும் காரணம் சொல்ல காளி மறுத்துவிட்டான். "நான் நின்னுக்கிர்றம்மா" என்று மட்டும் சொன்னான்.

ஆத்தாளும் கேட்டாள். சாப்பாடு போக முப்பது ரூபாய்னா லேசா. ஆனால் காளி ஒன்றும் பேசவில்லை. சம்பளப் பணத்தை ஆத்தாளிடம் கொடுத்து விட்டு பாயில் படுத்துக் கொண்டான். எழுந்திருக்கவே இல்லை.

சாயந்திரம் ஆத்தா போகும்போது காளியிடம் அஞ்சு ரூபாய்த்தாள் ஒன்றைக் கொடுத்து அவன் ஆசைப்பட்ட "பெல்ட்" வாங்கிடச் சொன்னாள்.

குடிசைக்குள் இருள் கவியலாயிற்று. சுருண்டு கிடந்தான். பாயில் கொசுக்களின் சத்தம் மெல்லக் கேட்டது. கொசுவின் சத்தம் கேட்டதும் பிச்சுமணியின் வியர்வை வீச்சம் முகத்திலடித்தது. பயப்படாதடா.... காளி... ம் பயப்படாதே... என்ன பயப்படாதே என்று பழைய புரோட்டாக் கடை மாஸ்டர் முடிவில்லாமல் சொல்லிக் கொண்டே இருந்தார். தின்ற புரோட்டா அத்தனையும் வாந்தி யாய் கொட்டியது எத்தனை நாள் அப்படி.

வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வருகிற மாதிரி வந்தது. பாயை விட்டு எழுந்து உட்கார்ந்தான். வாய் கொப்பளித்து தண்ணீர் குடித்தான். காய்ச்சல் வருகிறது போல் இருந்தது.

ரெண்டு நாள் லேசான காய்ச்சல் இருந்து கொண்டே இருந்தது. மூணாவது நாள் எழுந்து விட்டான். ஆத்தா வென்னீர் வைத்துக் கொடுத்து விட்டு சாமியைக் கும்பிட்டு விட்டு வேலைக்குப் போனாள்.

காளி குளித்துவிட்டு டாக்டரய்யா வீட்டுக்குப் போனான். ரெண்டு டவுசரை ஷெட்டில் விட்டு விட்டான். அதை எடுக்கலாம் என்று போன நேரம் மத்தியான சாப்பாட்டு நேரம். சாப்பிட வராமல் டாக்டர் பையன் காம்பவுண்டுக்குள்ளே சைக்கிள் சுற்றிக் கொண்டிருந்தான். டாக்டர் சம்சாரம் கூப்பிட்டு அலுத்துக் கொண்டிருந்தது.

அந்த பையனா? கேட்பான்? சுத்த வீம்பு புடிச்ச பயலாச்சே, கொஞ்ச நேரம் நின்று அம்மாவுடன் பேசியபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் காளி.

காளி திரும்பி வரும்போது - அந்த பையன் வீடியோவில் படம் ஓடும்போது கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப ரஜினியைச் சண்டை போட வைத்ததை நினைத்துக் கொண்டே நடந்தான். ரஜினிக்கு இந்தக் கதி ஆக வேண்டாம்.

பிச்சுமணியை எங்கோ காணவில்லை. உள்ளே சமையல் கட்டில் இருப்பான் என நினைத்துக் கொண்டான்.

"பெல்ட்" வாங்கிவிடலாம் என்று மார்க்கெட் பக்கம் போனான். கடையில் விலையை விசாரித்தான். பிறகு சும்மா விலையை மட்டும் கேட்க வந்தான் போல வாங்கும் விருப்பம் ஏதும் இன்றித் திரும்பினான்.

ஒரு மாங்காய் வாங்கி கீறி கடித்தபடி ரோட்டின் ஓரமாக நடந்து வந்தான். ஓட்டலுக்குப் போய் சோலையைப் பார்க்கணும் என்று வாசலில் நின்றான்.

சோலை மேஜை துடைத்த துணியை வாளியில் கொழ கொழ என்று பிழிந்த படி "சாப்பாடு போக நாற்பது ரூபாய்" என்றான். காளி கொண்டு வந்த மாங்காயில் பாதியை சோலையிடம் கொடுத்தான். ம்... யார்ரா அது என்று ஒருத்தன் சோலையிடம் கேட்டபடி வேகமாய் உள்ளே போனான்.

இந்தா போறானே இவன் மண்டையை ஒரு நாளைக்கு உடைக்கணும் என்றான் சோலை. கொஞ்சம் தூங்கிட்டா அடிப்பான். தடிப்பய மண்டையப்பாரு லூஸ்பய என்று சிரித்தான். காளிக்கு சிரிக்க வரவில்லை. ஈரத்திலேயே புழங்கி வெளிறிப் போயிருந்த, அவன் விரல்களையே பார்த்து நின்றான்.

மெல்ல நடந்து வீடு திரும்பினான். செக்கடித் தெரு திருப்பத்தில் ட்ரம் அடித்துக் கொண்டு சினிமா விளம்பர வண்டி போனது. கொஞ்சம் நின்று பார்த்தான்.

வழியில் கிடந்த சாக்கடையை தாவிக் கடக்காமல் சுற்றி நடந்து கடந்தான்.

நாளைக்கி மறுபடி வேலைக்கு வாயேண்டா என்று டாக்டர் சம்சாரம் கூப்பிட்டது. நீயும் இங்கே வர்றியா என்று சோலையும் கேட்டான்.

உள்ளே வந்து ஓலைப்பாயை விரித்துப் படுத்தான். பசித்தது உடனே எழுந்து சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே படுத்துக் கிடந்தான் கூரையைப் பார்த்தபடி.

அய்யாவின் ஞாபகம் பெருகிப் பெருகி வந்து கொண்டிருந்தது. அய்யாவின் தாடி - அய்யாவின் நெருக்கம் - அய்யாவின் வேர்வை வாசம் என.

நன்றி: காலச்சுவடு

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link