சிறுகதைகள்


வெளிப்பாடு

கூடல்.காம்
அவர்கள் மணிகர்ணிகா படித்துறையில் சந்தித்துக் கொள்ளும்படி நேர்ந்தது.

விஸ்வாஸ் கடுமையாக வெறுப்படைந்திருந்தான். முதலில் அவனுக்கு சடங்குகளில் நம்பிக்கை இல்லை. தவிர, அவன் தன் மனைவியை விட்டுவிட்டு வர வேண்டியிருந்தது. அவனுடைய எரிச்சலை அதிகப்படுத்தியது. பயணத்தின் போது, நாலாவிதமான உணவு வகைகளையும் சாப்பிட வேண்டிய சிரமத்திற்கு அவன் ஆளாக்கப்பட்டான். இங்கு நிலைமை சற்று மேலானதாக இருக்கும் என்று அவன் எண்ணினான். ஆனால் அவன் நினைத்தது தவறாகிவிட்டது. அவர்கள் தங்களுடைய குடும்ப புரோகிதர் வீட்டில் உணவு உண்பதாக முடிவு செய்யப்பட்டு விட்டது. விஸ்வாசுக்கு அதை நினைத்தாலே பிடிக்கவில்லை.

அலைமோதும் பக்தர்களின் கூட்டத்தை வெறுப்போடு பார்த்தபடி, எரிக்கப்படும் சடலங்களிலிருந்து எழும் புகை கண்ணைக் கரிக்க, விஸ்வாஸ் தன்னுடைய கைக்குட்டையை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டான். அழுக்குத் தண்ணீரில் இத்தனை பேர் முன்பாக குளிப்பது என்பது அவமானகரமான செயல் என்று அவன் நினைத்தான். ஜனக்ராயும் மங்களாகவும் அவனுடைய பெற்றோர்கள் என்பதை அவன் ஒரு கணம் மறக்க முயன்றான்.

"எவ்வளவு குருட்டுத்தனமான நம்பிக்கை, என்ன அறியாமை!" என்று அவன் நினைத்தான். நிமிடம் தோறும் அதிகரித்துக் கொண்டிருந்த ஜனங்களின் இடைவிடாத சத்தத்தினால், காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் கொளுத்தும் வெயிலில் இருந்ததால் அவனுக்கு ஏற்பட்டிருந்த வாந்தி எடுப்பது போன்ற உணர்வு, மேலும் அதிகரித்தது.

"முதலாளி ராஜாவுக்கு வெற்றி கிடைக்கட்டும்" அவனுடைய நெற்றியில் சந்தனக் குழம்பை இடுவதற்காக ஒரு புரோகிதர் முன் வந்தார். விஸ்வாசை அந்த பிராமணனின் முகத்தில் அறைய வேண்டும் என்பது போன்ற உணர்ச்சி உந்தியது. எப்படியோ, அவன் அதை கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தப் புரோகிதரைக் கடுமையாகக் கூர்ந்து பார்த்தான். பிராமணர் அந்தப் பார்வையைக் குறித்துக் கலக்கமடையாதவராக, "ஐயா, நீங்க எங்க தங்கப் போறீங்க?" என்று கேட்டார்.

"நரகத்துல!" சீறியபடி, விஸ்வாஸ் வேறு புறம் திரும்பிக் கொண்டான். அவனுடைய அம்மா மங்களாவை இன்னமும் எங்கேயும் காண முடியவில்லை. அந்தப் பிராமணனுடைய இடைவிடாத பேச்சுக்கு காது கொடுக்காமல், விஸ்வாஸ் மேலும் சற்று நேரம், அங்கு நின்றான். ஆனால், அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மங்களாவை அழைத்து வரும்படி விஸ்வாசுக்குச் சொல்லிவிட்டு, ஜனக்ராய் ஓய்வு இல்லத்திற்குப் போய்விட்டார். அவரைப் பற்றி தெரிந்த அளவில் அவர் இந்நேரம் சாப்பிடக் கூட உட்கார்ந்திருக்கலாம். விஸ்வாசும் பசியோடு இருந்தான். அந்த எண்ணம் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?" தன்னுடைய பெற்றோரின் புனிதப் பயணத்திற்கு துணையாகப் போக வேண்டுமென்பதற்காக, அவன் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு, விடுமுறை எடுத்துக்கொண்டு அங்கே வந்திருக்கிறான். ஆனால், அவர்கள் இரண்டு பேரும் துளி நன்றி அறிதலைக்கூட அவனிடம் காட்டவில்லை. இரண்டு தினங்களுக்கு வெளியே எங்கேயாவது தங்கிவிட்டு வரும் மகனுக்குக்கூட, வேறு எந்தத் தாயாக இருந்தாலும், நிச்சயமாகச் சுடச்சுட சமைத்துப் போட்டிருப்பார்கள். ஆனால், அவனுடைய அம்மாவுக்கு கடவுள்களையும், பெண் தெய்வங்களையும் தவிர வேறு எதற்கும் நேரமில்லை போல இருந்தது.

அவனுடைய அப்பாவும் அதற்குச் சற்றும் குறைந்தவர் அல்ல. ஒரு நாளைக்கு இரண்டு தடவை இல்லாவிட்டாலும், குறைந்தது ஒரு தடவையாவது சமைக்கும்படி அவர் ஏன் மங்களாவுக்கு உத்தரவிடவில்லை? நியாயத்துக்கு அவனுடைய அம்மா, அவனுடைய ஆடைகளைத் துவைத்து வைத்திருக்க வேண்டும். இந்தக் கசங்கிய அழுக்கு ஆடைகளோடு அவன் எப்படி வெளியே போக முடியும்?

காலம் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. வெம்மை மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. விஸ்வாஸ் பசியினாலும் தாகத்தினாலும் கிட்டத்தட்ட மயக்கமுற்றான். அந்தத் தருணத்தில் அவனுடைய அம்மா, அங்கே வந்தால் அவளிடம் என்ன பேசுவது என்பது சிந்திப்பதற்குக்கூட அவனுக்குக் களைப்பாக இருந்தது. பல புனிதப் பயணிகள் குளித்து முடித்து விட்டு ஏற்கனவே படித்துறையை விட்டுப்போய்விட்டா‘ர்கள். பிராமணர்களும் தங்களுடைய சன்மானங்களையும், சந்தனக் கிண்ணங்களையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்படத் தயாரகிக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அம்மாவைப் பற்றி இன்னமும் ஒரு தடயமும் இல்லை.

விஸ்வாசுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. எப்படியும் இது ஒரு புனிதத் தலம்; ஒரு வேளை அவள் வழி தவறியிருந்தால்? இந்த மனிதக் கடல் தவிரவும், பாதுகாப்பான தன்னுடைய வீட்டை விட்டு அவள் வெளியே வருவது இதுதான் முதல் தடவை. விஸ்வாசை பயம் கவ்வியது. வியர்வைக் கொப்பளித்தது. அவன் நடுக்கத்துடன் கூட்டத்தைப் பிளந்து கொண்டு போய், தன்னுடைய அம்மாவை தேடத் தொடங்கினான். அவளால் இந்தியில் பேச முடியாது. யாரிடமும், அவனுடைய முழுப் பெயரையும், விலாசத்தையும் கொடுக்கவும் முடியாது.

அவளுக்கு அந்தப் புரோகிதர் யார் என்றும், யார் வீட்டுக்கு அவள் சாப்பிடப் போக வேண்டுமென்றும் தெரியாது. அவனுடைய மனதில் இத்தகைய எண்ணங்கள் தோன்றியதும் விஸ்வாஸ் மேலும் அச்சமுற்றான்.

சாம்பல் கலர்ச் சேலை அணிந்த ஒரு பெண்மணியைத் தேடிக் கண்டதும், விஸ்வாஸ் அந்தத் திசையில் திரும்பினான். ஆனால் அந்தப் பெண் மிகவும் பருமனாகவோ, அல்லது மிகவும் ஒல்லியாகவோ, அல்லது மிகவும் உரத்தக் குரலில் பேசிக் கொண்டுமோ இருந்தாள். அவனுடைய அம்மா சத்தமாகப் பேசி யாரும் கேட்டதில்லை. வீட்டில் அவள் சமைத்துக் கொண்டும், யாருடைய காணாமல் போன பொருளையாவது தேடிக் கொண்டும், உரத்த குரலில் அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் யாருடைய பேச்சையாவது தலை குனிந்து கேட்டுக் கொண்டோ, நாள் முழுக்கத் தன்னுடைய வீட்டு வேளைகளில் மூழ்கி இருப்பாள். முதலில் அவளுடைய மாமனார், மாமியார்; பிறகு அவளுடைய கணவன்; இப்போது அவளுடைய மகனும் மருமகளும்.

அவள் தன்னுடைய சொந்த விருப்பத்தை திருப்தி செய்து கொள்வதற்காக எதையாவது செய்ததாகவோ, யாரையாவது மறுத்துப் பேசியதாகவோ, விஸ்வாசினால் நினைவு கூர முடியவில்லை. அவள் பேசும்போது எப்போதாவது மிக அபூர்வமாக அது நிகழும்போது அவளுடைய பார்வை தாழ்ந்து இருக்கும்; அவளுடைய முகம் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது. விஸ்வாஸ் வளர்ந்த பிறகு தன்னுடைய அம்மாவுக்கு என்று தனிப்பட்ட ஆளுமை எதுவும் கிடையாது என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டான். அவள் எப்போதும் இருப்பதைப் போலவே, தொடர்ந்து இருந்து வந்தாள். அவளை வழி நடத்த எப்போதும் யாராவது இல்லையென்றால் என்னவாகியிருக்கும்? தன்னுடைய மனைவியை அவளோடு ஒப்பிட்டுப் பார்த்த போது, அவன் மனதில் பெருமை பொங்கியது. அவன் தன் மனைவியைப் பற்றி நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.

குழந்தைப் பருவத்தில் இருந்து, தன்னுடைய அம்மாவைத் தான் அதிகாரம் செய்து வருவது சரியல்ல என்று, அவன் எப்போதும் உணர்ந்தது இல்லை. இன்றைக்கு கூட, பரீச்சயம் இல்லாத சூழலில், புதிய ஊரில் அவளைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவளைக் கண்டுபிடித்த உடனேயே கடுமையாகத் திட்டவேண்டுமென்பது தான் அவனுடைய முதல் எண்ணமாக இருந்தது.

உண்மையில், நேரம் என்பதைப் பற்றி அவளுக்கு சரியான தெளிவே இல்லை. புனித நீராடலை முடித்து விட்டு, இந்த சில படிகளில் ஏறி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? ஒரு வேளை எதாவது பூஜை செய்து கொண்டிருக்கும் பிராமணர்களோடு அவள் உட்கார்ந்து கொண்டிருப்பாள். ஆனால், அதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? பதினேழு தலை முறைகளின் பாவத்தைப் போக்கக் கூடிய அளவு, அவ்வளவு நீண்ட நேரம் ஆகிவிட்டது! அதோ, அதோ, அவள்! ஒரு பிராமணனின் வண்ணக் குடைக்கு பக்கத்தில், இரண்டு பெண்மணிகள் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொண்டு, சுவாரசியமான உரையாடலைப் போல தெரிந்த பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். விஸ்வாஸ் ஒரு நொடிப்பொழுது சற்றுத் தயங்கினான்.

சாம்பல் வண்ணச் சேலையில் இருந்த அந்தப் பெண், அவனுடைய அம்மாவாக இருக்க முடியாது. ஆனால்; அவள் அவனுடைய அம்மா தான் என்பதில் சந்தேகமில்லை.

விஸ்வாசுக்கு கோபமாக வந்தது. அவன் அந்தத் திசையில் விரைந்தான். நடந்து சென்றபோது, யார் அவன் மீது மோதினார்கள், யார் உருண்டு விழுந்தார்கள், யார் திட்டினார்கள் என்பதை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை.

அவளை நெருங்கியதும், "அம்மா" என்று அவன் அழைத்தான். ஆனால், இருவரில் ஒருவரும் அவனைப் பார்க்கவில்லை. அவர்கள் தங்களுடைய பேச்சில் ஆழ்ந்து போய் இருந்தார்கள். ஏதோ, சமாதி நிலையில் இருப்பதைப் போல அவர்கள் இருந்தார்கள். கொளுத்தும் பூமியையோ, சுட்டெரிக்கும் சூரியனையோ பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. நெருக்கி அடித்துக் கொண்டிருந்த கூட்டம் அவர்களை எரிச்சல் படுத்தவில்லை. மனித அனுபவத்தின் நிலையற்றத் தன்மையை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்த மணிகர்ணிகா படித்துறையின் சோகமான சூழலைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை.

மற்ற பெண்மணி, கையைத் தட்டி, "உனக்கு ஞாபகம் இருக்குதா மணி? நீ ஒரு நாடகத்துல இராஜாவா நடிச்சப்ப, நம்ம யசோதா அவளுடைய வசனத்தை எல்லாம் மறந்துட்டாளே"

"நாம்தார் .....ஜஹன்பனா ......நாம்தார்...." யாரையோ பழிப்பது போல மங்களா திருப்பிச் சொன்னாள்... தன்னுடைய குழந்தைப் பருவத்தின் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளும்போது, விழுந்து விழுந்து சிரித்த அவள், தன்னுடைய அம்மா மங்களாதானா? விஸ்வாஸ் அவளை வியப்போடு உற்றுப் பார்த்தான்.

"அப்புறம் சாந்தி, நீ தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சிட்டு இருந்தே...."

"ஆமா, ஆமா, அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீ என்னை சரியான நேரத்துல பிடிச்சு இழுக்காம இருந்திருந்தா நான் எரிஞ்சு செத்தே போய் இருப்பேன்".

அவர்களுடைய உரையாடலுக்கு ஒரு முடிவே இல்லை போல இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு, இரண்டு வளரிளம் பருவத்துப் பெண்கள் தங்களுடைய நேசம் மிகுந்த நட்பையும், வாழ்க்கையையும் மீண்டும் வாழ்ந்து வாழ்வின் மலர்ச்சியில் திளைத்துக் கொண்டிருப்பதைப் போல அது இருந்தது. கடந்து போன ஆண்டுகளில் மென்மையான மகிழ்ச்சிகளும், முடிவற்ற விந்தைகளும், அந்த நடுத்தர வயதுப் பெண்களின் முகத்தில் மீண்டும் பளிச்சிட்டது. அங்கு நின்று, அவர்கள் பேசுவதை கவனித்தபடி இருந்த விஸ்வாஸ் குழம்பிப் போனான்.

மங்களா நீண்ட நேரத்துக்குப் பிறகு, விஸ்வாசைக் கவனித்தாள். உடனடியாக, அவளுடைய முகம் உறைந்து போனது. அவள் படபடப்புடன், "எவ்வளவு நேரமா நீ இங்க நின்னுகிட்ட இருக்கேப்பா" என்றாள்.

விஸ்வாஸ் மென்மையாக, "ஓ, ரொம்ப நேரமாயிடல" என்று பதிலளித்தான்.

"நான்.... நான் வந்து... வழியிலே சாந்தியைப் பார்த்தேன்.. உங்கப்பா எங்கே போயிட்டாரு?"

"அவரு ஓய்வு இல்லத்திற்கு போயிட்டாரு. நாம்ப இப்ப அங்கே போகலாமா?"

"சரி போகலாம்" மங்களா குற்ற உணர்வோடு தன்னுடைய துணி மூட்டையை எடுத்துக் கொள்ளத் தொடங்கினாள்.

"அந்தத் துணிங்களை எங்கிட்ட கொடும்மா" என்றான் விஸ்வாஸ். அவளிடமிருந்து மூட்டையை வாங்கிக் கொண்டு புன்முறுவலோடு அவன், அந்தப் பெண்மணியைப் பார்த்து "உங்க மூட்டையும் நான் எடுத்துகிட்டு வர்றேன்" என்றான.

"எடுத்துகிட்டு வாப்பா, கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும், நீ என்னை அடையாளம் தெரிஞ்சிக்கணுமுன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? நானும் உங்க அம்மாவும் குழந்தைகளாக விளையாடியிருக்கோம்..."

விளையாட்டா....! அவனுடைய அம்மா எப்போதாவது அவளுடைய சிநேகிதிகளோடு விளையாடியிருக்கிறாளா? அவள் எப்போதாவது சிறுமியாக இருந்திருக்கிறாளா? பதில் இல்லாத நூறு கேள்விகள் விஸ்வாசின் மனதில் துள்ளி எழுந்தன. பழக்கமில்லாத உணர்வுகள், வானவில்லின் வண்ணத்தைப் போல, அவன் மனதில் பொங்கின. கிளர்ச்சியடைந்த அவன், தன்னுடைய அம்மாவிடம் எதையோ சொல்லுவதற்காகத் திரும்பினான். அவர்கள் இருவரும் மீண்டும் உரையாடலில் மூழ்கிப் போய் இருந்தார்கள்.

"மணி, இது உன் மகனா? அவன் பேர் எனன?"

"விஸ்வாஸ்".

"நல்ல பேரு. நல்ல பையனாகவும் தெரியறான்"

அவர்கள் சில அடி தூரம் ஒன்றாக நடந்தார்கள். சாந்தி, திடீரென்று "அவன் விநாயக் போலவே இல்லையே?" என்றாள்.

விஸ்வாஸ் அதிர்ச்சியடைந்தவனாக அவனுடைய அம்மாவைப் பார்த்தான். அவளுடைய முகத்தில் ஒரு கருநிழல் படிந்தது. அவளால் நடுங்கும் குரலில், "சாந்தி, அந்த நிச்சயதார்த்தம் முறிஞ்சிப் போய், என்னை வேற ஒரு இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்கங்கிறது உனக்குத் தெரியாதா?" என்று மிகவும் மெதுவாக முணுமுணுக்க மட்டும்தான் முடிந்தது.

ஒரு அசௌகரியமான மௌனம் மூவரையும் பற்றிக் கொண்டது. அவர்களுக்கு முன்னால் இருந்த சீட்டுக் கட்டுகளாலான அழகிய வீடு, ஒரேயடியாகக் கலைந்து கீழே விழுந்து விட்டதைப் போல இருந்தது. பளிச்சிடும் வண்ணங்களோடு ஜொலித்த சோப்பு நுரைக்கட்டிகள் சட்டென்று உடைந்தன. படித்துறையின் படிக்கட்டுகள் முடிவின்றி நீள்வதைப் போல இருந்தது. சூரியனின் வெம்மை சகித்துக் கொள்ள முடியாததாக, தாங்க முடியாததாக ஆயிற்று.

அவர்கள் மேலே சென்று சேர்ந்ததும், மங்களா, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, "தம்பி உன்னுடைய அப்பாவின் பெயரையும் விலாசத்தையும் தயவு செய்து சித்திக்குக் கொடு" என்றாள்.

பெயர்களும், விலாசங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அந்தப் பெண்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டார்கள். ஆனால் அது வெறும் சடங்கு தான். படித்துறையின் கீழ்ப்பக்கத்தில் இருந்த கடைசிப் படிக்கட்டிலே அவர்களுடைய உண்மையான சந்திப்பு முடிந்து விட்டது.

நன்றி: தீராநதி
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link