சிறுகதைகள்


விடுதலையே சிறையாக

கூடல்.காம்
நினைவுகள் வதை செய்தன. ஆலமரம் வழக்கமாக ஆறுதல் கூறிற்று. நான் குற்றவாளி அல்ல. எனக்குத் தெரியும். கொஞ்சம் யோசித்தால், எல்லோருக்கும் தெரியும். இருந்தும் நான் ஏசப்படுகிறேன். எல்லோராலும் ஏசப்படுகிறேன். என்னைச் சார்ந்தவர்களால், மன்னிக்கவும், நான் சார்ந்திருக்கும் நபர்களால், இந்த சமூகத்தால் எப்போதும் நான் கேலிப் பொருளாயிருக்கிறேன். இது ஏன்? பதில் இல்லை. அவர்களால் தரவும் முடியாது. குருடனாய் பிறந்தால் அது பிறந்தவன் குற்றமா? இல்லை, அது படைத்தவன் குற்றம். மனித இனமே குருடனாய் இருப்பவனுக்கு வழிகாட்டு! இல்லையேல் விலகிச்செல். அவன் தட்டு தடுமாறி முன்னேறட்டும். "குருட்டு முண்டமே!..." என்று உன் வக்கிர வார்த்தைகளால் அவனை பலவீனப்படுத்தாதே!

மரத்திலிருந்து குயில் கூவியது, குக்கூ...குக்கூ... "என்னைப்பார்... மானுடனே! என் சுதந்திரம் பார்!" என்பது தான் அதன் பொருளோ! என் இனிய குயிலே! எனக்கு.... இந்த மானுடப்பிறவிக்கு, உன் போன்ற சுதந்திரம் இல்லையே. "அரிது! அரிது!! மானுடராய் பிறத்தல் அரிது" என்று என்றோ எங்கேயோ! யாரோ! சொன்னாராமே! அவர் என் போன்றோரைப் பார்த்ததில்லை போலும்!

மனது கனத்தது, ஆலமரத் தென்றல் "சுமை"யை குறைக்க முயற்சி செய்து தோற்றுப் போனது. எழுந்து, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

இயற்கை அன்னையின் நிழல் "குடிசை"யில் பிச்சைக்காரன் ஒருவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். இயற்கை அன்னைக்குத்தான் எவ்வளவு பரந்த மனது! அவள் என் தாயைப்போல் மூத்தவன், இளையவன், சம்பாதிப்பவன், சம்பாதிக்காதவன் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. என் தாய் மட்டுமா? இம் மண்ணில் பிறந்த எத்தனை தாய்கள் இப்படி இருக்கிறார்கள்! இயற்கை மாதாவே! உன் மனப்பக்குவம் இந்த அன்னைகளுக்கு எப்போது வரும்?

"அம்மா! நானும் உன் வயிற்றில் தானே பிறந்தேன்? எனக்கு வெறுஞ் சோறிட்டு, அண்ணனுக்கு மட்டும் பதார்த்தமிட எப்படி அம்மா, உனக்கு மனசு வருகிறது? அண்ணன் சம்பாதிக்கிறான் என்பதாலா? அம்மா! அந்த ஆலமரத்தைப்பார், கீழே கிடக்கும் பிச்சைக்காரன் கந்தல் துணியோடு இருந்தாலும், பல நாள் குளிக்காமல் நாற்றமெடுத்து கிடந்தாலும் அது நிழல் தராமல் ஒதுங்கிக் கொள்ளவில்லையே! நீ மட்டும் ஏன் இப்படி? உனக்கு ஆறறிவு என்பதாலோ? இல்லை, "சரித்திரத்தில் கோன் குடிமக்களை வேறுபடுத்திப் பார்ப்பானில்லை என்ற கதைகளை நீ படிக்காமல் போனதாலா? வேண்டாம். உன் அன்பு வேண்டாம் பரிவு வேண்டாம். ஆனால், மற்றவரைப் போல் நீயும் என்னை கடுஞ்சொல்லால் காயப்படுத்தாதே!"

பிச்சைக்காரன் தூக்கத்தின் உச்சத்திற்கு சென்றிருந்தான். இலைகளின் சலசலப்பு, அவன் குறட்டை சத்தத்தை ஏப்பம் விட்டன. இவனால் எப்படி நிம்மதியாக உறங்க முடிகிறது? இவனெல்லாம் போன ஜென்மத்தில் பாவமே செய்ததில்லையோ? பின் எப்படி? - புரிந்தது, அவன் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

ஓடையில் வாத்துக் கூட்டம் "பேக்... பேக்...." என்ற சத்தத்துடன் உலா வந்தன. சிட்டுக் குருவிகள் தொட்டுப் பிடித்து விளையாடின. எருமை மாடுகள் தலை மட்டும் வெளியில் தெரிய தண்ணீருக்குள் காலையில் உண்டதை மெதுவாய் அசை போட்டுக் கொண்டிருந்தன. உலகில் என்னைத் தவிர எல்லா ஜீவராசிகளும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றியது எனக்கு!

ஆடு மேய்க்கிறவன், கையில் இருக்கிற குச்சியால், கூட்டத்தை விட்டு விலகின ஆட்டை "சுல்" லென்று அடித்த போது "அது" ஆங்கில மாதத்தில் ஒன்றைச் சொல்லிக் கொண்டே, கூட்டத்தோடு ஒன்று சேர்ந்தது. ஆனால், அடிக்கும் போது சிறுவன் "சனியனே!" என்று திட்டியதற்காக கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. ஆட்டுக்கு "தமிழ்" தெரியாததாலா?

எனக்குத் "தமிழ்" தெரியும். "வேளா வேளைக்கு கொட்டிக்கிறியே, அறிவில்லையா? இதைச் செய்யக் கூடாதுன்னு" சட்டையை மாட்டிக்கொண்டே பையனை அண்ணி திட்டிய போது எனக்கு "சுருக்" கென்றது.

பையனுக்கு ஐந்து வயது. அவனுக்குத் தெரியுமா? இது தவறென்று? அவனுக்குத் தெரியுமா, தெரியாதா? என்பது அண்ணிக்குத் தெரியாதா? இருந்தும் திட்டுகிறாள். அப்படி என்றால் என்னைத்தான் ஜாடையாகப் பேசுகிறாள்.

நான் ஏன் இப்படி நினைக்கனும்? நாளெல்லாம் வேலை செய்த கலைப்பினால் அவள் பேசியிருக்கக்கூடும் அல்லவா? இருக்காது. நான் இருக்கும்போது மட்டுமே, குழந்தைகள் எது செய்தாலும் அண்ணிக்கு தவறாகப்படுகிறது. நான் இல்லாத நேரங்களில் குழந்தைகள் எது செய்தாலும் பொறுத்துக் கொள்கிறாள். அப்படி என்றால்.... என்னைத்தான்.... ஆம்! என்னைத் தான் ஜாடையாக திட்டுகிறாள். "வேலையில்லாத தண்டமே! வேளா வேளை வந்து கொட்டிக் கொள்கிறாயே! வெட்கமாயில்லையா! என்று சொல்லாமல் சொல்கிறாள்.

அவள் சொல்வது போல எனக்கு மானமில்லாமல் தான் போனதா! அவளின் ஏச்சுகளை பொறுத்துக் கொண்டு நான் ஏன் வீட்டோடு இருக்க வேண்டும்? வெளியேறி விடலாமா? வெளியேறினால் மட்டும் என்ன ஆகப் போகிறது? ஏசப்படுவதன் பொருள் மாறும் அவ்வளவுதான்! "வேலையில்லாம தண்டமா சுத்திண்டிருந்தான். அண்ணிகாரி ஏதோ கோபத்துல ரெண்டு வார்த்தை பேசியிருப்பாப் போல இருக்கு. மாப்பிள்ளை, முறைச்சிண்டு வீட்டை விட்டு போய்விட்டார்" ஊர் முற்றும் அறிந்தது போல் கூசாமல் பேசும். ஊருக்கு வாழ வைக்கவும் தெரியாது, வாழ விடவும் செய்யாது. பிறந்தான் விஷயம் என்றால் அதற்கு அவல்!

வெளிய போய்தான் நான் என்ன செய்வேன்? "மாசம் முன்னூறு ரூபா வாங்கிக்க. காலை 8 மணிக்கு வந்து கடையைத் திறக்கணும். மதியம் 1 மணியில் இருத்து 4 மணி வரை சாப்பாட்டு நேரம். 4 மணியில் இருந்து நைட் 10 மணி வரைக்கும் கடையை பார்த்துக்கணும்." பணம் கொழிந்த கனவான்கள் மனித உழைப்பை "சொற்ப" விலைக்கு வாங்கும் சாதுர்யணத்தில், வேலை கேட்பவனுக்கு பதிலுரைப்பார்கள்.

"ஏய்... வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?" குரலைக் கேட்டு நினைவுக்கு வந்ததும்தான் தெரிந்தது, நான் மரணத்தின் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பி இருக்கிறேன் என்பது.

"ஸாரி, ஸார்" என்றேன் தயக்கமான குரலில், அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. "போ! போ! சாவு கிராக்கி, என் வண்டிதான் கிடைச்சுதா!" சொல்லிக்கொண்டே லாரியை கிளப்பினான். மீண்டும் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

"தம்பி, என்ன செஞ்சுக்கிட்டிருக்காப்ல" நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "படிச்சுட்டு சும்மா தான் இருக்கான்" அண்ணன் பதில் சொன்னார்.

"தம்பி வேலைக்கு ஏதும் ட்ரை பண்ணலியா? சும்மா இருந்தா காலத்த ஓட்ட முடியுமா? வேலை அதா கிடைக்காதுப்பா நாமதான் நாலு இடத்துக்கு அலையணும்" தான் அரசாங்க உத்யோகத்தில இருக்கிற திமிர் நண்பர் வாயில் வார்த்தைகளாக உதிர்வதாய் என் மனசுக்குள் ஒரு எண்ணம்.

நாலு இடத்துக்குப் போவலாமே! எங்கே? பதினைஞ்சு ரூபா இருந்தா கொடுங்க, முடிச்சுடுவோம்!! என்னவோ தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு பொருளை விலை பேசுவதுபோல், வேலையை விற்றுக்கொண்டிருக்கும், பழகிப் புளித்துப்போன, முகங்களுக்கு மத்தியில் எங்கே போவது?

ஏன் இந்த மனிதர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். தன்னை மட்டும் புத்திசாலியாய், பராக்கிரமசாலியாய் முன்னிறுத்திக் கொள்கிறார்கள்.

"நாடு கெட்டுப்போச்சுப்பா... எங்க பார்த்தாலும் லஞ்சம், ஊழல்.. ம்ஹீம்..." என பெருமூச்சுவிடும் அதே புண்ணிய ஆத்மாக்கள்தான் இப்போது எனக்கு அறிவுரை கூறுகின்றன. "சும்மா கிடைச்சுடுமா வேலை, பத்து இருபது செலவழிக்கணும்"

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. வாழ்வின் நெருக்கடிகளும், நிர்பந்தங்களும் இவர்களின் நாக்கைப்புரட்டிப் போட்டிருக்கிறது. அவசர உலகில் மாற்றங்கள் இல்லாத மனிதன் பைத்தியக்காரன் மனமாற்றம், நாகரீகமாற்றம், பண்பாடு மாற்றம் எல்லாம் இன்றைய உலகின் பரிணாம வளர்ச்சிகள், இப்படித்தான் இன்றைய சிந்தாந்தவாதிகள் சொல்லிக் கொள்ள வேண்டும். மாற்றிச் சொல்பவர்கள் முகவரி இழந்து போவார்கள்.

எல்லாமே பணம்! பாசம், கடமை, கண்ணியம் எல்லாம் பின்னால். "நீங்கள் எப்படி வேண்டுமானால் ஒழியுங்கள். என்னை மாறாதிருக்க விடுங்கள்". சமூகத்தை நோக்கி விடப்பட்ட எனது கூக்குரல், எனது இயலாமையை காரணம் காட்டி பரிகாசிக்கப்படுகின்றன.

பக்கத்து வீட்டில் சண்டை அந்த வீட்டுப் பையன் தெருவில் கிடந்த பர்ஸைக் கொண்டு வந்து அவன் அம்மாவிடம் கொடுத்தானாம். பர்ஸ் சொந்தக்காரருக்கு இது தெரிந்து "ஏம்மா, நீயெல்லாம் பெரிய மனுஷியா? சின்னபுள்ள கொடுத்தா யாருது, எவருதுன்னு விசாரிச்சுக் கொடுக்க வேண்டாமா?" என்று சொல்லவும் ஒரு யுத்த காண்டம் துவங்கியது.

நான் ஒரு முறை, இதே போன்ற ஒரு பொருளை என் தாயிடம் கொடுத்தபோது, மரகதம் சின்னபுள்ள கொண்டு வந்ததுதானேன்னு வச்சுக்காதே! யார் வீட்டுப் பொருள் நமக்கெதுக்கு? யாருதுன்னு விசாரிச்சுக் கொடுத்துடு! என்று என் தாய்க்கு புத்தி சொன்ன அதே பக்கத்து வீட்டு அம்மாள்தான், இப்போது தனது செயலுக்கு, நியாயம் கற்பித்து வாதிட்டுக் கொண்டிருக்கிறாள்.

"யாருதுன்னு எனக்கெப்படி தெரியும்? ஏதோ சின்னப் பையன் கொடுத்தானேன்று வச்சிருந்தேன்" இது அவள் தரப்பு வாதம்.

"தவறை நியாயம் கற்பிக்க வழி உண்டு" என்று தெரிகிற வரையில், இந்த மனிதர்கள் தவறு செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால், இன்று இவர்கள் புத்திசாலிகள்!

இந்த புத்திசாலிகளோடு மற்றொரு புத்திசாலியாக வாழ எனக்கு விருப்பமில்லை. பக்கத்து வீட்டுப் பையன் என்னை அடித்தபோது திருப்பி அடித்தாலும், அடிக்காமல் விட்டாலும் வழக்கமாக என் மீதே வசவுகளை அள்ளி வீசும் எனது தாய் எனக்கு வேண்டாம். தான்தான் பராக்கிரமசாலி என்ற எண்ணத்தோடு என்னை சமூகத்தின் பரிகாசப் பார்வையில் பரிதவிக்கவிடும் அண்ணன் எனக்கு வேண்டாம். எந்நேரமும் இளக்காரமாய் பேசும் அண்ணியையும் எனக்கு பார்க்கப் பிடிக்கவில்லை.

"டேய், ரோட்டுல விளையாடாதே!" தம்பிக்கு எனது அறிவுரைகள் சென்ற போது "நீ உன் வேலைய பாத்துப்போ" என்பது பதிலானது.

"பாலு, பெரியவங்கள் எதிர்த்துப் பேசக்கூடாது" அண்ணன் கூறியபோது, தம்பி மௌனமானான்.

என் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை, பயனை தம்பிக்கு அறியவைக்க அண்ணனுக்கு மனதில்லை. என்மீது தவறு இருப்பது போல் வார்த்தைகளைக் கையாண்டு, தம்பிக்குக் சமாதானம் சொன்ன அண்ணனின் செய்கை பெருந்தன்மையா? ஏளனமான? புரியவில்லை எனக்கு.

"என்ன தம்பி. இப்படியே நட பழகறாப்ல இருக்கு" எதிர்த்த வீட்டு இளமுருகு அண்ணன் கேட்டபோது, இரண்டாம் முறையாக நினைவு திரும்பினேன்.

"இல்லண்ணே, சும்மாதான்" பதில் தயாராக இருந்ததுபோல் தானாகவே வந்தது. "சும்மா தான்" என்பது பழகிப்போன வார்த்தை தானே!

மீண்டும் அதே ஆலமரத்திற்கே வந்து சேர்ந்திருந்தேன் எனக்கு பிடித்த அதே ஆலமரம். அந்தக் குயில் இப்போது இல்லை. எங்காவது சுதந்திரமாய் திரியும். எனக்கு அந்த சுதந்திரம் கிடைக்காதா?

அண்ணியின் வசவுகளிலிருந்து... அண்ணனின் பரிகாசத்திலிருந்து... அம்மா காட்டும் பரிதாப உணர்வில் இருந்து... தம்பி, தங்கைகளின் மரியாதை குறைவிலிருந்து சமூகத்தின் இளக்காரப் பார்வையிலிருந்து.. எனக்கு விடுதலை கிடைக்காதா?

இந்த அம்மா இல்லாவிட்டால்.... அண்ணி இல்லா விட்டால்.. நானும் குயிலே! உன்னைப்போல்....

மீண்டும் குரல் வந்தது. பின்னாலேயே இன்னொன்றும் ஆண் குயில் துரத்த, பெண் குயில் விருப்பமின்றி ஓடியது.

தூரத்தில் பரமசிவம் சைக்கிள் மிதித்து வருவது தெரிந்தது. அவசரமாய் வந்தான். கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு ஆலமரத்தடியில் சாய்ந்தேன். அதே சுதந்திரக் கனவுகள் அண்ணன் இல்லாவிட்டால்.... அண்ணி இல்லாவிட்டால்......

"ராசையா, நீ இங்கேயா இருக்க, உன்ன எங்கு தேடறது" பரமு பதற்றப்பட்டான்.

"ஏன் பரமு, என்ன விஷயம்?" அமைதியாய் எழுந்தேன்

"என்னவா? அங்க உங்க வீடு பத்தி எரிஞ்சிட்டிருக்கு. உங்க வீட்டு மனுஷாளுங்க யாரும் வீட்டை விட்டு வெளிய வரமுடியாம, உயிருக்குப் போராடிட்டிருக்காங்க நீ என்னடான்னா....."

அவன் சொல்ல, சொல்ல மின்னலும், இடியும் கலந்து வந்து என் பிராணனைத் தாக்குவது போலிருந்தது.

"ஓ! கடவுளே!" "என்னையறியாமல் என் வாய் கடவுளுக்கு விண்ணப்பம் போட்டது" அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது.

சிறுவன் ஒருவன் கல்லால் தாக்க, ஆண் குயில் சுருண்டு விழுந்தது. பெண் குயில் கூவியது. கூவலில் சோகம் இழைவது தெரிந்தது.

ஓடினேன். முழுத்திறனையும் காலுக்குச் செலுத்தி ஓடினேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னால இருந்த கனவுகள்... சுதந்திரக் கனவுகள் இப்போது நொருங்கிப் போயின.

"இப்படியே... சுத்திக்கிட்டிருந்தா எப்பதான் உருப்படறது. நான் நல்லா இருந்து, அவன் சீரழிஞ்சா அது நல்லாவா இருக்கும். நான் அவனை திட்டறேன்னு கோவிச்சுக்காதேம்மா. அப்பவாவது அவன் கொஞ்சம் பொறுப்ப உணர மாட்டானான்னுதான் திட்டறேன். எனக்கு மட்டும் அவன் நல்லா இருக்கணும்னு ஆசையில்லையா என்ன?" என்றோ ஒரு நாள் அம்மாவிடம் அண்ணன் பேசிக் கொண்டிருந்தது மனத்திரைக்கு வந்தது. அன்று "சப்பைக் கட்டு" என்று நினைத்தேன். இன்று அதுதான் உண்மையாகப்படுகிறது.

"ஏங்க, இந்த பரீச்சையிலாவது தம்பி "பாஸ்" செஞ்சு வேலை கிடைச்சுடுமா? பாவங்க அது சுத்தி, சுத்தி வந்து மனக்கஷ்டப்படறத பார்த்தா என்னவோ போல இருக்குங்க" அண்ணனிடம் அண்ணி சொன்ன வார்த்தை இப்போது நினைவுக்கு வந்து உரைத்தது. அன்று அதை "இளக்கார உணர்வு" என நினைத்தேன். இப்போது அது "அக்கறை" என்பதாய் உள்ளுணர்வு கூறுகிறது.

"ராசையா, நீ எங்க வேணா சுத்திக்க எப்படிவேணா சுத்திக்க வேளா, வேளைக்கு சாப்பிட்டுப் போயிடுடா" அம்மா வார்த்தைகள்...... ஓ! ஆலமரமே! என் தாயும் உனக்குச் சளைத்தவள் அல்ல!

"ஆண்டவனே! சகோதரன் போனால் பாதிபலம் போச்சாமே! என் அண்ணன் எனக்கு வேண்டும். அண்ணி வேண்டும். என்றும் என் மீது அக்கறை கொள்ள என் தாய் வேண்டும். விட்டு விடு! தயதுசெய்து, அவர்களை விட்டு விடு!" என் மனம் கெஞ்சுகிறது.

தூரத்தில் அக்னி பிளம்பின் நடுவில் என் வீடு தெரிந்தது சுற்றிலும் கூட்டம். வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது.

கால்கள் சக்கரமாய் மாறின! ஆனால் அதைவிட வேகமாய், உக்கிரமாய் தீ! பிரயோஜனமில்லை. எல்லாம் முடிந்தாகி விட்டது. நானும் நெருப்புக்குள் புக முடியாமல் பிடித்துக் கொண்டு விட்டார்கள்.

இதோ! நான் கேட்ட சுதந்திரம்! ஆனால், அதுவே சிறையாக! ஆம்! சமூகச் சிறையில் அனாதைக் கைதியாக நான்.

மறுபடியும் என் ஆலமரம் சென்றேன். நினைவுகள் வதை செய்தன. ஆலமரம் வழக்கமாக ஆறுதல் கூறிற்று. நான் இனி யாராலும் ஏசப்படப்போவதில்லை. ஆனால் குயில் பாடியது.. "குக்கூ... குக்கூ..." நீ ஒரு அனாதை யாருக்காக வாழப்போகிறாய்? என்பதுதான் அதன் பொருளோ?

நன்றி: வைகைகுயில்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link