சிறுகதைகள்


சிறகு

கூடல்.காம்
வெண்மை என்றால் அப்படி ஒரு வெண்மை. மென்மினுக்கத் தூய்மை. உயிர்த்துடிப்பான கண்கள். பார்ப்பவர் கண்களை வலிந்து சிறைப் பிடிக்கத்தக்க அழகு. மெல்ல மெல்லத் தத்தி நடக்கும்போது அப்படியே கைகளில் அணைத்தெடுத்து தூக்கி மடிமீது வைத்துக் கொள்ளத் தோன்றும் எவருக்கும். அவனுக்குப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு எவர் வந்தாலும் அவர் கவனம் திருப்பி ஒருமுறை தன்னைப் பற்றிக் கதைக்க வைக்காமல் விடாது அந்த வெள்ளைப் புறா.

கூடென்று ஏதுமில்லை. வீட்டினுள் பலகாலம் வசித்து வருவதில் தனது வாழ்விடம் அதுவென்று அதற்குப் படினப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அவ்வகையில் அது முட்டாள்தனமுடையதாக இருப்பினும் கூட சிலபொழுதுகளில் இந்தப் புறாவே உலகிலுள்ள சகல புறாக்களிலும் அதி புத்திசாலியெனத் தோன்றும் அவனுக்கு. அதன் சில செயல்களைப் பார்க்கும்போது எப்படி இத்தனூண்டு சின்னப் பறவைக்குள் இத்தனை அறிவு வந்ததோ என்று வியப்பான். ஒருவேளை அவ்வெண்ணம் "காக்கைப் பொன்குஞ்சோ" என்னமோ?

இந்தப் புறா அவனுக்குக் கிடைத்த விதம் இப்போதும் அவனது நெஞ்சில் நிற்கிறது. வாடகைக்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர் வேறு வீடு மாறிப்போகும் போது விற்கமுடியாது தேங்கிப் போன பொருட்களாக நல்ல தமிழ் இலக்கண நூல்களும் ஒரு புறாக்கூண்டும் அவரிடம் மிஞ்சியிருந்தன. அவற்றை அவனிடம் அவர் கொடுத்தார் என்பதற்காக அவன் புறாவை வாங்கவில்லை.. புறாவானது அவனது குடும்பத்து நிம்மதியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாய்ப் போய்விட்டதனால் அவன் அதை வாங்கினான்.

பக்கத்து வீட்டுக்காரர் தன் தனிமை போக்க ஒரு புறாவை வளர்த்து வந்தார். கறுப்பும் வெள்ளையுமான அந்தப் புறாவில் சொல்லமுடியாத பிரியம் அவருக்கு. புறாவும் கூட்டினுள் அப்பாவித்தனமாய்த் தன் முகத்தை வைத்துக்கொண்டு அவர் கொடுக்கும் உணவுகளை உண்டுவிட்டு அல்லது உண்பதாகப் பாவனை பண்ணிவிட்டு வாழ்ந்து வந்தது. பெரும்பாலான மென்மாலைப் பொழுதுகளில் அவர் அதனைத் திறந்து விடுவார். திறந்து விடும் பொழுதுகளில் தோட்டத்துக் கதிரையிலிருந்து புத்தகம் படித்தபடி, புறாவிலும் ஒருகண் வைத்தபடி இருப்பார். புறா அவரது காலடியில் இருந்து ஏதாவது தானியத்தைப் பொறுக்கி உண்டபடி இருக்கும். அவர் அந்த புத்தகத்தை மூடி எழும்பப் புறா தானாகவே போய்க் கூட்டருகே நிற்கும். அதைக் காணும் போதெல்லாம் தானாகவே சிறைப்பட விரும்பும் பறைவகளும் உலகில் வசிப்பதை எண்ணி அவனுக்கு வியப்பாக இருக்கும். பறக்கும் நோக்கமற்ற சிறகுகளைக் கொண்ட அந்தப் புறா பின்னேரப் பொழுதுகளில் குழந்தை ரம்யாவின் குறும்புகளைக் குறைக்கப் பெரிதும் உதவியாக இருந்தது.

சிலநாட்களின் பிறகு ஒருநாள் அந்தப் புறாவின் நளினமாகக் கொத்தியுண்ணும் நாடகம் தோட்டத்தில் அரங்கேறவில்லை. அவன் வியப்போடு மதிவெட்டி விசாரித்தபோது அந்தப் புறா அவரிடம் மிகந்த வசவுகளை வாங்கிக் கட்டவேண்டியிருந்தது. அதன் உடல் மனம் சகலமும் அலசிய அந்த வசவுகளின் முடிவில், ஒரு தரக்குறைவான புறாவுடன் அது பறந்துப்போய்விட்டதாக அவர் சொன்னார். அத்துடன் பெண்களையும் புறாக்களையும் நம்பக்கூடாது என்று அவனுக்கு இலவச ஆலோசனையும் வழங்கினார். அது அவரது வழக்கம்தான். பெண்களின் சகவாசமே அற்று "பிரமச்சாரியாக" வாழ்ந்து வருகின்ற அவர் இல்லறவாதிகளையும் விட அதிகமாகப் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் நடையுடை பாவனைகளையும் விமர்சித்து வருவது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். இல்லறவாதிகளின் நடப்பியல் வாழ்வின் மீது இரகசியமாய் அவர் கொண்டுள்ள ஈர்ப்புதான் அவரது உணர்வுகள் முழுவதையும் பெண்களின் உலகம் மீது குவியப்படுத்தி எந்நேரமும் அவர்களை "அலச" வைக்கிறதோ என நினைத்தாலும் அதனை நேரடியாகக் கேட்டுவிடாத சமூகத்தில் ஒருவனாகவே அவனும் இருந்தான். பலவருடங்களாக மனங்கலந்திருந்து, இதய அன்பின் சுவைபிழிந்து மணம்முடித்த அவனே மனைவி என்ற பெண்மூலமாய் அறிந்து கொள்ள முடியாதிருக்கும் அவர்களின் உடலியல் ஆசை பற்றிய உள்மனக் கொதிப்புகளை அவர் தன் மனக்கண்ணில் கண்டு அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதென்பது சாதாரண விஷயமல்லத்தான். எப்படித்தான் இது அவருக்கு முடிகிறதோ? எது எப்படியிருந்தாலென்ன அது அவனுக்குத் தேவையும் இல்லை. குழந்தைக்குப் "புறாக் காட்டப் போகும்" பொழுதுகளில் அவரது "பெண்களின் உலகு பற்றிய ஆராய்ச்சிகளைக்" கேட்கும் சகிப்புத்தன்மை மட்டும் இருந்தால் போதும்.

சுதந்திரவாழ்வின் பால் ஈர்க்கப்பட்டுத் துணையோடு பறந்தோடிவிட்ட அந்தப் புறாவின் நியாயங்களை அயல் வீட்டுக்காரர் புரிந்து கொள்ளாது இருந்தது போலவே ராம்யாக்குட்டியும் புரிந்து கொள்ளவில்€. "புறா பார்க்கப் போவோம்" என்று அவள் பிடிக்கும் பிடிவாதம், வேறு எந்தப் போக்குக் காட்டலிலும் மறைந்து போகாதபடியிருந்தது. அந்தப் புறா பறந்து போய் விட்டதாகச் சொல்லி, குழந்தையின் மேலதிக விளக்கத்துக்காகத் தூரப் பறந்து பார்வையிலிருந்து விலகும் ஒருகாகத்தைக் காட்டினான் அவன். அந்தப் பொழுதுக்கு குழந்தை அமைதியானாலும் மறுநாள் வீட்டுமுற்றத்தில் அமர்ந்திருந்த காகத்தைக் காட்டி அதுபோலப் புறா எப்போது திரும்பி வரும் என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள். வேறொரு புறா வாங்கித் தருவதாகப் பேரம்பேசிக் குழந்தையுடன் சமாதானம் ஆகியாயிற்று. ஆனால் பிறகு தினமும் இவன் அலுவலகம் போகும்போது எதிர்பார்ப்பைத் தேக்கி ஏமாந்து போகத் தொடங்கினாள் குழந்தை. அது அவனது நிம்மதியை குலைத்தது. அது போதாதென்று அவன் அதைப் புரிந்துகொள்ளவே இல்லையென்று மனைவியும் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டாள். அலுவலகத்தில் களைத்து வருபவனை வார்த்தைகளால் உலுக்கினாள். "ரம்யாக்குட்டி எங்கே?" கேட்படி வருவது அவன் இயல்பு.

"ரம்யாவும்.... குட்டியும்... பெரிய பாசந்தான்..."

"என்னப்பா... என்ன சொல்லுறீர் நீர்..?"

"என்ன சொல்லுறது....? என்னுடைய பிள்ளை எந்நாளும் புறா வருமென்று நினைச்சு ஏமாந்து போகுது..."

பெண்கள் தான் எவ்வளவு வேகமாகப் பிள்ளைகளை முற்றும் தமது உரிமையாக்கி விடுகிறார்கள். அவனும் முயற்சிக்காமல் இல்லை. ஆனால் குழந்தையின் ஏமாற்றத்தின் முன்பாக அவனது எந்த நடைமுறைப் பிரச்சினைகளும் பொருட்படுத்த மனைவி தயாராக இல்லை.

"கொஞ்ச நேரம் செலவழிச்சி பிள்ளையை சிரிச்ச முகத்தைப் பார்க்க விருப்பம் இல்லை..."

அவனது "தந்தைமை" யைத் தாக்கும் அவளது வார்த்தைகளில் நிறையவே காயப்பட்டுப் போனான். தொடர்ந்து வந்த சனிக்கிழமையில் புறா வாங்கியே விடுவதென்ற தீர்மானத்தோடு ஊரின் ஒதுக்குப் பக்கமாயிருந்த "கோலனிப்பக்கம்" போனான். சேரிக்குடிகளின் பிள்ளைகள் கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளின் உறுமல் ஒலியில் இலகுவாய்க் கவனம் திரும்பி, இவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் ஓடிவந்து குழுமினார்கள். இடுப்பில் நிற்காத காற்சட்டையைக் கைகளால் பிடித்தபடி ஓடிவந்த அவர்களைப் பார்த்த அவன் மனம் பரிதாபப் பட்டது.

"தம்பியவை....இஞ்சை புறா ஒண்டு வாங்கலாமோ....?"

"என்னவாமெடா....?"

சற்றே பெரிய பையன் ஒருவன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு முன்னால் வந்தான்.

"ஒரு புறா தேவைப்படுது தம்பி..."

"என்னமாதிரிப் புறா அண்ணே...."

பையன் இயல்பாய் உறவு கொண்டாடினான்.

வெள்ளைப் புறா என்றால் நல்லது. என்ன விலையெண்டாலும் பறவாயில்லை.."

கொஞ்சம் நில்லுங்கொண்ணை...."

பையன் காற்றாய்ப் பறந்தான். திரும்பி வந்தபோது அவனது கையில் தேமேயென்று உட்கார்ந்திருந்தது வெள்ளைப்புறா. ஆனால் கூர்ந்து பார்த்தால் புறாவின் கால்களில் ஒன்றைப் பையன் தன் விரலிடுக்கில் கொடுத்திருந்தது தெரியும். சில புறாக்களின் நிலை அப்படித்தான் வெளியே தெரியாமல் நுட்பமாய்ச் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் புறாவை நிலத்தில் விட்டான்.

"அண்ணைக்கு வணக்கம் சொல்லு...."

பையனின் வார்த்தைக்குப் புறா தன் மூக்கு நிலத்தில் படப் பணிந்து முதுகுப்புற வெண்சிறகை இருபக்கமும் பரத்தியது. பையன் சொன்ன விலையைச் சந்தோஷமாகக் கொடுத்தான்.

"ஒற்றைப்புறா போதுமே அண்ணை..."

பேரம் பேசாத விலையில் வாக்குவாதப்படாத நல்ல மனிதனைக் கண்டுக்கொண்ட சந்தோஷத்தில் பையன் மெய்க்கரிசனத்தோடு கேட்டான்.

"மகள் விளையாடத்தானே.... போதும்...."

"சோடிப்புறா தேடி வரச் சொல்லி "புறா எறியிற் வேலை" வைச்சிடாதேங்கோண்ணை..."

இவன் மோட்டார் சைக்கிள் உதைக்கும் பையன் சொன்னான். புறாவளர்க்கும் பையன்களிடம் இருக்கும் "புறா எறியும் பழக்கம்" அவனுக்கும் தெரியும். ஒரு புறாவை நன்றாகப் பழக்கப்படுத்திய பிறகு தனிப்புறாவாய் உயர எறிந்து விடுவார்கள். அது பறந்து போய் இணையோடு மீண்டும் வரும். ஏதோ ஒரு இடத்திலான இழப்பு எறிந்தவர்களின் வரவாய்ப் போய்விடும். இவன் திரும்பிக் கேட்டான்.

"ஏன் தம்பி....."

பையன் தன் கூட்டத்தவரைப் பார்த்து ஒருமாதிரிச் சிரித்தான்.

"அதுக்கு உளச்சிறகு ஒண்டுமில்லை அண்ணை.... எல்லாம் வெட்டி விட்டிட்டன்...."

முன்புறக் கூடைக்குள்ளிருந்த புறாவின் முதுகுப்புறச் சிறகிரண்டும் விரித்தான். உள்ளே சிறகு கத்தரிக்கப்பட்டிருந்த புறாவின் உடம்பு வெறும் தோலாய்த் தெரிந்தது.

"எறிஞ்சால் பிடரியடிபட விழுந்துடும் அண்ணை...."

வரதட்சணையின் பின்னும் மகனில் உரிமை கொள்ளும் பெற்றவராய்ப் பையன் புறாவை விற்றபிறகும் கவனம் சொன்னான்.

"நான் அப்படிச் செய்யமாட்டேன் தம்பி..."

"இடைக்கிடை பார்த்துக் கத்தரிச்சு விடுங்கோ அண்ணை.. சிலவேளை பறந்து போகவும் பார்க்கும்...."

பையனின் குரல் அவனது மோட்டார் சைக்கிளைத் துரத்தியது. ரம்யாக் குட்டிக்கு கரை காண முடியாத சந்தோஷம். மனைவிக்கும்தான். அவள் தான் சொன்ன வார்த்தைகளையெல்லாம் மறந்து போனது போல நடந்து கொண்டாள். வழமையான "புருஷ இலக்கணத்துக்கமைய" அவனும் அதைக் கிளற விரும்பவில்லை. புறா வந்தபொழுதிலேயே வணக்கம் சொல்லும் வித்தையால் சகலரையும் கவர்ந்து விட்டது.

உடனடியாகப் புறாக்கூண்டினுள் தான் அதனை விட்டான். திறந்து விடும் பொழுதில் புறா வீடெங்கும் தத்தித் திரிந்தது. விரும்பினாலும் அதனால் பறக்க முடியாதென்ற உண்மையை மனைவியிடம் சொல்லி பெரும்பாலான வேளைகளில் அதைத் திறந்தே விட்டான். பையன் சொன்னபடி, புறா புத்திசாலிதான். கழித்தலுக்கும் உண்பதற்கும் மட்டும் கூண்டை வைத்திருந்தது அது. ஈரத்துணி நனைத்து அதன் மேல்சிறகு ஒற்றியதில் பளீர் வெண்மையாய் ஒளிர்ந்தது. இப்போது புறா வந்து மூன்று மாதங்களாகிவிட்டது. அதுவும் வீட்டின் ஒரு தவிர்க்கமுடியாத அங்கத்தவராய் ஆகிவிட்டது.

பலமுறை பறக்க முயன்று தோற்றதிலோ என்னமோ புறா பறப்பதற்கான எத்தனிப்பையே கைவிட்டிருந்தது. அவன் மெல்லப் புறாவைப் பிடித்து உள்சிறகு விரித்துப் பார்த்தபோது அவை சற்றே வளர்ந்திருக்கக் கண்டான். ஆனால் அது பற்றிய பிரக்ஞையே புறாவுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. எனினும் மனைவிக்கு விஷயம் தெரியவந்ததிலிருந்து அவளுக்கு அதே நினைப்புதான். அதன் உள்சிறகைக் கத்தரித்து விடும்படி அல்லும் பகலும் சொலலிக்கொண்டிருக்கிறாள்.

ரம்யாகுட்டி கட்டமிட்ட ஊஞ்சலில் இருக்க, புறா அவளின் முன்பாக நின்று தன் வெளிர்ச்சிறகு பரத்தி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. குழந்தையின் குலுங்கல் சிரிப்பில் வீடு மகிழ்ந்திருந்தது.

"என்னப்பா... உள்சிறகை இண்டைக்கு வெட்டிவிடுறது எண்டு நேற்றுச் சொன்னீங்கள்.... வெட்டிவிடுறியளே..."

புறாவுக்கு தானியந் தூவியபடியே கேட்டாள் மனைவி. மொழிபுரியாத அப்பாவித்தனத்தோடு புறா தானுண்ணும் தானியத்தில் கவனமாயிருந்தது. அந்தப் பொழுதில் தான் வெளியே அழைப்புக் கேட்டது.

"அக்கா நிக்கிறாவோ..."

மென்மையான பயந்தது மாதிரியான குரல். மாதங்கிதான். நாலாம் வீட்டுப் பிராமணப் பெண். பதினேழு வயதில் மணம் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். புருஷன் பெரிய சிவன் கோவில் குருக்களைய்யா அவரது கடைசி மகள் என்று சொன்னாலும் நம்பலாம். ஆனால் அந்தப் பொன்னிறத்திலும் பெரிய விழிகளிலும் தாயைக் கொண்டிருப்பதாகச் சேர்த்துச் சொல்ல வேண்டும். லட்சமிநாதர் ஐயாவின் ஒன்பது பிள்ளைகளில் நடுப்பெண்ணாக, ஆறு பெண்களில் ஒருத்தியாகப் பிறந்து விட்டதில், அழகு ஒன்றே குருக்களய்யா விட்டுக்கு "வரும் தட்சணை"யாக கொண்டு இத்தனை சிறிய வயதில் தாலிக் கொடிக்குள் கழுத்தைப் புதைத்துக்கொண்டு விட்டிருந்தது அந்தப் பெண்.

துணிமணிக்குக் குறைச்சலில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு. பிராமணப் பெண்கள் பலரும் படித்துப் பட்டம் பெற்று பெரிய பதவி வகிக்கின்ற இந்தக் காலத்திலும் அதிகாலையில் தலைக்குக் குளித்து ஈரக்கூந்தல் முடிந்தபடி முன் வாசலில் கோலம் போடுகின்ற "தீவிர" ஆசாரம். அவ்வாறான ஒரு காலையில் இவனது பார்வையில் தற்செயலாக அந்தக் காட்சி விழுந்திருந்தது. கோலமாவைக் கையில் வைத்துக்கெண்டு பள்ளிக்குப் போகின்ற உயர்தர வகுப்பு மாணவியை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது இந்தப் பெண். இவன் புன்னகைத்த போதிலும் பதிலுக்குச் சிரிக்கவில்லை. ஆனால் அடிக்கடி வீட்டுக்கு வந்து கீதாவுக்காக இவன் வாங்குகின்ற மாத இதழ்களை இரவலாக வாங்கிப்போகும். வரும் பொழுதுகள் பெரும்பாலும் குருக்களைய்யாவுக்குச் "சேவகம்" செய்யத் தேவையற்ற, இவன் வீட்டில் இல்லாத பொழுதுகளாய் இருக்கும். மாத இதழ்களின் "விட்டுவிடுதலையான" பெண்களைப் பார்த்துப் பெருமூச்செறியுமோ என்னமோ? ஏன் சில பெண்களின் வாழ்க்கை மட்டும் நம்பமுடியாதபடி நிகழ்வுப் பொழுதின் சற்று முன்பதான காலப்பகுதியிலேயே உறைந்து நின்று விடுகிறதோ தெரியவில்லை.

"கீதா..."

உள்ளே திரும்பிக் கூப்பிட்டான். பதிலாய் வெளிப்பட்ட கீதா, மாதங்கி கொண்டு வந்திருந்த மாதஇதழ்களை வாங்கி முக்காலியில் போட்டு விட்டு அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். பெண்கள் இருவர் கூட்டு சேர்ந்துவிட்டால் பொழுதுகள் பொருள் இழப்பது உண்மை எனினும் மாதங்கி விஷயத்தில் அது மெய்ப்படவில்லை. கீதாவின் மற்றைய சிநேகிதிகள் "போகமாட்டார்களோ?" என்று நினைக்கும்வரை இருந்து கதைப்பார்கள். இடையிடையே படீர்ச் சிரிப்பு வேறு. அப்படி எதைத்தான் கதைத்துத் தீர்க்கிறார்களோ? கீதாவிடம் கேட்டால் "அதெல்லாம் எங்கடை விஷயம்... உங்களுக்கெதற்கு?" என்று வெட்டுத்தெறித்தாற்போலச் சொல்லுவாள். ஆக, அவன் ஏதும் கேட்பதில்லை.

"அந்தப் புறாச் செட்டையை வெட்ட வேண்டாம்ப்பா..."

மாதங்கி போனதும் அவனருகில் வந்து மெல்லிய குரல் சொன்னாள் மனைவி.

"ஏன்...? ஏன் திடீரெண்டு இப்படிச் சொல்லுறீர்...?"

"அந்த மாதங்கி தான் கேட்டுது... தனக்காய் ஒரு உதவி செய்வியளோ எண்டு சொல்லிப் பெரிய பீடிகையெல்லாம் போட்டுப் பிறகுதான் கேட்டுது...."

"ஏனாம்...?"

"நான் கேக்கேல்லை.. பிராமணக்குடும்பம்தானே.... அதுதானாக்கும்..."

"சிறகு வெட்டிறது பறவைக்கு வலியில்லைத்தானே..."

"சொன்னன்.. சிறகு வெட்டின பறவை செத்ததுக்குச் சரிதானே எண்டு சொல்லிச்சுது..."

அவன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.

"திருப்பித் திருப்பிக் கேட்டுதப்பா...விடுங்கோ... புறா நிக்குமட்டும் நிண்டிட்டுப் போகட்டம்... எனக்குப் புரியேல்லை ஏன் மாதங்கி இதைக் கேட்டுதெண்டு..."

சொன்னபடியே கீதா சமையலறைக்குப் பேனாள். ஒரு புறாவின் சிறகு பற்றிய புரிதல்கள் இரு பெண்களிடமும் வேறுபடும் விதம் பற்றி அவனுக்குச் சிந்திக்காதிருக்க முடியவில்லை. மனைவி சொல்லியது போல மாதங்கிக்கு எழுத வாசிக்க மட்டுமின்றிச் சிலவற்றைச் சிந்திக்கவும் முடியும் என்று தோன்றியது அவனுக்கு. கூடவே கீதாவுக்குப் புரியாத அந்தக் காரணமும் அவனுக்குப் புரிந்து போய் விட்டிருந்தது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link