சிறுகதைகள்


சரஸ்வதியின் கணவன்

கூடல்.காம்
அவனுக்கு வயது முப்பது. ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் செய்திருக்கிறான். காதல் திருமணம் செய்துகொள்ள அவன் மனதின் அடியாழத்தில் அதிகம் ஆசையிருந்தது. ஆனால் அவனுடைய குடும்பப் பின்னணியும் வகுப்புப் பின்னணியும் அவனைப் பயப்படுத்தியது. யோசிக்க வைத்தது.

அவன் அக்காள் எம்.ஏ படித்து ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருந்தாள். அவளுக்குத் தொண்ணூறு பவுன் போட்டு நான்கு லட்சம் ரொக்கத்தோடு கட்டிக் கொடுத்தார்கள். இத்தனைக்கும் மாமாவுக்குச் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் பிழைப்புத்தான். ஆண் என்பதே வாழ்க்கைக்குத் தேவையான மிகப் பெரிய தகுதியாய் அவர்கள் உணர்வுகளில் ஊறியிருந்தது. காலங்காலமாய் ஊறவைக்கப்பட்டும் வந்தது. அவர்கள் வழக்கத் திருமணங்களின் அடிப்படை, பணமாகவும் பொன்னாகவுமே இருந்ததால், அவனுடைய காதலிக்கும் ஆசை மனதளவிலேயே நின்றிருந்தது. இப்போதும் பொது இடங்களில் காதலர்களைப் பார்த்தால் ஏக்கம் வருகிறது. வாழ்க்கையில் சிலருக்குத்தான் சில வரங்கள் கிடைக்கும் போல என்று தேற்றிக் கொள்வான்.

அவன் மருந்துக்கடை வைத்திருக்கிறான். இதற்குத் தோதாகவே அவன் படிக்க வைக்கப்பட்டிருந்தான். வாழ்க்கையில் இலட்சியம் அல்லது சிறப்பு ஆவல் என்றெல்லாம் அவன் தன்னை ஒருபோதும் குழப்பிக் கொண்டதில்லை. அவனுடைய முக்காலமும் அவன் பெற்றோரால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பிறகு போகாத ஊருக்கு வழிகேட்டு என்ன பலன்?

அவனைப் பெற்றவர்கள் சரஸ்வதியை அவனுக்காகப் பார்த்தார்கள். சரஸ்வதி சென்னையில் ஒரு கல்லூரியில் வேலை செய்கிறாள். திருமணமாகும் பட்சத்தில் இங்கே மதுரையில் வேலை வாங்கித் தந்துவிடுவதாகவும் அவள் பெற்றோர் வாக்களித்தனர். தவிர அக்காளின் திருமணத்தில் விட்ட தொகையை வரும்படியாக்கவும் தோதான இடம். அம்மா தந்த தகவல்கள் இவை. இவற்றை விவாதிக்கவோ, உபரித் தகவல்கள் கேட்கவோ அவனுக்கு வாய்ப்பில்லை.

நூற்றியிருபது பவுனையும் ஆறு லட்சத்தையும் வாங்கிக் கொண்டு அவன் சரஸ்வதியின் கணவன் ஆனான். மணமேடையில் தனதருகே இருந்த சரஸ்வதியைப் பார்த்து அவன் உண்மையிலேயே மகிழ்ந்து போனான். தன் நண்பர்களுக்கு வாய்த்தவர்களைவிடச் சரஸ்வதி அழகுதான்.

ஆனால் இரவில் முதல் சந்திப்பிலேயே அவள் அவனைக் கேட்ட கேள்வியால் திகைத்துப் போனான். "கல்யாணத்துக்கு முன்னே ஒரு முறையாவது என்னைப் பாக்கணும்னோ... பேசணும்னோ உங்களுக்குத் தோணலையா?" சரஸ்வதியின் குரலில் குற்றச்சாட்டு இல்லையென்றாலும் அவனுக்குள் ஒரு துளி பயம் வந்தது. சரஸ்வதி கேட்டது போல் தனக்கு ஏன் தோன்றவில்லை?

தொடர்ந்து வந்த அவர்களது வாழ்க்கைத் தினங்கள் அவனுக்கு விசித்திரமானவை. எம்.பில்.-லும் பிஎச்.டி.யும் முடித்த பெண்கள் அவன் உறவுகளில் சாதாரணம். ஆனால் அவர்கள் அவன் சமூகத்துப் பெண்களாகவே இருந்தார்கள். படிப்பினால் வந்த அறிவு அவர்களோடு ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. படிப்பு அப்பெண்களின் இயல்புகளை மாற்றினதும் இல்லை. நகை, கார், வீடு... இதுபோன்ற திருமணச் சீர்களோடு படிப்பும் ஓர் உயிரற்ற சீராகவே சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் சரஸ்வதி வேறு மாதிரி இருந்தாள். எதிலும் மிக நேர்த்தியாய்ச் சிந்தித்தாள். செயல்பட்டாள். சரளமான ஆங்கிலம்.. எதையும் தானே யோசித்து முடிவெடுக்கிற தன்மை... உலக அறிவு சார்ந்த அபார ஞானம்... சரஸ்வதிக்குத் தெரியாத விஷயங்கள் மிகக் குறைவு என்பதை அவன் வெகுசீக்கிரம் புரிந்து கொண்டான்.

மாலை நேரங்களில் சரஸ்வதியைத் தேடி மாணவர்களும் மாணவிகளும் வருகிறார்கள். அவனுக்குக் கொஞ்சமும் பரிச்சயமற்ற விஷயங்களைப் பேசுகிறார்கள். முன்பின் அறிந்திராத பெயர்களை உச்சரிக்கிறார்கள். இந்தக் கச்சேரி துவங்குகிற சாயல் தெரிந்தாலே அவன் கிளம்பிவிடுவான். பாராசிட்டமாலும், விக்ஸூம், அமிர்தாஞ்சனும் உள்ள தன் கடையே தனக்குப் பாதுகாப்பு என்று தோன்றும்.

ஆனால் அம்மா, அப்பாவின் பாடு திண்டாட்டமானது. சரஸ்வதியின் அறிவையோ, அறிவினால் விளைந்த பண்பட்ட நடவடிக்கைகளையோ அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீட்டுக் கடமைகளில் சரஸ்வதி தயக்கம் காட்டுவதில்லை. சமைக்கிறாள்... மிக வேகமாய். அம்மாவுக்காகக் காத்திருப்பதில்லை. அம்மா நாள் முழுக்கச் செய்கிற சமையலைச் சரஸ்வதி இரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டுக் கல்லூரிக்குக் கிளம்பிவிடுகிறாள். இவள் சமையல் சுவை வேறாயிருந்தாலும் அவனுக்குப் பிடித்திருந்தது. அனுபவிக்கக் கற்றுக் கொண்டான். சனி, ஞாயிறுகளில் வேலைக்காரியை ஏவி வீட்டைச் சுத்தம் செய்கிறாள். தனக்குத் தேவையான விஷயங்களுக்காக அவள் யாருடைய அனுமதியையும் கேட்பதில்லை. வீட்டில் சிலம்பாட்டம் துவங்க இது போதுமாயிருந்தது.

அம்மா அவனைத் தன் கட்சியில் சேர்க்க விரும்பினாள். "பொண்ணு ரொம்பச் சாதுன்னாங்க... ஏமாந்துட்டம் போலயே... ரொம்பத் திமிர்... வீட்டுப் பெரியவுக மேல மட்டு மரியாதையே கெடையாது. வாயத் தொறந்து பேசவே மாட்டங்கா... அவ காலேசு பசங்க வந்தா மட்டும் என்னா பேச்சு... சிரிப்பு... இதெல்லாம் உங்கப்பாருக்குக் கொஞ்சம் கூடப் புடிக்கலே. பாத்துக்க... அவளக் கொஞ்சம் அடக்கி வையி. ஒன்னால முடியாட்டிச் சொல்லு... நாம் பாத்துக்கிடுதேன்."

அவனால் சரஸ்வதி மீது குற்றம் காண முடியவில்லை. தான் வெகுநாளாய்க் கனவு கண்ட காதல் அல்லது ப்ரேமை அவள் மீது தனக்கு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான்.

இரவு படுக்கையில் மெதுவே அவளிடம் பேச்சுக் கொடுத்தான். "வீட்டு வேலையையும் காலேசையும் கெவனிச்சுக்கிட செரமமால்லியா சரசு. நமக்கு வேண்ணா தனி வீடு பாத்துக்கிடுவமா?" சரஸ்வதி சரியென்றிருந்தால் அவன் உரலிடைத் தானியமாகியிருப்பான். ஆனாலும் அவன் மனது அவனைக் கண்டிக்கத் தூண்டவில்லை. இப்படிக் கேட்கவே அவனால் முடிந்தது. அவனை ஆச்சர்யப்படுத்தும் விதமாகச் சரஸ்வதியின் பதில் இருந்தது. "வீடுன்னா... கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்... நா சமாளிச்சுக்குவேன். கவலைப்படாதீங்க." அவனுக்குள் நிம்மதியும் கவலையும் ஒரு சேர வந்தது.

ஏதோ பேச்சுவாக்கில் சரஸ்வதி அரசியல் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் வாங்கியிருப்பது தெரிந்தது. அவன் திடுக்கிட்டான். தன்னையே நொந்து கொண்டான். பவுனையும் லட்சங்களையும் நிறுத்து, நிறுத்து வாங்கின... கொடுத்த குடும்பப் பெரியவர்களுக்கு இருவரது அறிவுத் தராசும் சமநிலையிலிருக்கிறதா என்று பார்க்கத் தோன்றவில்லையே. இதைத் தன்னிடம் மறைத்த அம்மாவைக் கடிந்து கொண்டபோது அம்மாவுக்கு அவன் கோபம் நியாயமாகத் தெரியவில்லை. "அவர்களுக்கு வசதியிருக்கிறது. பெண்பிள்ளையைப் படிக்க வைத்திருக்கிறார்கள். இது குடும்பம் நடத்துவதற்கும் குழந்தை பெற்றுப் போடுவதற்கும் எப்படித் தடையாக இருக்க முடியும்" என்று வாதிட்டாள்.

மாலை நேரங்களில் கல்லூரியிலிருந்து திரும்ப வரும்போது சில சமயம் கடைப்பக்கம் வருவாள். அங்கிருந்து அவன் தனது வாகனத்தில் அவளை வீட்டுக்குக் கூட்டி வருவான். இன்றும் வந்தாள். அவன் வாகனம் பழுதாகியிருந்தது. அவன் கவலையோடு இதைச் சொன்னபோது சரஸ்வதி பளிச்சென சிரித்தாள். "அதனால் என்ன? நாம் பேசிக்கொண்டே நடந்து போவோம்" என்றாள்.

கடையைப் பையனிடம் ஒப்படைத்துவிட்டுத் தெருவில் இறங்கி அவளோடு நடந்தான். வீட்டில் அவர்கள் இருவரும் தனியே பேசுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அதனால்தானோ என்னவோ சரஸ்வதி பேசிக் கொண்டே வந்தாள். தனது வேலை பற்றி... வீட்டில் ஒரு டியூஷன் சென்டர் நடத்துவது பற்றி... இன்னும் ஏதேதோ... திடீரென, "நீங்கள் கோயிலுக்குப் போனால் என்ன வேண்டிக் கொள்ளுவீர்கள்?" என்று கேட்டாள். இவ்வளவு நேரமும் அவள் பேசியதில் உறுதியான பதில் தர வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு வரவில்லை. "ம்", "ஆமாம்", "இல்லை" போன்ற சொற்களாலேயே அவன் தன்னைக் காத்துக் கொண்டிருந்தான். இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது?

அவன் கோயிலுக்குப் போவது அபூர்வம். ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வத்திடம் குடும்பத்தோடு படையெடுப்பு நடக்கும். அப்போதும் தனிச்சையாய்க் கை கூப்புவதும் கன்னத்தில் போடுவதும் நிகழுமே தவிர காரியமாய் எதையும் கேட்டதாய் நினைவில்லை. சரஸ்வதியைக் கட்டின பின்பு இவளோடு சில சமயங்களில் கோயில்களுக்குப் போனதுண்டு. அப்போதும் வேடிக்கை பார்த்துத்தான் பழகியிருக்கிறான். வேண்டிக் கொண்டதில்லை. இதைச் சரஸ்வதிக்கு விவரிக்கத் தன்னால் முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. நல்ல வேளையாய்ச் சரஸ்வதி அவன் பதிலை எதிர்பார்க்கவில்லை.

"எல்லாரும் நல்லாருக்கணும்னுதான் நாங்க வேண்டிப்போம்... நீங்க அப்படிக் கேக்க முடியாதே... சீக்காளி இருந்தாத்தான் வியாபாரம் நடக்கும்" என்றாள் சிரித்தபடி.

தூரத்தில் வீட்டு வாசலில் அம்மா நின்றிருந்தாள்.

"என்னாதிது... யாபாரம் நடக்கற நேரத்துல கடய விட்டுப்போட்டு வந்திருக்க... சரசுக்குத் தனியா வரத் தெரியாதா?" அம்மாவின் இங்கிதமற்ற விசாரணை அவனைத்தான் விசனப்படுத்தியது. சரஸ்வதி சாதாரணமாய் உள்ளே போய்விட்டாள்.

வர வர சரஸ்வதியின் ஆளுமை அவனைப் பயப்படுத்தியது. அவள் அறிவும் புத்திசாலித்தனமும் மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் போகிறபோது அவனுக்குப் பதட்டம் வருகிறது. விலையுயர்ந்த கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் கொண்டு நடக்கும் சிறு குழந்தையின் மனநிலையில் அவனிருக்கிறான். தடுமாறுகிறான். கண்ணாடிப் பாத்திரம் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இதைக் கவனமாய்க் கையாளும் திறமை தன்னிடமில்லை என்ற கசப்பு உணர்வு தொண்டையில் நிற்கிறது. அவனுடைய கவனக்குறைவும் தடுமாற்றமும் பாத்திரத்தையே பாதிக்கும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இதனால் அவன் கவலை அதிகரித்துக் கொண்டே போகிறது.

மனிதர்கள் எப்போதும் காத்திருக்கிறார்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களை இடறிவிட. அம்மாவின் கணக்கில் சரஸ்வதி எப்போதோ எதிரியாகியிருந்திருக்கிறாள். அவன்தான் கவனிக்கத் தவறியிருக்கிறான்.

யாரோ ஓர் ஏழை மாணவனுக்குத் தன் சம்பளத்திலிருந்து பீஸ் கட்டிவிட்டு சரஸ்வதி வந்த அன்று நெருப்பு மூண்டது. "உன் சம்பாத்தியம் இந்த வீட்டுக்குச் சொந்தம். இவ்வளவு பெரிய தொகையை எப்படி இனாமாகக் கொடுக்கலாம்? அதுவும் எங்களைக் கேட்காமல்..." இது அம்மா அப்பாவின் வாதம். பெரியவர்களை மதிக்கும் பண்பில்லை. சிக்கனமில்லை. வாய் நீளம். குடும்பம் நடத்தத் தெரியவில்லை... இது சரஸ்வதியைப் பற்றிய அவர்களது அனுமானங்கள்.

"எதிர்பாராத இக்கட்டு. நன்றாகப் படிப்பவனின் வாழ்வு வீணாகுதல் கூடாது. அதனால் கொடுத்தேன். இறுதி நேரத்தில்தான் பிரச்சனை என்னிடம் வந்தது. யாரிடமும் சொல்லவோ, கேட்கவோ எனக்கு அவகாசம் இருக்கவில்லை. தவிர எனது வருமானத்தில் எனக்குத்தான் முதல் உரிமை. ஊதாரித்தனம் கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் நான் செய்தது உதவி. இதை என் கணவர் வேண்டுமானால் ஆட்சேபிக்கலாம். அவரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது" இது சரஸ்வதி.

வழக்கு இரவு அவனுக்காகக் காத்திருந்தது. இன்றைய பிரச்சனை என்னவோ சிறியதானாலும் அதன் வேர்கள் திருமணம் ஆன நாள் வரை பின்னோக்கி நீண்டிருந்தன. அப்பா அவ்வப்போது எடுத்துக் கொடுக்க அம்மா விலாவாரியாய் வைது தீர்த்தாள். சரஸ்வதியின் அறிவின் மீதிருந்த எரிச்சல், தைரியத்தின் மீதிருந்த பொறாமை எல்லாம் வார்த்தைகளாய் வடிவெடுத்து வந்து கொட்டின. அத்தனையையும் கேட்டுக் கொண்டு சரஸ்வதி சோபாவின் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் அவன் மீதே நிலைத்திருந்தன. அவன் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தன. மற்றபடி அவள் முகத்தில் கோபமோ, ஆவேசமோ, அழுகையோ எதுவுமேயில்லை.

அவன் சரஸ்வதியைப் பார்த்தான். அறிவு இவள் இயல்பு. திறமை இவள் நிறம். புத்திசாலித்தனம் இவளுள் உயிராய் ஓடுகிறது. தன்னம்பிக்கையைக் காற்றாகச் சுவாசித்து பயத்தைக் கழிவாய் வெளியேற்றிவிடுகிறவள். இவளை நூற்றியிருபது பவுன் மற்றும் ஆறு லட்ச பேரத்தால் களிமண்ணுருண்டை ஆக்க முடியாது.

அவனுக்குத் தெரிகிறது இவளது முழு வீச்சும். அவனைப் பெற்றவர்கள் தாங்கள் இழுத்த இழுப்பிற்கு வருவதற்கேற்ற சாதாரணப் பெண்ணைப் பிடித்திருக்கலாம். அதற்கு மனசு வராது. குடும்பக் கெவுரவம் என்று மாயக் குப்பை அதற்கு இடம் தராது.

அவன் உடனே பதில் சொல்லாதது அவன் குடும்பத்தாரை ஏமாற்றமடையச் செய்தது. அவன் தன் படுக்கையறைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டான். சற்று நேரத்தில் உணவுத் தட்டோடு உள்ளே வந்தாள் சரஸ்வதி. சற்று முன்னர் அடித்த புயலின் வடு அவள் முகத்தில் இல்லை. எப்போதும் போல் சாதாரணமாய் அவனைப் பார்த்தாள்.

"இந்த வீட்டில் எனக்கு மனைவியாக உன்னால் இருக்க முடியுமென்று தோன்றுகிறதா சரஸ்வதி?" என்றான் அவன் கவலையோடு.

"இதெல்லாம் சரஸ்வதிக்குச் சகஜம். நீங்க சாப்பிடுங்க..." என்றாள் குறுஞ்சிரிப்போடு.

நன்றி: தினமணி கதிர்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link