சிறுகதைகள்


அலங்காரம்

கூடல்.காம்
அலங்காரம் பிரமாதமாக இருந்தது. கூடம் முழுவதும் மாக்கோலம். நிலையில் எல்லாம் பூச்சரம். தளமும் சுவரும் சந்திக்கும் மடக்கு நெடுகவும் காவிப்பட்டை. ஓரமாய் ஒரு மேடை. மேலே பட்டுக் கம்பளம். பூண் பிடித்த ரோஸ்வுட் மண்டபத்தில் சரஸ்வதி. சற்றே காலை மடக்கி, கையில் வீணை ஏந்தி, தலை நிமிர்ந்த சரஸ்வதி. அருகில் ஆளுயரத்திற்கு மினுமினு வென்று இரண்டு குத்துவிளக்குகள். விளக்கின் தலையில் அன்னப்பட்சி. மேடைக்கு இரண்டு புறமும் தொம்பை. துதிக்கை போல் தொங்கும் காற்றுப் பை. சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் என்று வர்ணமிழைத்த பட்டுபை. அலங்காரம் பிரமாதமாகத்தான் இருந்தது.

விழியைச் சுழற்றி ஒவ்வொன்றாய்ப் பார்த்தான் மேத்தா. "ஒண்டர்ஃபுல்! எத்தனை ரசனை மிகுந்த அலங்காரம்!" என்றான் வியந்து. வைத்தி முறுவலித்தார். பெருமை துலங்கும் முறுவல்.

வைத்தியின் ரசனை ஊரறிந்தது. முறுக வார்த்த தோசை, செட்டி நாட்டு வாசற்கால், மழைக்கு முன் எழுகிற மண்வாசனை, மசி துடைத்த தாளில் விழுகிற கழுத்து, மழையில் எழுந்த காளான், தென்னங்குருத்தை நறுக்கி மடக்கி விரித்த கிளி என்று சின்னதும் பெரிதுமாகப் பார்த்துக் குதூகலிக்கிற மனம் அவருடையது. தாம் மட்டும் ரசித்து ஓய்ந்து விடுகிறவர் அல்ல. நாலு பேருக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் கண்ணையும் மனத்தையும் திறந்துவிடுகிற மனிதர் அவர்.

பதினைந்து வருடம் டெல்லியிலும், இருபது வருடம் வாஷிங்டனிலும் உத்தியோகம் பார்த்து ஓய்ந்திருந்தாலும், அவர் மனத்தில் தஞ்சாவூர் ஊறிக் கிடந்தது. காவேரித் தண்ணீரோடு சேர்த்துப் பருகிய கர்நாடக சங்கீதம் அலை மோதிக் கொண்டு இருந்தது. அந்த ரசனையும் அந்த அனுபவமும் சேர்ந்து அந்த வீட்டிற்குள்ளேயே ஒருபுறமாய் இந்தக் கட்டடத்தை எழுப்பினார். எண்ணெயும், கிரீசும், வழுக்கை டயர்களுமாக இறைந்து கிடந்த பூர்வீகக் கார் கொட்டகையை இடித்துத் தள்ளி, ஒரு கலை மண்டபமாக இதைக் கட்டினார்.

இங்கே வாரம் ஒரு கச்சேரி நடக்கும். பிரபலங்கள், சிறியவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்று யாராவது வந்து பாடிவிட்டுப் போவார்கள். வந்தவர்கள் யாரும் வெறுமனே திரும்பிப் போனதில்லை. விருந்துச் சாப்பாடு, ஜரிகைத் துண்டு., வெள்ளிக் காசு என்ற உபசாரங்களுடன் திரும்புவார்கள்.

திரும்பியவர்கள் சும்மா இருந்து விடவில்லை. இப்படியோர் ஆத்மார்த்தமான ரசிகன் இருப்பதை ஊருக்குச் சொன்னார்கள். மேடை போட்டுப் பேச அழைத்தார்கள். வைத்தி, "நாயகி"க்கும் "தர்பாரு"க்கும் இடையே இருக்கிற சின்னச் சின்ன வித்தியாசங்களை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். ஷைக்காவஸ்க்கியையும்,. மொசார்ட்டையும் ஒப்புநோக்கி ஒரு பேச்சு. இந்தப் பேச்சையெல்லாம் கேட்டு வியந்து, பேச அழைத்த மற்றோர் இடத்தில், இட்லியின் கலையம்சம் குறித்துப் பேசி, கூட்டத்தைத் திகைக்க வைத்தார். இட்லிப் பேச்சைக் கேட்டுப் பண்டிதர்கள் முகம் சுளித்தார்கள். பெண்மணிகள் விழுந்து சிரித்தார்கள். சிரிப்பு சுளிப்பு எல்லாம் தாண்டி, அவர் மேல் ரசிகன் என்று முத்திரை விழுந்தது.

இந்தியாவுக்கு வந்த நவீன மேத்தா சென்னைக்கும் வரச் சம்மதித்ததும், இந்த ரசிகர்தான் கமிட்டிக்காரர்கள் நினைவுக்கு வந்தார். அவரது வீட்டிலேயே தங்கல், அவரது வீட்டிலேயே விருந்து என்று அவரை முன்னிறுத்தி ஏற்பாடுகள் நடந்தன. அவரது மண்டபத்திலேயே ஒரு கச்சேரிக்கும் ஏற்பாடாயிற்று.

வைத்தியநாதன், ஏற்கெனவே அமெரிக்காவில் நவீன் மேத்தாவின் கச்சேரியைக் கேட்டிருக்கிறார். கச்சேரி என்றால் நம்மூர் கச்சேரி இல்லை. நவீன் மேத்தா அரை இந்தியன். அற்புதமாக வயலின் வாசிப்பான் என்று அச்சிட்ட பிரசுரம் சொன்னது. அவன் அன்று வில்லைத் தொடவில்லை. ஏழெட்டு வயலின்கள், ஒரு பியானோ, இரண்டு புல்லாங்குழல், மேளம் என்று வாத்தியக்காரர்களை வைத்துக்கொண்டு, கையசைப்பில் ஓர் இசைச் சித்திரத்தை உருவாக்கினான். கெண்டியை வைத்துக்கொண்டு சுண்ணாம்புக் கோலம் போடுவது மாதிரி ஒரு லாவகம். கேட்கக் கேட்க மனசு காகிதமாகி மேலேமேலே பறந்தது. சொன்னது கொஞ்சம், சொல்லாமல் விட்டது அனந்தம் என்கிற மாதிரி நம் கற்பனை விரிந்து, அந்த இசைச் சித்திரத்தை நாம் பூர்த்தி பண்ணிவிட வேண்டும் என்று மனசுப் பொங்கிய நேரத்தில், அவன் அந்தக் "காம்போசிஷனை" முடித்துக்கொண்டு சபையைப் பார்த்துத் திரும்பி வணங்கி நின்றான். வைத்திக்குத் தாங்க முடியவில்லை.

நிகழ்ச்சி முடிந்து ஒப்பனை அறையில் மேத்தாவுடன் அரை மணி பேசினார் வைத்தி. பின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாலைந்து கடிதங்கள் எழுதினார். ஆபீஸ் வேலையாக ஸ்விட்சர்லாந்து போனபோது, ஜெர்மனிக்குப் போய் அவனையும் பார்த்துவந்தார்.

இன்று அவனுக்காக ஸ்பெஷல் கச்சேரி. பிரசன்னா பாட இருக்கிறாள். பிரசன்னாவிற்கு நல்ல சாரீரம். அம்மா கொடுத்த தொண்டை, குருவினுடைய அனுக்கிரகமாக நல்ல பாடாந்தரம். சூழலும் நன்றாக அமைந்தால் கச்சேரி களைகட்டி விடும் என்பது வைத்தியநாதன் கணக்கு.

பிரசன்னா "வாதாபி கணபதிம்" இல் ஆரம்பித்தாள். பின்னர் தோடியை எடுத்து ஆலாபனை செய்து அதில் ஒரு கீர்த்தனை பாடினாள். "புனி தாஸூடனி"யை பாவம், குழைவு, கமறல் எதுவுமில்லாமல் சுருக்கமாகப் பாடினாள். அப்புறம் பாரதியார், பாபநாசம் சிவன் என்று இரண்டு தமிழ்ப்பாட்டு. கடைசியில் "தஸரிமா.... மா" என்று சாமா ராகத்தில் புகுந்து "சாந்த முலேகா"வில் கச்சேரி முடிந்தது.

ஒவ்வொரு பாட்டையும் கூட்டம் கும்மாளி போட்டு ரசித்தது. ரசனையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேத்தா ஓர் அரைப் புன்சிரிப்போடு உட்கார்ந்திருந்தான். அதுகூடப் புன்சிரிப்பா, மரியாதைக்குச் சிரிக்கிற பொய்ச் சிரிப்பா என்று தெரியாத சந்தேகச் சிரிப்பாக இருந்தது.

கச்சேரி முடிந்ததும் வைத்தி மேடையேறி, நவீன் மேத்தா இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்று மேடைக்கு இழுத்தார். அதில்தான் எல்லாம் ஆரம்பம் ஆயிற்று.

நவீன் மேத்தா சம்பிரதாயமாகத்தான் பேச ஆரம்பித்தான்.

"இந்த மாலைப் பொழுதிற்கு வைத்திக்கும், பிரசன்னாவிற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இங்கே கேட்ட சங்கீதம், இந்த அரங்கத்தைப் போல அழகாக இருந்தது. இந்த ஊர் பட்டுத் துணியைப் போல, மென்மையும், பளபளப்பும், மினுக்கும், பழைமையின் மெல்லிய ஞாபகமும் கொண்டதாக இருந்தது. இனிமையாக இருந்தது. காதுக்கு இதமாக இருந்தது.

ஆனால் இசையின் நோக்கமும், பயனும், அது இனிமையாக இருப்பது மட்டும்தானா? வெறும் செவிக்குணவகாக இருப்பது மட்டும்தானா?.... உங்கள் முன்னோர்கள் இசையை அப்படித்தான் கருதினார்களா? அப்படித்தான் கையாண்டார்களா? நாலு பேரைக் குஷிப்படுத்தத்தான் சங்கீதம், ரசனை இன்பத்திற்குத்தான் சங்கீதம் என்று அவர்கள் கருதியிருந்தால், சரபோஜியின் அரண்மனையிலேயே தங்கியிருந்திருப்பார்கள். காவிரியைத் தாண்டி எதையோ தேடிக்கொண்டு புறப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆம், அவர்களுக்கு ஒரு தேடல் இருந்தது. சங்கீதம் அவர்களது தேடலுக்கு உதவுகிற யோகமாக இருந்தது. தங்களை வெளிப்படுத்திக் கொள்கிற சாதனமாக இருந்தது. ஆனால் ஒருபோதும் பொழுதுபோக்காக இருந்ததில்லை.

இந்த மூன்று மாதங்களில் முப்பது கச்சேரிகள் கேட்டு விட்டேன். எல்லாம் இன்றையக் கச்சேரி போல்தான். ஒன்று சங்கீதம், உங்கள் முன்னோர்களுடையதைப் போல, ஆத்மாவைக் கடைவதாக இருக்க வேண்டும். அல்லது, வெள்ளைக்காரர்களுடையதைப் போல, உணர்ச்சியைச் சிலுப்புவதாக இருக்க வேண்டும். இன்று இங்கே சங்கீதம் வெறும் ஒப்பனையாக இருக்கிறது.

இந்த மாறுதல் உங்களுக்கு மாத்திரம் நேர்ந்து விட்ட சோகம் அல்ல. ஒரு காலத்தில் ஜெர்மெனியின் மீதும் இந்தச் சாபம் வீழ்ந்தது. மேல்நாட்டு சங்கீதங்கள் எல்லாம் அநேகமாக ஜெர்மன் சங்கீதத்தைத் தழுவியதுதான். எங்களுடைய ஆதிகர்த்தாக்கள், சாகித்தியத்தையும், சங்கீதத்தையும் இணைத்து ஸ்வரம் பிரித்து, பியானோவில் வாசித்து, எழுதியும் வைத்தார்கள். ஆனால் அந்த சங்கீதம், இங்கிலீஷ் கால்வாயைக் கடந்தபோது, அதில் பொங்கிய உணர்ச்சி, கொப்புளித்த உற்சாகம், அதிலிருந்த தேடல் எல்லாம் ஜெர்மன் மண்ணிலேயே தங்கிவிட்டது. அதனால் ஆங்கில சங்கீதம் என்பது உணர்ச்சியற்ற, அர்த்தமும் அற்ற வெறும் கேலிக்கூத்தாக முடிந்தது. இந்திய சங்கீதமும் இதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறதோ என்று நான் கவலைப்படுகிறேன். அப்படியெல்லாம நான் கவலைப்பட அவசியமில்லை என்று ஆதாரத்தோடு எனக்குச் சொல்லுங்கள். மகிழ்ச்சியடைவேன்".

வைத்திக்கும் பிரசன்னாவிற்கும் மட்டுமல்ல, வந்திருந்த அத்தனை பேருக்கும் முதுகில் சவுக்கு சொடக்கிற்று. முகம் வெளிறிப் போயிற்று. விருந்துக்குப் பாதிபேர் கூடத் தங்கவில்லை.

"கர்நாடக இசையின் ஆதிகர்த்தாக்கள் எல்லாம் பெரியவர்கள். ஜெயண்ட்ஸ். நாமெல்லோரும் பிக்மிகள், குள்ளர்கள். நாங்கள் அவர்களை நகலெடுக்க முடியும். ஆனால் அவர்களாகவே ஆகிவிட முடியாது...." என்றார் வைத்தி.

"ஒரு நிமிஷம்" என்று மறித்து நிறுத்தினான் மேத்தா. "பெரியவர்களை அப்படியே நகலெடுத்துப் பாடுவதை ஒரு கிராம போன் ரெகார்ட் செய்து விடும். மனிதக் குரலைப் போல் இசைக்க இன்று எலக்ட்ரானிக் சிந்தசைசர்கள் வந்துவிட்டன. இவை குறித்து நாம் பெருமைப்படலாம். ஆனால் போற்ற முடியாது. அவை மனிதர்களுடையது அல்ல என்ற ஒரு காரணத்தினாலே போற்ற முடியாது. மானுஷ்யமாக இல்லாத எதுவும் போற்றுதலுக்கு உரியது அல்ல!"

"மேலை நாட்டு சங்கீதம் மானுஷ்யமானதாக இருக்கலாம். இருக்கிறது. ஆனால் சங்கீதம் தெய்வீகமானது என்று நம்புகிறவர்கள் நாங்கள்".

"நம்பிக்கை என்று சொன்னதற்குப் பிறகு அது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. நம்பிக்கைகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. கடவுள் போல. கற்பு போல. தங்களுடைய நம்பிக்கைகள் உயர்ந்தவையா, மூடத்தனமானவையா என்று நம்புகிறவர்கள்தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அப்படித் தீர்மானித்துக் கொண்ட பிறகே அவர்கள் நம்பவும் நிராகரிக்கவும் தலைப்பட வேண்டும். அதுவே நேர்மையானது. ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் எல்லாக் கலைகளும் காலங் காலமாக மதத்தோடு பிணைக்கப்பட்டவை. இன்றைக்கு இங்கே மதம் என்பதே வெறும் சடங்குகளாகக் குறுகிப்போயிற்று. நீங்கள் சொல்கிற நம்பிக்கையாகச் சுடர் விடவில்லை. பிறப்பினால் நேர்ந்த தொடர்ச்சியின் காரணமாகவே இவர்கள் இந்துக்களாகவும், கிறிஸ்துவர்களாகவும், இஸ்லாமியராகவும் இருக்கிறார்கள். சுயமாகச் சிந்தித்துத் தீர்மானித்துக் கொண்ட நம்பிக்கையினால் அல்ல. ஸ்தாபனங்களாக விளங்கிய மதங்கள் சடங்குகளாகக் குறுகிய போது, அவை போஷித்த கலைகளும் தேக்கமடைந்து விட்டதிலே உங்களுக்கு என்ன ஆச்சரியம் வைத்தி?"

"ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நீங்கள் சொல்வது நிஜம் என்றால் வருத்தப்பட நிறைய உண்டு".

"வருத்தப்பட வேண்டியது இது மாத்திரமல்ல. வைத்தி, இங்கே சங்கீதம் உயிரற்றுப் போய்விட்டது என்பது ஒரு துயரம். ஆனால், உயிர் அற்றது, உயிர் உள்ளது என்று பகுத்து அறிந்து கொள்ளும் திறம் வெகு ஜனங்களுக்கு இல்லாது போயிற்று என்பது அல்லவா பெரும் சோகம்?"

"சினிமா சங்கீதமே வெகு ஜனங்களின் சங்கீதம். அவர்கள் கர்னாடக சங்கீதம் பற்றிக் கவலை கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?"

"ரசனையினால் அல்ல, பழக்கத்தினாலே இவர்கள் சினிமா சங்கீதத்தை ரசிக்கிறார்கள். சினிமா பார்க்கும் பழக்கத்தினாலே ஏற்பட்டது இது. சினிமாவோடு சேர்ந்து வழங்கப்படும் இசையை மறுபடி வேறு இடத்தில் கேட்கும் போது, அவர்கள் முன்னே சினிமா விரிகிறது. அந்தச் சூழ்நிலை உருவாகிறது. அதனையே அவர்கள் ரசிக்கிறார்கள். சங்கீதத்தை அல்ல."

"எல்லாவற்றிற்கும் பதில்கள் வைத்திருக்கிறார்கள்..."

"இல்லை வைத்தி மூன்று மாதமாக, இங்கு வந்து இறங்கியதில் இருந்து, இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசிக்க யோசிக்க எனக்குக் கேள்விகளே மிஞ்சுகின்றன. பதில்கள் அல்ல...."

"என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?"

"கலைகளில் மாத்திரம் அல்ல. வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இங்கு தேக்கம் நேர்ந்திருக்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்தியா ஒரு கருத்துப் புரட்சிக்குத் தயாராக வேண்டும். ஆம்! தயாராக வேண்டும். ஏனெனில் புதிய மாற்றங்கள் வலுக்கட்டாயமாக வாழ்க்கையில் புகுந்தால் பயன் தராது. அப்போது அவை வெறும் அலங்காரமாகவே இருக்கும். அவை ஒரு நெறிமுறையாக - ETHICS ஆக உருவம் பெறும் போதே நம் முரண்பாடுகள் தீரும். உங்கள் ரசனை அதற்கு உதவ முடியும். கலைகளைப் போஷிக்காத படைப்பாற்றலால் யாருக்கு எதற்குப் பிரயோசனம்? நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும்? சொல்லுங்களேன்."

வைத்தி பதில் சொல்லவில்லை. ஆனால் அவரது மண்டபத்தில் வாராந்திரக் கச்சேரி அன்றோடு நின்றுபோயிற்று!

நன்றி: கதை அரங்கம்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link