சிறுகதைகள்


ராதை

கூடல்.காம்
சிறிது நேர யோசனையில் இருந்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டதற்குப் பிறகு தன் தொடர்ச்சி மாதிரி மெலிசாகச் சிரித்தாள் ராதை. நடந்த விஷயத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற மாதிரியும் இதற்கெல்லாம் யாரைப்போய் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியும் என்கிற மாதிரியும் சிதறலான சிரிப்பு.

சிரிப்புடன் கொண்டு வந்து முடிக்காத எந்த வாக்கியமும் ராதையிடம் அப்போதெல்லாம் இருந்ததில்லை. அதென்னமோ சதா நேரமும் உதடுகள் மேலேயே படிந்த மாதிரி இருக்கும் சிரிப்பு. காபி வழங்குகிற சின்ன உபசரிப்பு, வீட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பற்றிய விசாரிப்பு, வேலைசெய்கிற இடத்தின் ஸ்டிரைக் பற்றிய அலசல் என்கிற எல்லா நேரத்திலும் ராதைக்குப் புன்சிரிப்பு ஒரு அழகான கவசம் மாதிரி இருக்கும். பத்திரிகை கார்டூன், வித்தைக்கார குரங்கின் நாட்டியம், பிடிக்க வருகிற மைதிலி அக்காவை ஏமாற்றி ஓடி ஓடி கொக்கரிக்கிற கோழிகள், பாலர்பவன் சிறுவர்களின் ஆட்டம், துண்டு கறிக்கு நாய்களுக்குள் வரும் மோதல் என மிக சாதாரணமாக கவனத்தை இழுத்து வருகிற விஷயங்களுக்குக் கூட களுக்கென்று சிரிப்பு மலரும் ராதைக்கு. அந்த சிரிப்பையெல்லாம் ஏதோ நெருப்பில் போட்டுப் பொசுக்கிவிட்ட மாதிரியும் இனி தாங்க எந்த இம்சையும் இல்லை என்பது மாதிரியும் ராதை நிற்பதைப் பார்க்கப் பார்க்க மனசுக்கு என்னவோ போல இருந்தது.

ராதையை நான் நேருக்கு நேர் சந்தித்தது கல்யாணத்தன்றைக்குத்தான். பெயரைக்கூட அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதுவரை தன் வார்த்தைகளால் வேலு எழுதிய சித்திரம்தான் ராதையாய் இருந்தது. மனசு விட்டுப் பேசும் சுபாவம், ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையான பழக்கம் தெளிவான சிந்தனை, காப்பாகிவிட்ட இல்லறத்தில் இருந்தும், மிதிக்கிற புருஷனிடமிருந்தும் வேண்டுகிற விடுதலை என்று தினம் தினமும் அவன் வந்து சொல்கிற சம்பவங்களை வைத்துத்தான் மனசுக்குள் ராதையைப் பற்றி எழுதிப் பார்க்க முடிந்தது.

எழுதுகிற ஒரு விஷயம்தான் எனக்கும் வேலுவுக்கும் நெருக்கம் உண்டாகக் காரணம். காலேஜ் படிப்பைப் புறக்கணித்து சதா நேரமும் எழுத்தின் மேல் ஒரு ப்ரியமும் ஈடுபாடுமாய்ப் புத்தகங்களாலான உலகத்தில் புரண்டு கொண்டு இருந்த என்னை விமர்சனக் கத்தியால் குத்திக் கிழித்தான் வேலு. தொழிற்புரட்சி, போராட்டம், சிறை கொடுமைகள், நாடு கடத்தல், தியாகம், விடுதலை என்கிற உலகத்தின் இன்னொரு பக்கத்தையும் முகத்தையும் அறிமுகம் செய்தான். அப்போதிலிருந்து நட்பு தொடக்கம். மூன்றாவது வருஷம் படிக்கிறபோது எங்கள் தெருவுக்குப் பக்கத்திலேயே அவன் வீட்டார்கள் குடியேறி வந்ததற்குப் பிறகு இன்னும் நட்பு கூடுதலானது. காலேஜில் சந்திப்பது இல்லாமல் தினமும் சாயங்காலம் அல்லது ராத்திரி ஒரு மணி நேரமாச்சும் சந்தித்துக் கொள்வது பழக்கமானது பூவரச மரத்தடியில் நின்று கொண்டு பொழுது கழிவது தெரியாமல் பேசுகிற அந்தப் பழக்கம் வேலைக்குப் போன பிறகும் தொடர்ந்தது. அப்படிப் பேச நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் ராதையைப் பற்றி முதன்முதல் பிரஸ்தாபித்தான் வேலு.

ராதை ஒரு நல்ல பெண். ராதைக்கு எந்த விஷயத்தையும் நுணுக்கமாய் ஆராயும் குணம். ராதைக்குப் பூவின்மேல் அலாதியான பிரியம். ராதை இனிமையும், சந்தோஷமுமான நல்ல துணை. ராதையின் பேச்சில் எப்போதும் ஒரு கவர்ச்சி. ராதைக்கு நாலுவயசு அதிகம். ராதைக்கு கல்யாணமாகி மூன்று வருஷங்களில் வெறும் கசப்பினை மட்டுமே அனுபவித்து ஒரு நல்ல வடிகாலுக்கும் விடுதலைக்கும் ஆசை. ராதைக்கு குழந்தை இல்லை. இதுதான் வேலு சொன்னது. ஆறுமாசமாய் இதையே திருப்பித் திருப்பிச் சொன்னான். இந்த உணர்வுகளுக்குப் பெயர் காதல்தான் என்றும் ஒரு நாள் வந்து சொன்னான். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் இருந்த அவனுக்கும் ஆஸ்பத்திரியில் இருந்த ராதைக்கும் வேலை செய்யும் இடங்களுக்கிடையேயான மிக சின்ன தூரம் பார்த்துப் போகிற வாய்ப்புகளை நிறையவே அளித்தன. நான் ஆரம்பத்தில் தடுத்துப் பார்த்துவிட்டு வேறு வழியில்லை என்றதற்குப் பிறகு நிறைய சந்தித்துப் பேசும்படியும், சேர்ந்து வாழக் கூடிய சாத்தியக் கூறுகளையும், கணவன் மூலம் மட்டுமின்றி வேறுவிதமாகவும் வருகிற பிரச்சனைகளையும், சம்பந்தப்பட்ட இருவரின் தாய் தகப்பனார்கள் இதுபற்றிக் கொள்கிற அபிப்பிராயங்களையும் பற்றியெல்லாம் முடிகிற போதெல்லாம் பேசி முடிவெடுக்கச் சொன்னேன். அதெல்லாம சொல்லி ஒரு மாசத்துக்குப்பிறகு எல்லாம் யோசித்தாயிற்று என்றும் இனி கல்யாணம் தவிர இரண்டாவது அபிப்ராயம் எதுவும் இல்லை என்றும் சொன்னான். இந்த தருணத்தில் அடிதடி, போலீஸ்கேஸ் அது இது என்று நிறைய வந்தும் இன்னும் சில சிநேகிதர்கள் உதவியால் அபாயம் எதுவுமில்லாமல் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. வேலுவுக்கும் ராதைக்கும் கல்யாணம் ஆனது... அப்போதுதான் ராதையை நானும் நேருக்கு நேராகப் பார்த்தது.

சுதேசி மில்லுக்கு எதிர்த்த மாதிரி இரண்டு பேரும் தனிக்குடித்தனம் வைத்த பிறகு ராதையுடன் நல்ல பழக்கமானது. அதுக்கு கூடப் பொறந்தவங்க யாருமில்ல. ஒன்ன தம்பி மாதிரி நெனைக்குது என்று வேலு வந்து ஒரு தரம் சொன்னபோது சந்தோஷமாய் இருந்தது. அந்த உரிமையில்தான் வேலை கிடைத்து வெளியூருக்குப் புறப்பட்டு வந்த பிறகும் கடிதம் எழுத நேர்கிற ஒவ்வொரு முறையும், பிரியமுள்ள அக்காவுக்கும், வேலுவுக்கும் என்ற ஆரம்பத்துடனேயே எழுதினேன்.

வருஷத்துக்கு இரண்டு தரமோ, மூன்று தரமோ வீட்டுக்கு வர நேர்கிற ஒவ்வொரு தருணமும் ராதையைப் பார்ப்பதுண்டு. ராதை எனக்கென்று தனியே விருந்து சாப்பாடு மாதிரி ஆர்வத்துடன் சமைப்பது சந்தோஷமான ஒரு விஷயம். மிகப் பொடியாய் அரிந்த உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம், வற்றல் குழம்பு, மெதுவடை என்கிற எனக்குப் பிடித்த கலவையை மிகவும் ருசித்துச் சாப்பிடுவதுண்டு. இது அல்லாமல் என் குடும்ப விஷயத்தை அக்கறையாய் கேட்டுத் தெரிந்து கொண்டது, என் இன்னொரு நண்பன் கோபாலுக்கு சைக்கில் விபத்தில் கை முறிந்தபோது ஜிப்பர் மருத்துவமனையில் தனக்கு இருக்கும் செல்வாக்கை உபயோகித்து நல்ல முறையில் மருத்துவம் செய்ய வைத்தது, நானே ஒருதரம் நெஞ்சுவலியில் தவித்துக் கொண்டிருந்தபோது பரிசோதனை செய்ய வைத்து மருந்து வாங்கியது. இது எல்லாம் சாப்பிட்டால்தான் சத்து என்று மணக்க மணக்க சுதும்பு மீன் வறுவலுடன் இறால் குழம்பும் சாப்பிட வைத்தது. தங்கைக்கு திருமணம் செய்ய கையில் ஒரு காசு இல்லாமல் தவித்தபோது தன்னிடமிருந்த நாலு பவுன் சங்கிலியை அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளச் சொன்னது, ஒரு சமயம் வெளியூரில் நடந்த மேற்கு வங்காளக் கைத்தறிக் கண்காட்சியின்போது வெளிர் ரோஜா நிறத்தில் மிகச் சிறிய கட்டங்களுடன் ஒரு புடவையைப் பரிசாக அனுப்பியபோது சந்தோஷத்துடன் பூரித்தது. எல்லாமே ராதையின் மீது இருந்த பிரியத்தையும், மதிப்பையும் அதிகமாக்கிக் கொள்ளக் காரணங்களாய் இருந்தன. இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒரு அக்கா எனக்கென்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற மானசீகமான விழைவும் வேட்கையும் கூட ராதையை அன்புடன் உணர வைத்தது.

ராதைக்குக் குழந்தையில்லை

ஆஸ்பத்திரியிலேயே அவள் வேலை செய்தும் அதற்கு அனுசரணையாக ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போனது வருத்தமான விஷயம்தான். இரண்டு மூன்று தரம் விலக்காவது தள்ளிப்போய் இந்த தரம் கட்டாயம் குழந்தைதான் என்று நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருந்து அப்புறம் எல்லாம் கரைந்து எதுவுமே இல்லையென்ற பிறகு உடம்பு வேதனையும், சோர்வும் கழிய ஆஸ்பத்திரி கட்டிலில் இரண்டு மூன்று நாள்கள் ஓய்வு எடுக்க படுத்துக் கிடந்து வந்ததுதான் மிச்சம். ஒரு தரமும் குழந்தைக்கான தடயம் இல்லை. ரொம்பவும் குலைந்து குலைந்து உடம்பு வேதனைப்பட்டது.

பழைய காயங்களில் இருந்தும் வடுக்களில் இருந்தும் கிட்டிய விடுதலை சேர்ந்த சந்தோஷத்துக்கு நாலு வருஷம் கழித்து பங்கம் வந்த போதுதான் ராதைக்கு சகிக்க முடியவில்லை. அற்புறதமானவன், சுய சிந்தனையாளன் என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டிருந்த வேலு ஒரு மிக சாதாரண மனிதனின் சுபாவத்தோடும் சபலத்தோடும் நடக்கத் தொடங்குவதை அரசல் புரசலாகக் கேள்விப்படத் தொடங்கியபோது வருத்தமாய் இருந்தது. எந்த இண்டாவது அபிப்ராயமும் இல்லை என்று கல்யாணத்துக்கு முன்பு அடித்துச் சொல்லியவன் மனசில் துளசி என்கிற பெண்ணாக ஒரு இரண்டாவது அபிப்ராயம் நுழைந்திருப்பதை நம்பக்கூட முடியவில்லை.

போனதரம் வந்தபோது ராதையே சொன்னதும் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது.

"அவுங்களுக்கு கொழந்த மேல ஆச வந்திருக்கறத தப்புன்னு சொல்லல. எனக்கும்தான் ஆசயா இருக்குது. பாழும் தெய்வம்தான் இந்த வயித்துல எதையும் தங்க விடாம கழுவிக் கழுவி உடுது. இந்த வருஷம் இந்த வருஷம்னு அஞ்சி வருஷம் ஓடிப்போச்சி. வாஸ்தவம்தா. இனிமே எனக்கும் நம்பிக்க இல்ல. கொழந்தைக்காகத்தா அந்த பொண்ணுவ கட்டிக்கப் போறதா சொல்றாரு. தெரியல. அவுங்க, அவுங்கப்பா, அந்தப் பொண்ணு எல்லாருமே நானு "ம்"னு சொல்லணும்தா நெனைக்கறாங்க. ஒருதரம் கொழந்தைதா முக்கியம்னா ஒங்க தம்பி கொழந்தைய எடுத்து வளக்கலாமேன்னு லேசா சொன்னேன். அதுவும் புடிக்கலன்னா வேற எங்காச்சும் தத்தாவது எடுத்துக்கலாமேன்னேன். ஆனா அத யாரும் பெரிய விஷயமா எடுத்துக்கல்ல. கல்யாணம் செஞ்சிக்கறதுதா நல்லதுங்கறாரு....?"

கடைசி வார்த்தையைத் தொடர்ந்து சட்டென்று உடைந்து பொங்கின அழுகை அவளைப் பாவமாய் உணரச் செய்தது. இதுவரைக்கும் யாரோ ஒரு மூன்றாம் மனிதனின் கதையைத் தெரிவிக்கிற ரீதியிலும் தன் சோகத்தை எந்த விதத்திலும் வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற இறுக்கமான முடிவோடு சின்னச் சின்னச் சிரிப்புத் துணுக்குகளுக்கு நடுவில் பேசிக்கொண்டே வந்தவள் கண் நுனியில் அழுகையைத் தேக்கியபடி நின்றபோது சங்கடமாக உண்ர்ந்தேன். அதுவரைக்கும் இதயத்துக்கடியில் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒளித்து வைத்த அழுகை பேசுகிற ஒரு செய்கையைத் தொடர்ந்த நெகிழ்ச்சியில் முட்டிக்கொண்டு வழிந்தது. அழுகிற அவளது முகத்தைப் பார்த்துவிடக் கூடாது என்கிற மாதிரி ஜன்னல் பக்கமாக இருந்த டேபிள் ஃபேனின் குறுக்குக் கம்பிகளை நகத்தால் கீறிக்கொண்டே நின்றாள்.

இதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை நான். உள்ளுக்குள் எனக்கும் தழுதழுத்தது.

"அப்படிலாம் நடக்காதுங்கக்கா--- வீணா எதுக்கும் கவலப்படாதீங்க...."

சொன்ன பிறகுதான் எந்த அளவிலும் அவளை தேறுதல் செய்யும் சத்தியற்ற பலவீனமான வார்த்தைகள் இவை என்பதை உணர்ந்தேன். கழுத்தைத் தருப்பி கண்களில் தேங்கி இருந்த கண்ணீரை புடவைத் தலைப்பில் துடைத்தபடி மெலிசாய்ச் சிரித்தாள் ராதை.

அப்புறம் எனக்கு இருந்த பிரச்சனையெல்லாம் வேலுவை எப்படி நேருக்கு நேர் கேட்டு, தீர்வு காண்பது என்பதுதான். டியூட்டி சமயத்தில் டீரிலிப்புக்கு வெளியே வந்தபோதும் கடைத்தெருவில் மீன் கடையிலும் நாலுபேர் வருவதும் போவதுமாய் இருந்த யூனியன் ஆபீசிலும்தான் அவனைச் சந்திக்க முடிந்ததே தவிர, பத்து பதினைந்து நிமிஷத்தில் சேர்ந்தவாக்கில் நின்று பேசுகிற அவகாசம் இல்லை.

எப்படி எடுத்துச் சொல்வது என்று உபாயம் கேட்க அபிமன்னனைப் பார்க்கப் போனபோது எல்லாம் மீறிப் போய்விட்டது என்றும் ஒருநாள் சமுத்திரக் கரையில் வைத்து தன்னோடேயே அது தொடர்பாய் பேசியது குறித்தும் எடுத்துச் சொன்னார். வருத்தம் பல மடங்காகி விட்டது. மனசின் தவிப்பை தாங்க முடியாமல் ஒரு தரம் டெலிபோனிலேயே பேச நேர்கையில் கேட்டபோது முதல் வார்த்தைக்கே ஒத்துக் கொண்டதும் இன்னும் ஐந்தாறு மாசத்தில் எப்படியும் திருமணம் நடந்தேறும் என்றும் சொன்னான். சத்தில்லாத ஒரு சிரிப்போடு ஊமையாகிப் போனேன் நான்.

ஆறு மாசம் கழிந்து இந்த தரம் வந்திருந்தபோது துளசிக்கும் வேலுவுக்குமான கல்யாணம் முடிந்துவிட்டிருந்தது. வீட்டில் அம்மாவே நிறைய விஷயம் சொன்னாள். ஆனமட்டும் பேச்சிலேயே கல்யாணத்தை தவிர்க்க ராதை நிறைய முயற்சி எடுத்து, "ஒன்மேல் எள்ளுமொன அளவு கூட ஆசை கொறஞ்சி போவல, இது நம்ம நல்லதுக்குத்தான்". என்று வேலுவே தினம் தினமும் எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்து "நீயே கல்யாணத்த நடத்தி வச்சாத்தாம்பா நம்ப குடும்பத்துக்கு நல்லது. நம்மதுன்னு ஒரு கொழந்த ஓடி வெளயாடறது எவ்வளவோ சந்தோஷமான விஷயம். அதக் கொஞ்சம் நெனச்சிப் பாரேம்பா" என்று இதமாய் எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்தது, ஆயிரம் தான் சம்மதம் என்றாலும் கல்யாணம் நெருங்க நெருங்க மனசு தாங்காமல் தவிப்பும், வருத்தமும் தாளாது அம்மா வீட்டுக்குப் போய் ராதை தங்கியது, வேலுவின் தகப்பனாரே எல்லாவற்றையும் முன்னின்று கல்யாணத்தை நடத்தி முடித்தது, ஒன்னா ஒரு குடும்பமா இருக்கணும் என்று சமாதானம் கூறி மீண்டும் ராதையை வீட்டுக்கு அழைத்து வந்தது, இரண்டு தார இருப்பைச் சங்கடமாகவும் முரண்பாடாகவும் உணர்ந்தவர்கள் வாடகை வீடு தர மறுத்தது, இப்படியே இரண்டு மூன்று வீடு மாறி அப்புறமாய் நிலையாக ஒரு வீட்டுக்கு வந்தது எல்லாம் அம்மா மூலம் கேட்கக் கேட்க எனக்குக் கஷ்டமானது. ராதையை வாழ்க்கை வீசி எறிந்திருக்கிற இடத்தைப் பார்க்கும்போது இம்சையாய் இருந்தது.

புதுசாய் வந்திருக்கிற அந்த வீட்டுக்கு வழி தேடி கொண்டு புறப்பட்டுப்போய் கதவைத் தட்டியபோது ராதைதான் கதவைத் திறந்தாள். கையில் அரையும் குறையுமாய்ப் பின்னிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் பையும் மஞ்சளும், நீலமுமான ஒயர்களின் நீளமான தொங்கலுமாக எழுந்து வந்திருந்தாள் ராதை. "வாங்க" என்று சின்ன முணகல் சத்தம் மாதிரி உபசரித்துவிட்டு பேசத் தொடங்கிய போதுதான் கசப்புச் சிதறலான சிரிப்பை உதிர்த்தாள்.

தையல் மிஷினை, ஜன்னல் ஸ்கீரினை ஜன்னலுக்கு அப்பால் சப்போட்டா மரத்தை, மரத்தடியில் ஓடி ஓடி ஆடுகிற அணில்களைப் பார்க்கிற மாதிரி ராதை நின்று கொண்டிருக்க வெறும் பழைய நினைவுகளிலும் அநுபவங்களிலும் மனசை உலாத்திவிட்டுக் கொண்டிருப்பதில் எனக்கும் சிரமமாய் இருந்தது. மௌம் அவிழ்க்க முடியாத சிக்கல் மாதிரி இருவரிடையேயும் மிக இறுக்கமாய் வியாபித்திருந்தது.

"எப்ப ஊர்லேந்து வந்திங்க...?"

ஒயர்களையெல்லாம் ஒரு மூலையில் வைத்துவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"நேத்து"

"அம்மா நல்லா இருக்காங்களா?"

"ம்"

"அந்த ஊரு புடிச்சிருக்கா?"

"ம்"

"பாஷையெல்லாம் புதுசா இருக்குமே, கத்துக்கிட்டிங்களா....?"

"ம்"

"சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்குங்க. எவ்ளோ காலம்தா ஓட்டல்ல சாப்டுவீங்க..."

"செய்யணும்"

பேச வேண்டிய விஷயத்தை விட்டுச் சுற்றிச் சுற்றி வருகிறமாதிரி இருந்தது. ஒரு சின்னத் திறப்புக்காகக் காத்திருப்பது மாதிரியும், அந்தத் திறப்புக்குப் பின் மளமளவென்று கொட்டி விடுவதில் தனக்கு எந்த மறுப்புமில்லை என்பது மாதிரியும் பேசுவதாகப்பட்டது. ஒரு வினாடி உண்டான மௌனத்துக்குப் பின் நான் கேட்டேன்.

"அவுங்க இல்லியா...?"

"வேலைக்குப் போயிருக்கா...."

என்னைப் பார்த்துப் பேசுவது சுதந்திரமான ஒரு பேச்சுக்கு இடையூறு மாதிரி மீண்டும் எழுந்து ஜன்னல் பக்கம்போய் நின்று கொண்டு சப்போட்டா மரத்தைப் பார்த்தபடி பேசினாள்.

"ஒங்க ஸ்நேகிதர் நெனச்ச மாதிரியே நடந்தாச்சி. வேற வழியில்லை. எங்க விட்டுலதா என்ன ரொம்பத் திட்டறாங்க. எனக்குப் புத்தி இல்லியாம். கட்டுப்படுத்தத் தெரியலியாம். எதுக்குமே நா பிரயோஜனம் இல்லியாம். ஹ்ம். நீங்களே சொல்லுங்க. நா எத ஆதாரமா வெச்சு இவரத் தடுக்கறது. வேணாம்னு நா சொல்லி வேணும்னு அவுரு கல்யாணம் செஞ்சிக்னு கசப்பா என்ன விட்டுப் போயிட்டார்னா நா என்ன செய்யறது? அப்புறம் நா எங்க போவறது? கைல ஒரு உத்தியோகம் இருக்குது. யாரயும் நம்பி இருக்க வேண்டியது இல்லங்கறது வாஸ்தவம்தா. இந்த வீடும் வேணாம், அம்மா வீடும் வேணாம்னு எங்கனாச்சும் ஆஸ்டல்லகூட சேந்துர்லாம். அப்பிடிகூட நெறயதரம் யோசிச்சேன். அனா ஆழமா பாத்தா அதெல்லாம் தப்பாத்தான் படுது. ஏற்கனவே ஒரு எடம்மாறி இன்னொரு எடம் வந்திருக்கம் இதுவே குரூரமாபடுது மத்தவங்களுக்கு. இந்த சந்தர்ப்பத்துல நானா வெளிய போனாலும் சரி, அசிங்கமா படாதா நமக்குன்னு ஒரு தொண எப்பவும் வேணும். இல்லன்னா பொம்பள பொழப்பயே ஒலகம் நாற அடிச்சிடுது. இத வாழ்ந்தும் பாத்தாச்சி. பாத்தும் கத்துக்னாச்சி. ஆனாலதா நடக்கறதெல்லாம் நடக்கட்டும் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்...."

ஒரு பொதுவான பத்திரிக்கை விஷயத்தை நிதானமாய் அணுகி அலசுகிறமாதிரி நீளமாய் விட்டுவிட்டுப் பேசினாள். ஒரு மிகக் குறைந்த பிரகாசத்தைக் கொண்ட சிரிப்பை உதிர்த்தபடி என் பக்கம் திரும்பினாள். கல்யாணத்துச் சமயத்தில் வழிய வழிய சிரிப்புடன் இருந்த ராதையின் முகத்துக்கும் இப்போதைய முகத்துக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஒளிர்வு குன்றி கன்னம் குழிந்து ஒரு தீராத சோகத்தின் நிழல் படிந்திருந்தது.

இன்னும் சொன்னாள் ராதை.

நான் ஒருவனாவது வேலுவின் இரண்டாம் திருமணத்துக்கு அவள் சம்மதத்திற்கான காரணத்தையும் அதற்குப் பின்னணியாய் இருந்த காரணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசினாள். வேலு மேலும் சரி, துளசி மேலும் சரி யார் மேலும் துவேஷமோ, நிஷ்டூரமோ பேச்சில் இல்லை. தன்னையே நொந்து கொள்கிற மாதிரி இருந்தது. ஆனாலும் மிக சிநேகத்துடன் கர்வப்படுகிறது போல் அமைந்த வேலுவுடனான இல்லற வாழ்வின் மீது படிந்த எந்த தூசையும் தள்ளிவிட்டு அந்த வாழ்ந்து பெற்ற அனுபவங்களையும், ஞாபகங்களையும் எந்தெந்த காலத்துக்கும் ஒரு புதையல் மாதிரி தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற சுய நம்பிகையுடனேயே நீண்டது பேச்சு.

"இப்பவும் வேலைக்கிப் போறிங்களா"

"ம்"

"லீவ்ல இருக்கறதா அம்மா சொன்னாங்க"

"எவ்ளோ நாளுதா ஊட்டுல இருக்கறது. ஒரே உழப்பலா இருக்குது. வேலைக்கிப் போய் வந்தா மனசுக்குத் தெம்பா இருக்குது அதான் சீக்கிரமாவே ஜாயின் பண்ணிட்டேன்"

"போவணுமா, போய் வந்தாச்சா?"

"இல்ல இனிமேதான் போவணும்"

"நைட் டூட்டியா..."

"ம். இப்பல்லாம் நைட் டூட்டிதா நல்லதா தெரிது. நானே கேட்டு வாங்கிக்குவன். சாய்ங்காலம் ஆறு ஏழு மணிக்கு அவ வந்தப்பறம் போய்டுவன் காலைல அவ கௌம்பறபோது வந்துடுவன்...."

ஒரு பலவீனமான விஷயத்தைச் சொல்லி விட்டது மாதிரி மெல்ல கால்விரலில் இருந்த வெள்ளி மெட்டியை பார்த்தாள் ராதை, மிகச் சாதாரணமாய் உதிர்ந்த இந்த வார்த்தைகளின் கனத்தையும் பின்னணியையும் உள்வாங்கிக் கொண்டதும் வேதனையாய் இருந்தது.

எனது வேதனையிலிருந்து மட்டுமல்லாமல் அவளையும் வேதனையில் இருந்து விடுவிக்க அனுசரணையான ஒரு வார்த்தையைத் தேடத் தொடங்கினேன் நான்.

நன்றி: கதை அரங்கம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link