சிறுகதைகள்


ஈரம்

கூடல்.காம்
மண்டையைப் பிளக்கிற பங்குனி மாச வெய்யில். தகிக்கிற வெய்யில். உச்சியிலிருந்து சரியத் துவங்கிவிட்ட சூரியன். சக கூலிக்காரப் பொண்டுகளுடன் வம்புப் பேச்சுக்கு வாயைக் கொடுத்து விட்டு, பூவனமும் நிறை பிடித்து மிளகாய்ப் பழம் பறித்துக் கொண்டிருந்தாள். காதோரங்களில் வழிகிற வியர்வை.

செடியோடு செடியாக பின்னி கொழை மோதிக் கிடக்கிற செடிகளின் இருட்டுக்குள், விலக்கி விலக்கிப் பார்த்து, "சிவப்பு"களை தேடித் தேடி பறித்துக் கொண்டிருந்தாள்.

பரபரப்புக்கு பழகிப் போன கை, "பொடு, பொடு" வென்று ஓடியது. வேலை நேரத்திற்குள் ஆளுக்கு ஒரு சாக்குப் பறிச்சாகணும்.

"ஏளா... பூவனம், கஞ்சியைக் குடிச்சிட்டு வேலையைப் பாருங்க. நா வூடு வரைக்கும் போய்ட்டு வரேன். கஞ்சியை குடிச்சிட்டு, புள்ளைகளையும் பார்த்துட்டு ஒரே ஓட்டத்துலே ஓடியாந்துரேன்."

சொல்லி விட்டு புஞ்சைக்காரி பரபரவென்று அகத்திக் கொழையை ஒடித்தாள். குடங்கையில் கொழையை ஏந்திக் கொண்டு மழைக்குப் பயந்து ஓடுபவளைப் போல வெளிப் பாய்ச்சலாய் நடந்தாள்.

அகத்திச் செடிகளின் காய்ந்த குச்சிகளில் தொங்கிய தூக்குச் சட்டிகளை எடுத்துக் கொண்டு எல்லோரும் மஞ்சணத்தி மர நிழலுக்கு வந்தபோது, பூவனத்தின் மனசும் பிள்ளைகளைப் பார்த்து வர ஓடியது.

மூத்தவள் ராஜி எருமையை பத்திக் கொண்டு மேய்ச்சலுக்குப் போயிருப்பாள். சின்னவன் முத்துப்பயல்....?

சனிக்கிழமை, பள்ளிக்கூடம் லீவ். சத்துணவை வாங்கித் தின்றுவிட்டு தெருப்புழுதியிலே விளையாடிக்கொண்டிருப்பான். சின்னப் பிள்ளைகளோட சண்டை போட்டு, அடிவாங்கி.... "அம்மா, அம்மா"ன்னு அழுதுகிட்டு அலைவானோ...

தாய் மனசுக்குள் தவிப்போடு ஓடிய நினைவுகள், உள்ளுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம், முத்துவைத் தேடி ஓடத் துடிக்கிற மூர்க்கமாய் மனசு.

"என்ன நெனப்புடி? கஞ்சியைக் குடி" கிழவியின் அதட்டலில் பூவனம் முழித்துக் கொண்டாள். சட்டியைத் திறந்தாள்.

கம்மஞ்சோறு மட்டும் இருந்தது. தண்ணீரை ஊற்றினாள்.

"கடிச்சிக்கிடை இல்லையா, பூவனம்?"

அதே கிழவியின் கரிசனம். சலிப்புடன் சூள் கொட்டினாள் பூவனம்.

"கரை கஞ்சிக்கு கடிச்சிக்கிடை எதுக்கு?"

உப்பு போட்டு வறுத்த வற்றலை நீட்டினாள் கிழவி. ஊறுகாய் இணுக்கை நீட்டினாள் ஒருத்தி துவையலை காட்டினாள் ஒருத்தி. ஆகக் கடைசியில் இவளுக்கு கடிச்சிக்கிடை மிஞ்சிப்போய்விட்டது.

மனசுக்குள் பூவை அள்ளித் தூவுகிற இந்தக் கிராமத்து அந்யோன்யம், நீராய் பாய்ந்து பரவுகிற கூட்டுழைப்புத் தோழமை. அன்பையும் கருணையையும் சுமந்து நிற்கிற மனுசத் தன்மை.

பூவனம் ஒன்றும் விசேஷமாய் சிலிர்த்துப் போய் விடவில்லை. இதெல்லாம் சகஜம், மீன் குஞ்சுகுள் நீந்துவதைப் போல.

...... பண்டிகை போன்ற நல்ல நாள்களில் வீடுகளில் அதிசயமாய் தோசைக்குப் போடுவார்கள். சோளத் தோசை, பாவாடையில் திரிந்த அந்த நாளில் பூவனத்துக்கு சந்தோஷம் பிடிபடாது. கும்மாளத்தில் தெருவெல்லாம் கால் பாவாமல் ஓடித் திரிவாள். "எங்க வீட்லே தோசை... எங்க வீட்லே தோசை" என்று எல்லாச் சிறுமிகளிடமும் பெருமையாய் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவாள்.

விடிந்தால் போதும். அம்மா சொன்னபடி ஒவ்வொரு வீடாக தோசையை சுமந்து கொண்டு போய்க் கொடுப்பதே பெரீய்ய வேலையாய்ப் போகும். "சீ" என்றிருக்கும்.

"அடியே பூவனம், இந்தா இதைக் கொண்டு போய் நம்ம கீழவீட்டு அத்தை வீட்லே குடுத்துட்டு வா..."

"ஆமா... போ... நா மாட்டேன்...."

"ஏங்கண்ணுலே... போயிட்டு வாடி..."

"ச்சி..."

அதேபோல ஏதோ காரணமாய் இவர்கள் வீட்டில் ஒன்றும் செய்யாமல் போட்டுவிட்டால், பல வீடுகளிலிருந்து வந்து சேர்கிற தோசையில் வீடு நிறைந்து போகும். மறுநாள் சாய்ங்காலம் கூட காய்ந்த தோசையை கடித்துக் கொண்டு தெருவில் விளையாடுவாள், பூவனச் சிறுமி...

நல்லது பொல்லது இரண்டிலும் தனக்குள் தானாய் முகம் திருப்பிக் கொள்கிற சுய ஒதுங்கல் சமாச்சாரம், கிராமத்துக்கு அந்நியமானது. மிளகாய்ச் செடிகளைப் போல ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, கொழை மோதி.... கலந்து பழகுகிற உறவுகள்...

இதெல்லாம் இப்போது சன்னஞ் சன்னமாய் அருகி வருகிறது. அருகி வருவதைச் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை; தடுத்து நிறுத்தவும் இயலவில்லை. மனுசருக்கு மனுசர் ஒட்டாமல், அந்நியமாய்... ஒவ்வொரு மனுசரும் தனித்தனி தீவாய்... மனுசர் துன்பத்தைக் கண்டு மனுசர் ரசித்துக் கொண்டு....

பம்ப் செட் மோட்டார்களும் டிராக்டர்களும் பெட்ரோல் நாற்றமும் நுழைந்து மண்ணின் ஈரத்தையும் இயல்புகளையும் பறித்துக்கொள்ள.... கூட்டு உழைப்பு தேவையற்று, காய்ந்த உலந்து வெடிப்புகள் கண்டு உடைந்து வருகிற கிராமத்து உறவுகள், மனுசத்தனங்களை கீறிப் பிளந்து, உழுதுகொண்டு போகிற யந்திர நாகரீகம், அவரவருக்கு வந்த சிரமங்கள், அவரவர் ஆன்மாவை அழுத்துகிற வங்கொடுமை....

"ம் ம்.... பொழுது போகுது... வாங்க .... வேலையை பார்ப்போம்.."

துரிதப்படுத்துகிறாள் கிழவி. ஏப்பத்தில் மனசு நிறைய எழுகிறாள், பூவனம். புஞ்சைக்குள் நுழைகிற பெண்களுடன் இவளும், விட்ட நிறையில் குனிகிறாள்.

பாவம் இந்தக் கிழவி! ரெண்டு பொண்டுகளையும் ரெண்டு சிங்கங்களையும் பெற்று வளர்த்து ஆளாக்கி கரையேற்றிவிட்டு, பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். ஓய்ந்து போன வயசிலும் கூலிக்குப் பாடுபட்டு வயிற்றைக கழுவிக் கொள்ள வேண்டிய அவலக்கதி.

"பெத்த தாய்க்கு ஏண்டா கஞ்சி ஊத்தலைன்னு தட்டிக்கேட்க ஊர்லே ஒரு நாதியில்லாமல் போச்சே.. இந்தக் கொடுமை எங்கையும் உண்டா?" என்ற அங்கலாய்ப்பு கிழவியிடமிருந்து அடிக்கடி பெருமூச்சுக்களாய் வெளிப்படும்.

பெட்டி பழத்தால் நிரம்பிவிட, அதைத் தூக்கி வாய்க்காலில் நின்ற சாக்கில் தட்டிவிட்டு, விட்ட இடத்திலிருந்து செடிசெடியாய் பறித்தாள் பூவனம்.

மனசுக்குள் முத்துப்பயல், என்ன செய்றானோ, எங்க அலையுறானோ என்று ஓடித்தவிக்கிற நினைவுகள், பங்குனி மாச வெய்யிலை மறக்கடிக்கிற பாச நீரோட்டம்....

புல்லுக்கட்டோடு வீடு வந்து சேர நாலுமணியாகி விட்டது. திண்ணையெல்லாம் கோழிப்பீ. அடைந்து கிடந்த அடைக்கோழி, புல்லுக்கட்டு விழுந்த சத்தத்தில் அதிர்ந்து போய்.... "கா.ர்..., கா....ர்" ரென்று கத்திக்கொண்டு ஓடியது.

பருந்துப் பார்வையாக தெருவெல்லாம் பார்த்தாள். முத்துவைத் தேடியலைகிற மனசு, "எங்க போய்த் தொலஞ்சுட்டான்?"

வீட்டைத்திறந்தாள். குப்பையாகிக் கிடந்தது வீடு, பார்க்கச் சகிக்கவில்லை. அலுத்துச் சலித்த உடம்பு, உஸ்ஸென்று உட்கார ஒரு பொழுதில்லையே என்ற எரிச்சலில் விளக்குமாறை எடுத்தாள். கொஞ்ச நேரத்தில் வீடு வீடாயிற்று.

அவசரமாய் பானையைத் தூக்கிக்கொண்டு குழாய்க்கு ஓடினாள்.

"பொழுதாகுது. உலை வைக்கணும்" துரிதப்படுகிற மனசு, சிறகு கட்டிக்கொண்டு பறந்தது கடைக்கு ஓடினாள். வீட்டுச் சரக்கு வாங்கிய கையோடு, பிள்ளைகளுக்கும் தின்பண்டம் வாங்கிக் கொண்டாள்.

வாசலில் முத்து உட்கார்ந்திருந்தான்.

பிஞ்சு உடம்பெல்லாம் அப்பிய புழுது. தூங்கி விழித்தது போல வாடிக்கிடந்த முகம். வழக்கமான வாட்டமல்ல. ஏக்கத்தில் வெம்பி சூம்பிப் போன வாட்டம். அந்தக் குருவிக் கண்களில் அடிபட்ட பறவையின் வேதனை. வலிதாளாமல் துடித்து அடங்கிப்போன அயற்சி வெந்துதணிந்த சாம்பலாய் முகம்.

பூவனத்துக்கு நறுக்கிட்டது. கொத்தப்பட்ட குஞ்சாக துடித்துப் போயிருக்கானே என்று தாயின் உள்மனசு தவித்தது.

முத்துவைக் கூர்ந்து பார்த்தாள்.

பறவையாடிய அவள் கண்களில் பாசத் தவிப்பு.

"ஏண்டா கண்ணு... ஏஞ்செல்லம், ஏம்பா ஒரு மாதிரியாயிருக்கே? யாரும் ஒன்னை அடிச்சாகளா? நீ யார்கூடயாச்சும் சண்டைகிண்டை போட்டியா?"

அழப் போவதைப் போல விம்முகிற முகம். விடைத்து அடங்குகிற நாசி. சின்ன உதடுகளில் மெல்லிய நடுக்கம். இல்லே என்பது போல தலையசைத்தான்.

இவளுக்குக் குலையெல்லாம் கருகி வந்தது.

"பெறகென்னடா.... ஏம்பா வாடிப் போயிருக்கே? சொல்லுடா, ஏந்தங்கம்"

பதைப்பில் வார்த்தை குமுகிற அம்மா முகத்தைப் பார்த்தான். சின்னக் கண்கள் அலை மோதுகின்றன. மனசுள் முண்டுகிற உணர்ச்சிகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கத் தெரியாத திகைப்பு. பதறிச் சாகிற அம்மா விடம் சொல்வதற்கும் தயக்கம்....

வீட்டுக்குள் மகனைக் கூட்டிக் கொண்டு போனாள். பெருமூச்சு வாசலில் மோதியது. புரிபடாத மர்மக் கலக்கத்தில் உழல்கிற தாய் மனசு.

முட்டி மோதுகிற உணர்ச்சிகளின் நெருக்குதலில் திணறிக் கிடக்கிறான். சமனப்பட்ட பிறகு சொல்லுவான். சொல்லட்டும். "அது என்னவாக இருக்கும்? எந்தப் பாவிப்பய இந்தப் பூச்செண்டு மனசை நோகடிச்சிருப்பான்? அவன் கையிலே புத்து பெறப்பட"

"இந்தாடா முத்து, தின்னுப்பா" என்று தின்பண்டத்தை நீட்டினாள். ஆவலோடு வாங்கினான். அவசரமாய்ப் பிரித்தான். அவன் எதிர்ப்பார்த்து ஆசைப்பட்ட பூந்தி இல்லை. தினம் தின்கிற காராச்சேவுதான்....

சந்தனக் கலர்லே இருக்கிற பூந்தி... ஒட்டியிருக்கிற சீனி வெள்ளை வெள்ளையாய் மின்னுகிற பூந்தி. பாத்தாலே எச்சி ஊற வைக்கிற பூந்தி.... ராமசாமிப்பய சந்தோசமாய் சத்தமில்லாம தின்னுன அருமையான பூந்தி--

நிமிர்ந்த முத்துவின் கண்ணில் துல்லியமாய் படிந்திருந்த ஏமாற்றம். பூவனத்துக்குள் இருட்டிக் கொண்டு வந்த திகிலான குழப்பம்.

அரி புழுவாய் மனசுக்குள் ஊர்கிற நினைவுகள். சட்டி பானையைக் கழுவி, அடுப்பில் வைத்தாள். நெருப்பை மூட்டினாள். மனசை அரிக்கிற நினைவுகளோடு அரிசியை அரித்து உலையில் போட்டாள்.

முத்து சேவைக் கொறிக்கிற "கொறுக் கொறுக்" சத்தம். உரைப்பெடுத்த நாக்கை உஸ்ஸீ உஸ்ஸீவென்று தொங்கப் போட்டுக் கொண்டு "அம்மா... தண்ணீ" என்று ஓடிவந்தான்.

தண்ணீரைக் குடித்துவிட்டு, பக்கத்திலேயே குத்துக்கால் வைத்து உட்கார்ந்தான். பசியெடுத்துவிட்டால் காலைச் சுற்றிச் சுற்றி வந்து உரசுகிற பூனை ஞாபகத்திற்கு வந்தது.

"என்னடா... விளையாடப்போகலியா?"

இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். அவன் காலில் நெருப்பின் வெளிச்சம்.

"ஏம்ப்பா....?"

"எம்மா, பூந்தி நல்லாயிருக்குமாம்மா?"

சம்பந்தமின்றி அவன் கேட்ட கேள்வியில் திக்கென்றது பூவனத்துக்கு. எனிப்படி கேக்குறான்? கூரிய பார்வையை அவன் முகத்தில் நிறுத்தினாள்.

"ஏண்டா அப்படிக்கேக்கே?"

"இல்லேம்மா... பூந்தி இனிச்சுக்கிடக்குமா, உரைச்சுக் கிடக்குமா?"

"இனிப்பா இருக்கும்பா, ஏண்டா கேக்கே?"

பருந்தைப் பார்த்துவிட்ட குஞ்சாக மனசு பதறியது அவளுக்கு. எதையோ அவலத்தை எதிர்நோக்குகிற இனம் புரியாத திகில். ஏனோ... செத்துப்போன புருஷனின் இழப்பை எண்ணி மனசுக்குள் கசிவெடுத்தது.

"இல்லேம்மா.... அப்பலே ராமசாமி வீட்டுக்குப் போயிருந்தேம்மா.... அவன் பூந்தி தின்னுக் கிட்டிருந்தாம்மா.. இது என்னதுடான்னு கேட்டேம்மா... அதுக்கு அவன் "எங்கய்யா பூந்தி வாங்கிட்டு வந்தாரு"ன்னாம்மா... நா பாத்துகிட்டிருந்தேம்மா.. அவுக அம்மா வந்தாக. என்னிய ஒரு மாதிரியா பாத்தாக. "கண்ட கழுதைக கண்ணுபட்டா வவுத்தை வலிக்கும்டா"ன்னு சத்தம் போட்டு அவனை உள்ளே போகச் சொல்லிட்டாகம்மா... "ஓடு ஓடு....உங்கம்மா உன்னைக் கூப்பிடுறாக"ன்னு என்னைப் போகச் சொல்லிட்டு கதவைப் பூட்டிக் கிட்டாகம்மா... ஏம்மா பூந்தி ரொம்ப இனிச்சுக் கிடக்குமோ...?"

திக்கித் திக்கி திணறித் திணறி அவன் ரொம்ப நேரமாய்ச் சொல்லிவிட்டு, வெள்ளந்தியாய் அம்மா முகத்தைப் பார்த்தான்.

வயிற்றில், அரிவாள் வெட்டு விழுந்தது போலிருந்தது பூவனத்துக்கு. குடலைப் பிடுங்கி வெளியே போட்டது மாதிரி குலை கொதித்தது. மனசெல்லாம் தீப்பற்றிக் கொண்டது. "அடப்பாதகத்தீ..." வெடித்துப்போன பூவனத்தில் நெஞ்சமெல்லாம் "தீ" வனமாய் கனன்றது.

அந்தப் பூச்செண்டை அப்படியே அள்ளி மடியில் போட்டுக் கொண்டாள். தலையில் அடித்துக் கொண்டு கதறியழுத அம்மாவை மிரட்சியுடன் பார்த்தான்.

"நாளாயிருந்து செய்றதையெல்லாம் நாகையிலே செய்ஞ்சுட்டு போய்ட்டீகளே... ஐயய்யோ.. நாம் பெத்த புள்ளைக நாக்குச் செத்துக் கிடக்குதுகளே.... ஒரு நாய்ச் சிறுக்கி வீட்லே ஏங்கி நின்னு வந்திருக்கானே.... ஏ ராசா, இந்த நாதியத்த முண்டச்சியை புள்ளைக வாய்க்கு ருசியா வாங்கித்தர வக்கில்லாம வைச்சிட்டீகளே...." என்ற வார்த்தைகள் கதறலுமாய் அவள் அழுத அழுகையில் அரண்டுபோய்க் கிடந்தான், முத்து.

தாலியறுத்த சூன்ய வாழ்க்கை - ஒருத்தி உழைப்பில் மூன்று வயிறுகள் கழுவிக் கொள்ள வேண்டிய கஷ்டநிலைமை - எல்லாம் குப்பென்று நெஞ்சில் பொங்கித் தாக்கியது. நிர்க்கதியாய் நிறுத்தி வைத்து அவளைச் சப்பென்று அறைகிற வாழ்க்கையவலம்....

பொங்கிப் பிரவகித்து முட்டி மோதிய நெருப்பான நினைவுகள் யாவும் சட்டென்று அந்த மூன்றாம் வீட்டுக்காரி மீது பாய்ந்தது.

"அட, ஈரங்கெட்ட ஈனச்சிறுக்கி! பச்சை மண்ணை பாக்க வைச்சுக்கிட்டு வாய்லே போடணுமா? அஞ்சாறு அள்ளிக் குடுத்தா... ஓங்குடியா முழுகிப் போகும்? ஏங்கி நின்ன புள்ளையை விரட்டியிருக்கீயே.. ஓ வாய்லே புத்து பொறப்பட!"

தீப்பிடித்த வனமாய்த் தகித்துப்போய் நின்ற பூவனம் சபித்தாள்.

பக்கத்தில் டிராக்டர் ஓடுகிற சத்தம்.

"அம்மா... டக்கர் பாக்கப் போறேன்" என்று தன்னை பிடுங்கிக் கொண்டு தெருவுக்கு ஓடினான் முத்து. அவள் மனசில் திரும்ப திரும்ப அந்தக் காட்சி.

ராமசாமி திங்கறதை எச்சில் வடிய ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த முத்து. அவனைப் போகச் சொல்லிவிட்டு கதவைப் பூட்டுகிற அந்தச் சிறுக்கி...

முந்தியிருந்த வழமையெல்லாம் மாறத்தான் செய்யுதுன்னாலும், பட்டிக்காடு இம்புட்டு மோசமாகவா கெட்டு போகணும்? மனசுலே ஈரமில்லாம மனுசத் தன்மையில்லாத...கொடுமை...

நினைக்க நினைக்க மனசு கொதிக்கிறது....

"வீட்லே யாரு?"

வாசலில் வேற்றுச் சத்தம்.

"யாரு...... அது?"

"நாந்தான்..."

நாராயணசாமி நாயக்கர் மகன். அவர் புஞ்சைக்குத்தான் வேலைக்குப் போயிருந்தாள்.

"என்னய்யா....?"

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.

"பூவனம், எங்கய்யா சம்பளம் குடுத்தனுப்பிச்சாரு. இந்தா".

அவளுக்குள் சட்டென்று தலை நீட்டிய யோசனை.

"அய்யா எங்க?"

"திருவேங்கடம் போறாக"

"போய்ட்டாகளா, போகப் போறாகளா?"

அவளின் ஆவல் துடிதுடிப்பை வினோதமாய் பார்த்தான் அவன்.

"இனிமேல்தான் போகப் போறாக."

"இந்தச் சம்பள ரூவாயை அப்படியே கொண்டு போய் அய்யாகிட்டே குடுத்து, "இதுக்கு பூந்தி வாங்கிக்கிட்டு வரணும்"னு பூவனம் சொன்னாள்னு சொல்லுங்க..... சொல்றீங்களா?"

"இவளுக்கு எதுக்கு பூந்தி?" கூலிக்காரியிடமிருந்து விரலுக்கு மிஞ்சிய வீக்கமாய் வந்த வார்த்தைகளைக் கேட்டு... குழப்பத்தோடு தலையாட்டினான்.

"அய்யாகிட்டே சொல்லுங்க... ஞாவகம்... மறந்துராம பூந்தி வாங்கிட்டு வந்துரணும்... பூந்தி..."

பூவனத்தின் சொற்கள் அந்தப் பையனின் முதுகை நோக்கித் தெருவில் துரத்திக்கொண்டு ஓடியது.

விடிந்தது.

நாய்க்கர் வாங்கிக் கொடுத்தனுப்பியிருந்த பொட்டலம், எறும்பு அரிக்காமலிருப்பதற்காக தண்ணீர் பானையின் மேல் இருந்தது.

எடுத்துப் பிரித்தாள். ஒரு கிண்ணத்தில் போட்டு முத்துவிடம் கொடுத்தாள்.

"ஹைய்...ய்யயா! பூந்தி!" சந்தோஷத்தில் விரிந்த அந்தச் நின்ன முகமலர். கண்களில் துள்ளிய மின்னல். வாழ்க்கையைக் கண்டடைந்த அதிசயமாய் குதூகலத்தில் குதித்தான். அதைப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போய் இவளுள் ததும்பிய ஆனந்தக் கண்ணீர்.... பூவனத்தின் மனசுக்குள் ஜில்லென்று பூத்துக் குலுங்குகிற பூவனங்கள்....

"தின்னுடா... ஏங் கண்ணு.... ஏஞ்செல்லம்... தின்னுப்பா"

ராஜிக்கும் கொஞ்சம் அள்ளிக் கையில் தந்தாள்.

இன்னொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கொண்டு முத்துவை கையில் பிடித்துக்கொண்டு மூன்றாம் வீட்டுக்குள் நுழைந்தாள் பூவனம். மனசைப் பிறாண்டிய நினைவை உலுக்கிக் கொண்டாள்.

"யாரு, பூவனம் மயினியா?

"ஆமா., மருமகனை எங்கே?"

"ராமசாமியை கேக்கீகளா? என்ன மயினி?"

"இந்தா... கொஞ்சம் பூந்தி..."

சோளத் தோசையை வீடு வீடாக சுமந்து கொடுத்த சிறுமிக் காலம் மனசுக்குள் நிழலாடியது, பூவனத்துக்கு இவர்கள் வீட்டிற்கும் வந்து நிறைந்த தோசைகள்....

"இதெதுக்கு மயினி? நீங்க புள்ளைக்கு குடுங்க"

"இருக்கட்டும். இத தின்னு வவுறா நெறையப் போவுது? ஏதோ ஆசைப்பண்டம். ஒம்புள்ளையும் சின்னப் புள்ளைதானே... வந்தாக் குடு"

சகஜமாய் இருப்பதுபோல சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டவளின் கண்ணுக்குள் அலைபாய்கிற விழிகள். முள்ளாக உறுத்துகிற குற்ற உணர்வின் அழுத்தம் தாளாமல் முகத்தில் தோன்றி மறைகிற இருட்டு. பெருந்தன்மைப் பெரு வெளிச்சத்தை எதிர்கொண்டு பார்க்க முடியாமல் கூசிப் போய் இடுங்கிக் கொள்கிற கண்கள்....

தெருவில் இறங்கிய பூவனத்தின் மனசில் ஒரு நிறைவு.. அற்பத்தனமில்லாத மனுசக் காற்று மனசெல்லாம் பாய்ந்து பரவி நிறைத்துக் கொண்ட மாதிரியிருந்தது.

முத்து புரியாமல் கேட்டான்.

"ராமசாமி வீட்லே எதுக்கும்மா பூந்தி குடுத்தே?"

"ஏண்டா... அவனும் ஒன்னைப்போல சின்னவன் தானே..."

"அவுக எனக்குக் குடுக்கலியே...நாம மட்டும் எதுக்காக குடுக்கணும்?"

"நாய் நம்மளைக் கடிச்சிட்டா... நாமளும் திருப்பி நாயை கடிக்கலாமாடா? நாம நம்ம ஈரத்தை --- வழமையை எதுக்காக மாத்திக்கணும்?"

அவனுக்குப் புரியவில்லை. அவள் திருப்தியோடு வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் காலடியில் மிதிபட்டு வாசல் படியில் கிடந்தது, யந்திர நாகரீகம்.

நன்றி: கதை அரங்கம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link