சிறுகதைகள்


காற்றூதிய பலூன்கள்

கூடல்.காம்
உள்ளே இருப்பவர்கள் சொல்வதை இனியும் நம்பிப் பயனில்லை. அவர்கள் பேச்சைக் கேட்டுக் கேட்டு பிளாட்பாரத்தில் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடி ஓடி அலைந்தாகி விட்டது.

நேரமாகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பெட்டியில் எப்படியும் இடம் பிடித்தாக வேண்டும்.

"பக்கத்துப் பெட்டி காலியா இருக்கு. அங்கே போங்களேன்" என்று உள்ளே இருக்கும் ஓரிருவர் சொல்வது அவனை ஏமாற்றுவதற்கே என்பதைப் புரிந்து கொள்ள புதிய அனுபவம் அவனுக்குத் தேவை இல்லை. அங்கே காலியாக இருக்குமானால் இவர்கள் ஏன் ஒருவர் மூச்சை ஒருவர் சுவாசிப்பது போல் இங்கே இடித்து நெருங்கி நசுங்கிப் போய் நிற்க வேண்டும்?

"கதவெக் கொஞ்சம் தெறங்க சார். ஓரமா ஒரு மூலையில நிண்டுகிறோம்".

"கதவெ எங்கே தெறக்கிறாப்ல இருக்கு. ஒருத்தர் கால்ல ஒருத்தர் நின்டுக்கிட்டிருக்கிறதெப் பார்க்கத்தானே செய்யிறைய".

இது கலியாண சீசன் என்பது ஆண்டிச்சாமிக்கும் தெரியும். அவனும் கலியாணத்திற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய கடைசித் தம்பிக்குக் கலியாணம். இந்தச் சங்கடங்களை நினைத்துத்தான் கலியாணத்திற்குப் போகாமல் இருந்து விடவிரும்பினான். மேலும் ரயில்வேக் காரனுக்கு கொட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் அதை தன் வயோதிகத் தகப்பனாருக்கு அனுப்பினால் கலியாணச் செலவையாவது கொஞ்சம் அடைக்கும். ஆனால் அந்தப் பொல்லாத கிழவர் எப்படி பதில் எழுதிவிட்டார்.

"நீயும் உன்னோட பணமும் ஒன்னாயிருமா?... நீ முன்பு அனுப்பிய பணத்திலிருந்து சில அனுபவங்கள் கெடச்சிருக்கு. அது உன்னை மாதிரி பேசலே; சிரிக்கலெ; சத்தம் போடலே. அதனால நீ, அதுவாக மாட்டே... பணம் வேணாம். நீ வா...."

உள்ளே இருப்பவர்கள் ஒவ்வொருவரும் புழுக்கத்தை உணர்கிறார்கள். "உஸ்...ஃப்பு..." என்று திரும்பத் திரும்ப அலுத்துச் சலித்துக் கொள்கிறார்கள். வண்டி நகர்ந்து விட்டால் காற்று புகுந்து கொள்ளும். புழுக்கம் தெரியாது. வண்டியின் புறப்பாட்டை ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

"எல்லாக் கம்பார்ட் மெண்ட்டுகளையும் ரிசர்வ் பண்ணித் தொலைச்சுட்டறான். ஏதோ பிச்செ போட்றாப்ல ஒன்னு, ரெண்டு பெட்டிகளைத்தான் பொதுவுல ஒதுக்கிறான். கூட்டமும், அடிதடியும் இல்லாமெ எப்படி இருக்கும்?" என்று வண்டிக்குள் இருந்தவர் நொந்து கொள்வதற்கு மற்றொருவரிடமிருந்து பதிலும் கிடைக்கிறது.

"இத்தென பேரெத்தான் ஏத்தனும்னு எல்லாத்துக்கும் ரூல் இருக்கு, ரிக்ஷா, டாக்சி, பஸ், ப்ளேன், இதுகள்ல ஃபாலோ பண்ற சட்டம் ரயிலுக்கு மட்டும் என் இல்லே? அவனவன் பலத்தைப் பார்த்து, மண்டையை ஓடச்சுக்கிருங்கன்னு விட்டுர்ராங்களே".

பிளாட்பாரக் கூச்சலையும், உள்ளே பேசிக் கொண்டிருந்தவர்களின் சத்தத்தையும், மீறிக் கொண்ட கேட்கிறாற்போல் ஆண்டிச்சாமி குரலை உயர்த்தினான்.

"கொஞ்சம் தெறங்க சார். பொம்பளைப் புள்ளெங்க நிக்குது. நீங்களும் அக்கா தங்கச்சிகளோட பொறந்தவங்கதானே".

உள்ளே இருந்த ஒன்று இரண்டு பேர் வழக்கமான பதிலையே கூறினார்கள். அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருப்பது அவனுக்கே அசிங்கமாக இருந்தது.

"நோட்டு நோட்டா எண்ணிக் குடுத்து டிக்கெட்டுகளெ வாங்கிட்டு..."

அவன் தனி ஆளாக வந்திருந்தால் இவர்களுக்கெல்லாம் சரியான பதில் சொல்லி இருப்பான். இந்த ஜன்னல்களுக்குள் ஏறிக் குதித்திருப்பான். யாரேனும் தடுத்தால் அவர்களை ஒரு கை பார்க்கலாம். இப்பொழுது குடும்பத்துடன் வந்திருக்கிற அவனுக்கு அப்படியெல்லாம் நடந்து கொள்ளத் தோன்றவில்லை.

அவன் மனைவியும், "பெரியமனுஷி"யாகி விட்ட மகளும், பத்து வயதுள்ள மகனும் சற்று விலகி நின்று கொண்டிருந்தார்கள். ஊருக்குப் போக முடியுமா என்பதில் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டாகவில்லை.

மைக்கில் வெளிப்படும் அறிவிப்பு ஹிந்தியில் ஆரம்பமாகி, ஆங்கிலத்தில் தொடர்ந்து தமிழுக்கு வருகிறது. ரயில் புறப்படுவதற்கான நேர நிமஷங்களில் கணக்கிட்டுச் சொல்லப்படுகிறது. அவனுள்ளே கிளர்ந்த பரபரப்பும் நடுக்கமும் அவன் பேச்சிலும் செயலிலும் வேகத்தை இழுத்துக் கொண்டு வருகின்றன.

"வண்டி பொறப்படப் போகுது. சீக்கிரமா கதவெத் தெறங்கயா... எவ்வளவு நேரமா நானும் கத்திக்கிட்டிருக்கேன்... போறப் போது என்னெத்தெ வாரிக் கட்டிக்கிட்டுப் போகப் போறோம்..."

இப்படி இருந்தா நாடு எப்படிங்க உருப்படும்?...." ஆண்டிச் சாமியின் குரல் கரகரத்தது. அடுத்த நிமிஷத்தில் அது அவமானமாகத் தெரிந்ததும் மனம் நிமிர்ந்து கொண்டது.

"எள்ளு விழக் கூட எடமில்லையே. எங்க வந்து இருக்கப் போறே?... பொண்டு புள்ளெகளே வேறே கூட்டி வந்திருக்கே..." என்று உள்ளே இருந்தவர் ஒருவர் அனுதாபத்துடன் தாழ்ந்த குரலில் கூறினார்.

"உள்ளே புகுந்துட்டா அததுக்கு எடம் கெடக்காமெப் போகாதுங்க. மனசுல தான் எடம் வேணும்...."

இருவரும் மாறிமாறிப் பேசிக் கொள்வதைப் பார்த்து விட்டு பெட்டிக்குள் இருந்த ஒருவர் பேசிக்கொண்டிருந்த வரை செல்லமாகக் கடிந்துக் கொண்டார்.

"பேச்செ விடுங்க, பதில் சொல்லிக்கிட்டிருந்தா பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. சும்மா இருந்தா பேசாமெப் போறாங்க."

ஜன்னலுக்குள்ள ஏறிக்குதித்து அவன் சட்டையைப் பிடித்திழுத்து மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விட வேண்டும் என்று ஆண்டிச்சாமி நினைத்தான். நினைப்பதை எல்லாம் நிறை வேற்றிக் கொள்ளும் நேரமாக அது இருக்கவில்லை. பிளாட்பாரத்தில் முன்னிலும் அதிகமான பரபரப்புத் தெரிந்தது. அவசர அவசரமாக குறுக்கும் நெடுக்கும் சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். காபி, டீ விற்றுக் கொண்டிருந்தவர்கள் வண்டிக்குள் இருந்தவர்களிடமிருந்து காசையும், காலி கிளாஸ்குகளையும் வாங்குவதில் முனைப்புக் காட்டினர். வழி அனுப்ப வந்தவர்கள் உள்ளே இருப்பவர்களுக்கு வணக்கம் சொல்லிப் பிரிவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வண்டியின் ஒரு மூலையிலிருந்து பச்சைகொடி அசைக்கப்பட போவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன.

ஆண்டிச்சாமி தன்னுள் "ஙொய்" யென்று ஏதோ மொய்த்துக் கொண்டு நரம்புக் கூட்டத்தை முறுக்கிப் பிழிவது போன்ற உணர்வைப் பெற்றான். தன்னுள் திரவமாகிக் கசிந்தவற்றை வெளிக் கொட்டுவதற்கு முன் உணரும் துடிப்பையும், சிலிர்ப்பையும் அவன் கண்டான்.

வண்டியின் கதவிலுள்ள இரும்புப் பிடியைப் பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டினான். கதவை ஒங்கி ஓங்கி கையால் அறைந்தான். இதுவரை மறைந்து அடங்கி இருந்த சுயரூபம் நெருப்பாக வெளிப்பட்டது. "என்ன இது ஒங்க அப்பன் வீட்டு வண்டியா? என்னமோ ஒவ்வொருத்தனும் ரயிலையே வெலைக்கு வாங்கீட்டாப்ல பேசுறீங்களே... நீங்க மட்டும்தான் டிக்கெட் வாங்கியிருக்கையளா? நாங்க கொடுத்தது ஓட்டாஞ்சல்லியா?...

யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அவன் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாதபோது அப்படிச் சொன்னதாக நினைத்துக் கொண்டு அவனுக்கு பதில் சொல்வது என்ற பெயரில் அவன் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் தங்களை இலக்காக்கிக் கொள்ள எவரும் விருப்பம் காட்டவில்லை.

தாடியும் மீசையுமாக, தலைமுடி தோளில் படிய வளர்த்திருந்த ஒருவர் ஜன்னல் வழியே மிகவும் சிரமத்துடன் நெருங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தார். பிரார்த்தனையை நிறைவேற்ற ஏதாவதொரு புண்ணிய þக்ஷத்திரத்திற்கு அவர் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆண்டிச்சாமியையும் அவன் குடும்பத்தையும் அவர் பார்த்த பார்வையில் நெகிழ்ச்சி தெரிந்தது. பிறகு வெளித் தெரிந்த தலை உள்ளே மறைந்து கொண்டது. பேச்ச மட்டும் கணிரெனக் கேட்டது.

"பாவங்க, பொம்பளைப் புள்ளைகளோட வந்திருக்காரு. என்ன காரியமோ, என்ன அவசரமோ, நாம என்ன ரயில்ல குடி இருக்கவா போறோம்? ஏதோ கொஞ்ச நேரம். அப்புறம் நான் ஆரோ, நீங்க ஆரோ, பட்ற செரமத்ல இன்னும் கொஞ்சம் கூடத்தான் படுவமே..."

நாலைந்து பேர்களின் எதிர்ப்புக் குரல் அவரைப் பேச விடாமல் செய்தது. ஆனால் கதவுக்கு மேலே உட்பகுதியில் போடப்பட்டிருந்த கொக்கியை நீக்கிய போது எவரும் ஓடிவந்து கையைப் பிடித்துத் தடுக்கவில்லை.

சந்தர்ப்பத்தை ஒரு வினாடி கூட ஆண்டிச்சாமி இழக்கவில்லை. கதவை வெளியிலிருந்து தள்ளினான். நகரவில்லை. உள்ளே இருந்தவர்கள் பெட்டிகளையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் கொஞ்சம் இழுத்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சரியவும் சிறிது இடைவெளி தெரிந்தது.

அவன் மனைவியும், மகளும், மகனும் பெட்டி பைகளை ஆளுக்கொன்றாய் தூக்கினர். ஆயினும் அவனது அவசரத்திற்கு அவர்கள் ஈடு கொடுப்பதாக இல்லை.

"சனி மூதேவிகளா, வந்து தொலையுங்களேன். ஒங்களோட மாரடிக்க முடியலே".

அவர்கள் ஓடி வந்து வண்டியில் உடம்புகளை நெளித்து சுருக்கி பூனைக் குட்டிகள் போல் இடைவெளியில் நுழைந்து கொண்டார்கள். ஆண்டிச்சாமி வண்டியைத் தொத்திக் கொண்டபோது, வண்டி புறப்பட்டு விட்டது. விசில் சப்தமும், பச்சைக் கொடியின் அசைவும் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தன.

வெளியிலிருந்து காற்று உள்ளே புகுந்ததும் வியர்வையால் கசகசத்த உடல்கள் அதன் ஸ்பரிச்சத்தில மயங்கி சொர்க்கத்தைக் கண்டது போல் கிளர்ச்சியுற்றன.

அழுத்தி வைத்திருந்த ஆண்டிச்சாமியின் ஆத்திரமெல்லாம் இப்பொழுது வாய் பிளந்து கொண்டது.

"ஒவ்வொருத்தனும் என்னமோ அவுங்க அப்பன் வீட்டு வண்டியின்னு நெனச்சிக் கிட்டிருக்கான்க. ..தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவேன். எங்க பக்கமா இருந்துச்சுன்னா எலும்பெ எண்ணிக் கையில கொடுத்திருப்பேன்...."

ஆண்டிச்சாமியின் மனைவி கண்ணைக் காட்டி சும்மா இருக்கும்படி சைகை காட்டினாள். அது அவனை மௌனப்படுத்துவதற்கு பதில் அவன் கோபத்தை இன்னும் கிளறி விடவே செய்தது.

"நீ சும்மா இரு... தலெயெச் சீவிடுவாங்களா? அதெத்தான் நானும் பார்க்கணும்... வர்ரவன் வரட்டும். எப்ப எப்பன்னு தான் நானும் பாத்துக் கிட்டிருக்கேன்..." அவனை எதிர்ப்பதற்கு அந்தக் கூட்டதில் ஒருவர் முன் வந்துவிட்டால் அனைவரும் சேர்ந்து கொள்வார்கள். அந்த ஒருவன் கிடைக்காததால் மௌனமே மிஞ்சி நின்றது.

சிறுநீர் கழிப்பதற்காக ஒரு பெண் வந்தாள். "லட்ரினை"த் திறக்க முடியாத அளவிற்கு அதன் முன்னால் நெருக்கி அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவள் திரும்பி விட்டாள்.

ஆண்டிச்சாமி கழுத்தை வளைத்துக் கொண்டு வண்டியின் உள்ளேயும், மேலேயும் பார்த்தான். அவனுக்குப் பற்றிக்கொண்ட வந்தது.

உட்காருகிற இடத்தில் சில ஆண்களும் பெண்களும் கால்களை நீட்டிக் கொண்டு "ஹாயா" படுத்திருந்தார்கள். மேலே லக்கேஜ் வைக்கிற பலகையிலும் சில ஆண்கள் படுத்திருந்தார்கள்.

அவர்கள் தூங்குவதாகத் தெரியவில்லை. தூங்குவது போல் பாவனை செய்வதாகவே தோன்றியது.

ஆண்டிச்சாமிக்கு அவர்கள் மேல் ஏற்பட்ட கோபத்திற்குக் கொஞ்சமும் குறையாத அளவில் அங்கே நெரிசல்பட்டுக் கிடப்பவர்கள் மீதும் ஏற்பட்டது.

"இவங்களெத் தட்டி உக்கார வைக்க தைரியம் இருக்காது. வர்ரவங்களெ பிடுச்சுத் தள்ள மட்டும் தெரியும்..." அங்கிருந்த ஓரிருவர் அதை நினைக்காமல் இல்லை, ஆயினும் அவர்களின் பேச்சும் உடையும் அவர்களை நெருங்கவிடவில்லை. மேலும் அவர்களே உருவாக்கிக் கொண்ட நாகரீகமும், பண்பாடும் அவர்களின் சுயக் கட்டுப்பாடாகித் தடுத்தன.

ஆண்டிச்சாமி தள்ளிக் கொண்டும், இடித்துக் கொண்டும் முன்னே சென்றான்.

படுத்திருப்பவர்களைத் தொட்டுக் குலுக்கினான்.

"எந்திருங்க சார்... எந்திருச்சு உக்காருங்க..."

படுத்திருந்த பெண்களிடம் உரக்கக் கத்தினான்.

"எந்திருச்சு உக்காருங்கம்மா"

சில ஆண்கள் லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்து, ஆங்கிலதில் எதையோ முணுமுணுத்து விட்டுத் திரும்பவும் புரண்டு படுத்துக் கொண்டார்கள். ஆண்டிச்சாமி விடவில்லை. அவர்களைத் தொட்டு குலுக்கினான்.

"எந்திருச்சு உக்கார்ரையளா? கீழே இழுத்துப் போடட்டுமா?... அங்க என்னடான்னா ஒருத்தன் மூச்செ ஒருத்தன் குடிச்சு செத்துக்கிட்டிருக்கான். நீங்க என்னடான்னா...?

படுத்திருந்தவர்களில் ஒருத்தன் கண்ணைக் கசக்கிக் கொண்டே முணுமுணுத்தான்.

"ப்ரூட்... ஒரு நாகரீகமே இல்லாமே..."

"ஒங்க நாகரீகந்தான் தெரியுதே... மூணுபேர் உட்கார் சீட்ல ஒருத்தன் காலெ போட்டுக் கெடக்குற லக்ஷ்ணம்..."

ஆண்டிச்சாமி மேலே பேசிக் கொண்டிருக்கவில்லை. பெட்டியையும், பைகளையும், கூடையையும் கொண்டு வந்து மேலே திணித்தான். மனைவியையும், மகளையும், மகனையும் பெண்கள் படத்திருந்த இடத்தில் நெருக்கித் தள்ளிவிட்டு உட்காரச் செய்தான். படுத்திருந்த ஆண்கள் எழுந்ததும் கிடைத்த இடத்தில் அவன் உட்கார்ந்ததும் நின்று கொண்டிருந்த இரண்டு மூன்று பேர்களும் முண்டியடித்து எஞ்சிய இடத்தில் உட்கார்ந்து கெண்டார்கள்.

அங்கிருந்தவர்களுக்கு வியப்பாகவேயிருந்தது.

தமது தோற்றங்களாலும், பேச்சுக்களாலும் நெருங்க விடாமல் செய்தவர்கள் இவ்வளவு எளிதில் தலை கவிழ்ந்து போவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை.

அவர்களைப் பற்றி தங்களுக்குள் இவர்கள் இப்பொழுது மதிப்பீடு செய்வது சரியாகவே இருந்தது.

"பேச்சுக்குப் பேச்சு" என்று வருகிற போது மிகவும் சாமர்த்தியத்தையும் நுணுக்கத்தையும் காட்டி இவர்களால் மற்றவர்களைத் தேய்த்து விட்டு உயர்ந்து நின்று விடமுடிகிறது, வழிமாறி மௌனத்தோடு கூடிய முரட்டுத்தனத்திற்கு முன் இவர்கள் தேய்ந்து அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள்.

பாக்கெட்டில் கசங்கி வியர்வையில் நனைந்து கிடந்த சிகரெட்டை எடுத்து நீவி சரி செய்துவிட்டு ஆண்டிச்சாமி பற்ற வைத்தான். புகையை தீவிரமாக உள்ளிழுத்து அளவு கடந்த நிம்மதியுடன் மெல்ல மெல்ல இழைய விட்டான்.

வண்டிக்கு வெளியே தெரிந்த காட்சிகளை ஒரு சிறுவனின் உற்சாகத்துடன் ரசித்துக் கொண்டு வந்தான். காலை நேரத்துக் குளுமையைத் தொட்டு வருகிற காற்று உடலில் படப்பட மனத்திற்கு இதமாக இருந்தது.

நவீன ஓவியம் போன்ற வடிவத்தில் கொக்குகள் மேலே பறந்து கொண்டிருந்தன. அந்த வெள்ளைச் சித்திரம் நீல ஆகாயப் பின்னணியில் ரம்மியமாகத் தெரிந்தது.

தந்திக் கம்பிகளில் உட்கார்ந்திருந்த கரிய "தைலங்" குருவிகள் ரயில் சத்தத்தில் நடுங்கி "கிரீச் கிரீச்" என்று அலறிப் பறந்தன.

வரப்புகளிலும், கண்மாய்க் கரையிலும் தலைக்கு மேலே கஞ்சிக் கலயங்களும், அலுமனியத் தூக்குச் சட்டிகளும் அசைந்து அசைந்து மறைந்தன.

குன்றின் அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறியாட்டு மந்தைக்குப் பக்கத்தில் கிழிந்து சாயம் போன பழைய போர்வையால் உடலைப் போர்த்தி இருந்த சிறுவன் கையில் வைத்திருந்த கம்பில் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏதாவது அற்புதக் கனவுகளைக் கண்டு கொண்டிருக்கவேண்டும்.

அத்துவானமான இடத்திலிருந்து கமலைகளை மாடுகள் இழுக்கும் போது வரும் சப்தம் "ஙய்" என்று சோகமாக இழைந்து கொண்டு சென்றது.

தண்டவாளத்தின் இரு பக்கத்திலும் "வெளிக்"குச் செல்லும் ஆண்கள் கொஞ்சமும் கூச்சமோ லஜ்ஜையோ இல்லாமல் திறந்து போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ரயிலில் செல்லும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு அவர்களின் நிர்வாணம் "தரிசனமா"கிக் கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை இல்லாமல் ரயிலை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள். ரயில் பிரயாணிகளைத் திரும்பச் சந்திக்கப்போவதில்லை என்ற விஷயமே அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கலாம். மானம், மரியாதைகள் காக்கப்பட வேண்டும் என்ற ஆசை கூட அவற்றை அறிந்தவர்களை திரும்பவும் சந்திக்க வேண்டுமே என்ற கூச்ச உணர்வில் தான் பிறப்பெடுக்குமோ?

அடுத்த ஸ்டேஷனை வண்டி நெருங்கிக் கெண்டிருப்பதற்கு அடையாளமாக எஞ்சின் விட்டு விட்டு அலறியது. ஆண்டிச்சாமி ஜன்னல் வழியே தலையை நீட்டி சற்று தொலைவில் பார்த்தான். பிறகு "படக்"கென்று தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.

"அப்பா... ஒரே கூட்டம்.... திமுதிமுன்னு உள்ளே வரப்போறாங்க... கதவெச் சாத்துங்க, தாழ்ப்பாளைப் போடுங்க...."

அங்கிருந்தவர்கள் ஆண்டிச்சாமியை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

பிளாட்பாரத்தில் வண்டி நின்றபோது கதவு பல கைகளால் மாறி மாறி பலமாகத் தட்டப்பட்டது. ஜன்னல் வழியாக கெஞ்சலான குரல்கள் கேட்டன. அவற்றிற்கு இணக்கமான பதில் கிடைக்காமல் போகவே அடுத்த இடத்தைதேடி ஓடினார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் நகரவில்லை.

"பொம்பளெப் புள்ளெங்க நிக்குது... நீங்களும் அக்கா தங்கச்சிகளோட பொறந்தவங்க தானே..."

ஆண்டிச்சாமி தான் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"யாரு இல்லேன்னு சொன்னா?... அக்கா தங்கச்சி யோட பொறந்தா வண்டியுமா சங்கப்பலகையாயிடும்?...."

"மனசுலே எடம் இருந்துச்சுன்னா...?"

"வண்டியில எடம் இருந்தாத் தானே மனசுல எடம் வரும்..."

"கொஞ்சம் தெறங்க சார்... போறம்போது என்னத்தெ வாரிக் கட்டிக்கிட்டுப்போகப் போறோம்.."

"போறம்போது பாத்துக்கிறலாம்.. இப்பொ அதுக்கென்ன?"

"நீங்க மட்டும்தான் டிக்கெட் வாங்குனீங்களா? நாங்க குடுத்தது ஓட்டாஞ் சல்லியா?..."

"அதெ ரயில்வேக்காரன்ட்டப் போயி கேக்கனும்..."

விசித்திரமான பிராணியைப் பார்ப்பது போல் வண்டியில் இருந்தவர்கள் ஆண்டிச்சாமியைப் பார்த்தார்கள்.

விசில் சப்தம் கேட்டது.

பெட்டி படுக்கையுடன் இருந்த அவன் அடுத்த கம்பார்ட்மெண்டைத் தேடி ஓட்டமும் நடையுமாகச் சென்றான். அவனது குடும்பமும் அவனைத் தொடர்ந்தது.

வண்டி புறப்பட்டதும் தனது இடத்தில் வந்து உட்கார்ந்து மற்றொரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஆண்டிச்சாமி ஊதினான்.

கனமில்லாத காரணத்தால் ஸ்திரமாக நிற்க முடியாமல் பலூனாகவே ஆண்டிச்சாமி அவர்களுக்குத் தெரிந்தான். சில அடிப்படைகளை ஏற்கும் போதே அவற்றின் கனம் முன் நிகழ்வின் தொடர்ச்சியை பின் நிகழ்வில் சங்கமிக்கச் செய்ய முடியும் என்பதை அங்குள்ளவர்கள் உணரவே செய்தனர்.

ஆண்டிச்சாமியிடம் சிலிர்த்து நின்ற முரண்பாடுகளை அவர்கள் அசூயையுடனும் வியப்புடனும் பார்த்து அவற்றிற்குத் தாங்கள் விதிவிலக்காகி நிற்கும் காரணத்தால் உணர்ந்து நிற்பதாக பிரமை வசப்பட்டனர். ஆனால் தம் தம் வாழ்க்கையில் நடந்து போன எத்தனையோ முரண்பாடான நிகழ்ச்சிகள் நினைவில் நனைந்ததும் எண்ணற்ற காற்றூதிய பலூன்கள் அவர்கள் முன் தெரிந்தன. அந்த நிமிஷத்திலேயே அவர்களின் வியப்பும், பிரமிப்பும், சுய உயர்வும் ரயிலின் ஓட்டத்திற்கேற்ப அடித்துப் புரண்டோடி மறையும் பொருள்களாயின.

ரயில் இப்பொழுது வேகம் பிடித்து ராக்ஷசத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நன்றி: கதை அரங்கம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link