சிறுகதைகள்


சிறகற்ற பறவைகள்

கூடல்.காம்
மாற்றங்கள் எதில்தான் இல்லை? எல்லாமே ஏதோ ஒரு வகையில், விதத்தில் மாறிக் கொண்டிருக்கிறதுதான். அதுவும், மெட்ராஸ் போன ஜெபி மாயமாய் மறைந்து விட்ட பிறகு, சமீபகாலமாக வீட்டில் சகலமும் புதுத்திசையில் மாற ஆரம்பித்து விட்டது. வீட்டில் எவருக்குமே கிடைக்காமல் போன கவர்ன்மெண்ட் உத்தியோகம் சம்மனசுக்குக் கிடைத்தபோது அது புதுக் காரியமாகவே இருந்தது. நாற்பது வயதுகளைக் கடந்துவிட்ட பிறகு இப்படித் தானும் காலையிலேயே வேலைக்குக் கிளம்புவதென்பது தனக்கு அலுப்பூட்டுகிறதா அல்லது பிடித்திருக்கிறதாவெனத் தீர்மானமாக அவளுக்கே தெரியவில்லை. வொர்க்ஷாப் வேலைக்குப் போகிற மகன் அந்தணிக்கு எல்லாம் செய்த கையோடு, புடவைக் கடைகளில் வேலை செய்யப் புறப்படுகிறது மகள்கள் வயலட், அடைக்கலத்துடன் தானும் புறப்பட்டு, ஹைஸ்கூல் சத்துணவுக் கூடத்தில் பத்து மணிக்கு முன்பே இருந்தாக வேண்டும்.

இந்தப் புது வேலையால், தான் முன்பு செய்து கொண்டிருந்த செட்டியார் வீட்டு வேலையை விட்டு விட்டாள். அவர்களுக்கு ஏழு வருடங்களாக வேலை செய்து வந்த சம்மனசை விட்டு விடுவதில் விருப்பமில்லைதான். சம்பளத்தைக் கூட்டுவதாக, இன்னும் ஏதேதோ கொடுப்பதாகச் சொன்னாள் செட்டியாரம்மா, சிரிப்பு மாறாமல் பணிவாக மறுத்துவிட்டாள் சம்மனசு. இந்தச் சத்துணவுக்கூட வேலையும் அதிகச் சிரமமில்லை. மதியம் சூடாகக் கிடைக்கிற சோறு... இது தவிர, லீவு நாட்கள் வேறு. முதலில் முணுமுணுத்த வயலட்டும் அடைக்கலமும்கூடப் பின் அடங்கிப் போனார்கள். அந்தணி மட்டும், "ஏம்மா, தினத்துக்கும் அடுப்பே கதின்னு இருக்கணும்னா எப்படி?" என்று ஆட்சேபித்தபோது "இல்லடா அந்தணி, செட்டியாரம்மா வீட்டு வேலைகளைவிட இது சுளுவுதான். மத்தியானம் வரைக்குந்தான் எல்லாம். முடிச்சுட்டு வந்தா அக்கடான்னு கெடக்கலாம். போய் வந்தா வீட்லயும் சூடா சாப்பாடு. கையிலயும் நாலு காசு நிக்கும். உனக்கும் பாரம் குறையும். இந்தப் புள்ளைங்களைக் கரை ஏத்தறத்துக்கும் பிறகு உதவுமே" என்றாள் சம்மனசு. அப்புறம், அந்தணி ஏதும் சொல்லவில்லை.

சம்மனசு வாய்விட்டுச் சொல்லாத ஒரு காரணமும் உண்டு. அவள் புருஷன் மிக்கேல். ஓயாத குடி முன்பாகவே தந்துவிட்ட முதுமையில், லேசாக நடுங்குகிற கைகளுடன் வெண்முடி முளைத்திருக்கிற கன்னங்களைத் தடவிக் கொண்டு, கையில் பீடியுடன், அந்த நாள் நினைவுப் புலம்பல்களுடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் மிக்கேல். தன் பலம் நிறைந்த நாட்களில் குளிருக்கு சுடச் சுடவும் சாரசாரமாக நாக்குக்கு வக்கணையாகவே, சாப்பிட்டுப் பழகிவிட்டு, இன்று அதற்கு வக்கற்றுப்போன சூழ்நிலையில் அந்த மனுஷனுக்குத் தவறாமல் மதியமாவது சூடாகச் சோறு தர இந்த வேலையில் வழி இருக்கிறதே.

பசுமை மிகுந்த அந்தப் பழைய பொன் நாட்களில் மிக்கேல் சம்பாதிக்காத காசா! வாரம் நான்கு நாட்கள் அசைவம் இல்லாமல் சாதம் இறங்குமா அவருக்கு. தொழில் தெரிந்த அவரைத் தேடிக்கொண்டு அல்லவா வேலைகள் வந்து குவிந்தன.. கட்டில், பீரோ எதுவானாலும் மிக்கேல் செய்தால்தான் சரி என இன்றும் சொல்கிற பழைய ஆட்கள் இருக்கிறார்கள்தான். மிக்கேலின் தொழில் நேர்த்தி கலைஞனின் கையெழுத்தாய் அந்த மரச்சாமான்களில் மறைந்திருந்து, விவரம் தெரிந்த எவரையும் "மிக்கேல் ஆசாரில்ல...! என்று சொல்ல வைக்கும், எவ்வளவு துரைமார்கள் ஜீப்பில் தேடி வந்து கூட்டிப் போன நாட்களுமுண்டே...! இப்போது மிக்கேல் அறிந்திருக்கிற ஆங்கிலம் அப்போது கற்றுக் கொண்டதுதான். கூடவே, இன்னொன்றும் பழகிக் கொணடார் மிக்கேல். குடி! சுறுசுறுவெனத் தொண்டை நனைந்த பிறகே இழைப்புளி எடுப்பார். வேலை முடியும் வரை கவனம் சிதறாது.

அப்போதெல்லாம் அவருடன் அதிகம் போனது ஜெபி தான். அவன் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருந்த சமயம் அது, ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வந்து, ஃபளாஸ்ககில் காபியுடன் மலபார் பேக்கரியில் வாங்கிய சூடான கறி பஃஸ“டன் சைக்கிளில் மிக்கேலைத் தேடிப் போவான். அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இருந்த உறவே ஒரு தினுசாகத்தான் இருந்தது. இவன் உள்ளே போய் எல்லாவற்றையும் வைக்கும்போதுகூட, இந்த வந்ததையே கண்டுகொள்ளமாட்டார் அவர். அவனுக்கும் இதுதான் இயல்பு என்பதைப் போல, சம்பந்தமில்லாதவனைப் போல் வெளியில் போய் நின்று கொள்வான், மாலை வெயிலின் சுகத்தை அனுபவிக்கிற மாதிரி. உள்ளே வேலை செய்கிற சத்தம் நின்றவுடன் உள்ளே போய் டம்ளர்களைக் கழுவி, காபியை ஊற்றி, கறி பஃப்ஸை எடுத்து... எல்லாம் வார்த்தைகள் இல்லாமலேயே. ஜெபியின் இந்தக் காரியங்கள் எல்லாம் தங்களுக்கிடையே நிலவுகிற நல்ல புரிந்து கொள்ளல் என்பதாலா, இல்லை புரிந்து கொள்ளாமை என்பதாலா என்று எப்போதாவது அவருக்குச் சந்தேகம் வருவதுண்டு, ஆனால், மொய்க்கிற ஈயை விரட்டுகிற அலட்சியமாய், இப்படியான நினைப்புகளை விரட்டிவிட்டு, பீடியைப் பற்றவைத்துக் கொள்வார் மிக்கேல்.

காபி, டிபன் முடிந்த பிறகு ஒரு கோணிப் பையில், சிதறிக் கிடக்கும் மரத் துகள்களை அடுப்புக்கு என்று எடுத்து மூட்டை கட்டிவைப்பான் ஜெபி. கிளம்பும் முன் மறுபடி தாகசாந்தி செய்து கொள்வார் மிக்கேல். மிகவும் நல்ல மூடு வந்துவிட்டால். "ஜெபி, அசெம்பிளி போலாம்டா" என்பார். இவன் மறுப்பின்றி முன்னதாகவே கிளம்பி, அசெம்பிளியில் ஓடுகிற ஆங்கிலப் படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அப்பாவுக்காகக் காத்திருப்பான். சினிமாவுக்குத்தான் என்றில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் காலை ஏழு மணி ஜபத்துக்குப் போவதிலிருந்து, கோத்தகிரி மாதா திருவிழாவிலிருந்து, குருசடி வரை இருவரும் சேர்ந்தேதான் போவார்கள். பின் எப்படியோ, எங்கிருந்தோ மாயமாய் வந்தது அந்த இடைவெளி, ஜெபி கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவனுக்குக் கல்லூரிப் படிப்புத் தேவையில்லை என்று மிக்கேல் வீட்டில் பண்ணின ரகளையும் வாக்குவாதமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.

சம்மனசின் அப்பா ஜெபிக்குப் பரிந்து பேசிக்கொண்டு பண உதவியும் செய்ய முன் வராதிருந்தால் ஜெபி மேலே படித்திருக்கவே முடியாது. அந்த வாக்குவாதத்தின் பிறகு கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை மிக்கேலிடம் அவன் பேசவே இல்லை.

ஆனால் மிக்கேல் சொன்னது சரிதானோ என்பதைப் போல் ஜெபிக்கு என்ன வேலையா கிடைத்துத் தொலைத்து...? எத்தனை அலைச்சல்கள், முயற்சிகள் எத்தனை வருடங்களாக...! எல்லாம் சலித்து, வெறுத்துத்தான் ஜெபி ஓடிப் போயிருக்க வேண்டும் என்று மிக்கேல் நினைத்துக் கொள்வார் அடிக்கடி. என்றாலும், ஒருவேளை தான் அவனை நடத்த வேண்டிய வகையில் நடத்தாததும், மூத்த பிள்ளைக்குரிய ஒரு மதிப்பைப் காட்டத் தவறியதும்தான் காரணமோ என உறுத்தும், ஒரே கூரையின் கீழ் இத்தனை வருஷங்களிலிருந்தும் அவனைப் புரிந்து கொள்ளவே முடியாமல் போனதே! தங்கள் உறவு நன்றாக இருந்திருந்து, ஜெபிக்கு வேலையும் கிடைத்திருந்தால், வீட்டு நிலைமை இப்படிப் பாதாளத்துக்கும் போயிருந்திருக்காதோ..! தான் குடி குடி என்று வீழ்ந்து போனதுகூட ஒரு சாபம்தான் என்று கசந்து கொள்வார். இல்லாவிட்டால் இத்தனை சீக்கிரமாய் இந்தத் தள்ளாமை வந்திருக்காது. வீட்டுக்குள்ளும் மதிப்பிழந்து போன பரிதாப நிலை ஏற்பட்டிருக்காதே.

சத்துணவுக்கூட வேலைக்குப் போக தீர்மானித்துவிட்ட பிறகு சம்மனசுக்கு மறு யோசனை இருக்கவில்லை. தவிரவும், வேறு என்ன பெரிதாக யோசித்துவிட முடியும்...? தினம் தினம் பொழுதை நகர்த்துவதே பெரும் சாதனைகளைத் தவிர வேறேதும் செய்ய முடியாத புருஷன் அதிலும், இப்பவும் ஏக கெத்துதான். பழசு மறக்காத புலம்பல். ஜெபி போய்விட்ட பிறகு குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தாங்க முயற்சிக்கிற அந்தணி... அவன் படிப்புக்குச் சந்பந்தமில்லாமல் ஒரு வொர்க்ஷாப்பில் சேர்ந்திருந்தான். அவனின் சம்பாத்தியம்தான் வீட்டில் பிரதானம் என்றாகிவிட்டிருந்தது.

அடைக்கலத்தையும் வயலட்டையும் துணிக் கடைகளுக்கு வேலைக்கு அனுப்ப மனமில்லைதான் ஆரம்பத்தில். இருந்தாலும் வேறு வழியின்றிப் போனது சம்மனசுக்கு. அதுகள் சம்பாதிக்கிற காசு கொஞ்சமாக இருந்தாலும், அதுகளின் பாட்டுக்காவது அந்தக் காசு போதுமே. பிள்ளைகளின் கல்யாணம் பற்றிய கவலைகள் சம்மனசுக்கு - அபூர்வமாய் ஓய்ந்திருக்கிற பொழுதுகளுக்கும் தூக்கம் வராத ராத்திரிகளுக்கும் என்றே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எல்லவாற்றுக்கும் சேசுவின் திரு இருதயத்தைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறாள். நிலைமைகள் இப்படி இருக்க, வேலைக்குப் போவது பற்றி என்ன மறுபரிசீலனை இருக்க முடியும்....?

ஒருவேளை, ஜெபி திடுமென மாயமானது நிகழாமலிருந்து. அவன் எதிர்பார்ப்புகளின்படி வேலையும் கிடைத்திருந்தால், தான் வேலைக்குப் போக அவசியம் இல்லாது போயிருந்திருக்கலாம். ஜெபி போய் மூன்று வருடங்களுக்குமேல் ஆனாலும் அவன் நினைவுகளால் கிளம்புகிற கண்ணீரை அடக்க முடிவதில்லை. அதுவும், ஜெபியின் நண்பன் அமலநாதனைப் பார்க்கும் போதெல்லாம் ஜெபி போனதன் கசப்பையும் இழப்பையும் தவிர்க்க முடிவதில்லை, இருவரும் ஒன்றாகவே பள்ளியில், கல்லூரியில் என்று படித்து, சுற்றித் திரிந்தவர்கள். ஒரு முறை அமலநாதனின் தங்கை பிரவசத்துக்கு அவன் அம்மா சென்று விட, தனியாக இருந்து அமலநாதனின் துணைக்கு வீட்டில் போய் இருந்தது ஜெபிதான். அமலநாதன் இன்னமும் மிக உறுதியாகவே நம்பிக் கொண்டிருக்கிறான் ஜெபி இதோ நாளை வந்துவிடப்போகிறான் என்றே. இந்த நம்பிக்கை தொனிக்க அவன் பேசுவதைக் கேட்கிற ஒவ்வொரு சமயத்திலும் வாடிப்போன தன் மனத்தின் நம்பிக்கை நாற்றுகளுக்கு நீர் கிடைத்தாற் போலிருக்கும் சம்மனசுக்கு. ஜெபி வந்துவிட்டால் நல்லதுதான். ஆகா, வெறும் நல்லது தானா... அதைவிட என்ன சந்தோஷம் இனி வந்துவிட முடியும்..?

மிக்கேலுக்கு என்னவோ சம்மனசு வேலைக்குப் போவதில் துளியும் சம்மதமில்லை. எனினும், அவர் எதுவுமே பேசவில்லை. தனக்குள்ளாகவே மறுகிக் கொண்டிருந்ததைத் தவிர, தான் பேசினாலும் அந்த வார்த்தைகள் மதிப்பின்றி நிர்த்தாட்சண்யமாய்ப் புறக்கணிக்கப்படுமென்று ரகசிய பயங்கள் அவருக்குள் இருந்தன. அவள் இப்படி வேலைக்குப் போவது கௌரவப் பிரச்னை போன்ற ஏதோ ஒரு விஷயமாக அவருக்கு இல்லாமல் சம்மனசும் வேலைக்குப் போய்விட்டால் வீட்டிலிருக்கும் வெறுமையும் தனிமையுமே அவரின் சம்மதமின்மைக்குக் காரணங்களாயிருந்தன. செட்டியாரம்மா வீட்டுக்கு சம்மனசு போய்க் கொண்டிருக்கையில் காலையில் ஒரு மணி நேரமும், சாயங்காலத்தில் சில மணி நேரங்களும்தவிர எப்போதும் வீட்டிலிருப்பாள் சம்மனசு. ஆனால் இப்போது ஒரு தினத்தில் பாதிக்குமேல சம்மனசு இல்லாமல் தான் மட்டும் தனித்திருப்பது வெறுப்பேற்றுகிற விஷயமாய் இருந்தது.

தனியாக வீட்டில் உட்கார்ந்திருக்கையில், படுத்திருக்கையில் சமீப நாட்களாய் ஜெபியின் நினைப்புகள் அதிகமாய் அவரை வதைப்பதைப் போலிருந்தது. தன் முதல் மகனாய் அவன் பிறந்தபோது நிகழ்ந்த பலவும் நிறைய வருடங்களுக்குப் பிறகு மனத்துக்குள் முளைவிட்டிருந்தன. அவன் இருந்தபோது தான் அவனைப் பற்றி மனத்துக்குள் கொண்டிருந்த அன்பு அல்லது அதைப்போன்ற ஒன்றின் முழு வீச்சும் அவன் காணாமல் போன பிறகே தனக்கு அதிகம் உறைப்பதாக உணரலானார் மிக்கேல். தங்கள் இருவருக்குமிடையே விழுந்த இடைவெளிக்குத் தானே முழு காரணம் என்பதைப் போல் குற்ற உணர்வுகள் அதிகரித்து, அரித்துக் கொண்டிருந்தன. அவருக்குள், இருந்தாலும் யாரிடம் இவற்றைச் சொல்லி அழ முடியும்? அப்படி அழுதாலுமே கூட தன்னை எவரும் நம்புவதில்லை என்று அறிய வந்த போது அதிர்ந்து போனார்.

ஒரு நாள் பாக்கியம் டீச்சர் வீட்டுக்கு வந்தபோது மனம் விட்டு அழுது ஜெபி பற்றிப் பிரலாபிக்கையில், வயலட் சிறுகுரலில் அடைக்கலத்திடம், "அப்பாவுக்குச் சரக்கு உள்ளே போயிருக்கா? ஜெபி அண்ணா மேலே பாசமும், அழகாச்சும் வருது. அப்போ என்ன வெரட்டு வெரட்டினாரு--" என்று சொல்லிக் கொண்டிருந்தது கேட்டுவிட, நிலைகுலைந்து போயிற்று அவருக்கு! தடுமாறிப் போனார். முன்பெல்லாம் தன்னிடம் எதிரில் பேசப் பயந்ததுகள், இன்றைக்கு? தன்னுடைய நிலை அந்தஸ்து எல்லாம் மெள்ள மெள்ள மங்கிக் கிட்டத்தட்ட மறைந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. சம்மனசு கூடச் சமயங்களில் தன்னை அலட்சியப்படுத்துகிறாளோ என்று தடுமாற்றம் வரலாயிற்று.

காலையில் எல்லோருமே வேலைக்குக் கிளம்ப, தான் மட்டும் தாடியைக் தடவிக் கொண்டு, அடுப்பு அருகில் குளிருக்கு இணக்கமாக உட்கார்ந்திருக்கவேண்டும். சம்மனசு காபி தருவாள். வெளியே போகிற வயலட், அடைக்கலம், அந்தணி இவர்கள் நினைத்தால் சொல்லிக் கொண்டு போவார்கள். சில தடவை அதுவும் இல்லை. சம்மனசு மட்டும் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவாள்.

எல்லோரும் போனபிறகு சம்மனசு எடுத்து வைத்த பழையதை விழுங்கிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு காலை வெயிலுக்காக வாசலுக்கு வந்து சம்மனசு மதியத்துக்கு மேல் சத்துணவோடு வரும் வரை நிமிஷங்களை உதைத்துத் தள்ளிக் கொண்டிருக்க வேண்டும்.

எதனாலோ இப்போதெல்லாம் சம்மனசு கொண்டு வருகிற சத்துணவு அவர் நாக்குப் பிடிக்கவே இல்லை, இதுகூட ஒரு தடவை சம்மனசு, வேலைக்குப் போகிற அந்தணிக்கு மட்டும் தனியாகக் கொஞ்சம் நல்ல அரிசி போட்டுச் சூடான சோறும் முட்டைப் பொரியலும் ரகசியமாகப் பண்ணி வைத்திருந்ததைத் தற்செயலாகக் கவனித்து விட்டதிலிருந்துதான். ஆனால் இதற்கு அவர் என்ன சொல்ல முடியும்...? வீட்டின் பிரதான வருமானம் அவனால்தான், அவனுக்கு இப்படித் தனிக் கவனிப்புகளில் என்ன தவறு இருக்க முடியும்? அவசியம் கூற அல்லவா? எல்லோருக்குமே இப்படிச் செய்வதென்பது இயலாத காரியம் என்பதும் அவருக்குப் புரிந்தே இருந்தது என்றாலும், அந்தச் சோற்றை, மணம் கமழும் முட்டைப் பொரியலைப் பார்த்த மாத்திரத்தில் முந்தின நாட்களில் வெகுவாய் ருசி கண்டிருந்த நாக்கும் மனமும் விழித்துக் கொண்டு விட்டன. தொடர்ந்து சண்டித்தனம் செய்தன.

அன்றைய தினம் அடக்க முடியாமல், வேலையை முடித்துவிட்டு, கொண்டு வந்த சத்துணவை, அவருக்கு சம்மனசு எடுத்து வைக்கும்போது தயங்கித் தயங்கி....

"சம்மனசு.......சம்மனசு...... எனக்கு நாக்கே.....நல்லா இருக்கறதில்ல.. அதனால. அதனால....அந்தணிக்கு மட்டும்....... நீ பண்றதில அப்பப்ப எனக்கு நாலே வாய் மட்டும் கொஞ்சமா எனக்குத்.... தர்றியா சம்மனசு.." - குரல் தேய..... அவரால் முடிக்க முடியவில்லை.

இத்தனை தளர்ந்துபோன மிக்கேலை அதுவரை அறியாதிருந்த சம்மனசு, அடிபட்டு விட்டவளைப் போல சரேலென நிமிர்ந்து பார்த்தாள்.

நன்றி: கதை அரங்கம்
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link