சிறுகதைகள்


வாழ்வின் மிச்சம்

கூடல்.காம்
கமலா தன் புருஷனைப் பார்க்கக் கிளம்பினாள். பொதுவாகக் காலை வேளைகளில் அவன் "ஜாகிங்" வருவதுண்டு. அரைக்கால் டவுசரும் கான்வாஸ்ஷுஸூமாய் அவன் பஸ் ஓடுகிற பெரிய ரோட்டில் அதிகாலையில் ஓடுவான். பெரிய தெரு ரொம்ப நீளம். ஒருமுறை போய்த் திரும்பினாலேயே தொடைகளும் ஆடு சதைகளும் கடுக்கும். ஐந்தாறு பஸ் நிறுத்தங்கள். அத்தனை பெரிய ரோட்டில் அவன் நாலு முறை ஓடித் திரும்புவான். திரும்பி வந்து நாயர் கடையில் வியர்வை வழிய உட்கார்வான். நீளமான ஒரு சிகரெட் பிடித்தபடியே சூடாய் ஒரு டீ குடிப்பான்.

நாயர் கடையில் அவனுக்கு அக்கவுண்ட் இருக்கிறது. எப்படியும் அவன் வருவானென்று கமலா நேற்று நாயர் கடைப்பக்கம் போய் நின்று பார்த்தாள். ரொம்ப நேரம் நின்றாள். ஐந்தாறு பேர் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். அவள் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். ரொம்ப நேரம் அங்கே நிற்க முடியாது என்று தோன்றிற்று. நாயர் கூட அவள் பக்கம் திரும்பி "என்ன வேண்டும்" என்று மலையாளத்தில் கேட்டான். "ஒன்றுமில்லை" என்றாள் இவள். தெருவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். தெருவில் பார்க்க ஒன்றுமில்லை. தெரு நீளமான ஒரே தெரு. எத்தனை தூரமானாலும் ஆளும், வாகனங்களும் நேரே கண்ணில் படும்.

கமலாவின் புருஷன் வரவில்லை. ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. அவளுக்குக் குழப்பமாய் இருந்தது. எப்படியும் அவன் வருவான் என அவள் நம்பியிருந்தாள். அவனைப் பார்த்துப் பேசலாம், எதுவும் பணம் கேட்கலாம் என அவள் நம்பியிருந்தாள். ஆனால் அவன் வரவில்லை. அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

ஒருவேளை சீக்கிரமே வந்துவிட்டுப் போய்விட்டானோ? நாயர் பல் குத்தியபடி டீ வாங்க வந்த ஒரு மலையாளச் சிறுமியிடம் வம்பு செய்து கொண்டிருந்தான். பணம் கொடுக்கும் போதும், டீ கொடுக்கும் போதும் எப்படியாவது அந்தச் சிறுமியைத் தொட்டு விட அவன் முயன்றான். அதுவும் நெளிந்தும் வளைந்தும் கைகளை ஜாக்கிரதையாய் அதே சமயம் டீ கொட்டி விடாமல் உருவிக் கொண்டு அவனை மலையாளத்தில் ஏதோ திட்டியது. நாயர் சிரித்தான்.

அவளுக்குத் தானும் ஒரு டீ குடிக்க வேண்டும் போலிருந்தது. நேற்று மதியத்துக்குப் பின் அவள் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அவளுக்கு உடம்பில் தெம்பே இல்லை. எல்லோரும் டீ குடிக்கிறதைப் பார்த்ததும் அவளுக்கும் பசித்தது.

அவள் பணம் எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை வீட்டில் இரண்டு போய் இருக்கிறது. ரொம்ப முக்கியமானால் அதற்குக் குருணை வாங்கலாம் என்று வைத்திருந்தாள். வெளியே எடுத்து போனால் ஒரு வேளை செலவாகிவிடும் என்ற பயத்தில் அவள் எடுத்து வரவில்லை.

கமலா எப்படியும் தன் புருஷனைப் பார்த்தாக வேண்டும். எப்படிப் போய் பார்ப்பது என்ற யோசனையிலேயே நாள் தாண்டிப் போய் விட்டது. வீட்டுக்காரன் நாலு முறை வந்து கேட்டுவிட்டான். அவள் தன் கணவன் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னாள். அவன் அதை நம்பவில்லை. ஓரளவு அவனும் விஷயம் கேள்விப்பட்டிருந்தான். கமலாவின் புருஷன் ரெண்டாங்கல்யாணம் செய்து கொண்டது அவனுக்குத் தெரிந்திருந்தது. தவிரவும் "உங்க வீட்டுக்காரரு வருவாரு?" என்கிற அவன் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்?

"நாயர்" என்று கமலா கூப்பிட்டாள். "இன்னிக்கு அவர் இங்க வந்திருந்தாரா?" என்று கமலா கேட்டாள். ஆக அவன் வரவில்லை. ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை ஊருக்கு எங்கேயும் போய்விட்டானோ?.. நேற்று வந்திருந்தானா என்று அவள் அறிந்து கொள்ள விரும்பினாள்.

"நாயர்" என்று அவள் கூப்பிட்டாள். அவன் காது கேளாதது போல் வேறெங்கோ பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான். அவள் கொஞ்ச நேரம் தயங்கி "நாயர்?" என்று திரும்பவும் கூப்பிட்டாள். ஒரு வேகத்துடன் அவன் அவளைப் பார்க்கத் திரும்பிப் புயலைப் போல ஆவேசமாய்த் திட்டினான். அவள் நடத்தையை சந்தேகிக்கிற ஒரு கெட்ட வார்த்தையும் சொல்லி அவளால் தன் காலை வியாபாரம் கெட்டுப் போவதாய் மலையாளத்தில் வைதான். பின் சட்டென்று அடங்கி அவளையே மறந்து போனாற்போலத் தன் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.

கமலா இதை எதிர்பார்க்கவில்லை. அவள் கடன் சொல்லி ஒரு டீ கேட்க நினைத்தாள். காரியங்கெட்டுவிட்டது. அவள் அவனைக் கோபப்படுத்திவிட்டாள். அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

கமலா திரும்பி நடக்க ஆரம்பித்தாள். நாளை இதே இடத்தில் வந்து இனி நிற்க முடியாது என்று தோன்றியது.

எப்படியும் அவனைப் பார்த்தாக வேண்டும். வீட்டில் பொட்டு அரிசியில்லை. சாமான் இல்லை, பாக்கியை அடைக்காமல் யாரும் இனி அவளுக்குக் கடன்தர மாட்டார்கள். வீட்டுவாடகை வேறு. இரண்டு மாதமாய் பாக்கி. அட்வான்ஸ் எப்போதோ கழிந்து விட்டது.

ஆக அவன் வரவில்லை. அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

இப்போது பசித்தது. வெயில் ஏறியபோது வியர்வையின் கசகசப்பும் ஒரு வாரமாய்க் குளிக்காத உடம்பும் வெறுப்பாய் இருந்தது. பசி அதிகரித்திருந்தது. பசியின் வேகத்தில் அவளால் நடக்கவே முடியவில்லை. கால்கள் இற்றுப் போய் பலமேயில்லாமல் அவளை பூமியில் சரிக்க முயன்றன.

இன்றைக்கு வேலைக்குப் போக நேரமாகிவிட்டது. வழக்கமாய்க் காலையிலேயே போகிறதுதான். ஐயர் வீடு அது. ஐயர் வீடுகளில் காலையிலேயே டிபனும் செய்து சோறும் ஆக்கி விடுவார்கள். அவள் காலையிலேயே போய் எல்லாப் பாத்திரங்களையும் தேய்த்துக் கவுத்திய பின் ஐயர் வீட்டம்மா வந்து எல்லாப் பாத்திரங்களையும் தண்ணீர் தெளித்து எடுத்துப்போகும்.

ஐயர் வீட்டம்மா கொஞ்சம் ஆதிக்க உணர்ச்சியுள்ள பொம்பளை. ஐயரே அவள் எது சொன்னாலும் சரிசரியென்று போய்விடுவார். இன்று லேட்டாய் வேறு போகிறாள் இவள். ஆனாலும் நிறைய நேரமாகிவிட்டது. அவள் என்ன செய்வாள்? எப்படியும் அவள் அவனைப் பார்த்தாக வேண்டும்.

கதவைத் திறந்தபோதே அந்த அம்மாளின் முகம் கோபத்தின் உக்ரமேறிக் கண்கள் அவளை எரித்தன. கமலா புன்னகைக்க முயன்றாள். உதடு இழுத்துக் கோணி கொண்டது. ஏதாவது காரணம் சொல்ல நினைத்தாள். எந்தக் காரணமும் சொல்லத் தோன்றவில்லை. அவள் விறுவிறுவென்று முன்னால் போக அந்த அம்மாள் திட்டிக்கெண்டே பின்னால் வந்தது. எப்படியோ தொடர்ந்து கத்துவதற்கும், திட்டுவதற்கும் அவளுக்கு வார்த்தைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தன.

"அந்த டபரால ரெண்டு தோச வச்சிருக்கேன். போகும் போது அத எடுத்திண்டு போ" என்று அந்த அம்மாள் சொன்ன போது, அவளுக்குப் பசி அதிகரித்த மாதிரியிருந்தது. சாப்பிட்டபின் பாத்திரம் தேய்க்கலாம் போலிருந்தது, ஏற்கனவே திட்டித் தீர்க்கிறாள் இவள். கமலா பாத்திரங்களை விறுவிறுவென்று தேய்க்க ஆரம்பித்தாள்.

அவனை வீட்டில் போய்ப் பார்க்கலாமா என்று, திடீரென்று நினைத்துக்கொண்டாள் கமலா. யோசனையாய் இருந்தது. வீட்டிலானால் கஷ்டம். அவள் இருப்பாள்.... சாரதா. அவனது இரண்டாவது பெண்டாட்டி. அவனோடு இவள் பேச முடியாது. அவளே இவளோடு பேசி அனுப்பிவிடுவாள்.

"என்ன வேணும்?" என்று வாசல் கதவை மறைத்தபடி நின்றுக் கொண்டே கேட்பாள் சாரதா.

"அவரு..."

"அவரு இல்ல."

கமலா அவனைப் பார்க்க முடியாது திரும்புவாள். அவளுக்கு வருத்தமாய் இருக்கும். அவன் அநேகமாய் உள்ளேதான் இருப்பான். அவளைக் கடந்து எப்படி இவளால் போக முடியும்?

ஒருமுறை "அவரு வந்தா வீட்டுக்கு வரச் சொல்றீங்களா?" என்று கூடக் கேட்டாள்.

"அவரு வரமாட்டாரு..."

சாத்திய கதவையும் சாத்தப்பட்ட வேகத்தையும் பார்த்தாள் கமலா, பின் சோர்வாய் வீடு திரும்பினாள்.

மற்றொரு முறை ரொம்ப அசிங்கமாய் ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது. கமலா போனபோது கதவு சாத்தியிருந்தது. அவள் அவனைப் பார்த்தே தீர வேண்டியிருந்தது. அவள் புருஷன் உள்ளே இருக்கிறானா என்று தெரியவில்லை. யோசனையாய் இருந்தது. தயக்கமாய் இருந்தது. பயமாய் இருந்தது. சாரதா வீட்டில் இல்லாவிட்டால் நல்லது. அவன் கையில் காலில் விழுந்தாவது பணம் கேட்டுப் பார்க்கலாம். அவள் கதவைத் தயக்கத்துடன் தட்டினாள். தட்டிவிட்டுக் காத்திருந்தாள். கதவு திறக்கப்படவில்லை. திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தாள் அவளுக்கு அவசரமாய்ப் பணம் தேவையாய் இருந்தது. அவள் மீண்டும் கதவைத் தட்டினாள். தட்டிவிட்டுக் காத்திருந்தாள். இம்முறை கதவு படீரென்று திறந்தது. இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. திறந்த வேகத்தில் சாரதா கையில் விளக்குமாறுடன் வெளிப்பட்டாள். ஆவேசமான வசவுகளுடன் "இனிமே வராதே" என்று சொல்லிச் சொல்லி விளக்குமாறினால் இவளை அடித்தாள். கண்மண் தெரியாமல் ஏழெட்டுமுறை இவளை அடித்துவிட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டாள்.

கமலாவுக்கு உடம்பு நடுங்கிற்று. அவள் மேலேயும் சுற்றித் தரையிலும் விளக்குமாறின் குச்சிகள் கிடந்தன. அவளுக்கு அழ வேண்டும் போலிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. கூடிய சீக்கிரம் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைத்துக்கொண்டாள் கமலா. இதுவரை இன்னும் எப்படியோ பைத்தியம் பிடிக்கவில்லை.

அவன் வீட்டிலில்லை போலிருக்கிறது என்று நினைத்தபடி கமலா வீடு திரும்பினாள்.

வீட்டில் பார்ப்பதை விட்டு தெருவில், பொது இடங்களில் அவனைப் பார்ப்பது நல்லது. பயனுள்ளது. அநேகமாய் தனியேப் பார்க்க முடியும், தற்செயலாய் ஒருநாள் அவனை அவள் பெட்டிக் கடையில் சந்தித்தாள். அவளுக்குச் சட்டென்று சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அவன் ஏதோ வாங்கிக் கொண்டிருந்தான். அவள் விறுவிறுவென்று அவனை நோக்கிப் போனாள். அவன் கையில் பர்ஸூடன் திரும்பினான். இவளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். பின் "ரொம்பக் கஷ்டம்" என்றாள். சிரிப்பு ஒளிந்து கொண்டது. அவளுக்கு முகம் இருண்டு அழுகை வந்தது. "இப்பிடி வந்து நிக்காதே. பார்க்கறவங்க என்னைப் பற்றி என்ன நெனப்பாங்க?" என்றபடியே பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அவன் திரும்புவதற்குள் "பத்தாது" என்று கமலா ஒரு அடி முன்னால் வந்தாள். வழியை மறித்துக் கொண்டிருந்தாள் அவள். "ரொம்பக் கஷ்டம்" என்றாள் மீண்டும். அவனால் தப்பிக்க முடியவில்லை. பர்ஸில் பத்து ரூபாய்க்காக தேடினான் அவனிடம் ஐம்பது ரூபாய்தான் இருந்தது. "ஒன்னோட பெரிய தொந்தரவாப் போச்சு," என்றபடியே அவன் ஐம்பது ரூபாயை எரிச்சலுடன் கொடுத்தான். அவள் வாங்கிக் கொண்டபடி "வீட்டுக்கு வாங்க" என்றாள் அதற்குள் அவன் சைக்கிளில் வெகுதூரம் போயிருந்தான்.

சாதாரணமாய்க் காலைகளில் பெரிய தெருவில் அவனைக் கண்டுபிடிக்கலாம்தான். சிலசமயம் பணம் தருவான். சில சமயம் தரமாட்டான். ஆனால் எப்படியும் ஆளைப் பிடிக்கலாம். இன்றைக்குப் பார்த்து வரவில்லை. ஒரு வேளை ஊருக்கு எங்காவது போயிருக்கிறானோ? எந்த ஊருக்கு என்று தெரியவில்லை. அவள் வாடகைக் கொடுத்தாக வேண்டுமே?... இத்தோடு வாடகை கொடுக்காமல் மூன்று வீடு மாறியாகிவிட்டது. முதல் வீட்டை விட இரண்டாவது வீடு சிறியது. வாடகை குறைவு. மூன்றாவது வீடு குடிசையேதான். ஐம்பது ரூபாய் வாடகை. மின்வசதி இல்லை.

எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை. ஒருவேளை உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ?

வீட்டுக்காரன் வாடகை கேட்டு எப்படியும் இன்று வந்துவிடுவான். நாலு முறை வந்துவிட்டான். "ஓஓ"வென்று கத்துவான் அவன் கத்துற கத்தலில் தலை சுற்றுகிறது. போகும்போது மறுநாள் வருவதாய் அவனே கெடு சொல்லி போவான். தவறாமல் மறுநாள் வருவான்.

நேற்று வார்த்த தோசை குளிர்ந்து விரைத்துப் போய்ச் சப்பென்றிருந்தது. தொட்டுக் கொள்ள எதுவுமில்லை. இரண்டு தோசைகள். அவள் கருகிப்போன பகுதிகளைப் பார்த்து நீக்கிவிட்டு மீதியைத் தின்றாள். பின் ஏராளமாய்த் தண்ணீர் குடித்தபோது வயிற்றில் "கொடகொட" வென்று சப்தங்கள்.

"அம்மா?" என்று கூப்பிட்டாள் கமலா. பாத்திரங்கள் மேல் மறுபடியும் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த அந்த அம்மாள் இவளைப் பார்க்காமலேயே "என்ன?" என்றாள்.

தயக்கமாய் இருந்தது. "ஒரு பத்துருவ்வாக் குடுங்க. சம்பளத்துல கழிச்சிக்கிடுங்க" என்றாள் கமலா. சொல்லிய மாத்திரத்தில் கடகடவென்று அந்த அம்மாள், மீண்டும் கத்தத் துவங்குவாள் என்று எதிர்பார்த்தாள், அது அப்படியே ஆயிற்று. அவள் வேலைக்கு ஒழுங்காய் வருவதில்லை என்றும் அநேகமாய் தினசரி தாமதமாகவே வருகிறாள் என்றும் அந்த அம்மாள் ஆரம்பித்தாள். பணம் கிடைக்கும், கிடைக்காது என்பது பற்றி ஊகிக்க முடியாமலேயே இருந்தது அவள் பேச்சு. அவள் எப்போது முடிப்பாள் என்பதும் தெரியவில்லை.

"நா வர்ரம்மா..."

"--ம்..."

"பணம்?"

அவள் மீண்டும் வாயைத் திறக்குமுன், "சரிம்மா நா வர்றேன்," என்று தெருவில் இறங்கினாள்.

ஆக அட்வான்ஸ் கிடைக்கவில்லை. பத்து ரூபாய் தான் என்றாலும் மீதி வாடகையை மறுநாய் தருவதாய்க் கெடு கேட்டிருக்கலாம். அப்போதும் கத்துவான். ஆனால் காது வலிக்காது. தலை சுற்றாது. அதற்காகத்தான் கேட்டுப் பார்த்தாள். கிடைக்கவில்லை.

பணம் கிடைக்காதது போகட்டும். உள்ளே ஐயர் பேசுகிறார். "ஏதோ கஷ்டங்கறா, பணம் வேற கேக்கறா. பாத்து... கவனம். ஏதாவது பாத்திரத்த மடில கட்டிண்டு போய் வித்துறப் போறா".

இவள் மடியைப் பார்க்கத்தான் அந்த அம்மா வாசலுக்கு வந்தது போலிருக்கிறது. அது புரியாமல் நான் பணம் தான் தரப் போகிறார்களாக்கும் என்று சந்தோஷப்பட்டேன்... சே!

என்ன செய்ய முடியும்? புருஷன் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.

ஆனால் வீட்டுக்காரன் நேற்று வாடகை கேட்டு வரவில்லை. அதுவே ஆறுதலான விஷயம்தான். ஆனால் மறுநாள் எப்படியும் வருவான். வந்தே தீருவான்.

இன்று புருஷனை வீட்டில் தான் பார்த்தாக வேண்டும். அந்தக் கடங்காரி இருந்தால் எல்லாமே நாசம். எப்படியும் வீட்டில் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கமலா இரவு தூங்கவில்லை. பொழுது எப்படா விடியும் என்றிருந்தது அவளுக்கு. விடிந்தும் விடியாமலும் கமலா எழுந்து முகம் கழுவினாள். தலையை ஒதுக்கிவிட்டபடியே பொட்டு சரியாய் இருக்கிறதா என்று பார்த்தாள். தன் செயல் தனக்கே பைத்தியக்காரத்தனமாய்ப் பட்டது.

கமலா விறுவிறுவென்று கிளம்பினாள். இன்றைக்கு வேலைக்கு லேட்டாய்ப் போகக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

கமலா பெரிய தெரு வழியாகவே போனாள். புருஷன் ஓடிவிடுகிறானே என்று கொஞ்ச நேரம் நின்று பார்த்தாள். ஒருவேளை மூன்று நாலு முறை இதே நேரம் அவனை மடக்கிப் பணம் கேட்டதிலிருந்து அவன் ஓடுவதையே நிறுத்திவிட்டானோ என்னமோ?

சாரதா இல்லாமலிருந்தால் நல்லது. கமலா கவலையுடனும் குழப்பத்துடனும் நிறைய பயத்துடனும் அவன் வீட்டை நோக்கி நடந்தாள். கால்கள் தயங்கின. பசியும் அசதியுமாய் உடம்பெங்கும் அடித்துப் போட்ட மாதிரி வலித்தது. இரவு தூங்காததில் கண்கள் எரித்தன.

அவள் வீடிருக்கிற தெரு முக்கில் அம்மன் கோவில் இருக்கிறது. பெண்கள் வேண்டிக் கொண்டு ஒன்பது சுற்றுகள் வீதம் ஒரு மண்டலம் பிரகாரம் சுற்றினால் கருத்தரிக்கலாம் என்று நம்பினார்கள்.

போகிற காரியம் நடக்க வேண்டும் என்று கமலா கவலைப்பட்டாள். அவள் கோவில் வாசலில் நின்றபடியே வேண்டிக் கொண்டாள்.

அட, என்று நினைத்துக் கொண்டாள், கமலா. சாரதா பிரகாரம் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். கூட அவன் இல்லை. ஒருவேளை அவன் வீட்டில் இருக்கக்கூடும். வீட்டில் தனியே இருக்கக்கூடும். கமலாவுக்கு உடம்பு பூராவும் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டது. சாரதா பார்க்குமுன் விறுவிறுவென்று அவள் அவனைத் தேடிப் போனாள்.

அது அவன்தான். அவனே தான். வாசலில் உட்கார்ந்து அவன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அவன் இவளைக் கவனிக்கவில்லை. கமலா வேக வேகமாய்ப் போனாள். போய் மூச்சிரைக்க அவன் முன் நின்றாள். ஒரு சிரிப்புச் சிரிக்க நினைத்தாள். என்னவோ சொல்ல நினைத்தாள். அவளால் முடியவில்லை. அவளுக்கு மூச்சிறைத்தது.

அவன் நிமிர்ந்து பார்த்தான். சட்டென்று எழுந்து கொண்டான். கதவை அறைந்து சாத்தினான். சாத்தப்பட்ட கதவையும் அதன் வேகத்தையும் பார்த்தாள் கமலா. கொஞ்ச நேரம் வெட்டித்தனமாய் அந்தக் கதவு இலக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரதா வந்து விடுவாளோ என்று பயமாய் இருந்தது. கதவைத் தட்டலாமா, பேசாமல் திரும்பிப் போய்விடலாமா? அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

ஜன்னல் கதவு திறந்திருப்பதைக் கமலா திடீரென்று கவனித்தாள். அவள் விறுவிறுவென்று ஜன்னல் பக்கம் போய் எட்டிப் பார்த்தாள். அவன் உள்ளே உட்கார்ந்திருப்பதையும் இவளையே பார்ப்பதையும் அவள் பார்த்தாள். அவளுக்கு அழுகை வந்தது. என்னென்னவோ சொல்ல விரும்பினாள். வெறுமென அழத்தான் அவளால் முடிந்தது. கமலா துக்கத்தை முழுங்கிக் கொண்டு "ரொம்பக் கஷ்டம்" என்றாள்.

அவன் எழுந்து ஜன்னல் பக்கம் வந்தான், அவளை நோக்கி வந்தான். இப்போது கதவைத் திறப்பான் என்று நினைத்தாள் கமலா. ஜன்னல் வழியே பணம் கொடுத்தால் கூடப் போதும். உள்ளே போய் அவள் என்ன செய்யப் போகிறாள்? அவனோ அவளைப் பார்த்து ஏதோ திட்டினான். கொஞ்சமும் எதிர்பாராமல் ஜன்னல் கிட்டதில் குனிந்து "தூ" வென்று முகத்தில் காறித் துப்பினான். பின் ஜன்னலைச் சாத்திக் கொண்டான்.

கமலா திரும்பிப் பார்த்தாள். எதிர்வீட்டிலிருந்த ஒரு பெண் இவளைப் பார்த்துக் கடகடவென்று சிரித்தாள், விழுந்து விழுந்து சிரித்தாள்.

கமலா திரும்பியும் சாத்தப்பட்ட கதவுகளைப் பார்த்தாள். ஆக, பணம் கிடைக்கவில்லை.

கமலா முகத்தைத் துடைத்துக் கொண்டாள். வாடகைக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எப்படியும் இன்று கட்டாயம் வந்து நிற்பான்.

கமலாவுக்கு ரொம்ப அலுப்பாய் இருந்தது. எங்காவது உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது, கமலா எதைப் பற்றியும் நினைக்காமல் திரும்பி நடந்தாள். இன்றைக்கும் ஐயர் வீட்டம்மா கத்தும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் அந்த வீட்டம்மா அநியாயத்துக்குக் கத்துகிறது. சீக்கிரமா வேலைக்குப் போனாலுங்க கூட, வேலைல இது சரியில்ல, அது சரியில்ல - என்று ஒரே குறை. அவளுக்கு எரிச்சலாயிருந்தது.

தெருத் திரும்பும் போது கமலா நின்றாள். எதிரே சாரதா வந்து கொண்டிந்தாள். சாரதா சிவப்பாய் அழகாய் இருந்தாள். தலைநிறையப் பூவுடன் ஒரு புடவை விளம்பரப் பெண்ணைப் போல அவள் இருந்தாள்.

இவள் "சாரதா?" என்று கூப்பிட்டாள். கூப்பிட்ட படியே எதிரில் நின்றாள். கிட்டத்தட்ட வழியை மறைத்தபடியே நின்றாள்.

"ரொம்பக் கஷ்டம், சாரதா" என்றாள் கமலா.

நன்றி: கதை அரங்கம்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link