சிறுகதைகள்


வாசலில் சில பூக்கோலங்கள்

கூடல்.காம்
வாசல் முழுவதும் கோலப்பூக்கள். அவள் விடிகாலை ஐந்து மணிக்கே வந்திருப்பாள். முன் கதவைத் திறந்து தோட்டத்துப் பக்கம்போய் தண்ணீர் கொண்டு வந்து, தெளித்துப் பெருக்கிக் கோலமும் போட்டுவிட்டுப் போயிருப்பாள், தூண் ஓரமாய்க் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள வாளி, கைவிரல் ரேகைபட்டு நனைந்துபோயுள்ள கோலப்பொடி டப்பா, தாழ்போடப்படாமல் சிறிது ஒருக்களித்துக்கிடக்கும் வாசல்கதவு, சன்னல்கம்பிகளுக்கு இடையில் மடித்தபடி செருகப்பட்டிருக்கும் "இந்து" பெரிய வாசலின் நிலைப்படியின் ஒரமாய் வைக்கப்பட்டிருக்கும் பாக்கெட்பால், அப்புறம் வாசல் நிறையப் பூப் பூவாய்ப்பூத்துகிடக்கும் கோலம்... இவையெல்லாம் அவளது வருகையின் பதிவுகள்.

பொழுது தெளிந்ததும் அப்பாவுக்கு "இந்து" அம்மாவுக்குப் பால் பாக்கெட்; கண்களை கசக்கிக் கொண்டு வாசலை நோக்கி ஓடிவரும் பானுவுக்கு வாசலின் கோலங்கள், அகன்ற மார்பில் சந்தனம் பூசிக்கொண்டது போல, வாசல் நிறைத்துக் கொண்டிருக்கும் கோலங்களைப் பார்க்க உள்ளேயிருந்து பானு ஓடிவருவாள், வாசலில் வந்து நின்று முழங்கால்களில் கையூன்றி குனிந்து கோலத்தைக் கண்விரியப் பார்த்து "அம்ம காமு அக்கா கோலம் போட்டிருக்கு என்று சந்தோஷமாய்க் குரல் கொடுப்பாள். பானு இப்படிக் குரல் கொடுப்பது முன்பத்தியில் "இந்து" படிக்கும் அப்பாவுக்குக் கேட்காது. உள்ளே காப்பி கலந்து கொண்டிருக்கும் அம்மாவுக்குக் கேட்கும்.

ஓடிவந்து பார்த்த பானுவுக்கு இன்றைக்கும் ஏமாற்றமாய் இருந்தது. வாசலில் நின்றபடியே கத்தினாள். "அம்மா, பாரும்மா இந்தக் காமு அக்காவை. இன்னிக்கும் காமு அக்கா பூக்கோலம்தான் போட்டிருக்கு..." அழுகையும் சிணுங்கலுமாகக் கத்திய பானு வாசலில் வந்து தனது பிஞ்சுப் பாதங்களால் கோலப் பூக்களை "பரச்" "பரச்" என்று அழித்துப் போட்டு ஓடினாள் உள்ளே.

எத்தனை தடவைதான் சொல்லுவது காமுவுக்கு. குழந்தை கேட்பது மாதிரி வாசலில் ஒரு நாளைக்காவது பூனைக்கோலம் போடுடி என்று? அம்மாவுக்குச் சலிப்பாக வந்தது. காப்பியை ஆற்றிக் கொடுக்கும்போது பானுவின் சிணுங்கலையும் ஆற்ற வேண்டியிருந்தது. "அதுக்காக போட்ட கோலத்தை அழிக்கிறதா.. சரி, சரி, நாளைக்குப் போடச் சொல்றேன்" என்றாள் அம்மா.

எதிர் வீட்டிலும், பக்கத்து வீடுகளிலும் வாசலில் பூனைக் கோலமும் யானைக் கோலமும் பெரிது பெரிதாய்ப் போடுகிறார்கள். காலையில் பள்ளிக்கூடத்துக்குத் தயாராகி வெளியில் வந்து ரிக்ஷாவுக்காக நிற்கும்போது அந்தப் பூனைக் கோலங்களையும், யானைக் கோலங்களையும் பானு ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுவாள். ஒரு நாள் அப்படி ரொம்ப நேரம் பார்த்து நின்றதை ரிக்ஷா அண்ணன் அம்மாவிடம் சொல்லிவிட்டது. அம்மா வந்து "பர பர" என்று இழுத்து வந்து தலையில் ஒரு "குட்டு" வைத்து ரிக்ஷாவில் உட்கார்த்தி வைத்தாள். "அப்படீன்னா நம்ம வாசல்லே காமு அக்காவைப் பூனைக்கோலம் போடச் சொல்ல்லு" என்று பானு உச்சமாய்க் கத்தினாள். பள்ளிக்கூடம் வந்ததும் பானு கீழே குதிப்பதும், ரிக்ஷா அண்ணன் இறங்கி வந்து பைக்கட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொடுப்பதும், பானு வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு உள்ளே போவதும் தான் பழக்கம். "குட்டு" வாங்கிய உச்சந் தலையில் எரிச்சலாய் இருந்தது. ரிக்ஷா அண்ணன் மீது கோபமாய் வந்தது. பைக்கட்டு, தண்ணீர் பாட்டில் சகிதம் தானாய் இறங்கி, ஏதும் பேசாமல் ஓடிப்போய்விட்டாள் பானு...

போட்ட கோலத்தைத் தினமும் அழிக்க அடம் பண்ணக்கூடாது என்று பானுவுக்குப் புரியுமாறு, அம்மாவினால் சொல்ல முடியவில்லை. காமு வந்ததும், "நாளைக்காவது வாசலில் ஒரு பூனையோ, ஆனையோ எதையாச்சும் போடு" என்று சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தாள் அம்மா.

பொழுது தெளியும் முன்பே போய்விடுகிற காமு அப்புறம் காலையில் பத்து மணியைப் போலத்தான் வருவாள். அவளுக்கென்று எடுத்துவைத்த இட்லிகள் ஆறிப்போயிருக்கும். தான் கொண்டு வருகிற ஒரு தூக்குச் சட்டிக்குள் போட்டு மூடி வைத்துவிட்டு அம்மா தருகிற ஒரு டம்ளர் காப்பியை வாயில் ஊற்றிக் கொள்ளுவாள். சாப்பிட்ட டம்ளரைக் கழுவித் திரும்புகையில் வேலையுடன் அம்மா நிற்பாள்.

என்றைக்காவது திடீரென்று காமு வராமலும் இருந்து விடுவது உண்டு. மறுநாள் வாசல் வேலைகளை முடித்து விட்டுப் பத்து மணிக்குத் தூக்குச் சட்டியோடு வந்து நிற்கும் போது, கண்கள் நிரம்பியிருக்கும். "என் அம்மாவுக்கு ரொம்ப முடியலை, அதனால்தான் என்று அந்தக் கண்களில் எழுதியிருக்கும். வேறு எந்தக் காரணமும் சொல்ல அவளுக்கு வழியுமில்லை. குடிசையில் காமுவுடன் இருக்கிற ஒரே ஒரு சீவன் அம்மா மட்டும்தான். முந்தின தினம் பத்து மணிக்கு வராமல் மறுதினம் வந்து நிற்கையில் அம்மாவே முந்திக் கொண்டு கேட்டுக் கொள்வாள், "ஏன் காமு, உன் அம்மாவுக்கு முடியலையா? என்று, "ம்" என்று காமு தலையசைக்கும்போது கண்களின் திவலைகள் முத்து முத்தாய் உதிரும்.

காமுவின் அம்மாவுக்குப் பக்கவாதம், அரசாங்க ஆஸ்பத்திரியின் வராந்தாவைவிட மகள் வீட்டுக்குடிசையே தேவலை என்று போகப்போக அவள் உணர்ந்தாள். ஆயாவாக வேலை பார்த்த இடத்திலிருந்து மூன்று வருசமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று வரை எதுவும் வந்து சேரவில்லை. காமுவின் புருசன் ஒரு கட்சியில் கொடிபிடித்து அலைந்தான். போஸ்டர் ஒட்டி ஒட்டியே வயிறும் ஒட்டிப் போய்த் திரிந்தான். ஊர்வலத்துக்குப் போகிறேன் என்று லாரியின் மேலே ஏறிப் போனான். லாரி கவிழ்ந்து இவன்மேலே ஏறி இறந்து போனான். இரண்டு நாட்கள் இவனைப் பற்றிய செய்திகளும், காமு அழுகின்ற படமும் வெளிவந்தன. பத்தாயிரம் உதவித்தொகை என்று அறிவிப்பும் வந்தது. அப்புறமும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் மறதியும் வந்துவிட்டது. கடவுள் கொடுத்த கொடைகளில் மறதி என்னும் கொடை தான் வல்லமையானது...

காலையில் காமு வந்து வாசல் தெளிக்கும் போதே சொல்லிவிட வேண்டும் என்று அம்மா நினைத்துச் சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள். ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் "இந்து", நிலைப்படியின் ஓரமாய் ஜில்லென்று ஒட்டிக்கிடக்கும் பால்பை, தூண் ஓரமாய்க் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள வாளி, கோலப்பொடி டப்பாவைத்தான்.. ஏந்தியபடி காமு வாசலில் இதோ கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள்.... அகன்ற மார்பில் வழித்து வழித்துச் சந்தனம் பூசின மாதிரி, ஒரு பெரிய பூக்கூடை நிரம்பி வழிவதுமாதிரி வாசல் நிறையப் பூக் கோலங்கள்...

பேப்பர் ஒரு கையிலும், பால்பாக்கெட் ஒரு கையிலுமாக வாசலுக்கு வந்தாள் அம்மா. "ஏன் காமு, பானுதான் தினம் தினம் அழுது தொலைக்கிறாளே, வாசல்லே நீ தான் ஒரு ஆனை, ஒரு பூனைன்னு எதுனாச்சும் போட்டாத்தான் என்ன? எத்தனை தடவைதான் உனக்கும் சொல்றது?"

முழங்கை அழுத்தத்தில் இடுப்புச் சேலையை ஏற்றிக் கொண்டு, கோலப்பொடி டப்பாவை ஏந்தியபடி நிமிர்ந்தாள் காமு. நிமிர்ந்த முகத்தில் தெருவிளக்கு பிரகாசமாக விழுந்தது. அந்தப் பிரகாசத்தில் பூவும் பொட்டுமிழந்த காமுவின் இருட்டு முகத்தைப் பார்க்க அம்மாவுக்குக் கண்கள் கூசின. காமு உணர்வுகளை மென்று விழுங்கியபடி அமைதியாய்ச் சொன்னாள். "பூப்பூவாய்க் கோலம் போட்டுப் பார்க்கிறதுல மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு..."

வாழ்க்கையில் பூக்கோலம் தாங்கமுடியாத காமு, வாசலில் பூக்கோலம் போட ஆசைப்படுகிறாள்... சிறிது நேரம் சிலைபோலப் பிரமித்து நின்றிருந்த அம்மா சொன்னாள். "போட்டுக்க காமு, போட்டுக்க, பூக்கோலமே போட்டுக்க..."

குழந்தை பானுவுக்கு வேறு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் தினமும்.

நன்றி: கதை அரங்கம்.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link