சிறுகதைகள்


குறுக்கீடு

கூடல்.காம்
பாஸ்கர ராவ் மாடியில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தார். மனம் திருப்தியுற உதடுகளில் புன்னகை அரும்பியது. மூன்று மாதங்களாக ஓர் இடம் நல்ல இடம் என்று தெருத்தெருவாக அலைந்து பேப்பர் - விளம்பரங்களையெல்லாம் பார்த்துப் பதில் போட்டு போனில் காத்திருந்து பேசியதெல்லாம் ஒரு கனவு போலக் கலைந்து போயிற்று. கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு பச்சை வர்ண மொசைக் தரையில் மெதுவாக நடந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரையில் விசாலமான தோட்டத்துடன் தன் ஆபீஸ் அமையுமெனப் பாஸ்கர ராவ் நினைக்கவே இல்லை. அலைந்து களைத்துச் சோர்ந்து இனி தன்னால் ஆகக்கூடியதொன்றுமில்லையென நம்பிக்கையிழந்தபோது ரங்கநாதனிடமிருந்து போன் வத்து. அவர் பெரிய மகனுக்கு அசோக் நகரில் வீடு கட்டி முடித்தபோது, இவருக்குத் தன் ஆபீஸை நல்ல இடத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.

"சார், நம்ம ஆபீஸை மாத்தலாமென்னு பாக்கறேன். நல்ல இடமாருந்தா கொஞ்சம் செல்லுங்க சார்..."

ரங்கநாதன் நகரத்தில் பெரிய புள்ளி. மூன்று சினிமா தியேட்டர்கள் அவருக்கு இருந்தன. அதோடு சினிமா தயாரிக்க வட்டிக்குப் பணம் கொடுத்து உதவிக் கொண்டிருந்தார்.

"கட்டடம் கட்டுற உனக்கே இடம் கிடைக்கலியா?"

"நான் என்ன சார், ரொம்ப சின்ன ஆளு. ஏதோ முண்டியடிச்சுக் கொண்டிருக்கேன். ஒரு நல்ல இடத்துல ஆபீஸ் இருந்தா தொழில் பிடிக்குமுன்னு நினைக்கிறேன்"

"எஸ்..எஸ்.." ரங்கநாதன் ஆமோதித்தார். "இப்ப சொன்னியே, அது நல்ல சைக்காலஜி. அதுனால நீ சீக்கிரத்துல முன்னுக்கு வந்துடுவ. வரணும். நான் ஞாபகத்துல் வச்சுக்கிறேன். போன் இருக்குல. நான் போன் போடறேன்..."

பல வேலைகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் ரங்கநாதன் தன்னை நினைவில் வைத்துக் கொண்டு போன் பண்ணுவார் எனப் பாஸ்கரராவ் நினைக்கவில்€. காரியம் ஏதோ கனிந்து வருகிறதுபோலும். பாஸ்கரராவ் பவ்வியமாகப் போனை எடுத்து, "சார், பாஸ்கரராவ் பேசறேன் சார்," என்றார்.

மறுமுனையிலிருந்து ரங்கநாதன் குரல் சற்றுக் கரகரப்பாகக் கேட்டது. ஒரு முறை இருமிக் கொண்டார்.

"சார் என்ன சார், உடம்பு சரியில்லையா?"

"கொஞ்சம் கோல்ட். அதெல்லாம் வரும் போகும், பாஸ்கரராவ்"

"இருந்தாலும் சார்..."

"உனக்கு ஆபீஸூக்கு ஓரிடம் வேணுமென்னு சொன்னில்ல. தண்டபாணி தெருவில் தெலுங்கு நடிகன் காந்தராவ் வீடு ஒண்ணு காலியா இருக்கு. அவன் ஹைதராபார்த்துல செட்டில் ஆகிட்டான். உனக்கு இடம் சரிப்படுமான்னு பார். பாத்துட்டு எனக்கு ஒரு போன் போடு..."

"அரை மணியில பார்த்துடூ நானே நேரா வர்றேன் சார்.."

"உனக்கு எதுக்குச் சிரமம். சும்ம ஒரு போன போடு போதும்.."

"சிரமம் ஒண்ணுமில்ல சார், அது எனக்கு வழிதான்..."

"நான் எங்க இருப்பேன்னு சொல்ல முடியாதுபோல இருக்கு, அதான்.."

"சரி சார். அரை மணியில தகவல் சொல்லுறேன் சார்."

பாஸ்கரராவ் போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்து ஸ்கூட்டரைக் கிளப்பினார். உள்மனம் தனக்கு கைகூடும் என்று கூறியது. எனவே ஸ்கூட்டர் வேகமாக ஓட ஆரம்பித்தது. பாஸ்கரராவ் பி.இ.பாஸ் பண்ணிட்டு இரண்டு வருஷம் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்தார். அது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. கற்றுக் கொண்டதையெல்லாம் அமுல் நடத்தச் சர்க்கார் அலுவலகம் சரிப்படாது என்று தோன்றியது. எனவே மூன்றாண்டுகளில் வேலையை விட்டு விட்டுச் சொந்தமாகக் கட்டடம் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் அது தலை கீழாகக் கவிழ்ந்து விடும் போலவே இருந்தது. தான் சொந்தமாகத் தொழில் நடத்தத் திறமை பெறவில்லையோ என நினைத்தார். அந்த நினைப்பே எரிச்சலைத் தந்தது. "இல்லை, நான் அழிந்து போகக்கூடிய ஆளில்லை. எந்த அலையும் என்னை அடித்துக் கொண்டு போக முடியாது. அலைகளுக்கிடையில் புகுந்து புகுந்து மேலே வரக்கூடிய ஆள். பாஸ்கரராவ் பத்துப் பேர்களில் ஒன்று இல்லை. பத்துப் பேர்களில் முதலிடம் வகிக்கக் கூடியவன்.

ஸ்கூட்டர் வேகமாகச் சென்று திரும்பித் தண்டபாணி தெருவில் நுழைந்தது. வேகத்தை மட்டுப்படுத்தினார்.

கண்கள் காந்தாராவ் வீட்டைத் தேடின. பெரிய வீட்டின் முன்னே கூர்க்கா ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். ஸ்கூட்டர் அவன் மேலே மோதுவது போலப் போய் நின்றது. கூர்க்கா பதட்டமுற்று எழுந்தான்.

"உட்கார்ந்துக்கிட்டே இருக்கறதுதான் காவல் பாக்கற லட்சணமா?" பாஸ்கரராவ் குரல் கூர்க்காவைக் கலவரமுற வைத்தது.

"வீட்டுல யாரும் இல்லை, சார்"

"அது எனக்குத் தெரியும். காந்தாராவ் ஹைதராபாத் போயிட்டார். நான்தான் வாடகைக்கு எடுத்திருக்கேன். ஆபீஸ வருது, உம், கதவைத் திற".

கூர்க்கா பதிலொன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பாஸ்கரராவ் சிகரெட் பெட்டியை எடுத்து, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, புகையை ஊதியபடி, "நடிகன் வீட்டுக் கூர்க்கான்னா அதுக்கு ரொம்ப சரியாத்தான் இருக்கற," என்றார். கூர்க்கா தயங்கிக் கொண்டே கதவைத் தள்ளித் திறந்தான்.

"ரொம்ப வருஷமா இருக்கிறியா?" பாஸ்கரராவ் உள்ளே நுழைந்தார்.

"ரெண்டு வருஷமா, சார்"

பழைய காலத்துப் பாணியில் உயர உயரமான தூண்கள் வைத்துக் கட்டிய பெரிய வீடு, காந்தாராவ் தன்னுடைய வீட்டை அரண்மனை போன்று நிர்மாணித்திருந்தான். அவன் ஆந்திராவில் ஒரு சின்ன ஜமீன் பகுதியில் இருந்து கிளம்பி வந்தவன். கையில் பணம் சேர்ந்ததும் முதல் காரியமாக - தன் ஊரில் இருந்த ஜமீன் மாளிகைக்குப் போட்டியாகக் கட்டினான் போலும் என நினைத்தார். அந்த நினைப்பு வந்ததும் சிரிப்பு வந்தது. ஏதாவது ஒன்றுடன் போட்டி போட வேண்டும்; கொஞ்சமும் சோராமல் களைத்துப் போகாமல் போட்டி போட வேண்டும். காந்தாராவ், தன்னூர் ஜமீனுடன் சென்னைக்கு வந்து போட்டி போட்டான். பாஸ்கரராவ் பார்வை உயர்ந்தது. நடுக்கூடத்தில் தலைக்கு மேலே ராஜா வேஷத்தில் காந்தாராவ் கத்தியும், கிரிடமும், ஜிகினா உடையும் - ஒருது சின்ன ஜமீன் போலக் காந்தாராவ் காட்சியளித்தான். அதை அவன் ஹைதராபாத்திற்கு எடுத்துக் கொண்டு போகவில்லை. ராஜாவை விட்டுவிட்டுப் போய் விட்டான். மனத்திற்குள் ராஜா என்ற நினைப்பு. அந்த நினைப்புதான் அவனை ஆந்திராவுக்கு விரட்டியிருக்கிறது. ஒன்றும் இல்லாதவனெல்லாம் ராஜாவாகக் கனவு காண்கிறான். ராஜாவாக இருந்தவனெல்லாம் பணம் சம்‘பாதிக்கப் புதுப்புது வழியைக் காணுகிறான்.

பார்வை வீட்டின் நாலா பக்கமும் சென்றது. கொஞ்சம் சில்லறை வேலை பார்த்தால் போதும். பத்துப் பதினைந்து நாட்களில் ஆபீஸைக் கொண்டு வந்துவிடலாம். நல்ல இடம். வருகின்றவர்களுக்கு நம்பிக்கை தரும் தொழில் பிடிக்க உதவும்.

பாஸ்கரராவ் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டிற்கு முன்னே இரண்டு மூன்று கிரவுண்டு போலக் காலி மனை. காந்தாராவ் இருந்தபோது தோட்டம் போட்டான் போலும். அவன் வளர்த்த செடிகள் கவனிப்பார் இன்றிப் புதராக மண்டி இருந்தன. சாலையோரத்தில் காம்பவுண்டை ஒட்டிப் பெரிய தூங்குமூஞ்சி மரம். அதன் கிளைகளெல்லாம் காந்தாராவ் வீட்டுப் பக்கமே வந்திருந்தன சில கிளைகள் காந்தாராவ் மாடியைத் தொட்டுக் கொண்டு இருந்தன. இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. காந்தாராவ் நடிகன் என்பதற்கு மேலே ஏதோ கொஞ்சம் அறிவும் இருந்திருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டார். அதுதான் மரத்தை விட்டு வைத்திருக்க வேண்டும். வாசலுக்கு வந்து மரத்தைப் பார்த்தார். பெரிய மரம் வயது முதிர்ந்த யானையைப்போல இருநதது. கிட்டத்தட்ட நூறு வயதிருக்குமென நினைத்தார். தூங்குமூஞ்சி மரத்தின் உலர்ந்த பூவொன்று காற்றில் மிதந்து வந்து மேலே விழுந்தது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு, "கூர்க்கா, கதவைப் பூட்டிக்கோ" என்று பையில் கைவிட்டு இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.

"வேணாம் சார்"

"சும்மா பிடி, நான் போகணும்" பாஸ்கரராவ் தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினார். போகும்போதே ரங்கநாதனைப் பார்த்து விட்டுப் போகலாமா என நினைத்தார். வண்டி திரும்பியது. பாதி தூரம் போனதும் "போன்பண்ணு; அது போதும்" என்று ரங்கநாதன் சொன்னது நினைவிற்கு வந்ததது. வண்டியைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். கை டெலிபோன் நம்பரைச் சுழற்றியது. அவர் வீட்டில் இல்லை. அரை மணி கழித்துப் போன் பண்ணச் சொன்னார்கள். பதினைந்து நிமிடம் சென்ற பிறகு இவர் மறுபடியும் போன் பண்ணினார்.

ரங்கநாதன் போனை எடுத்தார்.

"சார், நான் பாஸ்கரராவ் பேசுறேன் சார்".

"என்ன ராவ் சொல்லு"

"நீங்க சொன்ன இடத்தைப் போய்ப் பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருக்கு. ரொம்பப் பெரிய இடஞ்சார்". மேலே பேச இவர் தயங்கினார்.

"சொல்லு ராவ்".

"நம்மால் வாடகை தர முடியுமான்னு பயமா இருக்கு சார். அதான் சார்"

"அந்தப் பயம் உனக்கு வேண்டாம் ராவ். காந்தாராவ் முதல் முதல்ல என் வீட்டுல கார் டிரைவராக இருந்தான். அப்புறம் நான்தான் அவனுக்குச் சினிமாவில் நடிக்க ஒரு சின்ன ரோல் வாங்கித் தந்தேன். அதுல இருந்து கிடுகிடுன்னு மேல போயிட்டான். ஆனால் காந்தாராவ் எப்பவும் பிரியமா, ரொம்ப மரியாதையா இருப்பான். "நீங்க இல்லாட்டா, சார், நான் இப்பவும் கார் கழுவிக்கிட்டுத்தான் இருப்பேன்"னு சொல்லுவான். அவன் நடிக்காம சொல்லுறது இது ஒண்ணுதான் பாஸ்கரராவ்".

"எங்காவது ஓரிடத்திலாவது நடிக்காம இருக்கணுமில்லே சார்".

"ரொம்ப சரியா சொல்லுற பாஸ்கரராவ். அதுதான் விஷயம். உலகத்துக்கு முன்ன ரொம்ப சர்வ சாதாரணமா நடிக்கறவன் என் கிட்ட ரொம்ப நிஜமா இருப்பான். அதான் பாரேன், ஹைதராபாத்துக்குப் போறதுன்னு அவன் முடிவு பண்ணினதும், வீட்டுக்கு வந்து, "சார், வீட்டை உங்க பொறுப்புல விட்டுட்டுப் போறேன். வித்தாலுஞ் சரி, வாடகைக்கு விட்டாலுஞ் சரி"ன்னான். நான்தான், "காந்தாராவ், சினிமாவில் சம்பாரிச்ச பணத்துல மொத மொதல்ல கட்டின வீடு. அதுனால அது கிடக்கட்டுமே"ன்னேன். நான் சொன்னது அவனுக்கு ரொம்ப சரியாப்பட்டுப்போச்சு. "ஆமாம் சார், அதுவும் சரிதான் சார். அது கிடக்கட்டும். ஆனா, ஒரு கண்டிஷன் நீங்கதான் பாத்துக்கணும் வேற யாரையும் நான் நம்பறது இல்லை" ன்னான். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். தெலுங்கன் கேட்கவே இல்லை. என் தலையில் கட்டிட்டுப் போயிட்டான். அத என்ன பண்ணறதுனு நெனச்சப்ப உன் நினைவு வந்துச்சு ராவ்".

"நானும் உங்களாலதான் சார் முன்னுக்கு வரணும்"

ரங்கநாதன் சிரிப்பது கேட்டது.

பாஸ்கரராவ் சட்டைப் பையில் கைவிட்டுக் கைக் குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, "நிஜமாவே தான் சொல்லுறேன் சார். நீங்க தான் சார் காந்தாராவ் மாதிரி என்னையும் கைதூக்கி விடணும்" என்றார்.

ரங்கநாதன் இருமுவது போனில் கேட்டது.

"என்ன சார், ஜலதோஷமா? கோடை ஜலதோஷம் ரொம்பத் தொந்தரவு பண்ணுமே சார்".

"ரெண்டு நாளா, ரொம்ப மோசமா இருக்கு".

"உடம்பப் பாத்துக் கொள்ளுங்க சார். நான் நாளைக்கு நேரா வர்றேன் சார். அப்ப வாடகையைப் பத்தி பேசலாம் சார். கொஞ்சம் பாத்து, நான் இப்ப உங்க தயவிலதான் இருக்கிறேன் சார்."

"அதெல்லாம் பார்த்து முடிக்கலாம் ராவ்".

"நீங்க ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்க சார்". ரங்கநாதன் போனை வைக்கும் வரையில் ராவ் காத்துக் கொண்டிருந்தார். தான் கொஞ்சம் இயல்பை இழந்திருப்பது போலப்பட்டது. பாஸ்கரராவ் நாற்காலியில் இருந்து எழுந்து உட்கார்ந்தார். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். தாறுமாறான பல காட்சிகள் மனதில் ஓட ஆரம்பித்தன. படித்து விட்ட வேலை இல்லாமல் நான்கு மாதங்கள் அலையலையாகத் திரிந்தது, அப்புறம் பொதுப் பணித் துறையில் தலைமைப் பெறியாளராக இருந்த சின்னப்பள்ளி ராகவலுரெட்டினை வீட்டில் பார்த்துக் காலில் விழுந்து வணங்கி... உம், பாஸ்கர ராவ் சிகரெட் புகையை வேகமாக ஊதினார்.

ரங்கநாதன் வீட்டிற்கு ராவ் சென்றபோது அவர் பூசையில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆச்சரியப்படாமல், சுவரில் மாட்டியிருக்கும் படங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாப் பெரிய மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கின்றன எனச் சொல்லிக் கொண்டார். சிரிப்பு வந்தது. அவர்களுக்கு மட்டுமென்ன... எனக்குக் கூடத்தான் பல முகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒன்றில் இன்னொன்று அமுங்குகிறது; அப்புறம் பிறிதொன்று மலர்கிறது. அதில் மெய்முகம் எது? அதெல்லாம் எதற்கு? உட்கார்ந்திருக்க முடியவில்லை எழுந்தார். இவர் எழவும், ரங்கநாதன் பூசையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. என்ன தோன்றியதோ தெரியவில்லை. காலில் விழுந்து வணங்கினார். ரங்கநாதன் ஒரு கணம் தன் கால்களின் முன்னே விழுந்து கிடப்பவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஆச்சரியப்பட்டவர் போலக் குரல் மாற, "என்ன ராவ், இதெல்லாம்---" என்றார்.

பாஸ்கரராவ் எழுந்தார். கரம் குவித்துச் சேவித்து, "உங்களப் பாக்கறது இப்ப கடவுளைத் தரிசிக்கிறதுபோல இருக்கு சார். ஆயிரம் வேல இருக்கு உங்களுக்கு. ஆனா நீங்க கடவுளை விட்டுடல. ஆனா பாருங்க சார், எனக்கு ஒரு வேலையும் இல்ல; ஆனா கடவுளை விட்டுட்டேன்" என்றார்.

"உட்கார் ராவ். நீ சொல்லறதுல ஒரு சின்ன உண்மை இருக்கு. கடவுளை நம்மால விட முடியுமா? முடியாதுன்னு தான் படுது. படித்துறையில் பாசி படியறது மாதிரி மனத்துல அகங்காரம் படியறப்ப கடவுள் நினைப்பு மறஞ்சு இருக்கு. பாசி போனதும் எல்லாம் சரியா ஆகிடறது".

"சார் நீங்க, பிரமாதமா சொல்லுறீங்க சார். கடவுள் தத்துவமே அதுதான்னு தோணுது சார்".

"ராவ், நீ சொல்றது மாதிரி தான் காந்தாராவ் அடிக்கடி சொல்லுவான். முதல்ல அவனுக்குக் கடவுள் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல. அப்புறம் நிறையப் பணம் புகழ் வந்ததும் நல்ல பக்தனாகிட்டான். அப்பவும் என்கிட்ட வந்து, "சார் எல்லாம் நீங்க காட்டிய வழிதான். நீங்க இல்லாட்டா எனக்கு ஒண்ணுமில்ல" ம்பான். அவன் எவ்வளவு பெரிய ஆள். ஆனா, எனக்கு முன்னால சிகரெட் கூடப் பிடிக்க மாட்டான்".

"பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணுமில்லே சார்".

"அதுதான் திருக்குறளில் சொல்லியிருக்கு. நன்றி கொன்றார்க்கு உய்வில்லைன்னு"

"உங்களுக்கு அதெல்லாம் படிக்க நேரம் இருக்கா சார்".

"நான் தினமும் பத்துப்பாட்டுப் படிக்கிறேன். ராவ் திருக்குறள் எனக்கு ரொம்ப பிடிக்கும்".

"உங்ககிட்ட கத்துக்கறதுக்கு ரொம்ப விஷயம் இருக்கு சார்".

"அப்படியா" ரங்கநாதன் உள்ளே போய்ச் சாவியை எடுத்துக் கொண்டு வந்து இவரிடம் கொடுத்தார். இவர் சாவியை இரண்டு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

"ராவ், நீயும் காந்தாராவ் மாதிரி ஒரு பெரிய புள்ளியா வரணும்."

"உங்க ஆசீர்வாதம் சார்".

"என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு".

பாஸ்கரராவ் தயங்கித் தயங்கி அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்ன சொல்லு".

"வாடகை சார்".

"ஒரு ரூபா தாங்குமா உனக்கு".

தலையசைத்தார். அப்புறம் சாவியை அவர் காலில் வைத்து, "நீங்க தெய்வம் சார்". என்றார்.

"ராவ், மனுஷன் தெய்வமாகக் கூடாது" என்று ரங்கநாதன் சிரித்தார்.

"அதெல்லாம் இல்ல சார்" பேச்சு வரவில்ல. கண்களில் நீர் பெருக வெளியே வந்தார். ஸ்கூட்டரில் செல்லும்போது மனம் அதைவிட வேகமாகச் சென்றது. ரங்கநாதன் உண்மையிலேயே ஆச்சரியமான மனுஷன் என நினைத்தார்.

ரங்கநாதன் ராசியோ, காந்தாராவ் வீட்டின் ராசியோ தெரியவில்லை, ஆனால் தொழில் நன்றாகப் பற்றிக் கொண்டது. சர்க்கார் டெண்டர்களை எடுத்துக் கட்டடம் கட்டுவதை விட்டு விட்டு வீடு கட்டும் பணியை மேற்கொண்டார். இவர் வடிவமைத்த ஓர் இல்லம் மாநிலப் பரிசைப் பெற்றது. அதனால் இவர் மாநில அளவில் ஒரு முக்கிய ஆளாகி விட்டார். ஒரு நாள், ரங்கநாதனிடமிருந்து போன் வந்தது. மிகுந்த மரியாதையுடன் அதை வரவேற்றார். "சார், நானே உங்களை வந்து பார்க்கணுமுன்னு இருந்தேன் சார். உங்க நண்பர் ஆஞ்சநேயலு நீங்கள் நார்வே போயிருக்கறதா சொன்னார் சார். எப்ப நார்வேயில் இருந்து வந்திங்க சார்?".

"வந்து ரெண்டு நாளு ஆகுது".

"நாளைக்கு நான் வர்றேன் சார்".

"வா, இப்ப நான் எதுக்குப் போன் போட்டேன்னா"

"சொல்லுங்க சார்".

"நம்ப இரண்டாவது பெண் சாந்தலட்சுமி ஏதோ வீடு கட்டணமுன்னு ஆசைப்படுறா. அனுப்பிவைக்கட்டுமா?"

"நானே நேரே வர்றேன் சார். அவுங்க எதுக்கு சார் இங்கு வரணும்?"

"ஒரு நிமிஷம் இரு ராவ், கேட்டுச் சொல்லுறேன்".

பாஸ்கரராவ் காத்திருந்தார்.

"சாந்தலட்சுமிக்கு உன் ஆபீஸ் பக்கத்துல ஏதோ வேல இருக்காம். அதுனால, அவளே வந்து பார்க்கறேன் என்கிறா. நீ இருப்பே இல்லே.. அதுக்குத்தான் போன் பண்ணினேன். அப்புறம் லட்சுமி புருஷன் நேவல் ஆபீஸர். அவரும் வந்திருக்கார். ரெண்டு பேருமாகத்தான் உன் ஆபீஸூக்கு வருவாங்க. அதான் விஷயம்.."

"நான் காத்திருக்கேன் சார்".

பாஸ்கரராவ் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஐந்து மணிக்கு ராவுக்கு ஒரு பணி. வீடு கட்டுவது பற்றி ஒரு சொற்பொழிவு. சமூக நலத்துறையும் கட்டடவியல் கழகமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம். வளரும் நாடுகளில் வசிப்பதற்கான வீடுகளின் தேவை எப்படியெல்லாம் பெருகி வருகிறது, அதைத் திட்டமிட்ட ரீதியில் எப்படிச் சாத்தியமாக்குவது. விஷயம் கோவையாக மனதில் இருந்தது. அதை எழுதிவிட புதுப் புது வேலைகள் வந்து உட்கார விடாமல் விரட்டிக் கொண்டு போய்விட்டன.

பாஸ்கரராவ் நாற்காலியில் அமர்ந்தார். ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். தெரிந்த விஷயம், பழக்கமான செயல் முறைகள். எனவே எழுதுவது சுலபமாக இருந்தது. எழுதியதை ஒரு முறை யாருக்கோ படித்துக் காட்டுவது போலப் படித்தார். குரலே மாறிக் கேட்க இன்பமாக இருந்தது. சுவர்க் கடிகாரம் மணி அடித்தது. நாலரை. பாஸ்கரராவ் உட்கார்ந்திருக்க முடியாதவராக இருக்கையிலிருந்து வேகமாக எழுந்தார். பார்வை சாலைப் பக்கம் சென்றது. தூங்கு மூஞ்சி மரத்தின் காய்ந்த பூவிதழ் காற்றில் பறந்து உள்ளே வந்தது. ரங்கநாதன் வீட்டிற்கு ஒரு போன் பண்ணலாமா என நினைத்தார். கை போன் பக்கம் சென்றது. ஆனால் என்னவோ நினைத்துக் கொண்டவராக அந்த யோசனையைக் கைவிட்டு விட்டு வெளியே வந்தார். கை திரும்பியது. கடிகாரம் 4-35 காட்டியது. இன்னும் கால்மணி நேரத்தில் கூட்டத்திற்குப் போக வேண்டும்.

சமீப காலத்தில் யாருக்கும் தான் இவ்வளவு நேரம் காத்திருக்கவில்லையென அவருக்குப் பட்டது. காத்திருப்பது எரிச்சல் அளித்தது. தடதடவென்று படியிறங்கிக் கீழே வந்தார். தூங்குமூஞ்சி மரம் நிழல் பரப்பிக்கொண்டு இருந்தது. நிழலுக்கு உகந்த மரம் அதுதான் எனச் சொல்லிக் கொண்டே காலார மெதுவாக நடந்தார்

ஒரு கறுப்புற நிறக் கார் வேகமாக உள்ளே நுழைந்தது சிறிது தூரம் சென்று நின்றது. பாஸ்கரராவ் தலை நிமிர்ந்தது. சாந்தலட்சுமி படீரென்று கதவைத் திறந்து கொண்டு, "சாரி பாஸ்கரராவ், உங்கள ரொம்பக் காக்க வச்சிட்டோம்" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே, மேடம்".

சாந்தலட்சுமியின் கணவன் சக்திவேல் காரை ஓட்டிக்கொண்டு வந்தவன் கதவைத் திறந்து கொண்டு அவசரமே இல்லாதவன் போல அவர்கள் பக்கம் வந்தான்.

"மீட் மிஸ்டர் பாஸ்கரராவ்" என்றாள் தன் கணவனிடம் சாந்தலட்சுமி. சக்திவேல் அவர் கையைப் பற்றிக்குலுக்கினான். அதில் ஒரு ராணுவ அதிகாரியின் வலிமை தெரிந்தது. கிருதாவை நன்றாக இறக்கி விட்டுக்கொண்டு பெரிதாக மீசை வைத்துக்கொண்டு இருந்தான். ஆளை அடிப்பது போல ஒரு சிவப்புச் சட்டை. விடுமுறை என்பதால் விருப்பம் போல இருக்கிறான் போலும் என நினைத்தார்.

"சாரி, மிஸ்டர் பாஸ்கரராவ், வழியில் கார் பஞ்சர் ஆயிடுச்சு அதனால லேட்" சக்திவேல்.

"பரவாயில்லை, வாங்க மேல போகலாம்".

சாந்தலட்சுமியின் கணவன் ஓரடி எடுத்து முன்னே வைத்தான். தூங்குமூஞ்சி மரத்திலிருந்து ஒரு காகம் எச்சமிட்டது. அது அவன் வழுக்கைத் தலையில் பட்டு நாலா பக்கமும் சிதறியது. ஏதோ சப்தம் எனத் திரும்பிய சாந்தலட்சுமி "ஓ"வென்று அலறினாள். ஆனால் அவனோ துளியும் கைக்குட்டையால் எச்சத்தைத் துடைத்தான். சாந்தலட்சுமி பதறிப்போனாள். அவளுக்கு என்ன செய்வது என்று ஒரு கணம் தெரியவில்லை.

"மேடம், இந்தாங்க" பாஸ்கரராவ் தன்னடைய சலவைக் கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்கிக்கொண்டு, "இப்படி வாங்க. நான் துடைக்கிறேன்" என்று முன்னே சென்றாள்.

"ஒண்ணுமில்ல, லட்சுமி".

"இல்ல, இல்ல நீங்க இப்படித் திரும்புங்க. அடெடெ, சட்டையெல்லாம் ஒரே அசிங்கம்".

"மேடம், சார் வேணும்னா இங்கேயே குளிச்சிடலாம்".

"நோ அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கொஞ்சம் துடைச்சா சரியாப் போயிடும். சரியாப் போயிடுச்சான்னு பார் லட்சுமி", என்றான் சக்திவேல்.

அவள் முகத்தைச் சுளித்தாள்.

"காக்கா ஒரு அசிங்கம் பிடிச்ச பறவை. அது உட்கார மரம் வளர்க்கிற நாம சுத்த மோசம்".

பாஸ்கரராவ் அவளைக் குத்திட்டுப் பார்த்தார்.

"ராவ் நாளைக்கு மரத்தையெல்லாம் வெட்ட ஒரு ஏற்பாடு செய்யுங்க. ஆபீஸூக்கு முன்னாடி தூங்கு மூஞ்சி மரம். ஆபீசே தூங்கி வழியறது போல இல்ல"

"அதெல்லாம் செய்திடாதீங்க பாஸ்கரரவ். மரம் தான் ஊருக்கு அழகு".

"ஆமாம் ஆமாம், ரொம்ப அழகு. அழகுதான் இப்ப தெரியுதே."

"அதென்ன, நல்லாத் துடைச்சா சரியாப் போயிடும்".

"போயிடும், போயிடும்".

பாஸ்கரராவ் சக்திவேல் பக்கம் சென்றார். அவர்கள் சண்டை இவருக்கு அளவற்ற துயரத்தைத் தந்தது. மிகுந்த நேச பாவத்தோடு சக்திவேலின் கையைப் பற்றிக் கொண்டு, "எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு உங்க சட்டையெல்லாம் அழுக்காப் போயிடுச்சு சார்". என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. துவச்சா சரியாப் போயிடும், கவலையை விடுங்க".

"இப்ப வனஜா பார்ட்டிக்குப் போக முடியாது" சாந்தலட்சுமிக்கு அழுகை வரும் போல இருந்தது.

"ஏன், ஏன் போக முடியாது".

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. பேசாமக் கிடங்க."

"லட்சுமி நீ என்ன சொல்லுற".

"நீங்க இந்த நாத்தத்தோட பார்ட்டிக்கு வந்து நிக்கப் போறிங்க. அப்படித்தானே?".

"லட்சுமி".

"வாங்க, வீட்டுக்குப் போகலாம்". காரின் கதவைத் திறந்தாள்.

"பாஸ்கரராவ் கிட்ட வீடு கட்டுற விஷயமா என்னவோ பேசணும்னியே. அத முடிச்சிட்டுப் போகலாம்".

"அத அப்புறம் பார்த்துக்கலாம்".

சக்திவேல் தன் மனைவியையும் பாஸ்கர ராவையும் மாறி மாறிப் பார்த்தான். பாஸ்கர ராவ் மீது இரக்கம் பிறந்தது.

பாஸ்கரராவ் ஓரடி முன்னே வந்து, "ரொம்ப சாரி, மேடம்" என்றார்.

அவளோ இவரைப் பார்க்காமலேயே, "நான், இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கிறேன் ராவ்", என்று சொல்லிக் காரில் ஏறி அமர்ந்து கதவைப் படீரென்று சாத்தினாள்.

அவள் உட்கார்ந்ததும் கார் வேகத்துடன் புறப்பட்டது. பாஸ்கரராவ் வேகமாகச் செல்லும் காரையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் முயற்சியெல்லாம் விரையமாகியது எரிச்சலுற வைத்து. கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்தரை. இனிக் கூட்டத்திற்கும் செல்ல முடியாது. தலையை அசைத்துக் கொண்டார். பார்வை மரத்தின் மீது சென்றது. பெரிய மரத்தின் கிளைகள் நாலா பக்கமும் சென்று நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. நிழலின் குளுமை எப்போதுமே சுகம் தரும். ஆனால் பாஸ்கரராவ் தாள முடியாத வெறுப்புடன் மரத்தை நோக்கினார். அது ஒரு விரோதி போல இவருக்குத் தோன்றியது. இனிமேல் தூங்குமூஞ்சி மரம் இங்கே இருக்க முடியாது. சொல்ல முடியாத வெறுப்புடன் வேகமாகப் படியேறி மேலே சென்றார். ஆபீசில் ஒருவரும் இல்லை. எல்லோரும் வீட்டிற்குப் போய் விட்டார்கள். பாஸ்கரராவிற்குத் தன் பணி இப்பொழுதுதான் தொடங்குவது போல இருந்தது. மேசை டிராயரைத் திறந்து காகிதத்தை எடுத்தார். ஒரு நிமிஷம் என்ன செய்வது என்ன எழுதுவது என்று யோசித்தார். அப்புறம் பேனா காகிதத்தில் படிந்தது. ஒரே வேகத்துடன் - முனைப்புடன் எழுதினார். இரண்டு பக்கத்திற்கு மேலே சென்றது. எழுதியதைப் படித்துப் பார்த்தபோது, புகார்க் கடிதம் ரொம்பவும் சரியாக வந்திருப்பது போலத் தோன்றியது. டைப் மிஷினில் உட்கார்ந்து டைப் அடித்தார். ரொம்ப நாட்களுக்குப் பிறகு டைப் அடிப்பதால் கை தடுமாறியது ஆனால் விரைவிலேயே சமாளித்துக் கொண்டார். டைப் அடித்ததைப் படித்துப் பார்த்தார். ரொம்பத் தப்பு இல்லை. எனவே அதில் கையெழுத்திட்டு மவுண்ட்ரோடு தபால் ஆபீஸூக்குப் போய் போஸ்ட் பண்ணினார். அதையெல்லாம் செய்து முடித்ததும் ஏதோ ஒரு பெரிய காரியத்தைத் திருப்திகரமாக முடித்தது போல இருந்தது.

ஒரு வாரம் சென்றது. மாநகராட்சியில் இருந்து பாஸ்கரரவிற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அவ்வளவு விரைவில் காரியம் ஆகாது என்பது இவருக்குத் தெரிந்தது தான். ஆனாலும் ஏதாவது நடக்க வேண்டும் என விரும்பினார். விருப்பமான நம்பிக்கை சிதைந்தபோது மனம் நொந்து போனார். தனக்கு அதெல்லாம் சாத்தியமா என்று கேட்டுக் கொண்டார். ஹும்... இல்லை.. தன் வாழ்க்கையில் சோர்வுக்கும், சாத்தியமில்லை சிறப்பதிகாரியைக் காணச் சென்றார். இவர் சென்ற போது அவர் இல்லை கவர்னரைக் காணச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. எப்போது திரும்பி வருவார் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க முடியாதவராச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். சுவரில் மாட்டி இருந்த படங்களில் பார்வை சென்றது. மரங்கள்; மரங்கள் கிளைகள் பரப்பி பூச்சொரியும் மரங்கள்; பச்சைப் பசேலென்று இலைகளுடன் கூடிய மரங்கள். விழுதை யூன்றித் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளளும் மரங்கள்; நாற்காலியில் கையூன்றி எழுந்து திரும்பினார். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகம். உம்... வளர்ப்போம்... காக்கை உட்கார இடங்கொடுத்து எச்சமிட வைப்போம்... பாஸ்கரராவ் எரிச்சலுடன் இனியும் உட்கார்ந்திருக்க முடியாது எனத் திரும்பி வந்தார்.

மூன்றாவது முறையாக மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, சிறப்பு அதிகாரியைச் சந்திக்க முடிந்தது. இவர் உள்ளே நுழைந்தபோது அவர் போனில் யாருடனோ சண்டையிடுவது போலப் பேசிக் கொண்டிருந்தார். கடிகாரம் நிற்க. காலம் உறைந்து விட்டது போல இருந்தது.

சிறப்பதிகாரி போனை வைத்துவிட்டு, "ம், சொல்லுங்க", என்று தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அவரைக் காண இரண்டு மணி நேரமாகக் காத்திருந்தது திடீரென்று நினைவுக்கு வந்தது. தன் கட்சியை எடுத்துச் சொல்லாமல் செல்வதில்லை எனத் தீமானித்துத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். பீடிகை அவருக்கு எரிச்சல் அளித்தது போலும். கடிகாரத்திற்குச் சாவி கொடுத்துக் கொண்டே இருந்தார். ராவ் தடையின்றித் தன் கட்சியை ஒரே மூச்சில் விவரித்தார்.

"உங்க கோரிக்கை மரத்த வெட்டணும். அது தானே".

"நான் மரத்தை ரொம்ப விரும்பறவன் சார்" ஆபீஸூக்கு முன்னே பெரிய தோட்டம் போட்டிருக்கேன். ஆனா, நான் சொல்லுறது வேற, அது பெரிய மரம், எப்ப வேணும்னாலும் கீழ விழலாம். அதோடு காற்றில் கிளை முறிஞ்சி விட்ட மேலெல்லாம் விழுது".

"சரி, நான் பார்க்கறேன், நீங்க தோட்டக் கலை அதிகாரியையும் பார்த்துட்டுப் போங்க."

"தாங்ஸ், சார்".

பாஸ்கரராவ் தோட்டக் கலை அதிகாரியைத் தேடிக்கொண்டு சென்றார். அவர் ஆபீஸ் மூன்றாவது மாடியில் இருந்தது. விநோதமான செடிகளையெல்லாம் அறை முழுவதும் வளர்த்து வைத்திருந்தார்.

பாஸ்கரராவ் சொன்னதைக் கேட்டுவிட்டு, "அதுனால மரத்தை வெட்டணுமா?" என்று சொல்ல முடியாத ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் வியப்பு இவரை எரிச்சலடைய வைத்தது. அவர் முகத்தைப் பார்த்தபடி தலையசைத்தார்.

"மரத்தை வெட்டறது சமீப காலத்தில் ரொம்ப எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கு. உங்களுக்கு இது தெரியும்னு நினைக்கிறேன். பேப்பர்ல கூட விடாம ஒரு வாரம் படமெல்லாம் எடுத்துப் போட்டு எழுதினாங்க. அதுனால நாங்க கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு".

பாஸ்கரராவ் விரல்களை முறித்துக் கொண்டார். பார்வை அவர் மீது இறங்கியது. அவர் பிரச்சனையை வேறு திசைக்கு மாற்றுவது போல இருந்தது.

"நான் அதை ஒத்துக் கொள்ளுறேன் சார். மரந்தான் நகரத்திற்கு அழகு. மரம் இல்லாட்டா நகரத்தைப் பார்க்கவே முடியாது. ஆனா, என் விஷயம் தனிப்பட்டது. பெரிய தூங்கு மூஞ்சி மரம் என் ஆபீஸ் உள்ளே வந்திருக்கு. அதுனால எப்பப் பார்த்தாலும் பூவும் இலையும் உதிர்ந்துக் கிட்டே இருக்கு. அதோட காத்துல கிளை முறிஞ்சு வேற விழுது. கிட்டத்தட்ட நூறு வருஷத்து மரம் சார்".

"நூத்தியஞ்சு வருஷம்னு ரெக்கார்டு சொல்லுது". பாஸ்கரராவ் நிமிர்ந்து உட்கார்ந்தார். தன் வேண்டுகோள் பரிசீலனைக்கே வராமல் தள்ளப்படுவது போலத் தோன்றியது.

"வயசான மரம் விழறது உண்டு சார். போன மழையில கூட ரெண்டு மரம் விழுந்தது.

அவர் தலையசைத்தார். பக்கத்திலிருந்த போன் மணியடித்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு இவரைப் பார்த்து, "நான் வந்து பார்க்கிறேன்" என்றார்.

"அவசியம் சார். உங்களாலதான் நடக்கணும். கொஞ்சம் சீக்கிரமா வந்து பார்க்கணும் சார்" அவர் டெலிபோனில் பேச ஆரம்பித்ததும் பாஸ்கரராவ் எழுந்தார். அவருக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் தனக்கு எதிராக - முற்றிலும் விரோதமாக நடப்பதுபோலத் தோன்றியது. ஆனால் தான் விட்டுவிடப்போவதில்லை எனத் தீர்மானித்துக் கொண்டார். "அவசியமென்றால் சங்கரன் மூலமாகக் கவர்னரைப் பார்த்துவிட வேண்டும். அவனுக்குக் கவர்னரைத் தெரியும். பேப்பர் அவர் மூலமாக வந்தால் இந்தக் குப்பைக்காரர்கள் பறந்து கொண்டு வருவார்கள். ஒவ்வொருவனும் மேலே இருப்பவனுக்குத்தான் பயப்படுகிறான். பொது ஜனத்தின் குரல் அவனுக்கு எட்டுவதே இல்லை. ஆனால் நான் பத்தில் ஒன்று இல்லை. என்னை உதாசீனப்படுத்த முடியாது. உம்... பார்த்துவிடுகிறேன். தோட்டக்கலை அதிகாரியே... உன்னைக் கொண்டு இந்த மரத்தை வெட்டச் செய்கிறேன் பார்".

பாஸ்கரராவ் வேகமாக ஸ்கூட்டரை மிதித்தார். அது வெள்ளைப் புகையை விட்டுக்கொண்டு உடனே கிளம்பியது. ரங்கநாதனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. முடிந்தால் சாந்தலட்சுமியையும் பார்க்க வேண்டும். அவளிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். ஒன்றரைக்கு மேலே அவள் கட்டத் திட்டமிட்டிருக்கும் வீட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாஸ்கரராவ் சென்றபோது ரங்கநாதன் வீட்டில் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. சரி, பார்க்கலாம்" எனத் திரும்பினார்.

பதினைந்து நாட்கள் போல ஆகிவிட்டன. ஒரு மாலைப்பொழுது, கோடையில் மேகம் கறுக்கக் காற்று அடித்தது. காற்றின் வேகம் கூடக் கூட மேகம் ஒதுங்கியது. பாஸ்கரராவ் பார்வை தூங்குமூஞ்சி மரத்துப் பக்கம் திரும்பியது. காய்ந்த பூக்களும் உலர்ந்த இலைகளும் அதிலிருந்து உதிர்ந்தன.

தோட்டக்கலை அதிகாரி ஏமாற்றிவிட்டான். அவனை அடக்க கவர்னரைத்தான் பார்க்கவேண்டும். அதற்குச் சங்கரனுக்கு டெலிபோன் செய்ய வேண்டும். ஆள் இருந்தால்தான் காரியம் ஆகிறது "பார், இந்த பாஸ்கரராவ் ஜனம் அல்ல; உலர்ந்த இலை இல்லை - அடித்து ஒதுங்க. இது பாஸ்கரராவ், நாலு பேரைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் பாஸ்கரராவ்....ம்.."

பாஸ்கரராவ் பார்வை மீண்டும் மரத்தின் மீது சென்றது. ஒரு காகம் அலகில் நீண்ட குச்சியைத் தூக்கிக் கொண்டு மேலே வந்தது. இரு கிளைகளுக்கிடையில் கொஞ்சம்போலக் கட்டியிருந்த கூட்டிற்குத் துணையாகக் கொண்டு வந்த குச்சியை வைத்தது. அது கீழே பறக்கையில் இன்னொரு காக்கை. அது ஆண் போலும், கொஞ்சம் பெரியதான சுள்ளியுடன் பறந்து வந்தது. மாறி மாறிக் குச்சிகள் கொண்டு வந்து கூடு நிர்மாணிக்கும் காக்கைகளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவை இடம் தேர்ந்தெடுத்தது; கூடு அமைப்பது - எல்லாம் தான் ஒரு பெரிய கட்டடத்தை அமைக்க முயல்வது போலவே இருந்தது.

மறுநாள், பாஸ்கரராவ் வழக்கத்தைவிட முன்னதாகவே ஆபீஸூக்கு வந்து சேர்ந்தார். அவருக்குக் காக்கைக் கூட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். கூடு பூரணமாக உருவாகிவிட்டது. உள்ளே பஞ்சு சுந்தல் துணியெல்லாம் இருப்பது தெரிந்தது.

வாசல் பக்கம் தடதடவென்று சப்தம் கேட்டது. அவர் பார்வை திரும்பியது. மாநகராட்சியின் அழுக்கடைந்த மஞ்சள் லாரி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஏழெட்டுப் பேர் கீழே இறங்கினார்கள். சிவப்பு முண்டாசுக்காரன் கடப்பரை மண்வெட்டி கோடரி கயிறு எல்லாவற்றையும் எடுத்துக் கீழே போட்டான்.

பாஸ்கரராவ் அவசரம் அவசரமாகப் படியிறங்கிக் கீழே வந்தார்.

ஒருவன் மரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தான். "பெரிய மரம் பத்து நாளு ஆகும்".

"எதுக்குப் பத்து நாளு, நாலு நாளில வெட்டிடலாம்".

"நாலு நாளிலயா?"

"ஏன் ஆகாதா?"

"ஆகும், ஆகும்". என்று ஒருவன் கோடாரியைக் கையில் எடுத்தான்.

"என்னய்யா பண்ணப்போற" என்றார் கோடாரிக் காரனிடம் பாஸ்கரராவ்.

"மரம் வெட்டப் போறோம், சார்".

"இந்த மரத்தையா?"

"ஆமா"

"எதுக்கு"

அவன் விநோதமாக இவரைப் பார்த்தான்.

"இது எங்க மரம். நாங்க வைப்போம், வெட்டுவோம். நீ யாரு அதைக் கேட்க".

கோடாரியைத் தலைக்கு மேலே தூக்கினான்.

"நானா, உங்க அப்பன்டா". பாஸ்கரராவ் அவன் கோடாரியைப் பிடுங்கிப் பலம் கொண்ட மட்டும் வீசியெறிந்தார். அப்புறம், "மரமா வெட்ட வந்திருக்கிறீங்க மரம். போங்க.... எல்லாரும் போங்க. மரத்தில் கை வெச்சீங்க..... தெரியும் சேதி..." என்றார். அவர் குரலில் தொனித்த வீரியத்தை உணர்ந்து அவர்கள் கூட்டடமாகப் பின்னுக்கு நகர்ந்தார்கள்.

பாஸ்கரராவ் பார்வை உயர்ந்தது.

ஒரு காக்கை பறந்து வந்து கூட்டில் அமர்ந்தது.

"போங்கடா போங்க" பாஸ்கரராவ் இன்னொரு முறை பெரிதாகக் கத்தினார்.

நன்றி: கதை அரங்கம்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link