சிறுகதைகள்


தேடல்

கூடல்.காம்
பத்து நாட்களுக்கு முன்பு வரை ஞாயிற்றுக் கிழமைகள் எல்லாம் மூர்த்திக்கு ரம்மியமானவையாகத்தான் இருந்தன. சனிக்கிழமை சாயந்திரத்திலிருந்தே ஏங்க வைப்பதாக, எதிர்பார்த்துக் காத்திருந்கக வைப்பதாகத்தான் தோன்றின. சனிக்கிழமை ஆபீஸ் முடிந்து ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பி நேராக அகர்வால் பவனிலோ, ராம கிருஷ்ணாவிலோ சுமதிக்குப் பிடித்தமான இனிப்பு வகை இரண்டில் அரை அரை கிலோவாக வாங்கிக் கொள்வான். சற்றுத்தள்ளிப் பூக்கடையில் மல்லிகைப் பந்தை அப்படியே விலை பேசிச் சுருட்டி ஸ்கூட்டரின் கிட்டில் மென்மையாய்ப் போட்டுக் கொள்வான். விதையற்ற திராட்சை, அவளுக்குப் பிடித்த கற்பூர வாழை என்று ஏதாவது பழங்களும் கூடச் சேரும். மறக்காமல் குழந்தைகள் இரண்டு பேருக்கும் காட்பரீஸ் சாக்லெட்டும், லெமன் பஃப் பிஸ்கெட் பொட்டலமும் வாங்குவான், இல்லாவிட்டால் அவர்கள் விட மாட்டார்கள்.

"ஏம்ப்பா... அம்மாவுக்கு மட்டும் பூ, ஸ்வீட்ஸ், பழம் எல்லாம் எங்களுக்கு ஒண்ணும் கிடையாதா....?" என்று வேண்டுமென்றே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள்.

"உங்க கூடப் பேசமாட்டோம் போங்கப்பா..." என்று டூ விடுவார்கள்.

"அடடே.... சங்கர் குட்டிக்கும் சவிதா கண்ணுக்கும் இல்லைன்னு யார் சொன்னது...? பூ மட்டும்தான் அம்மாவுக்கு. ஸ்வீட்ஸ், பழம் எல்லாம் உங்களுக்குத்தான். அம்மாவுக்கு இல்லே..." இவன் இருவரையும் இரண்டு கைகளாலும் அணைத்து மாறி மாறி முத்தமிட்டுச் சொல்லுவான்.

"போங்கப்பா..... பொய் சொல்லாதீங்க, எங்களுக்கு யாரும் இந்த ஸ்வீட்ஸ் வாங்குவாங்களா...? காட்பரீஸ் வாங்குவாங்க. இல்லாட்டிப் போனால் ஃபைவ் ஸ்டார், அமுல் சாக்லெட்னு வாங்குவாங்க. பிஸ்கெட் வாங்கித் தருவாங்க, இப்படி ஜிலேபியும் அல்வாவுமா வாங்கித் தருவாங்க.... எமாத்தாதீங்கப்பா... இதெல்லாம் அம்மாவுக்குத்தான்..."

அந்த வயதில் அவர்களுக்கு இனம் பிரிக்கத் தெரிந்திருந்தது. சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்திருந்தது. அதைக் காரணம் காட்டி இரவு நீண்ட நேரம் பேசிச் சிரித்து, "நாங்க இரண்டு பேரும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில்தான் படுப்போம்..." என்று அடம்பிடித்து.... கதை சொல்லுங்கப்பா... என்று தொணதொணத்து இவன் கதை என்ற பெயரில் எதையோ சொல்லி, ஒப்பேற்றி, தூங்குங்கம்மா... மணி பதினொன்னாகுது பாருங்க..." என்று கெஞ்ச வைத்து....

"ஆகட்டுமேப்பா... நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே... ஸ்கூல் கிடையாதே... லேட்டா எழுந்திருச்சால் போகுது....!

இவன் சுமதியைப் பரிதாபமாகப் பார்ப்பான். கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.

"ஏய் நீதான் வாயைத் திறந்து ஏதாவது சொல்லக் கூடாதா....? சின்னக் குழந்தைங்க ராத்திரி பதினொரு மணி வரைக்கும் முழிச்சிட்டிருந்தால் உடம்புக்கு ஆகாதுன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா....?

"நான் என்ன சொல்றது? அவங்க உங்க செல்லம். நீங்களே சொல்லுங்க. அதான் நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை. லேட்டா எழுந்தால் போகுதுன்னு சொல்றாங்களே... இன்னும் கொஞ்ச நேரம் கதை சொல்லுங்களேன்..."

வேண்டுமென்றே சுமதி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள். தனக்கு எந்தத் தாபமும் இல்லாத மாதிரி காட்டிக் கொள்வாள். தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனத்தை இன்னமும் கொள்ளை கொள்வாள்.

"ஏய்...உனக்கு விளையாட்டா இருக்கா? இன்னிக்கு சனிக்கிழமை ராத்திரின்னு தெரியுமில்லே. இவங்களைக் கொஞ்சம் சீக்கிரமா படுக்கப் போடக் கூடாது...?" உள் தகிப்பில் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

அதை உணர முடியாத குழந்தைகள் கேட்பார்கள்.

"சனிக்கிழமை ராத்திரின்னால் என்னப்பா விசேஷம்...? ஏன் சீக்கிரமா படுக்கப்போகச் சொல்றீங்க?"

"குழந்தைகளின் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அரண்டு, பின்னர் சமாளித்து, மீதிக் கதையை முடித்து, லேசாய்த் தட்டி இருவரையும் தூங்கச் செய்த பின் போர்த்திவிட்டு மெல்ல எழுந்து சுமதியின் பக்கம் வருவான். தூங்குகிற பாவனையில் இருக்கிற அவள் மீது மென்மையாய்ச் சரிவான். "என்ன கண்ணம்மா...நிஜமாகத்தான் தூங்கறியா...?" என்று காதருகில் உதட்டால் வருடி, கிசுகிசுத்து, கண்களில் முத்தமிட்டு...

அப்போதும் பெண்மையின் ஜாக்கிரதை உணர்ச்சி அவளைக் கேட்க வைக்கும்.

"குழந்தைங்க நல்லாத் தூங்கிட்டாங்க இல்லே...?"

"ம்...அதுக்கப்புறம் தானே நானே இங்கே எழுந்து வந்தேன்...ம்..."முதலில் அவளையும் ஒரு குழந்தையாய் மிக மென்மையாய் அணைத்து, தலையை வருடிப் பின்னர் அணைப்பின் வேகம் இறுகி...

கடைசியாய்த் தன் இடத்தில் வந்து மிக மிக அமைதிப் பட்டு, உலகம் முழுதையும் நேசிக்க முடிந்த சந்தோஷ உணர்வுடன் சொல்ல இயலாத நிம்மதியான மனத்துடன் குழந்தைகளின் மீது கைபோட்டு, ஒருக்களித்துப் படுத்துத் தூங்கப் போகும்போது ஹால் கடிகாரத்தில் மணி ஒன்றோ ஒன்றரையோ அடிக்கும்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையில், அவன் எழுந்திருக்கும்போது மணி ஒன்பது, ஒன்பதரையாகி இருக்கும். சில நாட்கள் பத்து கூட ஆகிவிடும். எழுந்து பல் தேய்த்து வாசல் வராந்தாவின் கூடை நாற்காலியில் போய் உட்கார்ந்து மிக நிதானமாக ஹிந்து பேப்பரைப் புரட்டத் தொடங்கும்போது சுமதி தலைக்குக் குளித்து தளரப் பின்னி, பளபளக்கும் முகத்தின் புருவங்களுக்குச் சற்று மேல் சின்னப் பொட்டும் அதற்கு மேலாகக் கீற்றாக விபூதியுமாகக் கையில் காப்பியோடு வருவாள். அப்படி அவளைப் பார்க்கிறபோதே சந்தோஷமும், மரியாதையும் இவனுக்குள் மிகும். கூடவே இவளால் மட்டும் எப்படி இவ்வாறு புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது என்ற கேள்வி எழும். அதை மனத்தில் வைத்துக் கொள்ளாமல் கேட்பான்.

"ஏன் சுமதி இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சுட்டே...? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கக் கூடாது...?"

ஆமாம்... எங்கே தூங்கறது...? ஞாயிற்றுக்கிழமைன்னால் நீங்க தூங்கறீங்க. குழந்தைங்களுக்கு ஸ்கூல் இல்லை தூங்கறாங்க. எனக்கு வேலை இல்லை...? எனக்கு யாரு லீவு கொடுக்கறாங்க...? நான் எந்திரிச்சு தண்ணி பிடிக்க வேணாம், காப்பி போட்டு, குக்கர் வைக்க வேணாம்? மற்ற நாளைவிட எல்லாரும் வீட்டில் இருந்து சாப்பிடறீங்கன்னு சூடா ஸ்பெஷலா வேறு சமைக்கணும்..."

இவனுக்குப் பாவமாக இருக்கும். ராத்திரி முழுதும் தனக்கு ஈடு கொடுத்து, பகலில் குழந்தைகளோடு போராடி, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் சற்று அயர்ந்து தூங்கக்கூட முடியாமல், தங்களுக்காக ஸ்பெஷலாய்ச் சமைத்து...

"சுமதி...இன்னிக்கு ஒருநாள் நான் உன்கூட வந்து சமையல் செய்ய ஒத்தாசை செய்யட்டுமா...?"

"எந்த ஒத்தாசையும் செய்ய வேணாம், பேப்பர் படிச்சுட்டு உள்ளே வாங்க. தலையில் ஒரு கை எண்ணெய் வைக்கிறேன். நல்லா வெந்நீர் போட்டிருக்கேன். நிம்மதியாக் குளிங்க. அப்புறம் சாப்பிட்டுப் பகல் குட்டித் தூக்கம் போட்டுட்டுச் சாயந்தரம் குழந்தைகளை அழைச்சிட்டு எங்காவது வெளியில் போகலாம்..."

இப்படித்தான் ஞாயிற்றுக் கிழமைகள் அவனுக்குச் சுகமானவையாக இருந்தன. காலை பத்து மணி வரை தூக்கமும், எண்ணெய்க் குளியலும், வாய்க்கு ருசியான சாப்பாடும், பிற்பகல் மூன்று வரை எண்ணெய்க் குளியலின் அசதியில் ஏற்படும் உறக்கமும், மாலை மனைவி குழந்தைகளோடு வெளியில் சுற்றலும்...

இனிமையாய், ரம்மியமானவையாய், சுகமளிப்பதாய் இருந்த ஞாயிற்றுக் கிழமைகள் சுமதியின் ஒரு வார்த்தையில், பிடிவாதத்தில் சட்டென்று மாறிப் போயிற்று.

"இதப்பாருங்க. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. வீடு வாங்கக் கம்பெனி லோன் சாங்ஷன் பண்ணி விளையாட்டு போல மூணு மாசம் ஆயிடுச்சு இல்லே... இன்னும் பேசாமல் இருந்தால் எப்படி...? சாங்ஷன் ஆன லோனும் அப்புறம் கான்ஸல் ஆயிடும். இந்தத் தீபாவளிக்குள்ள வீடு வாங்கி முடிச்சுடறீங்க. தீபாவளியை நாம் புது வீட்டில்தான் கொண்டாடறோம். இனிமேல் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படிப் பத்து மணி வரை தூங்கிச் சோம்பல் பிடிச்சு உட்கார்ந்திட்டிருக்காமல் பேப்பர் பார்த்து எந்தெந்த இடங்களில் வீடு விலைக்கு வர்றதுன்னு குறிச்சுப் போய்ப் பார்க்கலாம். பத்துப் பதினைஞ்சு இடம் பார்த்தால்தான் ஒண்ணு மனசுக்குப் பிடிச்சதா அமையும். என்ன...?"

அந்த "என்ன...?"விற்கும் மனைவியின் ஆசைக்கும் தலையாட்டியதன் பலனை இப்போது அனுபவிக்கிறான்...

சனிக்கிழமை ராத்திரி படுக்கப் போகுமுன்னர், சாப்பாட்டுத் தட்டின் எதிரில் உட்காரும் போதே சமதி ஞாபகப்படுத்தி விடுவாள்.

"இதோ பாருங்க. இன்னிக்கு ராத்திரி ஒண்ணும் கிடையாது. இனிமேல் புது வீட்டுக்குப் போய்த்தான் எல்லாம். இதை ஒரு சபதமா நான் எடுத்துட்டிருக்கேன். இல்லாட்டிப் போனால் நீங்க சோம்பேறித்தனமாகவே இருந்துடுவீங்க. லோன் கிடைச்சு மூணு மாசமா அப்படித் தானே இருந்தீங்க. உடம்புல வீடு தேடணும், சொந்தமா ஒரு வீடு இருக்கணும் என்கிற வேகம் ஏதாவது இருந்ததா? இனிமேல் அப்படி இருக்கவிட மாட்டேன். நான் புது வீட்டுக்குப் போய்த்தான் கிடைப்பேன். நான் சீக்கிரமா கிடைக்கணும்னால் சீக்கிரமா வீட்டைப் பார்த்து முடியுங்க..."

"ஏய் சுமதி...என்ன இதெல்லாம்...? வீடு பாருன்னு சொல்லு, பார்க்கறேன். அதை விட்டு இந்த மாதிரி சபதமெல்லாம் போட்டால் எப்படி சுமதி...? யாரு ஒப்புக்கு வாங்க...? வீட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..?"

"ஆஹா...வீடு பாருங்கன்னால் உடனே பார்த்துடுவீங்க...உங்களைத் தெரியாதா எனக்கு? யாரும் லோன் சாங்ஷன் ஆகியும் இப்படி பேசாமல் இருப்பாங்களா...? மூணுமாசம் தூங்கிட்டிருந்தது தெரியாதா...? நான் சொன்னால் சொன்னதுதான். இனி இந்தச் சுமதி உங்களை ஆசையாத் தொடறது புது வீட்லதான். அதனால் ஞாயிற்றுக்கிழமை காலைல ஒழுங்கா ஏழு மணிக்குள் எழுந்து குளிச்சு, சாமிகிட்ட வேண்டிக்கிட்டு பேப்பர் பார்த்து விலைக்கு வர்ற வீடுகளில் நம் பட்ஜெட்டுக்குள் அடங்குகிற வீடுகளா, நமக்குப் பிடிச்ச மைலாப்பூர், ராயப்பேட்டை ஏரியாவாகப் பார்த்துக் குறிச்சுக்கிட்டு நேராப்போய்ப் பார்த்திட்டு வரலாம். காலையிலிருந்து சாயந்தரம்வரை சுற்றணும்னாலும் சரி. வீடுகிடைத்து ரிஜிஸ்டர் பண்ற வரை நான் தூங்கப் போறதில்லை..."

சொன்ன மாதிரியே செய்தும் காட்டினாள். இவன் சனிக்கிழமை ராத்திரி மெல்ல அவள் பக்கம் புரண்டு கை போட்டு அணைத்தபோது சடாரென்று விலக்கி எழுந்து உட்கார்ந்தாள்.

"இந்தப் பாருங்க... இந்த ஜாலமெல்லாம் வேண்டாம். நான் சொன்னால் சொன்னதுதான். புது வீட்டுக்குப் போனப்புறம் என்றால் போனப்புறம்தான். சும்மா என்னைத் தொந்தரவு படுத்தாதீங்க..." சொல்லிவிட்டு அவள் சரேலென்று மறுபுறம் திரும்பிப் படுத்ததும் இவனுக்குள்ளும் அந்த "நான்" தலைதூக்கிற்று.

"ஓ.கே. அவ்வளவுதானே. உனக்கு மட்டும்தான் பிடிவாதம் இருக்கும்னு நினைக்காதே. எனக்கும் இருக்கு. இனி ஒரு வீடு பார்த்து முடிக்காமல் உன்னைத் தொடறதில்லை. நம் குழந்தைங்க மேல சத்தியம்..."

இவனும் அவள் பக்கமில்லாது சுவர் பக்கம் திரும்பி, கால் தலைகாணியை எடுத்துப் பக்கத்தில் போட்டுக் கொண்டு படுத்தான்.

அந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வீடு பார்க்கும் படலம் தொடங்கிற்று. ஆறரை மணிக்கெல்லாம் சுமதி எழுப்ப இவன் சுகமான தூக்கத்தை உதறிவிட்டு எழுந்தான். பல் விளக்கி, காப்பி குடித்து, பால் பேனாவும் கையுமாக "ஹிந்து"வின் விளம்பரப் பகுதியைப் புரட்டினான். ரியல் எஸ்டேட்டின் விற்பனைப் பகுதியில் கண்கள் ஓடின. கோட்டூர்புரம், செயின்ட் தாமஸ் மவுண்ட், நங்கநல்லூர், அடையாறு, அண்ணாநகர் என்று, மூன்று கிரவுண்ட் நாலு கிரவுண்டுகளில் நாலாயிரம், இரண்டாயிரம் சதுர அடிகளில் வீடுகள் விலைக்கு வந்தன. அதன் பின்னர் வண்ணாரப் பேட்டை, ஜாம்பஜார் என்று மத்திய விலையில் அரை கிரவுண்டிற்கு வீடுகள், பின்னர் காம்பவுண்டோடுகூடிய தனி சிறிய பங்களாக்களில் அவனுக்குத் தேவையான பகுதியில் ஒரு கிரவுண்டில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட மூன்று வீடுகள் வந்திருந்தன. ஒன்று மந்தைவெளி, இன்னொன்று பக்கத்தில் லாயிட்ஸ் ரோடு, கஸ்தூரி ரியல் எஸ்டேட் என்று பெயர் போட்டு, தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மற்றொன்றும் மயிலாப்பூர் அருகில் என்றிருக்க இவன் அவை மூன்றையும் பேனாவால் குறித்து அடையாறு, மாம்பலம் என்றிருந்த சில வீடுகளையும் குறித்துக் கொண்டான். வரிசையாக விலாசமும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் குழந்தைகளின் நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்கத்திலிருந்து ஒரு பக்கம் கிழிந்து எழுதிக் கொண்டான். பின் சமையலறையில் மிக அவசரமாகச் சமைத்துக் கொண்டிருந்த சுமதியிடம் எழுதியதைக் காட்டிக் சொன்னான்:

"கிட்டத்தட்ட இன்னிக்குப் பத்து வீடுகள் பார்க்க வேண்டி வரும் போலிருக்கு சுமதி. நான் குளித்து, பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டு, தெருக்கோடி பார்மஸியிலிருந்து எல்லா இடங்களுக்கும் போன் பண்ணி விசாரிச்சுட்டு, அப்படியேஸ்கூட்டருக்குப் பெட்ரோல் போட்டுட்டு வரேன். நீ அதற்குள் சமைச்சு முடிச்சுக் குழந்தைகளைக் குளிப்பாட்டி ரெடியா இரு. சாப்பிட்டுப் பசங்களைப் பக்கத்து வீட்டுக்கு விளையாட அனுப்பிட்டு நாம் கிளம்பலாம், ஒவ்வொரு வீடா பார்த்திட்டு வரலாம். சாமி புண்ணியத்தில் இன்னிக்கே நல்லதா நமக்குப் பிடிச்சதா ஒரு வீடு அமைஞ்சுப் போச்சுன்னால் நல்லா இருக்கும்..."

ஆனால் அவன் நினைத்த மாதிரியோ எதிர்பார்த்த மாதிரியோ சட்டென்று ஒன்றும் அமையவில்லை. காலை பத்து மணிக்குக் குழந்தைகளைப் பக்கத்து வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பியவர்கள் அந்த வெயிலில் ஸ்கூட்டரில் வீடு வீடாகச் சுற்றினர். ஒவ்வொரு இடமாகப் போய்ப் பார்த்தனர். கிட்டத்தட்ட பத்து வீடுகள் பார்த்தும் திருப்தி இல்லை. ஒன்று இருந்தால் இன்னொன்றில்லை. எல்லா வசதிகளும் சேர்ந்திருந்தால் விலை இவர்களின் வாழ்நாள் முழுதுமான சம்பளத்தைச் சேர்த்துக் கொடுத்தால்கூட மேலும் கடன் கட்ட நேரிடும் போலிருந்தது;

மூன்று மணி வாக்கில் களைத்துச் சலித்துத் திரும்பி வந்ததும் குழந்தைகள் கேட்டனர்.

"எங்கேப்பா போயிட்டீங்க இத்தனை நேரம்...?"

"ம்...வீடு பார்க்கம்மா..." இவன் அசதியில் வெயில் சுட்ட முகத்தைத் துண்டில் துடைத்தவாறு நடுக் கூடத்தரையில் ஒரு தலைகாணியை எடுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டு பதில் சொன்னான்.

"ஏம்ப்பா வீடு பாரக்கன்னால் என்னப்பா...?"

"நமக்குச் சொந்தமா ஒரு வீடு வாங்கணுமின்னு போனோம்..."

"ஏம்பா இந்த வீடு சொந்தமில்லையா...?"

"இல்லை. இது வாடகை வீடு..."

"வாடகை வீடுன்னால் என்னப்பா...?"

"ம்...இதுல இருக்க நாம் மாசா மாசம் பணம் கொடுக்கணும்..."

"சொந்த வீடுன்னால் பணம் கொடுக்க வணாமாப்பா...?"

"ஏன் வேணாம். அதுக்கு ஒட்டு மொத்தமா முதல்லியே கொடுத்திடணும்."

"அதுக்கும் பணம் கொடுக்கணுமுன்னால் ஏம்ப்பா சொந்த வீட்டுக்குப் போகணும்? இதுலயே இருந்தால் என்ன...?"

இவனால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தச் சின்ன அறிவில் இத்தனை லாஜிக்கான கேள்விகள் எவ்வாறு உதயமாகின்றன என்று ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்குப் பதில்சொல்ல முடியாத இயலாமை சங்கடப் படுத்திற்று. நிஜமாகவே சொந்த வீடு என்று ஒன்று இல்லாது போனால் என்ன என்று தோன்றிற்று. இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் இருந்ததில் என்ன குறை...? நிம்மதியாக, சந்தோஷமாகத்தானே இருக்கிறோம்... திடீரென்று சுமதிக்கு ஏன் இந்த ஆசை வந்தது...?

"சொல்லுங்கப்பா... இந்த வீட்டிலேயே இருந்தால் என்னப்பா...?"

என்னைக் கேட்காதீங்க, உங்கம்மாவைப் போய்க் கேளுங்க போங்க..." - அவன் சுள்ளென்று எரிந்து விழச் சமையலறையில் காப்பிக்கு ஜலம் வைத்திருந்த சுமதி வெளியில் வந்தாள்.

"ஆமாம். இத்தனை வருஷ சம்பாத்தியத்துல சொந்தமாக வீடு வச்சுக்கணும்னு கூடத்தோணலை. ரெண்டு குழந்தைங்களாச்சு. அதுங்களுக்கு நாலு காசு சேர்த்து வைக்கலை... ஒரு நாள் அலைச்சலுக்கே இப்படிச் சோர்ந்து போய் எரிந்து விழுந்தால் எப்படி...? ஒரே நாள்ல இதை யெல்லாம் முடிவு செய்திட முடியுமா? நாளைக்கு நான் இரண்டு மூணு புரோக்கர்கிட்டே சொல்லி வைக்கிறேன். அவங்க வழியாகவும் பார்க்கலாம்..."

மறுநாளைக்கு மறுநாள் நாலைந்து புரோக்கர்கள் மாறி மாறிப் படையெடுக்க ஆரம்பித்தனர். சாந்தோமில் வீடு என்று இவன் ஆபீஸிலிருந்து வந்த உடனே ஒரு புரோக்கர் அவசர அவசரமாகக் கூட்டிப் போனான்.

"சீக்கிரம் வாங்க சார். இப்படியே புறப்படுங்க. சொந்தக்காரர் மணி ஏழானால் கிளப்பிற்குப் போயிடுவார். அப்புறம் பிடிக்க முடியாது..." என்றான்.

இவன் ஆபீஸிலிருந்து வந்த களைப்பு கூட நீங்காமல், முகம் கழுவாமல், காப்பி குடிக்காமல், உடை மாற்றாமல் அப்படியே போனான். சுமதியும் கூட வந்தாள்.

சாந்தோம் சர்ச் தாண்டி ஒரு சந்தில் வீடு, சின்ன வீடு, வாசலில் மல்லிகைப் பந்தலும், ரோஜாச் செடியுமாக அழகாய்த்தான் இருந்தது. பழைய வீடு. கட்டிக் கிட்டத் தட்ட இருபத்தைந்து முப்பது வருடங்களாகி இருக்க வேண்டும். மழைக்கு ஒழுகுவது சுவரில் முழு நீளச் சித்திரங்களாகத் தெரிந்தன. சமையலறை இருட்டாகக் கிடந்தது. அங்கங்கே காறை பெயர்ந்திருந்தன. மராமத்து வேலை பார்க்க வேண்டுமானால் கிட்டத்தட்ட அரை லகரம் வேண்டும்.

இவன் உடனே வேண்டாமென்று சொல்லி விட்டு வந்ததில் அந்தப் புரோக்கருக்கு ஏகக்கோபம். வீட்டிற்குத் திரும்பி வந்த பின் அதைக் காட்டினான்.

"சரி, நூறு ரூபா கொடுங்க சார்..."

"எதுக்குப்பா நூறு ரூபா...?" இவன் அரண்டு போய்த் திரும்பினான்.

"வீடு காட்டினாலே எங்களுக்கு நூறு ரூபாய் கொடுத்திடணும் சார். பிடித்தாலும், பிடிக்காட்டிப் போனாலும் எங்க ரேட் அது."

"இது என்னப்பா அநியாயமாக இருக்குது. நூறு ரூபாய் யாருப்பா கொடுப்பாங்க. வீடு பிடிச்சுதானால் உங்களுக்குக் கமிஷன் கொடுக்கணும். ஒத்துக்கறேன். வெறுமனே காட்டிப் பிடிக்காமற் போன வீட்டுக்கு நூறு ரூபாய் யார் கொடுப்பாங்க...?"

"யாரு கொடுப்பாங்களா...? எல்லாரும் அதான் தராங்க. உங்க சம்சாரத்துகிட்ட முதல்லியே நான் சொல்லித்தானே கூட்டிட்டுப் போனேன்..."

சுமதியின் பக்கம் அவன் பார்வை திரும்புவதற்குள் அவள் பதறினாள்.

"ஐய்யய்யோ... அப்படியெல்லாம் ஒண்ணுமே என் கிட்டே சொல்லலீங்க. நல்ல வீடுங்கள்ளாம் கைல இருக்கு. காட்றேன்னு மட்டும் தான் சொன்னாரு..."

கடைசியில் பேசிப் பேசி வாதாடி அவன் கையில் இருபத்தைந்து ரூபாய் தண்டம் அழுதுவிட்டு உள்ளே வந்தான். கோபத்திற்குப் பதிலாக அவனிடம் சலிப்பும், வருத்தமுமே மிஞ்சி நின்றன.

"எதுக்குச் சுமதி இந்த மாதிரி புரோக்கர் கிட்டேயெல்லாம் சொன்னே...?"

"இவன் இப்படி இருப்பான்னு நினைக்கல்லேங்க. வீணாக அடாவடி அடிக்கறாங்க. நாளைக்குக் கோடி வீட்டுப் பெரியவரு கிருஷ்ணசாமின்னு ஒரு புரோக்கரை அனுப்பறேன்னு சொல்லியிருக்காரு. நல்லவன்னு சொன்னாரு. அவன் மூலமாப் பார்க்கலாங்க..."

சுமதி தன் தவற்றை உணர்ந்து பணிந்து இதமாய்ச் சொல்ல அவனும் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் கோடி வீட்டுப் பெரியவர் சொன்ன அந்தக் கிருஷ்ணசாமி வந்தான். வளவள வென்று அசட்டுத்தனமாகப் பேசினான். தேவையற்றுச் சிரித்தான். ஒரு பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியின் பெயரைச் சொல்லி அதில் இருப்பதைத் தெரியப்படுத்தினான். மாம்பலத்தில் நான்கு வீடுகள். கீழ்ப்பாக்கத்தில் இரண்டு, ஆழ்வார்பேட்டையில் இரண்டு, கபாலி தியேட்டர் பக்கத்தில் ஒன்று, சல்விவன் கார்டன் தெருவில், அகாடமி பக்கத்தில், ஜேப்பியார் வீடுகிட்டே ஒன்று என்று அடுக்கிக் கொண்டே போனான்.

"வர்றீங்களா இந்த ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொண்ணாப் பார்த்துடலாம்...?"

"பார்க்கிறது கிடக்கட்டும். வீடு நிச்சயமானால் புரோக்கரேஜ் தருவோமே தவிர மற்றபடி எதுவும் தரமாட்டோம்..."

"அது எப்படி சார்... நாங்க எங்க வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டுத்தானே உங்களுக்காகச் சுத்தறோம்...?"

"அப்படிச் சுத்தறதுதானே உங்க வேலை? இதுல தனியா வேலை வெட்டி எங்கிருந்து வந்தது...?"

"ஆமா சார்... அது கூட சும்மா சுத்த முடியுமா...? பத்து வீடு காட்டிட்டு ஒண்ணுமில்லாமல் போக முடியுமா...?"

"அப்போ என்ன செய்யச் சொல்றே?"

"ஒரு வீடு காட்ட இருபத்தைந்து ரூபாய் கொடுத்துடுங்க..."

முதல் புரோக்கருக்குக் கொடுத்த பணத்தைத் தெரிந்து கொண்டே வந்திருப்பானோ என்று தோன்றியது. கடைசியில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி எத்தனை வீடு பார்த்தாலும் நூறு ரூபாய்க் கொடுப்பது என முடிவாயிற்று. அவனும் ஒப்புக் கொண்டு போனான்.

ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக எட்டு மணிக்கு அதே அசட்டுச் சிரிப்பும், தேவையற்ற பேச்சுமாக உள்ளே நுழைந்தான். சுமதி காப்பி கொடுத்தாள். மளமளவென்று ஒரே வாயில் நிறுத்தாமல் ஊற்றிக் கொண்டான். பெரிதாய் ஏப்பம் விட்டுக் கொண்டு, "போகலாமா சார்...?" என்று எழுந்தான். சுமதியும் உடன் புறப்படுவதை கவனித்து,

"ஏன் சார், மூணு பேரா இருக்கோமே-எப்படி சார் ஸ்கூட்டரிலே போக முடியும்...?" என்ற கேள்வியை எழுப்பினான்.

"அப்போ பஸ்ல போயிடலாம்ப்பா..."

"பஸ்ஸா... ஏன் சார் பங்களா வாங்க பஸ்ல போய் இறங்கி நடந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சா அலட்சியமா பார்ப்பாங்க சார். "இவங்க எங்கே வாங்கப் போறாங்கன்னு" காட்டக்கூட மாட்டாங்க..."

"அப்போ என்ன செய்யச் சொல்றே...?"

"பேசாமல் ஓர் ஆட்டோ மீட்டர் போடாமல் மொத்தமா பேசிக்கலாம் சார். பிற்பகல் இரண்டு மணி வரை சவாரின்னு சொல்லலாம். ஒவ்வொரு வீடா பார்த்திட்டு வரலாம். கொஞ்சமாவது கௌரவமாக இருக்கும் சார்..."

சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஆட்டோ டிரைவர் எழுபத்தைந்து ரூபாய் கேட்டார். பேரம் பேசி அறுபத்தைந்தாக்கிப் புறப்பட்டார்கள். கிருஷ்ணசாமி, மாம்பலம் அபிபுல்லா ரோடிலும், ஜி.என். செட்டி ரோடிலும், அடையார் போட் கிளப் ரோட், ஆழ்வார் பேட்டை, வீனஸ் காலனி, சேமியர்ஸ் ரோட், ஸ்ரீ ராம் நகர் என்று கப்பல் கப்பலாகக் கார்கள் நிற்கும் வீடுகளுக்குக் கூட்டிப் போனான். வாசல் கூர்க்காவும், கார்களின் வரிசையும், அரைவட்டப் புல்வெளியையும், தோட்டப் பராமரிப்பையும் பார்த்தே இவர்கள் பயந்து போனார்கள்.

"ஏம்ப்பா... இதுல அவுட் ஹவுஸ் எதையாவது விற்கிறாங்களா...?"

"அவுட் ஹவுஸா.. வீடே விலைக்கு வர்றதுங்க. எல்லாமே விற்பனைக்கு நிற்குது. விலை படியலைன்னு பேசாமல் இருக்காங்க... ஒவ்வொண்ணும் முப்பது, நாற்பதுன்னு போகும்..."

"முப்பது, நாற்பதுன்னால்...?"

"லட்சங்க..."

மூர்த்தி வாயடைத்துப் போனான். ஆட்டோவை வீட்டிற்குத் திருப்பச் சொல்லிக் கிருஷ்ணசாமியின் பக்கம் திரும்பினான். முகத்தில் கோபம் மண்டிக் கிடந்தது.

"ஏம்ப்பா... உனக்குக் கிண்டலாகவா இருக்குது? எங்களைப் பார்த்தால் இப்படிப் பட்ட வீடுங்க வாங்கறவங்க மாதிரியா தெரியுது? பேரம் பேசி வாடகை ஆட்டோவில் ஏறிட்டு வர்றவங்களுக்குக் காட்டற வீடுங்களா இதெல்லாம்...?"

"ஏன் சார், இதுக்குப் போய்க் கோவிச்சுக்கறீங்க...? நீங்க உங்க பட்ஜெட் என்னன்னு சொல்லலை. அதனால் நான் இதையெல்லாம் காட்டினேன்..."

"நீ கேட்டிருக்க வேணாமாப்பா...?"

"ஏன் சார், நீங்கதானே தேவை உள்ள ஆள். நீங்க தானே சொல்லணும்..."

மூர்த்தி சொன்னதும் கிருஷ்ணசாமி முகவாயைத் தடவிக் கொண்டு யோசித்தான்.

"ம்...அந்த ரேஞ்ஜூல ராயப்பேட்டை பாலாஜி நகர்ல ஒரு வீடு இருக்குது. எனக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு. இப்பவே பேசி முடிச்சுக் கொடுத்துடறேன். இந்த வாரத்துல ரிஜிஸ்டர் பண்ணிடலாம்..."

"முதல்ல வீட்டைப் பார்க்கலாம்ப்பா."

"பார்க்கிறதென்ன சார். வெளியே நின்று பார்த்தே சரி சொல்லிடப் போறீங்க. ரெண்டு பெட் ரூம், ஒரு ஹால், டைனிங், கிச்சன்னு கச்சிதமான வீடு. மொசாய்க் தரை இல்லை. ரெட் ஆக்ஸைட் தரைதான். சின்ன தோட்டம், கிணறு, காம்பவுண்ட் சுவர் எல்லாம் சேர்ந்திருக்கு. நல்ல இடம். நல்ல வீடு, இது ஒண்ணுதான் உங்க பட்ஜெட்டுக்குள்ள வரும்..."

"அப்படின்னால் இப்பவே போய்ப் பார்த்து முடிச்சடலாங்க..." சுமதி அவசரப்பட்டுத் தன் பெண் புத்தியையும் குழந்தைத்தனத்தையும் காட்டினாள். இரண்டு வார அலைச்சலில் இது சம்பந்தப்பட்ட அத்தனை நெளிவு சுளிவுகளையும் கற்றுக் கொண்டு விட்ட அலுப்பில் சுமதியை மேலே பேசவிடாமல் கையமர்த்தி அவனே பேசினான்.

"அப்படின்னா இப்பவே பார்த்திடலாம்னு சொல்றியாப்பா...?"

"பார்க்...க...லாம்...தாங்க..."

"என்ன தயக்கம்?"

"வேறே ஒண்ணுமில்லீங்க, நான் வீட்டை முடிச்சுக் கொடுத்திடறேன். ஓனர் கிட்ட பேசி விலையைக் கூட குறைக்கச் செய்யறேன். நீங்க புரோக்கரேஜூன்னு இல்லாமல் மொத்தமா ஒரு தொகை கொடுத்திடணும்..."

"எவ்வளவு?"

அதிகம் ஒண்ணுமில்லை. பதினைந்தாயிரம் ரூபாய் தான்..."

"என்...ன...!"

"அதுக்கு இஷ்டம்னால் வீட்டைக் காட்டறேன்..."

"ஐயோ... வேணாம்ப்பா...நேரா எங்க வீட்டுக்கு நாங்க போறோம். நீ இங்கேயே இறங்கிக்க..."

"யோசனை பண்ணிச் சொல்லுங்க சார். நல்ல வீடு. பதினைந்தாயிரம் பெரிசில்ல..."

யோசனையே பண்ண வேணாம். ஆளை விடப்பா போதும்..."

"சரி சார். எனக்குப் பேசிய நூறு ரூபாயைக் கொடுங்க..."

அவன் நூறு ரூபாய் கொடுத்தான். ஆட்டோ பணம் கொடுத்தான். இப்படிப் பணம் செலவாவதைத் தவிர வேறு பலன் இல்லாததற்கு மனைவியிடம் சண்டை போட்டான். அவள் இவனுக்குச் சாமர்த்தியம் போதவில்லை என்றதும் முதல் முறையாக அடிக்கக் கை ஓங்கித் தடுத்துக் கொண்டான். அவள் அதற்கே அடித்துவிட்ட பாவனையில் அழுதுகொண்டு, உள்ளே போய்ப் பாத்திரங்களை "ணங் ணங்" என்று சத்தப்படுத்தி மேடைமீது வைத்தாள். முணுமுணுத்தாள். குழந்தைகள் மிரண்டு மூலையில் ஒடுங்கின. இவன் எல்லையற்ற கசப்பும், சலிப்புமாய்ப் படுக்கையில் சரிந்து கண்களை மூடிக் கொண்டான்.

அடுத்த இரண்டு ஞாயிற்றுக் கிழமை ஹிந்து விளம்பரத்திற்கு அலைந்து மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை நிஜமாகவே ஒரு வீடு கிடைத்தது. மந்தைவெளி மார்க்கெட் அருகில் தனி வீடு. முக்கால் கிரவுண்டில் இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு. வாசலில் வரவேற்பறை ஒரு சின்ன வராந்தா. கார் நிறுத்துவதற்கான கச்சிதமான போர்ட்டிகோ...

சுமதி, இவன் இருவருக்கும் பிடித்துப் போயிற்று. விலை இவர்கள் பட்ஜெட்டை விட்டுத் தாண்டினாலும் அதிகம் தாண்டவில்லை. ஆபீஸ் லோனோடு கொஞ்சம் கடன் வாங்கினார்கள். சுமதியின் இரட்டை வடச் சங்கிலியும் வைரத்தோடும் விலையாகிக் கரன்ஸி நோட்டுக்களாகக் கைக்கு வந்தன. ஒரு நல்ல நாள் குறிக்கப்பட்டு ரிஜிஸ்தர் ஆயிற்று. ஆடிக்கு முன்பாகப் போகிற அவசரத்தில் கிரஹப் பிரவேசத்திற்கு நாள் பார்த்தனர். அதற்கு முன் அவசர அவசரமாய் வெள்ளை அடித்து, கதவு, ஜன்னல்களுக்கு பெயின்ட் பூசி, குறிப்பிட்ட நல்ல நாளின் அதிகாலையில் கிரஹப்பிரவேசம் செய்து, பால் காய்ச்சி, சமையலைக் தொடங்கி, கூப்பிட்டிருந்த நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டு, வெற்றிலை பாக்கு கொடுத்தனுப்பி, கடைசியாய்ச் சுமதியும் இவனுமாக ஒன்றாக உட்கார்ந்து தாங்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டு முடித்து, வெளி வராந்தாவின் போட்டிகோவிற்கடியில் நீண்டிருந்த வாசல் படிகளின் பக்கத்துக் குட்டைத் திண்ணையில் அப்பாடா என்று நிம்மதியாய், சந்தோஷமாய், மனசுக்கு நிறைவாய் உட்கார்ந்தபோது மூர்த்தி அவளைத் திரும்பிப் பார்த்து நமுட்டுச் சிரிப்போடு கேட்டான்:

"ஏன் சுமதி...புது வீட்டுக்கு வந்தாச்சு. சொன்ன வாக்கைக் காப்பாற்றியாச்சு. இனி என்னால் சனிக்கிழமை ராத்திரி வரை காத்திருக்க முடியாது."

அவள் அவன் சொன்னது காதில் விழாத மாதிரி சற்று மேலே தலையை நிமிர்த்தி, அந்தப் போட்டிகோவையே பார்த்துக் கொண்டிருக்க அவன் நகர்ந்து அவள் தோளில் கைவைத்து மிக மென்மையாய், காதலாய்க் கேட்டான். "ஏய்... என்ன யோசனை...?"

அவள் சடாரென்று திடுக்கிட்ட மாதிரி திரும்பினாள். "ம்...ஒண்ணுமில்லீங்க..."

"ஒண்ணுமில்லையா...? நான் அத்தனை ஆசையா பேசினதுகூட காதுல விழலைன்னால் ரொம்ப முக்கியமா எதைப் பற்றியோ யோசிச்சிருக்கணும். என்ன அது...?"

"அது வந்து...ஒண்ணுமில்லை.. வேணாம். விட்டுடுங்க..."

"சீ.. சொல்லு... என்கிட்டே என்ன தயக்கம்...?"

"இல்லே... இந்த வீட்டுக்கும், லொகாலிட்டிக்கும், வாசலின் அழகான போட்டிகோவிற்கும் இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டர் நிற்கிறது பொருத்தமா இல்லேன்னு பட்டுச்சு. பேசாமல் ஸ்கூட்டரை விற்று ஒரு சின்ன ஸெகண்ட் ஹாண்ட் காராக வாங்கினால் என்னன்னு தோணிச்சு. அதான் யோகிச்சேன். ஏங்க வாங்கலாங்க... எத்தனை நாள் ஸ்கூட்டர்லியே போறது. குழந்தைங்க ரெண்டு பேரையும் வச்சிட்டுப் போறது கஷ்டமா இருக்கு பாருங்க..."

மூர்த்தி கடவுளே... என்று தலையில் கைவைத்துக் கொண்டான். மீண்டும் காருக்காக ஞாயிற்றுக்கிழமை செய்தித் தாளின் விளம்பரங்களைப் புரட்ட வேண்டுமா..? இந்தத் தேடலும், தேவைகளும் எப்போது நிற்கும்... இவற்றிற்கு முடிவே கிடையாதா...?

புரியாமல் சுமதியை வெறுமையாகப் பார்த்தவாறு மௌனமாக இருந்தான்...!

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link